கேள்வி: வாழையில் அந்தச் சிறுவனுக்கு டீச்சர் மீது தோன்றுவது பாலியல் கவர்ச்சி இல்லையா? அவனுடைய பேச்சு, பார்வை, உருக்கம், மகிழ்ச்சி என்று அனைத்தும் சொல்வது அதைத் தானே. ஒரு கலைப்படைப்பில் இதை மறுக்க வேண்டிய அவசியம் என்ன? நேர்மையாக இருப்பது தானே கலையின் அடிப்படை.
பதில்: முதலில் இது, சிறுவயது ஞாபகங்களை அசை போடும் படம். இங்கு கதையில் சொல்லப்படாத கதாபாத்திரம் அந்த இயக்குநர். அவர், இந்தத் துயரம் நிறைந்த பிள்ளைப்பருவ நினைவைப் படமாக்கவே இத்துறைக்கு வந்தேன் என்கிறார். அதனால், இது அன்றைக்கு நடந்ததை அப்படியே காட்டும் கதையமைப்பைக் கொண்டது அல்ல. அன்றைய சம்பவங்களை நிதானமாக மீட்டுருவாக்கும் கதை.
ஏன் மீட்டுருவாக்கப்படுகிறது என்பதற்கு ஒரே ஒரு காரணம் தான். கலைஞன், அதைக் கடந்து செல்ல முயற்சிக்கிறான். தொந்திரவு செய்யும் அந்நினைவுகளிலிருந்து வெளியேறிட நினைக்கிறான். அதற்கு திரைப்படம் என்ற கலைவடிவத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறான்.
அவனைத் தொந்திரவு செய்யும் நினைவுகள் எவை என்று கேட்டால், இரண்டு - டீச்சர் மீது அவனுக்கு ஏற்பட்ட ஈர்ப்பு; 19 பேர் இறந்து கிடந்த வேளையிலும் சோற்றுக்காக பறந்தது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும், ‘அன்றைக்கு, இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக நடந்திருக்கலாமே!’ என்று தோன்றுமில்லையா, அப்படியான சம்பவங்கள் இவை. ஒவ்வொரு முறை நினைத்துப் பார்க்கையிலும், தலை தானாகவே சிலுப்பி நம்மையே நொந்து கொள்ளும் அளவிற்கான மடத்தனங்கள். அதை மாற்றியமைக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற நப்பாசை எல்லோருக்கும் உண்டு. நம்மை நினைத்து நாமே அவமானம் கொள்ளும் தருணங்கள் அவை என்பதால் அதைக் கடந்து விட முயற்சிக்கிறோம். நம் மனப்பிளவிற்கான காரணங்களும் இவை தான்.
சிவனணைந்தானின் இரண்டு துர் நினைவுகளும், சமூக விழுமியங்களுக்கு எதிரானவை. மனிதத்தன்மையற்ற செயல்கள். அதனால் பெருகும் குற்றவுணர்விலிருந்து விடுதலை உண்டா என்பது தான் கலைஞனின் தேடல். கலை ஒரு பற்றுக்கோடாகத் தெரிகிறது. அப்பொழுதும் அவன் அதிலிருந்து வெளியேறுவதற்கான வாயில்களையே தேடிக் கொண்டிருக்கிறான். இதையே நான் மனப்பிளவு பகுப்பாய்வியல் என்று சொல்கிறேன்.
கலைப்படைப்பு யதார்த்ததைப் பிரதிபலிக்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதுவே கலையின் நேர்மை என்றும் நம்புகிறீர்கள். ஆனால், உண்மையில் எந்தக் கலைப் படைப்பாலும் யதார்த்ததின் அருகில் கூட செல்ல முடியாது என்பதே நிஜம். கலைப்படைப்பு என்று மட்டுமல்ல, யாராலும் எப்பொழுதும் யதார்த்தத்தை நெருங்க முடிவதில்லை. ஏனெனில் அதை நெருங்க முடியாத அளவிற்கு நாம் விலகி வந்து விட்டோம் என்பதே உண்மை. ஒரு சின்ன விஷயத்தை யோசித்துப் பாருங்கள். டீச்சரிடமிருந்து எழும் மணம் பிடிக்கிறது என்பதற்காக அவரது அருகில் இருக்க விரும்பும் சிறுவன், திரைப்படங்கள் சொல்லித் தந்த அறிவின் படி ‘இது காதல்’ என்று பிடிவாதமாக நம்ப ஆரம்பிப்பதில் எது யதார்த்தம்? எது புனைவு?
