அன்புள்ள தர்மராஜ்,
நீங்கள் சிலாகிக்கும் மாரி செல்வராஜின் மூன்றாவது படம் ‘மாமன்னன்’ வெளியாகப் போகிறது. போன முறை, கர்ணன் படத்தின் முதல் பாடல் வெளியானபோது (கண்டா வரச்சொல்லுங்க!) நீங்கள் எழுதிய பதிவு இப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கிறது. வன்முறையைக் கலை வடிவத்தில் வெளிப்படுத்தும்போது உருவாகும் வெப்பம் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த முறை, மாமன்னன் பற்றி எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. இல்லை, நான் தான் கவனிக்காமல் விட்டு விட்டேனா? மாமன்னன், தேவர் மகன் சண்டைவேறு இணையத்தில் தூள் பறக்கிறது. உங்கள் அபிப்பிராயம் என்ன?
எஸ். மோகன்
*
திரு. மோகன்,
நீங்கள் சொல்வது சரி. மாமன்னன் படத்தின் பாடல்கள் எனக்கு எந்தவித ஆர்வத்தையும் ஏற்படுத்தவில்லை. அதனால், படம் வெளியாகட்டும் பார்த்த பின் பேசலாம் என்றே அமைதி காத்திருந்தேன். ஆனால், இசை வெளியீட்டு விழாவில், மாரி செல்வராஜின் பேச்சு, அதிலும் தேவர் மகன் திரைப்படம் குறித்த பேச்சு, எனக்குள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சொல்லப்போனால், இப்பொழுது நான் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். இந்த இடத்தில் என் எதிர்பார்ப்பு பற்றி விளக்கி விடுவது உத்தமம் என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு, அந்தப் பேச்சு, ‘மாரி செல்வராஜ் – கமலஹாசன்’ மோதலாக கூர்தீட்டப்படுகிறது. வழக்கமாய் இணையத்தில் பேசிப்புழங்கும் அரைகுறைகளால் நிகழும் அவலம் இது. ஆனால், அப்படம் குறித்து எனக்குள் உருவாகியிருக்கும் எதிர்பார்ப்பு வேறு மாதிரியானது.
1. முதலில், அந்த வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜூம் சரி, கமலஹாசனும் சரி வெளிப்படுத்திய உணர்வுகள் எனக்குப் பிடித்திருந்தன. மாரிக்குப் பின்னால் வருவோம். கமலஹாசன் அப்பேச்சை எதிர்கொண்ட விதம் எனக்கு ஆச்சரியம்.
இதே கமலஹாசன், 2018 போல, சுகுணா திவாகர் கேட்ட கேள்விக்கு, ‘மன்னிப்பு, மட்டை’ என்று பேசிய அபத்தத்திலிருந்து எவ்வளவு தூரம் வளர்ந்து வந்திருக்கிறார் என்று அறியும் போது வியப்பாக இருக்கிறது. தேவர் மகன் திரைப்படம் தனக்கு மனப்பிறழ்வை ஏற்படுத்தியது என்று மாரி மேடையில் சொல்லும் போது, அதை தன் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளாமல், அதிலும் கவனிக்கத்தக்க விஷயம் இருக்கிறது என்பது போலிருந்த கமலஹாசனின் முகபாவத்தை நான் ரசித்தேன்.
அந்தப் படம் ஒரு சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதைச் சொல்லும் போது, அதற்கான மொத்தப் பழியையும் படைப்பாளி தன் தலையில் போட்டுக் கொள்ளும் தவறை கமல் இந்த முறை செய்யவில்லை. ‘ஆசிரியன் இறந்து போனான்’ என்ற தொனியில் உட்கார்ந்திருந்தார். நம் இலக்கியவாதிகளிடம் ரொம்ப காலமாக நாம் எதிர்பார்த்திருக்கும் மனோபாவத்தை திரைப்படக் கலைஞர் வெளிப்படுத்தினார்.
நல்ல வேளையாக, மாரியின் பேச்சிற்கு அவர் பதில் ஏதும் சொல்ல முயற்சிக்கவில்லை. அந்தப் படம் சமூகத்தினுள் ஏற்படுத்திய விளைவுகளுக்கும் அதை உருவாக்கியத் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று யோசிப்பது சுலபம் அல்ல. அதிலும், இப்படியான பழிகளுக்கு நேரடியாய் பதில் சொல்லிக் கொண்டிருந்த கமல், இன்று அமைதியாய் அதை ஏற்றுக் கொள்வதற்கு எல்லையற்ற நிதானம் தேவை.
