top of page

மொழியியலின் ‘அப்பா-அம்மா விளையாட்டு’என்றைக்கு ஜல்லிக்கட்டு பற்றிய ஆராய்ச்சியை ஆரம்பித்தேனோ, அன்றிலிருந்து இந்தக் கேள்வி என்னைப் படுத்திக் கொண்டிருக்கிறது. விலங்குகள் பேசுமா? அல்லது, மனிதன் மட்டும்தான் பேசுகிறானா? பேசுவதோடு நில்லாமல், ‘என் மொழியே மூத்த மொழி’ என்று பிதற்றவும் செய்கிறானா?


‘உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்ற மொழி’ என்பது ஓர் ‘அப்பா-அம்மா விளையாட்டு’. இந்த விளையாட்டை மொழியியலாளர்களே ஆரம்பித்து வைத்தனர்.


‘சமஸ்க்ரூத’ கிழவி அல்லது மூதாட்டியை ஐரோப்பிய மொழியியலாளர்கள் எதேச்சையாய் சந்தித்த தினத்திலிருந்து இது ஆரம்பித்தது. அவர்களது ‘மூதாய்’ என்ற யோசனையை இந்தியவியலின் (Indology) ஆன்மா என்றே சொல்லலாம். ஆரம்பத்தில், வில்லியம் ஜோன்ஸ் (William Jones) சமஸ்க்ரூதத்திற்கும் பிற ஐரோப்பிய மொழிகளுக்குமான ஒற்றுமைகளைப் பார்த்துப் பார்த்து மெய்மறந்து கொண்டிருந்தார். ஃப்ரெட்ரிக் ஸ்லேகல் (Fredrick Schelegel) தடாலடியாக, ‘இதுவே ஆதித்தாய் பேசிய மொழி’ என்று சொன்னது சர்ச்சையை ஆரம்பித்து வைத்தது. தாய் வந்த பின்பு படிப்படியே தந்தை, குழந்தைகள், ஈடிப்பஸ், எலெக்ட்ரா, ஃப்ராய்ட் என்று எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். விளையாட்டு களைகட்டியது.


இந்த ‘அப்பா-அம்மா விளையாட்டுக்கு’ ஒப்பீட்டு மொழியியல் (Comparative Philology) என்று பெயர் வைத்திருந்தனர். Philology என்ற சொல்லை மொழி வரலாறு என்றே மொழிபெயர்க்க வேண்டும். ஆனால், அந்நாட்களில் எல்லா மொழி வல்லுநர்களும் இதையே செய்து வந்ததால் மொழி வரலாறே மொழியியல் என்றும் வழங்கப்பட்டது.


உண்மையில், அது சொற்களை ஒப்பிடும் வேலை. நாட்டுப்புறத்தில் வார்த்தை விளையாட்டு என்பார்களே அப்படி ஒன்று. கிரேக்கம், லத்தீன், ரோமானியம், சமஸ்க்ரூதம் போன்ற மொழிகளிலிருந்து ஒரே மாதிரியான உச்சரிப்பு கொண்ட சொற்களைப் பட்டியலிட்டு, அப்படி இருக்குமா, இப்படி இருக்குமா என்று திண்ணைக்கதை பேசிக் கொண்டிருப்பதற்குப் பெயரே, ஒப்பீட்டு மொழியியல்.


சமஸ்க்ரூதத்தைப் பார்த்து ஐரோப்பியர்கள் அடைந்த கிளர்ச்சிதான் இதன் தொடக்கப்புள்ளி. இக்கிளர்ச்சி உளவியல் அறிஞர்களுக்கு மட்டுமே நல்ல தீனியாக இருக்க முடியும். சமஸ்க்ரூதம் காட்டும் ஜாலங்களை ஐரோப்பியர்களால் மெல்லவும் முடியவில்லை, துப்பவும் முடியவில்லை. எவ்வளவு தூரம் பேதலித்திருந்தார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன், கேளுங்கள்.

அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்தபோது, அவரது வீரர்கள் பேசிய மொழி கிரேக்கம். எப்படியாவது அதைக் கற்றுக்கொள்ள ஆசை கொண்டனர், பிராமணர்கள். அரச மொழி இல்லையா? நாளை பின்னே எதற்காவது உதவும். எங்கே போய் கற்றுக்கொள்வது என்று தெரியவில்லை. எனவே, கிரேக்க வீரர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போது மறைந்திருந்து அதை ஒட்டு கேட்க ஆரம்பித்தனர். பின், தங்களுக்குள் தப்பும் தவறுமாய் பேசிப் பழகினார்கள். இவர்கள் ஏதோவொரு அந்நிய மொழியைப் பேசுவது கண்ட பிற இந்தியர்களுக்கு ஆச்சரியம்.


‘என்ன மொழி இது?’


‘தேவ பாஷை.’


‘இதுவே அரசனின் மொழியும் இனி சடங்கு, சம்பிரதாயங்கள் இந்த மொழியில் தான்’ என்றனர்.


அலெக்ஸாண்டர் பேசும் மொழியைப் பேசும் பிராமணர்கள் என்பது அந்தக் காலத்தில் பெரிய பேச்சாக இருந்தது. இதன்மூலம், பிராமணர்களால் இந்தியர்களை மிரட்டவும் ஏய்க்கவும் முடிந்தது. அரசன் பேசும் தேவபாஷையில் அல்லவா பிராமணர்கள் பேசுகிறார்கள்! எந்த அரசாட்சி வந்தாலும் தங்களின் சடங்கு அதிகாரம் மட்டும் பறிபோகாமல் பார்த்துக் கொண்டனர், பிராமணர்கள். இந்தியர்களின் சடங்கு மொழியான சமஸ்கிருதத்தில் ஏராளமான கிரேக்க வார்த்தைகள் காணப்படுவது இதனால்தான்!


இந்தக் கதையை எழுதியவர் அயோத்திதாசர் என்று நீங்கள் சந்தேகப்படலாம். உண்மையில், இது, காட்லிப் சீக்ஃப்ரீட் பேயர் (Gottlieb Siegfried Bayer) என்ற ஒப்பீட்டு மொழியியலாளரின் ஆய்வறிக்கை. கூடவே கொசுறாக, சமஸ்க்ரூதம் ‘ஒரு குழுவிற்குள் பயன்படும் சங்கேத மொழி’ (Pig Latin) என்றும் அவர் சொல்ல மறக்கவில்லை.


பேயரின் வாதத்தில் எவ்வளவுக்கெவ்வளவு மொழியியல் குறைந்திருந்ததோ அவ்வளவுக்கவ்வளவு சமூகவியல் நிறைந்திருந்தது. சமஸ்க்ரூதம், பூஜை புனஸ்காரங்களுக்கான மொழி; தேவபாஷை என்று கொண்டாடப்படுவது; இதை முன்னிட்டு பிராமணர்கள் வானளாவிய அதிகாரங்களைக் கோருகிறார்கள்; கூடவே பிற மொழிகளை நீசபாஷை என்றும் பழிக்கிறார்கள்; அரசாண்மையின் மொழியை உடனடியாகக் கற்றுக் கொள்வது பிராமணர்களின் இயல்பு; அந்த மொழியைப் போலி செய்து வெகுஜனத் தளத்தில் உதார் விடுவார்கள் என்பதற்கு ஏராள சான்றுகள் உண்டு; எந்தவொரு புதிய விஷயத்தையும் குடும்ப சொத்தாக மூடி மறைத்து வைப்பது, அதன் முதல் விளைச்சலைக் கபளீகரம் செய்வது அவர்களது வரலாறு.


பிராமணர்களின் இத்தகைய குண இயல்புகளை நோக்கும்போது பேயர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பது நமக்கு விளங்கும். ஆனால், இது மொழி குறித்த உண்மை அல்ல; சமூக அசைவுகள் குறித்த உண்மை. இன்னும் சுருக்கமாக, பேயர் சொன்னால் பொய்யாகத் தோன்றி, அயோத்திதாசர் சொல்லும்போது சரித்திரமாக மாறிவிடுவதற்கான காரணம், அது அறிவியலா அரசியலா என்று தீர்மானிக்கிற புள்ளியில் உள்ளது.


