(உலக நாட்டுப்புற தினமான நேற்று 22-08-2020, வெளியிட்ட 'தமிழ் நாட்டுப்புறவியல் அறிக்கை.)
தமிழ் நாட்டுப்புறவியல் என்று எதையாவது நாம் சிந்திக்கிறோம் என்றால் அது ‘நாட்டுப்புறத்தை’ மெய் நிகர் வடிவமாக மாற்றுவதாக மட்டுமே இருக்க முடியும்.
‘மெய்நிகர் நாட்டுப்புறம்’ (Virtual Folklore), மின்னியல் தொழில் நுட்ப உதவியோடு உருவாக்கப்படுவது; எனவே, ‘மின்னியல் வழக்காற்றியல்’ (Digital Folklore) என்றும் அதை அழைக்க முடியும்.
தமிழ் நாட்டுப்புறவியல் என்ற நவீனத்துவத் திட்டத்தின் கருத்தியல் அடிப்படைகளை வழக்காற்றியலின் அரசியலும் அழகியலும் என்று நாம் பேசுகிறோம். அதன் செயற்திட்டங்களை ‘மின்னியல் வழக்காற்றியல்’ என்று சொல்கிறோம்.
உலக நாட்டுப்புற வழக்காறுகள் தினமான இன்று ‘மெய்நிகர் நாட்டுப்புறம்’ குறித்துப் பேசுவது முரணாகத் தோன்றலாம். ஏனெனில், மெய்நிகர் வடிவங்கள், யதார்த்த வடிவங்களின் கல்லறைகளின் மீதே எழுப்பப்படுகின்றன. வழக்காறுகளை அழிய விடுவது எப்படி? நாட்டாரைக் கொலை செய்வது எப்படி? என்ற கேள்விகளுக்கான பதில் மெய் நிகர் நாட்டுப்புற உருவாக்கத்தில் அடங்கியுள்ளது. ‘நாட்டுப்புறவியல் என்றதும் வழக்காறுகளைக் காப்பாற்றுவது’ என்று பொதுவாக எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிற சூழலில் அவற்றை அழிய அனுமதிப்பது முரண்பாடாகவே இருக்கும்.
ஆனால், யோசித்துப் பார்த்தால், நாட்டுப்புறவியல் என்றாலே முரண்பாடுகள் தாம் என்பது நமக்கு விளங்க ஆரம்பிக்கும். நாட்டுப்புறவியலை வரையறுக்கும் பொழுது இப்படிச் சொல்கிறார்கள் - வாய்மொழி பற்றிய எழுத்துமொழி, மரபு குறித்த நவீனத்துவ பார்வை, இனக்குழுக்கள் பற்றிய தேசிய விமர்சனம், கல்லாதவர் குறித்த கல்வி. சுருக்கமாகச் சொன்னால், இரு வேறு சமூக யதார்த்தங்கள் சந்தித்துக் கொள்கிற புள்ளி.
வேற்றுமைகள் உரசிக் கொள்ளும் இடம் என்றும் சொல்லலாம். இவ்வேற்றுமை உரசல்களை நாட்டுப்புறவியலின் வரலாறு தெளிவாகவே சுட்டிக் காட்டுகிறது. இரு வேறு அரசியல் நிலைப்பாடுகள் சதா மோதிக் கொள்கின்றன. அதிலும், வழக்காறுகளில் அரசியல் சரித்தன்மையைப் பேண விரும்பும் ஆய்வாளர்கள், எந்த வகையிலும் தங்களது மேட்டிமை வெளிப்பட்டு விடாமல் எச்சரிக்கையாக இருப்பதற்கே தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
வாய்மொழிச் சமூக சிந்தனை முறை (வால்டர் ஜே. ஆங், ரூத் பெனடிக்ட்), மரபான அறிவியல் (கிளாட் லெவி ஸ்ட்ராஸ்), இனக்குழு அடையாளங்களின் பன்முகம், கல்லா மக்களின் விழுமியங்கள் என்று தங்களுக்குத் தெரிந்த வழிவகைகளிலெல்லாம் இம்முரணைச் சாந்தப்படுத்துவதற்கு நாட்டுப்புறவியல் முயற்சி செய்தபடியே இருக்கிறது. ஒரு அறிவியல் என்ற முறையில், தனக்குள் வலுவாகத் தொழிற்படும் நவீனத்துவ சாய்வை அது மறுத்தே வந்திருக்கிறது. இந்தச் சாய்வு, ஆய்வாளர்களின் மேலாண்மையாக உருவெடுத்து விடாத எச்சரிக்கை உணர்வோடே அது செயல்பட்டும் வருகிறது.
