top of page

ஜல்லிக்கட்டு நூல் ஒரு paradigm shift

(வாசகர் ரஞ்சித் பரஞ்சோதியின் வாசக அனுபவம். இதில் இடம்பெற்றிருக்கும் படங்கள் நூலைப் படித்த பின்பு அவரே உருவாக்கியவை.)


ஜல்லிக்கட்டு நூலின் விரிவை மனதில் கருதி, திரும்ப எப்போது வேண்டுமானாலும் யோசித்துப் பார்ப்பதற்கு ஒரு குறிப்பு போல் உதவும் என்றே இதை இங்கு எழுதி வைத்துக் கொள்கிறேன். 


Altamira குகை ஓவியங்களில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அதை உருவாக்கியோர் பாறைகளில் ஏற்கனவே இருந்த இயற்கைப் புடைப்புகளில் எருதின் உருவங்களைக் கற்பனை செய்தனர். அதன் அமைப்புக்கு ஏற்றவாறு வெவ்வேறு அசைவுகளில் எருதின் உருவங்களை அப்புடைப்புகள் மீது இயற்கை வண்ணங்கள் கொண்டு தீட்டினர். பாறையை விட்டு அவ்வெருதுகள் தனித்து எழும்பியது போன்ற பிரமையை அவ்வோவியங்கள் உண்டு செய்கின்றன. 

ஜல்லிக்கட்டு நூல் அத்தகைய ஒரு படைப்பூக்கம் வெளிப்படும் ஓர் ஓவியத் தொகுப்பு. வெவ்வேறு அறிவுத் துறைகள் உருவாக்கி வைத்திருக்கும் புடைப்புகளின் மீது ஜல்லிக்கட்டுக் காளையை பல்வேறு அசைவுகளில் அற்புதமாக பொருத்தித் காட்டியுள்ளார் பேராசிரியர். தன்னுடைய தனித்துவ நடையில் மெல்லிய பகடியோடு அப்பாறையைக் கீறி பள்ளமேற்படுத்தி இட்ட கோடுகளும் மிகுதியாக உண்டு. 


அறுவைச் சிகிச்சை துல்லியத்தோடு வெகுஜனக் கொந்தளிப்பு நிகழ்வொன்றை கவனமாக ஒவ்வொரு அடுக்காகத் திறந்து அதன் ஒட்டுமொத்த வடிவத்தை ஆராய்கிறது முதல் பகுதி. ஜனநாயகச் சூழலில் அங்கீகாரமின்றி புழங்கும் எந்தக் கருத்தியல்களெல்லாம் விலக்கப்பட்டு, வெளிக் காரணமொன்றைக் கண்டறிந்து இப்போராட்டம் பாசாங்கு செய்கின்றது என்பதாக விளங்குகின்றது. இங்கு இந்திய விடுதலைப் போராட்ட காலகட்டத்தின் காலனியப் புற முரண்களை வெற்றி கொள்ள முனைந்த தலைவர்களையும், அக முரண்களைக் களைவதே பிரதானம் என்ற தரப்பின் தலைவர்களையும் எண்ணிப் பார்ப்பதை தவிர்க்க முடிவதில்லை. 


பின் நீண்டதொரு பின்னோக்கிய பயணம் தொடங்குகிறது. மற்ற மாடுகளின் சமூக ஒழுங்கமைப்பில் கொஞ்சமும் ஒட்டாமல் வேறொரு தனியுலகில் சஞ்சரிக்கும் ஜல்லிக்கட்டு காளையின் தோற்றம் தேடிய பயணம். ஏறு தழுவுதல் என தமிழ்ச் சமூகம் உருவாக்கிக் கொண்டதன் பின்னணியை முழுதும் ஆராய்ந்து ஒரு மிகப்பெரிய தமிழ்ப் பின்புலத்தைக் கட்டமைக்கிறது. தமிழின் மரபான திணைப் பிரிவை நாம் புரிந்து வைத்துள்ள இலக்கணம் அடிப்படையிலான முறையிலிருந்து முற்றிலும் மறுவரையறை செய்கிறது. சேகரிப்பிலிருந்து வேளாண் சமூகமாக மாறியதற்கான பின்னணியைச் சொல்லி அதன் விளைவான உறவுமுறைப் பகுப்பும் அதைச் சார்ந்து ஏறு தழுவல் உருவானதும் விளக்கப்படுகிறது. வரிசை கட்டிச் செல்லும் உமணர்களின் உப்பு வண்டிகளைக் குறிப்பிடும் கபிலரின் கவிதை இப்பெருங்கதையாடல் தொடங்கும் வாசலாக அமைகிறது. 


