அசைக்கும் படிமம் - இமாம் அட்னன்
- tdharmaraj67
- 14 hours ago
- 4 min read
காலச்சுவடில் வெளியான 'கீழ்ப்படிதலின் இசை' கட்டுரை குறித்து இமான் அடனன் எழிதியுள்ள பதிவு.
அசைக்கும் படிமம் ==> அசைக்கும் குறியீட்டாக்கம் (Transgressive Signification)
----
சமீப நாட்களில் டி.தருமராஜ், எம்டிஎம் இருவரின் கட்டுரைப்பிரதிகளுடனேயே பொழுதுகளை நகர்த்துகிறேன். சிந்திப்பதற்கும் வினைபுரிவதற்கும் ஏகப்பட்ட தீனிகள். இருவரின் பல கட்டுரைப் பிரதிகளையும் தெரிவு செய்து, பிரின்ட் எடுத்து, இரு பெரும் தொகுப்புகளாக்கிக் கொண்டேன். லப்டொப்பிற்கு முன்னால் வெகுநேரம் இருந்து வாசிப்பது பெரும் இம்சை. Hard copies ஆக கைகளில் இருக்கும் போது, கோடடித்து, வட்டமிட்டு, கீறி, எழுதி, விளையாடிப் பார்க்கவும் முடிகிறது.
இந்தப் பதிவானது ‘கீழ்படிதலின் இசை’ எனும் டி.தருமராஜின் கட்டுரைப்பிரதியுடன் நிகழ்த்திய வாசிப்பு வினையாற்றுதில் கிளர்ந்தெழுந்த சிந்திப்புகள், தகவமைத்துக் கொண்ட கருத்தமைவுகள் பற்றியது.
குறித்த அந்தக் கட்டுரையின் விடயதானங்களுக்குள் இறங்குவதற்கு முன்னர், தலைப்பில் குறிப்பிட்டிருக்கும் ‘அசைக்கும் படிமம்’ எனும் கருத்தமைவு குறித்து கொஞ்சம் விபரித்துவிடுகிறேன்.
படிமக்கவிதைகள் தமிழுக்கு நன்கு பரீட்சையமானவை. படிமம் என்பது image; காட்ச்சி. மொழியில் காட்ச்சி காட்ச்சிகளாக விபரிப்பைச் செய்துகாட்டும் கவிதை, படிமக்கவிதை.
படிமம் என வருகின்ற போது, அதனுள் இரு வகைமைகள் இருப்பதை அவதானிக்கலாம். ஒன்று அசையாப் படிமம். மற்றது அசையும் படிமம். அசையாப்படிமத்திற்கு உதாரணமாக புகைப்படத்தினைச் (Photo) சொல்லலாம். அசையும் படிமத்திற்கு காணொலி (video).
குறிப்பிட்டிருக்கும் அவ்விரு வகைமையிலும் இருந்து விடுபட்டு, இன்னொன்றை குரானாவும் நானும் கவிதைக்குள் சிந்திக்கவும் விவாதிக்கவும் துவங்கினோம். நாங்கள் வடிமைக்கும் கவிதைப்பிரதிகளில் அதிகம் இயங்கிவரும் கவிதைச் செயலும் அதுதான். அதனைக் குறிக்கக் கண்டடைந்த term தான் அந்த ‘அசைக்கும் படிமம்’.
படிமம்:
வெண்னிற சட்டகத்திற்குள்
குந்தவைக்கப்பட்டிருக்கும் காகம்
*
அசையும் படிமம்:
வெண்ணிற சட்டகத்திற்குள்
வைக்கப்பட்டிருக்கும் காகம்
அலகைப் பிளந்து பிளந்து கத்துகிறது
சுழன்று மோதி மூர்ச்சையாகிறது.
காட்ச்சியறையில் நிற்பவர்,
அது என்ன ராகத்தில்
பாடியிருக்குமெனக் கேட்கிறார்.
*
அசைக்கும் படிமம்:
நீர்நிலைகள் அற்ற
நிலக்காட்சி வைக்கப்பட்டிருந்த சட்டகத்திற்குள்தான்
அந்தக் காகமும் அகப்பட்டிருந்தது.
புற்தரையில் நின்றவாறது இறக்கைகளை விரித்ததும்
அதன் கால்களிலிருந்து நிலத்தினுள் நீளும் வேர்கள்
அதனை ராட்சத மரமாய் வியாபகம் கொள்ளச் செய்கிறது.
