ஜல்லிக்கட்டு பற்றி பிரபாகர் வேதமாணிக்கம்
- tdharmaraj67
- 2 days ago
- 1 min read
புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற புத்தகங்களில் ‘ஜல்லிகட்டு - கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ ஒன்றாக இருக்கிறது. 50 பக்கங்கள் கடந்திருக்கிறேன். அதற்குள்ளாகவே ஜல்லிகட்டுப் போராட்டத்தைப் பற்றிய பொதுப்புரிதலை தகர்த்துவிடக்கூடிய விவாதப்புள்ளிகளை தொட ஆரம்பிக்கிறார் நூலாசிரியர் டி.தருமராஜ்.
‘சில அரசியல் சொல்லாடல்கள் மட்டும் அப்போராட்டக் களங்களில் பேசப்பட்டன, பிற தவிர்க்கப்பட்டன? மாநில உரிமை, தமிழ் தேசியம், பசுமை அரசியல், சுதேசிய அரசியல் என்று அப்போராட்டத்தின் போது ஒலித்த சொல்லாடல்களுக்கும், திராவிட, மார்க்சிய, தலித்திய, பெண்ணிய என்று ஒலிக்காதிருந்த சொல்லாடல்களுக்கும் இன்னொரு பெருத்த வேறுபாடு இருக்கிறது. அது அக முரன்கள் தொடர்பானது. எல்லா அரசியலும் முரண்களையே கட்டமைக்கின்றன. என்றாலும், அவை அக முரன்களா புற முரண்களா என்பதில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
மாநில நலன், தமிழ் தேசியம், பசுமை பாதுகாப்பு, சுதேசியம் என்ற அத்தனை அரசியலும் மிகத் தெளிவாக தங்களது எதிரி தமிழ்ச் சமூகத்திற்கு வெளியிலிருப்பதாகச் சொல்கிறது. மாநில நலனைக் கபளீகரம் செய்யும் மத்திய அரசு, தமிழ்த் தேசியத்தை ஒடுக்கும் இந்திய தேசியம், பசுமையை அழிக்கும் அறிவியல், சுதேசியத்தை நசுக்கும் அந்நிய நிறுவனங்கள் என்று பேசும் இச்சொல்லாடல்கள் எதிரி வெளியே இருப்பதாக பாவனை செய்கின்றன. அதாவது தமிழர்களின் பொது எதிரி எப்போதும் வெளியே இருக்கிறார் என்பதுதான் செய்தி.
ஆனால் இதற்குச் சற்றும் பொருந்தாமல், திராவிட, மார்க்சிய, தலித்திய, பெண்ணிய சொல்லாடல்கள் நமது எதிரி உள்ளேயே இருப்பதாகச் சொல்கின்றன. பிராமணிய, முதலாளிய, சாதிய, ஆணாதிக்க மனோபாவங்களே தங்களது முதல் எதிரிகள் என்று இச்சொல்லாடல்கள், தமிழ்ச் சமூகத்தினுள் அகச் சீர்திருத்தங்களையே பெரிதும் கவனப்படுத்துகின்றன. எதிரி என்று தணியாக எவருமில்லை. நாம்தான் ஒருவருக்கொருவர் முரண்பட்டு நிற்கிறோம் என்பதையே இச்சொல்லாடல்கள் திரும்ப திரும்ப வலியுறுத்துகின்றன. இத்தகைய அக முரண்களை சுட்டிக்காட்டி மறுசீரமைப்பை வேண்டும் அரசியல் சொல்லாடல்களைத்தான் ஜல்லிகட்டி கிளர்ச்சி மிகச் சாமர்த்தியமாகத் தவிர்க்கிறது. அதற்கு மாற்றாக, அதுநாள் வரையில் பெரிதும் கவனிக்கப்படாதிருந்த பிற சொல்லாடல்களைக் கொண்டாட ஆரம்பிக்கிறது. ஜல்லிகட்டுக் கிளர்ச்சியின் போது பன்மை அரசியல் பேசப்பட்டது என்ற வாதத்திற்கெல்லாம் இங்கு இடமில்லை. உண்மையில் அங்கு பேசப்பட்டது ஒரே அரசியல்தான். எதிரிகள் தமிழ்ச் சமூகத்திற்கு வெளியே இருக்கிறார்கள் என்பது தவிர வேறொன்றும் இல்லை. இதற்கு மாற்றாக விலக்கப்பட்ட சொல்லாடல்களில் எதிரிகள் உள்ளேயே இருந்தனர்’
ஜல்லிகட்டு போராட்டம் பற்றிய கற்பிதங்களை கேள்விக்குள்ளாக்கும் நூலாக இருக்கும்போல் தோன்றுகிறது. கோட்பாடுகளும் புனைவும் ஆய்வும் பகடியுமான சொல்முறையால் வாசிப்பதற்கு சுவாரஸ்யமான, சவாலான நூலாக இருக்கிறது. பண்பாட்டு அரசியல், சமூக அரசியல், வெகுசனவியம் ஆகியனவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு பரிந்துரைக்கிறேமன்.(417 பக்கங்கள், விலை ரூ600, சால்ட் பதிப்பக வெளியீடு)

Comments