இந்த நிதானத்தை, ‘அன்றைக்கு வெளிப்பட்டது, கமல் என்ற படைப்பாளியின் குணமல்ல, கமல் என்ற அரசியல்வாதியின் குணம்’ என்றுகூட யாராவது சொல்லக்கூடும். அது பற்றி எனக்குக் கவலையில்லை. அது அப்படியே அரசியல் குணமாக இருந்தாலும், ஒவ்வொரு கலைஞனும் அந்த அரசியலைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.
2. மாரி செல்வராஜிற்கு வருவோம். கமலஹாசனை எதிரில் வைத்துக் கொண்டு பேசியதற்காக முதலில் அவரை நான் பாராட்டுவேன். முன்னொரு நாளில் ‘திறந்தமடல்’ எழுதிய நபர், இன்றைக்கு அதை துணிச்சலோடு நேருக்கு நேராய் சொல்ல முனைந்தது என்னைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான விஷயம். கமல் அந்த விழாவில் இல்லாமலிருந்து மாரி அப்படி பேசியிருந்தால், நிச்சயமாய் அது அருவருப்பாய் இருந்திருக்கும். அந்த வகையில், மாரியின் இந்த செய்கையை நான் உற்சாகப்படுத்த நினைக்கிறேன்.
இரண்டாவது, தேவர்மகன் திரைப்படத்தில் உணர்ந்த போதாமைகள் காரணமாகவே ‘மாமன்னன்’ உருவானான் என்ற செய்தி எனக்குள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. தலித் இலக்கியம் குறித்து ஒரு முறை நான் இப்படி எழுதியிருக்கிறேன்.
‘தலித் இலக்கியத்திற்கு (அது ஆரம்பிக்கப்பட்ட 1990களில்) இரண்டு வாய்ப்புகள் இருந்தன – ஏற்கனவே எழுதப்பட்ட மேட்டிமைப் பிரதிகளின் தலித் பக்கத்தை எழுதிப் பார்ப்பது, ஒன்று. ஒரு வேளை அப்படிச் செய்திருந்தால், புளியமரத்தின் கதைக்கு ஒரு தலித் வெர்சனை யாராவது எழுதியிருக்க முடியும். தோட்டியின் மகனுக்கு இன்னொன்று. நூறு நாற்காலிகளுக்கு வேறொன்று. இரண்டாவது வாய்ப்பு, தனித்துவமான தலித் மேட்டிமைக் குரலைக் கொண்ட பிரதிகளை எழுதுவது. துரதிர்ஷ்டவசமாக தமிழில் இந்த இரண்டாவது வகையைத் தான் எல்லோருமே பின்பற்றினர். என் குழந்தை. எனக்கே எனக்கான குழந்தை. தலித் குழந்தை!’ (யாதும் காடே, யாவரும் மிருகம் கட்டுரை, ‘சீலியின் சரீரம், தலித் சிறுகதையா?’)
எந்த வாய்ப்பை தமிழ் தலித் இலக்கியம் தவறவிட்டது என்று நான் குறிப்பிட்டேனோ அதையே ‘மாமன்னன்’ திரைப்படத்தில் செய்திருப்பதாக மாரி செல்வராஜ் குறிப்பிடுகிறார். திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன் இப்படி ஒரு அபிப்பிராயத்திற்கு வருவது தவறுதான். ஒரு வேளை திரைப்படத்தில் மாரி சொல்வது நிகழாமல் போயிருக்கலாம்; அல்லது, அரைகுறையாய் நிகழ்ந்திருக்கலாம். அந்த வகை அனுமானங்களுக்கெல்லாம் நான் இன்றைக்கே போக விரும்பவில்லை. எனக்கு முக்கியம் எனத் தோன்றுவது, சாதிய வன்மத்தை விளைவித்த ‘தேவர் மகன்’ என்ற படைப்பிற்கான தலித் வெர்சனை ஒருவர் செய்திருக்கிறார் என்பதுதான்.
இதுவொரு ஆரோக்கியமான விஷயம்; அதே நேரம், தேவர் மகன் உருவாக்கிய பிறழ்வுகளிலிருந்தும், பதட்டத்திலிருந்தும் ஒரு சமூகத்தை வெளிக்கொண்டு வர கலைஞன் செய்ய வேண்டிய இன்றியமையாத காரியமும் இதுதான். ஏனெனில், கலைஞனின் அரசியல் துல்லியமாய் வெளிப்படுவதற்கான களம், மறுவாசிப்பு! மாரி செல்வராஜ் அப்படியொன்றை மாமன்னனில் முயற்சி செய்திருக்கிறேன் என்று சொல்வதை நான் நம்ப விரும்புகிறேன்.
