top of page

தமிழர் பண்பாட்டில் பிச்சை!

!


மதுரையில் நூதனத்திற்கு எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. பிச்சை எடுப்பதிலும் ஒரு நூதன வடிவத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த நூதனப் பிச்சையை எடுப்பது வயதானப் பெண்கள். அருகிலுள்ள கிராமத்திலிருந்து வருகிறார்கள். மதுரையின் நெடுஞ்சாலை ஓரங்களில் இவர்களைப் பார்க்கலாம்.


தேனி விலக்கு பிரியும், மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இவர்களை நான் அடிக்கடி பார்க்கிறேன். ஸ்பீடு பிரேக்கர் அருகில் நின்று கொள்வார்கள். வாகனங்கள் அந்த இடத்தில் வேகத்தைக் குறைக்கும் போது அவர்கள் சுறுசுறுப்பாவார்கள். அவர்கள் கைகளில் சின்ன கீரைக் கட்டு போல ஒன்று இருக்கும். வாகன ஓட்டிகள் எதிர்பார்க்காத தருணத்தில் அக்கீரைக்கட்டை வாகனங்களின் குறுக்கே சாலையில் வீசுவார்கள்.


இப்பொழுது வாகன ஓட்டிகள் காசு கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் கீரைக் கட்டை எடுப்பார்கள். இது என்ன புது உத்தியாக இருக்கிறது என்று கேட்டால், இது புதுசு இல்லை காலங்காலமாய் கிராமங்களில் இப்படித்தான் பிச்சை எடுக்கிறார்கள் என்று நமக்குத் தகவல் சொல்கிறார்கள். அந்தக் கட்டும் கீரைக் கட்டு இல்லையாம், நெல் நாற்றுக்கட்டாம். இந்த சைஸில், தினந்தோறும் அவர்களுக்கு எங்கிருந்து இந்த நெல் நாத்து கிடைக்கிறது என்று தெரியவில்லை.


அறியப்படாத தமிழகத்தில் தொன்று தொட்டு வழங்கி வரும் பிச்சையெடுக்கும் பண்பாடு இது என்று அப்புறம் தான் விளங்கியது. பாரம்பரியப்படி, வயல்களில் நாத்து நடும் போது, மேற்பார்வையிட வரும் பண்ணையார்களை இப்படி வழிமறிப்பது உண்டாம். அவர்கள் நடந்து வரும் வரப்பின் குறுக்கே கையிலிருக்கும் நாற்றுக் கட்டை வைத்து விடுவார்களாம். பண்ணையார் அந்தச் சின்ன நாற்றுக் கட்டைக் கூடத் தாண்ட முடியாமல் திகைத்து நிற்பாராம்.


குறுக்கே ஏதாவது இருந்தால் அதைத் தாண்டிச் செல்வது தமிழ்ப் பண்பாட்டில் குற்றமாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக மனிதர்களைத் தாண்டிரவே கூடாது என்பது தான் விதி. குழந்தையைப் போட்டு தாண்டுவது சத்தியம் செய்வதற்கு இணையானது. முந்தானை முடிச்சு என்றொரு படத்தில் பாக்கியராஜ் தாண்டுவது போல ஒரு காட்சியை வைத்திருப்பார். அந்நாட்களில் அந்த சீனை தமிழகமே உச்சுக் கொட்டிப் பார்த்திருந்தது.


உங்களுக்கு யாரையாவது தாண்டியே ஆக வேண்டும் என்றால், தாண்டிய பின் தொட்டுக் கும்பிட வேண்டும் என்பதே பரிகாரம். பண்பாட்டில் பலருக்கும் பிடித்த விஷயம் இது தான். கூடவே கூடாது என்று தான் ஆரம்பத்தில் அடம் பிடிக்கும், ஆனால் ஒரு கட்டத்தில் அதற்குப் பரிகாரம் இருக்கிறது என்று இறங்கி வரும். கூடாது தான்; ஆனால், ஆபத்திற்குப் பாவமில்லை என்பதே பண்பாட்டின் தாரகமந்திரம்.


