உங்கள் புத்தகங்களுக்கு நன்றி - ஒரு கடிதம்
- 9 hours ago
- 20 min read
அன்புள்ள தர்மராஜ் அவர்களுக்கு,
உண்மையில் நான் உங்களிடம் சொல்ல நினைப்பது எல்லாம் ஒன்று தான்: உங்கள் புத்தகங்களுக்கு நன்றி.
உங்கள் தாய்மொழி என்ற ஏமாற்று வேலை கட்டுரையில், அந்த சிறுமி "மாமா செமையா இருந்தது சான்ஸே இல்லை" என்று சொன்னபோது, அந்த சிறுமி எப்படி உணர்ந்தாள் என்று எனக்கு நன்றாகவே புரிகிறது. நான் திரும்பத் திரும்ப இந்த கடிதத்தில் சொல்ல விரும்புவது எல்லாம் இந்த உணர்ச்சியை தான். ஆனால், ஏனோ இது போதுமானதாக இல்லை.
போன வருடம் ஏப்ரல் மாதம் உங்கள் அயோத்திதாசர் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன், ஜல்லிக்கட்டு படித்து முடித்து ஒன்றரை மாதம் ஆகிறது, உங்கள் எழுத்துகளுடன் பத்து மாதங்களாக பயணம் செய்து கொண்டு இருக்கிறேன். ஆறு புத்தகங்களையும் படிச்சாச்சு, அயோத்திதாசர் புத்தகம் இரண்டு முறை படிச்சாச்சு (இதில் கல்லறை பக்கம் மூன்று முறை), ஒவ்வொரு புத்தகத்தை வாசித்த பின்பும் உங்களுக்கு நிச்சயம் எழுத வேண்டும் என்று தோணும், ஆனால் தள்ளி போடுவேன். இதற்கு நடுவில், புத்தகத்தில் வெளியிடாத பல்வேறு கட்டுரைகளை படித்திருக்கிறேன், அதிலும் சமீபமாக, "நீங்கள் எப்பொழுது வர கூடும்" என்ற கட்டுரை என்னை பயங்கரமாக உரித்துக்கொண்டே இருந்தது. அப்பொழுதும் என்னால் இதை எழுத முடியவில்லை. ஏன் என்றால், ஒவ்வொரு முறை உங்களுக்கு எழுத நினைத்தபோதும் நான் அதீத மௌனத்தில் தான் மூழ்கிக்கிடந்தேன், சிந்தனை பல்வேறு துண்டுகளாக சிதைந்து போகும், ஒவ்வொரு துண்டுகளிலும் இருக்கும் ஆழமும், ஆனந்தமும், உறுத்தலும், தெளிவும் நான் எப்படி உங்களுக்கு சொல்லுவது? காதலன் அவன் காதலை சொல்ல தடுமாறுவது போல் நானும் தடுமாறிக் கொண்டு இருக்கிறேன். மெய் எழுத்துக்கள் போல் திக்கி கொண்டு இருக்கிறேன், மௌனத்தை கடத்த தெரியாமல் தவித்தேன். இன்னும் கூடுதலாக குறிப்பாங்க்களை குவித்து ஒழுங்கமைத்தால், இந்த தவிப்பில் இருந்து கொஞ்சம் வெளியேரலாம் என்று தோன்றுகிறது. இதை போன்ற கடிதம் எழுதுவதில் இன்னொரு சிக்கல், உங்கள் எழுத்துக்களை பற்றி எழுத நினைத்து என் சொந்த கதையெல்லாம் வாந்தி எடுக்கக்கூடாது என்ற பயமும் வருகிறது. ஆனால், இளையராஜா சொல்வது போல், கலைஞர்களையும் ரசிகர்களையும் எப்படி பிரிப்பது?
உங்கள் புத்தகங்களை பற்றி எழுதுவதற்கு முன், நான் உங்கள் புத்தகத்திற்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்று சொல்ல வேண்டும். 2023 அல்ல 2024 இல் அம்பேத்கரின் மூன்று புத்தகங்களை வாசித்தேன் (இதற்கு இயக்குனர் ரஞ்சித்துக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்). அம்பேத்கரின் எழுத்துகள் என்னை பயங்கரமாக ஆச்சரியப்படுத்தின. ஆனால் என்னிடம் ஆயிரத்து எட்டு கேள்விகள் இருந்தன. (ஆயிரத்து எட்டு யோசித்தாலே உற்சாகம் தருகிறது, எட்டு என்றால் எண்ணில் அடங்காதது என்பதைத்தான் ஆங்கில மொழியில், எட்டு குறிபானை தட்டையாக போட்டு Infinite என்று சொல்கிறார்களா? அதுமட்டும் இல்லாமல் எட்டும், eight என்ற குறிப்பானும் கிட்டத்தட்ட ஒரே சப்தம் தான், Eight என்பது அரபிக் எண் என்று எனக்கு புரிகிறது, ஆனால் அரபிக் எழுத்தும் இந்திர தேசத்தில் வந்ததுதான் என்கிறார்கள், இது எல்லாம் ஒரு தற்செயல் தான் என்றாலும், ஏனோ இதை யோசிக்கும்போது ஒரு உற்சாகம்). அதில் முக்கியமாக, இரண்டு கேள்விகள் மனதில் ஆழமாக பதிந்தன. ஒன்று, சாதி பரவுவதிற்குகான முக்கிய காரணம் அவர் போல செய்தல் என்று சொன்னது (நான் ரெனே கிரார்ட் என்ற பிரெஞ்சு எழுத்தாளரை பற்றியும் அவரது mimetic theory பற்றியும் படித்திருக்கிறேன் அதனால் தான் இது எனக்கு முக்கியமாக பட்டது), இரண்டு, அம்பேத்கர் பேராசிரியர் ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு பதில் அளித்து இருப்பார். அவர் இந்து மதம் மிகவும் பழமையானது, காலத்தை வென்றது என்பது போல் சொல்லியிருப்பார், அதற்கு அம்பேத்கர், இந்து மதம் இதுவரை உயிர் பிழைத்தது என்பது முக்கியம் இல்லை, எப்படி உயிர் பிழைத்தது என்ற உண்மையை பார்த்தால், எல்லோரும் வெட்கப்படுவார்கள் என்றார். இது ஏன் எனக்கு முக்கியமாக பட்டது என்றால், இயற்கைக்கு மானம், அவமானம், அறம் என்று எல்லாம் ஒன்றும் இல்லை, இது எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. இயற்கை எது உயிர் பிழைக்கிறதோ அதையே மீண்டும் உருவாக்குகிறது. அம்பேத்கர் சொன்ன பதில் எனக்கு சரி என்று பட்டது, ஆனாலும் அந்த பதில் போதுமானதாக இல்லை. இந்த இரண்டைப் பற்றியுமே நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். குறிப்பாக, என்னுடைய இரண்டாம் கேள்விக்கு, உங்களால் எனக்கு நிறைய தெளிவு கிடைத்தது. ஆச்சரியப்படும் வகையாக, (நான் புரிந்து கொண்டது என்னவென்றால்), உயிர் பிழைத்திருப்பது புத்த மதமும், ஆதிதமிழர்களின் வழக்காறுகளும் தான், இந்து மதம் (வேட பிராமிணியம்) என்பது வெறும் ஒரு போர்வையே.
இது ஒரு பக்கம் இருந்தாலும், என் நினைவுகளை இன்னும் துன்புறுத்திக் கொண்டு இருந்தது அம்பேத்கர், புத்த மதத்திற்கு மாறுங்கள் என்று சொன்னது தான். இங்கே எனக்கு நிறைய குழப்பங்கள் இருந்தன. புத்த மதத்திற்கு எப்படி மாறுவது என்று தெளிவாக எழுதி இருக்கிறார் அம்பேத்கர். ஆனால் நான் புரிந்து கொண்ட வரைக்கும், புத்தர் நமக்கு சொல்ல நினைப்பது எல்லாம் சுய கட்டுப்பாடு தான். மேலோட்டமாக பார்த்தால், எல்லா முனிவர்களும் கிட்டத்தட்ட இதையே தான் சொல்லிக் கொண்டு இருப்பது போல் தெரிகிறது. சமூகம், தனி மனிதனை போல செயல்படுவது இல்லை* என்று இவர்கள் அறிந்து இருப்பது போல தெரியவில்லை, இது ஒரு நவீன சிந்தனை போல தான் தோன்றுகிறது. *(Yanner bar Yam என்ற அமெரிக்க அறிவியலார், Making things work என்ற புத்தகத்தில் இதை பற்றி வேறு கோணத்தில் விரிவாக எழுதி இருக்கிறார், இந்த புத்தகம் முழுக்க முழுக்க “Complex systems” பற்றி, நீங்கள் படித்திருப்பீர்களா என்று தெரியவில்லை, இல்லை என்றால் நிச்சயம் நேரம் இருக்கும் போது வாசியுங்கள், உங்களுக்கு நிறைய உற்சாகம் தரும் இது).
ஏன் இதை சொன்னேன் என்றால், புத்த மதத்திற்கு மாறிவிட்டேன் என்றால் நான் முழுதாக சாதி அற்றவனாக மாறிவிடுவேனா என்ற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. ஏன் என்றால் புத்த மதத்திற்கு இங்கு ஒரு அரசியல் இருப்பது போல் தெரியவில்லை, நான் இனிமேல் புத்த மதத்திற்கு மாறுகிறேன் என்று சொன்னால் அது பெரிய கலகமும் உண்டாக்காது. (சமீபமாக, இதனால் தான் மோடி கூட புத்த மடத்திற்கு போய் புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்தார் போல இருக்கிறது) ஆனால், கிறிஸ்துவராகவும் இல்லை முஸ்லிமாக மாறப் போகிறேன் என்றால் உடனே சமூகம் விழித்து கொள்கிறது. அப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?
