top of page

கலப்பு மணம் என்ற பலூனை ஊதியவர்கள்!

ஒரு கடிதமும், அதற்கானப் பதிலும்


பேராசிரியர் தர்மராஜ் அவர்களுக்கு வணக்கம்,


' இயல்பு நிலை (default), விதி விலக்கு(exception) ' எனும் இரு கருதுகோள்கள் நம் சமூகத்தைத் தீர்மானிக்கின்றன. இன்று சாதி நம்பிக்கை அல்லது சாதி பார்த்து திருமணம் செய்தல் இயல்புநிலை. சாதி மறுப்பு திருமணம் விதி விலக்கு. விதி விலக்குகள் அடிப்படை இயல்பு நிலையை மாற்றுவதில்லை. அதாவது, பாவம் ஏதோ காதல் வயப்பட்டதால் சாதி பார்க்காமல் திருமணம் செய்து விட்டான், ஆனால் மற்றபடி சாதி எனும் கோட்பாடு மீது நம்பிக்கை கொண்டவன் தான் என்று பலர் சொல்வதை கேட்டு இருக்கிறேன். நீங்கள் எழுதிய ' விடலையும் குடும்பனும்' கட்டுரையில்  வரும் 'ஆண்டியின்' மேம்பட்ட நிலை இது. எனக்கோ காதலுக்காக சாதியை மறுப்பதில் உடன்பாடு இல்லை. சாதிக்காவே சாதியை மறுக்க வேண்டும் என நினைக்கிறேன். அதுவே இயல்பு நிலையை மாற்றும். எனவே சாதி மறுப்பு ஏற்பாட்டுத் திருமணம் செய்ய பல ஆண்டுகளாக முயற்சி வருகிறேன். ஆனால் அது நடக்காது போலத் தெரிகிறது.  மேட்ரிமோனி தளங்களில் பணம் கட்டி வரன் தேடிப் பார்த்துள்ளேன். ஏற்பாட்டுத் திருமணம் என வந்தால் அனைத்து சாதியினரும் தத்தம் சாதிக்குள்ளேயே தான் வரன் பார்க்கிறார்கள்.

இந்த இடத்தில் அயோத்தி தாசர் இருந்திருந்தால் என்ன செய்து இருப்பார்? சாதி மறுப்பு திருமணம் செய்ய முயற்சி செய்தும், செய்ய முடியாதவரை நல்லவராக பார்ப்பாரா? நீங்கள் எப்படிப் பார்ப்பீர்கள்?

இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?



உங்கள் நெடுநாள் மானசீக மாணவன்,





அன்புள்ள மானசீக மாணவருக்கு,


1916ம் ஆண்டு ‘சாதியின் தொழிற்நுட்பம், தோற்றம், வளர்ச்சி’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதிய அம்பேத்கர், அகமண முறையே சாதியின் தனித்துவம் என்கிறார். அகமணமுறை எவ்வாறு செயல்படுகிறது என்று விளக்க முடிந்தால், சாதியின் தோற்றத்தையும், ஒழுங்குமுறைகளையும் விளக்க முடியும் என்பது அவர் எண்ணம். இதன் விளைவாக, ஒவ்வொரு சாதியும் திருமண உடன்படிக்கைகளை தங்களுக்குள்ளேயே சுருக்கிக் கொள்வதன் மூலம், வெளியுலகத் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்கின்றன என்ற முடிவிற்கு வந்து சேர்ந்தார். இதை மறுப்பதற்கு இல்லை. சாதியின் செயல்பாடுகளைக் கவனிக்கும் போது நமக்கும் இப்படித்தான் தோன்றுகிறது.


