top of page

இஞ்சி (ஒரு சமையல் குறிப்பு)

என்னால் நிறைய நேரங்களில் உண்மையைச் சொல்ல முடிந்ததில்லை.  உண்மை என்றால், நான் என்ன நினைக்கிறேன் என்பதை.  அது மற்றவர்களை சங்கடப்படுத்துமோ என்றே நான் பயந்து சாகிறேன். அதனால், அதை வேறு வேறு வழிகளில் சொல்வதற்கு தொடர்ந்து முயற்சி செய்கிறேன். 


சின்ன வயதில் எனக்கொரு பழக்கம் இருந்தது.  வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து தான் சாப்பிடுவோம்.  தரையில் வட்டமாக.  இரவுச் சாப்பாட்டிற்கு எல்லோரும் அங்கே இருந்தாக வேண்டும்.  இதற்கு வேறு வேறு காரணங்கள் இருந்தன.  எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டால், நிரத்தி சாப்பிட முடியும். 


அந்த நாளைய சாப்பாட்டை அன்றைக்கே காலி செய்து விடுவது எங்கள் வீட்டுப் பழக்கம்.  மறுநாள் பழைய சோறாக மிஞ்சுவதற்கு எதுவும் இருக்காது என்பது தான் உண்மை.  மேலும், இது காலையில் வடித்து வைத்த சோறு.  ராத்திரி வரை தாங்குவது கஷ்டம்.  நிறைய நாட்கள் சோறு நீர் விட்டு விடும்.  அதாவது, கெட்டு விடும்.  அதை அப்படியே சாப்பிட முடியாது.  நொச நொசவென்று இருக்கும். அதனால் சிறிது வெங்காயம் வெட்டிப் போட்டுத் தாளிசம் செய்து சோற்றில் கலந்து சாப்பிடுவதை கண்டுபிடித்திருந்தார்கள்.  வெங்காய தாளித வாசத்தில் நீர் விட்டுப் போனது மறைந்து விடும்.  இதனாலெல்லாம் நாங்கள் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம்.  இதில் வேடிக்கை என்னவென்றால், இப்படிச் சாப்பிடுவதன் சோகப் பின்புலத்தை நாங்கள் அந்த வயதில் அறிந்திருக்கவில்லை.  தாளித்த சோறு நன்றாக இருக்கிறது என்று சொல்லி,  தினசரி அதைக் கேட்டுத் தொந்திரவு செய்திருக்கிறோம். 


ree

இதே போல், உப்புமா கிண்டிய இரவுகளில், எல்லோருக்கும் வயிறார பத்தியிருக்காது.  அந்த நேரத்தில், கடைசி கரண்டி உப்புமாவை யாருக்கும் தர மாட்டார்கள்.  அதில் கொஞ்சம் சீனி தூவி, அப்புறம் சட்டியில் ஒட்டிக் கொண்டிருக்கும் தீய்ந்த உப்புமாவையும் சுரண்டி எடுத்து, சின்னச் சின்ன உருண்டையாக உருட்டுவார்கள்.  அது ரவா லட்டு மாதிரி இருக்கும்.  ஆளுக்கு ஒன்றோ இரண்டோ உருண்டைகள் கிடைக்கும். இந்தக் களேபரத்தில் உப்புமா பத்தவில்லை என்ற பேச்சே வராது. யார் கடைசி வரை ரவா லட்டை வைத்திருந்து சாப்பிடுவது என்பதில் தான் கவனமாக இருப்போம்.  எல்லோரின் உருண்டையும் காலியான பின்பு, நாம் மட்டும் அதை வைத்திருந்து மற்றவர் கண் முன்னே சாப்பிடுவதில் ஒரு கெத்து. 


சாப்பாட்டில் தட்டுப்பாடு இருக்கிறது என்பதை அந்நாட்களில் யாரும் சொன்னது இல்லை.  விபரம் தெரிந்த பின்னால் தான் நாங்கள் ஏழைகளாக இருந்தோம் என்பதே எங்களுக்குத் தெரியும். எங்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டது பெரியவர்களின் சாமர்த்தியம்.  கிராமத்தில் பாட்டி இப்படி விஷயத்தில் கில்லாடி.  சட்டியில் இல்லை என்பதை பாட்டியைப் போல திறமையாக மறைக்க யாராலும் முடியாது. 


