அப்பாவின் அல்சைமர்
- tdharmaraj67
- Jan 21
- 3 min read
காலையில் சீக்கிரமாகவே முழிப்பு வந்து விட்டது. ஒரு துர்க்கனவு. அப்பா இறந்து போனது போல. மணியைப் பார்த்தேன் 4.30. அதிகாலையில் கனவு கண்டால் பலிக்கும் என்று சிறு வயதில் கேள்விப்பட்டது இன்னமும் ஞாபகம் இருந்து வதைக்கிறது. அதே போல், மரணத்தைக் கனவில் கண்டால் கல்யாணம் நடக்கும், கல்யாணத்தைக் கண்டால் மரணம் சம்பவிக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் நம்புவது நம்பாதது அல்ல பிரச்சினை. இவை அனைத்தும் ஞாபகம் வந்து தொலைக்கின்றன. மிகச் சரியாக, தவறான நேரத்தில் ஞாபகம் வருகின்றன.

அதற்குப் பின் நான் தூங்கவில்லை. இன்றைக்கும் ஆப்பிள் கைக்கடிகாரம், தூக்கம் கெட்டதாகக் கண்டிக்கும். கெட்ட கனவு கண்டு நான் எழுந்தது அதற்குத் தெரியாது. அடுத்த அப்டேட்டில் ஆப்பிளுக்கு அதையும் சொல்லிக் கொடுத்துக் கூட்டி வரக்கூடும்.
அப்பாவுக்கு 90 வயதை நெருங்குகிறது. கடந்த பத்து வருடங்களாகவே நினைவுகள் அழிந்து வருகின்றன. அல்சைமர். சமகால விஷயங்கள் எதுவும் நினைவில் நிற்பது இல்லை. அதனால் கேட்டதையே திரும்பித் திரும்பிக் கேட்டுக் கொண்டிருப்பார். ‘நீங்க இப்ப எங்க இருக்கீங்க?’ கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் இதற்குப் பதில் சொல்லியிருந்த ஆள் தயக்கத்தோடு மீண்டும் பதிலைச் சொல்வார். இப்படி, தன்னிடம் பேசும் போது ஆட்கள் தயங்குவதை அப்பா கவனித்திருக்க வேண்டும். அதனால், கூடுமானவரை யாரிடமும் அதிகம் பேசுவது இல்லை. தனக்கு எதுவும் ஞாபகம் இருப்பதில்லை என்பதை அவர் மறப்பதே இல்லை. அதனால் பேச்சுப் பழக்கம் குறைந்து விட்டது. வெளிநாட்டில் இருக்கும் பேரன் பேத்திகளிடம் கூட அதிகம் பேசுவது இல்லை. ‘இந்தா பாட்டிட்ட கொடுக்கிறேன்’ என்று சொல்லி போனை கைமாற்றி விடுவார். தனக்கு எல்லாமும் மறந்து போகிறது என்ற பயமே ஒருவரை நிகழ்காலத்திலிருந்து விலகிச் செல்ல வைக்கிறது.
மறந்து போகிறது என்ற பயமே அவருக்கு ஞாபகப் பிசகைக் கொண்டு வந்ததோ என்று கூட சில சமயம் நினைத்திருக்கிறேன். ஆனால், அல்சைமர் என்றாலே இப்படித்தான் என்றே எல்லா மருத்துவர்களும் சொல்கிறார்கள். இதன் ஆரம்ப காலகட்டம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அப்பா, தனக்கு காது மந்தமாகிக் கொண்டிருக்கிறது என்று தான் முதலில் சொல்ல ஆரம்பித்தார். எதையும் இரண்டு தரம் அவரிடம் சொல்ல வேண்டியிருந்தது. சில நேரங்களில் நாம் சொல்வது அவர் காதுகளில் விழவில்லை என்பார். ‘இப்ப தான சொன்னாங்க.. திரும்பயும் அதையே கேக்குறீங்களே’ என்றால், எனக்கு காதுல விழலையே என்பார்.
நாங்களும் காதில் தான் பிரச்சினை என்று சொல்லி, ஹியரிங் எய்ட் வாங்கி மாட்டினோம். இதென்ன இவ்வளவு சத்தமா இருக்கு என்று சொல்லி இரண்டாவது நாளே தூக்கி வீசியாச்சு. மறதி அப்பொழுதே ஆரம்பித்திருக்க வேண்டும். அதை மறதி என்று தெரியாமல், காது கேட்கவில்லை என்றே சொல்லியிருந்திருக்கிறார். காது கேட்கவில்லையா, மறந்து விடுகிறதா, நிகழ்காலத்திலிருந்து விலகி விலகிச் செல்கிறாரா; எது முதலில்; எல்லாமே ஒரே நேரத்திலா. சொல்லத் தெரியவில்லை. மருத்துவர்கள் அல்சைமர் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறார்கள்.
