ஜல்லிக்கட்டு - அமெரிக்கன் கல்லூரி விழா
- 5 minutes ago
- 1 min read
27-03-2026 அன்று அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற, 'ஜல்லிக்கட்டு - கிளர்ச்சி எனும் சூழ்ச்சி' நூல் அறிமுக விழா பல வகைகளில் எனக்கு முக்கியமானது.
அன்றைய தினம், நூலை அறிமுகப்படுத்தி பேசிய சீனிவாச ராமநுஜம் எனது மதிப்பிற்குரியவர். அந்நூலின் மைய கருத்தாக்கமான 'காலிக்குறிப்பானை' விளக்கும் வகையில் அமைந்த அவரது பேச்சு கூர்ந்து கவனிக்கத்தக்கது. பிராமணம் என்ற காலிக்குறிப்பானை தமிழ்ச் சமூகம் எவ்வாறு உருவாக்கியிருக்க முடியும் என்ற யோசனை என் நூலின் அடியாழத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது என்றார். நிஜமாகவே, சாதியின் உற்பவம் பற்றி 'ஜல்லிக்கட்டு' நூல் முன்மொழியும் சில கருதுகோள்களில் 'காளை' என்ற காலிக்குறிப்பானின் வருகை இன்றியமையாதது.
அடுத்து பேசிய நவீனா, ஜல்லிக்கட்டுக் காளையின் உருவாக்கத்தில் தொழிற்படும் உடலரசியலைக் கவனப்படுத்தினார். மாடுகளை மட்டுமல்ல, தமிழ்ச்சமூகம், தமிழர்களையும் எவ்வாறு வீட்டுப்பிராணியாக மாற்றியிருக்கிறது என்ற திசையில் அவரது உரை அமைந்திருந்தது.
ஸ்டாலின் ராஜாங்கத்தின் உரை வழக்கம் போல நவரசங்களும் ததும்பும் நிகழ்த்துதல். நூலின் சாராம்சத்தை துல்லியமாக விவரிக்க ஆரம்பித்தவர், அது கலைத்துப் போடும் தமிழ்ப் பெருமிதங்களை ஆச்சரியத்தோடும், அதிர்ச்சியோடும் பகிர்ந்து கொண்டார். பாரி படுகளத்தையும், பாரி மகளிரையும் இப்படியும் வாசிக்க முடியுமா என்று அவர் கேட்ட போது, நூலை ஏற்கனவே வாசித்தவர்கள் ரகசியமாக புன்னகைத்துக் கொண்டனர்; வாசிக்காதவர்கள் ஏக்கத்தோடு பார்க்க ஆரம்பித்தனர்.
அடுத்து பேசிய சாம்ராஜ், ஜல்லிக்கட்டு நூலின் படைப்பூக்கத்திலிருந்து ஆரம்பித்தார். மொழியின் உற்பவம் குறித்து நூலில் நிகழ்ந்த பெரும் உரையாடலை ஒரு கவிதைத் தொகுப்பைப் போல வாசித்த அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.

இறுதியான எனது ஏற்புரை மிகச் சுருக்கமாக அமைந்திருந்தது. ஏற்கனவே நிகழ்வு ஆரம்பித்து மூன்று மணி நேரங்கள் ஆகி விட்ட படியால், ஆய்வுக்குத் தேவைப்படும் படைப்பு மனநிலையை விவரித்ததோடு நிறுத்திக் கொண்டேன். அதிலும் குறிப்பாக, வண்ணதாசனின் முகநூல் பதிவு, இந்த ஆய்வு நூலுக்கு எவ்வாறு புதிய பரிமாணத்தைத் தந்தது என்ற செய்தியை அழுத்தமாகச் சொன்னேன். இளையராஜாவின் 'ஆல்ஃபா ரிதம்' என்றால் என்ன; தமிழர்கள் என்ற உணர்வு மொழியால் மட்டுமே சாத்தியமாவது இல்லை; மொழியையும் கடந்த கொந்தளிப்புகள் தேவைப்படுகின்றன; தமிழில் நிகழும் அத்தகையக் கொந்தளிப்புகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்ற திசையில் என் உரை அமைந்திருந்தது.
இந்த ஐந்து உரைகளும் காணொளிப் பதிவுகளாகக் கிடைக்கின்றன. அவற்றிற்கான இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. விரும்புகிறவர்கள் கேட்கலாம்.
https://youtu.be/oiSU3pG7O8Y?si=yKCjvVwyxND9kLzo டி. தருமராஜ் உரை
https://youtu.be/l0MkwdiMiEw?si=6ZX7mYNhGu-xkxhW சாம்ராஜ் உரை
https://youtu.be/WA8GoRmB5U0?si=mqIk8-O3FpBZJ4c_ ஸ்டாலின் ராஜாங்கம் உரை
https://youtu.be/qL3Xq2gOB20?si=g0klB6rP7xW4SGSh சீனிவாச ராமாநுஜம் உரை




Comments