ஜல்லிக்கட்டு - அஜய் பால் ராவணன் கடிதம்
- 9 hours ago
- 2 min read
‘ஜல்லிக்கட்டு - கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ புத்தகம் வாசித்தேன். இன்னும் அந்தப் புத்தகத்தை விட்டு வெளி வர முடியாத ஒரு உணர்வு. எனது வெளியும் உள்ளும் கூறு கூறுகளாக பகுக்கப்பட்டது போல உணர்கிறேன். ஏதோ வகையில் நான் அறிந்து கொள்ள விரும்பிய, தெரிந்து கொள்ள யத்தனித்த அனைத்தை பற்றியும் தருமராஜ் ஆய்ந்து எழுதியிருக்கிறார். தமிழ் பண்பாடு குறித்து நான் அடைந்திருந்த பெருமிதம், ஒரு வகையான சுப்பீரியாரிட்டி, வாய்மொழி மீது வைத்திருந்த ஒரு வகையான மோகம், எழுத்தின் / பனுவலின் மீதிருந்த நம்பிக்கை என்று அனைத்தையுமே இந்நூல் சுக்கு நூறாக உடைத்து, துடைத்து எறிந்து விட்டது போல் உணர்கிறேன். எப்போதும் தாங்கிக் கொள்ள அல்லது நான் பின்வாங்கிக் கொள்ள (கருத்தியல்களில் இருந்து, வரலாற்றில் இருந்து, சோர்வில் இருந்து, மற்றும் பலவற்றில் இருந்து) தமிழ் இருந்தது. இந்த நூல் தமிழை, தமிழ் பண்பாடு, தமிழ் நாட்டார் ஏன் உலக நாட்டாரையே சந்தேகத்துடன் பார்க்கும் பழக்கத்தை உண்டு பண்ணி விட்டது.

எப்போதும் சாதி குறித்து நான் சிந்திக்கும் போது அதனை பண்பாட்டில் ஒரு நூல் போலவும் அது வாழ்வின் எல்லா பகுதிகளையும் சூழ்ந்துள்ளது என்றும் எண்ணி வந்தேன். வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் அதனை கண்டறிந்து, அறுத்து விட்டு நீக்கினால் சரியாகி விடும். இதற்காக சாதியின் வேறு முகத்தை தேடி அலைந்திருக்கிறேன். அதாவது, சாதியின் இன்முகத்தையும் தேடியிருக்கிறேன்.
எனக்கு இந்தப் புத்தகம் பண்பாடு உருவாகி வந்ததை விவரிக்கும் போது தான் பிரச்சினையின் ஆழம் விளங்குகிறது. வள்ளாண்மைக்கும் வேளாண்மைக்குமான முரண், அது எவ்வாறு உறவுமுறைகளை தீர்மானிக்கின்றன, உறவுமுறை எவ்வாறு பொருளாதாரத்தைக் காப்பதற்காக இயங்குகிறது (உருவாக்கப்பட்டது) என்று அடுக்கு அடுக்காக நான் ‘நான்’ என்று எண்ணிக் கொண்டிருந்த, உணர்ந்து கொண்டிருந்த அத்தனையும் ‘பொய்யென’ அல்லது ‘புகையென’ விலக்கத் தொடங்குகிறது. இந்த உணர்வு தான் எவ்வளவு தூரம் பண்பாடு குறித்த நல்லெண்ணத்தையும் (நம்பிக்கைகளையும்) அதில் எவ்வளவு தூரம் ஆழ்ந்திருக்கிறேன் என்றும் உணர்த்துகிறது.
எந்த வகையான பண்பாட்டு உருவாக்கமும் அதனுள் கொண்டிருக்கிற கோளாறுகளைக் கண்டு கொள்வதற்கு இந்தப் புத்தகம் மிகவும் உதவும் என்று எண்ணுகிறேன்.
இதில் கூறப்பட்டுள்ள ஒரு வாக்கியம், ரான்சியர் கூறியது என்று நினைக்கிறேன், ‘ஜனநாயகம் சமத்துவத்திலிருந்து தான் தொடங்க வேண்டுமேயொழிய சமத்துவத்தை நோக்கிச் செல்லும் சாத்தியம் குறைவு’ என்பதை மிக முக்கியமாகக் கருதுகிறேன்.
இந்தப் புத்தகம் எனது வகுப்பறைக்குள்ளும், பள்ளியினுள்ளும், ஆசிரியர், உதவியாளர், தலைமை பதவியில் இருப்பவர், விடுதி மேற்பார்வையாளர், மாணவர்கள் என்று அனைவர் இடையே உருவாகும் பண்பாடு குறித்தும், வெளிப்பண்பாடு - உள்பண்பாட்டை எப்படி தீர்மானிக்கிறது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தூண்டுகிறது.
பண்பாட்டு உருவாக்கம் குறித்து படிப்பதும் எழுதுவதும் அதனை நடைமுறைப்படுத்த எத்தனிப்பதுமே இனி வரும் காலங்களில் நான் செய்யும் வேலையாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.




Comments