சமஸ்க்ரூதம் ஒரு வேஷ மொழி என்று பேயர் சொன்னதும் அதிகபட்சம். போலவே, மூத்த மொழி என்று ஸ்லேகல் சொன்னதும் அதிகபட்சம். இந்த இரண்டையும் கேட்டு மொழியியலாளர்களில் பலரும் கூசவே செய்தனர். ஏனெனில், முன்னது ஐரோப்பிய இனவாதம்; பின்னது ஆரிய இனவாதம். இந்தக் கூச்சத்திலிருந்து வெளிவருவதற்காக அவர்கள் கண்டுபிடித்த உத்தியே ‘பூர்வ மொழி’ (Proto language) என்ற கருத்தாக்கம்.


இந்தக் கருத்தாக்கத்தால் ஒரே நேரத்தில், அறிவியல்பூர்வ தோற்றத்தையும், நடுவுநிலை மயக்கத்தையும் ஏற்படுத்த முடிந்தது. அதாவது, மொழியின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ள இனவாதத்தை இது சற்றே தணிப்பது போலத் தோன்றுகிறது. ஐரோப்பியம் அல்லது ஆரியமே என்று சொல்லும்போது அவ்வவ் இனம் அடையும் அதிகாரம், பூர்வ மொழி என்று சொல்லும்போது வெளித்தெரிவதில்லை என்பதைக் கவனியுங்கள். ஆனால், அதனால் அவ்வவ் இனங்கள் அடையும் அதிகார லாபத்தில் எந்தக் குறையும் இல்லை. பூர்வ மொழி என்பதும் அதே இனவாதம்தான்; ஆனால், அறிவியல் முலாம் பூசப்பட்ட இனவாதம்.


இதன் விளைவாகவே, இந்திய – ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் சமஸ்க்ரூத சாயலைக் கொண்ட ஒரு பூர்வ மொழியைக் கண்டுபிடித்தனர். திராவிட மொழிக்குடும்பத்தில் தமிழின் இயல்புகளைப் பிரதிபலிக்கும் ஒரு தொல் மொழி தயாரானது. இதைத் தமிழி என்று அழைத்தனர்.


*


ஒப்பீட்டு மொழியியலாளர்களின் இத்தகைய வேடிக்கை விளையாட்டுகள் மறுக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு ஆகிறது. வெவ்வேறு மொழிகளின் வார்த்தைகளை ஒப்பிட்டு, நதிமூலம் ரிஷிமூத்தைக் கண்டுபிடிக்கும் ஜாலத்தில் மொழியியல் எதுவும் இல்லை என்று பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் மதிக்கத்தக்க விஷயம் ஏதாவது இருக்குமானால், அது, திராவிட மொழிக்குடும்பம் போன்ற இனவாதத்திற்கு எதிரான நிலைப்பாடுகள் மட்டுமே என்று திரும்பத் திரும்ப சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகையில், ஒப்பீட்டு மொழியியல் என்ற பெயரில் எழுதப்பட்ட அனைத்தும் சமூக முரணியக்கத்தை ஆய்வு செய்வதற்கான ஆவணங்கள் மட்டுமே என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.


சமஸ்க்ரூதம் தொடர்பாக, ஐரோப்பியர்களிடம் எழுந்த ‘இனவாதமா – அறிவியலா’ என்ற மனக்குழப்பம் மூன்று விதமான நபர்களை உருவாக்கியிருந்தது. ஒன்று, சமஸ்க்ரூதமே மூத்த மொழி என்று சாதிப்பவர்கள்; இரண்டாவது, அது வேஷ மொழி என்று வாதிடுபவர்கள்; மூன்றாவது, அது பூர்வ மொழிக்கு நெருக்கமானது என்று சப்பைக்கட்டு கட்டுபவர்கள். பிராமணர்கள் வழக்கம் போல சமஸ்க்ரூதத்திற்கு வழங்கப்பட்ட அத்தனை மெடல்களையும் பெருந்தன்மையாக தங்கள் மார்புகளில் சூடிக்கொண்டனர்.


