top of page

காந்தி, அம்பேத்கரை கொன்றது எப்படி?

1932ல் இங்கிலாந்து பிரதமர் ராம்சே ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற சட்டத்தை அறிமுகப்படுத்துகிறார். ஆங்கிலத்தில் communal award என்று சொல்லப்படுகிறது. இந்தச் சட்டத்தின் படி, இந்தியாவின் சிறுபான்மை சமூகத்தவர்களும், ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களும் (depressed classes). தத்தம் பிரதிநிதிகளை தாங்கள் மட்டுமே வாக்களித்து தேர்ந்தெடுத்துக் கொள்கிற வாய்ப்பு வழங்கப்பட்டது. அதற்கு முன் இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டு வட்டமேஜை மாநாட்டின் விளைவாக இந்த சட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.



ree

வகுப்புவாரி சட்டம் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நேர்மையான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதில் முனைப்பாக இருந்தது. சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் பெரும்பான்மை மக்களின் வாக்குகளும் அவசியம் என்று சொன்னால், அப்பிரதிநிதிகள் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதை அது கவனத்தில் கொண்டிருந்தது. எண்ணிக்கையை அடிப்படையாடகக் கொண்டு பெரும்பான்மையினர் பிறரைக் கட்டுப்படுத்த முடியாத வகையில், அந்தந்தப் பிரதிநிதிகளை அந்தந்த மக்களே தேர்ந்தெடுக்கும் வசதி, அம்மக்களின் அரசியலை அங்கீகரிக்கும் செயல்பாடாகும். இவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் தங்களை சிறுபான்மையினர் என்றும் ஒடுக்கப்பட்டவர் என்றும் உணர்வதோடு அதைச் சார்ந்த அரசியலை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பினையும் தொடர்ந்து உருவாக்குகிறது.


காந்தி இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்தார். அவரைப் பொறுத்தவரை, சிறுபான்மை சமூகத்தவருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்குவதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் வழங்குவதை அவர் கடுமையாக எதிர்த்தார். அவ்வாறு வழங்கப்படும் பட்சத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் நிரந்தரமாக இந்திய சமூகத்திலிருந்து பிரிந்து செல்வார்கள் என்று அவர் பயந்தார். இதனால், இந்தியா நெடுக்குவாட்டில் இரண்டாகப் பிளக்குமோ என்பது அவரது பதட்டம்.


ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இந்தச் சலுகை, இந்திய சுதந்திர கோரிக்கையைப் பலவீனப்படுத்தும் என்பது அவரது இன்னொரு பயம். இந்தியா பிளக்கும் என்றால், காங்கிரஸ் இரண்டாகப் பிளக்கும் என்று அர்த்தம். ஏனெனில், தீண்டத்தகாதவர்களை இந்தியப் பெருஞ்சமூகம் படுத்துகிற கொடுமையில், வாய்ப்பு கிடைக்குமென்றால் அவர்கள் அதிலிருந்து விலகிப் போகவே விரும்புவார்கள் என்பதை காந்தி மிக நன்றாகவே உணர்ந்திருந்தார். இதை ஆங்கிலேய அரசாங்கத்தின் சதியாகவே அவர் எதிர்கொண்டார் என்று சொல்ல வேண்டும். அன்றைக்கு காங்கிரஸிலிருந்த பலருக்கும் காந்தியின் இந்த பயம் புதிராகவே இருந்தது. ஏன் இதற்கு இவ்வளவு பதட்டம் கொள்கிறார் என்றே யோசித்தார்கள்.


இன்னொரு வகையில், வட்டமேஜை மாநாடுகளில் அம்பேத்கருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் காந்திக்கு எரிச்சலை ஊட்டியிருந்தது. அம்பேத்கர் மாதிரியான திறமையான ஒரு தலைவர் தீண்டத்தகாதவர்களுக்கு உருவாகுவதும், அதைக் கொண்டு ஆங்கிலேய அரசாங்கம் அம்மக்களை நெருங்க விரும்புவதையும் காந்தி மாபெரும் சதிவலை என்றே விளங்கிக் கொண்டார்.


அம்பேத்கரின் வருகையை எதிர்கொள்ளவும், ஆங்கிலேய அரசு தீண்டத்தகாதவர்கள் மீது காட்டும் அக்கறையை விமர்சிக்கவும் ஆரம்பிக்கிற காந்தி, தீண்டாமை ஒழிப்பு அல்லது சாதி ஒழிப்பு என்பதை முற்றிலும் வேறான திசையிலிருந்து அணுக ஆரம்பித்தார். அதாவது, சாதி அல்லது தீண்டாமைப் பிரச்சினை என்பது தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினை என்பதை மாற்றி அது பெரும்பான்மை இந்தியர்களின் சிக்கல் என்று விளக்க ஆரம்பிக்கிறார். அதாவது, தீண்டாமை என்பது ஓர் ஆன்மீக, உளவியல் சிக்கல். அது எல்லா இந்தியர்களின் ஆழ்மனதிலும் படிந்துள்ள கசடு. அதைப் போக்கும் ஒட்டுமொத்த கடமையும் இந்தியர்களுக்கே உண்டே தவிர அதில் ஆங்கிலேயருக்கோ அல்லது தீண்டத்தகாதவர்களுக்கோ எந்தப் பங்கும் இல்லை. இந்தியப் பெருஞ்சமூகம் மேற்கொள்ள வேண்டிய ஆன்ம சுத்திகரிப்பு இது.