இங்கே இன்னொரு முக்கியமான விஷயத்தை நான் சொல்ல வேண்டும். நான் பிராமண குடும்பத்தில் பிறந்தவன். அதுவும் எங்கள் வீட்டில் எல்லோரும் மிக பயபக்தியோடு பிராமணியத்தை கடைப்பிடிப்பார்கள் (பக்தியை விட பயம் தான் ஜாஸ்தி). ஆனால், நான் பிராமணன் என்ற அடையாளம் இருந்தாலும், அதுவே தான் நான் என்று என் மேல் திணிக்கப்படவில்லை. அந்த அளவிற்கு எனக்கு சுதந்திரம் இருந்தது. விடலை பருவத்தில், நான் பெரும்பாலுமாக ஆங்கில இசையும், உலக சினிமாவும் கேட்டு/பார்த்துதான் வளர்ந்தேன். அந்த விதத்தில், என் சிந்தனை மொழி ஆங்கிலமாகவே இருந்தது. நான் தமிழ்நாட்டில் தான் முழுதாக பிறந்து வளர்ந்தேன் என்றாலும், எனக்கும் இந்த நிலத்திற்கும் இருந்த ஒரே தொடர்பு இசை மட்டுமே (கர்நாடக இசையும் சினிமா இசையும்). தமிழ் சினிமா என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. இதற்கு பிறகு, விடலை பருவத்தை விட்டு வெளியேற, கொஞ்சம் உலகம் புரியவைத்தவர் Lebanese-American எழுத்தாளர், Nassim Nicholas Taleb என்றவர், அதற்கு பிறகு நீங்கள். இவர் எழுதியது எல்லாமே நான் வாசித்திருக்கிறேன். இவர் சொன்னதில், மூன்று விஷயம் இங்கே நான் உங்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும், ஏன் என்றால் நான் இப்படி சிந்திப்பதற்கு இவர் ஒரு முக்கிய காரணம்.
a.) நம் கருத்துக்களுக்கு பின்பு நாம் நிற்கவில்லை என்றால், அதற்காக எதையும் இழக்கத் தயாராக இல்லை என்றால், நாம் ஒன்றுமே இல்லை.b.) நமக்கு கிடைத்ததைவிட, சமூகத்திற்கு நிறைய திரும்பி தருவதில் தான் இருக்கிறது உன்னதம்.c.) நம்மை விட, பலமற்றவர்களுடன் சேர்ந்து நிற்பது/போராடுவது அவசியம்.
இது எல்லாம் அவர் சொந்த கருத்து என்று சொல்ல முடியாது (அவரின் தனித்துவமான கருத்து tail risks, randomness & limitations of knowledge என்று தான் நான் சொல்லுவேன்). மேன் மக்கள் என்று அழைப்பவர்களின் குணம் என்று இதை எல்லாம் சொல்லலாம், அதை எனக்கு அறிமுகப்படுத்தியவர் இவர் தான். இவருக்கு பிறகு தான் நான் அம்பேத்கர் இடமே வந்து சேர்ந்தேன். இந்த குணங்கள் எல்லாமே அம்பேத்கருக்கும் பொருந்தும்.
சாதி எதிர்ப்பு என்று வாய் கிழிய பேசுவது மிகவும் எளிதான காரியம். அதும் நம் ஊரில் புரட்சியாளராக வேடம் போடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம் ஒன்று. அம்பேத்கர் படித்ததில் இருந்தே எனக்கு பயங்கரமான ஒரு குற்ற உணர்வு இருந்தது. சித்தார்த்த சக்ரவர்த்தி, அவர் அப்பா கட்டிய குகைக்குள் இருந்து வெளியே வந்து உலகத்தை பார்த்து அடைந்த உணர்வு, அந்த குற்ற உணர்ச்சி, ஏன் என்று நான் நன்கு அறிவேன். ஆனால் அதற்கு பிறகு அவர் புத்த மதத்தை உருவாக்கி அதை உலகிற்கு போதித்தார். அசோகரும் இதே குற்ற உணர்வில் தான் புத்த மதத்திற்கு வந்து சேர்ந்தார், அதற்கு பிறகு நாட்டை மாற்றி அமைத்தார். ஆனால் நான் என்ன ‘செய்ய’ முடியும்? சமூகத்திற்கு எதை திரும்ப தர வேண்டும்? எப்படி பல மற்றவர்களின் முன் நிற்கிறது? முடிந்த வரை, பணம் தானம் செய்யலாம், அதுவும் ஒரு எல்லை வரை தான். கொஞ்ச நாள், கலப்பு திருமணம் இதற்கு (சாதி ஒழிப்பிற்கு) தீர்வு என்ற ஒரு போதையில் இருந்தேன், அதுவும் ஒரு பிரயோஜனம் இல்லை என்று தெரிந்தது (நீங்களும் சமீபத்தில் இதை பற்றி கட்டுரை எழுதியிருந்தீர்கள்).
ஆனால் நான் நவீன மனிதன் அல்லவா, அதனால் நான் இவர்கள் எல்லோரையும் விட ஒரு உன்னதமான விஷயத்தை செய்தேன். நான் செய்த விஷயம் என்னவென்றால் சமூக ஊடகத்தில் போய் சாதி எதிர்ப்பு பேசுபவர்களை தீவிரமாக படிக்க ஆரம்பித்தேன் (நல்ல வேளையாக உரையாடவில்லை). தலித் எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ் இப்படிதான் எனக்கு அறிமுகமானார். இவர் சமூக ஊடகத்தில் ஒரு விதி விலக்கு. இவரிடம் நான் நிறைய கற்று கொண்டிருக்கிறேன், இவர் மேல் எனக்கு நிறைய மரியாதை உண்டு. இவரை தவிர்த்து, சமூக ஊடகத்தில் இருக்கும் சாதி எதிர்ப்பாளர்கள் எல்லோரும் என்னை குழப்பத்தில் தான் தள்ளினர், (அரைக்குறை அரைக்குறைகள் பக்கம் தானே போவன்) இதற்கு எல்லாம் முடிவே இல்லை என்று சலுப்பு அடைந்தேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நான் பிராமணன் என்ற அடையாளம் இப்போது எனக்கு எரிச்சலாக இருந்தது. நான் மேலும் மேலும் என்னை பிராமணனாக பார்த்து கொண்டே இருந்தேன். இவர்கள் சொன்ன சில விஷயங்கள் மட்டும் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
ஒன்று, சாதி எதிர்ப்பை பற்றி பேசுகிறவர்கள் அவர் என்ன சாதி என்று அறிவிக்க வேண்டும். இதற்கு உதாரணமாக லீலா மணிமேகலையும், பெருமாள் முருகனையும் எடுத்துக் கொண்டார்கள். இருவருமே, தன்னை தலித் போல பாவனை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள், என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இது ஒரு விதத்தில் நியாயமாக தோன்றியது ஆனால் முழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரண்டு, தமிழ் சினிமாவில் இருக்கும் அரசியல் பிழைகள், இதில் லப்பர் பந்து, கடைசி விவசாயி பற்றி பேசப்பட்டதை பற்றி சொல்ல வேண்டும், உங்கள் லப்பர் பந்து கட்டுரை இதனால் தான் தனித்துவமானது, ஆனால் அதற்கு நான் பின்பு வருகிறேன். மூன்று, அம்பேத்கரை வாசியுங்கள் உங்கள் வீட்டோருக்கு அதை சொல்லி புரியவையுங்கள், இந்து மதத்தில் இருந்து வெளியே வாருங்கள் என்று அவர் சொன்னதை திரும்ப சொல்லுவார்கள். இதை வைத்து நிறைய சண்டை நடக்கும். ஆக மொத்தம் சமூக ஊடகத்தில் இருக்கும் தலித்துகள் நல்ல கேள்விகள் எழுப்பினாலும், இவர்கள் என்னக்கு ஒரு தெளிவையும் தரவில்லை.
எனக்கு என் மேல் ஒரு அதிருப்தி வந்தது, என் தன்னிலை எனக்கு பிடிக்கவில்லை. தமிழ் சமூகத்தை புரிந்து கொள்ளலாம் என்று ஆரம்பித்து, இப்போது இது ஒரு தன்னிலை பிரச்சனையாக மாறியது. இந்த மனநிலையில்தான், நான் வேறு ஒன்றாக ஆகுவதற்கு, புதிய நினைவுகளை தேடி கொண்டு இருந்தேன். ஒரு ஆங்கில பழமொழியை எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது. When the reader is ready, the book emerges, என்று. இப்படித்தான் உங்கள் புத்தகத்திற்கு வந்து சேர்ந்தேன். “சாதி வேண்டாம் என்று நினைப்பவர்கள் எல்லோரும் எப்படி ஒன்று சேரலாம் என்பதற்காக தான் இந்த புத்தகம் எழுதினேன்” என்று படித்தபோது, மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதே போல, கருத்து சுதந்திரம் பறிபோனதே என்ற வலியை விட, ஒருவன் தான் தலித் என்று உணர்ந்த தருணம் எவ்வளவு வலி நிறைந்தது என்று உங்களுடன் சேர்ந்து அவர்களும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள், என்ற வரியை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது.
ஆனால், அயோத்திதாசர் புத்தகத்திற்கு பிறகு வருகிறேன். எனக்கு முதலில் ஜல்லிக்கட்டு பற்றி பேச வேண்டும்.