ree

இதன் பின் 1936ல் இன்னும் தெளிவாக, சாதிக் கலப்புத் திருமணங்களின் கலகத் தன்மை குறித்து விரிவாகவே நம்பிக்கை தரும் குரலில் அம்பேத்கர் பேசுகிறார். இதன் மூலம் ஏற்படப்போகும் ரத்தக் கலப்பு, சாதியின் தூய்மைவாதத்தை அசைக்கும் என்று அவர் தீவிரமாக நம்பினார். ஆனால், அதே நேரம், சமபந்தி போஜனம், கலப்புத் திருமணம் என்ற இரு காந்தியத் திட்டங்கள் குறித்தும் அவருக்கு சந்தேகங்கள் இருந்தன. இவ்விரண்டு செயல்பாடுகளும், அகிம்சை வழிப் போராட்டத்தின் அலங்காரப் பொருட்களாக மாறிக் கொண்டிருக்கின்றனவா என்ற கேள்வி அவரிடம் இருந்தது. அதனாலேயே, கலப்புத் திருமணத்தை ஆதரித்துப் பேசுகிறவர், சாதியின் மையம் அதனுடைய சாஸ்திரப் பின்புலமே என்றும் விளக்க ஆரம்பிக்கிறார். அதாவது, இந்து மதத்தின் சாங்கியங்களையும் சனாதனங்களையும் நிர்மூலமாக்குகிற வரையில் சாதியை அழித்தொழிக்க முடியாது என்பது அவரது முடிவு.


ஆய்வாளராக யோசிக்கும் பொழுது அகமணமுறைகளே சாதியின் இறுக்கத்திற்குக் காரணம் என்று சொல்ல முடிந்த அம்பேத்கரால், சமூகச் செயல்பாட்டாளராக அம்முடிவிற்கு வர முடியவில்லை. கலப்புத் திருமணங்களையும் கூட சாதியமைப்பு வெகு சாமர்த்தியமாக தனக்குள் உள்வாங்கிக் கொள்வதை அவர் கவனித்திருக்க வேண்டும். அதே போல், இந்து திருமணச் சட்ட வரையறையின் போதும், கலப்புத் திருமணங்களுக்கான சட்டப் பாதுகாப்பை அவர் வலியுறுத்திய போது, ‘திருமணவுறவைத் தேர்வு செய்யும் உரிமையைத் தனிநபருக்கும் வழங்க வேண்டும்’ என்றே அவரது வாதம் அமைந்திருந்தது. கலப்புத் திருமணங்களுக்கான ஆதரவு என்பது சாதி என்ற இழிவிற்கு எதிரானது என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகி, தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பது என்று மாறியிருப்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். கலப்புத் திருமணம் என்பது ‘சாதி மீறியத் திருமணம்’ என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகி, தனிநபர் சுதந்திரம் பேண வேண்டிய காதல் திருமணமாக உருமாறியது மிக முக்கியமான கருத்தியல் நகர்வு என்றே சொல்ல வேண்டும். இது அம்பேத்கரிடம் நிகழ்ந்தது.


Inter caste marriage என்று ஆங்கிலத்தில் சொல்வதை நாம் தமிழில், சாதிக் கலப்புத் திருமணங்கள் என்றும், சாதி மீறியத் திருமணங்கள் என்றும் மாற்றி மாற்றி சொல்லி வருகிறோம். ஆனால், கலப்பு என்பதற்கும் மீறல் என்பதற்கும் பாரதூர வேறுபாடுகள் உள்ளன. கலப்பு என்பது சாதியமைப்பிற்கு உள்ளேயே இருப்பதற்கான உந்துதலை உடையது; மீறல், சாதியமைப்பை விட்டு வெளியேறுவதற்கான வேட்கை கொண்டது. ஆனால், எல்லா inter caste marriageம் கலப்புத் திருமணங்கள் தானேயொழிய சாதி மீறியத் திருமணங்கள் அல்ல.


இதை விளங்கிக் கொள்வதற்கு, திருமண முறைகளுக்கும் உறவுமுறை அமைப்பிற்குமான தொடர்புகளைத் தெரிந்திருக்க வேண்டும். சாதியை வலியுறுத்தும் பல்வேறு வகை ஆவணங்களை நாம் தொடர்ச்சியாக எதிர்த்தும் மறுத்தும் வந்திருக்கிறோம். மனுதர்ம சாஸ்திரம் தொடங்கி, எண்ணிக்கையற்ற தொன்மக் கதைகள் வரைக்கும் சாதியின் உற்பவத்தையும், இயக்கத்தையும் பேசும் எழுத்து மற்றும் பேச்சு ஆதாரங்களை நாம் அறிவோம். ஆனால், இவை அனைத்தையும் விட இன்னும் ஆழமான சாதியப் பிடிமானத்தையும் நம்பிக்கையையும் விதைப்பது, கண்ணுக்குத் தெரியாத அரூபமான உறவுமுறை அமைப்பு என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால், சாதியின் உயிர்த்தலம் எது என்று கேட்டால், உறவுமுறை அமைப்பையே நாம் கைகாட்ட வேண்டும்.