இதே காரியத்தை பா.ரஞ்சித் ‘கபாலி’ படத்தில் செய்ய முயற்சித்ததை நான் மறக்கவில்லை. அந்தப் படத்தின் புகழ்பெற்ற வசனத்தை நினைத்துப் பாருங்கள். ‘சொல்லுங்க எசமான்னு கும்பிடுற கபாலினு நினைச்சியாடா?’ என்ற வசனம் ஏறக்குறைய ஒரு மறுவாசிப்பின் தன்மையைத்தான் கொண்டிருந்தது. அதற்கு முன்பிருந்த தமிழ்த் திரைப்படங்கள் அனைத்தையும் மறுவாசிப்பு செய்யும் பாவனையை அந்த வசனம் வெளிப்படுத்தியது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, திரைப்படத்தில் அதற்கான எந்த முகாந்திரமும் இன்றி, அது வெற்று விளம்பர உத்தியாக மட்டுமே சுருங்கிப் போனதே அதன் மாபெரும் தோல்வி. ‘கால் மேல கால் போட்டு உட்காருவேன்டா! அப்படித்தான் கோட்டு போடுவேன்டா!’ என்ற வசனங்கள் படத்தில் துருத்திக்கொண்டு நின்றதை நாம் வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம். மாமன்னனிலும் இப்படி நடப்பதற்கான வாய்புகள் இல்லாமல் இல்லை. ஆனால், தேவர் மகனில் முக்கியமான கதாபாத்திரத்தை செய்த வடிவேலுவை, இந்தப் படத்திலும் கொண்டு வந்திருப்பதும், அவரையே ‘மாமன்னன்’ என்று சொல்வதும் சிறு நம்பிக்கையைத் தருகிறது. இது விளம்பர உத்தி மட்டுமல்ல, நிஜமாகவே மாரி செல்வராஜ் ஒரு தலித் வெர்சனை உருவாக்குகிறார் என்று நம்பச் சொல்கிறது.
3. மூன்றாவதாக, மாரி செல்வராஜ் தேவர் மகன் திரைப்படம் குறித்து எழுப்பக்கூடிய விமர்சனங்கள் தர்க்கபூர்வமானதா என்ற கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது. இப்படிக் கேட்கிற பலரும், அவர் ஒரு தலித் என்ற கோணத்தில், அதை விமர்சிக்கும் நியாயமிருக்கிறது என்று சொல்லும் வேளையில், அந்தப் படம் அப்படியானது அல்ல என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, மாரியின் விமர்சனத்தில் தலித் நியாயம் இருக்கிறதே தவிர, தர்க்க அளவில் தவறானது. ஏனென்றால், அந்தப் படமே சாதிப் பெருமைக்கும், வன்முறைக்கும் எதிராகத்தான் பேசுகிறது என்று விளக்குகிறார்கள்.
உண்மையில், மாரியின் விமர்சனத்திற்கு தலித்திய சலுகை மட்டும்தான் உள்ளதா? அவர் சொல்வதில் அறிவியல் உண்மைகள் இல்லையா என்று நாம் கேட்டுப் பார்க்கலாம்.
திரைப்படம், ஒரு வினோதக் கலவைப் படைப்பு. அது, கலைகளின் கலவை என்பதால், வெளியான கொஞ்ச நாட்களிலேயே தன்னைத்தானே சிதறடித்துக் கொள்கிறது. ‘இளையராஜாவை வரைதல்’ என்ற கட்டுரையில் திரைப்படங்களின் இந்தக் குணத்தை இவ்வாறு விளக்கியிருந்தேன்.
‘பொதுவாக, வெளியான வேகத்தில் ஓடி முடித்து விடுபவை இந்தியத் திரைப்படங்கள். ஈசலைப் போல. இதற்குக் காரணமாக, அதன் கதம்ப குணத்தைத் தான் சொல்ல வேண்டும். கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் காமம், கொஞ்சம் வீரம், தூக்கலாக அழுகை என்ற கதம்பகுணம் இந்தியத் திரைப்படங்களை உள்ளிருந்தே அழிக்கக்கூடியது. இதனால், வெளியான கொஞ்ச நாட்களிலேயே ஒரு திரைப்படம் துண்டு துண்டாக கழன்று கொள்ளத் தொடங்குகிறது. பிடித்த நடனம், பிடித்த வசனம், பிடித்த பாடல், பிடித்த ஆடை, பிடித்த ஆபரணம் என்ற பெயரில் வெளியேறும் இத்துணுக்குகள் பின்பு தனித்தனியே வெகுஜன சூழலில் வலம் வர ஆரம்பிக்கின்றன’.