*****

ஜல்லிக்கட்டு புத்தகத்தை பற்றி எழுதுவதை விட வண்ணங்கள் மூலமாக என் உணர்வுகளை சொல்லலாம் என்று நினைத்தேன். கீழே இந்த கடிதத்துடன் ஒட்டியிருக்கிறேன். ஒரு நிமிடம், இந்த மாற்று அட்டை வடிவமைப்பே போதும், வேறு எதுவும் சொல்ல தேவையில்லை என்று தோன்றியது. ஆனால் வண்ணங்கல் வழியாக சிந்திப்பதும் பேசுவதும் பரவலாக இல்லை. அதுமட்டுமில்லாமல், தனியாக இந்த அட்டையே ரசாயன மாற்றங்கள் கொண்டு வருமா என்ற சந்தேகமும் இருக்கிறது, அதனால் இதை பற்றி கொஞ்சம் சொல்லலாம் என்று தோன்றுகிறது. இங்கே தமிழ்நாடு வரைபடம் வெளியே ஒரு காளை இருக்கிறது அல்லவா? அந்த சாம்பல் நிற காளை தான், வரைபடத்திற்கு உள்ளே இருக்கும் காளையும் (அச்சு அசல் அதே நிற காளை). ஆனால் நம் கண்களுக்கு அந்த சிறிய காளைகள் வெவ்வேறு சாம்பல் நிறங்களாக தோற்றம் அளிக்கின்றன. பச்சை நிறத்தில் இருக்கும் காளை மிகவும் பளிச்சென்று தோற்றம் அளித்து கிட்டத்தட்ட மறைந்து போகிறது, மஞ்சள் நிறத்திற்கு மேல் இருக்கும் காளை கொஞ்சம் மங்கலாக தெரிகிறது. இதே போல, சிவப்பு நிறத்தில் மேல் இருக்கும் காளை கொஞ்சம் பளிச்சென்றும், வயலட் நிறத்தில் மேல் இருக்கும் காளை கொஞ்சம் மங்கலாகவும் தோற்றம் அளிக்கும். இந்த நான்கு சிறிய காளையும் வெவ்வேறு சாம்பல் வண்ணம் போல தோற்றம் அளிக்கிறது ஆனால் எல்லாம் ஒரே சாம்பல் நிற காளை தான். மஞ்சள், பச்சை (வெள்ளாண்மையின் நிறம்), வயலட், சிவப்பு (காமத்தின் நிறம், என்று இந்த சூழலில் எடுத்துக்கொள்கிறேன்), வண்ணங்களுடன் உரையாடி, இந்த சாம்பல் நிற காலி காளை தன் திணைக்கேற்ப மாற்றிக்கொள்கிறது. நம் காலி குறிப்பான்களை போல. ஆனால் இந்த சாம்பல் நிற காளையே நம் தமிழ்நாட்டை ஒன்று சேர்க்கிறது. தமிழ்நாட்டின் வரைபடத்திற்கு உள்ளே இருக்கும் நிறங்கள் வெள்ளான்மை சமூகம் என்றால், வெளியே இருப்பது வள்ளாண்மையை குறிக்கும். இந்த வண்ணங்களின் சிறப்பு என்னவென்றால், மூன்று வண்ணங்கள் நான்கு வண்ணங்கள் போல தோற்றம் அளிக்கின்றன. உதாரணத்திற்கு, பச்சை, இஞ்சி வண்ண வட்டங்களை பாருங்கள், இங்கே நான்கு வட்டங்கள் உள்ளன, பச்சை வண்ண வட்டம் உள்ளே ஒரு சிறிய வட்டம் உள்ளது, அது இஞ்சி வண்ணம் போல தோற்றம் அளிக்கிறது, பக்கத்திலே பெரிய இஞ்சி வண்ண வட்டத்திற்குள் இருக்கும் சின்ன வட்டம், பச்சை நிறம் போல தோற்றம் அளிக்கிறது. இரண்டு சிறிய வட்ட வண்ணங்கள், பக்கத்தில் இருக்கும் பெரிய வட்டங்கள் போல காட்சி அளிக்கிறது. ஆனால், இந்த சிறிய வட்ட வண்ணங்கள், ஒரே வண்ணங்களே! மூன்று வண்ணங்கள் தான், ஆனால் நான்கு போல தோற்றம் அளிக்கிறது. சிவப்பு, வயலட், மஞ்சள் வட்டங்களும் இதே போல தான். இதை “மொழி” பெயர்த்து சொன்னால், இஞ்சி போல தோற்றம் கொண்ட ஆதிதமிழர்கள், அவர்களின் திணையுடன் சேர்ந்து ஒன்றோடு ஒன்று கலந்து வாழ்கிறார்கள். இயற்கையின் ஒரு பகுதியாக.
பிரபல ஓவியர் Paul Cezzane, வண்ணங்களை எழுத்தோடு சேர்க்கும் நம் புத்தியை விடாமல் சண்டை போட்டு மாற்று என்று சொல்லியிருந்தார். எழுத்து என்ற சொல்லை இங்கே நான் குறிப்பீடு என்றே எடுத்துக்கொள்கிறேன். இசை, வாசனையை போல வண்ணங்களுக்கும் குறியீடுகள் இல்லை, குறிப்பான்களிலிருந்து புலனுணர்வுக்கு நேராக செல்கிறது. ஆனால் பாருங்கள் குறிப்பான்களை ஒற்றைத்தன்மையாக மாற்றும் செயல், எழுத்து-பேச்சு மொழியில் மட்டுமல்லாமல், வண்ண மொழியிலும் நாம் செய்துகொண்டு இருக்கிறோம். பொதுவாக ஒவ்வொரு வண்ணங்களுக்கும் உணர்ச்சி குறியீடுகள் கொடுத்திருக்கிறோம் (சிவப்பு என்றால் காதல், நீலம் என்றால் சோகம்), ஆனால் வண்ணங்களும் தன் திணைக்கேற்ப மாறி உரையாடிக்கொண்டு இருக்கிறது! இதையெல்லாம் நான் Joseph Albers Interaction of Colors என்ற புத்தகத்தில் தான் முதலில் தெரிந்து கொண்டேன். ஆனால், ஜல்லிக்கட்டுக்கு பின்பு தான் ரசாயன மாற்றங்களோடு மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. என்னை ஏதோ பெரிய மேதாவி போல உணர வைத்திருக்கிறீர்கள்.
*****
அயோத்திதாசர் புத்தகத்தை படித்த பின்பு, எனக்கு முதலில் தோன்றியது Matrix படம் தான்.
Matrix படத்தில், இயந்திரங்கள் ஒரு மெய் நிகர் உலகை உருவாக்கி, அதன் வழியாக மனிதர்களை கட்டுப்படுத்தி, மின்சாரத்தை சேகரித்து, உயிர்பிழைத்து கொள்கிறது. அந்த மெய் நிகர் உலகிலேயே ஒருவன் (software, அவனை creator என்று அழைக்கிறார்கள்) பிறந்து, சில மனிதர்களை விடுவிக்கிறான். இதில் oracle என்ற இன்னொரு software, இயந்திரங்களையும் மனிதர்களையும் ஒன்று சேர்க்க ஒருவன் வருவான் (neo), அவனால் உலகில் அமைதி நிலவும் என்று கூட கணிக்கிறாள். அவனை morpheus என்றவன் கண்டுபிடிப்பான் என்றும் சொல்கிறாள். Morpheus, neovai கண்டுபிடித்து மெய்-நிகர் உலகத்திலிருந்து விடுவித்து, மெய் உலகத்தை காட்டுகிறான். இன்னொரு பக்கம், agent smith என்ற software program இருக்கிறான், மெய்-நிகர் உலகத்தை காப்பது அவன் வேலை, அது மட்டுமல்லாமல், எல்லா softwareகளும் அவனை போலவே ஆகவே முயற்சிக்கின்றன. Agent Smithக்கும், neoவுக்கும் நடுவே பெரிய போராட்டம் வந்து கடைசியில் oracle கணித்த போலவே அமைதி வருகிறது.
இதையே நம் திணைக்கு ஏற்பத்துப் போல சொன்னால், அந்த இயந்திரங்கள் தான் வேட பிராமிணர்கள், Agent Smith தான் வேட பிராமிணர்களின் கருத்தாகம் (எல்லா கருத்தாகமும் தன்னை முன்னெடுத்து செல்வதிலேயே தீவிரமாக இருக்கிறது என்ற நீங்கள் எழுதுவது இங்கே சரியாக இருக்கிறது), Creator தான் புத்தர் என்று சொல்லலாம், Oracle தான் அயோத்திதாசர், நீங்கள் தான் Morpheus. உங்கள் வாசகர்கள் அனைவரும் Neo. கொஞ்சம் காதல் காட்சியும், சண்டை காட்சியும் சேர்த்தால், தமிழ் Matrix version கிடைத்துவிடும். இதில் cypher என்ற இன்னொரு கதாபாத்திரம் இருக்கிறான், அவனால் மெய் உலகத்தை ஒப்புக்கொள்ள முடியாது, (நிகழ்காலத்தில் உள்ள வேட பிராமணர்களை போல), மறுபடியும் மெய்-நிகர் உலகத்திற்கே போக முயற்சிக்கிறான், இவனால் தான் பெரிய குழப்பங்கள் ஏற்படுகிறது. கொஞ்சம் முன்னும் பின்னும் இருந்தாலும் கூட, என்னுடைய உணர்ச்சிகளை வேறு எப்படி சொல்லுவது என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு Neo, Matrix படத்தில் என்ன என்ன உணர்ச்சிகளெல்லாம் உணர்ந்தானோ அதே தான் நானும் உணர்ந்தேன். உங்கள் புத்தகத்தை படிக்கும் போது.