பாணர், பொருநர், பரத்தையர் என்ற வரிசையில் ஜல்லிக்கட்டு காளையும் திணை மாறி ஜீவிக்கும் உயிராக அடையாளப்படுத்தப்படுகிறது. வள்ளாண்மையின் எச்சமாக குறிஞ்சியிலிருந்து பெயர்ந்து மருத நிலத்தில் புகுந்த வழித்தடம் விளக்கப்படுகிறது. அதைத் தெளிவுறுத்த வள்ளாண்மை இயல்பின் வாழும் உதாரணமாக தோற்றமளிக்கும் பளியர்களின் வாழ்க்கைமுறை எடுத்துக்காட்டப்படுகிறது. மற்றொரு பகுதியில் திணைப்பெயர்வின் அச்சம் எவ்வாறெல்லாம் வெளிப்படும் என்பதை காணிக்காரர்களின் நடவடிக்கைகள் மூலம் சொல்லப்படுகிறது 


வேளாண் சமூக அமைப்புக்குள் வந்தபின் உருவாகும் உறவுமுறையில் பரிசம் என்ற அம்சம் அடிப்படையானது. அது தவிர்க்க முடியாத கடப்பாடைக் கொண்டிருக்கிறது. (இங்கு எனக்கு Big bang theory series-ல் வரும் ஷெல்டன் கேரக்டர் ஞாபகம் வந்தது. பரி(ச)மாற்றம் உருவாக்கும் மறைமுக obligation-ஐ நொந்து நகைச்சுவைத் தருணம் ஒரு episode-ல் புனையப்படடிருக்கும். ஷெல்டன் கேரக்டரே வேற்றுத் திணை வாசி போல்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். பரிமாற்றம் என்பது நீ இப்போது இருக்கும் திணையின் ஒரு சமூக விதியென அவனுக்கு விளக்கியதும் ஏற்றுக் கொள்வான்) 

இத்தகைய பல பண்பாட்டு மாற்றங்களின் மூல காரணியாக யவன முதலீட்டியம் உள்ளது. அதுவே திணை பெயர்தலுக்கான ஊற்றுக்கண். இந்தப் பின்புலத்தில்தான் வளமை அச்சம் குறிஞ்சியின் தொல்களையை மருதத்தில் ஜல்லிக்கட்டு காளையாகக் கொண்டு வந்து சேர்க்கிறது. அரசாண்மையில் களவு மணம் மீதான தடையும் இதன் பின்னணியில் உண்டு. 


ஒரு கட்டத்தில் நாம் வேட்டைச் சமூகத்தின் பக்கம் நகர்ந்து விடும் பிரமை ஏற்படும். வேட்டைச் சமூகத்திலிருந்து விலகியோர் அதன் எச்சங்களாக விளங்கும் சடங்குகளின் உள்ளர்த்தங்களை தத்துவமாகத் தரமுயர்த்துவதைக் குறித்து படிக்கும் போது இந்த எண்ணமே எழுகிறது. 


இங்கு ஒரு முக்கியமான விசயத்தை குறிப்பிட்டாக வேண்டும். சங்க இலக்கியக் கவிதைகளையோ, தமிழ் இலக்கண நூல்களையோ விரிவான ஒரு முழுமை நோக்கிய பார்வையில் படித்தறியும் வழியை வகுத்துக் கொடுக்கிறது. வழக்கமான தமிழ்ப் பெருமிதம், சொல்லழகு, கவிநயம் என்று மட்டும் மயங்கி இருத்தல் இனி நிகழாது. அவற்றை அணுகும் முறையையும், பொருள் கொள்ளும் முறையையும் மாற்றியமைக்கும் ஒரு Paradigm shift.. என்றே எனக்குக் கண்டிப்பாக இருக்கும். பலரும் இதை உணர்வார்கள் என்றே நினைக்கிறேன். 


குறியியல் வகுத்துக் கொடுத்துள்ள சட்டகங்களைக் கொண்டு ஜல்லிக்கட்டுக்காளையை காலிக் குறிப்பானாக விளக்கும் பகுதி முக்கியமானது. ‘யாதும் காடே..’ நூலிலுள்ள காலிக்குறிப்பான் குறித்த ஒரு கட்டுரை இப்பகுதியை கிரகிக்கத் துணை செய்யும். 


புனைவுமொழியைக் காட்டிலும் நெகிழ்ந்து வசீகரிக்கும் பல பகுதிகள் உண்டு. பறவை நிலைத்து மரமாக வேர்விடும் படிமம், எதை ஒரு படைப்பு மறைத்துக் கொள்ள வேண்டும் என எழுதப்படுகிறதோ அதையே அப்படைப்பு வெளிப்படுத்தி நிற்பதான முரண், மெளனங்களைப் பதிவு செய்து கொள்ளும் வசதி நம் மொழிகளில் இல்லை என்பதும் அதைச் சுற்றிய நீண்ட விளக்கங்களும் என அடுக்கலாம். 