எது ஒரு பண்பாட்டை ஒழுங்கமைக்கிறது என்று கேட்டால் மானிடவியலாளர்கள் சொல்லும் பதில், உறவுமுறை அமைப்பு. உலகில் மொத்தமே ஐந்து வகையான உறவுமுறை அமைப்புகளே இருப்பதாகச் சொல்கிறவர்கள், திராவிட உறவுமுறை அமைப்பு அதில் ஒன்று என்கிறார்கள். உறவுமுறை அமைப்பு, இரண்டு பகுதிகளை உடையது. ஒன்று, உறவுமுறைப் பெயர்கள்; மற்றொன்று, உறவுமுறைகள். உறவுமுறை அமைப்பு என்று பொதுவாகச் சொல்லப்படுகிறதே தவிர அது மனிதர்களுக்கிடையிலான உறவுமுறைகளைத் தீர்மானிப்பதை விடவும், அவர்களின் பாலியல் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதையே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறது. அதனாலேயே, உறவுமுறை அமைப்பின் தலையாயப் பணி, திருமண உறவுகளைத் தீர்மானிப்பதாக அமைந்திருக்கிறது. உலகில் ஐந்து வகை உறவுமுறை அமைப்புகள் உள்ளன என்ற முடிவிற்கு வருவதற்கு முக்கியமானக் காரணம், ஐந்து வகையான திருமண உறவுகளைக் கண்டறிந்தது தான். எனவே, திருமண முறைகளை நிர்வகிப்பதே உறவுமுறை அமைப்புகளின் முதலும் இறுதியுமான வேலையாக இருக்கிறது.


திராவிட உறவுமுறை அமைப்பின் சிறப்பியல்பு அதன் ‘பரிமாற்றம்’ என்ற விதி. திருமண பந்தத்தை மிக முக்கியமான பரிமாற்றமாக அது பாவிக்கிறது. இந்தப் பரிமாற்றம் இரண்டு பிரிவினருக்கு இடையிலான ஒருங்கிணைப்பை திருமணத்தின் மூலம் சாத்தியப்படுத்துகிறது என்கிறார்கள். அருகிலிருக்கும் வட இந்திய சமூகங்களின் திருமண முறையிலிருந்து திராவிடத்தை வேறுபடுத்திக் காட்டுவது இந்தப் பரிமாற்றம் என்ற யோசனை. திராவிடத் திருமண முறையிலேயே, பெண்கள் ஒரு வம்சத்திலிருந்து இன்னொரு வம்சத்திற்கு காலம்காலமாக பரிமாற்றிக் கொள்ளப்படுகிறார்கள். ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு ஒரு பெண்ணை மணமுடித்துக் கொடுக்கிறார்கள் என்றால், அந்தத் தலைமுறையிலேயோ அல்லது அதற்கடுத்த தலைமுறைகளிலேயோ வேறொரு பெண்ணை மணமகளாகப் பெற்றுக் கொள்ளும் வழிமுறை திராவிடத்தில் காணப்படுகிறது. எனவே, திராவிட உறவுமுறை அமைப்பில், ஒரு திருமணம் என்பது இரண்டு தனி நபர்களின் உடன்படிக்கை அல்ல; அது இரண்டு வம்சங்களின் உடன்படிக்கை.