பண்டிகைகள் என்றாலே எனக்கு என் வீடு தான் ஞாபகம் வரும், ஆனால் அதே சமயம் சலிப்பும் வரும். அதும் எங்கள் வீட்டில் எல்லா பண்டிகைகளும் மிகவும் சிரத்தையாக செய்வார்கள், ஏகப்பட்ட விதிகளோடு. வெளியூரில் தங்கி இருந்த நாட்கள் எல்லாம் இந்த பண்டிகையை சுற்றி இருக்கும் கலகலப்பு தான் நினைத்துக்கொள்வேன், இந்த நினைவுகள் என்னை வீட்டிற்குள் இருப்பது போல உணரச்செய்யும். பண்டிகை என்றாலே அம்மாவுக்கு தலைக்குமேல் வேலை, எனக்கு அலைச்சல். எல்லாம் முடிந்த பின்பு இந்த பலகாரம் தின்னுவதற்காகவா இவ்வளவு மெனக்கெடுகிறோம் என்று தோன்றும். பகுத்தறிவு என்ற பெயரில் இதை கிண்டல் செய்யவும் எனக்கு மனது வரவில்லை. அயோத்திதாசரின் பிரபலமான கார்த்திகை தீப கட்டுரையை படித்த பின்பு தான் இந்த பண்டிகைகளின் நினைவுகள் எல்லாம் வேறொன்றாக ஆக ஆரம்பித்தது. கடைசியாக ஒரு அர்த்தம் கிடைத்தது. இதை படித்த எல்லோருமே உற்சாகம் அடையாமல் இருக்கமாட்டார்கள், அதே போல தான் நானும். Rime of the Ancient Mariner என்ற கவிதையில், ஒரு கிழவன், கல்யாணத்திற்கு சென்று கொண்டு இருக்கும் ஒருவனை இழுத்து வைத்து கொண்டு அவன் சொந்த கதையை சொல்ல ஆரம்பிப்பான். அதே போல நானும் எனக்கு தெரிந்த அனைவருக்கும் இதை சொல்லிவிட்டேன்.
இதை படித்த பின்பே உடனடியாக நான் இந்திர தேச சரித்திரம், முருக கடவுள் வரலாறு, விபூதியின் வரலாறு எல்லாம் படித்தேன். ஏகப்பட்ட பிரமிப்பூட்டும் கதைகள் இருக்கின்றன. இது எல்லாம் ஏன் யாரும் சினிமா படமாக எடுக்க முன்வரவில்லை? நந்தனும், அஷ்வகோஷரும், வேட பிராமணர்களோடு உரையாடுவதை எடுத்துக்கொண்டாலே இந்திர தேச சரித்திரத்தின் முக்கால்வாசி கதையை சொல்லிவிடலாம். அயோத்திதாசர் தன் சிறிய கட்டுரைகளில், தெளிதல் என்ற தலைப்பில், “இந்திர தேச சகோதர சகோதரிகளே!” என்று எழுதும்போது, அவர் அடைகிற மன கிளர்ச்சியை என்னால் உணர முடிகிறது.
இந்திர தேச சரித்திரத்தை பற்றி எனக்கு உங்களிடம் இன்னொன்று சொல்ல வேண்டும். எங்கள் வீட்டில் மொத்தம் 9 ‘பெரியவா’ படம் இருக்கிறது, வீட்டு முழுக்க இவர் படம் தான். சமீப காலத்து பெரியவர்களை விட ஆதி சங்கராச்சாரியார் மேல் எல்லோருக்கும் பயங்கர பக்தி உண்டு. அது மட்டுமில்லாமல் இளையராஜா கூட இவர் மேல் பயங்கர பக்தியும் மரியாதையும் கொண்டு இருக்கிறார். சென்னைல் நடந்த இரைச்சலான symphony நிகழ்ச்சிக்கு போய் இருந்தேன், (துரதிஷ்டவசமாக symphonyயை சுற்றி வெவ்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் மதிப்பே குறைத்துவிட்டார்கள்), எல்லாம் முடிந்த பின்பு ராஜா பேசினார், பேசி முடித்த பின்பு, எல்லோரும், கடைசியாக ஒரு பாட்டு பாடுங்கள் என்று கத்தினார்கள். ஒரு நொடி கூட யோசிக்காமல், அவர் ஜனனி ஜனனி பாடலை தான் பாடினார். எங்கள் வீட்டிலும் இது ஒரு தெய்வீக பாடல். சிறிய வயதிலிருந்தே இந்த பாடல் மேல் இருக்கும் மதிப்பை நான் கவனித்திருக்கிறேன். நானும் இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, ஆதி சங்கராச்சாரியார் ஒரு பெரிய ஆன்மிக குரு தான் போல என்று நினைத்திருந்தேன். ஆனால் அயோத்திதாசர், “வாட்டம் சாட்டமாக ஒருவரை கொண்டு வந்து நீண்ட குல்லா ஒன்றை போட்டு, இவர் ஒரு பெரிய பிராமிணர் என்று நாடகம் செய்தார்கள்” என்பது போல எழுதியிருப்பார். இதை படித்ததும் என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. “நீண்ட குல்லா” என்ற வார்த்தையை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டு இருப்பேன்.
அயோத்திதாசர் பற்றி என் வீட்டில் பேசும்போது, என்னை நோக்கி வரும் முதல் கேள்வி, “நீ எப்போதாவது சங்கராச்சாரியார் படிச்சிருக்கிறாயா? விவேகானந்தர் எழுதியதை படிச்சிருக்கிறாயா? அரைக்குறையா ஏதாவது படிச்சிட்டு வந்து பேசாதே” என்று சொல்வார்கள். எனக்கு ரோஷம் ஏறும். விவேகானந்தரின் கட்டுரைகள் கொஞ்சம் படித்தேன், உண்மையின் பக்கத்தில் வருவது போல வந்து வினோதமான முடிவுகளுக்கு வருகிறார். அதுமட்டுமில்லாமல், சாதி பற்றி சிந்தித்து அவரே குழம்பி இருப்பது போல தெரிகிறது. ஆனால் இதே போல ஆதி சங்கராச்சாரியாரின் புத்தகங்களை படிக்க முடியவில்லை, எரிச்சலாகி தூக்கி விசிறிவிட்டேன். ஒண்ணுமே புரியல. ஆனால் ஒருநாள் நிச்சயம் படிப்பேன், என்னுடைய மனத்திருப்திக்காவது இவர்களை படித்து ஆக வேண்டும்.
********
மற்ற புத்தகத்திற்கு வருவதற்கு முன்பு, உங்கள் சினிமா விமர்சனங்களை பற்றி பேச வேண்டும். முதலில் Lubber Pandhu. என்னை பொறுத்த வரை இது ஒரு முக்கியமான விமர்சனம், ஏன் என்றால் யாருமே இப்படத்தை பற்றி இந்த கோணத்தில் பேசவே இல்லை. சமூக ஊடகங்களில் தலித்களும் சரி, தலித் அல்லாதவர்களும் சரி, ரஞ்சித்/மாரிக்கு பிறகு, அரசியல் மிக சரியாக பேசப்பட்ட படம் என்று தான் சொல்கிறார்கள். எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ்கூட, சிறந்த படம் என்றே tweet போட்டிருக்கிறார், ரஞ்சித்தும் இந்த படத்தை பாராட்டியே பேசியிருக்கிறார். எழுத்தாளர் ஷாலின் சொல்வது தொடர்ந்து படிப்பேன், அவர் கருத்துகளின் மூலமாக தான் நான் ஏதாவது தவறாக புரிந்து கொண்டிருக்கிறேனா என்று யோசித்துப் பார்ப்பேன். தலித்களின் கண்ணோட்டத்தில் உலகை புரிந்து கொள்வதற்கு இவர்களின் புத்தகங்களும், tweetகளும் உதவியாக இருந்தன.
என்னை பொறுத்த வரை சிறந்த படம் என்றால் என்ன என்று கேட்டால் இப்படிச் சொல்லுவேன். ஒரு புதிய மனிதர் நமக்கு அறிமுகமாகி, கொஞ்சம் கொஞ்சமாக பழகி ஒரு கட்டத்தில் அவன் உணரும் உணர்ச்சிகள் எல்லாம் நாமும் உணரும் போது ஒரு நெருக்கம் வரும், எப்போது என்னால் இந்த நெருக்கம் சினிமாவில் உணர முடிகிறதோ அப்போது ஒரு படம் சிறந்த படம் என்று நான் சொல்லுவேன். கதாபாத்திரங்களின் micro உலகத்தை (நீங்கள் அகம் புறம் என்று சொல்வது போல, நான் micro/macro என்று சொல்லிக்கொண்டு இருந்தேன்) புரிந்து கொண்டு, அணு அளவில் வர்ணிக்கும் போது தான் படம் இந்த நெருக்கத்தை தருகிறது. இதுமட்டும் இல்லாமல் macro (புற) நிலையில், கதை எப்படி நகரப்போகிறது என்று யூகிக்க முடியாமல் ஏங்க வைக்கும் தருணங்களும் தேவை. என்னை பொறுத்தவரை, முக்கால்வாசி தமிழ் படங்கள் இரண்டாவது விஷயத்தில் தான் கவனம் அதிகமாக செலுத்துகின்றன. அக உலகை சரியாக வர்ணிக்காததால் தான், Madras படமும் என் மனதில் அவ்வளவு ஆழமாக இறங்கவில்லை. ஆனால் Lubber Pandhu, அக உலகத்தை மிக அழகாக எடுத்துக் காட்டியது என்று தான் நானும் நினைத்துக் கொண்டு இருந்தேன். ஷாலின் அவர்களும், ரஞ்சித் அவர்களும் படத்தை பாராட்டி பேசும்போது, படத்தின் அரசியலும் சரியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் கட்டுரையை படிக்கும் வரை. அந்த கட்டுரையை படித்த பின்பு கொஞ்சம் அவமானமாக இருந்தது. அதை படிக்கும் முன்பே, நான் உங்கள் நான் ஏன் தலிதும் அல்ல புத்தகத்தை படித்து விட்டேன். அதில் வரும், திராவிட காலத்தில், பார்ப்பனர்களுக்கு சாப விமோசனம் உண்டா என்ற கட்டுரையும், Lubber Pandhu விமர்சனமும் ஒரே மாதிரியாக இருந்தது போல உணர்ந்தேன். அப்படி இருந்தும், Lubber Pandhuல் இருக்கும் சிக்கல்கள் என் கண்ணுக்கு தெரியவில்லை. இப்பொழுது உங்கள் யானை கதை பற்றி சொன்னால் சரியாக இருக்கும். முதலில், எனக்கு தெரிந்து, சாதியை பற்றி இவ்வளவு அழகாக சொல்லி கேட்டதே இல்லை, எவ்வளவு அற்புதமான திருப்பம்…
இதை படித்த உடன், எனக்கு ஒரு சிந்தனை வந்தது, கண் தெரியாதவர்களால் எப்படி ஒரு உருவத்தை புரிந்துகொள்ள முடியும்? பாம்பின் உருவத்தையும், சுவரின் உருவத்தையும் எப்படி புரிந்து கொண்டார்களோ அப்படியே தான் யானையின் உருவத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். சரி அப்படி என்றால் பிளேட்டோவின் குகைக்குள் இருந்து வெளியேற வழி உண்டு. ஆனால் ஒரு யானை பாகரர் தேவை, (இதை நான் ஐசக் நியூட்டன் நான் மாமனிதர்களின் தோள்களின் மேல் நின்று கொண்டு இருக்கிறேன் என்ற கோணத்தில் இங்கு எடுத்துக் கொள்கிறேன்). ஆனால் யானை பாகரர் சில சமயம் நிழலாக இருந்தால்? இப்படிதான் உங்கள் விமர்சனம் என்னை யோசிக்க வைத்தது. மெய் உலகம் என்று ஒன்று இருப்பதில் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை, எல்லாம் நிழல், எல்லாம் மேட்ரிக்ஸ், எப்படி உன்னால் நிரூபிக்க முடியும் என்ற கேள்விக்கு எல்லாம் தற்க ரீதியாக நல்ல விளக்கங்கள் அளித்திருக்கிறார்கள் நவீன அறிவியலாளர்கள். பிரச்சனை, நிழலிருந்து எப்படி பன்முக தன்மையான உலகத்திற்கு வெளியே வருவது என்றுதான்.
