டெல்யூஸின் ‘He Stuttered’ என்ற கட்டுரை இப்படி ஆரம்பிக்கிறது. ‘ஏதாவதொரு கதாபாத்திரம் பேசத் தடுமாறுகிறது, அதாவது திக்குகிறது என்றால், அதை விவரிப்பதற்கு நாவலாசிரியர்கள் இரண்டு வழிமுறைகளை பயன்படுத்துகிறார்கள். ஒன்று, அப்பாத்திரங்கள் தடுமாறுவதையும், திக்குவதையும் நமக்கு நேரடியாகவே காட்டி விடுகிறார்கள்; அல்லது, அக்கதாபாத்திரங்கள் அதனால் அடையும் சங்கடங்களை இன்னும் விரிவாக, துல்லியமாக விவரிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால், இவ்விரண்டையும் கடந்து மூன்றாவதாக ஒரு வழி இருக்கிறது - அது, எழுத்தாளன் தானே தன் எழுத்தில் தடுமாறவும் திக்கவும் ஆரம்பிப்பது’. இதன் பின் அந்தக் கட்டுரையில், டெல்யூஸ், மொழியைத் திக்க வைக்க முடியுமா என்ற திக்கில் நடக்க ஆரம்பிக்கிறார்.

*
‘மொழியே இலக்கியத்தின் சிக்கலான வடிவம்’ என்ற யோசனையிலிருந்தே இக்கட்டுரை எழுதப்படுகிறது. பொதுவாக வடிவம் என்றதும், கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் போன்ற வகைமைகளின் புற வடிவங்களையே பலரும் கவனத்தில் கொள்கிறார்கள். இத்தகைய வகைமை வடிவங்களனைத்தும் மாறக்கூடியவை, ஒன்றிலொன்று மயங்கக்கூடியவை, ஒன்றை இன்னொன்று போலி செய்யக்கூடியவை, அதனாலேயே கறாரான எல்லைகள் இல்லாதவை. இத்தகைய ஸ்தூல வடிவங்களைக் கடந்து, இலக்கியப் பிரதிகளை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்திருப்பது மொழி மட்டுமே. அந்த மொழி, ஒரு கருவி மட்டுமல்ல, கருத்தியலாகவும் செயல்படுகிறது என்பது தான் பிரச்சினையின் ஆரம்பம்.
மொழியை அணிகளாகவும், வண்ணங்களாகவும், சிருங்காரங்களாகவும் விவரிக்கிற மரபு நம்மிடம் உண்டு. இவையே மொழிவழிச் செயல்பாட்டின் அழகியலைத் தீர்மானிக்கின்றன என்றும் நம்பப்பட்டு வந்தது. ஆனால், இலக்கிய வடிவம் என்பதை ஒரு அழகியல் கூறாகவோ அல்லது வகைமையாகவோ பார்ப்பது கூடாது என்ற தெளிவை இப்போது நாம் அடைந்திருக்கிறோம். மொழி எவ்வாறு நமது உணர்வுகளோடு விளையாடுகிறது என்பதையும் அது எவ்வாறு கருத்தியல் நிலைப்பாட்டை எடுக்கிறது என்பதையும் விசாரிப்பதே நமது நோக்கம். இன்னும் தெளிவாகச் சொல்வது என்றால், வடிவம் என்பது நிலையான ஒன்று அல்ல என்ற தெளிவிற்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம். அது உருமாற வேண்டும் என்பது எல்லோருக்கும் விளங்குகிறது. காலத்திற்குக் காலம் அல்ல; படைப்புக்குப் படைப்பு அல்ல; ஒரே படைப்பினுள்ளும் அது உருமாற வேண்டும் என்பதே சரியாக இருக்கும். இந்த அடிப்படைகளைக் கொண்டே இந்தக் கட்டுரை மொழியின் சாத்தியங்களையும் அசாத்தியங்களையும் பேச விரும்புகிறது.
