(மாயாதீதம் ( நாவல்), என். ஶ்ரீராம், முதற்பதிப்பு - ஜனவரி 2024, வெளியீடு - தமிழ்வெளி, 1-பாரதிதாசன் தெரு, சீனிவாசா நகர், மலையம்பாக்கம், சென்னை - 600122)
1.
வணக்கம் ஐயா. ஶ்ரீராமின் நாவல் குறித்த விமர்சனம் படித்தேன். யாருடைய நோயைக் குணமாக்க யார் போராடுகிறார்கள் என்ற குழப்பத்தை நாவல் எழுப்புவதாகவே எனக்கும் தோன்றியது. ஒரு வகையில் எல்லோருமே மனச்சிக்கல்கள் கொண்ட நோயாளிகள் தானோ? அந்தச் சித்தப்பா, தனது மனம் பிறழ்ந்த குழந்தைக்காக எதுவுமே செய்ய முயற்சிக்காமல் வேணுவின் கண் நோய் தீர்வதற்கு இத்தனை மெனக்கிட வேண்டியது ஏன்? எதை முன்னிட்டு இந்த பிரயாச்சித்தத்தை செய்கிறார்? நீங்கள் சொல்வது போல, நாவல் பல இடங்களில் அமைதியாக இருந்து விடுகிறது. அது தான் எழுத்தின் வெற்றி என்றும் விளங்குகிறது. படிக்கும் பொழுது என் மனதில் தோன்றி, சொல்லத் தெரியாமல் இருந்த விஷயங்களை நீங்கள் சொல்லிப் படிப்பது ஏதோ நானே எழுதிய உணர்வைத் தருகிறது. மிகச்சிறந்த விமர்சனம். அப்புறம், உங்கள் புதிய இணையதளம் கச்சிதமாக அமைந்திருக்கிறது. வாழ்த்துகள்!
எஸ். கனகராஜ்
2.
அன்புள்ள தர்மா, நீங்கள் எதை எழுதினாலும் வரலாறு பற்றிய விவாதம் அதனுள் வந்து விடும் என்பது தெரியும். ஶ்ரீராமின் நாவல் விமர்சனத்திலும் அப்படி வந்ததைப் படித்து மகிழ்ந்தேன். ஃப்ராய்டின் மனப்பிறழ்ச்சி குணப்படுத்து முறைகள் பற்றி பேச வந்த போது இப்படி எழுதுகிறீர்கள். மனப்பிறழ்ச்சிக்கான காரணத்தை நோயாளியின் கடந்த காலத்தில் தேடச் சொல்லியது உளவியல். நீங்கள் எழுதிய பின்பு தான் ஃப்ராய்டின் முறையியலுக்கு இப்படியொரு கோணம் இருப்பது புலப்பட்டது.. அதை இன்னும் நீட்டித்து, வரலாறு விடுதலை செய்யும் என்று சொல்வதை ரசித்தேன்.
இரண்டாவதாக, நம்முடைய கனவுகள் ஏன் குழப்பம் மிகுந்ததாக இருக்கின்றன என்ற கேள்வியைக் கேட்கிறீர்கள். அதற்கான விடையாக, வரலாறு தன்னை குதர்க்க வடிவிலேயே வெளிப்படுத்திக் கொள்கிறது என்கிறீர்கள். குதர்க்கம் என்ற வார்த்தையின் பொருள் எனக்கு சரியாக விளங்கவில்லை. கனவுகளில் மனம் குதர்க்கமாகச் செயல்படுகிறது என்கிறீர்களா? விரிவாக எழுதினால் என்னைப் போன்ற வாசகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
அருள் சுந்தர்
3.
அன்புள்ள தர்மராஜ்,
உங்களுடைய 'அறியப்படாத குற்றங்களின் சுழல்' படித்தேன். மிக பயமாக இருந்தது. குடும்பம், அன்பு எல்லாமே அதிகார மையங்களால் கட்டமைக்கப்பட்டது என்ற விளக்கம் அதிகம் யோசிக்க வைக்கிறது. That makes one alienated.
மற்றபடி உங்கள் உளவியல் புரிதல்கள், அதன் ஆழம் தான் பண்பாட்டுத் தளத்தில் அதன் அரசியலில் மிகவும் ஆழமாகவும் வேறு வேறு கோணங்களிலும் உங்களைச் சிந்திக்க வைக்கிறது என்று நினைக்கிறேன்.
நன்றி.
சாந்தி.
4.
அன்புள்ள ஐயா, நான் தொடர்ச்சியாக உங்களை வாசித்து வருகிறேன். நீங்கள் ப்ளாகில் எழுதிய கட்டுரைகளை நாங்கள் குழுவாக அமர்ந்து விவாதித்தது உண்டு. இப்பொழுது தனியான இணையதளத்தில் எழுதத் தொடங்கியிருக்கிறீர்கள். எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி.