இங்கே கடைசி விவசாயி படத்தின் விமர்சனத்தை பற்றியும் சொல்ல வேண்டும். இந்த படத்தை முதல் முறை பார்த்த பின்பு எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது, திரைக்கதை எழுதுவதில், மாரி, ரஞ்சித், வெற்றிமாறன், குமராஜாவை எல்லாம் இவர் மிஞ்சிவிட்டார் என்று தான் நினைத்தேன். இந்த படம் ஏன் தமிழ் படங்களில் தனித்துவமானது என்று ஒரு பெரிய கட்டுரை எல்லாம் எழுதினேன். ஆனால் சமூக ஊடகம் என்னை குழப்பி விட்டது மறுபடியும். ரஞ்சித் ஏற்கனவே காக்கா முட்டை படத்தை எதிர்த்து பேசியிருந்தார் (ஏன் எங்களை எப்பொழுதுமே இப்படி இழிவாகவே சித்தரிக்கிறீர்கள்). சமூக ஊடகங்களில் கடைசி விவசாயிக்கும் வந்த எதிர்ப்பு என்னவென்றால், கிராமத்தை ஏன் சொர்க்கம் போல காட்டியிருக்கிறீர்கள்? எல்லோரும் அங்கே சாதிக்காரர்கள் தான், இந்த படம் பழைய சமூக நிலைக்கு திரும்ப வேண்டும் என்று சொல்கிறது. இது போன்ற பிற்போக்கான சிந்தனை கொண்ட படத்தை ஏன் பாராட்டுகிறீர்கள் என்று கோபமாக எழுதி இருந்தார்கள். இதை படித்துவிட்டு, எனக்கு கொஞ்சம் அசிங்கமாக இருந்தது. என் சிந்தனையை மாற்றி கொள்ள வேண்டும், எனக்கு அரசியல் புரியவில்லை என்று நினைத்தேன். பிளேட்டோவின் குகைக்குள் ஆழமாக போய் கொண்டிருந்தது போல உணர்ந்தேன். காஃப்காவின் Metamorphosis கதைக்குள் இருப்பது போல இருந்தது. இவர்கள் எல்லாம் பார்த்ததும் என் பங்கிற்கு, நான் இந்த படத்தை தவறாக புரிந்து கொண்டேன், இது ஒரு பிற்போக்கு தனமான படம் தான் என்று நானும் ஒரு tweet போட்டேன். இந்த சமயத்தில் தான் உங்கள் விமர்சனத்தை படித்தேன். Lubber Pandhu விமர்சனம் ஒரு விதமான ஆச்சரியம் கொடுத்தது என்றால் இது வேறு விதமான ஆச்சரியம். வியப்பாக இருந்தது.
எனக்கும் சினிமா எடுக்க வேண்டும், திரைக்கதை எழுத்தாளராக வேண்டும் என்று கனவு உள்ளது. LV Prasad கல்லூரியில் படித்து short film எல்லாம் எழுதி இயக்கியிருக்கிறேன். என்னுடைய பயம் எல்லாம் நான் ஏதாவது தவறாக எழுதி மற்றவர்கள் என்னை இப்படி விமர்சிக்கக்கூடாது என்று அல்ல. நீங்கள் சொல்வது உண்மையா இல்லை அவர்கள் சொல்வது உண்மையா என்று கூட என்னுடைய மூல பிரச்சனை இல்லை. இந்த விஷயத்தில், தேவர் மகன், மாமன்னன் கட்டுரையில், கதையாடலை பற்றி நீங்கள் எழுதியது எனக்கு ஏகப்பட்ட தெளிவை தந்தது. என்னுடைய கவலை எல்லாம் என் அறியாமையை எப்படி வெளியேற்றுவது என்பதுதான். நிறைய புத்தகங்களை வாசித்து, பறவை போல (உங்கள் நெல்லை புத்தக விழா பேச்சை பார்த்தேன்) வெவ்வேறு திணைகளை புரிந்து கொள்வது தான் இதற்கு ஒரே வழி என்று எனக்கு புரிகிறது. பிளேட்டோவின் குகைக்குள் இருந்து வெளியே வருவதற்கு இது தான் ஒரே வழி.
அனாலும், இங்கே எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன. கமல் ஹாசன் மாமன்னன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ஆசிரியன் இறந்து விட்டான் என்ற தோனியில் உட்கார்ந்து இருந்தார் என்று நீங்கள் சொன்னீர்கள். இது எல்லா கலைஞர்களும் கற்று கொள்ள வேண்டிய விஷயம் என்றும் எழுதியிருந்தீர்கள். கதையாடல் மனிதர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை என்றால், கடைசி விவசாயி மேல் இதுபோன்ற விமர்சனத்தையும் நாம் “இதுவும் ஒரு கதையாடல் தான்” என்று ஒப்புக்கொள்ளலாமா? இங்கே Dan Schnieder (இவர் blog-இன் பெயர் Cosmoetica) என்ற எழுத்தாளர், கவிஞர் எழுதியதை பற்றி உங்களிடம் பகிர ஆசைப்படுகிறேன்.
“Art can't fix anything. It can just observe and portray. What's important is that it becomes an object, a thing you can see and talk about and refer to. A film is an object around which you can have a debate, more so than the incident itself. It's someone's view of an incident, an advanced starting point.”
-Steve McQueen (Director)
With this quote, Steve McQueen – a great artist whose work continues to go unappreciated for what it really is, by most - aptly captures the basic underlying foundation of art: that it is, beyond all else, an object. It has a specific reality that exists independently of any individual percipient. Getting at that aesthetic and qualitative actuality ought to be the job of any good critic, for it is in such spheres that art transcends the enjoyable-yet-base facts that structure a human experience of life – food, sleep, sex, and the like, things whose only real potential for meaning lies in the hermetically-sealed consciousness of those partaking of them – and becomes a way for man, in the general sense, to get at what reality really is, in a larger sense. It often can offer multiple possibilities for interpretation, of course, but this has often been stretched into the facile conclusion that all such interpretations are valid (and that they’re basically equal). However, as McQueen points out, art is an object, meaning that there must necessarily be parameters to it, physically and conceptually, or else it may as well dissolve into anarchic ethers.
Thus, good criticism should generally be an attempt, not necessarily to sublimate the self, but to elevate understanding of a work by highlighting what its pieces actually are, and how they fit together, for good or ill. This is objectivity: letting the object lead the way, rather than one’s own id and its attendant tendrils – emotion, prejudice, preference, etc. That’s not to say that these things do not matter, that one cannot fold them into an ultimate personal understanding transcending both objectivity and subjectivity, in their purest forms, but unless this is done with, at bare minimum, an ability to perceive, understand, and articulate (via words or actions) a work’s essence, the whole endeavor is doomed to fall into the same pit of provincialism that marks so much of human experience and history. It was my realization of this possibility that opened art up to me in a way it might not have, otherwise, and though it is not original nor unique to me, it seems to me the only consistent, logical view – yet, paradoxically, also the view that offers the most creative possibility, for creativity (and the understanding of it) flourishes best within boundaries.
“Art has a specific reality that exists independently of any individual percipient” என்று அவர் எழுதும்போது, உங்கள் (Roland Barthes, Ridvan Askin) சிந்தனைகளுக்கு அருகில் வந்து விடுகிறார். ஆனால் அதே சமயத்தில், கதையின் மையத்தை தவிர்த்து, எப்படியும் மாற்றிக்கொள்ளலாம், எல்லா மாற்று வடிவங்களும் சமம் என்று ஒப்புக்கொள்ள முடியாது என்றும் சொல்கிறார். மெய் பன்முக தன்மையானது என்றாலும், அந்த பன்முகத்தன்மைக்குள் ஒரு ஒற்றை தன்மை இருக்க வேண்டும் இல்லையா?