இந்த நூற்றாண்டில் இலக்கியம் எதிர்கொண்ட மிகப் பெரிய சவால், பேசாதவற்றைப் பேசுவது. இது இலக்கியத்தின் வேட்கை என்று கூட சொல்லமுடியும். இந்த வேட்கையிலிருந்தே ‘குரலற்றவர்களின் குரல்’ என்ற அரசியல் பிரகடனமும் உருவாகுகிறது.
இதற்கெல்லாம் முன்பு, 18, 19ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, இந்த உலகைச் சாதாரணர்களின் வாழ்விடமாகச் சித்தரிக்க நவீனத்துவம் பெரிதும் முயற்சி செய்திருக்கிறது. ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமாகவும் இல்லை. ஏனெனில் இவ்வுலகம் நாயகர்களின், மகானுபவர்களின், தீரர்களின், மாகாத்மாக்களின் கதைகளால் ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கிறது.
தொன்மம் ஒரு பெரும் இலக்கிய வகைமை. அவை ஏறக்குறைய எளிய முரண்பாடுகளின் பிரம்மாண்ட கற்பனைகளாக விளங்கின. இவற்றிலிருந்து விலகி நின்று, சிக்கலான முரண்பாடுகளை மிக எளிய வாக்கியங்களில் பேச முயற்சி செய்ததே நவீன இலக்கியத்தின் சாதனை. அது தனது சாதாரண மனிதர்களை உள்ளது உள்ளபடியே சித்தரிக்க விரும்பியது. திக்குகிறவனை நேரடியாகவே காட்டி விட அது முயற்சித்தது. அவனது தடுமாற்றமான பேச்சை அப்படியே பதிவு செய்வதன் மூலமும், அந்நேரங்களில் அவன் முகமும் உடலும் அடையும் துயரங்களை காட்சிப்படுத்துவதன் மூலமும் நமக்கு அவனைக் கடத்த விரும்பியது.
இன்னொரு வகையில், மொழியில் அவனுக்கு ஏற்படும் தடுமாற்றம் அவனுடைய ஒட்டுமொத்த வாழ்வின் சாரமாக எவ்வாறு மாறி விடுகிறது என்பதை இலக்கியம் விவரிக்க ஆரம்பிக்கிறது. பேசத்தெரியாதவர்கள் வெளிப்படுத்தும் முனகல், பதட்டமான சைகைகள், அங்கலாய்ப்பு, ஏமாற்றம் என அத்தனையையும் நவீன இலக்கியம் பதிவு செய்கிறது. எல்லாம் சுபிட்சமாக இருந்த இந்த நேரத்தில் தான், யாருமே எதிர்பார்க்காத திசையிலிருந்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
எது என் பேச்சு?
இந்தக் கேள்வியைக் கேட்டவர் வேறு யாருமல்ல, திக்கித் திக்கிப் பேசுவாரே அவர் தான்.
இதுவொரு அனாதரவான சூழலை இலக்கியத்தினுள் ஏற்படுத்தியது உண்மை! ஒரு சாதாரணர் அல்லது திக்குகிறவர் தன்னைப் பற்றி எழுதப்பட்ட இலக்கியப் பிரதிகளில் தன்னை அடையாளம் காணமுடியவில்லை என்று சொல்லும் போது, எழுத்தாளன் திகைத்துப் போகிறான். ஏனெனில், ஒரு நவீனத்துவ எழுத்தாளன் சதாகாலமும் தொன்மங்களோடே சமருக்கு நின்றவன். மகானுபவர்களையும் கடவுள்களையும் எதிர்த்து அவன் பேசிக் கொண்டிருந்த ஒவ்வொரு நொடியும் அவனுக்கான ஆத்ம பலத்தைத் தந்து கொண்டிருந்தது ‘நான் எளியவர்களைப் பேசுகிறேன்’ என்ற பிரகடனம் மட்டுமே. அந்த எளியவர்கள் ஒரு நாள் அவன் முன் வந்து ‘எங்களை எங்கே?’ என்று கேட்பது எந்தவொரு துர்க்கனவை விடவும் கொடியது.
