நடிகர் விஜய், அதிகனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெல்லையிலும் தூத்துக்குடியிலும் நிவாரண உதவிகள் வழங்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தான் ஒரு வள்ளலைத் தொலைத்துத் தலைமுழுகியிருக்கிறோம். விஜய்யும் இன்னொரு வள்ளலாக உருவெடுப்பாரா என்று தெரியவில்லை. ஆமாம், என்றால் நமக்குத் தான் ஐயோ கேடு!
ஏனெனில், ஜனநாயக அமைப்பில் வள்ளல் என்றால் ஊழல் என்று அர்த்தம். மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இல்லாத வாழ்க்கையையே ஜனநாயகம் தனது முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. அதாவது, பொத்தாம் பொதுவாய் சொன்னால் ‘எல்லோரும் சமம்!’. வள்ளல்களின் உலகிலோ எல்லோரும் சமம் என்பது கேலிப்பொருள். அங்கே, ஒரு சில கொடையாளர்களும், ஏராளமானப் பிச்சைக்காரர்களுமே வாழ்ந்து வருகின்றனர்.
நமது ஜனநாயக அமைப்பில், இந்தக் கேட்டை ஆரம்பித்து வைத்தவர் வள்ளல் எம்ஜியார். ராமாபுரம் தோட்டம் பற்றி சொல்லப்படும் கதைகள் தான் இதன் ஆரம்பம். அங்கே அவியாத அடுப்புகள் இருந்தன என்றும், வந்தவரெல்லாம் வயிராற உண்டு சென்றனர் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்புறம் ஏன், தமிழகத்தின் பல ஊர்களிலும் அனாதரவான பிச்சைக்காரர்கள் தெருத்தெருவாய் உணவுக்கு அழைகிறார்கள் என்று தோன்றும். பேசாமல், எல்லோரையும் ராமபுரம் தோட்டத்திற்குப் பஸ் ஏற்றி அனுப்பி வைத்தால ஒட்டுமொத்தப் பசியும் தீர்ந்து விடாதா என்ன?
அடுத்து வந்த கறுப்பு எம்ஜியாரின் கதை இன்னும் மோசம். அவர் வள்ளலாக மட்டும் உருப்பெறவில்லை, சுயமரியாதைக்காரராகவும் சித்தரிக்கப்பட்டார். நிறத்தாலும், உருவத்தாலும் எள்ளி நகையாடப்பட்ட விஜய்காந்த் தனக்கு நிகழ்ந்த அவமானம் பிறருக்கு நிகழாமல் பார்த்துக் கொண்டதாய் கதை சொல்கிறார்கள். சோறு போட்ட வள்ளல் கதையையும், சுயமரியாதைக் காவலர் கதையையும் ஒரே ஆளுக்குச் சொல்ல முடியாது என்ற அடிப்படை ஞானம் கூட விஜயகாந்த் ஆதரவாளர்களுக்கு இல்லை.
ஏழை எளியவர்களுக்கும் பசி என்று வந்தவர்களுக்கும் ஒருவன் அன்னதானம் வழங்குகிறான் என்றால், அவர்களை ஏழைகளாகவும் பிச்சைக்காரர்களாகவுமே அவன் மதிக்கிறான் என்று பொருள். இந்த அன்னதானத்தை முன்னிட்டு அவன் தன்னையே ‘வள்ளல்’ என்று அழைக்கத் தொடங்குகிறான் என்றால், தானம் பெற வந்தவர்களை ‘இரந்துண்பவர்களாக’ அடையாளப்படுத்துகிறான் என்று பொருள். ஏனெனில், வள்ளல்கள் உயிர் வாழ்வதற்கு ஏராளமான பிச்சைக்காரர்கள் தேவைப்படுகிறார்கள்.
இந்த வள்ளல் குணத்திற்கு எதிரான குணத்தை வெளிக்காட்டியவர் என்று பெரியாரையே நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் தன்னோடு புகைப்படம் எடுக்க விரும்புகிற நபர்களிடம் கூட காசு கேட்டார் என்ற கதையை எல்லா ஊர்களிலும் நான் கேட்டிருக்கிறேன். இந்த செய்தியைப் பலரும் குற்றச்சாட்டு போலவே சொல்லியிருக்கிறார்கள். ஆனால், எனக்கானால் அது எத்தனை சுயமரியாதையான செயல் என்று தோன்றும். காசு கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறவர், அந்த நிமிடம் முதல் அப்புகைப்படத்தின் உரிமையாளர் ஆகி விடுகிறார். அப்புகைப்படத்திற்காக அவர் பெரியாருக்கு விசுவாசமாகவோ அல்லது நன்றிக்கடன் பட்டோ வாழ்க்கையைக் கழிக்க வேண்டியதில்லை. அவர் தனது சுயமரியாதையை இழக்காமலேயே அந்தப் புகைப்படத்தை வைத்துக் கொள்ள முடியும்.