மாதொருபாகன் பற்றி எழுதும்போது, திருவிழாவின் இறுதி நாளில் நடப்பது ‘பண்பாடு அயர்ச்சி’ என்ற உண்மையை பெருமாள் முருகன் அரைகுறையாக புரிந்துகொண்டிருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்கள். (இந்த கட்டுரையை படிக்கும் போது எனக்கு மிகுந்த உற்சாகம் — எவ்வளவு நுணுக்கங்களுடன் விவாதித்திருக்கிறீர்கள்!) இங்கே முரண் கதையின் மையம் உண்மையா பொய்யா என்பதில்தான்; இதில் நீங்கள் தெளிவாக “முழு உண்மை இல்லை” என்று எழுதுகிறீர்கள். அவரின் கதையாடல் திருவிழாவின் தலைகீழாக்கத்தின் பன்முகத்தன்மையை ஒற்றை தன்மையாக மாற்றியதே பிரச்சனை.
அப்படியானால், கதையாடல் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம்; ஆனால் எல்லா கதையாடல்களும் சரி என்று ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று புரிந்துகொள்ளலாமா? அப்படியானால் கடைசி விவசாயி, Lubber Pandhu படங்களின் மீது சமூக ஊடகங்கள் செய்த விமர்சனம் தவறு என்று சொல்ல முடியுமா? எப்போது நாம் பிரதிகளை பார்த்து அமைதிக்காக இருக்க வேண்டும் (கமல் ஹாசனை போல)? எப்போது பிரதிகளை பிரதிகளோடு எதிர்கொள்ள வேண்டும் (உங்களைப் போல)?
எனக்கு நான் எப்படி உணர வேண்டும் என்றே புரியவில்லை. நான் உணர்ந்த உணர்ச்சிகள் தவறு என்று தோன்றுகிறது. சமீபமாக உங்கள் பேச்சில் வேறு ஒன்றாக மாறுவதற்கு நாம் நம்மை இழக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள். அப்படி என்றால் இந்த குழப்பம் எல்லாம் நான் வேறு ஒன்றாக மாற முயற்சிப்பதால் தானா?
சில மாதங்களுக்கு முன்பு, Bad Girl என்ற திரைப்படம், பிராமண எதிர்ப்பு தோனியை கொண்ட ஒரு trailer வெளியானது. முழு படம் வந்த பிறகு, The News Minute என்ற பத்திரிகையில், ஒரு விமர்சகர் (இவர் ஒரு தலித் பெண்) இது பிராமண பெண்களின் கதை, எல்லா பெண்களின் கதை அல்ல, எனக்கு அந்த பெண்ணின் நிலையை உணர முடியவில்லை என்றார். சமூக ஊடகங்களில் இந்த விமர்சனம் தூள் பறந்தது. சுருக்கமாக சொன்னால், இதுதான் சொல்லப்பட்ட வாதம். பிராமண பெண்கள் முற்போக்குவாதிகள் போல வேடம் போடுகிறார்கள், ஆனால், இவர்களெல்லாம் பிற்போக்கு தனமான சாதிக்காரர்கள் தான். திரைக்கு உள்ளே ஒரே ஒரு வரி தான் சாதியை பற்றி இருக்கும், மற்றபடி அது ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியது தான். ஆனால் திரைக்கு வெளியே, அது ஒரு கலாச்சார எதிர்ப்பு போலவும், சாதி எதிர்ப்பு போலவும் பேசிக்கொள்கிறார்கள்.
இங்கே ஒரே ஒரு விவாதம் மட்டும் சுவாரஸ்யமானது. ஒரு பக்கம்: எல்லாவற்றிலும் சாதியை கொண்டு வந்து ஏன் ஒற்றை தன்மையாக மாற்றிவிடுகிறீர்கள்? இன்னொரு பக்கம்: ஒற்றை தன்மையாக மாற்றுவது நீங்கள் தான். பிராமண பெண்கள் முற்போக்குத்தனம் என்று ஒரே ஒரு திசையை தான் பேசுகிறார்கள், ஆனால் வேறு திசையில் பார்த்தால் அவர்களும் பிற்போக்குவாதிகள் தான்.பன்மையும் ஒற்றையும், ஒற்றையும் பன்மையும். என் நண்பன் பிரச்சனை marketing-இல் தான் இருக்கிறது, மற்றபடி இதுக்கும் சாதிக்கும் சம்பந்தம் இல்லை என்றான். இதுவும் ஒரு விதத்தில் சரி தான். எனக்கு என்னமோ, படத்தின் தயாரிப்பாளர்கள் நேர்மையாக இருப்பது போல தெரியவில்லை (பிராமண எதிர்ப்பை கொண்டு படத்தை பிரபலமாக்க முயற்சித்தது போல தெரிகிறது), எழுத்தாளர் இதைப் பற்றி எல்லாம் தீவிரமாக யோசித்தது போல தெரியவில்லை. TNM விமர்சகர் சொல்லுவது தான் சரி என்று தோன்றுகிறது. ஆனால் ஏதோ இங்கு சரியாக இல்லை, முழுதாகவும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இந்த குழப்பத்திற்கு எல்லாம் கிட்டத்தட்ட பதில் கிடைத்தது போல இருக்கிறது, ஆனால் விரல் தொட்டு “இதுதான் பதில்” என்று என்னால் சொல்ல முடியவில்லை. இந்த குழப்பத்தை நீங்கள் தீர்த்து வைக்க முடியுமா?
******
நான் ஏன் தலிதும் அல்ல புத்தகத்தில் நீங்கள் இந்த கேள்வியை எழுப்பியிருந்தீர்கள். கிறிஸ்துவராக, முஸ்லீமாக, இந்துவாக, அல்ல பிராமணராக மாற முடியும் என்றால், ஏன் தலிதாக மாற முடியாது? என்னை பொறுத்தவரை, இது உங்கள் சிந்தனைகளில் மிகச் சிறந்த ஒன்று. இது ஏன் பிரபலமான உரையாடலாக மாறவில்லை என்று புரியவில்லை. தலிதாக மாற நினைப்பவர்கள், “தனது சாதி அடையாளம் வழங்கி இருக்கும் அரசியல்–பொருளாதார உரிமைகளை மறுத்து விட்டு வர வேண்டும்” என்றீர்கள். எனக்கு தெரிந்து சமீபகாலத்தில் முதல் முறையாக, சாதி எதிர்ப்பைப் பற்றி பேசுவதை தவிர்த்து, செயல்களை பற்றி சிந்திக்க வைக்கிறது. எல்லோரும் இந்து மதத்தை விட்டு விட்டு புத்த மதத்திற்கு மாறி விடுங்கள் என்று அம்பேத்கர் சொல்வதும் இப்படியான ஒரு செயல் தான். ஆனால் நான் முன்பு சொன்னது போல, இதில் என்ன பிரச்சனை என்றால், நான் புத்த மதத்திற்கு மாற வேண்டும் என்று என் வீட்டில் சொன்னால் அதைக் கொஞ்சமும் மதிக்கமாட்டார்கள். நான் பிராமணன் அல்ல என்று கூட சொன்னேன்; கொஞ்ச நாள் என்னை ஏதோ திட்டிக்கொண்டே இருந்தார்கள், அப்புறம் அதையும் பொருட்படுத்தவில்லை. இன்னொரு விஷயமும் சொன்னார்கள்: “பூணாலை எல்லாம் கழற்றி போட்டால் நீ பிராமணன் இல்லை என்று நினைக்காதே; நீ பிராமணன் தான். பிரச்சனை என்னவென்று அப்போதுதான் என் மண்டையில் ஏறியது ஏறியது. ஆனால், நான் பிராமணன் இல்லை என்று சொல்லுவதற்கும், நீங்கள் தலித் அல்ல என்று சொல்லுவதற்கும் எவ்வளவு வித்தியாசம்!
எனவே, அரசியல்–பொருளாதார உரிமையை விட்டு வர வேண்டும் என்பதைக் குறித்து நான் நீண்ட நாட்களாக யோசித்து இருக்கிறேன். அரசியல்–பொருளாதார உரிமை தான் எல்லாவற்றையும் நிர்ணயம் செய்கிறது. அப்படி என்றால் வீடு, சேமிப்புகள் இதை எல்லாம் விட்டு விட வேண்டுமா? அப்படியே விட்டால் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும்?
முத்துக்கிருஷ்ணன் என்று ஒரு முதலீட்டாளர் இருக்கிறார், அவர் Twitter-இல் இந்த பதிவை செய்திருந்தார்: இந்தியாவில் 50 சதவீத மக்களின் மாத வருமானம் கிட்டத்தட்ட 6000 ரூபாய்; அதற்கு மேல் இருக்கும் 40% மக்களின் மாத வருமானம் கிட்டத்தட்ட 13500 ரூபாய்; அதற்கு மேல் இருக்கும் 9% சதவீத மக்களின் மாத வருமானம் கிட்டத்தட்ட 1.2 லட்ச ரூபாய்; 1% சதவீத மக்களின் மாத வருமானம் 4.5 லட்ச ரூபாய். இன்னொன்றும் சொன்னார் — 10% மக்கள் மட்டும் தான் 25000 ரூபாய்க்கு மேல் மாத வருமானம் சம்பாதிக்கிரர்கள். அப்படி என்றால், மேலே இருக்கும் 1% மக்களுக்கும் கீழே இருக்கும் 10% மக்களுக்கும் கூட வானளவு வித்தியாசங்கள் இருக்க வேண்டும். நானும் கிட்டத்தட்ட அந்த 9 சதவீதத்திற்குள் வந்து விடுவேன். இப்படியிருந்தும், வரவு எட்டணா, செலவு பத்தணா மாதிரியான குடும்பம் தான். மூன்று–நான்கு மாதத்திற்கு ஒரு முறை 1000–1500 ரூபாய், சக்தி இல்லாதவர்களுக்கு கொடுக்க முடியும். அவ்வளவுதான்.