ஃப்ராய்டின் உளப்பகுப்பாய்வியல் அதைக் கவர்ச்சி என்றே நம்பச் சொல்கிறது. சமூக விழுமியங்களும், திரைப்படம் போன்ற கலைப்படைப்புகளும் கூட அதைக் கவர்ச்சி என்றே சத்தியம் செய்கின்றன. அப்படிச் சொல்வதோடு நிற்காமல், அதற்கான குற்றவுணர்வு எங்கே என்று நம்மைப் பார்வையால் துளைக்கின்றன. அறம், ஒழுக்கம், சமயம், கலை, உளவியல் என்று சகலமும் என்னைக் காமக்கொடூரன் என்று சொல்வதோடு, அதை நானும் நம்ப வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கின்றன. ஃப்ராய்டும், லெக்கனும் பண்பாட்டின் மீதும், ஒழுக்கவிதிகளின் மீதும் சாட்டிய குற்றங்களையே உளப்பகுப்பாய்வியலும் செய்வது உங்களுக்கு விளங்குகிறதா? பண்பாடும் சமூகமும் எவ்வாறு மன நோயாளிகளை உருவாக்குகின்றனவோ அதே போலத்தான் உளவியலும் தனக்கான நோயாளிகளை உருவாக்குகின்றது. டீச்சரிடமிருந்து எழும் நறுமணத்திற்கு மயங்கிய என்னை, உளவியல், ஈடிப்பஸ் சிக்கல் கொண்ட நபராக சித்தரிக்க ஆரம்பிக்கிறது.
சமூகமும், அறிவியலும் உருவாக்கிய இந்நோய்த்தொற்றிலிருந்து என்னை நான் வெளியேற்றிக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு, அவர்கள் உருவாக்கும் உண்மைகளுக்குப் புறம்பான உண்மைகளை நான் உருவாக்கியாக வேண்டும். மாரி செல்வராஜ் வாழை திரைபடத்தில் இந்தக் காரியத்தையே செய்கிறார். டீச்சர் மீதான ஈர்ப்பின் முழுமுதற் காரணமும் அந்த நறுமணம் தான் என்று அவரால் நிரூபிக்க முடிகிறது. அதே போல், அன்றைய தினம் அச்சிறுவன் சாப்பாடு இல்லாமல் பலமுறை துரத்தப்படுகிறான். அதனால் எல்லாவற்றையும் விட ஒரு வாய் சோறே அவனுக்குப் பிரதானமாகத் தெரிகிறது. அந்த நிகழ்விற்கு அதற்கு மேல் எந்த அர்த்தமும் இல்லை.
சமூகமும் உளவியலும் சொல்வது போல், அச்சிறுவன் காமத்தாலும் சுயநலத்தாலும் நிரம்பிய ஒருவன் இல்லை. அவனையொத்த பலரும் பொறுப்பாக இருக்கும் போது, காமத்தைத் தேடி அலையும் பிசாசு இல்லை அவன். ஊரில் அத்தனை பெரிய சோகம் நிகழ்ந்திருக்கையில், வயிற்றுப்பசியே பிரதானம் என்று நினைக்கும் மிருகம் அல்ல அவன். ஆல்பர்ட் கேமுவின் அந்நியனில் மெர்சோ சொல்வது போல, ‘ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டதற்கு தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை; சூரிய ஒளி என்னை அதிகம் துன்புறுத்தியது, அவ்வளவு தான்’. சிவனணைந்தான் கதையில் நறுமணமும், பசியும்; அவ்வளவு தான்.
ஒவ்வொரு முறை, டீச்சர் மீதான ஈர்ப்பு பாலியல் தானே என்று கேட்கும் போது, அச்சிறுவனைக் கொடூரன் என்றே தீர்ப்பிட விரும்புகிறீர்கள் என்பது உங்களுக்கு விளங்குகிறதா?
Comments