*
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், சுனாமி, கடற்கரை ஊர்களை நாசம் செய்த போது நடந்த நிகழ்ச்சி இது. கடற்கரை மக்கள் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார்கள் என்ற செய்தி, பிற தமிழர்களை எவ்வளவுக்கு உலுக்கியது என்றால், கருணை கொப்பளிக்க அவரவர் தத்தம் வீடுகளில் இருந்த அத்தனை பொருட்களையும் வண்டிகளில் ஏற்றி கடற்கரை மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக அனுப்பி வைக்க ஆரம்பித்தனர். ஆனால், அதிர்ச்சியளிக்கும் வகையில் கடற்கரை மக்களில் பலரும் அந்தப் பொருட்களை கையால் கூடத் தொடவில்லை.
சீ... என்று ஒதுக்கித் தள்ளினார்கள். இது சமவெளியிலிருந்து வந்த இன்னொரு குப்பை சுனாமி என்றே அவர்கள் அபிப்பிராயப்பட்டனர். பெரும்பாலும் உண்மை அது தான்.
ஒரு இக்கட்டு என்று கேள்விப்பட்டதும், தமிழர்கள் உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு விடுகிறார்கள். கருணை அவர்கள் கண்களை மட்டுமல்ல, மூளையையும் ஸ்தம்பிக்கச் செய்கிறது. கையில் கிடைத்த அத்தனைப் பொருட்களையும் வாரி வாரி வழங்க ஆரம்பிக்கிறார்கள். ஏழை எளியவர்கள் வீட்டில் என்ன பெரிதாய் இருந்து விட முடியும்? கிழிந்த, பழைய ஆடைகள்; உடைந்த வீட்டுச் சாமான்கள்; மலிவு விலை உணவுப் பொட்டலங்கள்…இத்யாதி, இத்யாதி. வள்ளாலாய் வாழ்வது எளிதல்ல என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் உணர்ந்த நாள் அது!
*
வள்ளாண்மை என்பது நிலவுடைமைச் சமூகத்தின் பெருமிதம். அரசாண்மையின் முகமூடி.
ஜனநாயக அரசியலமைப்பு, அரசாண்மையை மட்டும் கொல்லவில்லை, வள்ளாண்மையையும் சேர்த்தே அழித்தது. நவீன அரசியல் அமைப்பில் எந்த அரசியல்வாதியும் தன்னை வள்ளல் என்று பறைசாற்றிக் கொள்ள முடிவதில்லை. ஏனெனில் அரசு அதிகாரம் நிரந்தரமானது அல்ல.
அதனாலேயே, நவீன உலகில் இந்த வள்ளாண்மையை அரசு அதிகாரத்திற்கு எதிரானக் கொள்ளையர்களும், கடத்தல்காரர்களும் தத்தம் இயல்பாக சுவீகரித்துக் கொண்டிருந்தனர். நியூயார்க் நகரப் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் கதையை மரியோ பூஸோ ‘காட் ஃபாதர்’ என்று எழுதியதன் பின்னணி இது.
இந்தக் கதையைத் திரைப்படமாக எடுத்த போது மாஃபியா படங்களின் இலக்கணமாக அது மாறியது. அதைத் தழுவித் தமிழில் எடுக்கப்பட்ட ‘நாயகனில்’ வரும் வேலு நாயக்கர் அப்படியொரு வள்ளல். இந்த நாயக்கரைப் பார்த்து விஜய்காந்த் நடித்த ‘சின்னக் கவுண்டரும்’ சரி, ரஜினிகாந்த் நடித்த ‘எஜமானும்’ சரி எல்லாமே சுயமரியாதை அரசியலுக்கு எதிரான அடியறுப்பு வேலைகள். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், பெரியாருக்கு எதிரான வேலைகளையே இந்தத் திரைப்படங்களும் அதிலிருந்து உருவாகும் வள்ளல்களும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பேரிடம் நிகழும் போது, கஞ்சித்தொட்டி அமைப்பது நிலவுடைமையின் அராஜகம். அந்தப் பழக்கத்திலிருந்து விலகி இப்பொழுது தான் நிவாரணங்களை பணம் என்ற மரியாதையான வடிவத்தில் வழங்குவது என்று முன்னேறி வந்திருக்கிறோம்.
இந்த நேரம், மீண்டும் வள்ளல்களை யாராவது தூக்கி வந்தால் அவர்களது தலையிலேயே போடுங்கள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
Comments