இத்தகைய உடன்படிக்கையின் அதிகாரபூர்வ வடிவத்தையே திருமணம் என்கிறார்கள். இந்த உடன்படிக்கை, அதன் பின் பல்வேறு சமூகப் பண்பாட்டுச் செயல்பாடுகளாக விரிவடையத் தொடங்குகிறது. சமூக அந்தஸ்தில் ஆரம்பித்து, சடங்கியல் முக்கியத்துவம், பொதுச் சபையில் பேசுவதற்கான அங்கீகாரம், விழாக்களில் மரியாதை, கூட்டு நிகழ்வுகளில் முன்னுரிமை, தொடர்ச்சியான பொருளியல் செயல்பாடுகளில் நிபந்தனையற்ற ஆதரவு, பிரச்சினைகளின் போது சிக்கல்களின் போது வழங்கப்படும் கண்மூடித்தனமான பக்கபலம் என்று இரண்டு வம்சாவழிகளுக்கு இடையே எளிதில் முறிக்க முடியாத கூட்டுணர்வை அது ஏற்படுத்தி விடுகிறது. இந்தக் கடப்பாட்டையே திராவிட உறவுமுறை பரிமாற்றம் என்று அழைக்கிறது.


கலப்புத் திருமணங்களில் இதில் எதுவும் சாத்தியமில்லை என்பது நமக்குத் தெரியும். அது உறவுமுறை அமைப்பிற்கும் தெரியும். அதனால் தான் பாரம்பரியமாக இத்தகையக் கலப்புத் திருமணங்களை நாம் ‘களவு’ என்று அழைத்து பழகியிருக்கிறோம். வடமொழியில் ‘காந்தருவம்’. எட்டு வகைத் திருமணங்களில் ஒன்றாகச் சொல்லப்பட்டாலும், களவு என்பது திருமணமே அல்ல. அது, ஆணும் பெண்ணும் தனித்து எடுக்கக்கூடிய பாலியல் நடவடிக்கைக்கான பெயர். அதற்குப் பண்பாட்டு முக்கியத்துவம் எதுவும் இல்லை. அதனாலேயே பிறரால் வெறுக்கவும்படுகிறது.

இந்துத் திருமணச் சட்ட வரையறை விவாதத்தின் போது, தனி நபர்களே முடிவு செய்யும் இத்தகைய ‘கள’விற்கும் திருமண அங்கீகாரம் வழங்கவே அம்பேத்கர் பெரிதும் மெனக்கிட வேண்டியிருந்தது. இத்தகையத் திருமணங்கள் சாதியமைப்பையும், உறவுமுறைச் செயல்களையும் எந்த வகையிலும் தொந்திரவு செய்வதில்லை. சொல்லப்போனால், இவை புதிய விஷயங்களும் இல்லை. திருமணம் என்பது கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னிருந்தே வழங்கி வரும் பழக்கம் இது. அதனாலேயே இதற்கு ‘களவு’ என்று பெயர். கற்பு அல்லது ஒழுக்கம் என்பதற்கு நேர் எதிர்.


களவு அல்லது காந்தருவத்தை திருமணம் என்று ஒத்துக் கொண்டாலும், திராவிட உறவுமுறை அதை என்றைக்குமே தனது ஒழுங்கமைப்பிற்குள் ஏற்றுக் கொண்டது இல்லை. அதைப் பொறுத்த வரை களவு, ஒரு விதிவிலக்கு. முடிந்தவரை தவிர்க்கப் பார்ப்பது; முடியாதபட்சத்தில் விதிவிலக்கு என்று சொல்லி கட்டம் கட்டுவது. ஆனால், எந்தக் காலத்திலும் இக்களவு மணம் பரிமாற்றம் என்ற எல்லையைத் தொட்டு விட முடியாது. அதனால், இத்தகையத் திருமணங்களுக்கு தனிநபர்கள் கடந்த சமூக யதார்த்தம் வழங்கப்படுவதில்லை. அங்கீகரிக்கப்பட்ட திருமணங்களுக்கு வழங்கப்படுவது போன்ற பண்பாட்டுத் தொடர் நிகழ்வுகள் களவிற்கு இல்லை. பார்க்கப்போனால், களவு செய்து கொண்ட இருவரும் திராவிட சமூக வாழ்க்கையின் பலாபலன்களை அனுபவிக்க அனுமதி இல்லை. இது ஒரு வகை அச்சுறுத்தலும் கூட. கலப்பு அல்லது களவுத் திருமணம் செய்து கொள்ள விரும்பும் பலருக்கும் இதுவொரு எச்சரிக்கையாகவே காட்டப்படுகிறது.


