top of page

விடுதலை - 2 ம் A சான்றிதழும்

விடுதலை - 2 பெரும் மனப்பாரத்தை இறக்கி வைத்திருக்கிறது. 1970, 80களில் தமிழகத்தில் செயல்பட்ட ஆயுதந்தாங்கிய போராளிகளின் கதைகள் வெகுஜனங்களுக்கு சொல்லப்படவில்லை என்பதே அந்த பாரம். இது தமிழகப் போராளிகளுக்கு மட்டுமல்ல. உலகின் அத்தனை போராளிக் குழுக்களுக்கும் இதுவே தலைவிதி. அவர்களின் குரல்கள் கேட்கப்படவேயில்லை. சொல்லப்பட்டதனைத்தும் அரசாண்மையின் கதைகளே. அக்கதைகளும் ஒரே மாதிரியானவை. அதன் படி, எல்லாப் போராளிகளும் தீவிரவாதிகளே!





இது விஷயமாய் போராளிகள் குறித்தும் - அவர்கள் மக்களுடன் உரையாடுவதில்லை என்றொரு - மனத்தாங்கல் உண்டு. இது அவர்கள் மீதான விமர்சனமும் கூட. அரசாண்மையோடு பொருதுவதற்கு ஆயுத மொழியைக் கைகொண்டவர்கள், மக்களிடம் பேசும் வழக்கத்தை மறந்து போனார்கள்!

மக்களுக்காகப் போராடுகிறவர்கள், அம்மக்களின் ஆதரவைப் பொருட்படுத்துவது இல்லை என்பது இதன் உட்பொருள். மக்களுக்காகவே போராடுகிறோம் எனும் போது, அவர்கள் ஆதரவுக்குத் தனியாக மெனக்கிட வேண்டுமா என்பது அவர்களின் யோசனை. இன்னொரு வகையில், கைகொண்ட லட்சியமும், தத்துவமுமே அவர்களை இயக்குகிறது. அதன் படி, மக்களும் கூட புதிதாய் உருவாக்கப்பட வேண்டியவர்கள் தான். எவ்வாறு புதிய சமத்துவ உலகை உருவாக்க வேண்டுமோ அதே போல, அதற்கான மக்களையும் உருவாக்க வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதனால், இன்றைக்கு நமக்குப் பார்க்கக் கிடைக்கிற மக்களை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.


இந்த விஷயத்தில் அரசாண்மை சகுனியைப் போன்றது. அது ஆயுதங்களால் மட்டுமே போராளிகளை அழித்தொழிப்பதில்லை; அபிப்பிராயங்களாலும் கொல்கிறது. தொடர்ச்சியாக அவதூறுக் கதைகளைப் பரப்புவதில் கவனமாக இருக்கிறது. அக்கதைகள், மொழி, சமயம், சாதி, வல்லரசு போன்ற பிற்போக்கான உணர்வுகளோடு பின்னப்படும் பொழுது, போராளிகளின் லட்சியங்களும் தத்துவங்களும் வலுவற்று தோற்கின்றன என்பதே வரலாறு.

The Island of the day before ல் ‘உயிர் வாழ விரும்பினால், நீயும் கதைகளைச் சொல்ல வேண்டும்’ என்று உம்பர்ட்டோ ஈகோ எழுதுவது தான் இதன் அடிநாதம். போராளிகளின் நியாயங்கள் அரங்கேறும் போதே கதையாடல் யுத்தம் சமநிலையை அடைகிறது என்பதே பலரின் வாதமும். இது நாள் வரையில் அரசாண்மை மட்டுமே கதை சொல்லி வந்த சூழலில் மாற்றுக் கலை வடிவங்கள் அதன் எதிர்த்தரப்பையும் பேச வைக்கின்றன என்பது உண்மை.


விடுதலை -2 ல் படம் நெடுக போராளிகளுக்கும் அரசுக்கும் துப்பாக்கி சண்டை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கெல்லாம் அப்பால் இன்னொன்றும் நடந்து கொண்டிருக்கிறது. அது, கதையாடல் யுத்தம். ஒரு பக்கம் அரசு இயந்திரம், ஒவ்வொரு கணமும் மாறும் சூழலுக்கேற்ப கதைகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. தங்களது பாதுகாவலையும் மீறி இதழியலாளர்கள் இன்னொரு கதையை உருவாக்க முயலும் போது அரசாண்மை அதை பலங்கொண்டு தாக்கி அழிக்கிறது.


வழக்கமான இத்தகைய அரசு இயந்திர - இதழியல் முரணை மீறி, வெற்றிமாறன் இன்னொரு புனைவுச் சுதந்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிப்பதே விடுதலை -2. அவர், போராளிகள் தங்கள் தரப்பு நியாயத்தைப் பேசும் தருணங்களை அந்த அடர்ந்த காட்டிற்குள் அமைத்துத் தர ஆரம்பிக்கிறார். பெருமாள் வாத்தியார் என்ற கதாபாத்திரம் இயக்குநர் தரும் அத்தனை வாய்ப்புகளையும் தனது கதைகளால் நிரப்ப ஆரம்பிக்கிறது. எல்லா சம்பவங்களுக்கும் இன்னொரு பக்கம் சாத்தியம் என்பதே படத்தின் ஆதாரம்.