*
இந்தக் கேள்வி இலக்கியத்திடம் மட்டுமே கேட்கப்பட்டது என்று நினைக்க வேண்டாம். அந்நாட்களில், சாதாரணர்களைப் பற்றி யோசித்த அத்தனை பேரிடமும் இது கேட்கப்பட்டது. மிகக்குறிப்பாக, மானிட அறிவியல்களில் இக்கேள்வி பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, நீண்ட, விரிவான விவாதங்கள் நடைபெற்றன. எளியவர்களின் எளியவர் யார்? திக்குகிறவனின் மொழி எது? பார்வையற்றவனின் ஓவியம்? வாய் பேசாதவர்களின் பாடல்? தீண்டத்தகாதவர்களின் நாடகம்? படிக்கத் தெரியாதவர்களின் புத்தகம்?
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் சமூக, மானிட அறிவியல்களில் நிகழ்ந்த மாற்றங்களை ‘மொழியியல் திருப்பம்’ என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், அந்தத் திருப்பம், தொடர்ச்சியான இரங்கல் செய்திகளையே நமக்கு வழங்கிக் கொண்டிருந்தது. எழுத்தாளன் இறந்து போனான்; மனிதனே கூட மரணமடைந்தான்; அல்லது, தன்னிலை இறந்து போனது; வரலாற்றின் இறுதிக்கு வந்து விட்டோம்; கவிதை முடிந்து போனது; தத்துவத்தின் எல்லையை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்; எதிர்மறைகள் குலைந்து சரிகின்றன; ஒற்றைகள் காலாவதியாயின என்று நவீனத்துவம் பெருமிதம் கொண்ட அனைத்தையும் சந்தேகத்திற்குள் ஆழ்த்திய வேலையை மொழியியல் திருப்பம் செவ்வனே செய்து முடித்தது.
மிஷல் ஃபூக்கோவின் Madness and Civilization என்ற நூலுக்கு தெரிதா எழுதிய ‘Cogito and the History of Madness’ என்ற பெயரிலான விமர்சனம் இந்த விவாதத்தின் முக்கியமான போக்குகளை நமக்கு சொல்லக்கூடும். பகுத்தறிவிற்கும் மனப்பிறழ்ச்சிக்குமான முரண்களை விலாவரியாக பேச ஆரம்பிக்கும் ஃபூக்கோ தனது முன்னுரையில் மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார்: ‘உளவியல் என்பது மனப்பிறழ்வு குறித்து பகுத்தறிவு உருவாக்கிக் கொண்ட எதேச்சதிகார மொழி என்பதை மனப்பிறழ்வின் மெளனத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இந்தப் புத்தகத்தில் உளவியல் மொழியின் வரலாற்றை எழுத நான் முயற்சிக்கவில்லை; மாறாக, மனப்பிறழ்வுற்றவர்களின் மெளனத்தின் தொல்படிவங்களை வெளிக்கொண்டு வரவே நான் விரும்புகிறேன்’.
வரலாற்றையும் தொல்லியலையும் வேறுபடுத்திக் கொள்கிற ஃபூக்கோவின் தர்க்கத்தை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. மொழி மூலமாய் வெளிப்பட்டவற்றை மட்டுமே வரலாறு கணக்கிலெடுத்துக் கொண்டிருக்கிறது. அதன் பனுவல்கள் திட்டவட்டமானவை. அந்த வகையில் பகுத்தறிவு நீண்ட வரிசையிலான பனுவல்களைக் கொண்டிருக்கிறது. ஆனால், மெளனத்திற்கு நம்மிடம் பனுவல்கள் இல்லை. இன்னொரு வகையில் சொல்வது என்றால், அம்மெளனங்களைப் பதிவு செய்து கொள்ளும் வசதி நம் மொழிகளில் இல்லை.
