top of page

ஜெய்பீமில் இல்லாதிருந்த குரலுரிமை!

Updated: Aug 14, 2023



#ஜெய்பீம் நலிந்தவர்களை ஈடேற்றும் போதை!

1. தமிழர்கள் தங்களைப் புரட்சியாளர்களாக எண்ணி மயங்குகிற தருணங்கள் நிறைய உண்டு. எம்ஜியார் அரசியலில் இருந்த பொழுது, திமுக தேர்தலில் வெற்றி பெற்று விடுகிற சமயங்களில், ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு வரும் பொழுது… இந்த வரிசையில், ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை சிலாகிப்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மனிதவுரிமை மீறல் எதிர்ப்புப் போராட்டங்களின் உக்கிரமும், உண்மைத்தன்மையும், நியாயமும் அவை நிகழ்த்தப்படும் போது மட்டுமே வெளிப்படுகின்றன. பின்னாட்களில், அவற்றை ஆவணமாகவோ அல்லது புனைவாகவோ உருட்டித் திரட்டும் பொழுது, மனிதர்களற்ற மனிதவுரிமைச் சிக்கல்களாகவே அவை வேடிக்கை காட்டுகின்றன.

ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்க்கும் பொழுதும் எனக்கு இப்படித்தான் தோன்றியது - இருளர்களின் சமூகச் சிக்கல் இருக்கிறது, இருளர்கள் எங்கே சார்?

2. ‘இருளர்கள் எங்கே?’ என்ற கேள்வி கொஞ்சம் பழைய கேள்வி தான். இருளர்கள் பேசும் படைப்புகளை இருளர்களே தான் எடுக்க வேண்டும் என்றெல்லாம் நாம் அதற்குப் பதில் சொல்லி வந்திருக்கிறோம். அதாவது, எந்தவொரு படைப்பு மனதாலும் விளங்கிக் கொள்ள முடியாத புதிர் போன்றது, ‘ஏதிலிகளின் மனம்’ என்று இதற்குப் பொருள்.

ஆனால், இதையெல்லாம் கடந்து வந்து விட்டோம் என்றே நான் நினைக்கிறேன். மனம் பிறழ்ந்தவர்களின் மனதைக் கூட புனைய முடியும் என்பது தான் படைப்பாளர்களின் நம்பிக்கை. அதே நேரம், ‘ஏதிலியின் மனம்’ என்பது கடந்து செல்லும் தருணம் தானே தவிர, நிரந்தரமாய் தங்கி வாழும் இடமல்ல என்ற தெளிவும் இந்தக் கடத்தலுக்குக் காரணம்.

3. ஜெய்பீம், ஒரு சதுரங்க விளையாட்டின் உற்சாகத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. வழக்கறிஞர்களுக்கும் காவலர்களுக்குமான விளையாட்டு. இதில், நல்ல வழக்/காவ, கெட்ட வழக்/காவ, நியாய வழக்/காவ, அநியாய வழக்/காவ, விளையாட்டின் விதிகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கும் சதுரங்கக் கட்டங்களைப் போன்ற நீதிபதிகள், முன்வரிசை சிவப்புத் துண்டணிந்த போராளிகள்… என்று விதவிதமானக் கதாபாத்திரங்கள். படம் முழுவதும் சூழ்ச்சிகளும் முறியடிப்புகளுமாக அடுக்கப்பட்டுள்ளன.

இதில், இருளர்களின் சமூகப்பிரச்சினையின் இடம் என்ன என்று கேட்கலாம். சில விளையாட்டுகளில் திரட்டப்படும் நிதி, எல்லையில் போராடும் வீரர்களின் குடும்பங்களுக்கு அல்லது வெள்ள நிவாரணத்திற்கு என்றெல்லாம் சொல்லப்படுமே, அது போல, ஜெய்பீம் என்ற இந்த விளையாட்டு உருவாக்கும் கருணை, இருளர்களுக்கு.

4. இந்தக் கருணையைப் பெறும் இருளர்களும் சாதாரண இருளர்கள் அல்ல. வெள்ளந்திகள்; சூதுவாது அற்றவர்கள்; பாம்புக்கும் கருணை காட்டுகிறவர்கள்; பொய் சொல்ல அஞ்சுகிறவர்கள்; காதலும் கனிவுமானவர்கள். அதாவது, ஜெய்பீமில் சாகசம் போலச் சொல்லப்படுகிற சூழ்ச்சிகளைக் கொஞ்சமும் அறியாதவர்கள். மீறி அவர்கள், எப்பொழுதாவது, சொந்தமாக யோசித்து ஏதாவது ஒரு நல்ல பொய்யைச் சொன்னால் கூட, அதற்காகக் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். நீதி எவ்வாறு வழுவக் கூடாதோ அதே போல், ஏதிலிகளும் வழுவுதல் பிழை.