போராளி கதை சொல்ல ஆரம்பித்ததும், அரசாண்மையின் ஏவலர்கள் கூட தடுமாற ஆரம்பிக்கிறார்கள். அந்தத் தடுமாற்றத்தின் விளைவே ஒட்டுமொத்த திரைப்படத்தின் பின்னும் ஒலித்துக் கொண்டிருக்கும் குமரேசன் என்ற காவலர் எழுதியக் கடிதத்தின் வரிகள். நக்சல்பாரிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் வன்முறையாளர்கள் என்றும் அழித்தொழிக்கப்பட்ட போராளிகளின் நியாயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக துலங்கும் பொழுது, அவர்களுக்கு எதிர்திசையில் நின்றிருந்த மக்கள் கூட கருணையோடு பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

வாத்தியார் என்ற அந்தப் போராளி தன் இறுதி தருணங்களில் சொல்லிச் செல்வதும் அது தான். நாம் நமது போராட்டத்தில் மக்களை இழந்து விட்டோம் என்ற அவரின் வார்த்தைகள் நிச்சயமாய் வலி நிரம்பியவை. விடுதலை -2 ன் மூலமாக வெற்றிமாறன், அத்தகைய தோற்றுப்போன போராளிகளின் கதைகளை மக்கள் மத்தியில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இப்படத்தில் சொல்லப்படும் நியாயங்களை உள்வாங்கிக் கொள்ளும் வெகுஜனங்களைப் பார்க்கும் போது ஒரு மாதிரி சிலிர்க்கிறது தான்.


ஆனால், மக்கள் அவ்வளவு நல்லவர்கள் இல்லை என்பது ஊருக்கே தெரியும். இன்றைக்கும் அவர்கள் கைகளில் ஒரு தமிழரசன் கிடைத்தால் அவர்களால் உடனடியாகக் கொன்றுவிட முடியும். அரசாண்மையை எதிர்க்கிறேன் என்று யாராவது கிளம்புகிறார்கள் என்றால் தேசியவாதத்தின் பெயரால் அதனை முளையிலேயே கிள்ளி எறிவதே அவர்களது அனிச்சை செயலாக இருக்கும். அவர்களுக்குப் போராளிகள் இறந்த பின்பு அவர்களைக் கதையாகக் கேட்பது பிடிக்குமேயொழிய நிஜத்தில் அப்படியொருவர் பேசுவதையும் செயல்படுவதையும் ஜீரணிக்க முடிவதில்லை. அரசாண்மை, ‘அர்பன் நக்சல்’ என்று சொல்லி யாரை வேண்டுமானாலும் இன்றைக்கும் கொலை செய்ய முடியும். அதை தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.


அப்படியானால், போராளிகள் என்ன தான் செய்ய வேண்டும்? அரசாண்மையோடு சரிக்கும் சமமாய் கதையாடல் யுத்தத்தில் கலந்து கொள்வதால் எந்தப் பயனும் இல்லையா என்றால், இல்லை என்பதே என் பதில். அரசாண்மையை கதையாடல்கள் மூலமாக எதிர்கொள்ள முடியாது என்பது தெளிவான உண்மை. ஏனெனில் கதைகளை உற்பத்தி செய்யும் அத்தனை தளவாடங்களையும் அரசாண்மை தன் கட்டுப்பாட்டிற்குள் தான் வைத்திருக்கிறது.


ஒரு உதாரணத்திற்கு, விடுதலை -2 படத்திற்கு வழங்கப்பட்ட ‘Adult’ சான்றிதழின் பின்னணியை யோசித்துப் பாருங்கள். ஏதோ இந்தப் படத்திற்கு தான் அந்த வயதுவந்தோர் சான்றிதழ் வழங்கப்பட்டது போல அத்தனை செய்திப் பரவல்கள். திரை அரங்கங்களில் கல்லூரி மாணவ மாணவியரிடம் கூட வயது சான்றிதழைக் காட்டும் படிக் கேட்டதை நான் பார்த்தேன். இந்தப் படத்தில் பேசப்படும் அல்லது காட்டப்படும் விஷயங்கள் வெகுஜனங்களுக்கு அல்ல என்ற செய்தியை அரசாண்மை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்ப்பதனால் மக்கள் அனைவரும் புரட்சிக்கு ஆதரவாக மாறப்போகிறார்கள் என்று அரசு நம்பவில்ல என்றாலும், அப்படியொரு எண்ணம் கூட தோன்றி விடாத படிக்கு அது சுதாரிப்பாகவே இருக்கிறது. எனவே, பிரச்சாரம் மூலமாக அரசாண்மையை எதிர்க்க முடியும் என்பது கானல் நீர்.

ஆனால், போராளிகள் விஷயத்தில் மட்டுமல்ல, தனக்கு அச்சம் தரும் எந்த விஷயத்திலும் அரசாண்மை கடைபிடிக்கும் மிக அடிப்படையான விதியொன்றை நாம் கேள்வி கேட்க ஆரம்பிக்கலாம். அது, மக்களில் யார் உயிர் வாழ வேண்டும் யார் சாக வேண்டும் என்று தீர்மானிக்கும் அரசாண்மையின் அதிகாரம். ஃபூக்கோவின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், உயிர் அரசியல். தான் அச்சுறுத்தலாக நினைக்கும் அனைவருக்கும் மரணத்தை வழங்கும் அரசின் எதேச்சதிகாரத்தைக் கேள்வி கேட்பது மட்டுமே அரசாண்மையை நடுங்கச் செய்யும். அதை நோக்கி நகராத வரை, மக்களை அதை நோக்கி திசைதிருப்பாத வரை, எல்லா போராளிகளும் தீவிரவாதிகள் என்றே கொல்லப்படுவார்கள்.

44 views0 comments

Recent Posts

See All

வாழையின் டீச்சர் அத்தியாயம் பாலியல் தானே!

கேள்வி: வாழையில் அந்தச் சிறுவனுக்கு டீச்சர் மீது தோன்றுவது பாலியல் கவர்ச்சி இல்லையா? அவனுடைய பேச்சு, பார்வை, உருக்கம், மகிழ்ச்சி என்று...

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page