வழக்கமாய், மொழியியலின் அப்பா-அம்மா விளையாட்டில் தலைதூக்கும் இனவாதம், இந்தியாவிலும் தலைதூக்கியது. அதன் இந்திய வடிவம் பிராமணச் சாதிய வாதமாக இருந்தது. சமஸ்க்ரூதத்திற்கு வழங்கப்பட்ட முன்னுரிமைகளை தங்களது மூலதனமாக மாற்றிக்கொள்ள பிராமணர்கள் என்றைக்குமே கூச்சப்பட்டதில்லை. மேலும் அதிகமாக அதனைத் தங்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கும் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். பிராமணிய மேலாதிக்கமே இந்திய இனவாதம் என்று நிரூபணமான வரலாறு இது.


நவீன இந்தியாவில், காலனிய மூர்க்கத்தோடு உருவாகி வந்த பிராமணிய இனவாதத்தைப் பிற எல்லா தளங்களிலும் எதிர்கொண்டதைப் போல மொழியியல் தளத்திலும் திராவிடர்களே எதிர்கொண்டனர். வழக்கம்போல, திராவிடர்களின் ஆயுதத்தை எதிரிகளே தீர்மானித்தனர். இதன் காரணமாகவே ‘தமிழே எல்லா மொழிகளுக்கும் தாய்!’ என்ற போர்க்கருவியை பாவாணர் உள்ளிட்ட பலரும் வடிவமைக்க ஆரம்பித்தனர். ஒப்பீட்டு மொழியியல், அறிவியல் என்ற எல்லையைக் கடந்து வெகுஜன அரசியல் சொல்லாடலாக மட்டுமே செயல்பட ஆரம்பித்த கதை இது. இது நடந்து ஒரு நூற்றாண்டு கடந்துவிட்டது.


*


ஒப்பீட்டு மொழியியலில் அப்படி என்னதான் கோளாறு?


1. மொழியின் வரலாற்றை ஆராய்வதே தனது வேலை என்று சொன்னது ஒப்பீட்டு மொழியியல். பெயருக்கு ஏற்றார்போல ஒப்பிடுவதையே தனது முறையியலாகவும் கொண்டிருந்தது. அதையே செய்தும் காட்டியது. ஆனால், எல்லா ஒப்பீட்டு ஆய்வுகளிலும் மொழிகளுக்கு இடையிலான உறவுகள் சொல்லப்பட்டதேயொழிய, வரலாறு என்று எதுவும் எழுதப்படக்காணோம். இதனால், மொழிகளுக்கு இடையிலான உறவுகளை வரலாறாக உருமாற்றுவதில் அவை முழுத் தோல்வியை அடைந்தன என்று விமர்சனம் எழுந்தது. அவற்றில் ஒப்பீடுகள் இருந்தன வரலாறு இல்லை என்பதை அவர்களேகூட ஒத்துக்கொண்டனர்.


2. இரண்டாவதாக, இவ்வாறு ஒப்பிடுவதன் மூலம் கண்டறியும் ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும் வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றும் பலருக்குத் தெரியவில்லை. சுருக்கமாக, எந்த மொழியியலாளரும் தாம் ஏன் ஒப்பீட்டு முறையைப் பின்பற்றுகிறோம் என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ளவே இல்லை. மொழிகளுக்கு இடையில் மிளிரக்கூடிய ஒற்றுமை, அவர்களை அத்தனை தூரம் மயக்கியிருந்தது.


3. மூன்றாவதாக, ஒப்பீட்டு மொழியியலாளர்கள் எழுத்து ஆதாரங்களையே மொழி என்று நம்பினார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அவர்கள் பெரும்பாலும் இறந்த அல்லது மரணப்படுக்கையில் வீழ்ந்த பெரு மொழிகளையே ஆய்வு செய்தனர். அம்மொழிகளில் எண்ணற்ற எழுத்து ஆதாரங்களும் மிகச் சொற்பமான பேச்சு ஆதாரங்களுமே கிடைத்திருந்தன. எனவே, ஒப்பீட்டு மொழியியலாளர்கள் எழுத்து சார்ந்தே யோசிக்க வேண்டியிருந்தது.