5. ஜெய்பீமில் வெளிப்படும் நியாயத்திற்கான சாகசம், வெகுஜன புரட்சிகர மனதை அப்பட்டமாக திருப்தி செய்கிறது. திரைப்படத்தின் நோக்கமும் அது தான் என்பதை நாம் உடனடியாக விளங்கிக் கொள்ள முடிகிறது. பிரச்சினையின் தீவிரம் அல்லது முரண்பாடு அல்ல; அதில் காணக்கிடைக்கும் சுவராஸ்யமே எல்லோரையும் ஈர்க்கிறது. இதைத் தான் ‘மனிதவுரிமை மீறல் எதிர்ப்புப் போராட்டங்களின் உக்கிரமும், உண்மைத்தன்மையும், நியாயமும் அவை நிகழ்த்தப்படும் போது மட்டுமே வெளிப்படுகின்றன. பின்னாட்களில், அவற்றை ஆவணமாகவோ அல்லது புனைவாகவோ உருட்டித் திரட்டும் பொழுது, மனிதர்களற்ற மனிதவுரிமைச் சிக்கல்களாகவே அவை வேடிக்கை காட்டுகின்றன’ என்று நான் சொல்கிறேன்.

6. நிகழும் போது திரளும் உண்மை, புனையும் போது தவற விடப்படுவது ஏன்? இருளர் சமூகச்சிக்கலைப் பேசும் ஜெய்பீம் மூன்று முக்கியமான தருணங்களை ஜடம் போலக் கடந்து செல்வதைக் கவனித்துப் பார்க்கலாம்: ஒன்று, எந்த நேரமும், எந்த பக்கமிருந்தும் வாழ்வின் மீதான அச்சுறுத்தல் நிகழக்கூடும் என்ற இருளர்களின் பதட்டத்தை, அனாதரவான சூழலை, பாம்பைக் கூட நம்ப முடியும் மனிதர்களை முடியாது என்ற பழங்குடி மனதை இத்திரைப்படத்தில் நீங்கள் காணமுடியாது. இரண்டு, வலுவான நிறுவன பலமுள்ள அரசு வழக்கறிஞர்களின் ஆக்ரோஷத்தின் முன், தார்மீகத்தை மட்டுமே ஆயுதமாக ஏந்திப் போராடும் கதாநாயகன் உடைந்து நொறுங்கி பின் மீண்டெழும் தருணங்களை நீங்கள் இந்தத் திரைப்படத்தில் எதிர்ப்பார்க்க வாய்ப்பில்லை. மூன்று, யாருக்காக வாதாடிக் கொண்டிருக்கிறோமோ அவர்கள் நாம் நம்புவது போல தூய்மையானவர்களா இல்லையா என்ற குழப்பமே வராத கதாநாயகன். இருளரின் மனதை மட்டுமல்ல, நியாய உணர்வுள்ள வழக்கறிஞர்களின் மனதைக் கூட ஜெய்பீமால் அணுக முடிவதில்லை.

7. இதுவொரு வழக்கறிஞர் - போலிஸ் கதை என்று சொல்வதற்கான காரணம், இதன் பாத்திர வடிவமைப்பு. வழக்கறிஞர்களிலும் காவலர்களிலும் இத்தனை வகைகள் இருந்தது போல, பேசுபொருளான இருளர்களிலும், சிவப்புத்துண்டு போராளிகளிளும் இல்லாமல் போனதற்குக் காரணம் என்ன? ஏன், காவலர்களைத் திருடர்கள் என்று பழிக்கும் இருளர்கள் படத்தில் இல்லை? ஏன், திருடும் இருளர்கள் இல்லை? ஏன், இருளர்களிலும் காவலர்களிலும் நண்பர்கள் இல்லை? மிக எளிய காரணம் தான் - பழங்குடிகள் ஏதிலிகளாக விளங்கினால் மட்டுமே, சந்துரு மாதிரியான புரட்சிகர இளைஞரக்ள் உருவாக முடியும்.

8. ‘நலிந்தவர்களைக் காப்பாற்றுகிறேன்’ என்று சொல்வது தற்கால வெகுஜன அரசியலில் காணப்படும் கொடிய போதைப்பழக்கம். மதவாதத்தின் சாந்த முகம். அதற்கு சிவப்புத்துண்டு போட்டு விடுவது தான் ஜெய்பீமில் நடக்கும் வேடிக்கை.

9. நியாய உணர்வுள்ள வழக்கறிஞரே கதாநாயகன் என்பதால் 'ஜெய்பீம்' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அம்பேத்கர் பற்றி ஒரு பழங்கதை உண்டு. 'ஏன், நீங்கள் சரிவர உறங்குவதில்லை?' என்று கேட்ட போது, 'என் மக்கள் விழிக்கவில்லை. அவர்கள் விழிக்கும் வரை என்னால் தூங்க முடியாது' என்றாராம்.


இப்பொழுதானால் அம்பேத்கரிடம் இப்படிச் சொல்லலாம்: தயவு செய்து தூங்குங்கள் பீம். உங்களது உறக்கமின்மை எங்களுக்குத் துர்க்கனவுகளைக் கொண்டு வருகின்றன!.

0 views0 comments

Comments


bottom of page