top of page

மாயாதீதம் - அறியப்படாத குற்றங்களின் சுழல்!

நோயாளிகளை அருகிலிருந்து கவனித்துக் கொள்ள நம்மூர்களில் எப்பொழுதும் ஒரு உறவினர் இருப்பார். பண்டுவம் பார்க்கிறது என்று இதைச் சொல்வார்கள். அப்படி ஒருவரைக் கைகாட்டி, ‘உண்மையில் அவர் தான் நோயாளி!’ என்று நம்மிடம் யாராவது சொன்னால், நாம் திடுக்கிடுவோம் தானே! ஶ்ரீராம் அப்படித்தான் சொல்கிறார். அதை மாயம் என்றும் சொல்கிறார். அவரது ‘மாயாதீதம்’ என்ற நாவல், நோயுற்றவன் அல்ல, உதவிக்கு இருக்கிறவனே நோயாளி என்கிறது.அலோபதி மருத்துவத்தால் கைவிடப்பட்டவர்கள் நாட்டுப்புறத் தெய்வக் கோயில்களைத் தஞ்சமடைவது இயல்பு. அங்கே விதவிதமான சிகிச்சை(?) முறைகள் நடைமுறையில் உள்ளன. அத்தனையும் உடலை வருத்திக் கொண்டு செய்ய வேண்டியவை. மண்சோறு சாப்பிடுவதில் ஆரம்பித்து அலகு குத்திக் கொள்வது வரை ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு பரிகாரம். நோயாளி இதைச் செய்து முடிப்பதற்கு நிச்சயமாய் ஒரு உதவியாளர் தேவை. உறவினரில் ஒருவர் இந்தச் சவரட்சணைகளைச் செய்ய முன்வருகிறார்.


இக்கோயில்களில் பரிந்துரைக்கப்படும் அத்தனைப் பரிகாரங்களுக்கும் ஒரே விளைவு தான், ஆற்றுப்படுத்துதல். அவை, வழியைக் காட்டுகின்றன. தீராத நோய்கள் தரும் மன அழுத்தத்திலிருந்து விடுபட வழிகாட்டுகின்றன. சில நேரங்களில் அந்த நோயோடு வாழ்ந்துவிட நோயாளியைத் தயார்படுத்துவதும் உண்டு. 


இந்த நாட்களில் பெரும்பாலும் சந்நியாச வாழ்க்கை தான் பரிந்துரைக்கப்படுகிறது. உணவிலிருந்து பாலுறவு வரை ஏராளமானக் கட்டுப்பாடுகள். சுருக்கமாகச் சொன்னால், லெளகீக உலகிலிருந்து பாரதூரம் விலகியிருக்கச் சொல்கிறார்கள். இந்திய மருத்துவ முறைகள் அனைத்துமே கூட சிகிச்சை நாட்களில் இந்த சந்நியாசத்தை தான் வலியுறுத்துகின்றன, ஒரு மண்டலத்திற்கோ அல்லது பல மண்டலங்களுக்கோ.  ஒரு சடங்கின் போது சொல்வது போல அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என்று சொல்கிறார்கள். சிகிச்சையும் சடங்கும் ஒன்று.


இதனால் தான் நமது வைத்திய முறைகளில் நோயாளி என்றைக்குமே தனியாக இல்லை. ஒருவர் தீராத வியாதியோடு தனித்து விடப்படுவது, இந்தியாவில் சாபம் என்று கருதப்படுகிறது. நோயாளிக்குச் சொல்லப்பட்ட சந்நியாசத்தைத் தானும் கடைபிடிக்க சம்மதிக்கும் ஒரு உதவியாளர் கட்டாயம் தேவைப்படுகிறார். எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், இத்தகைய உதவியாளர்கள் தங்கள் வாழ்வின் லட்சியமே இது தான் என்பது போல, நோயாளியோடு போராடிக் கொண்டிருப்பதை கோவில் குளங்களில் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியும். 


‘பய்யனுக்கு இப்பிடியொரு பிரச்னையிருக்குன்னு எங்கிட்ட ராத்திரியே சொல்ல வேண்டாமாண்ணா…என்ன ஆளுப்பா நீ…’ (பக். 19) என்று சொல்லி சித்தப்பா பார்வையை இழந்து கொண்டிருக்கும் சிறுவனை கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு அழைத்துச் செல்வதே நாவலின் பிரதானம்.