ஆனால், நாட்டுப்புறவியல் என்ற யோசனை நவீனத்துவத்தின் குழந்தை என்ற காரணத்தால், அம்முரணை யாராலும் கடந்து விட முடிவதில்லை. இதை மறைப்பதற்காக, வழக்காறுகள் மீதும் நாட்டார் மீதும் செயற்கையான கருணையை ஆய்வாளர்கள் வரவழைத்துக் கொள்கிறார்கள். வழக்காறுகளை அழிவிலிருந்து காப்பது தத்தம் வாழ்நாள் கடமை என்று கற்பனை செய்து கொள்கிறார்கள். இந்தக் கற்பனை இரண்டு பக்கங்களை உடையது; ஒன்று, வழக்காறுகள் அழிவின் விளிம்பில் நிற்கின்றன என்ற செயற்கையான பதைபதைப்பு; இரண்டு, தாங்களே ஆபத்பாந்தர்கள் என்ற விஸ்வரூபக் கற்பிதம். இதன் உப விளைவாக, பெரும்பான்மை நாட்டுப்புறவியல் ஆய்வுகள் மரபின் வழக்கறிஞர்களாகவும், நவீனத்தின் விமர்சகர்களாகவும் செயல்பட ஆரம்பிக்கின்றன. நாட்டுப்புறவியலின் அடி சறுக்கத் தொடங்கும் இடம் இது.
தமிழ் நாட்டுப்புறவியலின் அடிப்படையான நோக்கம் இவ்விரு கற்பனைகளிலிருந்தும் வெற்றிகரமாக வெளியேறி விடுவது. இவ்வாறு வெளியேறுவதன் மூலம் மட்டுமே, நாட்டுப்புறவியல் ஆய்வாளன் மீது போர்த்தப்பட்டுள்ள ‘தொண்டு’ அடையாளத்தை நீக்க முடியும். நீக்கிய பின்பு, தமிழ் நவீனத்துவத்தின் முகம் அவன் என்று நாம் நிரூபிக்க முடியும். நாட்டுப்புறவியல், நாட்டார் வழக்காறுகளைப் பற்றிய அறிவியல் என்று சொல்வதற்கு அவ் ஆய்வாளன் நவீனனாக இருப்பது முக்கியம். அதன் அறிவியல் தன்மையை ஆய்வாளரே பிரதிபலிக்க வேண்டும். அந்த வகையில், நாட்டுப்புறவியல் ஆய்வாளரை உயிர்த்தெழச் செய்வதே தமிழ் நாட்டுப்புறவியலின் முதல் செயல்பாடாக இருக்கும்.
நாட்டுப்புறவியல் ஆய்வாளரின் எழுச்சி மூன்று தளங்களில் நடைபெற்றாக வேண்டும். ஒன்று, கள ஆய்வுத்தளம்; மற்றொன்று, ஆவணக்காப்புத்தளம்; மூன்றாவது, ஆய்வுத்தளம்.
கள ஆய்வுத்தளமே ஆய்வாளர் நாட்டாரை நேரடியாக எதிர் கொள்ளும் இடம். இரு சிந்தனை மரபுகள் சந்தித்துக் கொள்கிற புள்ளி இது. காலம்காலமாகப் பயின்று வரும் வாழ்க்கை முறையை விளக்கும் நாட்டாரும், நவீனத்துவத்தை விளக்கும் ஆய்வாளரும் ஒருவரையொருவர் எதிர்கொள்ளும் இத்தருணத்தை காத்திரமான உரையாடலை முன்னெடுப்பதன் மூலம் ஒரு ‘நிகழ்வாக’ மாற்றக்கூடிய வேலையை உயிர்த்தெழும் ஆய்வாளரே செய்ய வேண்டும்.
மரபுக்கும் நவீனத்திற்குமான உரையாடலில் நவீனத்துவத்தின் பிரதிநிதியாக ஆய்வாளர் தன்னை வரிந்து கொள்வது மிக முக்கியம். இவ்வாறு, வலிமையான அதே நேரம் அனுசரணையான நவீனக் குரலாக அவர் வெளிப்படுவதன் மூலம், மரபான நாட்டாரின் மனச்சித்திரத்தை வெளிப்படுத்தவும் உதவுகிறார். கூடவே, நாட்டார் நவீனம் நோக்கி நகர்வதற்கான சாத்தியங்களையும் ஆய்வாளர் தொடர்ந்து அதிகரிக்கிறார்.