இங்கே எனக்கு தலித் என்ற அடையாளத்தை விட, சாதியற்ற நிலைக்கு எப்படி செல்லுவது என்ற கேள்விதான் முக்கியமாக இருக்கிறது. சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும். என் குடும்பத்தில் இருக்கிறவர்களுடனும், சில வயதானா பிராமணர்களுடனும் இதையெல்லாம் பேசி பார்ப்போம் என்று நினைத்தேன். அவர்கள் சொன்ன பதிலை நான் கீழே எழுதியிருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு ஒன்று சொல்லவேண்டும், நாம் எல்லோரும் தலிதாக ஆகுவது எப்படி, சாதியற்ற நிலைக்கு செல்லுவது எப்படி என்ற கேள்விக்கு பல பதில்களும் முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.
சாதியற்றவன் என்ற சான்றிதழ், புறமண முறைகள், இந்து மதத்தை விட்டு வெளியேறி புத்த மதத்திற்கு மாறுதல், எதுவுமே சரியான பாதையாக தெரியவில்லை. அம்பேத்கர் போன்றவர்கள் தீவிர சட்ட திட்டங்கள் கொண்டு வந்தும், அதை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகளும் சாதிக்காரர்களாக இருக்கிறார்கள். இதனால் தான் அவர் அரசியல் புரட்சிக்கு முன் சமூக புரட்சி தேவை என்று சொன்னார்.
பாறைகளின் மேல் சொட்டு சொட்டாக நீர் விழுந்து பல ஆயிரம் வருடங்களுக்கு பிறகு அது கொஞ்சமாக தேய ஆரம்பிக்கும், அது போல தான் சமூக மாற்றமும். அப்படி என்றால் நாம் வாழும் இந்த காலகட்டத்தில் இதற்கு வழி கிடைக்காதா? அப்படி என்றால் இது எல்லாம் ஒரு Shakespearean tragedy போலவே இருக்கிறது. ஆனால் எல்லோரும் தலிதாக மாறுவது என்ற கற்பனை புதிதாகவும் ஊக்குவிப்பதாகவும் இருக்கிறது (முழுதாக புரியவில்லை என்றாலும்).
இப்போது உங்கள் JNU கட்டுரையை பற்றி பேச வேண்டும். இந்த கட்டுரை என்னை முதலில் பயங்கரமாக குழப்பி எடுத்தது. (சமீபத்தில் திரும்பி படிக்கும்போது, ஜல்லிக்கட்டின் சாயம் இதில் தெரிந்தது; ஜல்லிக்கட்டு போராட்டம் நடக்கும் முன்பே ஜல்லிக்கட்டு புத்தகத்தின் teaser வந்துவிட்டது!). இவர் என்ன புதுசாக மாட்டிறைச்சி பற்றி ஏதோ சொல்கிறார்? அம்பேத்கர் தான் தெளிவாக எழுதியிருக்கிறாரே? இது என்ன புதிய கதை? மூன்று முறை படித்த பின்னும் அந்த குழப்பம் தீரவில்லை. கடைசியாக, உங்கள் தேவேந்திர குல வேளாளர் கட்டுரையை படித்த பிறகு தான் இந்த குழப்பம் தீர்ந்தது.
இது ஒரு “அணுகுண்டு” கட்டுரை. துரதிர்ஷ்டவசமாக இது எந்த புத்தகத்திலும் வரவில்லை. அயோத்திதாசர் புத்தகத்தில் இதைப் பற்றி கொஞ்சம் சொல்லியிருப்பீர்கள், ஆனால் கட்டுரையை முழுமையாக புத்தகத்தில் பதிவிட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் பிரபலமாகி இருக்குமோ என நினைக்கிறேன். என்ன ஒரு கதையாடல்! மாரி, ரஞ்சித் போன்றவர்கள் இதைப் பற்றி எல்லாம் படம் எடுக்கலாம். ஏன் செய்வதில்லை என்று எனக்கு தெரியவில்லை.
இங்கே இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும். இந்த கட்டுரையை என் அப்பாவிற்கு காட்டி படிக்க வைத்தேன், அவர் வெளிப்படுத்திய உணர்ச்சி எனக்கு வேடிக்கையாக இருந்தது.
என் அப்பா: எப்போ பார்த்தாலும் ஏன் பிராமணர்களையே குறை சொல்றீங்க? மற்றவர்கள் (அதாவது பிராமணர் அல்லாதோர்) எல்லாம் எவ்வளவு மோசமாக இருக்காங்கன்னு தெரியுமா உனக்கு?நான்: ஆனா பிராமணர்கள் தானே இதெல்லாத்துக்கும் காரணம்? …நிறைய வாக்குவாதங்களுக்கு பிறகு…அப்பா: சும்மா எதாவது உலகம் தெரியாம உளறாத. சரி அப்போ ஒன்னு செய்யலாம், எல்லா பிராமணர்களையும் ஒரே அடியாக சாவடிச்சிடலாம். அப்போ நாடு திருந்திடுமா?
எனக்கு ஒரு நொடி என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. ஆனாலும் அவரின் உணர்ச்சிகள் எனக்கு ஆச்சரியமாக இல்லை. அவர் leather company-யில் பணி புரிகிறார், இரண்டு பசங்களுக்கு அப்பா, cricket பைத்தியம் இதையெல்லாம் விட்டு விட்டு அவர் அவரை ஒரு பிராமணராக தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஏன் என்று கேட்டால் அவரிடம் சரியான பதில் இருக்காது. பெரிய ஆன்மீகவாதியும் கிடையாது; தன்னை பகுத்தறிவாளி என்று அவர் சொல்லுவார். “சாதியில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்பார். ஆனால் புறமண உறவுகளுக்கு ஒப்புக்கொள்ள மாட்டார். ஏன் என்று கேட்டால், “நமக்கு அது செட்டாகாது” என்பார்.
நான் “பிராமணர்களை எல்லாரையும் சாக சொல்லவில்லை; கொஞ்சம் மாற முயற்சியுங்கள்” என்றால், “கழுதை வயசு ஆச்சி, இன்னும் கொஞ்ச நாள்ல சாகப்போகிறேன்; நான் மாறி என்ன பிரயோஜனம்? நானும் நீயும் மாறினால் சாதி எல்லாம் போகாது; அது தலைமுறை தலைமுறையாக கொஞ்சம் கொஞ்சமாக மாறும்” என்பார். (சாதி பற்றி நான் யாரிடமும் பேசினாலும் அவர்கள் இதையே தான் சொல்கிறார்கள்.)
இதுபோல தான் என் அம்மாவிற்கும் உங்கள் தண்டனைகளின் காலம் கட்டுரையை படிக்க சொன்னேன். படித்துவிட்டு: “இவர் (உங்களை பார்த்து) எல்லாவற்றையும் ரொம்ப யோசிக்கிறார்” என்று சொல்லிவிட்டு போய்விட்டார். ஏன் இதை சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை. (எனக்கு இதை படித்துவிட்டு என் மேல் ஏதோ ஒரு அருவருப்பு, சட்டை, பேண்ட், ஷூ எல்லாம் போட்டுக்கொண்டு scooter-ல் வேலைக்கு போய் வருகிறேன்; நான் ஏன் இவ்வளவு அதிர்ஷ்டசாலி?).
இதைத்தவிர என் அம்மா உங்கள் கார்த்திகை தீபம் கட்டுரை, அம்மன் கட்டுரை படித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் உங்கள் கருத்துகளும், அயோத்திதாசர் கருத்துகளும் நிறைய அவரிடம் சொல்லியிருக்கிறேன். அவருக்கு என் அப்பாவைப் போல “பகுத்தறிவாளி” என்று தன்னை பார்ப்பது இல்லை; தீவிர ஆன்மீகவாதி. பழைய காலத்தில் வாழும் மனிதர்.
என் அம்மா, சித்திகள், அம்மாவின் நண்பர்கள், இவர்களிடம் எல்லாம் ஜாதியை பற்றி பேச முயற்சிகள் செய்திருக்கிறேன். அவர்கள் சொன்ன சில வரிகள்:
a.) பிராமணர்கள் எல்லோரும் முன்ன காலத்தில் நிறைய ஆதிக்கம் செய்திருக்கிறார்கள்; அதனால்தான் இப்போது யாருக்கும் நம்ம மேல் மரியாதை இல்லை. (இவர்கள் எல்லோரும் தீவிர பா.ஜ.க. / இடதுசாரி ஆதரவாளர்கள்.)
b.) நீ மற்ற பெண்களை திருமணம் செய்தால் நான் உன் கண்ணைக் கூட பார்க்க மாட்டேன். உன் அம்மாவுக்கு இங்கே நிறைய மரியாதை இருக்கிறது; நீ அதை கெடுக்காதே. தேவையற்ற விதண்டா வாதம் பேசாதே. உனக்கு பேய் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
c.) எங்களுக்கு எங்கள் வீட்டுப் பெரியவர்கள் இப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்காங்க; இப்போ எங்களால் மாற முடியாது.
