top of page
WhatsApp Image 2023-08-01 at 2.48.08 PM.jpeg
அயோத்திதாசர்

அயோத்திதாசரைக் கொண்டாடுதல் என்றால் ஒடுக்கப்பட்டதைக் கொண்டாடுதல் என்று அர்த்தம். ஒடுக்கப்பட்டவன், ‘அனாதையாக வீழ்ந்து கிடக்கும் பிணம்’ என்று கருதுகிற தேசத்தில் இந்தக் கொண்டாட்டம் அவசியம். அவனுக்குத் தெளிவான அடையாளங்கள் இருக்கின்றன என்று சொல்ல வேண்டியிருக்கிறது. அவனே இந்த தேசத்தில் நீதிக்காகவும், நியாயத்திற்காகவும், உண்மைக்காகவும், ஒழுக்கத்திற்காகவும் போராடியவன்.

 

இன்று, சூழ்ச்சிகளின் மத்தியில் குற்றுயிராய்க் கிடக்கிறான் என்று நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அநீதிகள் மலிந்த நாட்டில் நீதியைப் பேசுகிறவர்களே ஊர் நீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள் என்று அறிவுறுத்த வேண்டியிருக்கிறது. கல்வி செத்த நாட்டில் அறிவாளியே தீண்டத்தகாதவர். மொழி சிதைந்த ஊரில் அர்த்தம் தெரிந்தவர்களுக்கே பேச்சு வராது. ‘அயோத்திதாசர்’ என்றால் ஒடுக்கப்பட்டவனின் சுயம் என்று பொருள். ஒடுக்கப்படுதலை இவரை விடவும் வலிமையாய் கற்பனை செய்த சிந்தனையாளர் உலக வரலாற்றில் யாருமில்லை.’

WhatsApp Image 2023-08-01 at 2.48.05 PM.jpeg

​தமிழ் நாட்டுப்புறவியல்

தமிழ் நாட்டுப்புறவியல் என்று ஒன்று உருவாக்கப்படுகிறது என்றால், அதன் மையமான விவாதப் பொருளாக ஒடுக்கப்பட்ட மக்களே இருக்க வேண்டும் என்பது தான் நியாயம். யார் அந்த நாட்டார் அல்லது நாட்டுப்புறத்தார் என்ற கேள்வியைத் தமிழ் சூழலில் கேட்கும் பொழுது 'ஒடுக்கப்பட்ட மக்கள் தான்' என்றே பதில் சொல்ல வேண்டும்.

 

சமூகத் தளத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்களோ அப்படியே நாட்டுப்புற வழக்காறுகளும் பண்பாட்டுத் தளத்தில் ஒதுக்கப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமே தங்களது பண்பாட்டு அடையாளமாக வழக்காறுகளைக் கைகாட்டுகின்றனர். தங்களது வரலாற்றை, ஞானத்தை, தத்துவத்தை, அறிவியலைப் பாதுகாத்து வைக்கும் சேமக்கலனாக வழக்காறுகளையே அவர்கள் கருதுகின்றனர். வழக்காறுகளிலிருந்து அவர்களை வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை .

 

ஒடுக்கப்பட்ட மக்களில் மிகவும் குறிப்பான மூன்று பிரிவினரைப் பற்றியே இக்கட்டுரைகள் விவாதிக்கின்றன. 

WhatsApp Image 2023-08-01 at 3.01.04 PM (1).jpeg

டி.​ தருமராஜின் அயோத்திதாசரியம்

அயோத்திதாசரியம் என்ற விமர்சன படைப்பாக்கம்!

 

அயோத்திதாசரின் ஆய்வு முறையியலில் ஒரு முக்கியமான பகுதி, ‘தன்’னை வடிவமைத்தல்.  விளக்கமாகச் சொன்னால், அவரிடம் எவ்வளவுக்கு எவ்வளவு விமர்சனங்கள் உண்டோ அதே அளவுக்கு படைப்பாக்கங்களும் உண்டு.  

 

அவர், கட்டுடைக்கிற ஒவ்வொரு கணமும் கட்டமைத்துக் கொண்டும் இருக்கிறார்.  ‘இந்திய தேசம்’ என்பதைக் கட்டுடைக்கிற அடுத்த நொடி, ‘இந்திர தேசம்’ என்பதை அவரால் உருவாக்க முடிகிறது.  ‘பறையர்’ என்ற சொல்லைக் கட்டுடைக்கிற மறுகணம் ‘பூர்வ பெளத்தர்’.  

 

நான் ஏற்கனவே எழுதியிருப்பதைப் போல, இவற்றை ‘மாற்று விளக்கங்கள்’ என்றும் சொல்வதற்கு இல்லை; இவையே, மெய் விளக்கங்கள் என்று பிடிவாதம் பிடிக்கக் கூடியவர் அவர்.  ‘மனுதர்ம சாஸ்திரம் என்பது என்ன?’ என்ற கட்டுரையிலும் அதே விஷயத்தைத் தான் செய்கிறார்.  

image.png

​நான் ஏன் தலித்தும் அல்ல?

இத்தொகுப்பிலுள்ள பத்து கட்டுரைகளையும் இணைக்கக்கூடிய முக்கிய புள்ளி இந்தக் கேள்வி தான் - நான் ஏன் தலித்தும் அல்ல?

