top of page

வாரிசு அரசியலுக்கும் பாசிசத்திற்கும் என்ன வித்தியாசம்?

உயிர்மை’யில் வெளிவந்திருக்கும் ராஜன் குறையின் கட்டுரை நமக்கு இரண்டு சாத்தியங்களே உள்ளதாகச் சொல்கிறது. ஒன்று, வெகுஜன இறையாண்மை; இன்னொன்று, பாசிசம். இவ்விரண்டில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுப்பதே அரசியல் யதார்த்தம் என்று நம் கழுத்தில் கத்தியையும் வைக்கிறது.

உதறுது தானே? அதைத் தான் அந்தக் கட்டுரையும் விரும்புகிறது. ‘இந்தக் கட்டுரை யாருக்காக எழுதப்படுகிறது?’ என்ற கேள்வியில் நாம் ஆரம்பிக்கலாம். நிச்சயமாய் இது வெகுஜனங்களுக்கோ அல்லது பாசிச சிந்தனை கொண்டவர்களுக்கோ எழுதப்பட்டது அல்ல. கட்டுரை நெடுக, ‘கற்பிதங்களில் மூழ்கியிருப்பவர்கள்’, ‘பித்தர்கள்’, ‘பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்’ என்றெல்லாம் நக்கலடிக்கப்படும் சுதந்திரவாத சிந்தனையாளர்களை நோக்கித் தான் அது பேசிக் கொண்டிருக்கிறது.

