வயலட் எழுதியுள்ள ‘இதோ நம் தாய்’ என்ற நாவலை வாசித்தேன். மிகச் சிறிய நாவல். ஒரு நீண்ட கதை என்று கூட சொல்லி விட முடியும். ஆனால் அது பேச எடுத்துக் கொண்ட விஷயம் நிச்சயமாய் ஒரு நாவலைப் போன்றது.

‘இதோ நம் தாய்’ திருநங்கைகளும் மொழிபெயர்ப்புகளும் ஒன்று என்கிறது. அந்த வகையில் நாவலின் அடிப்படையான சிக்கல் - trance. Transgender and translation. உருமாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன (பால் உருமாற்றம் மற்றும் மொழி உருமாற்றம்); இவற்றின் அடிப்படை என்ன; உண்மையிலேயே இத்தகைய உருமாற்றங்கள் சாத்தியமா என்று பல்வேறு கேள்விகளை ஆனந்தி என்ற திருநங்கை கதாபாத்திரம் நாவலில் எழுப்புகிறது. காஃப்காவின் கிரகரி சாம்சா கரப்பான்பூச்சியாக உருமாறிய வலி போன்றது அல்ல இது. இது அதன் அடுத்த நிலை. சொல்லப்போனால், சாம்சா கரப்பானாக வாழப் பழகும் போது ஏற்படும் குழப்பங்களே ‘இதோ நம் தாய்’.
ஆனந்தி என்ற மொழிபெயர்ப்பாளராக பணிபுரியும் திருநங்கை தன்னையே மாபெரும் மொழிபெயர்ப்பாக நினைத்துக் கொண்டு அடையும் மனத்துயரத்தை வயலட் மிகத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். மொழிபெயர்ப்புகளுக்கென்று சொல்லிக் கொள்ளும்படியான வாழ்க்கை உண்டா என்ற அடிப்படையான கேள்வியிலேயே எல்லாமும் ஆரம்பிக்கிறது; அல்லது எல்லா கணமும் தன்னை மூல நூல் மாதிரியே இந்த சமூகம் பார்த்துக் கொண்டிருக்குமா?
தன்னைப் பெண்ணாக உணரும் ஆண், திருநங்கையாக மாற முடியும். ஆனால், அதன் தொடர்ச்சியாக அவளால் தாய்மையை வெளிப்படுத்த முடியுமா என்ற போதத்தில் ஏற்படும் குழப்பங்களே நாவலை வழிநடத்துகின்றன. திருநங்கையர் உணர்வது எதிர்பாலினக் கவர்ச்சி மட்டும் தானா அல்லது சமூகம் பெண்மைக்கு கற்பித்துள்ள தாய்மையையும் அவர்களால் உணர முடியுமா? தாய்மை என்பது பால் அடையாளம் தரக்கூடிய உணர்வா அல்லது அது எல்லா மானுடருக்கும் பொதுவான கருணையா என்ற கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு முறை, ஆனந்தி என்ற கதாபாத்திரம் பூனை, நாய், மரவட்டை என்று சின்னஞ்சிறு ஜீவராசிகளிடம் தாய்மையை செலுத்த முற்பட்டு தோற்றுப்போகும் போதும் தன் அடையாளம் மீதானக் குழப்பத்திற்குள் வந்து விழுகிறது. விழுகிற இடமோ ஆழ்கடல்!
‘தம்மபதத்திற்கான பதிப்பிக்கப்படாத மொழிபெயர்ப்பு’ ஒரு உருவகம் போல கதையெங்கும் வந்து கொண்டிருக்கிறது. எல்லா திருநங்கையரும் பதிப்பிக்கப்படாத மொழிபெயர்ப்புகளா; அதாவது, இறுதி வரை திருப்தி வராத உருமாற்றங்களா என்ற கேள்விக்கு இறுதி வரை பதில் இல்லை.
எல்லாவற்றிற்கும் மேல், இந்த உலகில் இயற்கையான (organic) ஒரே விஷயம் மனித உடல் தான், அதையே செயற்கையாக உருமாற்றிக் கொள்ளும் போது அதன் சாரத்தையே இழந்து விடுகிறாய் என்ற விளக்கத்தைக் கேள்விப்பட்டு ஆனந்தி அடையும் மனக்குழப்பம் நாவலில் சிறப்பாக வெளிபப்ட்டிருக்கிறது. இது திருநங்கையருக்கான பிரச்சினை மட்டுமில்லை, இந்த உலகில் இன்னொன்றாக மாற விரும்பும் அத்தனை பேருக்குமான சிக்கலும் இது தான்.
இந்த விவாதத்தின் நடுவில் eucharist என்ற வார்த்தைக்கான மொழிபெயர்ப்பு பற்றி சொல்லும் தகவல் மட்டுமே சிறு கீற்று போன்ற ஒளியைக் கொண்டு வருகிறது. அதை, ‘கடவுளின் திருவிருந்து’ என்று சொல்லாமல் ‘நற்கருணை’ என்றும் கூட மொழிபெயர்க்க முடிந்திருக்கிறது என்ற விஷயம், திருநங்கையருக்கும் சுயம்புவான வாழ்க்கை சாத்தியம் என்று நம்பிக்கையை கொஞ்சம் போல ஊட்டுகிறது.
இந்த வருட சென்னைப் புத்தகத் திருவிழாவில் ஏராளமான மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் கூட மொழிபெயர்ப்புகளின் ‘மொழி’ குறித்து ஒரு சச்சரவு எழுந்தது. இந்தப் பின்னணியிலும் வயலட்டின் ‘இதோ நம் தாய்’ என்ற நாவலை வாசிக்கலாம்.
תגובות