ஃபூக்கோ இதற்காக இன்னொரு உத்தியைக் கையாள ஆரம்பிக்கிறார். அது, பனுவல்களற்ற காலகட்டத்தின் வரலாற்றை மீட்டெடுத்துக் கொண்டு வரும் தொல்லியலின் முறையியல். அங்கே காலம், மண்ணடுக்குகளாக உறைந்திருக்கிறது. வெவ்வேறு நிறங்களில். வெவ்வேறு இறுக்கங்களோடு. அவற்றின் நடுவே, அவ்வவ் காலகட்டம் விட்டுவிட்டுப் போன பொருட்களை நம்மால் பார்க்க முடிகிறது. அவற்றை மெளனங்களின் பனுவல்களாக கருத முடியுமென்பது ஃபூக்கோவின் நம்பிக்கை. இவ்வுலகின் எல்லா மெளனங்களும் தத்தம் அடையாளங்களாக பொருட்களையே விட்டுச் சென்றுள்ளன. தனது நூலிலும் அப்படியொரு முயற்சியாக, மனப்பிறழ்ச்சியுற்றவர்கள் விட்டுச் சென்ற தொல்பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவர்களின் மெளனங்களை ஒலிக்கச் செய்வதாக அவர் அறிவிக்கிறார்.
ஃபூக்கோவின் ‘மெளனத்தை ஒலிக்கச் செய்யும்’ இவ்வுத்தியை தெரிதா இன்னொரு முக்கியமான திசையிலிருந்து விமர்சனத்திற்கு உள்ளாக்கினார். உளவியல் ஒரு பக்கம் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்த போது, மனப்பிறழ்ச்சி மெளனமாகவே வீற்றிருந்தது என்றே பலரும் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உலகம் என்றைக்குமே இத்தனை ஒத்திசைவோடு இருக்கவில்லை.
உளவியல் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் காது கொடுத்து கேட்டால் தெரியும், அது மனப்பிறழ்வின் மெளனத்தை முட்டாள்தனம் என்று ஸ்தாபித்துக் கொண்டிருந்தது. அதனால் அவ்வுரையாடலை ஸ்தம்பித்தும் கொண்டிருந்தது. இதிலிருந்து நாம் ஒரு விஷயத்தை உணர்ந்து கொள்ள முடியும். இவ்வுலகில், பேச்சின் வன்முறை இல்லாத மெளனம் இல்லை. தன்னை பகுத்தறிவின் வடிவமாக அங்கீகரித்துக் கொள்ளும் பேச்சு, மெளனத்தை அறிவீனம் என்றே களங்கப்படுத்தி வந்திருக்கிறது. அதாவது, ‘மெளனம் ஒழுங்கற்றது’ என்பது குற்றச்சாட்டு. தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது. அதனால் மறுக்கப்பட வேண்டியது. புறக்கணிக்கப்பட வேண்டியது. கூடுமானால், திருத்தப்பட வேண்டியது. உளவியல், மனப்பிறழ்வை ஒரு நோயாக சித்தரித்ததன் பின்னால், வலுவான கண்டனம் இருந்தது.
இப்பொழுது, மனப்பிறழ்வின் தொல்படிவங்களை அகழ்ந்தெடுப்பதன் மூலம், ஃபூக்கோ மெளனத்தை ஒலிக்கச் செய்வதாக சொல்லும் போது, அவற்றின் மீதான களங்கத்தையே அகற்ற ஆரம்பிக்கிறார். அவை பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டவை என்ற உளவியலின் குற்றச்சாட்டை மறுக்க ஆரம்பிக்கிறார். அவை புறக்கணிக்கப்பட வேண்டியவை என்ற தீர்மானத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறார். இவ்வாறெல்லாம் செய்வதன் மூலம், அவரால் மனப்பிறழ்வின் ஒழுங்குகளைக் கண்டுபிடிக்க முடிகிறது. பகுத்தறிவு போலவே, மனப்பிறழ்வும் இன்னொரு வகையான ஒழுங்குமுறை என்று அவரால் நிரூபிக்க முடிகிறது.