4. இன்னொரு கோணத்தில், மொழியின் நெகிழ்ச்சியான பகுதியை அவர்கள் முற்றிலும் புறக்கணித்தனர். அதாவது, சமஸ்க்ரூதம், லத்தீன் போன்றே எல்லா மொழிகளும் காலத்தில் உறைந்திருப்பதாய் கற்பனை செய்ய ஆரம்பித்தனர். மொழியின் உயிர்த்துடிப்பான பேச்சின் பக்கம் அவர்கள் திரும்பவே இல்லை.


5. ஐந்தாவதாக, ஒப்பீட்டு மொழியியலாளர்களின் மேஜையைப் பார்த்தால் நீங்கள் மிரண்டு போவீர்கள். குவியல் குவியலாக வார்த்தைகளின் பட்டியலை நீங்கள் அங்கே பார்க்க முடியும். ஒரே உச்சரிப்புள்ள வார்த்தைகளை வெவ்வேறு மொழிகளிலிருந்தும் சேகரித்து, வியந்து வியந்து போகும் சிறுவர்களைப் போல் அவர்கள் வளைய வந்தனர். ‘வார்த்தையே, அர்த்தமுள்ள அலகு!’ என்ற மூடநம்பிக்கை அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டிருந்தது. மொழியின் ஆகப்பெரும் ஒழுங்கு, அதன் இலக்கணமே என்ற சாபத்தையும் அவர்களால் கடக்க முடியவில்லை.

சசூர் (Ferdinand de Sassure) குறிப்பிடுவதைப் போல, ஒப்பீட்டு மொழியியல் விடலைகளின் அறிவியலாக மட்டுமே தேங்கிப் போயிருந்ததற்கு இதுவெல்லாம்தான் காரணம்.


*


சொற்கள் அல்ல, சொற்-றொடரே அர்த்தத்தை உருவாக்குகிறது என்ற யோசனை சசூருக்குப் பின்பே வலுப்பெற்றது. வரிசையாக அடுக்கப்படும் சொற்களே பிரதி அல்லது பனுவல் என்று அழைக்கபடுகிறது. பேச்சில், ஒன்றுக்குப் பின் ஒன்றாக வார்த்தைகளை உச்சரித்தல்; எழுத்தில், ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டு தொடர்ச்சியாக அடுக்குதல் (Syntagmatic progression of language / Order-word).


ஒரு சொல் தன்னளவில் எதையும் குறிப்பதோ சுட்டுவதோ இல்லை. ஒப்பீட்டு மொழியியலாளர்கள் நம்பிக்கொண்டிருப்பதுபோல, சொற்கள் அட்சயப் பாத்திரங்கள் அல்ல, அள்ள அள்ள அர்த்தமும் வரலாறும் கொட்டிக்கொண்டிருக்க. அவை, சாதுவான இன்னும் சொல்லப்போனால் வாய்பேசக்கூடத் தெரியாத அப்புராணிகள். அவற்றிற்கு உயிரூட்ட ஒவ்வொரு கணமும் யாராவது தேவைப்படுகிறார்கள் (Interpretant). அந்த வகையில், மொழியின் இன்றியமையாத பகுதி அதன் நிகழ்த்து வடிவம் மட்டுமே. ஒன்று, அது பேசப்பட வேண்டும்; அல்லது, வாசிக்கப்பட வேண்டும்.


வாசிப்பதை விடவும் பேசுதல் முக்கியமானது. ஏனெனில், பேச்சின் (Speech act) போது மட்டுமே மொழி நெகிழ்ச்சி அடைகிறது. அப்பொழுதே, மொழி, ஜனநாயகத் தன்மையையும் எட்டுகிறது.

ஒப்பீட்டு மொழியியலாளர்கள் துரதிர்ஷ்டவசமாக மொழிகளின் சர்வாதிகாரத்தினுள் மாட்டிக்கொண்டவர்கள். அவர்கள் கையாண்ட, எழுத்து, இலக்கணம், பனுவல் என்பதனைத்தும் மாபெரும் அதிகார மையங்கள். அவை தொடர்ச்சியாக ஆணை இட்டபடியே உள்ளன. அவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா என்பதற்கே அங்கே இடமில்லை. எல்லா மொழியும் அதன் உறுப்பினர்கள், அதற்குக் கீழ்படிகிறார்கள் என்றே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


அதாவது, மொழியின் ஆணைகளை நம்புவது அல்ல; அதற்குக் கீழ்ப்படிவதே மக்களின் கடமை.