காலையில் வந்த கனவில், அப்பா சம்மணமிட்டு உட்கார்திருக்கிறார். அவரது தலை, ஒரு கற்படிவம் போல, உடலிலிருந்து உருண்டு தரையில் விழுகிறது. மட்பாண்டம் செய்கிறவர் பயன்படுத்தும் நூலைக் கொண்டு அறுத்தது போல கச்சிதமாக வெட்டப்பட்டிருக்கிறது. உருண்டு போன தலையை, உடனடியாக யாரோ எடுத்து உடலோடு ஒட்ட வைத்து விடுகிறார்கள். அங்கே ஏற்கனவே ஒரு காந்தத் துண்டு கொண்டு தான் தலை ஒட்டப்பட்டிருந்தது. அந்தக் காந்தத் துண்டு நழுவியதால் தான் தலை உருண்டு ஓடி விட்டது என்றும் சொல்கிறார்கள். மீண்டும் அதை உடலோடு ஒட்டி வைக்க முயற்சி நடக்கிறது. எனக்கு முழிப்பு வந்து விட்டது. ஒரு துளி ரத்தம் இல்லை. கனவில் கண்டது நிஜத்தில் என்னவாக பிரதிபலிக்கும் என்ற பயம் தான் காலை முழுக்க வியாபித்து இருந்தது.
ஆதிச்சநல்லூர் தாழிகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, ஒரு குயவர் பெண்மணி தான் சொன்னது. ‘அந்தக் காலத்துல ஆட்கள் அவ்வளவு ஈஸியா சாக மாட்டாங்க. உடம்பு சிறுத்து போகுமே தவிர உசுரு போகாது.’ வயதாகி விட்டதால் கூன் விழுந்து, சிறுசாகிப் போனவர்களை நான் பார்த்திருக்கிறேன். ‘பல தலைமுறை தாண்டியும் மக்க உசுரோடு இருப்பாங்க. அங்கன இருக்கிறது யாருன்னு இன்னைக்கு உள்ளவகளுக்குத் தெரியாது. அத்தனை காலம் இருப்பாங்க.’ ஓட்டிக்கு அப்புறம் உறவில்லை என்பது தான் பழமொழி. மகன், பேரன், பூட்டன், ஓட்டன். அதற்கப்புறம் நான் யாரோ நீ யாரோ. ‘அந்த சமயத்துல, இப்படி உசுரோட இருக்குறவுகள தூக்கி தாழியில வச்சிருவாங்க. தாழிக்குள்ளயே அவுகளுக்குத் தேவைப்படும்னு கொஞ்சம் தண்ணியும், அரிசியும் வச்சிருவாங்க’. நாட்டார் கதைகளில் இதுவொரு சித்திரவதையாக விவரிக்கப்படும். கொடுமைக்கார சித்தி, மூத்த தாரத்து பெண்ணுக்கு ஊமச்சிக் கூட்டில் (நத்தைக்கூடு) தண்ணியும், உசிலை இலையில் சோறும் கொடுப்பாள். உசிலை மரத்து இலையில் ஒரு பருக்கை கூட வைக்க முடியாது. அவ்வளவு சிறுசு.
ஓட்டனுக்குப் பிறந்த குழந்தைகள் தலையெடுத்த பின்பு தான் நாம் யாரோ அவர்கள் யாரோ என்று தோன்றும் என்பதில்லை. அல்சைமர் வந்தால், இப்பொழுதே நீங்களெல்லாம் யாரோ தான். நான் யார் என்பது மட்டும் எனக்குத் தெரியும். நான் எனக்கு, காது சரியாகக் கேட்பதில்லை, மறதியும் இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருப்பேனாய் இருக்கும். ‘நான்’ என்ற அனைத்தையும் துறந்து, பூரணத்தை அடையச் சொல்லும் பெளத்தத்திற்கும் அல்சைமருக்கும் என்ன வித்தியாசம் என்று நிறைய நேரம் யோசித்திருக்கிறேன். அல்சமைரில் எல்லாமும் மறந்து போவதில்லை; நமக்கு மறந்து விடுகிறது என்பதை அவர்கள் மறப்பதே இல்லை.
எல்லாம் சரி தான். நாம் தூங்கும் போது வருகின்ற கனவுகள் முழுக்க நமக்கு மறந்து போனால் தான் என்ன? விழிக்கிற போது, அவற்றின் வலி நிரம்பிய துண்டுகள் தானால் நமக்கு ஞாபகத்தில் இருக்க வேண்டும்?



Comments