இப்படிச் சொல்வதன் மூலம், தீண்டாமைக்கு எதிராக தாழ்த்தப்பட்டவர்கள் மேற்கொள்ள நினைக்கும் அத்தனை அரசியல் செயல்பாடுகளையும் காந்தி நிர்மூலமாக்கி விடுகிறார். அவரைப் பொறுத்தவரையில் தீண்டாமை குறித்து தாழ்த்தப்பட்டவர்கள் செய்வதற்கு எதுவுமில்லை. போராடக்கூட எதுவுமில்லை என்பது தான் காந்தியின் வாதம்.


ஒரு வகையில், தாழ்த்தப்பட்டவர்களை அரசியல்ரீதியாக முடக்கும் செயல் இது. அம்பேத்கரின் அரசியல் அடையாளம் குறித்து காந்தி எழுப்பிய சந்தேகங்களும் இந்தக் கண்ணோட்டத்திலிருந்தே உருவாகியிருந்தன. அம்பேத்கர் இந்தியாவின் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர் இல்லை என்று காந்தி சொல்லும் போது, அம்பேத்கருக்கு அந்த அரசியலைப் பேசுவதற்கான தகுதி இல்லை என்றே சொல்ல விரும்புகிறார். அதே நேரம் அவரை மகார் என்ற ஒற்றை சாதியின் தலைவர் மட்டுமே என்று சொல்லும் போது, அம்பேத்கரின் அரசியல் இருப்பையே அவர் கேள்விக்குட்படுத்துகிறார். இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் தானே தலைவர் என்று சொல்வதன் மூலம், தலித்துகளுக்கான தனித்த அரசியல் அடையாளத்தையும், சொல்லாடலையும் நிர்மூலமாக்குகிற வேலையையே காந்தி செய்கிறார்.


பதிலுக்கு காந்தி முன்மொழியும் தாழ்த்தப்பட்டோர் விடுதலை ‘தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தில்’ ஆரம்பிக்கிறது. அதை, தாழ்த்தப்பட்டோர் அல்லாத பிறர் செய்ய வேண்டும் என்பது அவரது திட்டம். அதாவது, தாழ்த்தப்பட்டோர் விடுதலை என்பது உயர் சாதியினர் மேற்கொள்ள வேண்டிய அரசியல். இந்த அரசியல் எந்த வகையிலும் அதிகாரப் பகிர்வோடு தொடர்புடையது அல்ல. மாறாக, ஆன்மீக விடுதலையை மையமிட்டது. தலித்தல்லாத பிறரின் ஆன்ம விடுதலையே தலித்துகளின் சமூக விடுதலை என்பதே காந்தியின் சிந்தனையோட்டமாக இருந்தது.


காந்தியின் சிந்தனைகள் பிற்போக்குத்தனமானவை என்றாலும், அதை அவர் நடைமுறைப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் அப்பிற்போக்குத்தனத்தை மூடி மறைக்கின்றன. காந்தி தனது எண்ணவோட்டங்களை நிகழ்த்த ஆரம்பித்தார் என்பது முக்கியம். எளிய வாழ்க்கை, தனது தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்வது, பாலியல் வேட்கையை துறத்தல் போன்று அவர் முன்மொழிந்த பல்வேறு ‘முற்போக்கான’ விஷயங்களை சோதனை செய்து பார்த்தார். இச்சிந்தனைகள் மேலோட்டமானவை, ஜோடனைகள் நிரம்பியவை, வெற்று வாய்ச்சவடால்கள் என்ற போதிலும் அவற்றை மிகச் சிரத்தையாக நிகழ்த்த முனைந்ததே அவரைப் போலியானவர் என்ற விமர்சனத்திலிருந்து காப்பாற்றுகிறது. அவர் போலியான யோசனைகளை நிகழ்த்த ஆரம்பித்திருந்தார்.


