தலித்துகளின் துறவும் பற்றும்.
- tdharmaraj67
- Aug 1
- 2 min read
நண்பர் வாசுதேவன், பட்டியலினத்தவர் நிம்மதியாய் வாழ வேண்டுமென்றால் வெளி நாட்டிற்குச் சென்று விடுவது தான் சரி என்ற தொனியில் எழுதியிருந்தார். அதற்கு அவரை நாலாபுறத்திலிருந்தும் நெருக்குகிறார்கள். மூன்று நாட்களுக்கு முன்பு நண்பர் ராவணன் அம்பேத்கரும் இதையே தான் சொல்லியிருந்தார். ராவணன் ஏற்கனவே வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றவர் தான்.
நான் கிராமத்திலிருந்து தப்பித்து வந்ததை மிகப்பெரிய சாதனையாகச் சொல்லிக் கொண்டிருப்பவன் (கிராமத்திற்குத் திரும்பும் கொடுங்கனவு!). எங்கள் கிராமம் நிஜமாகவே கொடூரமானது. இன்றைக்கு எங்கள் குடும்பத்தைச் சார்ந்த யாரும் அந்த ஊரில் இல்லை. இதைக் கேட்டு, குக்கிராமம் ஒன்றில் பாழடைந்து கிடக்கும் ஒரு வீடு என்றெல்லாம் நீங்கள் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏதோ வேலையாய் அந்தப் பக்கம் சென்ற போது எங்களது பூர்வீக வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே வீடு இருந்த இடத்தில் ஒரேயொரு மண் திட்டை மட்டும் வீடு என்று காட்டினார்கள். ‘யாரும் வர்றதில்லையா, அதான் பராமரிப்பு இல்லாம, இப்படி கிடக்கு’ என்றார்கள்.

எனக்கு பொக்கென்று இருந்தது உண்மை தான். ஆனால், நீங்கள் நினைப்பது போல நெஞ்சு வெடிப்பது மாதிரியெல்லாம் இல்லை. என் ஞாபகத்தில் விஸ்தாரமாக தெரிந்த வீடு, பராமரிக்கா விட்டால் சின்ன மண் திண்டு போலத் தான் எஞ்சும் என்பதைத் தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சுற்றிலும் பிரம்மாண்டமாய் இருப்பதாய் நினைத்துக் கொண்டிருந்த சுவர்கள் மழையிலும், காற்றிலும் கரையக் கூடியவை என்பதை என்னால் உடனடியாக நம்பமுடியவில்லை. உள்ளே நுழைந்தால் தெரியும் பெரிய பரண், அதன் மீது வேயப்பட்ட கூரை, அதைக் கடந்ததும் தெரியும் சமையலறை, பக்கத்திலேயே ஒரு முருங்கை மரமும், கறிவேப்பிலைச் செடியும் என்று என் நான் நினைவு வைத்திருந்த வீட்டிற்கான எந்தச் சுவடும் அங்கே இல்லை. எங்கள் கிராமத்து வீடு ஒரு சீட்டுக் கட்டு மாளிகை என்பதை நான் அங்கு கண்டு கொண்டேன்.
கிராமத்திலிருந்து கிளம்பி வந்ததை விடுதலையாக நினைத்ததாலோ என்னவோ எனக்கு எந்த ஊரின் மீதும் ஏக்கம் இருந்ததில்லை. ஒரு முறை மதுரைக்கு வந்திருந்த ஜெயமோகன் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்து கிளம்பும் போது இப்படிக் கேட்டார்: ‘பாளையங்கோட்டையை miss பண்றீங்களா?’
நான் உடனடியாக, ‘இல்லை’ என்றேன். அவர் இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை. பாரவதிபுரத்தின் மீது ஏக்கம் கொண்டவரிடம் போய் நான் இப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. ஆனால், அதன் பின் யோசித்துப் பார்த்தால் எனக்கு எந்த ஊரின் மீதும் ஏக்கங்கள் இருந்தது இல்லை.
