அங்கே நீதியைப் பேச யாரும் இல்லை!
- tdharmaraj67
- Aug 1
- 2 min read
தமிழகத்து இடைநிலைச்ச் சாதிகளின் ஒழுங்கமைப்பு வித்தியாசமானது. எனக்கு அங்கே நண்பர்கள் உண்டு. அவர்களெல்லாம் பெரும்பாலும் திராவிட சித்தாந்திகள் அல்லது மார்க்சியர்கள். விதிவிலக்காக சில கலை இலக்கியவாதிகளும் இருக்கிறார்கள். நிறைய நேரம் யோசித்திருக்கிறேன் - இவர்கள் தத்தம் சாதிகள் குறித்து என்ன அபிப்பிராயம் வைத்திருப்பார்கள்? இன்னும் சில நேரம் காட்டமாக அவர்களிடமே கேட்டிருக்கிறேன். சமத்துவம், நீதி, அறம், விடுதலை என்பதையெல்லாம் பொது மேடைகளிலும் தலித்துகள் மத்தியிலுமே பேசுகிறீர்களே, உங்கள் சொந்த கிராமங்களில் போய் பேசக்கூடாதா? அந்த மக்களையும் விடுதலைக்கு தயார் செய்யக்கூடாதா? அவர்களிடம் இதற்கு என்றைக்குமே பதில் இருந்தது இல்லை.

இடைநிலைச் சாதி திராவிட சித்தாந்திகள் பெரும்பாலும் தனிமனிதர்கள். அவர்களது பேச்சை, குடும்பத்தில் யாரும் பொருட்படுத்துவது இல்லை. போன தலைமுறை இலக்கியவாதிகள் அவரவர் வீடுகளில் எவ்வாறு அஃறிணைப் பொருட்களைப் போல் பார்க்கப்பட்டார்களோ, அதே நிலை தான் திராவிடர்களுக்கும். மார்க்சியர்கள் கொஞ்சம் தேவலாம். அவர்கள் குடும்பமாக வாழ்கிறார்கள். அபூர்வமாகக் கூட்டுக்குடும்பமாகவும் காணப்படுகிறார்கள். ஆனால், அவர்களுக்கும் மார்க்சியர்களாக சாதிக்குள் இடமில்லை; மரியாதை இல்லை; பேச்சுரிமை சுத்தமாக இல்லை.
தலித்துகள் மத்தியில் கதையே வேறு மாதிரி என்பது ஊருக்கே தெரியும். ஒரு தலித் திராவிடர் என்றால், அவரது சுற்றுவட்டாரத்தையே கறுப்பாக மாற்றி விட்டிருப்பார். மார்க்சியம் என்றாலும் அப்படித்தான். இதற்கு அவர்களிடம் நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. ஒரு நூற்றாண்டிற்கு முன்னிருந்தே சமத்துவம் பற்றியும், அறம் பற்றியும் பேசி வந்த அமைப்புகள் அவர்களிடம் இருந்தன. அதாவது, திராவிடம் மார்க்சியம் என்பவையெல்லாம் தோன்றும் முன்பே அவர்கள் சமூக நீதியைப் பேசிக் கொண்டிருந்தனர். ஏனெனில் ‘அறம் செழிப்பது’ அவர்களது வாழ்வாதாரமாக இருந்தது. அதனாலேயே, அவர்களிடம் விதவிதமான சமூக சீர்திருத்த இயக்கங்கள் செயல்பட்டு வந்தன. இவ்வியக்கங்கள் அத்தனையும் ஒடுக்கப்படுதலுக்கு எதிரான ஆயுதங்களாகவே செயல்பட்டிருந்தன. தென்திருவிதாங்கூரில் உருவான முத்துகுட்டி சாமியின் அய்யாவழிக்கும் இப்படியொரு ஒடுக்கப்பட்டக் காரணம் இருந்தது.
