ஜல்லிக்கட்டு - சாக்ரடீஸ் ஸ்டூடியோ
- Apr 8
- 2 min read
பேராசிரியர் முரளியின் சாக்ரடிஸ் ஸ்டூடியோவில் வெளியான நேர்காணலைப் பார்த்து விட்டு ஏராளமான அழைப்புகள். ‘ஜல்லிக்கட்டு’ புத்தகத்தின் அடிநாதமாக விளங்கும் வெகுஜனவியம் பற்றியே அந்த ஒரு மணி நேர உரையாடலும் அமைந்திருந்தது. இன்னும் கொஞ்சம் நேரம் பேசியிருக்கலாமே என்றே பலரும் சொன்னார்கள். ஆனால், யூ ட்யூப் உரையாடல்கள் ஒரு மணி நேரத்திற்குள் இருப்பதே உத்தமம் என்றே நான் நினைக்கிறேன். பேராசிரியர் முரளியும் அந்தக் கருத்தில் உறுதியாக இருந்தார். அவருடைய காணொளிகளுக்கு ஒரு லட்சம் பார்வையாளர்கள் உறுப்பினராக இருக்கின்றனர் என்று கேள்விப்பட்ட போது மலைப்பாக இருந்தது. தத்துவம் போன்ற கனமான விஷயங்களை மட்டுமே பேசுகின்ற யூ ட்யூப் சானலுக்கு ஒரு லட்சம் உறுப்பினர்கள் என்பது பெரிய சாதனை. இதற்கு முக்கியக் காரணம், பேராசிரியர் முரளியின் திட்டமிடல். அவருக்குத் தனது பார்வையாளர்கள் யார், அவர்களின் மொழி என்ன என்பதெல்லாம் அட்சரசுத்தமாகத் தெரிந்திருக்கிறது.
அந்தக் காணொளியிலும் சரி, என்னிடம் நேரடியாகவும் சரி, பலரும் தெரிவித்த ஒரு விஷயம் ‘வெகுஜனம்’ என்ற வார்த்தை பிரயோகம் பற்றியது. வெகுமக்களியம், பெருந்திரளியம் என்றெல்லாம் பரிந்துரைகள் வந்தன. ஜனம் என்ற சொல் வேண்டாமே என்று நேரடியாகவே சிலர் கருத்து தெரிவித்தனர். ‘ஜ’ மீது தமிழர்களுக்கு இருக்கும் பயம் தெரிந்தது தான். அதனால் தான் ஜல்லிக்கட்டையே சல்லிக்கட்டு என்று எழுதுகிறவர்கள் உண்டு.

இந்த ஜ, ஷ, ஸ போன்ற எழுத்துகளைப் பயன்படுத்துவதற்கு நான் என்றைக்குமே தயங்கியது இல்லை. ஆனால் என் நண்பர்கள் பலரும் இவ் எழுத்துகளைக் கவனமாகத் தவிர்க்கிறார்கள். விஷயம் என்பதை அவர்கள் விசயம் என்று எழுதுகிறார்கள். அப்படி எழுதும் போது, விஷயத்தின் கனம் குறைந்து விடுவதாகவே எனக்குத் தோன்றும். அதே போல், ஜனம் என்பதை சனம் என்று எழுதும் போது, உயிரற்றது போலத் தோன்றும். இதே மாதிரி, உயிரற்ற பொருளை சடப்பொருள் என்று எழுதவே நான் விரும்புவேன். ‘ஜடப்பொருள்’ என்று எழுதும் போது எதுவோ உதைக்கிறது.
நாட்டார் வழக்காற்றியல் துறையில் நாட்டார் தெய்வங்கள் பற்றிய கருத்தரங்கிற்கு தலைப்பு சூட வேண்டும் என்று சொன்ன போது, ‘சனங்களின் சாமிகள்’ என்றே நான் சொன்னேன். அதுவே பின்னாளில் புத்தகமாகவும் வெளிவந்தது. ஆனால், வெகுசனம் என்று எழுதுவது காற்றைப் பிடுங்கியது போலத் தெரிகிறது. அதே மாதிரி தான் ‘சல்லிக்கட்டு’ என்று எழுதுவதும்.
ஜ, ஷ, ஸ என்ற எழுத்துக்களை தமிழில் பயன்படுத்தலாமா கூடாதா என்ற பிரச்சினையில் நான் ‘தாராளமாய் பயன்படுத்தலாம்’ கோஷ்டி. மெய்யெழுத்துகள் பதினெட்டு தானே? ஜ, ஷ வெல்லாம் ஊடுறுவல் தானே என்று சொல்கிறவர்களுக்கான பதிலையும் ‘ஜல்லிக்கட்டு’ புத்தக்த்தில் எழுதியிருக்கிறேன். பதினெட்டு என்பது ஒரு மந்திர எண். ஆதி முதல் அந்தம் வரை என்பதைப் போன்றது. எல்லாவற்றையும் உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை உடையது. மெய்யுழுத்துகளின் வடிவ ஒழுங்கு அதன் பன்மைத்துவம் மட்டுமே. பன்மை, பெருகுவது. அதனால் எத்தனை எழுத்துக்களை வேண்டுமானாலும் நீங்கள் மெய்யெழுத்து வரிசையில் சேர்த்துக் கொள்ள முடியும். அவற்றிற்கு சுயமாய் ஒலிக்கும் வசதி இல்லை என்பதால், எந்தப் பாதகமும் இல்லை. ஆனால், உயிரெழுத்துகளில் இப்படி நீங்கள் விளையாட முடியாது. அவை, பத்து என்றால் பத்து தான் (பனிரெண்டு என்று சொல்கிறவர்கள், ஜல்லிக்கட்டு புத்தகத்தை படித்து விட்டு வரவும்). அதைக் கூட்டவோ குறைக்கவோ வழியில்லை. இது தான் தமிழ் மொழியின் ஒழுங்கமைப்பு. வெளிப்பாட்டு வடிவமுடைய உயிர், நிலையானது. வெளிப்பட முடியாத உடல், மாறக்கூடியது. அதனால், பதினெட்டு மெய்யெழுத்து வரிசையில் ஜ, ஷ, ஸ போன்ற எழுத்துகளை சேர்த்துக் கொள்வதால் எந்தச் சிக்கலும் வந்து விடுவது இல்லை.
இப்படி எத்தனை எழுத்துக்களை சேர்த்தாலும், அதன் எண்ணிக்கை பதினெட்டைத் தாண்டாது என்பது தான் தமிழின் சூத்திரம். பதினெட்டு என்பது மந்திர எண். அது, நூற்றியெட்டு, ஆயிரத்தெட்டு என்று விரியுமே தவிர, பத்தொன்பதாக என்றைக்குமே மாறாது.




Comments