அதற்காக அடிக்கடி ஊரை மாற்றி கொண்டிருப்பவனும் இல்லை. ஆனால், ஊர்ப்பாசம் என்பதை நான் அறிந்ததில்லை. பாளையங்கோட்டையில் தான் என் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்திருக்கிறேன். சுமார் முப்பத்தைந்து வருடங்கள். அதற்கப்புறம் டெல்லியில் ஆறு வருடங்கள், இதோ இப்பொழுது மதுரையில் பதிமூன்று வருடங்கள். ஒவ்வொரு ஊரில் வாழும் போதும் அதை விட்டுக் கிளம்பிச் செல்லவே நான் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறேன். பாளையங்கோட்டையில் இருக்கும் போது இதை விட்டு ஓடிப்போனால் சரியாக இருக்கும் என்று ஏங்கியிருக்கிறேன். ஓடி, டெல்லியில் வசித்த போது, தமிழ்நாட்டிற்கு திரும்ப வர வேண்டும் என்பது கொள்கை முடிவாக இருந்தது. 2011ல் பாளையங்கோட்டையிலிருந்து மதுரைக்கு வந்த போது கூட சந்தோஷமாகவே வந்தேன். அதே போல், மதுரையிலிருந்தும் வேறிடத்திற்கு என்னால் மகிழ்ச்சியாகப் போக முடியும். அதற்காக ‘எல்லா ஊரும் என் ஊர்’ என்ற யோசனையெல்லாம் கிடையாது. எந்த ஊரும் என் ஊர் இல்லை என்பது எனக்குத் தெரியும்.
இந்த நாடோடி மனநிலை, தலித்துகளுக்கு தீர்ப்பளிக்கப்பட்டது என்பதை நான் மிகத் தாமதமாகவே உணர்ந்து கொண்டேன். வாழிடம் பற்றிய ஏக்கம் தலித்துகளிடம் இருப்பதில்லை. எல்லா ஊர்களும் அவர்களுக்குக் கசப்பான அனுபவங்களையே தருகின்றன என்ற தொனியில் இதைச் சொல்லவில்லை. எந்த ஊரின் மீதும் பற்று வைப்பதற்கு அவர்களுக்குத் தகுந்த காரணங்கள் இல்லை. வரலாற்றுரீதியாகவும் சரி, நிகழ்காலத்திலும் சரி. அதனால் இயல்பாகவே அவர்களுக்கு ஒரு ‘சந்நியாசம்’ வாய்த்து விடுகிறது. சீனிவாச ராமானுஜம் ‘தீண்டாமையும் சந்நியாசமும்’ என்ற நூலில் பிராமணர்களுக்குச் சொல்லும் சந்நியாசத்திற்குப் புறம்பானது இது. தலித்துகளின் இந்த ஏக்கமின்மையை, துறவு நிலையை எந்த தலித் இலக்கியவாதியும் பதிவு செய்தது இல்லை.
இதே மாதிரியான இன்னொரு தலித்திய உணர்வு, 'இது காதல் தானா என்ற சந்தேகம்'. எல்லா தலித்துகளின் காதலிலும் இந்த சந்தேகத்தை நீங்கள் தவிர்க்கவே முடியாது. எந்த நிமிடத்தில் இல்லை என்று சொல்லப்படும் என்ற பதட்டமில்லா தலித் காதல் இவ்வுலகில் இல்லை. இதையும் எந்த இலக்கியமும் பதிவு செய்தது இல்லை. இதனாலும் கூட எனக்கு தலித் இலக்கியங்களின் மீது எந்த மரியாதையும் வந்தது இல்லை. அவை பழைய நிலவுடமை மதிப்பீடுகளையே தலித்துகளின் தலையில் கொட்டிக் கொண்டிருக்கின்றன. வாழிடம் மீதான ஏக்கமும் அப்படி ஒன்று.
ஆனால், இதையெல்லாம் தாண்டி தலித்துகளுக்கு வேறொரு பற்று உண்டு. இந்த மொழி, பண்பாடு, சிந்தனை போன்ற அனைத்தின் மீது அவர்களுக்குப் பற்று உண்டு. அது வழங்கிய நிலப்பரப்பு இன்னும் விரிவானது. வடக்கே சிந்துவெளியிலிருந்து தெற்கே லெமூரியா வரை நீண்டது.
Comments