 

இந்தக் கேள்வியை நிழல் என்று சொல்லலாம்.  வெளிச்சம் வர வர வளரும் இருட்டு.   தலித் என்று உணர்ந்த ஒவ்வொருவரையும் இந்தக் கேள்வி தான் உடனடியாய் அப்பிக் கொள்கிறது.  நிறைய நேரங்களில் தலித்துகள் இதனை உதாசினம் செய்கிறார்கள்.  அவ்வளவு துயரமானது, இந்தக் கேள்வி.  ஆனால், அலட்சியத்தை துயரங்கள் பொருட்படுத்துவதே இல்லை. 

 

‘தலித்’ என்பதை அரசியல் பிரக்ஞையாக விளங்கிக் கொண்ட அடுத்த நிமிடமே இந்தக் கேள்வியும் அவர்களுக்குள் வந்து விடுகிறது.   

 

ஏன் நான் தலித்தும் அல்ல?     

 

தலித் சொல்லாடல், எவ்வளவுக்கு அன்னியோன்யமானதோ அவ்வளவுக்கு வெறுக்கக்கூடியதும்.  அந்த வகையில், தலித் அரசியலுக்கும் உடலுறவிற்கும் பெரிய வித்தியாசமில்லை; இரண்டிலும் ஞாபகங்கள் தான் கிளர்ச்சியைத் தருகின்றன; அதே போல, ‘போராட்டம்’ முடிந்ததும் தனித்தனியே அவரவர் அவரவர் ‘உள்ளே’ சுருங்கிக் கொள்ள வேண்டியது தான் - இரண்டுமே தனிமையையும் வெறுமையையும் தான் பெருக்குகின்றன!  

IMG_7234.JPG
இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?

இது இளையராஜா புத்தகமும்தான். இளையராஜாவின் பாடல்கள் கடந்த அரை நூற்றாண்டாகத் தமிழர்களின் வாழ்க்கையை வடிவமைத்து வந்திருக்கின்றன.

திரைப்படங்களிலிருந்து வெளியேறி தனித்த உயிர்களாக இப்பாடல்கள் ஜீவித்துக்கொண்டிருக்கும் மாயம் எப்படி நிகழ்ந்தது? நம் கொண்டாட்டங்களிலிருந்து, சோகங்களிலிருந்து, காதலிலிருந்து, நினைவுகளிலிருந்து, ஞாபகங்களிலிருந்து இளையராஜா பாடல்களை விலக்கமுடியாமல் ஏன் தவித்துக்கொண்டிருக்கிறோம் நாம்?

 

இளையராஜாவிடமிருந்து தொடங்கும் இந்நூல் சினிமா, சாதி, அதிகாரம் மூன்றும் சந்தித்துக்கொள்ளும் ஒரு மர்மமான புள்ளியில் வேர் பிடித்து, நம் உணர்வு, ரசனை, பண்பாடு, மரபு, நிலம், மொழி, தத்துவம், வரலாறு என்று கிளைகளைப் பரப்பி, விரிந்துகொண்டே செல்கிறது. 

 

கிராமமும் நகரமும்; சிறிய பண்பாடும் பெரிய பண்பாடும்; கபாலியும் கரகாட்டமும்; சங்க இலக்கியமும் மேற்கத்திய மொழியியலும்; வன்முறையும் காதலும்; சாதியமும் சினிமாவும் எதிர்பாராத தருணங்களில் சந்தித்துக்கொள்கின்றன. நாம் இதுவரை கேட்டிராத உரையாடல்களை நிகழ்த்துகின்றன. இந்த அபூர்வ சந்திப்புகளையும் உரையாடல்களையும் கூர்ந்து அவதானித்து பதிவு செய்திருக்கிறார் டி. தருமராஜ். 

 

இரண்டு அட்டைகளுக்கு நடுவில் சிக்கிக் கிடக்காமல் உயிர்ப்பெற்று எழுந்து வந்து நம்முன் நிற்கின்றன அவர் எழுத்துகள். இளையராஜாவின் பாடல்கள் போல.

அட்டை.jpg
கலகக்காரர்களும் எதிர்க் கதையாடல்களும்

'கலகக்காரர்களும் எதிர் கதையாடல்களும் ' என்ற பெயரிலான கட்டுரைகளின் தொகுப்பு ஏற்கனவே சொல்லப்பட்ட செய்திகளுக்கும், அவற்றிலிருந்து கட்டப்பட்ட 'தற்காலத் தமிழகம்' என்ற பெருங்கதையாடலுக்கும் எதிரான வட்டாரம் சார்ந்த பல்வேறு எதிர் நிலைப்பாடுகளைப் பதிவு செய்வதே இத்தொகுப்பின் முதன்மைப் பணியாக அமைகின்றது. இவ்வாறு, நிறுவனமயப்பட்ட பெருங்கதையாடலுக்கு எதிராக முன் வைக்கப்படும் கலகக்கதையாடல்கள் பண்பாட்டுத் தளத்தை எல்லோருக்கும் பொதுவான வெளியாக மாற்றக்கூடும். அப்படியொரு வெளி உருவாகிற தருணத்தில், அதில் குறுக்கும் நெடுக்குமென பல்வேறு கதையாடல்கள் சமகாலத்தில் இயங்கக்கூடிய சூழல் தோன்றலாம். அப்படியொரு கனவை நோக்கிய நகர்தலாகவே இத்தொகுப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்

bottom of page