20ம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களில், இத்தகைய களவுத் திருமணங்கள் மீதான புதிய அக்கறை உருவானதற்கு முக்கியக் காரணம் அம்பேத்கரும் காந்தியும். களவு அல்லது கலப்பு, அகமண முறைக்கு எதிராகச் செயல்படக்கூடும் என்று அம்பேத்கர் எழுதி வந்த காலங்களில், காந்தி அதை முற்றிலும் மறுத்து பேசிக் கொண்டிருந்தார் என்பதே வரலாறு. 1920களில் இருவரின் கருத்துகளும் எதிரும் புதிருமாக இருந்தன.


1930களில் பூனா ஒப்பந்தம் கையெழுத்தான பின்பு, தீண்டாமை ஒழிப்பில் மும்முரமாய் செயல்பட வேண்டிய நிர்பந்தத்திலிருந்த காந்தி, கலப்பு மணம் குறித்த அம்பேத்கரின் பார்வையை தனது பார்வையாக ஸ்வீகரித்துக் கொள்கிறார். சமபந்தி போஜனம், கலப்புத் திருமணம் என்ற இரண்டு செயல்திட்டங்களை அவர் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கையாக முன்வைக்க ஆரம்பித்தார். இன்னும் ஒரு படி மேலே போய், தான் இனி கலப்பு மணங்களில் மட்டுமே கலந்து கொள்வேன் என்றும், ஒரே சாதிக்குள் நிகழும் திருமணங்களைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்தார். இதுவெல்லாம் காந்தி வழக்கமாக செய்யக்கூடிய தடாலடிகள் தான். ஆனால், காந்தியின் இத்தகைய மனமாற்றத்திற்கு அம்பேத்கர் இன்னொரு வகையிலும் காரணமாக இருந்தார். அக்காலகட்டத்தில், தான் கொண்டிருந்த கலப்பு மண ஆதரவு நிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக மறுபரிசீலினை செய்ய ஆரம்பித்திருந்தார் அம்பேத்கர். இதன் விளைவாக, சாதியை அழித்தொழிப்பதற்கான ஒரே திட்டம், இந்து மத அழிப்பே என்று பேச ஆரம்பித்திருந்தார். அம்பேத்கரின் இத்தகைய இந்து மத எதிர் நிலைப்பாட்டை மட்டுப்படுத்துவதற்காக காந்தி மேற்கொண்ட தந்திரம் தான் கலப்பு மண ஆதரவு.


கலப்பு மணம் எந்த வகையிலும் சாதிக்கு எதிரான நிலைப்பாடாக இருக்க முடியாது என்பது தான் உண்மை. அது, அங்கீகரிக்கப்பட்ட திருமண விதிவிலக்கு அவ்வளவு தான். அதற்கு பண்பாட்டுப் பொருண்மைகள் எதுவும் இல்லை. அது உறவுமுறை அமைப்பிற்குள் இடம்பெறுவதும் இல்லை, இரண்டு வெவ்வேறு வம்சாவழிகளை ஒரு குடைக்குள் கொண்டு வருவதும் இல்லை. எனவே விதிவிலக்குகளாக மாறி, வீரியமிழந்து நிற்கின்றன. கலப்பு மணம் என்பது காந்தியின் டம்பங்களாலும், நம் கவிஞர்களின் பிதற்றல்களாலும் ஊதிப் பெரிதாக்கப்பட்ட பலூன்.

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

ஆசிரியரின் பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

உங்கள் மின்அஞ்சலை இங்கே பகிருங்கள் 

இணைந்தமைக்கு நன்றி !

© எழுத்தாளர் டி. தருமராஜ் . அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தளம் வடிவமைப்பு & பராமரிப்பு - இளம்பரிதி , ஓவியங்கள் - ரஞ்சித் பரஞ்சோதி.

  • Youtube
  • Facebook
  • LinkedIn
WhatsApp Image 2023-08-01 at 3.07_edited
bottom of page