* வெகுஜன இறையாண்மையின் நியாயத்தை ராஜன், எர்னஸ்டோ லாக்லவ்வின் ‘காலிக்குறிப்பான்’ என்ற கருத்தாக்கம் கொண்டு விளக்குகிறார். அது மிகச் சரியானதும் கூட. மக்களாட்சி என்ற கற்பனையும் கூட இதையே தான் ஆதரிக்கவும் செய்கிறது. ஏதாவதொரு புள்ளியில் அல்லது சில புள்ளிகளில் தான் தலைமை தேங்கி நிற்க முடியும் என்பதில் சுதந்திர வாத சிந்தனையாளர்களுக்கும் எந்தக் குழப்பமும் இருக்கவில்லை. இதற்காக ராஜன் மானிடவியல் தரவுகளைக் காட்டியிருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. பழங்குடி இனங்கள் மட்டுமல்ல, வளர்ந்த நாகரீக சமூகங்களே கூட இத்தகைய நிறுவனக் கட்டமைப்பை மீறி யோசிக்க முடிவது இல்லை. ஆனால், இந்தக் காலிக்குறிப்பானை வாரிசு அரசியலுக்கும் நகர்த்தும் பொழுது தான் சிக்கலே தோன்றுகிறது. அதற்கு காலிக்குறிப்பான் குறித்து சில அடிப்படையான விஷயங்களை நாம் அறிந்திருப்பது நலம். காலிக்குறிப்பான் என்ற கருத்தை லாக்லவ், சசூர் மற்றும் லெக்கனின் மொழியியல் சிந்தனைகளிலிருந்து பெற்றுக் கொள்கிறார். குறிப்பானுக்கும் குறிப்பீட்டிற்கும் இடையே நிலவும் சந்தேகத்திற்கிடமான உறவை சசூர் குறிப்பிட, அதை வளர்த்தெடுக்கும் லெக்கன், குறிப்பானுக்கும் குறிப்பீட்டிற்குமான பிணைப்பை விடவும், சக குறிப்பான்களுக்கு இடையிலான உறவு நெருக்கமானது என்று தெரிவித்தார். அதாவது, உள்ளடக்கத்தின் வடிவங்கள் தங்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கின்றன. இந்தப் பிணைப்பை, அக்கூட்டத்திலுள்ள ஏதோவொரு குறிப்பான் தன்னை முற்றிலுமாக குறிப்பீட்டிலிருந்து விலக்கிக் கொள்வதன் மூலம் சாத்தியப்படுத்துகிறது. ஒரு மூலைக்கல்லைப் போல. point de capiton என்கிறார் லெக்கன். இந்த point de capiton க்கு இன்னொரு பெயராக தலைமைக் குறிப்பான் என்பதையும் தெரிவிக்கிறார். கவனத்தில் கொள்ளுங்கள், தலைமைக் குறிப்பான் தன்னை முழுமையாக வெறுமையாக்கிக் கொள்ள வேண்டும்! லெக்கனின் இந்த விஷயத்தை, அலெய்ன் பாத்யோ கணிதவியல் கொண்டும் நிரூபித்திருக்கிறார். கணச்சூத்திரம் அவருக்கு இந்த வசதியைச் செய்து தந்தது. ஒவ்வொரு கணத்திலும், அக்கணத்தை கணமாகச் சித்தரிப்பது அதனுள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் வெற்றுக்கணம் தான் என்பது கணச்சூத்திரம். கணமாகத் திரளுகிற எந்தவொன்றுக்குமான விதியும் இது தான். இந்தக் கணிதச்சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே பாத்யோ ‘கணிதம் ஒரு மெய்ப்பொருளியல்’ என்ற அளவுக்கு அதனை விரித்துச் செல்கிறார். லெக்கன் சொல்லும் point de capiton அல்லது பாத்யோ சொல்லும் காலிக்கணம் அல்லது லாக்லவ் உருவாக்கும் காலிக்குறிப்பான், மூன்றுமே வெகுஜனம் என்றில்லை எந்தவொரு தொகுதியும் எவ்வாறு உருவாக முடியும் என்பதையே நமக்குக் காட்டித் தருகிறது. தெலியூஸ் குறிப்பிடும் ‘சிந்தனையின் வடிவத்தை’ இதனோடு குழப்பிக் கொள்ள வேண்டாம். அது, மொழியையும் கடந்து செல்கிற பாய்ச்சல். அதாவது, பொருள்கோளியலை மட்டுமல்ல, மெய்ப்பொருளியலை மட்டுமல்ல அதனையும் தாண்டிச் செல்கிற யோசனை. அதனை வேறொரு சந்தர்ப்பத்தில் பேசலாம். இங்கு, நமது பிரச்சினை லாக்லவ் சொல்லும் காலிக்குறிப்பான், லெக்கன் சொல்லும் தலைமைக் குறிப்பான், பாத்யோ சொல்லும் வெற்றுக் கணம், மூன்றும் தான். காலிக்குறிப்பான் குறித்து விவாதிக்கும் லாக்லவ்வும் மெளவ்வும் இன்னுமிரண்டு விஷயங்களைப் பேசுகிறார்கள். காலிக்குறிப்பான் காலியாக இருப்பதாலும், அதனோடு அதிகாரம் பிணைக்கப்பட்டிருப்பதாலும் அக்காலிக்குறிப்பானை ஆக்கிரமிப்பதற்கு எப்பொழுதும் போட்டி நிலவிக் கொண்டிருக்கிறது. அதாவது, அந்த அதிகாரத்தை நிரந்தரமாய் கைப்பற்றுவதற்கான போட்டி. இதில் சிக்கல் என்ன என்றால், அந்த காலிக்குறிப்பானை ஆக்கிரமிப்பது என்றால் நிரப்புவது என்றே அர்த்தம். அப்படி நிரம்பி விட்டால், அது மேற்கொண்டு காலிக்குறிப்பானாக தொடர