விஜய்காந்த், ஒரு வெற்றிகரமான ‘இவருக்குப் பதில் இவராக’ வாழ்ந்து முடித்திருக்கிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது.
ரஜினிகாந்த் கிடைக்காத நிறைய தயாரிப்பாளர்களுக்கு ஒரு நல்ல மாற்றாக இருந்தார். இதனால், ரஜினியைப் போலவே கோமாளித்தனத்தையும் கோபத்தையும் காட்டும் கதாபாத்திரங்கள் அவருக்கு வாய்த்தன.
எம்ஜியார் இல்லாத காலத்தில் கறுப்பு எம்ஜியாராக வலம் வர ஆரம்பித்தார். வந்தவருக்கெல்லாம் சோறு போட்ட வள்ளல் என்ற பிம்பம் இப்படித்தான் அவருக்கு உருவாக்கப்பட்டது. எம்ஜியாரும் கறுப்பு எம்ஜியாரும் அள்ளி அள்ளி வழங்கியும் தீர்க்க முடியாத பசியோடே தமிழர்கள் இருந்தார்கள் என்பது தான் இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் வரலாற்றுத் தகவல்.
விடுதலைப்புலிகளின் ‘கேப்டன்’ பிரபாகரனை வெளிப்படையாக ஆதரிக்க முடியாத சூழல் வந்த போது, தமிழ்த் திரைத்துறையினருக்குக் கிடைத்த ‘இவருக்குப் பதில் இவர்’ தான் கேப்டன் விஜய்காந்த். ‘விடுதலைப்புலி’ பிரபாகரன் தமிழ்த் திரைப்பட சங்கத் தலைவராக இருந்தால் என்னென்ன சாதித்திருப்பாரோ அதையெல்லாம் விஜய்காந்தும் செய்து காட்டினார்.
அரசியலிலோ இன்னும் மோசம். கலைஞர் கருணாநிதி தலைமையில் அமைந்த கூட்டணியில் திருப்தியில்லாத சிறுசிறு கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணி அமைத்த போது ‘கலைஞருக்குப் பதில் கிடைத்த முதல்வர் வேட்பாளர்’ புரட்சிக்கலைஞர் விஜய்காந்த்! அவர் கடைசி வரை தான் யாரென்று வெளிப்படையாக சொன்னதில்லை. அது அவசியமும் இல்லை. அவர் ஒரு ‘இவருக்குப் பதில் இவர்’ என்பதே போதுமானது.
Comments