மொழி எத்தனை சர்வாதிகாரமானது என்றால், தனது பூர்வீகத்தை அது என்றைக்குமே வெளிக்காட்டுவதில்லை. அதாவது, உங்களால் எந்த மொழியின் முன்கதையையும் தெரிந்துகொள்ள முடிவதில்லை. அவை, அதீத தன்னுணர்வு கொண்டவை. தான் என்ன பார்த்தோம் என்பதைக் கூட மொழி சொல்வதில்லை. மாறாகத் தாம் என்ன நினைக்கிறோம் என்றே அது சொல்லிப் பழகியிருக்கிறது. அந்த வகையில், மொழிக்கு வெளியே மொழிக்கு எதுவுமில்லை.


ஒப்பீட்டு மொழியியலாளர்கள், மொழியின் வரலாற்றை எழுதுவதில் அடைந்த துன்பத்திற்கான காரணம் இப்பொழுது விளங்குகிறதா? நிஜத்தில் மொழிக்கு குடும்பமும் இல்லை, குட்டியும் இல்லை. ஆனால், இந்த உச்சபட்ச சர்வாதிகாரம் மொழியின் எழுத்து வடிவத்திற்குள் மட்டும்தான். ஒப்பீட்டு மொழியியலாளர்கள் சற்றே திரும்பி, மொழியின் நிகழ்த்து வடிவத்தைக் கவனித்திருந்தால் அங்கே மொழியின் ஜனநாயகத் தன்மையைக் கண்டிருக்க முடியும்.


பேச்சே மொழியின் நெகிழ் வடிவம். உண்மையில், இதுதான் மொழியும் கூட. ஏனெனில், சொற்றொடர்களே பேச்சின் இயல்பு. இலக்கணம் சொல்வது போல, எழுத்தில் இருந்தும் சொல்லில் இருந்தும் மொழி தோன்றவில்லை. மொழி, அனுபவத்திலிருந்தே தோன்றுகிறது. சொற்றொடரே அனுபவம். ஒவ்வொரு சொல்லும் சொல்லப்படும் பொழுது சொற்றொடராகி விடுகிறது. ஒப்பீட்டு மொழியியலாளர்கள் அடைந்த குழப்பங்களுக்கும் விளைத்த குழப்பங்களுக்கும் மொழியை எழுத்தாகக் கற்பனை செய்ததே காரணம். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், மொழி என்பது இலக்கணம் அல்ல; அதையும் மீறிய இலட்சணம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.


*


மொழியை அதன் இலட்சணத்தைக் கொண்டே அளக்க வேண்டும் என்று முதலில் சொன்னவர், அயோத்திதாசர். காலனிய அறிஞர்கள் இந்தியப் பனுவல்களை ஆராயும் பொழுது, பெளத்தத்தைத் தவறவிடுவது கண்டு அவர் வேதனை அடைந்தார். பனுவல்களை இலக்கணம் கொண்டு அளப்பதால் தான் இக்கேடு விளைவதாக அவர் உணர்ந்தார். அப்பனுவல்களை மக்கள் மத்தியில் புழங்க அனுமதிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். அவ்வாறு செய்கிற பட்சத்தில் அவை நிகழ்த்துப் பனுவல்களாக மாறத் தொடங்கும். அத்தருணம் அவற்றின் இலட்சணம் துலக்கம் பெறும் என்பது அயோத்திதாசரின் எதிர்ப்பார்ப்பு. அந்த இலட்சணம் பெளத்தமாக இருக்கும் என்பது அவரது நம்பிக்கை.


