வெகுஜனக் கிளர்ச்சியின் வம்சாவழி
- Apr 8
- 2 min read
பாலா கருப்பசாமியின் சக்தி நூலகத்தில் நடந்த கலந்துரையாடல் நான்கு மணி நேரம் போலச் சென்றது. முடிந்ததும் தான், அய்யய்யோ பதிவு செய்யவில்லையே என்று தோன்றியது. தமிழர்களுக்கு வரலாற்றுணர்வு அறவே கிடையாது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
நான் பேசும் போது, ‘ஜல்லிக்கட்டு - கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ நூலுக்கு ஆரம்பத்தில் வேறு சில தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டன’ என்று சொன்னேன். அவற்றுள் ஒன்று, வெகுஜனக் கிளர்ச்சியின் வம்சாவழி; இன்னொன்று, தமிழ் வெகுஜன உருவாக்கம். இவ்விரு தலைப்புகளிலும் ஃபூக்கோவின் சாயல் தென்பட்டதால், தவிர்க்கப்பட்டன.
ஆனால், இப்புத்தகம் வெகுஜனக் கிளர்ச்சியின் சுவடுகளை வரலாற்றில் தேடுவதை நிறுத்தி விடவில்லை. வெகுஜனக் கிளர்ச்சிகளை தன்னெழுச்சியானவை என்று சொல்கிறோம். அதற்காக, தற்செயலாக நிகழ்பவை என்றெல்லாம் நான் கருதவில்லை. வெகுஜனக் கிளர்ச்சி நிகழ்வதற்கு வலுவானக் காரணங்கள் உள்ளன. அக்காரணங்கள் சிந்தனையிலிருந்து உருவாகவில்லை என்பது மட்டும் நிச்சயம். இதனாலேயே அவற்றை தன்னெழுச்சி என்று சொல்கிறோம். தன்னெழுச்சி என்பதை சுயம்பு என்று விளக்குவது தவறு; அவற்றை, பிரக்ஞைக்கு அப்பால் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த நேரம், ‘மனித யோசனைக்கு அப்பால் என்ன இருக்க முடியும்?’ என்றார் மனுமகன்.

மனுமகனை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். அவரது இயற்பெயர், Jesus Christ. தனித்தமிழ் இயக்கச் சார்பு காரணமாக ‘மனுமகன்’ என்ற புனைபெயரைச் சூடிக் கொண்டவர். பக்கா பாளையங்கோட்டைக்காரர். அதனால் கவிதையும் எழுதுகிறவர். கிறிஸ்தவர் என்றாலும் நாத்திகர். ‘பிரக்ஞைக்கு அப்பால்’ என்று நான் சொவதை உடனடியாக சந்தேகப்பட ஆரம்பித்தார்.
‘நிறைய இருக்கின்றன. மொழி, பண்பாடு எல்லாமே பிரக்ஞைக்கு அப்பால் இருப்பவை தான்’ என்றேன்.
‘இவற்றையெல்லாம் கடவுள் படைத்தார் என்று சொல்ல வருகிறீர்களா? கடைசியில் இங்கே தான் வந்து நிற்பீர்கள் என்று தெரியும்’. இந்த இடத்தில் மனுமகன், மேஜர் சுந்தரராஜன் பாணியில், ‘the cat’s out of the bag’; குட்டு வெளிப்பட்டு விட்டது’ என்று கர்ஜித்தார். பாலா கருப்பசாமியின் சக்தி நூலகத்தில் அமர்ந்திருந்த ஒன்றிரண்டு பேரும் வெலவெலக்கத் தொடங்கினர்.
‘குட்டு வெளிப்படுவதெல்லாம் இருக்கட்டும், முதலில் மொழியியலும் உளவியலும் பிரக்ஞை குறித்து என்ன சொல்கிறது என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்’’ என்றேன் நான். ‘இவ்விரண்டுமே, மனிதர்களின் தன்னிலையை உருவாக்குகின்றன, யோசனையைக் கட்டுப்படுத்துகின்றன என்றால் இவையிரண்டும் மனிதப் பிரக்ஞைக்கு வெளியில் இருப்பதாகத் தானே அர்த்தம்?’
சொல்ல மறந்து விட்டேன், மனுமகன் ஒரு ஃப்ராய்டியரும் கூட. நான் உளவியல், மொழியியல் என்றதும் மனுமகன் கொஞ்சம் ஜெர்க் ஆனார். ‘மனிதனுக்கும் கடவுளுக்கும் அப்பால் பண்பாடு இருக்கிறது என்று சொல்வீர்களா?’ அவர் குரலில் இப்போது சுரத்து குறைந்திருந்தது.
‘கடவுள் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக பண்பாடு மனிதனுக்கு வெளியே இருக்கிறது’ என்றேன்.
இம்முறை, திருவிளையாடல் சிவாஜி கணேசனைப் போல, ‘தமிழ்பண்பாடு கூடவா?’ என்றார்.
நான் மனுமகனிடம் ஒரு மேரி பிஸ்கட்டை நீட்டி, இந்த விவாதத்தை ஒத்தி வைத்தேன்.




Comments