இறுதிப் பகுதி வெகுஜனத்தை நுணுகி ஆராய்கிறது. அதற்கு முந்தைய அவ்வளவு நெடிய ஒரு Roller coaster பயணம் நிலை கொள்ளும் புள்ளி - வெகுஜனம் - திணைபெயர்க்கப்பட்ட நாட்டார்களின் கூட்டமைப்பு. ஜல்லிக்கட்டுப் போராட்டம் இன்னின்ன குணங்களை ஏன் கொண்டிருக்கின்றன என நூல் முதலில் எழுப்பிய கேள்விக்கு இந்த வெகுஜனம் பற்றிய விவாதத்தில் பதில் கிடைக்கிறது. 


இதற்கு முன்பே ஓரிடத்தில் வெகுஜன மனங்கள் எவ்வாறு ஒரே மாதிரியான கிளர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது என்பதற்கான உதாரணமாக வண்ணதாசன் எழுதிய ஒரு சம்பவம் விளக்கப்பட்டிருக்கும். 


வெகுஜனக் கொந்தளிப்பு தனக்கென ஒற்றைச் சொல்லாடலோ ஒரு தெளிவான அரசியலோ அற்ற அதன் தன்மையால் தற்காலிக வாழ்க்கையே அதற்கு வாய்க்கிறது. அதை சாமர்த்தியமாக எந்தக் கதையாடல் பயன்படுத்திக் கொள்கிறது என்ற அலசல் இடம்பெறுகிறது. கதையாடல்களை மட்டுமே வெகுஜனம் நம்பும் என்பது முக்கியமான ஒரு சுட்டிக்காட்டல். தமிழ் வரலாற்றில் கடந்த காலங்களில் அப்படி எந்தக் கதையாடல்களெல்லாம் வெகுஜனக் கிளர்ச்சியை பயன்படுத்திக் கொண்டன என விரிவாக அடுக்கிக் காட்டப்படுகிறது(பக்தி இலக்கிய காலம், தமிழ் மறுமலர்ச்சி காலம்) . ஜல்லிக்கட்டுப் போரட்டத்தின் கூறுகளை ஆராயத் தொடங்கிய நூல் இந்தக் கதையாடல் எனும் புள்ளியை விவாதித்து நிறைகிறது. 


குறியியல்-அதன் வழியிலான மொழியியல், மானுடவியல், நாட்டுப்புறவியல், உளவியல், நவீன இலக்கியம் இன்னும் பல இயல்களைக் கொண்டு, எல்லா தர்க்க வெற்றிடங்களையும் நிரப்பி ஒரு முழுமைப் பார்வையைக் கட்டியெழுப்புகிறார் பேராசிரியர். இந்த வெவ்வேறு புலங்களின் விரிவான exposure நமக்கு இல்லாமல் கூட, நூலில் உள்ள அதன் தர்க்க ஒழுங்கைப் பிடித்துக் கொண்டு பயணித்துவிடலாம். அவர் காரண காரியத்தோடு வாதங்களை வைக்கும் போது, தர்க்கங்கள் தேவையானபடி வளைந்து கொடுப்பதை witness செய்வது அற்புதமான ஓர் அனுபவம். அதுவே அவர் எழுத்து தரும் வாசிப்பின்பம். ஆர்வம் மிகுதியில் வேகமாக வாசித்தேன். இதன் விசயகனம் கோரும் நிதானமான மறுவாசிப்பைக் கண்டிப்பாகச் செய்வேன்.  


இந்த நூலையே ஒரு தொன்மப் பரிசம் என எண்ணிக் கொள்கிறேன்(குதிரைக்குப் பதில் காளை)- விளைவுகளை உள்ளுக்குள் கொண்ட ஒரு பரிசம். 


 
 
 

Recent Posts

See All
தமிழர் பண்பாட்டில் பிச்சை!

! மதுரையில் நூதனத்திற்கு எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. பிச்சை எடுப்பதிலும் ஒரு நூதன வடிவத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த நூதனப் பிச்சையை எடுப்பது வயதானப் பெண்கள். அருகிலுள்ள கிராமத்திலிருந்து

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

ஆசிரியரின் பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

உங்கள் மின்அஞ்சலை இங்கே பகிருங்கள் 

இணைந்தமைக்கு நன்றி !

© எழுத்தாளர் டி. தருமராஜ் . அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தளம் வடிவமைப்பு & பராமரிப்பு - இளம்பரிதி , ஓவியங்கள் - ரஞ்சித் பரஞ்சோதி.

  • Youtube
  • Facebook
  • LinkedIn
1ADAC9F0-E9E2-4CB2-8C07-EA1B8B3B4C47.png
bottom of page