ஆனால், உண்மையில் மனப்பிறழ்வை ஒரு ஒழுங்குமுறை என்று நம்மால் வரையறுக்க முடியுமா? மெளனத்தை இன்னொரு வகையான பேச்சு என்று விளக்க முடியுமா? ஒழுங்கு என்பதும் பேச்சு என்பதும் பகுத்தறிவின் காரணிகள் இல்லையா? மெளனத்தை பேச வைக்கிறோம் என்று சொல்வதன் மூலம் மீண்டும் மீண்டும் அதன் மீது பேச்சு முலாமை பூசுவதற்கு தானே நாம் முயற்சி செய்கிறோம்? மெளனத்திற்கு அர்த்தங்களைக் கற்ப்பிப்பதன் மூலம், அவற்றின் மீது இல்லாதவொன்றை நாம் ஏற்றுகிறோமா? இவ்வுலகின் பைத்தியக்காரத்தனத்தின் மீது ஃபூக்கோ வெளிச்சம் பாய்ச்சுகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவ்வெளிச்சத்தை பகுத்தறிவே அவருக்கு வழங்குகிறது என்பது தான் உண்மை.
தெரிதா எழுப்புகிற இக்கேள்விகளை அவரது மொழிபெயர்ப்பாளரான காயத்திரி சக்கரவர்த்தி ஸ்பீவாக் அடித்தளமக்கள் ஆய்வுகளின் மீது கேட்டது உங்களுக்கு ஞாபகம் வரலாம். திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான கேள்விகளே எல்லா பக்கமும் கேட்கப்பட்டன. அந்தக் கேள்வியின் சாராம்சம் இது தான் - நமது மொழியும் அதன் ஒழுங்கும், மெளனத்தை பேசுவதற்கானது தானா?
இந்த நேரம் மானிடவியலில் கிளாட் லெவி ஸ்ட்ராஸ் மேற்கொண்ட இன்னுமொரு ஆய்வு நமக்கு வேறு சில தெளிவுகளைத் தரக்கூடும். அவர் தொன்மங்களையும் உறவுமுறை அமைப்பையும் பிரதானமாக ஆய்வு செய்கிறார். தொன்மங்களைக் குறித்து பலரும் பல விதமான ஹேஸ்யங்களை எழுப்பிக் கொண்டிருந்த சூழல் அது. மாக்ஸ் முல்லர் மாதிரியான ஆய்வாளர்கள் ஒரு படி மேலே போய், மொழியின் நோயே தொன்மங்களை உருவாக்குகிறது என்று விளக்கிக் கொண்டிருந்தனர். அவரது கருத்துப்படி, ஒரு காலத்தில் கவித்துவ நோக்கில் உருவாக்கப்பட்ட வார்த்தைகளுக்கு, அடுத்தடுத்த சந்ததியினர் இட்டுக்கட்டிய கதைகளே தொன்மங்கள். குறிப்பாக, இயற்கை நிகழ்வுகளுக்கு சொல்லப்பட்ட உவமைகள் ஒரு கட்டத்தில் நிஜ உருவங்களாக நம்பப்பட்டு, அதன் பின்னணியில் பின்னப்பட்ட கதைகளே புராணங்கள். பூமி என்ற பூமாதேவி, சூரியன் என்ற ஆண், நிலவு என்ற பெண், ஆழி என்ற நாராயணன், கைலாயம் என்ற தேவலோகம் என சொல்லப்பட்ட அத்தனையும் உவமை என்று அறியாமல் செய்த தவறுகளே என்பது தான் முல்லரின் வாதமாக இருந்தது. பகுத்தறிவு, மனப்பிறழ்வை எவ்வாறு நோய் என்று வரையறுக்கிறதோ அதே போலத்தான் மரபான மொழியியலும் தொன்மங்களை நோய்க்கூறுகளாக அடையாளப்படுத்தின. பழங்குடிகள் அல்லது ஆதிக்குடிகளிடம் காணப்படும் நோய்கள்.