பாட்டி பொரிக்கிற முட்டை எல்லோருக்குமே பிடிக்கும்.  எங்கள் வீட்டில் ஆம்லெட் என்றால் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, வெங்காயம் கருவேப்பிலை வதக்கி தருவார்கள்.  ஒவ்வொருவருக்கும் ஒரு ஆம்லெட் தான்.  கூட வேண்டுமென்றால், தம்பியையோ தங்கச்சியையோ கெஞ்சிக் கூத்தாட வேண்டும்.  ஆனால், பாட்டி வீட்டில் ஒவ்வொருவருக்கும் இரண்டு மூன்று ஆம்லெட் கிடைக்கும்.  பாட்டி சுடுகிற ஆம்லெட் இன்னும் மொந்தையாக, ஆனால் அளவில் சிறிதாக் இருக்கும்.  சுவை, அபாரமாக இருக்கும். 


பாட்டி ஆம்லெட் போடுவதற்கு அரரைச்ச மசாலைச் சேர்க்கிறது என்பதை வளர்ந்த பிறகே கண்டு பிடித்தேன். கொஞ்சம் தேங்காய், சிறிது சீரகம், ஒரு பச்சைமிளகாய், கொஞ்சம் சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் அம்மியில் வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.  இந்த மசாலாவோடு இரண்டு அல்லது மூன்று முட்டையை உடைத்து, நுரை வர அடித்துக் கொள்ள வேண்டும்.  அதன் பின், அந்த முட்டை மசால் கலவையை சின்ன குழிக்கரண்டியில் ஊற்றி ஆம்லெட்டாக எடுக்க வேண்டியது தான்.  மூன்று முட்டையில் பத்து ஆம்லெட் போடலாம்.  வறுமையைப் பெரியவர்கள் ஏன் இப்படி மறைத்தார்கள் என்பது எனக்கு விளங்கவே இல்லை.  அந்த உண்மை சிறியவர்களுக்குத் தெரிந்தால் தான் என்ன? 


நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டு விட்டு ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  இரவுச் சாப்பாட்டின் போது எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம் என்று சொன்னேனா?  இரவுகளில் படுக்கையில் மூத்திரம் போகிற பழக்கம் எங்களுக்கு இருந்தது.  அதனால், இரவுச் சாப்பாட்டில் தண்ணீரைக் குறைவாகக் குடிக்க வேண்டும் என்பது பொதுச் சட்டம்.  யாருக்கும் தனித்தனியே டம்ளர்களில் தண்ணீர் வைக்க மாட்டார்கள்.  தண்ணீர் குவளை பெரியவர்கள் பக்கத்தில் மட்டுமே இருக்கும்.  இந்த நேரம், சாப்பாட்டில் எதையாவது காரமாகத் தின்று விட்டால், நாக்கை வெளியே நீட்டி நீட்டி, உஸ் உஸ்ஸென்று சப்தமெழுப்பியபடி நாங்கள் தண்ணீருக்குத் தவிப்போம்.  அந்த நேரங்களில் காரத்தை மட்டுப்படுத்த சோத்த அள்ளி விழுங்கு, காய்கறிய எடுத்து சாப்பிடு என்று தான் சொல்வார்களே தவிர தண்ணீரைத் தர மாட்டார்கள்.


இந்தக் கொடுமையை என்னால் கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியாது.  எனக்குக் காரமே ஆகாது.  எனது வயிறைப் போன்ற ரோகியை நான் பார்த்ததே இல்லை.  அது நான் பிறக்கும் போதே புண்ணாகத் தான் வந்து சேர்ந்திருக்க வேண்டும்.   அதனால் உலத்திலுள்ள எல்லா வயிறு சம்பந்தமான பிரச்சினைகளும் எனக்கு உண்டு. என்னால் காரத்தைக் கொஞ்சம் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாது.  காரம் மூளையைத் தாக்கிய மறுகணமே நான் அலறத் தொடங்கி விடுவேன்.  அலறல் என்றால், அது காட்டுக் கத்தலாக இருக்கும்.  ஈரக்குலை அதிர ‘இஞ்சி’ என்று கத்துவேன்.  இந்த அலறல் தண்ணீர் தரும் வரை தொடரும். 