நோயாளியை விடவும் உதவியாளர்களே பண்டுவத்தில் வெறிகொண்டு நிற்பார்கள். இதை ஒரு வகையில் நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். உடல்ரீதியாய் நலிவுற்றிருக்கும் நோயாளி அலைபாய்கிறார். தடுமாறுகிறார். சந்தேகம் கொள்கிறார். உடைந்து நொறுங்குகிறார். இந்த நேரங்களிலெல்லாம் உதவிக்கு இருப்பவர்களே பிடிவாதமாய் நிற்கிறார்கள். தைரியமூட்டுகிறார்கள். ஆற்றுப்படுத்துகிறார்கள். நாவலில் வருவது போல, நோயாளியை முதுகில் உப்பு மூட்டை சுமப்பது போலத் தூக்கித் திரிகிறார்கள். பண்டுவம் பார்த்து முடிகிற வரைக்கும் அவர்கள் ஒரு நிலையில் இருப்பது இல்லை. வெறி கொண்டு திரிகிறார்கள். அவர்களுக்குள் எதுவோ புகுந்து கொண்டு இயக்குவது போல நடந்து கொள்கிறார்கள். அவர்களுக்குள் என்ன புகுந்து கொண்டது என்று விசாரிக்கிறது நாவல்.


விசாரணையின் முடிவில் குற்றவுணர்வு என்று முடிவு சொல்கிறது. அதாவது, ரகசியக் குற்றங்கள் ஏற்படுத்தும் ரணம் என்று சொல்கிறது.  அந்த ரணமே அவர்களை வெறிகொண்டு அலைய வைக்கிறது. வாழ்வின் போக்கில் அடுத்தவருக்கு விளைவித்த அநியாயம். நிகழ்த்திய துரோகம். சொன்ன பொய். இப்படி செய்த ஒவ்வொரு குற்றமும் அம்பலப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தால் கதையே வேறு.  


ஆனால், இந்தக் குற்றங்களெல்லாம் தன் நெஞ்சுக்கு மட்டுமே தெரிகிற சூழலில், அதன் பாரத்தைத் தாங்க முடியாமல் மனச்சிடுக்குகள் நிரம்பிய நோயாளிகளாக மாறுகிறார்கள் என்று சொல்கிறது  நாவல்.  அத்தகைய நபர்களுக்கு 'சதா வெறுமையும் விரக்தியும் கவ்வுகிறது; மனது எதிலும் லயிக்கவில்லை; எந்த வேலையைப் பார்ப்பதும் பிடிக்கவில்லை; வாழ்வின் இறுதிக் கட்டத்திற்கு வந்தது போல் தோன்றுகிறது' (பக். 99) என்று ஶ்ரீராம் எழுதுகிறார்.  காலத்தின் மாய விளையாட்டு அவர்களை எங்கே இழுத்துச் செல்கிறது என்பதற்கு நாவல் ஒரு பதிலைச் சொல்கிறது.


இந்திய மரபில் இத்தகைய மனச்சிக்கலைச் சந்திக்கிற நபர்கள், தங்களுக்கான தீராத வியாதிக்காரர்களைக் கண்டுபிடிக்கிறார்கள். அதாவது, பண்டுவம் பண்ணுவதற்கு உதவியாளர் தேவைப்படுகிற ஒரு நோயாளி.  அந்த நபர் ஏற்கனவே உடலளவில் துவண்டு போயிருக்கிறார்.  அவரை எல்லாவித வைத்திய அறிவுகளும் கைவிட்டு விட்டன.  அவர் வாழ்வதற்கான நம்பிக்கையை முற்றிலும் இழந்து நிற்கிறார்.  அவரை ஆற்றுப்படுத்துவதன் மூலம் தாங்கள் கரையேறி விடமுடியுமா என்பது இந்த அகச்சிக்கலர்களின் விருப்பமாக இருக்கிறது.