முடியாமல் போகும். எனவே, ஆக்கிரமித்தும் பலனில்லை. ஆனால், அதிகாரத்தைத் தக்க வைக்க ஆக்கிரமிக்கவும் வேண்டும். இந்த நிலையாமையே, காலிக்குறிப்பானை காலியாகவும் வைத்திருக்கிறது. அதற்கானப் போட்டியை உயிரோடும் வைத்திருக்கிறது. ஒரு தொகுதி, தொகுதியாக இயங்குவதற்குக் காலிக்குறிப்பான் காலியாக இருப்பது அவசியம். அதை நிரப்புவதற்கு போட்டிகள் இருப்பதும் அவசியம். ஒரு சமூகத்தின் பல்வேறு காரணிகளும் அக்காலிக்குறிப்பானை நிரப்பும் போட்டியில் பங்கு கொள்வதும், அதற்காக பிற காரணிகளோடு முரண்டுவதுமே லாக்லவ்விற்கு முக்கியமாகத் தெரிகிறது. இந்த முரணையே அவர் புரட்சிகர ஜனநாயகத்தின் அஸ்திவாரமாகப் பார்க்கிறார். லாக்லவ் மற்றும் மெளவ் குறிப்பிடும் இன்னொரு விஷயம் ‘தற்செயல்’. காலிக்குறிப்பானை எந்தவொரு காரணி ஆக்கிரமிக்கிறது என்பது தற்செயலானதாக இருக்கும் வரையில் மட்டுமே அது காலிக்குறிப்பானாக இருக்க முடியும். என்றைக்கு, இந்தத் தற்செயல் தீர்மானிக்கப்பட்டதாக மாறுகிறதோ அன்றைக்கு ஜனநாயக சமூகம் பாசிசத்தை நோக்கி நடைபோடத் தொடங்கி விடுகிறது என்று அர்த்தம். இனி, நாம் நமது பிரச்சினைக்கு வரலாம். ஒற்றை அதிகாரம் மட்டுமே வெகுஜன இறையாண்மை என்பதில் நமக்கு ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அந்த ஒற்றை எது என்பதை முரண்களுக்குப் பின் தற்செயலாய் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதே வெகுஜன இறையாண்மையின் அடிப்படை. முரண்களற்ற, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வாரிசுகள் தலைமையை ஆக்கிரமிக்கும் குணம் வெகுஜன இறையாண்மைக்கு எதிரானது என்பதை ராஜன் நன்றாகவே அறிவார் என்று நினைக்கிறேன். இந்த நேரம், வாரிசு அரசியல் என்பது நமக்கு புதியது அல்ல என்பதையும் உணரவேண்டும். இந்திய சாதி சமூகம், வெகுஜன இறையாண்மையைக் கொன்ற சமூகம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். காலிக்குறிப்பான் காலியாக இருப்பதாகவும் தோன்ற வேண்டும் ஆனால், அதே நேரம் அதை தன்னந்தனியே ஆக்கிரமித்துக் கொள்ளவும் வேண்டும் என்பதிலிருந்து சாதிய மனோபாவம் தோன்றுகிறது. இந்தியாவில் இதை வெற்றிகரமாகச் செய்தவர்கள் பிராமணர்கள் என்பதும் (அதாவது, அவர்களே முதலில் பிராமணம் என்ற காலிக்குறிப்பானை ஆக்கிரமித்தார்கள்), அதன் நீட்சியாக பிறர் அனைவரும் தங்களை தனித்தனி துண்டுச் சாதிகளாக உணர்ந்தனர் என்பதையும், இந்த பிராமண முன்னெடுப்பை, அதாவது அவர்களது காலிக்குறிப்பான் ஆக்கிரமிப்பை எதிர்த்தே திராவிட இயக்கம் செயல்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். விந்துவின் மூலம் தீர்மானிக்கப்படுவதல்ல அதிகாரம் என்பதே திராவிடத்தின் ‘பிராமண எதிர்ப்பு’ என்பதை விளங்கிக் கொண்டால், வாரிசு அரசியல் உருவாக்கும் சீர்கேட்டை நம்மால் உணர முடியும். இது காங்கிரஸூக்கு வேண்டுமானால் எந்தவித சங்கடத்தையும் உருவாக்காமல் இருக்கலாம். ஆனால், திராவிட முன்னேற்ற கழகம் இதைச் செய்வது திராவிட சிந்தனைகளிலிருந்து முற்றிலுமாய் தன்னை விலக்கிக் கொள்வது ஆகும். சாதி எதிர்ப்பில் ஊறிப் போயிருக்கும் தமிழகத்தில் திமுக வீழப்போகிற படுகுழி இது. (இந்த விஷயத்தைக் குறித்து மேலும் விரிவாகப் பேச நான் விரும்பவில்லை. விரைவில் வெளியாகவிருக்கும் அயோத்திதாசர் பற்றிய எனது நூலில் இதை முழுமையாக எழுதியிருக்கிறேன்.) வெகுஜன இறையாண்மையை தந்திரமாக வீழ்த்தும் யுக்தியே சாதியம் என்ற திசையில் யோசித்துப் பாருங்கள். காலிக்குறிப்பான்களை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட சக்திகள் மூலம் நிரந்தரமாய் நிரப்பி விடுவதும், ஆனால், அவ்வாறு செய்வதை தற்செயல் என்றும் நம்ப வைப்பதே சாதியத்தின் வெற்றி. வாரிசு அரசியல் என்பது அந்த வகையில் வெகுஜன இறையாண்மையின் சாதிய வடிவம். இதற்கும் பாசிசத்திற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை.2 views0 comments

Comments


bottom of page