இதன் மாபெரும் உதாரணம், தீண்டாமை ஒழிப்பு முயற்சிகள். சமபந்தி போஜனம் அவற்றில் ஒன்று. கோவில் நுழைவுப் போராட்டம் இன்னொன்று. அதே போல், பொதுக்கிணற்றில் நீரெடுக்கும் போராட்டம், சாலைகளில் நடந்து செல்லும் உரிமைப் போராட்டம் என்று தொடர்ச்சியாக அவர் நிகழ்வுகளை வடிவமைத்துக் கொண்டிருந்தார். இந்தப் போராட்டங்கள் அனைத்தையும் தனக்கேயுரிய கலைச்சொற்களின் வரிசையில் ‘சத்யாக்கிரகம்’ என்றே அழைத்தார். அதாவது, அறப்போராட்டம்.


இப்போராட்டங்களில் யாரும் யாருடைய அதிகாரத்தையும் கேள்வி கேட்பதில்லை. மாறாக, சத்யாகிரகம், உங்களது நடைமுறையைக் கேள்விக்குட்படுத்துகிறது. அதிலும் குறியீட்டுரீதியாக, ஒரு நிகழ்த்துதலின் மூலமாக இது செய்யப்படுகிறது. இந்த நிகழ்த்துதல்களுக்கு தொடர்ச்சி கிடையாது. அவை, கலை வடிவத்தின் தன்மையைக் கொண்டவை.


ஆனால், தீண்டாமையோ அன்றாடத்தின் அங்கமாக இருக்கிறது. ஒரு தலித்தின் மீது எப்போது எந்த திசையிலிருந்து தீண்டாமை பிரயோகிக்கப்படும் என்பதை அவனால் யூகிக்க முடியவில்லை. அதனால் அவன் எந்நேரமும் அது நிகழ்வதற்காகக் காத்திருக்கிறான். எதிர்பார்த்திருக்கிறான். அந்த அச்சத்தோடே வாழ்ந்து கொண்டிருக்கிறான். சக மனிதர்களுடன் சகஜமாய் பழக முடியாது, பேச முடியாது, புழங்க முடியாது என்பதை ஒவ்வொரு தலித்தும் உணர்ந்திருக்கிறான். அது அவனுக்கு ஆரம்பத்திலிருந்தே போதிக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்த அறப்போராட்டங்கள் போன்ற குறியிட்டு செயல்பாடுகள் மனந்திரும்பிய தனி நபர்களைஉருவாக்கினவே தவிர தீண்டாமையைக் கடைபிடிக்கும் ஜனத்திரளை எந்த வகையிலும் மாற்றியமைக்கவில்லை.


தீண்டாமை என்பது கூட்டுச்செயல்பாடு. அதை ஒரு தனி நபர் இன்னொரு தனி நபரின் மீது செலுத்துகிறார் என்றாலும் அது கூட்டுச்செயல்பாடாகவே கருதப்பட வேண்டும். ஏனெனில், எந்தவொரு தனி நபர் செயலும் சமூகப் பிரக்ஞையிலிருந்தே உருவாகுகிறது. அதிலும் சாதி பற்றிய அபிப்பிராயங்கள் கூட்டுத்தன்னிலையின் வெளிப்பாடாகவே உருவாகியுள்ளன. எனவே, தனி நபராக சாதியபிமானத்துடன் யாராலும் செயல்பட முடிவதில்லை. ஒவ்வொரு மனிதனின் நடத்தையும், சிந்தனையும் சாதியைத் தீர்மானிப்பது இல்லை. சாதி ஏற்கனவே உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தருணத்திலும் அதற்கான சலுகைகள் அல்லது கட்டுப்பாடுகள் உங்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றன. ஒவ்வொரு முறை சாதியின் நடத்தைகள் உங்களிடம் வெளிப்படுகையிலும், நமக்கு முன்னே அங்கே உலவிக் கொண்டிருக்கிற அப்பெரிய சொல்லாடலில் நாம் இணைக்கப்படுகிறோம் என்பதே அர்த்தம்.


ஆனால், காந்தி தீண்டாமைக்கு எதிரானச் செயல்பாட்டில் திருந்திய தனி நபர்களை உருவாக்குவதில் மும்முரமாக இருந்தார். அவரது சிந்தனைகளை ஏற்றுக்கொண்ட தனி நபர்கள் தத்தம் சுற்றுவட்டாரங்களில் தீண்டாமையை செயல்படுத்தாத விரதத்தை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இது தான் தீண்டாமை எதிர்ப்பில் காந்தி மேற்கொண்ட மிகப்பெரிய ஏமாற்று வேலை. தலித்துகள் தங்கள் அரசியலை இழந்தது இப்படித்தான்.


 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

ஆசிரியரின் பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

உங்கள் மின்அஞ்சலை இங்கே பகிருங்கள் 

இணைந்தமைக்கு நன்றி !

© எழுத்தாளர் டி. தருமராஜ் . அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தளம் வடிவமைப்பு & பராமரிப்பு - இளம்பரிதி , ஓவியங்கள் - ரஞ்சித் பரஞ்சோதி.

  • Youtube
  • Facebook
  • LinkedIn
WhatsApp Image 2023-08-01 at 3.07_edited
bottom of page