நாவலின் முதன்மைக் கதாபாத்திரத்திற்கு தீராத கண் நோய் வந்த போது, அவனுடைய சித்தப்பாவே அதைத் தலை மேல் தூக்கிப் போட்டுக் கொள்கிறார்.  வைத்தியம் கைவிட்ட போது அவனது தந்தை நம்பிக்கையை இழந்து விடுகிறார். ஆனால், சித்தப்பா அப்படி இல்லை. அவனைக் குணப்படுத்துவதே அவர் லட்சியமாக மாறுகிறது.  அதைச் செய்தும் காட்டுகிறார். யார் சொல்லியும் கேட்காத பிடிவாதம் தான் அவரை இயக்கிக் கொண்டிருக்கிறது.  


இதற்கானக் காரணத்தை முதன்மைக் கதாபாத்திரத்தால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை.  அதுவொரு மாயமெனத் தோன்றுகிறது.  அதற்கானக் காரணங்களைச் சொல்ல வந்த கதையும் ஒரு கட்டத்தில் தயங்கி அமைதியாகி விடுகிறது.  கண் நோய் கண்ட சிறுவனை அழைத்துக் கொண்டு அப்பா கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வந்த போது, 'அப்பா பலமாக யோசித்த படி என்னிடம் ஏதோ பேச முயல்வது தெரிந்தது.  தீவிரமானத் தயக்கம் அப்பாவை என்னிடம் பேசவிடாமல் செய்தது.  அது அம்மாவைப் பற்றிய ரகசியமாகக் கூட இருக்கலாம்.  அப்போது திடீரென அகல் அணைந்தது'  (பக். 12) என்று சந்தேகத்தை மட்டும் கிளப்பி விட்டு  நாவல் கைவிரித்து விடுகிறது.   ஆனால், அதே சிறுவன் வளர்ந்து பெரியவனாகி, தன் தம்பி மகனை தீராத வியாதிக்காரனாகக் கண்டு, பண்டுவம் பார்க்கக் கிளம்புகிற போது, அதற்கானக் காரணம் தெளிவாகத் தெரிகிறது.  குற்றவுணர்விலிருந்து விடுபடுதல்!


இதுவொரு வினோதமான பிரச்சினையை நமக்குக் காட்டித்தருகிறது.  தெய்வங்களையும் நோய்களையும் இணைத்து யோசிக்கிற பண்பாட்டில், அகச்சிக்கல்களுக்கு நேரடியான விமோசனம் இல்லை.  இன்னும் தெளிவாகச் சொன்னால், அகச்சிக்கலரின் உடல் என்று எதுவும் இல்லை.  அவர்கள் தங்களுக்கான பரிகார உடல்களை அடுத்தவரிடத்தில் தேட வேண்டியிருக்கிறது.  மாற்று நோயாளிக்கானத் தேடல். அகச்சிக்கலுக்கான இந்திய சிகிச்சை முறை இப்படியே ஆரம்பிக்கிறது.


இந்த மாற்று நோயாளியகள், தீர்க்க முடியாத வியாதிகளால் பீடிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.  அதாவது,  எல்லாவித வைத்திய அறிவுகளும் ஒதுக்கித் தள்ளி, 'தெய்வங்களே இனி கதி' என்ற நிலைக்கு வந்து விட்ட உடல்கள். பிணி நிரம்பிய உடல்கள்.  இத்தகைய மாற்று உடல்களுக்கான பரிகாரங்களை உடனிருந்து செய்யும் போது, மாற்று உடலின் நோயும் இவரது அகச்சிக்கலும் ஒருங்கே குணமாகிறது என்பது நம்பிக்கை. குற்றவுணர்விலிருந்து வெற்றிகரமாக வெளியேறுவதற்கான சூத்திரம் இது.


*  


இத்தகைய அகச்சிக்கலர் செய்யும் பண்டுவங்களை மரபு தானதர்மம் என்று பெயரிட்டு அழைக்கிறது.   எந்த சமூகத்தில் தானதர்மங்கள் பெருகுகின்றனவோ அந்த சமூகத்தில் அறியப்படாத குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்று அர்த்தம். அதாவது, ரகசியக் குற்றங்களால் மனச்சிடுக்குகள் பெருகிய நபர்கள் நிறைந்த சமூகம். 