அது சரி, இங்கிருப்பதாகச் சொன்ன
நிலக்காட்ச்சிச் சட்டகம் எங்கே?
இறகுகள் போன்ற கருப்பு இலைகளை விலக்கித்
தேடுகிறாள் சிறுமி.
அசைக்கும் படிமம் என்ன செய்கிறதென்றால், குறித்த ஒரு குறிப்பானில் (signifier) ஏற்றி அசையாமல் பிணைத்திருக்கும் அர்த்தத்தினை அசைக்க முனைகிறது. இந்தக் கவிதைப் பிரதியில் ‘காகம்’ எனும் குறிப்பான் சுட்டும் பறவையின் அர்த்தம் அசைக்கப்படுகிறது. அங்கு எப்படி அசைக்கப்படுகிறது? அப்படி அசைக்கப்படுவதனூடாக எதனைக் கதையாட முனைகிறது எனும் அரசியல் பிரக்ஞையும் அந்த அசைக்கப்படும் விசயத்தின் அக்கறைகளாக ‘அசைக்கும் படிமம்’ எனும் கருத்தமைவிற்குள் உள்வாங்கிக் கொண்டோம்.
குறித்த ஒன்று அசையாமல் இருந்தால் தான் அதனை அசைக்கமுடியும். இல்லையா? அசைக்கிறோம் எனில், அது அசையா விடயத்துடன் இணைந்தபடி; அசையாமையுடன் தொடர்புற்று நிகழும் எதிர்ச்செயல்களாகவே அமைகிறது.
*
இந்த அறிமுகத்துடன் டி.தருரமராஜின் கட்டுரைக்குள் நுழைவோம். அக்கட்டுரையானது மாற்றமுற்றுச் செல்லும் பறை இசையின் அரசியல் அர்தத்தினை விவாதிக்கிறது. தமிழ் பொதுச் சமூகப்பரப்பில், சாவு வீடுகளில் சாப்பறயைகாக் கொட்டப்பட்டு வந்ததே அதன் நீண்ட கதை. தீட்டு என விலக்கிவைக்கப்பட்ட பறையும் அதன் சமூகமும் சாவின் போது உயர்சாதியினரை நெருங்கவும் இசைக்கவும் தவிர்க்க முடியாமல் வரவழைக்கப்பட்டனர். அனுமதிக்கப்பட்டனர். இந்த வினோத முரணை ‘வெறுக்கப்படும் தவிர்ப்பு. தவிர்க்க முடியாத வெறுப்பு’ எனச் சுட்டிக் காட்டுகிறார்.
அவர்களுக்குள் உண்டான தலித் சமூக அரசியல் அசைவியக்கத்தின் அடியாக, கீழ்ப்படியாமெய் எனும் அரசியல் பிரக்ஞை உருவாகிறது. அந்தப் பிரக்ஞையினூடாக உயர்சாதியினரின் சாவு வீடுகளில் பறை இசைக்க மாட்டோம் எனக் குரல்கள் எழுந்தன. அப்படி குரலெழுப்பி பறைகொட்ட மறுத்த ஒருவரின் கட்டைவிரல்கள் இரண்டையும் உயர்சாதியினர் வெட்டியெறிந்தனர். சுயமரியாதை இயக்கக் கூட்டத்தில் பேசிய பெரியார், நமது இயக்கம் சீர்திருத்துவதற்கானது அல்ல. அழிப்பதற்கானது. சீர்திருத்தம் செய்ய இயங்குவது பயனற்றது. சாதியத்தையும் அதன் புறவடிவங்களையும் அழித்தொழித்தால் தான் நிலமை மாறும் என முன்னெழுந்தார். பறையை வைத்து தங்களின் மேல் பொருத்தப்பட்டு நிரந்தரமாக்கப்படும் இழிவடயாளத்தை நீக்க பறையை முற்றிலுமாக நீக்குவது எனும் தீர்மானத்திற்கும் வந்திருக்கிறார்கள்.
நா. வானமாமலை போன்றோர் வழக்காறுகள் மீது முன்னெடுத்த அரசியல் முக்கியத்துவமானது, பறையையும் அதன் உள்ளடக்கங்களையும் வேறுபடுத்திப் பார்க்கலாம் எனும் தன்மையைத் தோற்றுவித்தன. பறை இழிவானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனை நிகழ்த்த வரையறுத்துப் பேணும் சூழலே இழிவடையாளமாகப் பேணுகிறது எனும் புரிதலுக்கு அவர்கள் வந்ததாகக் குறிப்பிடுகிறார்.