எனக்குத் தண்ணீர் என்று கேட்கவே தெரியாது என்பது எல்லோருக்குமே தெரியும்.  நான் இஞ்சி என்று கதறினால், தண்ணீர் கேட்கிறேன் என்று அர்த்தம்.  என் உடன்பிறந்தவர்கள் யாருக்கும் இந்த மாதிரியானக் கோளாறு இல்லை.  அவர்களுக்கெல்லாம் தண்ணீரை தண்ணீர் என்றே கேட்கத் தெரிந்திருந்தது.  நான் இஞ்சி என்று கத்துவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இதையும் வளர்ந்த பின் தான் நான் கண்டுபிடித்தேன்.


எங்கள் வீட்டில் வாரம் ஒரு முறை, பெரும்பாலும் வெள்ளிக்கிழமை இரவுகளில் இஞ்சி அரைத்துத் தின்கிற் பழக்கம் இருந்தது.  ஜீரணத்திற்கு உதவும் என்பது சொல்லப்பட்ட சமாதானம்.  ஆனால், அது ஒரு கொடூரம்.  உண்மையில் அரைத்துத் தின்றது இஞ்சியை அல்ல சுக்கை.  ஆனால், சொல்லப்பட்டது என்னவோ ‘இஞ்சி’ என்று தான்.  மாலை ஆறிலிருந்து ஏழிற்குள் இந்த வைபவம் நடந்து முடியும்.  நல்ல பருமனான சுக்கை, அம்மியில் வைத்து மையாக அரைத்துக் கொள்வார்கள்.  பின் அதை சின்ன நெல்லிக்காய் அளவுக்கு உருண்டையாக உருட்டிக் கொள்வார்கள்.  பின் ஒவ்வொருவரையும் ஆவென்று வாயைத் திறக்கச் சொல்லி, ஆளுக்கொரு உருண்டையைப் போடுவார்கள்.  அதை அப்படியே நாக்கில் படாமல் விழுங்க முடிந்ததென்றால் பிழைத்தீர்கள்.  அப்பொழுதும் கூட, தொண்டையில் எரியும். ஆனால், கொஞ்சம் பிசகி நாக்கிலும் அன்னத்திலும் பட்டு விட்டதென்றால் தொலைந்தோம்.  அய்யோ அம்மாவென்று கை கால்களை உதறிக் கதறுவதைத் தவிர வேறு வழியில்லை. 


இந்த இஞ்சி தின்கிற வைபவத்திலும் தண்ணீருக்கு இடமில்லை.  தண்ணீர் குடித்தால், வயிற்றால் போகுமென்று சொல்லப்பட்டது.  அதனால், காரத்தைப் பொறுத்துக் கொள்ள கதறுவதும், துடிப்பதும் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.  இந்த நேரங்களில் தான் நான் காரமெடுத்தால் ‘இஞ்சீ’ என்று கத்தப் பழகியிருக்க வேண்டும்.  எதையுமே நேரடியாகச் சொல்லி விடுகிற பழக்கம் எனக்கு இல்லை.  நான் உண்மையைச் சொல்ல பயப்படுகிறவன்.  ஆனால், அதற்காகப் பேசாமல் இருக்கிறவன் இல்லை.  அந்த உண்மையை எந்த வழியிலாவது சொல்லி விடுவது என் வழக்கம்.  அதில் மிக முக்கியமான வழி இலக்கியமாக இருந்தது.  நான் இதற்காகத் தான் கதைகளை எழுதுகிறேன்.  கதைகள் என்ற பெயரில் நீங்கள் பெரிய பெரிய உண்மைகளை வெளிச்சொல்லி விட முடியும்.   இலக்கியம் அப்படியொரு உத்தமமான வழி.  தண்ணீர் கேட்க வேண்டிய இடத்தில் ‘இஞ்சீ’ என்று அலறலாம்.  தண்ணீர் கேட்பதற்கானக் காரணம் அது தானே!



 
 
 

Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação

ஆசிரியரின் பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

உங்கள் மின்அஞ்சலை இங்கே பகிருங்கள் 

இணைந்தமைக்கு நன்றி !

© எழுத்தாளர் டி. தருமராஜ் . அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தளம் வடிவமைப்பு & பராமரிப்பு - இளம்பரிதி , ஓவியங்கள் - ரஞ்சித் பரஞ்சோதி.

  • Youtube
  • Facebook
  • LinkedIn
WhatsApp Image 2023-08-01 at 3.07_edited
bottom of page