19ம் நூற்றாண்டு ஐரோப்பிய சமூகம் இதை முற்றிலும் வேறு கோணத்தில் அணுகியிருந்தது.  சிக்மண்ட் ஃப்ராய்டின் உளப்பகுப்பாய்வு முறையியலில் அகச்சிக்கலுக்கான காரணம், ஒடுக்கப்பட்ட ஆசைகள் என்று சொல்லப்படுகிறது.  மிகக்குறிப்பாகப் பாலியல் விருப்பங்கள். காரணகாரியங்களற்று விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், தீவிரமான மன அழுத்தங்களையே ஏற்படுத்துகின்றன.  அதிலும் கேள்வி கேட்கமுடியாத அதிகாரத்தின் வாயிலிருந்து வெளிப்படும் ஒழுங்குமுறை விதிகள் ஒவ்வொருவரின் தன்னிலையை வடிவமைப்பதிலும் முக்கியப் பங்கினை வகிக்கின்றன.  


தனது உடலையும் அதன் சுற்றுப்புறத்தையும் விளங்கிக் கொள்ள முயலும் குழந்தைப் பருவத்தில், இத்தகைய ஒடுக்குமுறைகளால் ஏற்பட்டத் தழும்புகளே பின்னாளில் மனநோயாக வெளிப்படுகின்றன என்பது உளப்பகுப்பாய்வியலின் அடிப்படை.  எனவே, மனச்சிடுக்குகளுக்கான சிகிச்சையில் பிள்ளைப்பிராயத் தழும்புகளை அடையாளம் காண்பது முக்கியமான அங்கமாக இருந்தது.  இதற்காக ஒவ்வொரு மனநோயாளியும் ஒரு உளவியலாளரின் உதவியுடன் தனது கடந்த காலத்தினுள் விடைகளைத் தேடும் படி அறிவுறுத்தப்பட்டார்.  அல்லது, அக்கடந்த காலத்தின் வினோத தோற்றங்களானக் கனவுகளுக்கு விளக்கம் தேடும் படி அறிவுறுத்தப்பட்டார்.  


இதில் இரண்டு விஷயங்கள் ஆச்சரியமானவை. ஒவ்வொருவரின் வரலாறும் அவரவர் மனச்சிடுக்குகளுக்கானத் தீர்வுகளைக் கொண்டிருக்கின்றன என்று சொன்னால் வரலாறு உங்களை விடுதலை செய்யும் என்று அர்த்தம்.  இரண்டாவது, ஒவ்வொருவரின் அறியப்படாத வரலாறும் கனவு என்னும் குதர்க்க வடிவத்திலேயே வெளிப்படுகிறது என்றால் வரலாறின் யதார்த்த வடிவம் மாயாஜாலமே.   


இந்த அடிப்படைகளை தனி நபர்களுக்கு மட்டுமல்லாது, சமூகத்திற்கும் நம்மால் பொருத்திப் பார்க்க முடியும்.  ஒவ்வொரு சமூகமும் தனது நாகரீகத்தை அல்லது பண்பாட்டை இதையொத்த வழிமுறைகளின் மூலமே வடிவமைத்துக் கொள்கிறது.  இரண்டு தனியன்களுக்கு இடையிலான ஈர்ப்பை, ஒழுங்கு என்ற பெயரில் திருமணம் போன்ற சடங்குகளாலும் குடும்பம் போன்ற அமைப்புகளாலும் வரையறுக்கும் போதே பண்பாடு உருவெடுக்கத் தொடங்குகிறது.  ஆதி உணர்வாகிய உயிர்களின் மீதானக் காதலையே சமூகம் அடித்துத் துவைத்து இரத்த - மண உறவுகளுக்கு இடையிலான பற்றாக விளக்கப்படுத்தியிருக்கிறது.  சமூகப் பழக்கவழக்கம் என்பது சகவுயிர்கள் மீது தோன்றும் நேசத்தை வீழ்த்தியே எழுப்பப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை.  அதாவது, காதலைக் காவு கொடுத்து கலாச்சாரத்தை கட்டியெழுப்பினோம்.