பின்னர் ‘தலித் பண்பாடு’ குறித்து மாற்று விவாதப் பார்வையுடன் களத்திற்கு வந்த ராஜ் கௌதமனின் பிரதிகள், சுயமரியாதை இயக்கம் முன்னெடுத்த ‘முற்றிலுமாக அழித்தொழித்தல்’ எனும் முனைப்பிலிருந்து விலகி, கலகம் புரிதல் என்பது ‘சொல்வதைச் செய்யாமல் இருப்பது மட்டுமல்ல; செய்யாதே எனச் சொன்னதையும் செய்வது’ எனும் புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்வாறான புரிதல்களின் அடியாக பறையின் புதிய வடிவம் பற்றிய மாற்றுக் கற்பனை வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி பறையைக் கொட்டுவதற்குப் பதிலாக, பறையறைந்து வாசிக்க வெளிக்கிட்டிருக்கிறார்கள். வாசிப்பதுடன் இளைஞர்களும் யுவதிகளும் அடவுகட்டி ஆடவும் துவங்குகிறார்கள். இழிவான அடையாளமாக, இழவுவீட்டில் சாப்பறையாகக் கொட்டப்பட்டு வந்த பறையினை, பெருமிதத்தின் சின்னமாக, போர்ப்பறையாக மாற்றியமைத்தார்கள். சாப்பறையில் சாத்தியமாகாத துள்ளல் போர்பறையில் நிகழ்ந்ததாக விளக்குகிறார்.
அத்துடன் நின்றுவிடவில்லை. தொடர்ந்தும் பறைவாசித்தலில் மாற்றங்கள் நிகழ்கிறது. பறையானது பல நிகழ்வுகள், வைபவங்கள், விழாக்கள் என கேட்போரைக் கவரும் இசையாகவும் நிகழ்த்துகையாகவும் வெவ்வேறு சூழமைவுகளுக்குள் நுழைகிறது. பறை இசைப்பவர்களே ஆடவும் செய்கிறார்கள். தலித் அல்லாதோரும் பறையைத் பிடித்துக் கற்றுக்கொள்கிறார்கள். கற்றுக் கொடுக்கிறார்கள். இந்தப் புள்ளியில் பறையின் அர்த்தம் மேலும் மாறுதலுக்கு உள்ளாகிறது. அதாவது, போர்ப்பறை என தலித் அரசியல் மீட்டுருவாக்கிய ‘பறையின்’ அர்த்தம் மறைந்து போய்விடுகிறது. தலித் மக்கள் அதற்கு வழங்கிய தலித் அரசியல் பிரக்ஞையான அர்த்தம் தணிந்து விடுகிறது. சாதாரண பொதுப்பறையாக மாறுகிறது. அதனை ‘வெற்றுக் குறிப்பானாகும்’ பறை என்கிறார்.
டி.தருமராஜ் குறிப்பிடும் வெற்றுக் குறிப்பான் அல்லது காலிக் குறிப்பான் (Empty Signifier) என்பது Ernesto Laclau முன்வைத்த கருத்தமைவு. லக்லாவைப் பொறுத்தவரை, ஆதிக்கத் தரப்பானது எதிர்கொள்ளும் குறிப்பான்களை ‘வெறுமையான குறிப்பான்களாக’ மாற்றுவதன் மூலம் தங்களின் அரசியல் காய்நகர்த்தல்களை செயல்படுத்துகிறது என்கிறார். குறிப்பான்கள் எதுவும் துவக்கத்தில் வெறுமையாக இருப்பதில்லை. ஆனால் அரசியல் உந்துதல் அல்லது அரசியல் செயல்பாடு மூலம் அது அவ்வாறு வெறுமையாக ஆக்கப்படுகின்றன. அல்லது அதன் அர்த்தப் பிரங்கை அய்தாக்கப்படுகின்றன. ஒரு இயக்கத்தின் (movement) வெற்றி என்பது, அப்படி உருவாக்கும் காலிக் குறிப்பானிற்குள் தங்களின் அர்த்தங்களை (குறைந்தபட்சம் தற்காலிகமாக) நிரப்பும் திறனைப் பொறுத்து அமைகிறது என விளக்கம் தருகிறார்.