இதை ஏன் சொன்னேன் என்றால், நாட்டுப்புற கலைஞர் மேல் உடல் அரசியல் செய்யப்படுகிறது என்று சொன்னீர்கள். அதே போல இவர்களின் உடலும் நிறைய பிற்போக்குத்தனமான வழக்கங்களுக்கு பழக்கப்பட்டு இருக்கின்றன. என் அம்மா இப்போதும், அவர் தங்கைகளை சந்திக்கும் போது, அவர்களுக்கு மாதவிடாய் இருந்தது என்றால், தள்ளியே தான் நிற்பார்; வீட்டுக்கு வந்த பின் உடைகளை மாற்றிவிடுவார். அவருக்கே தெரியும் இது ஒரு முட்டாள்தனமான செயல் என்று; ஆனாலும் அவருக்கு மாற்றம் இன்னும் கடினமாக தான் இருக்கிறது. இதே போல தான் புறமண திருமண முறையும். இது ஒரு சிக்கலான சூழ்நிலை. இதனால் தான் தற்கரீதியாக நாம் எவ்வளவு தான் இவர்களுடன் உரையாடினாலும் பயனற்றதாக இருக்கிறது. இந்த யானை எல்லோரின் வீட்டிற்குள்ளும் புகுந்து இருக்கிறது; ஆனால் நிறைய நேரம் கண்ணுக்கு படுவதில்லை (elephant in the room போல). இதை வெளியே துரத்த வேண்டும் என்று நினைத்தாலும் கூட அது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை; உள்ளே எப்படி வந்தது என்றும் கூட எல்லோருக்கும் குழப்பமாக இருக்கிறது (உங்கள் வாசகர்களை தவிர).
*******
எப்பொழுதுமே நம்மைப் பற்றி பேசும் படம் மற்றும் புத்தகம் நமக்கு உடனே பிடிக்கும். யாதும் காடே யாவரும் மிருகம் புத்தகத்தில், எனக்கு மிகவும் பிடித்த வரி ஒன்று இருக்கிறது: “தன்னந்தனியே சத்தமாகப் பேசும் பழக்கம் எனக்கு சிறு வயதிலிருந்தே இருந்தது.”
இதைக் படித்த உடனே என் உதடுகள் காதைதொட்டன. என் தாத்தாவுக்கு (அப்பாவின் அப்பா) காது கேட்காது; எனக்கு நினைவுத் தெரிந்த நாளிலிருந்தே கேட்காது. நிறைய பேசும் மனிதரும் கிடையாது; அவருக்கு பேச மனிதர்கள் தேவையில்லை. அதனால் அவர் அவருக்குள்ளேயே பேசிக் கொள்வார். வாய் அசையும்; சத்தம் வராது; மண்டையை மண்டையை ஆட்டுவார். இருபது வருடங்களாக (சாகும் வரை) இதையே செய்து கொண்டிருந்தார்.
இந்த பழக்கம் எனக்கும் ஒட்டிக் கொண்டது என்று நினைக்கிறேன். புதிய நண்பர்களை அறிமுகப்படுத்திக் கொள்வது எனக்கு கடினமான செயல், சிறுவயதிலும் சரி, இப்பொழுதும் சரி. அதனால் நான் என்னுடனே பேசிக் கொள்வேன். வேடிக்கை என்னவென்றால் இதை நான் செய்கிறேன் என்று எனக்கே தெரியாது. ஒரு நாள் என் தம்பி என்னிடம் வந்து, “நீ ஏன் தாத்தா மாதிரி மண்டையாட்டிக்கிட்டு வாயசைக்கிற?” என்று சொல்லிவிட்டான்.
நான் அதை முதலில் மறுத்தேன். கொஞ்சம் அசிங்கமாக இருந்தது. சில நாட்களுக்கு பிறகு தான் ஒப்புக்கொள்ள ஆரம்பித்தேன். உங்கள் கட்டுரையை படித்த பிறகு தான் நிம்மதியாக இருந்தது, நான் தனி ஆள் இல்லை என்று!
இந்த புத்தகத்தை பற்றி இன்னும் ஒன்னே ஒன்னு சொல்ல வேண்டும். சீலியின் சரீரம் படித்து முடித்தவுடன், நான் இதை படம் ஆக செய்தால் எந்த நடிகை சீலியாக நடிக்க முடியும்? யாருக்கு அந்த முகம் இருக்கிறது என்று யோசித்து கொண்டு இருந்தேன். சட்டென்று Radhika Apte மனதிற்கு வந்தார். சில முகங்களை மட்டும் வயோதிகம் தீண்டவே இல்லை என்ற அம்சம் இவருடைய முகத்திலும் இருக்கிறது. நல்ல நடிகையும் கூட.
ஆனால் நடிகர்களை தவிர, நிஜ வாழ்வில் யாராவது முகம் இப்படியாக இருக்குமா? என் பழைய அலுவலகத்தில் ஒரு பெண் இருந்தாள்; அவள் முகமும் இப்படித்தான் இருக்கும் என்று, என் கற்பனைகள் எங்கே எங்கே போய் கொண்டிருந்தது. அப்போது தான் சீலியின் சரீரம் தலித் இலக்கியமா? என்ற தலைப்பை பார்த்தேன். அதை படித்த உடனே எனக்கு சலிப்பு ஏற்பட்டது. சின்ன கட்டுரையாக இருந்தாலும், என்னவோ அதை மட்டும் படிக்க மனம் வரவில்லை. இதுவரை படிக்கவில்லை.
******
கடந்த பத்து மாதங்களாக உங்கள் எழுத்துடன் பயணம் செய்து கொண்டு இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் உங்கள் புத்தகங்களில் நிறைய எழுத்தாளர்கள் எனக்கு அறிமுகம் ஆனார்கள். ரூபா விஸ்வநாதின் Pariah Problem புத்தகத்தை வாசித்தேன்; “ஒடுக்குமுறை” என்ற வார்த்தைக்கு இப்போதுதான் அர்த்தம் புரிகிறது. இந்திர தேச சரித்திரம், Pariah Problem, சமீபத்தில் வந்த கடற்கரை அவர்களின் பராசக்தி புத்தகம், மற்றும் உங்கள் ஜல்லிக்கட்டு புத்தகம், இப்போதுதான் தமிழக வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பிக்கிறது.
சுபீட்ச முருகன் நாவலையும் வாசித்தேன்; கடைசி பகுதியில் என்ன நடந்தது என்று ஒண்ணுமே புரியல, உங்கள் விமர்சனத்தை வாசிக்கும் வரை. நகுலன், வண்ணதாசன், டி. ஜானகிராமன், இவர்களின் புத்தகங்களை எல்லாம் வாங்கி வைத்திருக்கிறேன்; இனிமே தான் வாசிக்க வேண்டும். ஷாலின் அவர்களின் புதிய புத்தகமும் வெளியாகி இருக்கிறது; டி.எம். கிருஷ்ணாவின் புத்தகமும் வரப்போகிறது; நரனின் புத்தகத்தையும் வாசிக்க வேண்டும். இந்த வருடம் புத்தகம் வாசிப்பவர்களுக்கு நல்ல வருடம் போல தெரிகிறது.
சரி, உங்கள் புத்தகத்தை எல்லாம் வாசிச்சாச்சு, கடிதம் எழுதியாச்சு, இப்போ என்ன? தனிமையாக உணர்ந்தேன். எனக்கு தெரிந்த இரண்டு நண்பர்களும் இதுவரை உங்கள் புத்தகத்தை வாசித்ததில்லை; அதனால் இதைப் பற்றி விரிவாக பேசவும் முடியாது. என்ன செய்வது என்று தெரியாமல் YouTube-ல் நேரத்தை வீணடித்துக் கொண்டு இருந்தேன்.
ஜெயமோகன் காந்தியை பற்றி பேசிக் கொண்டு இருந்தார். நிறைய கருத்துகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும், ஒரு வரி என்னை “பக்” என்று தூக்கிப் போட்டது. எப்போதுமே இருபத்தைந்து வயதில் எல்லோரும் பெரிய சாதி எதிர்ப்பு புரட்சியாளர்களாக இருப்பார்கள்; பிறகு முப்பத்தைந்து வயதில் அந்த புரட்சிகரம் கொஞ்சம் குறையும்; நாற்பத்தைந்து வயதில் இன்னும் குறைந்து; ஐம்பது வயதில் ஒரு முழு சாதிக்காரராக மாறிவிடுவார். ஆனால் காந்தி இதற்கு தலைகீழ் என்று அவர் சொன்னார்.
காந்தி அப்படிப்பட்ட ஆளுமையை இல்லையா என்று எனக்கு இப்போது கவலை இல்லை. ஆனால் நான் அப்படி மாறிவிடுவேனா என்ற பயம் வந்தது. ஏன் என்றால், இருபது வயதில் இருந்த எனக்கும், இப்போது முப்பது வயதாகிய எனக்கும் வானளவு வித்தியாசங்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட அவன் ஒரு மூன்றாவது மனிதன் போலவே எனக்கு தோன்றுகிறான்.
ஒரு மாமி என்னிடம் வந்து, “உன்னை மாதிரி நிறைய பேரை பார்த்திருக்கேன் (பிராமணர்களின் அட்டூளியதை பற்றி நான் பேசிக்கொண்டிருந்தேன்). முதலில் இப்படித்தான் பேசுவீங்க; ஆனா போக போக பாரு, பகவான் உன்னை மாற்றுவார்” என்று சொன்னார்.
ஐம்பது வயதில் நான் எப்படி மாறுவேன் என்று எனக்கே தெரியவில்லை. காலம் கண்டிப்பாக என்னை தேர்வு செய்யும். அந்த சூழலில் நான் தவறான செயல்களை செய்து, தவறான பாதையில் போய், ஒரு பழைய சாதிக்காரனாக மாறாமல் இருக்க உங்கள் எழுத்துக்கள் கண்டிப்பாக உதவும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
நான் ஜனவரி 15-ஆம் தேதி சென்னை புத்தகக் காட்சிக்கு வந்தேன். உங்களை பார்க்க முடியவில்லை. அடுத்த நாள் வரவும் முடியவில்லை. அண்ணா நூலகத்திலும், மதராஸ் பல்கலைக்கழகத்தில் வந்த போது கூட என்னால் வர முடியவில்லை. கண்டிப்பாக அடுத்த முறை நீங்கள் வரும்போது நான் உங்களை நேரில் பார்த்து கைகுலுக்க வருவேன்.
இப்படிக்கு,
ஆதித்யா கிரண்




Comments