அப்படியானால், குடும்பம் என்ற அமைப்பினுள் ஒருவர் இன்னொருவர் மீது காட்டும் எந்தவகை நேசமும் தூய்மையானது அல்ல.  அந்த அமைப்பே, பல்வேறு வகையான அதிகாரங்களால் நிர்வகிக்கப்படுகிறது என்று சொன்னால், அங்கே கருணை என்பதற்கும், ஈர்ப்பு என்பதற்கும், அன்பு என்பதற்கும் தூய அர்த்தங்கள் எவையும் இல்லை.  


ஒரு தந்தை தன் மக்கள் மீது காட்டும் பரிவு, ஒரு தாய் தன் குழந்தைகள் மீது செலுத்தும் அன்பு, உடன்பிறந்தோருக்குள் தோன்றும் கரிசனம், ஏன் பொதுவாக இரத்த உறவுகளுக்குள் காட்டப்படும் நேசம், மணவுறவுகளுக்குள் வெளிப்படும் ஈர்ப்பு என அனைத்திலும் வெளிப்படையானப் பொருளாதாரக் காரணங்களும் உள்ளன.  ஏனெனில் சமூகம் வரையறுத்துள்ள உறவுமுறைகளின் அடித்தளம் பாலியல் மற்றும் பொருளியல் வேட்கைகளை ஒழுங்குபடுத்துவதாகக் காணப்படுகிறது.  குடும்பம், அடிப்படையில் ஒரு நிறுவனம். அதில் ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்ளும் ஈர்ப்புகளுக்கு சமூகப் பொருளாதாரக் காரணங்களை சர்வ சாதாரணமாகக் கண்டுபிடித்து விட முடியும்.  சாமானியர்களின் வாழ்க்கை இத்தகைய ஈர்ப்புகளாலும் வெறுப்புகளாலுமே அமைந்து விடுகிறது.


ஆனால், சில விதிவிலக்குகளாக, அவ்வப்போது யாரோ ஒரு சிலர் இத்தகைய சமூகப் பொருளாதாரக் காரணங்களை மீறி செயல்பட ஆரம்பிக்கிறார்கள்.  நாவலில் வரும் சித்தப்பாவைப் போல, எது உந்தியது என்று சொல்ல முடியாத வகையில் அவர்கள் சக மனிதர்கள் மீது பிரியத்தைக் கொட்ட ஆரம்பிக்கிறார்கள்.  தங்களது வாழ்க்கைக்கான அர்த்தத்தை அவர்கள் சமூக ஒழுங்குமுறைகளுக்கு வெளியே தேடத்தொடங்குகிறார்கள்.  


அவர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும் பொழுது, தூய அன்பு என்று எதுவும் இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் கூட எழுகிறது.  எதையும் எதிர்பார்த்திராத பாசம்!  நிர்மலமான கருணை! பிளேட்டோவிலிருந்து பலரும் இத்தகைய தூய நேசத்தைக் கற்பனை செய்து பார்த்திருக்கிறார்கள். அப்படியொன்றை தத்துவார்த்த நிலையாகவாது கட்டமைக்க முடியுமா என்று முயற்சி செய்து தோற்றிருக்கிறார்கள்.  பாலுறவில் கூட உறவு என்று சொல்வதற்கு எதுவுமில்லை; அதில் இரண்டு உடல்கள் வெவ்வேறு திசைக்கு கிளம்பிச் செல்கின்றன என்று லெக்கன் குறிப்பிடுவது இதனால் தான்.  அதைத் தொடர்ந்து அலெய்ன் பாத்யோ நான்கு கண்களால் ஒரே காட்சியைப் பார்ப்பதே காதல் என்று சொல்வதும் கூட மிகையானக் கற்பனை தான்.  அப்படியானால், சிலர் மட்டும் கட்டற்ற அன்பை வெளிப்படுத்துவது எவ்வாறு?