மொழியியல் என்பது இலக்கணத்தை அல்ல, இலட்சணத்தை நோக்கிய நகர்வு என்பதே தற்காலம் நவீன மொழியியல் வந்தடைந்திருக்கும் புள்ளி. இலட்சணத்தை நோக்கி நகரக் கூட வேண்டாம், அப்படி முயற்சி செய்கிறவர்களுக்கு வேண்டிய தரவுகளை வழங்குவதாவது அதன் கடமையாக இருக்க வேண்டும். உதாரணமாக, விலங்குகள் பேசுமா என்ற என் கேள்விக்கு மொழியின் இலட்சணத்தைப் பேசும் பொழுதே நான் பதிலைக் கண்டுபிடித்தேன்.


தேனீக்கள் பேசிக்கொள்ளுமா என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ளும் டெல்யூஸும் கத்தாரியும் (Gilles Deleuze and Feliz Guttari) ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தினார்கள். மொழி என்பது கருத்துப் பரிமாற்றம் அல்ல; கருத்துப் பரவல். பரிமாற்றத்திற்கும் பரவலுக்கும் வித்தியாசம் உண்டா? உண்டு. தேனீக்களால் கருத்தைப் பரிமாறிக்கொள்ள முடியும்; ஆனால் பரவலாக்க முடியாது.

அதாவது, ஏதோவொரு பூவில் அபரிதமான தேனைக் கண்ட தேனி ஒன்றால், பிற தேனிக்களுக்கு அச்செய்தியைப் பரிமாற முடியும். உடனே, தேனீக்கள் பேசிக்கொள்ளும் என்ற முடிவிற்கு வந்துவிட வேண்டாம். ஏனெனில், மொழி கண்டதைச் சொல்வதற்கான கருவி இல்லை. காணாததையும் அது சொல்லவேண்டும். அப்பொழுதுதான் அது மொழி.


டெல்யூஸ், கத்தாரியின் கருத்துப்படி, பூவில் தேனைக் கண்ட தேனி அச்செய்தியைப் பரிமாறுவது பெரிய விஷயமில்லை. அவ்வாறு பெற்ற செய்தியை, அப்பூவைப் பார்க்காத தேனீக்களும் கூட இன்னும் பல தேனீக்களுக்கும் சொல்ல முடியவேண்டும். ‘அப்படியொரு இடத்தில், அப்படியொரு செடியில், அப்படியொரு பூவாம்; அதில் இவ்வளவு தேனாம்!’


இப்படி ஏதாவது நடந்தால் தேனீக்கள் பேசிக்கொள்ளும் என்ற முடிவிற்கு நாம் வரலாம். அது வரையில், மிருகங்கள் பேசாது என்பதே உண்மை. இதே விஷயத்தை இன்னொரு நகைச்சுவையின் மூலம் ழாக் லெக்கன் (Jacques Lacan) விளக்கினார்.


மிருகங்களுக்கு பொய் சொல்ல வருமா? அவற்றால் ஏமாற்ற முடியுமா? இல்லை, இவையெல்லாம் மனித குணங்களா? என்பதே விவாதம். அப்பொழுது இந்தக் கதையை லெக்கன் குறிப்பிட்டார்.

இரண்டு யூதர்கள் மதுரை ரயில்வே நிலையத்தில் தற்செயலாய் சந்தித்துக் கொண்டனர். ஒருவர் பயணி. இன்னொருவர் யாரையோ வழியனுப்ப வந்தவர். பயணி ரகசிய வேலையாக சென்னைக்கு செல்கிறார்.


‘எந்த ஊருக்கு?’


பயணிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. உண்மையைச் சொல்ல முடியாது. ஆனால், அவனுக்கு என்னை நன்றாகத் தெரியும், நான் எப்பொழுதுமே உண்மையைச் சொல்வதில்லை என்பது அவனுக்கு நல்லாவே தெரியும். ‘கன்னியாகுமரி வரை போகிறேன்’ என்று எதிர்திசையைக் காட்டினால் அவன் நிச்சயமாக நம்ப மாட்டான். சென்னைக்குத்தான் போகிறேன் என்று கண்டுபிடித்து விடுவான். உண்மை அவனுக்குத் தெரியக்கூடாது. தெரியவே கூடாது.


‘சென்னைக்கி போறேன்’.


வந்தவர் இன்னும் மோசம். ‘பொய்யி. சென்னைக்கித்தான போற?’bottom of page