top of page

யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்மருதன்

அழகர் தொடங்கி எல்லாவற்றிலும் புத்தரைக் காணும் போக்கு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இதைப் புத்தரைக் காணும் போக்கு என்று சொல்வீர்களா? அல்லது, பெளத்தத்தை மீட்டெடுக்கும் போக்கு என்பீர்களா? இப்படி எல்லாவற்றிலும் பெளத்தத்தை மீட்டெடுக்கும் போக்கு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


டி. தருமராஜ்

கள்ளழகர் மட்டுமல்ல, அதை விடவும் தீர்க்கமான வேறு சில உதாரணங்கள்கூட நம்மிடம் உண்டு. திருப்பதி வெங்கடாசலபதியின் அலங்காரத்தை விலக்கிப் பார்த்தால் அது புத்தரின் திருவுருவம்; அனந்த பத்மநாதசாமி, புத்தரின் சயனக் கோலம்; மரணத்தை வெல்லும் வழியைக் காட்டிய புத்தரே, யமதர்மன் – சித்திரபுத்திரன்; வெள்ளை யானையில் பவனி வரும் தேவேந்திரனும் புத்தரே; பிள்ளையார், சிரிக்கும் புத்தர்; முருகன், பெளத்தத்தைப் பரப்பிய தமிழ் வேந்தன்; எல்லா அம்மன்களும், ஒளவையின் வடிவமே; இருக்கிற அத்தனை சிவலிங்கமும், புத்தரின் அஸ்தி கலயங்கள்.


இப்படிச் சொல்லப்படுகிற அனைத்திற்குமான ஒற்றுமைகளைக் கவனியுங்கள். நாம் கண்ணால் பார்க்கிற அனைத்து அலங்காரங்களையும் விலக்கி, அதன் அந்தரங்கத்தைப் பார்க்கச் சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொன்னால், பூர்வத்தை கண்டெடுக்க விரும்புகிறார்கள் என்று அர்த்தம்.


மருதன்

அப்படியானால், இதை பூர்வ பெளத்தர்களின் குரல் என்று சொல்கிறீர்களா? அயோத்திதாசரின் நீட்சியா இது?


டி. தருமராஜ்

‘பூர்வம்’, ‘வேஷம்’ இரண்டும், அயோத்திதாசரின் எழுத்துகளில் நாம் அடிக்கடி பார்க்க முடிகிற கருத்தாக்கங்கள். அவரிடம் கற்றுக் கொள்வதற்கோ அல்லது மதிப்பு மிக்கதாகவோ எதுவுமே இல்லை என்று சொல்கிறவர்கள் இப்பொழுது அடையும் பதட்டத்தைக் கவனியுங்கள். தொ.ப. போன்றவர்கள் நேரடியாகவே அயோத்திதாசரிடம் முறையியல் என்று எதுவும் இல்லை என்று அறிவித்தவர். ஆனால், அயோத்திதாசரிடம் ஒரு முறையியல் இருந்தது என்பதற்கான அறிகுறியே இந்தப் பூர்வ பெளத்தக் குரல்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, இது அயோத்திதாசர் இரண்டாம் அலை!


மருதன்

இந்தப் பூர்வ பெளத்தக் குரல்களின் முறையியல் என்ன? அவர்கள் அயோத்திதாசரின் முறையியலைக் கடைபிடிப்பதாகச் சொல்கிறீர்கள், அது என்ன?


டி. தருமராஜ்

அயோத்திதாசரின் முறையியல், ஒரு மெய்யியல் பயணம். கட்புல அறிவை ‘வேஷம்’ என்று சொல்வதிலிருந்து இந்த பயணம் ஆரம்பிக்கிறது. இந்த ஆரம்பப் புள்ளியே நிறைய பேருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி விடுகிறது. அயோத்திதாசர் எல்லாம் ‘மாயை’ என்று சொல்வதாக குழம்பிப் போகிறார்கள். அவர் புனைவுலகில் பயணம் செய்கிறார் என்ற அபவாதமும் இங்கிருந்தே ஆரம்பிக்கிறது. ஆனால், உண்மையில், அவர் ‘வேஷம்’ என்று சொல்வதற்கும் ‘மாயை’ என்ற கருத்திற்கும் எந்தவிதத் தொடர்புகளும் இல்லை. அவர் மாயாவாதம் பேசுவதில்லை. அவர் உண்மையில் ஒரு மெய்யியல் பயணத்தையே ஆரம்பிக்கிறார்.


