நீங்கள் எப்பொழுது வரக்கூடும்?
- tdharmaraj67
- Aug 1
- 2 min read
திருநெல்வேலியில் மீண்டும் ஒரு கொலை நடந்திருக்கிறது. கொலை நடந்த இடம், கே.டி.சி. நகர். என் வீட்டிற்கு மிக அருகில்.
எனக்கு நீங்கள் வழங்கப்போகிற மரணம் இன்னும் பக்கத்தில் வந்திருக்கிறது என்றே இதை எடுத்துக் கொள்கிறேன். எத்தனை நாட்களுக்கு நான் இப்படியே ஒளிந்து வாழ முடியும் என்று தெரியவில்லை. அதையெல்லாம் விடுங்கள்…

கொலை செய்த அந்தப் பையன் - சுர்ஜித் - பற்றி இப்பொழுது யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்தக் கொலையை அவன் எப்படி செய்திருக்க முடியும் என்று உங்களுக்கு அதிர்ச்சி. நீங்கள் காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.
கீழ்வெண்மணியில் இந்திரா பார்த்தசாரதி கண்டுபிடித்தது போல், சுர்ஜித் மனநிலைத் தவறியவன் என்று சொல்ல முடிந்தால் உங்களுக்கு நிம்மதியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
அல்லது, அவனது குடும்பத்தில் இது போன்ற நோய்க்கூறுகள் யாருக்கேனும் இருக்கிறது என்றால் கூட பரவாயில்லை. இந்தக் கொலையை உங்களால் கடந்து விட முடியும்.
இன்னொரு கோணத்தில், கொலையுண்ட கவினின் நடத்தையில் ஏதாவதொரு கோளாறைச் சொல்ல முடிந்தால் கூட கொஞ்சம் நிம்மதியாக இருக்கும், இல்லையா? சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் மீது சுமத்தப்பட்டது போல ஏதாவது….
அய்யா ராம்தாஸ் சொல்வது போல ‘நாடகக் காதல்’ என்றொரு துப்பு கிடைத்தால் நீங்கள் கரையேறி விட முடியும் என்றுகூட உங்களுக்குத் தோன்றுகிறது.
இந்தக் கொலை திருநெல்வேலியின் மாண்பைக் குறைத்ததாக நீங்கள் வருந்துகிறீர்கள். அதனால் சுர்ஜித் செய்த கொலையை வேறுபடுத்திப் பார்க்க உங்களுக்கு ஏதாவதொரு காரணம் உடனடியாகத் தேவைப்படுகிறது.
ஊடகங்களும் அதற்காக மெனக்கிடுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்நேரம் அவர்கள் கவினின் குடும்பத்தையும் சுர்ஜித்தின் குடும்பத்தையும் அலசி ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். ஒரு வேளை அவர்கள் உங்களுக்குத் தேவைப்படும் ஆறுதல்களோடு வந்து சேரலாம். ஒரு வேளை என்ன ஒரு வேளை, நிச்சயமாய் அவர்கள் ஒரு வலுவான காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள். அவர்களால் முடியவில்லையென்றால் இந்த அரசு இயந்திரம் அதைச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், என்னுடைய கவலையெல்லாம், உங்கள் ஒவ்வொருவரிடமும் சுர்ஜித் மாதிரியான ஒரு கொலையாளி இருக்கிறான் என்பதை நீங்கள் எப்போது உணர்வீர்கள் என்பது தான். இன்றைக்கு ஏதாவதொரு காரணத்தை சொல்லி கொலையாளியிடமிருந்து உங்களை நீங்கள் வேறுபடுத்திக் கொள்ளலாம். நாங்கள் அப்படி இல்லை என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், சில நாட்களுக்கு முன்பு வரை சுர்ஜித் உங்களைப் போலவே ஒரு மனிதாபிமானி தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
அதனால், உங்களால் கூட எந்த நேரத்திலும் என்னைக் கொன்று விட முடியும் என்பது தான் நிஜம். நான் தீண்டத்தகாதவன் என்ற ஒற்றைக் காரணம் உங்களுக்குப் போதும். உங்களுக்கு ஒரு கொலை தேவைப்படும் போது என்னைக் கொல்ல வருவீர்கள் என்பது எனக்குத் தெரியும்.
நான் கொலை
செய்யப்படுவதற்காகக் காத்திருக்கிறேன். நீங்கள் வருவீர்கள் என்று எனக்குத் தெரியும்.
Comments