அப்படியானால், இடைநிலைச் சாதிகளில் ஒடுக்கப்பட்டவர்கள் இல்லையா என்ற கேள்வி எழலாம். இருந்தார்கள். ஆனால், அதை அவர்கள் ஒப்புக் கொள்ளும் மனநிலையில் இல்லை. ஒடுக்கப்படுவதை விடவும் ஒடுக்கப்படுகிறோம் என்ற உணர்வு இங்கே முக்கியமாகிறது. அந்த உணர்வே உங்களை அறம் பற்றி விவாதிக்கத் தூண்டுகிறது. இந்த விஷயத்தில் இடைநிலைச் சாதிகள், இரண்டுங்கெட்டான் தன்மையுடையவை. அவை, ஆதிக்க முகமூடியும், ஒடுக்கப்பட்ட உடலும் கொண்டவை. இன்னும் சொல்லப்போனால், அவற்றிற்கு தனித்துவமான குணங்கள் எவையும் இருக்கவில்லை. அவற்றின் சமயம், பண்பாடு, மொழி, இலக்கியம், கலை, அறிவு என அனைத்தும் சாதிப் படிநிலையின் மேலிருந்தோ அல்லது கீழிருந்தோ தோன்றியவை. பெரும்பாலும், திரள் போன்று கருதப்படுகிறவர்கள். கும்பல் அல்லது வெகுஜனம். திராவிட இயக்கம் இந்தத் திரளுக்கு ‘திராவிடர்’ என்ற பெயரைக் கொடுத்திருக்காவிட்டால், இன்றளவும் பெயரற்ற தொகுதியாகவே பார்க்கப்பட்டிருப்பர்.
நவீன இந்தியாவின் எந்தவொரு மாண்பையும் தமிழகத்து இடைநிலைச் சாதிகள் பிரதிபலிக்கவில்லை என்பது கொடூரமான உண்மை. இதற்கு முக்கியமானக் காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட போலியான புரட்சிகர அடையாளம் என்றே சொல்ல வேண்டும். சாதிகளின் தொகுதியாக இருந்து கொண்டே திராவிடராக வலம் வர முடியும் என்று சொல்லப்பட்டதன் காரணமாக அவர்கள் கடைசி வரை பெரியார் முன்மொழிந்த சுயமரியாதை என்றால் என்ன என்பதையும், பகுத்தறிவு என்றால் என்ன என்பதையும் விளங்கிக் கொள்ளவே இல்லை. பிராமணர்களை நையாண்டி செய்தாலே அது அநீதிக்கு எதிரான புரட்சிகர நடவடிக்கை என்பதிலிருந்து அவர்கள் இன்று வரை விடுபடவே இல்லை. இதனாலேயே அவர்களுக்குள் எந்தவொரு சமூக சீர்திருத்த இயக்கங்களும் உருவாகாமல் போனது.
ஒரு உதாரணத்திற்கு பெண் சிசுக்கொலை என்ற கொடூரம் காணப்படுவதை எதிர்த்து அவர்களுக்கு உள்ளிருந்து ஒரு குரலும் ஒலித்தது இல்லை. இந்திய அரசியலமைப்பே தலையிட்டு அதைத் தடுக்க வேண்டி வந்தது. சாதி மீறித் திருமணம் செய்பவர்களை கொன்றழிக்கும் செயலின் அறமற்ற தன்மையைக் குறித்தும் அவர்களுக்கு உள்ளிருந்து இன்று வரை எந்தக் குரலும் ஒலித்தது இல்லை. ஏனெனில் அவர்களின் பேச்சில் சமத்துவம், நீதி, அறம் என்ற சொற்களுக்கு இடம் இல்லை. அவர்கள் குடிமை விஷயத்தில் கல்லா மனிதர்களாக இருக்கிறார்கள். இந்திய அரசியலமைப்பை எழுதி அரங்கேற்றி முடித்த பின்பு அம்பேத்கர் பயந்து கொண்டே இருந்தது, இவர்களின் இத்தகைய அறமற்ற தன்மை குறித்து தான்.
Comments