மாயாதீதம் நாவலை எங்கள் வாசிப்புக் குழுமத்தில் சென்ற மாதம் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டோம். அப்பொழுது எங்களில் பலரும் அந்த நாவலை எவ்வாறு உள்வாங்கிக் கொள்வது என்ற சிக்கலையே பெரிதாய் பேசிக் கொண்டிருந்தோம். அந்நாவல் ஏதோவொரு விஷயத்தைச் சொல்கிறது என்றும், அதை எங்களால் உணர முடிகிறது என்றும், ஆனால், அந்த விஷயத்தை கைகளில் எடுத்துக் காட்ட மட்டும் தெரியவில்லை என்றும் அன்றைக்கு விவாதித்து முடித்தோம்.
ஆனால், உங்களது கட்டுரை அந்நாவலின் மையத்தை இத்தனை லாவகமாக வெளிப்படுத்துவது கண்டு எங்களுக்கு வெட்கமாக இருந்தது. இதை எவ்வாறு தவற விட்டோம் என்று எங்களுக்குள் கேட்டுக் கொண்டோம். உங்களது அனுபவம் எங்களுக்கு இல்லை என்பது உண்மை. நாவலை நாங்கள் வாசிக்கும் முறைக்கும் நீங்கள் வாசிக்கும் முறைக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஒரு நாவலை நீங்கள் எப்படி வாசிக்கிறீர்கள் என்று எங்களுக்கு விளக்க வேண்டும். ஒரு இலக்கியப் படைப்பை எப்படி அணுக வேண்டும் என்று எங்களுக்கு சொல்லித் தர வேண்டும்.
கார்த்திகாயினி
5.
தருமராஜ் அண்ணா,
வலைதளம் பார்த்தேன்; நிறைவாய் இருக்கிறது.
வலைதளத்தில் இனி தொடர்ந்து எழுதுவீர்கள் என நம்புகிறேன்.
வலைதளத்தின் வடிவம் எனக்கு உவப்பானதாய் இல்லை. மற்றபடி, உங்களின் கட்டுரைகளை வாசிக்க உகந்த இடமாய் தளம் இருக்கிறது.
நண்பர்கள் இளம்பரிதிக்கும், ஓவியர் ரஞ்சித் பரஞ்சோதிக்கும் அன்பைத் தெரிவியுங்கள்.
முருகவேலன்
6.
மதிப்பிற்குரிய பேராசிரியருக்கு,
நீண்ட நாட்களுக்குப் பின் உங்களிடமிருந்து ஒரு இலக்கிய விமர்சனம் என்று நினைக்கிறேன். இதற்கு முன், பூமணியின் அஞ்ஞாடிக்கு நீங்கள் எழுதிய கட்டுரையை வாசித்திருக்கிறேன். அதே போல் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை அடிப்படையாக வைத்து ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள். இடையிடையே நீங்கள் எழுதி வரும் திரைப்பட விமர்சனங்களையும் வாசிக்கிறேன். சமீபத்தில் காதல் - தி கோர் பற்றி எழுதிய கட்டுரை எனக்குப் பாதி விளங்கியது.
ஒவ்வொரு கட்டுரையிலும் சாதாரணமாகப் பலரும் கவனிக்க மறந்த இடங்களை நீங்கள் தொட்டுக் காட்டுவதை நான் கவனித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் இதை நீங்கள் எவ்வாறு உற்றுக் கவனிக்கிறீர்கள் என்று தோன்றும். அதை நாமும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். 'அறியப்படாத குற்றங்களின் சுழல்' கட்டுரையிலும் இந்த பாணி வெளிப்பட்டது. வேணுவும் அவனது தந்தையும் கோட்டை மாரியம்மன் கோவில் படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும் போது, தந்தை எதையோ சொல்ல வந்து, சொல்லாமல் விழுங்கியதை நீங்கள் தொட்டுக் காட்டியிருந்தீர்கள். அது தாய் பற்றிய ரகசியமோ என்று வேணு நினைத்ததையும் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். இது அந்த நாவலில் வேறு எந்த இடத்திலும் பேசப்படாத விஷயம். இங்கும் கூட அரசல் புரசலாய் மட்டும் எதுவோ சொல்லப்படுகிறது. இந்த சொல்லப்படாத தகவல் - இதை நீங்கள் நாவலின் அமைதி என்று அழைக்கிறீர்கள் - நாவல் பற்றிய உங்கள் வாசிப்பின் ஆணிவேராக அமைகிறது. இதே போன்றவொரு சம்பவத்தை அஞ்ஞாடியில் நீங்கள் விவரித்தது ஞாபமிருக்கிறது. அதிலும் இரண்டு கதாபாத்திரங்கள் எதையோ பேசத் துணிந்து, பின் மெளனமாகி விடும். அந்த இடத்தை நீங்கள் வளர்த்தெடுத்து அந்நாவலின் மையத்தை விளக்கியிருப்பீர்கள். கதாபாத்திரங்களின் மெளனத்தையே நீங்கள் வாசிக்கிறீர்கள் என்று சொல்லலாமா?
து. பழனிச்சாமி
Comments