ஜல்லிக்கட்டு - வாசக அனுபவம்
- tdharmaraj67
- 5 days ago
- 2 min read
அன்புள்ள தர்மராஜ்,
உங்களது ‘ஜல்லிக்கட்டு - கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ நூலை புத்தகக் கண்காட்சியில் வாங்கி வந்து படித்துக் கொண்டிருக்கிறேன். அப்புத்தகம் வெளிவருவதாக முகநூலில் பகிர்ந்த போதே வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். வந்ததும் வாசிக்க ஆரம்பித்து விட்டேன். அதற்கு ஒரு காரணம் உங்களது எழுத்து எனக்குப் பிடிக்கும். தமிழர்கள் பற்றி விட்டேத்தியான ஒரு பார்வையை உங்களிடமே நான் பார்க்கிறேன். அதனால் நீங்கள் எழுதுவது எனக்குப் பிடிக்கும்.
இன்னொரு காரணம், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டவன் நான். அந்தப் போராட்டமே நான் கலந்து கொண்ட முதல் சமூகப் போராட்டம். அதில் அடைந்த உணர்ச்சிப்பெருக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. அது குறித்து நீங்கள் என்ன எழுதுவீர்கள் என்பதைப் பார்க்கும் ஆர்வம் காரணமாகவும் உடனடியாக வாசிக்க ஆரம்பித்தேன்.

உங்களது சொல் முறை வித்தியாசமானது. இதை நிறையபேர் சொல்லியிருக்கிறார்கள். ‘அயோத்திதாசர்’ புத்தகம் நாடகப் பிரதி போலத் தான் ஆரம்பிக்கும். ‘யாதும் காடே யாவரும் மிருகம்’ நூலில் விதவிதமான கதை சொல்லல் உத்திகளைப் பயன்படுத்தியிருப்பீர்கள். ‘பூனையைப் போல் உலவும் கதைகள்’ என்ற தன் வரலாற்றுக் கதையில் அந்தப் புத்தகம் ஆரம்பிக்கிறது. ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’ நூல் சங்கர் ஆணவப்படுகொலைக்குப் பின்னான பதட்டத்தில் ஆரம்பிக்கும். ‘தமிழ் நாட்டுப்புறவியல்’ கேட்கவே வேண்டாம். கதை சொல்லிகளையும் நாட்டார் கதைகளையும் பற்றியே அந்த நூல் பேசுகிறது. இளையராஜா பற்றிய கட்டுரையில் பேருந்துப் பயணங்களில் கேட்கப்படும் ராஜா பாடல்கள் எவ்வாறு பேருந்தை முன்னோக்கியும், பயணிகளைப் பின்னோக்கியும் இழுத்துச் செல்கின்றன, அந்த நேரம் உருவாகும் தோற்ற மயக்கமே ராஜாவின் இசை என்று விளக்கியிருப்பீர்கள். உங்களது நூல்களில் புனைவின் பாத்திரம் இன்றியமையாதது.
ஜல்லிக்கட்டு புத்தகத்தையும் புனைவோடு தான் ஆரம்பிக்கிறீர்கள். ஆனால், இதில் விவரிக்கப்படும் கதை என்னைத் திக்குமுக்காட வைக்கிறது. ஆய்வு நூலில் புனைவின் பங்கு பற்றி இனவரைவியலில் விரிவாகப் பேசியிருக்கிறார்கள். நீங்களும் அடிக்கடி எழுதியிருக்கிறீர்கள். ஆய்வாளனின் இருப்பை இனவரைவியலில் வெளிக்காட்டுவதா வேண்டாவா என்ற கேள்விக்கு இரண்டு விதமான பதில்களூம் சொல்லப்பட்டிருக்கின்றன. நீங்கள், ஆய்வாளன் இல்லாமல் இனவரைவியல் இல்லை என்ற கட்சியைச் சார்ந்தவர்.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது, தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில் பிரம்மாண்டமானக் கண்ணாடிகளை நட்டு வைத்திருந்தார்கள்; அது எல்லோரையும் பிரதிபலித்து பிரதிபலித்து பெருங்கூட்டமாக மாற்றியிருந்தது என்று நீங்கள் எழுதும் போது, நோலனின் படக்கதையைப் படித்துக் கொண்டிருக்கிறோமா அல்லது ஆய்வு நூலா என்ற குழப்பம் ஆரம்பித்து விடுகிறது. அதன் பின் அக்கூட்டத்தில் நகுலனைச் சந்திக்கிறீர்கள். போர்ஹேயுடன் பேசுகிறீர்கள். அந்தக் கண்ணாடி கொஞ்சம் கொஞ்சமாக ஒரு தந்திரமிக்க உருவகமாக மாறுவதை என்னால் உணர முடிந்தது.
ஆய்வு நூலில் அபூர்வமாக நிகழும் இத்தகைய அதிசயங்களை வாசித்துக் கொண்டிருக்கும் போதே, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பார்த்த அபூர்வங்களை நீங்கள் விவரிக்க ஆரம்பித்த போது, நான் நிஜமாகவே பயந்து போனேன். நான் உங்களது புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேனா அல்லது அப்புத்தகத்தின் வழியாக நீங்கள் என்னை வாசித்துக் கொண்டிருக்கிறீர்களா என்ற குழப்பம் வந்து விட்டது. இது ஒரு வகை மாயாஜாலம் என்று கூட சந்தேகம் வந்தது.
எல்லா நூல்களையும் புனைவில் ஆரம்பிப்பதன் மூலம், வாசகர்களை எழுத்துப் பொறியில் சிக்க வைக்கிறீர்களோ என்றே எனக்குத் தோன்றுகிறது. ‘சிக்கியிருக்கிறோம்’ என்பதைக் கூடத் தெரிந்து கொள்ள முடியாத பொறி அது. சிக்கிய பின்பு, நீங்கள் எழுதும் அத்தனையும் என் மனதிலிருப்பதை எழுதுவது போலத் தோன்றுகிறது. உங்கள் புத்தகத்தை விரித்துப் படித்துக் கொண்டிருக்கும் போது, அப்பக்கங்களிலிருந்து இரண்டு கண்கள் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாக நான் உணர்ந்தேன். அது நீங்கள் தான் என்பது எனக்குத் தெரிகிறது. இந்த அனுபவத்திற்கு நான் பயப்பட வேண்டுமா அல்லது உவகை கொள்ள வேண்டுமா என்று தெரியாமல் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
ஜெரால்ட் ராயன்



Comments