இந்தப் பயணம், பெளதீகத்திலிருந்து உங்களை விலக்கி, அரூபக் காரணிகளுக்கு இட்டுச் செல்வதில்லை. மாறாக, இந்த மெய்யியல் நடவடிக்கை இன்னொரு முற்றிலும் மாறான, புதிரான பெளதீகத்திற்கே உங்களை இட்டுச் செல்கிறது. புதையுண்டிருப்பதை அகழ்ந்தெடுப்பதைப் போல, மலத்தை விலக்கி மெய்யை வெளிப்படுத்துவதைப் போல, ஒவ்வொன்றின் மீதும் படிந்து துருவேறியிருக்கும் திரையை விலக்குவது போல. இதைவொரு, (Ontological exercise) தோற்றவியல் நடவடிக்கை என்று சொல்ல முடியும். அயோத்திதாசரின் வார்த்தைகளில் சொன்னால் பூர்வவியல் நடவடிக்கை. பெளத்தமயமாதல்!


மருதன்

எல்லாவற்றையும் பெளத்தம் என்று சுருக்குவது, மத அடிப்படைவாதத் தன்மையாக திசை திரும்பிவிடாதா? பெளத்தமயமாதல், இன்னொரு மத அடிப்படைவாதம் தானே!


டி. தருமராஜ்

அயோத்திதாசரின் மீது இப்படியொரு குற்றச்சாட்டும் வைக்கப்பட்டிருக்கிறது. அவரும் அடிப்படைவாதத் தன்மையையே வெளிப்படுத்துகிறார். இதற்கு உடனடி உதாரணமாக, சிங்கள பெளத்தம் ஈழத்தில் நிகழ்த்திய படுகொலைகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. இந்த பெளத்தத்தையா நீங்கள் விடுதலையின் கருவியாக முன்வைக்கிறீர்கள் என்றும் கேள்வி கேட்கப்படுகிறது. ஆனால், பெளத்தவயமாதலுக்கும் அடிப்படைவாதத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.

இங்கிருக்கும் எல்லா வெகுஜன தெய்வ வடிவங்களும் பூர்வத்தில் பெளத்த வடிவங்களே என்று சொல்வதற்கும், பாப்ரி மஸ்ஜீத், ராமர் கோவிலே என்று சொல்வதற்கும் பாரதூரமான வேறுபாடுகள் உள்ளன. பாப்ரி மஸ்ஜீத் விவகாரம் ஏன் மத அடிப்படைவாதம் என்றால், அது வரலாற்றில் ஓர் அழிவைக் கற்பனை செய்கிறது; அந்த அழிவை, இன்னொரு அழிவின் மூலம் நேர் செய்ய விரும்புகிறது. செய்தும் காட்டுகிறது.


அயோத்திதாசரியர்களின் வாதம் வேறு மாதிரியானது. இது முழுக்க முழுக்க அறிவுத்தோற்றவியல் சார்ந்தது. இன்னும் சொன்னால், இதுவொரு தத்துவார்த்தச் செயல்பாடு. இது எந்தவொரு புதிய கட்டமைப்பையும் பரிந்துரைக்கவில்லை; அதே போல, எந்தவொரு கட்டமைப்பையும் நிர்மூலமாக்கவும் துடிப்பதில்லை. ஏற்கனவே நிலவிவரும் கதையாடல்களை மறுத்து புதிய (அதாவது பழைய, பூர்வீக) கதையாடல்களை உருவாக்குவதே இதன் உத்தி. அதனால்தான் இதனை வரலாற்று வரைவியலோடு ஒப்பிட்டுப் பேசுகிறோம். வரலாற்றுவரைவியல் எவ்வாறு கடந்தகாலத்தைப் புதிதாக எழுதுகிறதோ, அதே போல, பெளத்தவயமாதலும் இந்திர தேசத்தின் பூர்வீகத்தையே புதிதாக எழுத விரும்புகிறது.