நம் ‘சுதந்திரத்தை’ பெற்றெடுப்போம் என இ*ஸ்*ரேல் அரசும் ராணுவமும் ஓங்கி ஒலிக்கிறார்கள் எனின், அங்கு குறிப்பிடும் சுதந்திரத்தின் அர்த்தம் ப-ல-ஸ்-தீன் மக்களை பூண்டோடு அழித்தொழிப்போம் என்றாகிறதல்லவா? அங்கு சுதந்திரம் எனும் குறிப்பான் வெறுமையான கோப்பையாக அல்லவா மாற்றப்பட்டிருக்கிறது? அதிகாரமுனையாலும் தனது அர்த்த்தினை அதற்குள் இலகுவாக ஏற்றிவிட முடிகிறது. ஏனென்றால், அது காலிக் குறிப்பானாக மாற்றப்பட்டிருக்கிறது.
லக்லாவ்வின் காலிக் குறிப்பானை அறிமுகப்படுத்தி டி.தருமராஜ் எழுதியிருக்கும் நீண்ட கட்டுரையை (3 பகுதியாக) இன்னும் வாசிக்கவில்லை. நான் புரிந்துகொண்ட விதம் சரிதானா என வாசித்துப் பார்க்க வேண்டும்.
சரி, இப்பொழுது இந்தப் பதிவின் பிரதான நோக்கத்திற்கு வருகிறேன். இழிவான அடையாளமாகக் கற்பிதம் செய்யப்பட்டு அசையாமல் பேணப்பட்டு வந்த சாப்பறையை, தலித் அரசியல் பிரக்ஞையினூடாக தங்களின் சுயமரியாதைக்கான போர்ப்பறையாக மாற்றியமைத்துக் கொண்டார்கள் அல்லவா? அதனைப் புரிந்து கொள்வதற்கும் விளக்குவதற்குமான கருத்தமைவாக ‘அசைக்கும் படிமத்தை’யும் கையாளலாம் எனத் தோன்றுகிறது.
போர்ப்பறையாக மாற்றியமைத்தல் என்பது, பறையின் மீது என்ன அர்த்தம் படியவைக்கப்பட்டிருந்ததோ அதற்கு எதிரான ஒரு கலகச் செயல் அது. அதாவது, அசையாமல் இருந்த அர்த்தத்தினை அசைத்துக் காட்டிய செயல். அசையாமல் பேணப்பட்டு வந்த இழிவுபடுத்தும் அரசியலைவிட்டும் மீறித் திமிறி இசைத்து ஆடிக்காட்டிய எதிர்ப்பரசியல். ஏலவே அசைக்கும் படிமம் பற்றி விபரிக்கும் பொழுது குறிப்பிட்டது போல், அசைக்கும் செயல் என்பது அதன் அசையாமல் பேணப்பட்டு வரும் தன்மையிலிருந்தே பிறக்கிறது. ஆனால், அதற்கு எதிராக இயக்கமுறுகிறது.
இந்த விபரிப்பைச் செய்து பார்க்கும் பொழுது, இந்த இடத்தில், அசைக்கும் படிமம் என உருவாக்கிக் கொண்ட இலக்கியக் கருத்தமைவை, கொஞ்சம் விரிவுபடுத்த அல்லது மாற்றி ‘அசைக்கும் குறியீட்டாக்கம்’ (Transgressive Signification) என அமைத்துக் கொள்வது இன்னும் பொருத்தமாகத் தோன்றுகிறது. ஏனென்றால், போர்ப்பறையின் அரசியல் செயலை விளக்கி விபரிக்க முனையும் தன்மையானது, அதனை மொழியியல் சார் அரசியல் கருத்தமைவாக மாற்றம் கொள்ளச் செய்கிறது என அவதானிக்கிறேன். இப்படி உருவாக்கிப் பார்த்த இந்தப் புதிய term ஆனது தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி, குறித்த கருத்தமைவுடன் பக்காவாகப் பொருந்திப் போகிறது.
"Transgressive Signification (அசைக்கும் குறிப்பீட்டாக்கம்) is the deliberate shaking of a signifier’s fixed meaning to violate dominant narratives, relying on its stability to stage the rupture.”
Kommentare