ஜல்லிக்கட்டு - இமாம் அத்னன் பதிவு
- Apr 8
- 2 min read
ஒரு அறிமுகக் குறிப்பு
தமிழ் மொழிப்பரப்பில் நீண்டகாலமாக சிறிதும் சளைக்காமல் கள-ஆய்வுகள், கருத்தமைவாக்கம் செய்தல், கோட்பாட்டுப் புரிதல்களுடன் மோதவிட்டுப் பார்த்தல், விமர்சனத்திற்கு உட்படுத்தல் என தனது மொழிற்செயற்பாடுகளை புத்தியிர்ப்புடன் முன்னெடுப்பவர்களில் ஒருவராகவே டி.தருமராஜைப் பார்க்கிறேன். அவருடைய ‘யாதும் காடே யாவரும் மிருகம்’ கட்டுரைத்தொடர் எனது சிந்திப்பு போக்கை திசைதிருப்பிய பிரதிகள். அவரது எழுத்தும் விமர்சனங்களும் இன்னும் fresh ஆக இருப்பதையே நண்பர்களிடம் சொல்லிக் கொள்வேன்.
கட்டவிழ்ப்பு வாசிப்பு அணுகுமுறையை நுணுக்கப்படுத்தி இன்னொரு கட்டத்திற்கு பரிணமிக்கச் செய்துபார்த்தவர். அதனையே Eggshell theory: cracking from inside என உருவகித்து அடையாளப்படுத்த முனைந்திருப்பேன். மரபார்ந்த நிறுவனங்களையும் கதையாடல்களையும் உள்ளிருந்து உடைத்துப் பரிணாமம்கொள்ளும் முறைமை அது.
அவருடைய ‘ஜல்லிக்கட்டு’ சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் நுளைந்திருக்கிறது. ஜல்லிக்கட்டு எனும் மாபெரும் சமீபகாலத் தமிழர் எழுச்சியின் சமூகவியலை, சமூக உளவியலை, இனவரவியலை பல நோக்குநிலைகளினூடாக அணுகிப் பார்த்து சிந்தனைப்புலத்திற்கு இன்னொரு perspective இனைக் கையளிக்கும் முயற்சியினை இந்த நூலில் முன்னெடுக்கிறார். வாசிக்க ஆரம்பித்துச் செல்லும் போதே இத்தகைய மனவோட்டம் மேலாடி எழுவதை கணிக்க முடிகிறது. இந்த நூலிற்காக அவர் மேற்கொண்டிருக்கும் வாசிப்புகளுக்கான உசாத்துணைகளின் எண்ணிக்கையே பிரமிக்கவைக்கிறது.
மனிதர்களைப் பற்றியதாக மாத்திரமே சமூகத்தையும் சமூகவியலையும் நோக்கும் நிலைப்பாடுகள் என்னிடம் கிடையாது. புரூனோ லத்தூர், மிஸல் ஸெர் போன்றோரின் விமர்சனங்களாலும் சிந்தனைகளாலும் உருவான நிலைப்பாடு அது. மேற்கத்தேயத்தினைப் போல் ஏனைய உயிரிகளையும் உயிரிலிகளையும் விலக்கிவைத்துவிட்டு ‘சமூக ஒப்பந்தங்களை’ ஏற்படுத்திக் கொண்ட வாழ்வியல் கீழைத்தேய நாடுகளுக்குக் கிடையாது. ஏனையவைகளும் சேர்ந்தே இங்கு சமூகமயப்பட்டிருக்கும் பிணைப்பு முடிச்சுகள் அதிகம். அதனால்தான் ஜல்லிக்கட்டை தமிழரின் சமூகவியலாகவும் சமூக உளவியலாகவும் வகைப்படுத்தலுக்கு உட்படுத்துகிறேன். தருமராஜ் இந்த நூலில் காளையை வெறும் ஒரு விலங்காகப் பார்க்காமல், அது எவ்வாறு தமிழர்களின் சமூகப் பண்பாட்டு வெளியில் ஒரு அரசியல் குறியீடாகச் செயல்படுகிறது என்பதை விரிவாகப் பேச முனைகிறார்.