உலகின் பல பகுதிகளிலும், பூர்வகுடிகள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறவர்களின் முழக்கம் இதுவாகவே இருக்கிறது. அரசதிகாரத்தைக் கைக்கொண்டிருந்த அந்நிய ஆதிக்கங்கள், தங்களது பூர்வ நிலவுரிமையைப் பறித்துக் கொண்டன; பூர்வப் பண்பாட்டை மறைத்துவிட்டன; ஆதிச் சடங்குகளை சிதைத்துவிட்டன என்று சொல்லுகிற அரசியல் நிலைப்பாட்டைப் போன்றதே, இன்று தமிழகத்தில் ஒலிக்கும் பெளத்த மீட்டெடுப்புக் குரலும். அந்த வகையில், ஆதிக்குடிகளின் இவ்வகை அரசியல், தோற்றவியல் அல்லது பூர்வவியல் அடிப்படைகளிலிருந்தே எழுகிறது.


மருதன்

எல்லாக் கோவில்களும் பௌத்த கோவில்களே என்று நிரூபித்துவிடுவதால் மட்டும் என்ன ஆகிவிடும்?


டி. தருமராஜ்

ஒரு விஷயத்தை நாம் திரும்பத் திரும்ப ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். இது முழுக்க முழுக்க கதையாடல் யுத்தம். கோவில்களைச் சொந்தம் கொண்டாடுவது என்ற பேச்சிற்கே இதில் இடமில்லை. அடிப்படைவாதத்திலிருந்து வெகுதூரம் விலகி நிற்பதற்கும் இதுவே காரணம். பெளத்தமயமாதல் வென்றெடுக்க விரும்புவது கோவில்களை அல்ல; பக்தர்களை! தங்களை இன்னார் என்று அறியாத பக்தர்களை. தாங்கள் நம்பும் கதையாடல் எத்தனை ஊழல் நிரம்பியது என்று அவர்களுக்கு உணர்த்த விரும்புகிறோம். ஓர் உதாரணத்திற்கு, கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு சொல்லப்படும் வைதீகக் கதையாடலையும், அயோத்திதாசரின் பெளத்த கதையாடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அது எந்த இடத்திலும் திருவண்னாமலைக் கோவிலை வென்றெடுப்பது குறித்து பேசுவதேயில்லை. அது தொடர்பான சடங்குகளை மறுப்பதில்லை. முற்றிலும் மாறாக, அந்தச் சடங்குகளுக்கும் நம்பிக்கைகளுக்குமான பூர்வக் கதையாடலை உங்களுக்கு நினைவூட்டுகிறது, அவ்வளவுதான். எல்லாக் கோவில்களும் பெளத்த கோவில்களே என்று நிரூபிக்க பெளத்தமயமாதல் விரும்புவதில்லை. எல்லா பக்தர்களும் பெளத்தர்களே என்று நிரூபிக்கவே முயற்சிக்கிறோம்.


மருதன்

அப்படியானால், இந்திரன், புத்தர், சடங்கு, சம்பிரதாயம் என்று பௌத்தம் திசை மாறுகிறதா?