மரபின் சாதகங்களை உறிஞ்சிக் கொள்வதும், அதன் பாதகங்களிலிருந்து விடுவித்து நாட்டாரை நவீனம் நோக்கி நகர்த்துவதையும் கள ஆய்வின் போது ஆய்வாளர் நிச்சயமாகச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமே அவர் உயிர்த்தெழவும் முடியும். அந்த வகையில், கள ஆய்வு என்பது இயந்திரத்தனமான தகவல் சேகரிப்பு அல்ல என்று நான் அறிவிக்க விரும்புகிறேன். எவ்வாறு ரிச்சர்ட் பாமன் ‘வாய்மொழிக் கலைகள் அனைத்தும் நிகழ்த்துக் கலைகளே!’ என்று எழுதினாரோ அதே போல, ‘கள ஆய்வுகள் அனைத்தும் நிகழ்த்துதல்களே!’ என்று நாம் வரையறுக்க வேண்டும். இந்த நிகழ்த்துதல், அறிவியலின் நிகழ்த்துதல், அறிவியலை நிகழ்த்துதல். இவ்வாறு சொல்வதன் மூலம், நாட்டுப்புறவியல் என்பது மாற்றத்திற்கான அறிவியல் என்று நம்மால் நிரூபிக்க முடிகிறது.
நாட்டுப்புறவியல் ஆய்வாளர் உயிர்த்தெழும் இரண்டாமிடம், ஆவணக்காப்புத்தளம். தமிழகம் மாதிரியான வாழும் வழக்காறுகள் நிலவுகின்ற பன்பாடுகளில் ஆவணக்காப்பகம் என்பது ஞாபகச் சின்னங்களை உருவாக்குவது அல்ல. ஏனெனில், ஞாபகச் சின்னங்களை ஆய்வகங்களில் தான் உருவாக்கியாக வேண்டும் என்ற அவசியமின்றி, நிஜத்திலேயே வழக்காறுகள் மலிந்து காணப்படுகின்றன. கிராமப்புற வாழ்வாதாரங்கள் வலுவிழந்து கொண்டிருக்கும் சூழலில், எந்தவொரு நாட்டுப்புற ஆய்வாளனும் தான் சந்திக்கிற ஒவ்வொரு நாட்டரையும் நாட்டுப்புறத்திலிருந்து வெளியேறச் சொல்வதே மிகச் சிறந்த யோசனையாக இருக்க முடியும். இதன் மூலம், கால ஓட்டத்திலிருந்து நாட்டார் தவறி விழுந்து விடாமலிருக்க ஆய்வாளர் உதவி செய்ய முடியும். இது ஒரு வகையில், நாட்டாரை நவீனராக மாற்றும் காரியமாகும்.
நாட்டாரை நவீனராக மாற்றுவது தொடர்ச்சியான விளைவுகளை உடையது. முதலில், மரபான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழருக்குள் காணப்படும் நாட்டாரை வேரோடுக் கிள்ளி வெளியே எறிய வேண்டும்; அதன் பின், அவர் நம்பிக் கொண்டிருக்கும் நாட்டுப்புறத்திலிருந்து இடம்பெயர்ந்து வரச் சொல்ல வேண்டும். நாட்டார் வெளியேறிப் போன கணமே, அவர் நவீனராக உருமாறிய கணமே நாட்டுப்புறம் அழிந்து விடுகிறது என்பதே நிஜம். ஒரு ஆய்வாளரின் வெற்றி என்பது நாட்டுப்புற யதார்த்தத்தை அழித்து விட்டு, அதன் மெய் நிகர் வடிவத்தை உருவாக்குவதில் அடங்கியிருக்கிறது என்று சொல்வதன் காரணமும் இதுவே.
நாட்டார் வழக்காற்றியல் என்ற பத்தத்தை விடவும், நாட்டுப்புறவியலை நான் பயன்படுத்த விரும்புவதற்கும் இதுவே காரணம். நாட்டார் வழக்காற்றியல் அறிந்தோ அறியாமலோ கிராமப்புற வாழ்க்கை குறித்த பெருமிதங்களை வெளிப்படுத்திய படியே இருக்கிறது. ஆனால், நாட்டுப்புறவியல் என்ற வார்த்தை நாட்டார் வழக்காற்றியல் சொல்வது போல கிராமப்புறத்தின் நிஜத் தோற்றத்தை அதாவது ‘தரங்குறைந்த வாழ்க்கை முறை’ என்ற உண்மையை முகத்திலடித்தாற் போலச் சொல்லி விடுகிறது. தமிழ் நாட்டுப்புறவியல் என்ற வரையறையின் மூலம் நாம் நிரூபிக்க விரும்புகிற செய்தியை நாட்டுப்புறவியல் என்ற சொல்லே முழுமையாக விளக்கியும் விடுகிறது. அந்த வகையில், தமிழ் நாட்டுப்புறவியல் என்பது ‘எதிர் நாட்டுப்புறவியலும்’ கூட. அது, நாட்டுப்புறத்தின் நிஜத்தை அகற்றி விட்டு, மெய்நிகர் வடிவத்தைக் கட்டமைக்க விரும்புகிறது. இதுவே, தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியலும் ஆகும்.
Comments