நாற்றுக் கட்டைப் பார்த்ததுமே பண்ணையார் தயாராய் வைத்திருந்த காசை எண்ணி அவர்களுக்குக் கொடுப்பாராம். அதன் பின், அந்நாற்றுக்கட்டுகளை எடுத்து அவருக்கு வழிவிடுவார்களாம். இதை ‘அடித்தளமக்களின் ஆங்காரம்’ என்ற தலைப்பில் சமூக அறிவியலில் கொஞ்ச காலம் ஆர்ட்டின் விட்டுக் கொண்டிருந்ததும் உண்டு. இந்தக் காசு பார்க்கும் கலாச்சாரம் கிராமங்களில் சர்வ சாதாரணம் என்கிறார்கள். புதியவர் யாராவது வந்து விட்டால் போதும், ஆரத்தி எடுக்கிறேன் பேர்வழி என்று சொல்லி வழிமறித்து பிச்சை கேட்பது பண்பாட்டு உத்தி என்கிறார்கள். இது இன்றைக்கு அரசியல்வாதிகள் வரைக்கும் வந்திருக்கிறது.


இதை விடவும் சுவராஸ்யமான இன்னொரு வழக்கம் இருக்கிறதாம். ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்ட வெற்றிலையோ அல்லது வாழைப்பழமோ கிடைத்து விட்டால் காசு பார்த்து விடலாம் என்று சொல்கிறார்கள். அப்படிக் கிடைத்து விட்டால் அதை சம்பந்தக்காரர்களாய் பார்த்து கொடுக்க முண்டுவார்களாம். இப்படிக் கொடுக்கப்படும் ‘இரட்டையை’ வாங்குவதற்கு எல்லோருக்கும் பயமாம். அப்படி வாங்கினால் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் என்பது பாரம்பரிய அறிவியல். இதற்காக ‘அது வேண்டவே வேண்டாம்’ என்பார்களாம். வேண்டாமென்றால் காசு கொடு என்று கறப்பதையும் தமிழர் பண்பாடு என்கிரார்கள்.


இந்தப் பாரம்பரிய பிச்சையின் நவீன வடிவமே, நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்து நாற்றுக்காட்டுகளை வீசுவது என்கிறார்கள். வாழ்க்கை எத்தனை தூரம் இயந்திரமயமாக மாறினாலும், தமிழர் பண்பாடு தனது ஆன்மாவை என்றைக்கும் இழக்காது என்பதையே, இந்த நவீன பிச்சை வடிவம் சொல்லிக்கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் மற்ற பண்பாடுகள் தமிழர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும் என்பது தான் உண்மை.


ஆனாலும் பாருங்கள், இந்தப் பண்பாட்டைக் காப்பாற்றுவது மீண்டும் மீண்டும் பிச்சை எடுப்பவர்களின் வேலையாகவே இருக்கிறது. இப்பாரம்பரியத்தை வயற்ப்புறங்களிலிருந்து நெடுஞ்சாலைகளுக்கு அவர்கள் கொண்டு வந்தார்கள் என்றாலும், வாகன ஓட்டிகள் அதை மதிப்பதே இல்லை என்பது தான் எனது வருத்தமெல்லாம்.


நாற்றுக்கட்டுகள் மீது ஏறி விடாமல் லாவகமாய் வாகனத்தை வளைத்து ஓட்டி விடுகிறார்கள். அந்தப் பெண்கள் நம்மை பண்ணையார்களாக நினைக்கிறார்கள் என்ற சின்ன இரக்கம் கூட அவர்களிடம் இல்லை. தமிழ்பண்பாடு இனி மெல்லச்சாகும் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

ஆசிரியரின் பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

உங்கள் மின்அஞ்சலை இங்கே பகிருங்கள் 

இணைந்தமைக்கு நன்றி !

© எழுத்தாளர் டி. தருமராஜ் . அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தளம் வடிவமைப்பு & பராமரிப்பு - இளம்பரிதி , ஓவியங்கள் - ரஞ்சித் பரஞ்சோதி.

  • Youtube
  • Facebook
  • LinkedIn
1ADAC9F0-E9E2-4CB2-8C07-EA1B8B3B4C47.png
bottom of page