ஒவ்வொரு முறை அன்பு விவாதிக்கப்படுகையிலும், அதில் யார் 'நானாக' இருக்கிறார்கள் யார் 'மற்றவராக' இருக்கிறார்கள் என்ற கேள்வி, ஒட்டுமொத்த பிரச்சினையையும் அறச்சிக்கலாக மாற்றி விடுகிறது.  அன்புக்கு ஸ்தூல வடிவம் எதுவும் இல்லை.  அது தொடர்ச்சியான அனுபவங்களிலிருந்து தருவித்துக் கொள்ளப்படும் சாரம்.  அதனால், 'நான்' எனது 'மற்றவருக்கு' கருணையை, நன்றியை, கரிசனத்தை மட்டுமே காட்டுகிறேனே தவிர அன்பை அல்ல. அவர் பதிலுக்கு என் மீது கருணையையோ நன்றியையோ கரிசனத்தையோ செலுத்த முடியும். இந்த நிகழ்வுத் தொடரே அன்பாக, காதலாகப் பார்க்கப்படுகிறது.  


*


ஆனால், மாயாதீதம் நாவலில் விவாதிக்கப்படும் விஷயம், கருணை தொடர்பானது.  ஒருவர் மிகத் தெளிவாக, உடல்ரீதியாக நலிவுற்றவர்.  அவர் தன்னந்தனியே செயல்பட முடியாதவர்.  அவருக்கான ஆதரவுக்கரத்தை இன்னொருவர் நீட்டுவது மனிதாபிமானம் சார்ந்தது. இத்தகைய மனிதாபிமானத்தை இந்தியக் குடும்ப அமைப்பு 'இரத்தப்பாசம்' என்று வகைப்படுத்துகிறது. ஆனால், நாவல் அதை அவ்வளவு எளிதாய் கடந்து போக விரும்பவில்லை.


வேணு என்ற அக்கதைசொல்லி, சித்தப்பா தன் மீது காட்டிய அபரிமிதமான அன்பிற்கான விளக்கத்தை கடைசி வரை தேடிக் கொண்டே இருக்கிறது.  இந்தத் தேடலின் போது, நாட்டுப்புறத் தெய்வச் சூழல், தேசாந்திரி என்றொரு சித்தன், அங்கங்கே தோன்றி மறையும் கருத்த நாய் என்று இந்திய அமானுஷ்யங்களுக்கே உரித்தான கூறுகள் இடையிட்டு மாயாஜாலத்தன்மையை உருவாக்குகின்றன. ஆனால், இந்த அமானுஷ்யங்களை விடவும் சித்தப்பா காட்டிய காரணகாரியமற்ற நேசமே அவனுக்கான பிரத்தியோகக் கேள்வியாக  இருக்கிறது.  இந்தக் கேள்விக்கான விடையை சொந்த அனுபவத்தின் மூலம் கண்டு தெளியும் போது, சம்பவங்களின் மாயச்சுழலுக்குள் மாட்டிக் கொண்டிருப்பதாக உணர்கிறான்.  ஒரு மயக்கத்திலிருந்துத் தெளிந்து இன்னொரு மயக்கத்தில் ஆழ்வது.  காரணகாரியமற்ற அன்பிற்கான விளக்கத்தை அக்கதாபாத்திரம் அடைந்த போது, ஒரே வாழ்க்கையைத் தான் தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற போதத்தை அவன் அடைகிறான்.  


என்.ஶ்ரீராமிம் மாயாதீதம் என்ற நாவலின் பலம் என்று நான் நினைப்பது, அது சொல்லப்பட்ட விதம்.  மிகச் சின்ன சின்ன வாக்கியங்களில் கதை சொல்லப்படுகிறது.  அதனால் அனாவசியமாய் எந்தவொரு விவரணையும் இல்லை.  அதே போல், நீண்ட அமைதியை வெளிப்படுத்தும் கதை சொல்லல்.  நிறைய விஷயங்கள் சொல்லப்படாமல் விளங்கிக் கொள்ளும்படி அமைக்கப்பட்டிருக்கின்றன.  கொஞ்சம் உறுத்தலாய் இருந்த விஷயம், தேசாந்திரிக்காரனும் கருத்த நாயும் தான். தேய்ந்த வழக்காறுகள்!  அவை இல்லை என்றாலும், இந்த நாவலில் அமானுஷ்யத்திற்கு குறைவிருந்திருக்காது. 


313 views0 comments

Comentarios


bottom of page