பகுத்தறிவு என்பது நாகரீக மனிதனின் உருவாக்கம் என்றும், ஆதிக்குடிகளிடம் அதற்கான சான்றுகள் எவையும் இல்லை என்று நம்பி வந்த சூழலில், கிளாட் லெவி ஸ்ட்ராஸ் மிக முக்கியமான கருதுகோளொன்றை பரிட்சித்துப் பார்க்க விரும்பினார். அது, பல்வேறு பகுத்தறிவுகள் இருக்க முடியுமா என்பதாக இருந்தது. இந்தக் கருதுகோளை உருவாக்குவதற்கான அடிப்படை ஆதாரம் தொன்ம உருவாக்கமும், உறவுமுறை அமைப்புகளின் சிக்கலான வடிவங்களுமாக இருந்தது. இன்னொரு வகையில் சொல்வது என்றால், தொன்மங்களுக்குள் செயல்படும் கச்சிதமான அமைப்பொன்றை அகழ்ந்தெடுக்க முடிந்தால், அத்தொன்மங்களை உருவாக்கிய ஆதிக்குடிகளிடமும் பகுத்தறிவு செயல்படுவதாக அவரால் நிரூபிக்க முடியும்.
பின்னாட்களில் அமைப்பியல் மானிடவியல் என்று அழைக்கப்பட்ட லெவி ஸ்ட்ராசின் ஆய்வுகள் தொன்மங்களிலும் உறவுமுறை அமைப்பிலும் மட்டுமல்ல, இன்னும் அவர்களிடம் காணக்கூடிய உணவுப்பழக்க வழக்கங்கள், சடங்கு முறைகள், கைவினைக்கலைகள் என்று சகலத்திலும் ஒழுங்கமைப்போடு கூடிய அறிவியல் காணப்படுவதாக விளக்கியது. ஆனால், இந்த ஒழுங்கமைப்பிற்கும் பகுத்தறிவின் ஒழுங்கமைப்பிற்கும் வேறுபாடுகள் இருந்தன என்பதை அவர் மறுக்கவில்லை. அவரது வாதம் மிக எளிமையாக இருந்தது. பழங்குடிகள் மூடத்தனங்களாலும், அறிவீனங்களாலும் நிரம்பியிருந்தார்கள் என்ற அபிப்பிராயம் தவறானது; பழங்குடிகளிடம் மாற்று அறிவுமரபொன்று செயல்படுகிறது.
*
‘மாற்று’ என்ற கருத்து பரவலாக எல்லாத் தளங்களிலும் ஒலிக்கத் தொடங்கிய சூழலை நாம் கவனிக்க வேண்டும். எங்கெங்கெல்லாம் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டவற்றின் மீது விமர்சனங்களும் கண்டனங்களும் வலுக்க ஆரம்பித்தனவோ அங்கெல்லாம் இந்த ‘மாற்று’ ஒரு நிவாரணமாக முன்மொழியப்பட்டிருந்தது. மிகவும் குறிப்பாக, நவீனத்துவ பின்னணியில் கட்டமைக்கப்பட்ட பல்வேறு ஒழுங்கமைப்புகளின் மீது சந்தேகம் எழுந்த போது, இத்தகைய மாற்று ஏற்பாடுகளே நிலைமையின் தீவிரத்தை மட்டுப்படுத்த உதவின. மாற்று வரலாறு, மாற்று அரசியல், மாற்றுப் பண்பாடு, மாற்று அறிவியல், மாற்று ஆய்வுகள் என்று பேசப்பட்டதன் தொடர்ச்சியாக மாற்று இலக்கியங்களும் விவாதிக்கப்பட்டன. தமிழில் கொண்டாடப்பட்ட வட்டார இலக்கியம், தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் போன்ற அனைத்தும் இத்தகைய மாற்று ஏற்பாடுகள் தான் என்பதில் சந்தேகமில்லை.
நவீன இலக்கியம் மீது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நம்முன் இரண்டு சாத்தியங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, மாற்று இலக்கியங்களை முயற்சித்தல்; மற்றொன்றை, உண்மையில் சாத்தியம் என்று சொல்வதற்கில்லை, அசாத்தியம் என்று சொல்ல வேண்டும். இந்த அசாத்தியத்தின் படி, மனம் பிறழ்ந்தவர்கள் மெளனமாக இல்லை, பேசுகிறார்கள்; ஆனால், அவர்களின் குரலைக் கேட்கும் காதுகள் தான் நம்மிடம் இல்லை.