டி. தருமராஜ்

சடங்குகளின் சம்பிரதாயங்களின் அவசியத்தை பெளத்தம் என்றைக்குமே மறுத்தது இல்லை. ஆனால், அந்தச் சடங்குகளின் அர்த்தத்தை ஒழுங்குபடுத்தவே தொடர்ந்து முயற்சிக்கிறது. இன்னும் கூடுதலான புத்திபூர்வ விளக்கங்களை உருவாக்க விரும்புகிறது. நான் மீண்டும் கார்த்திகை தீபத் திருவிழா விளக்கத்தையே உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அந்தத் திருவிழாவை அதற்கான சடங்கை, சிவன் ஜோதி வடிவில் இறங்குகிறார் என்று நம்புவதைக் காட்டிலும், அந்தச் செயல்பாடுகள் அனைத்தும் விளக்கு கண்டுபிடித்த உற்சாகத்தை வெளிப்படுத்துவது என்ற விளக்கத்தை நம்புவது வரலாற்றுப் பிரக்ஞையையும், அறிவியல் பிரக்ஞையையும் ஒருங்கே வெளிப்படுத்துகிறது. இந்த மாற்றத்தையே பெளத்தம் தொடர்ச்சியாக உருவாக்க முயல்கிறது.


மருதன்

பௌத்தம் ஓர் இண்டலெக்சுவல் மதம் கிடையாதா? மதம்கூட அல்ல, சிந்தனைமுறை என்றுதானே நம்பி வந்திருக்கிறோம்?


டி. தருமராஜ்

பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியாவில், காலனியச் சிந்தனை முறை, இந்தியச் சமயங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியபோது ஒரு பேராபத்து நிகழ்ந்தது. இதை நான் ‘அயோத்திதாசர் – பார்ப்பனர் முதல் பறையர் வரை’ நூலில் விரிவாகவே எழுதியிருக்கிறேன். பெளத்தம் இறந்து போன மதம் என்றும், அது பழஞ்சுவடிகளில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பதாகவுமே காலனியர்கள் தீவிரமாக நம்பினார்கள். பெளத்தச் சுவடிகள் வெளிப்படுத்தும் அறிவார்ந்த சூழலைக் காலனியர்களால் எதிர்கொள்ள இயலவில்லை என்பதே இதன் அடிப்படைக் காரணம்.


இத்தனைத் தத்துவார்த்த விவாதங்கள் நிகழ்ந்த இன்னொரு பண்பாட்டை அவர்களால் ஜீரணிக்க இயலவில்லை. அப்படியொன்று இல்லவே இல்லை என்று நிரூபிக்க விரும்பினார்கள். அதாவது, ஐரோப்பியர்களே சிந்திக்கும் வல்லமை கொண்டவர்கள்; பிற இனங்கள் அனைத்தும் இன்னும் நாகரீகமடையவில்லை என்பது அவர்களின் மூடநம்பிக்கை.


அல்லது, குறைந்தபட்சம் அப்படியொரு பண்பாடு இன்னொரு தேசத்தில் இருந்திருக்குமென்றால், அது பழையகதை; அதாவது, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அழிந்து போன கதை என்று நம்புவது அவர்களுக்கு இதமாக இருந்தது. மாயன் பண்பாடு, பிரமீடுகளை நிர்மாணித்த இனம், ஈஸ்டர் தீவு கற்கட்டமைப்புகள், பெளத்தம் என்று அவர்களை மிரட்டுகிற அனைத்தையும் கற்படிவங்களாக (fossils) மட்டுமே கற்பனை செய்ய விரும்பினார்கள். அதிலிருந்தே, பெளத்தம் முன்னொரு காலத்தில் செழிப்பாய் விளங்கிய இந்திய சிந்தனை முறை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதை அயோத்திதாசர் கடுமையாக மறுத்தார். ’நூதன பெளத்தம்’ என்று கேலி பேசினார். பதிலுக்கு அவர் முன்வைக்கும் பெளத்ததை ‘கிராமப் பெளத்தம்’ என்று இழிவு செய்தனர். அயோத்திதாசரைப் பொறுத்தவரையில், பெளத்த சிந்தனை முறையின் வெளிப்பாடுகளே இன்றைக்கும் நாம் கடைபிடிக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள், திருவிழாக்கள். அவரைப் பொறுத்தவரையில், பெளத்தம் என்பது சிந்தனை முறை மட்டுமல்ல; வாழும் சமயமும் கூட.
Comentarios


bottom of page