மொழியும், மொழியிலான புனைவுப் பிரதிகளும் (அல்புனைவுப் பிரதிகள் என்பதும் என்னிடத்தில் புனைவுகள்தான்) சமூக நிறுவனங்களாக நோக்கப்பட வேண்டியவை. நம் சமூகக் கட்டமைப்பையும், உளவியலையும், கதையாடல்களையும், சுயங்களையும் வடிவமைப்பதில் அதிகம் பங்காற்றும் சமூக நிறுவனங்கள் அவை. இதனைப் புரிந்து கொள்வது நமக்கு சிரமமான சமாச்சாரமும் இல்லை. சாதியைக் கட்டமைத்துப் பேணுவதில் இவற்றின் பங்கு என்ன என்பது வெளிப்படையான நிதர்சனம்.
தருமராஜின் ஜல்லிக்கட்டு தமிழர்களிடம் கட்டமைந்திருக்கும் கூட்டுநனவிலி மனதைத் திறந்து காட்ட முனைகிறது. நமக்குள் மறைந்தியங்கும் பிராந்தியங்களில் நம்மை நடாத்திச் செல்கிறது. அப்படிப் பார்வையிட்டுச் செல்லும் போது நாம் மிரளும் பகுதிகளும் உண்டு. தொந்தரவுக்குள்ளாகும் பகுதிகளும் உண்டு. ஜல்லிக்கட்டு ஒரு அரசியல் எழுச்சி என்பதை விட, தமிழர்களின் கூட்டு நனவிலியில் படிந்திருந்த ஒரு சமூகப் பண்பாட்டு விசை வெளிப்பட்டது என்பதையே விளக்க முனைகிறார். அதனையே சமூக உளவியல் என்கிறேன்.
ஜல்லிகட்டை வாசிக்கத் துவங்கியிருக்கிறேன். வாசிக்க முனைகையில் அது என்னுள் மாற்றங்களை எற்படுத்தட்டும் என முரண்டுபிடிக்காமலே விட்டுவிடுகிறேன். நான் ஏற்றிருப்பவைகளைக் கொண்டு எதிர்வினையாற்றுவதும் முரணுரையாடல்களை மேற்கொண்டு மாற்றங்களை அகவயப்படுத்துவதும் அடுத்த கட்டத்திற்குரியவை. எல்லாப் பிரதிகளுக்கான வாசிப்பையும் அப்படித்தான் செய்கிறேன். அந்தக் கட்டத்திற்கு வந்ததும் ஜல்லிக்கட்டு குறித்துப் பகுதி பகுதியாக் வாசிப்பை முன்வைக்கும் எண்ணமும் உண்டு.
முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, தருமராஜின் ரைட்டிங்க் ஸ்டைல். அவர் ஒரு எகடமிக் சார்ந்தவராக இருந்தாலும், எகடமிக்குகளின் இறுக்கம் அவரது மொழிக் கையாள்கையில் சிக்கிக் கொள்வதில்லை. ஒரு துப்பறியும் நாவலை வாசித்துச் செல்லும் ஆர்வத்தை தக்கவைத்தபடி சரளமாக முன்னேறும் மொழிநடையையும் கட்டமைப்பையும் கொண்டது. தடைகளற்ற வாசிப்பிற்கான இந்த எடுத்துரைப்பு நகர்வே ஜல்லிக்கட்டு கட்டுரைகளின் பலம் எனத் தோன்றுகிறது.
ஜல்லிக்கட்டின் மீதான மற்றவர்களின் வாசிப்பு அவதானங்களையும் உள்வாங்கிக் கொள்ளவே விரும்புகிறேன்.




Comments