ஏனெனில், எந்தவொரு மானுட யத்தனத்திற்குமான ஊடகமாக மொழியே செயல்படுகிற வரையில், நம்மால் மெளனங்களை அறிய முடிவதில்லை. மொழி சப்தங்களால் செய்யப்பட்ட ஊடகம் என்று நம்பப்படுவதால் உருவான அபிப்பிராயம் இது. ஒலியே மொழியில் பிரதானம் என்று யோசிக்கிற போது, ஒலியின்மையை, அதாவது மெளனத்தை மொழியின் கட்டமைப்பிலிருந்து நாம் அகற்றி விடுகிறோம். மெளனத்திற்கு ஸ்தூலமான வடிவம் இல்லை என்று நம்ப ஆரம்பிக்கிறோம். அதனால், சாதாரணர்களின் மெளனத்தை வெளிப்படுத்தும் பனுவலை நம்மால் உருவாக்க முடிவதில்லை என்று உணர ஆரம்பிக்கிறோம். இந்த வெறுமையை எதிர்கொள்வதற்கு நமக்கிருக்கும் ஒரே மாற்று வழி, அச்சாதாரணர்களே தங்களை எழுதிக் கொள்வது என்ற முடிவிற்கும் வந்து சேர்கிறோம்.
ஆனால், மொழி சப்தங்களால் மட்டுமல்ல, நிசப்தங்களாலும் உருவாக்கப்பட்டது என்ற செய்தியை தமிழின் இலட்சணமே நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இங்கே, இலட்சணம் என்ற கருத்தாக்கத்தை அயோத்திதாசரிடமிருந்து நான் பெற்றுக் கொள்கிறேன். தமிழுக்கு இலக்கணம் என்ற ஒன்று வாய்த்திருப்பது போல், இலட்சணமொன்றும் காணப்படுகிறது. அந்த இலட்சணத்தை, மொழியின் தத்துவமே (அயோத்திதாசருக்கு இது பெளத்தம்) விளக்கிச் சொல்ல முடியும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை.
தமிழின் அடிப்படையான இரு வகை எழுத்துகளை, மெய் - உயிர் என்று வகைப்படுத்துகிறார்கள். இவற்றுள் மெய் எழுத்துகளின் எண்ணிக்கை பன்மையைச் சுட்டும் பதினெட்டு. இப்பதினெட்டு மெய் எழுத்துகளையும் ஒருவரால் உச்சரிக்க முடிவதில்லை. ஏனெனில், அவற்றின் ஒலிப்பு அளவு அரை மாத்திரை என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு மாத்திரை என்பது ஒரு ஒலிக்குறிப்பின் கால அளவு. அரை மாத்திரை என்று சொல்லப்படும் பொழுது, அவ்வொலிகள் உச்சரிக்கப்படுவதில்லை என்பது விளங்குகிறது. இப்படியான ஒலிக்கா மெய்கள், உயிர் எழுத்துகளோடு சேரும் போது ஒலிக்க ஆரம்பிக்கின்றன. அதே நேரம், உயிர் எழுத்துகள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாத்திரை அளவு ஒலிப்பதால் தன்னிச்சையாகவும் ஒலிக்க முடிபவை. தமிழின் தத்துவார்த்த அடிப்படையில், உடலுக்கு சுதேச ஒலிப்பு இல்லை; அது உயிரோடு சேரும் போதே சப்தம் எழுகிறது.
இத்தகைய சப்தமற்ற மெய் எழுத்துகளை, நன்னூல் என்ற 13ம் நூற்றாண்டு இலக்கணப்பிரதி ‘கம்முன் பதினெட்டு’ என்று அடையாளப்படுத்துகிறது. ‘கம்முதல்’ என்றால் ‘க்’ என்ற முதல் மெய்யெழுத்தில் ஆரம்பித்து என்று பொருள். ஆனால், 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முத்துவீரியம் என்ற இலக்கண நூல், இப்பதினெட்டு எழுத்துகளுக்கு மூன்று பெயர்களைச் சொல்கிறது - ஊமை, ஒற்று, மெய். மற்ற இரு பெயர்களை விடவும் இந்த ‘ஊமை’ என்ற பெயர் விவாதத்திற்குரியது. ஆதியிலிருந்தே ஒலிப்பில்லாத எழுத்துகள் என்று வரையறுக்கப்பட்டிருந்த இவ் எழுத்துகள் 19ம் நூற்றாண்டில் ஊமை எழுத்துகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன. அதாவது பேசாதவை என்று அர்த்தமல்ல; பிறவியிலேயே பேச முடியாதவை என்று அர்த்தம்.
கம்முதல் என்ற சொல்லுக்கு ‘க’ முதலாக வருவது என்ற பொருளோடு சேர்த்து, குரல் குன்றுதல் என்ற பொருளும் சொல்லப்படுகிறது. அதாவது, கம்முதல் என்றால் குறைந்த ஒலி என்று பொருள். காதால் கேட்கமுடியாத அலைவரிசையில் உள்ள ஒலி. அதே போல், கம்மு என்ற சொல்லுக்கு சொல்லப்படும் இன்னொரு பொருள், நறுமணம். வாசனை. ‘புதர்களில் பூத்திருக்கும் சிவப்பு நிற தவள மலர் மொக்குகளும், அதை அடுத்து கொத்து கொத்தாய் பூத்திருக்கும் பிடவ மலர்களும் ஒரே நேரத்தில் விரிய, ஒட்டுமொத்த காடும் கம்மென்று மணக்கத் தொடங்கியது’ என்பது அகநானூற்றுப் பாடல். கம்முதல் என்பதற்கு தமிழில் குரல் குன்றுதல் என்று மட்டுமல்ல, மணம் வீசுதல் என்றும் பொருள். எப்போதெல்லாம் குரல் கம்முகிறதோ அப்போதெல்லாம் வாசனையே மொழியாகி விடுகிறது. அப்படியானால், தமிழின் பதினெட்டு மெய்களும், பேசா மடந்தைகளாக இல்லை; ஆதி மொழியான வாசனையில் பேசிக் கொண்டிருக்கின்றன.
மெளனம் என்பதை இந்தியத் தத்துவ மரபு, ஞான நிலையாகவே விளக்கி வந்திருக்கிறது. பூரணத்தை எட்டும் போது தோன்றுவதே மெளனம். அதாவது, எல்லாவற்றையும் களைந்த பின் மிஞ்சும் ஒன்று. இருந்ததற்கான எந்தவித சுவடுகளும் இல்லாத நிலையில் மெளனம் பிறக்கிறது. இந்த மெளனத்தை பெளத்தம், உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட நிலை என்று வரையறுக்கிறது. ஸ்தூல உடல், உணர்வு, விருப்பம், எண்ணம், அடையாளம், யோசனை, பிரக்ஞை போன்று ‘நமது’ என்று சொல்லப்பட்ட அனைத்தையும் விட்டு விடும் போது தோன்றுவதே மெளனம். இந்த மெளனம் பேரமைதியைச் சுட்டுகிறது.
ஆனால், மனம் பிறழ்ந்தவர்கள் இப்படியொரு மெளனத்தையல்ல, கம்முதலையே வெளிப்படுத்துகிறார்கள். கம்முதல் என்றால், மாபெரும் திணறல். உளவியலாளர்களின் தொடர் கேள்விகளால் நெருக்குண்டவனின் அனாதரவான தடுமாற்றம். மகானுபவர்கள் மத்தியில் சாதாரணன் உணரும் பதட்டம். திக்குதல். அப்படியானால் நமது சிக்கல் மெளனத்தை எழுதுவதோ அல்லது அதற்கு குரல் கொடுப்பதோ அல்ல; மாறாக, டெலியூஸ் சொல்வது போல் பேசத் தடுமாறுகிறவர்களையும், திக்குகிறவர்களையும் எழுதுவது. முடியுமானால் மொழியைத் திக்கச் செய்வது.
The article showing the amazing knitting work done with threads extracted from the clothes of various thinkers.