மாரி செல்வராஜின் விமர்சனம், இப்படித் துண்டு துண்டாகக் கழன்று சமூகத்தில் வலம் வரும் தேவர் மகன் திரைப்படத்தையே கவனத்தில் கொள்கிறது. ஒட்டுமொத்தமாக அத்திரைப்படம் வன்முறைக்கும், சாதிப்பெருமைக்கும் எதிராக இருப்பதாக நிரூபிக்கப்பட்டாலும், ஒரு திரைப்படத்தின் சமூகப் பயன்பாடு, ஒட்டுமொத்தத்தை என்றைக்குமே கவனத்தில் கொள்வதில்லை. மொத்தத்திலிருந்து, ‘தேவர் காலடி மண்ணே..’ என்ற பாடலை மட்டும் கத்தரித்து எடுத்து பயன்படுத்துவதற்கான வாய்ப்பை திரைப்படம் என்ற வடிவமே வழங்கி விடுகிறது. எனவே, மாரியின் விமர்சனத்தை தலித் நியாயம் என்ற சலுகையோடு அனுமதிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை; அதை, அறிவியல்பூர்வமாகவே நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்.
4. மேலும், ஒரு கலைஞனின் அரசியல் எந்த அளவிற்கு படைப்பில் வெளிப்பட முடியும் என்ற கேள்வியையும் நாம் கேட்டுப் பார்க்கலாம். தேவர் மகன் என்ற திரைப்படம், சமூகத்தில் விளைவித்த ‘சாதி அரசியல்’ உண்மை என்றால், அதை உருவாக்கிய படைப்பாளிகளின் அரசியலும் அதுவேதான் என்று முடிவு செய்வதைப் போன்ற அபத்தம் எதுவும் இல்லை.
அதாவது, தேவர் மகன் திரைப்படத்தைக் காரணம் காட்டி, கமலஹாசனையோ அல்லது இளையராஜாவையோ ‘சாதிவெறி வியாபாரிகள்’ என்று யாரும் தீர்ப்பிட முடியாது. ஏனெனில்,
‘கதையாடல்கள், மானுடர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை; அனுபவங்களைப் பேசுபவை அல்ல; அறிவைப் பகிரும் சாதனமும் இல்லை. ஒரு படைப்பாளி தனது அரசியல் ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக நின்று கூட ஒரு படைப்பை உருவாக்கியிருக்கலாம். அதன் மூலம், அவர் தன் அரசியல் அறிவை வாசகர்களுக்குக் கடத்தி விட்டதாகக் கூட திருப்தி அடைந்திருக்கலாம். ஆனால், அப்படைப்பு அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அது கதையாடல் என்ற தன்மையை அடையும் போது, யாராலும் தீர்மானிக்க முடியாத தற்செயல்கள் நிகழ ஆரம்பிக்கின்றன.’ (யாதும் காடே, யாவரும் மிருகம் – கட்டுரை, ‘அயோத்திதாசரின் அதீதக் கதையாடல்).
அதீதக் கதையாடலின் குணங்களாக அறியப்படும் இத்தற்செயல் நிகழ்வுகள், சாதிப் பெருமையை விமர்சிக்கும் தேவர் மகன் திரைப்படத்தை அதற்கு எதிர்திசையில்கூட கொண்டுபோய் சேர்க்கக்கூடும். ஏனெனில், எந்தப் படைப்பும் படைப்பாளிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தன் படைப்பு, தனக்கு எதிராகவே நின்று கொண்டிருப்பதைக் காணும் கலைஞன், மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கமலஹாசன் காட்டிய முகபாவத்தைத் தவிர வேறு எந்த நடவடிக்கை மேற்கொண்டாலும் அது அபத்தமாகவே சென்று முடியும்.
அதே போல, இவ்வாறு அதீதக் குணத்தோடு ஒரு படைப்பு இஷ்டத்திற்கு வாசிக்கப்படுகையில், நேர்மையான அரசியலாளன் என்ன செய்ய வேண்டுமென்பதற்கு மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ ஒரு உதாரணமாக இருக்கக்கூடும். தேவர்மகன் வெளிவந்தத் தருணங்களில் ‘திறந்தமடல்’ எழுதக்கூடியவராக மட்டுமே இருந்த மாரி, கலைஞனானத் தன்னை நிரூபித்துக்கொள்வது இந்த வகையிலேயே என்று நான் நினைக்கிறேன். ஆரம்பத்தில் கோபக்கார இளைஞனாக வெளிப்பட்ட மாரி செல்வராஜ் இன்று கலைஞனாக பதிலளிக்க முன்வந்தது, தன் படைப்பு விளைவித்த சேதங்களுக்கு பொறுப்பேற்று மன்னிப்பும் சால்ஜாப்பும் சொல்லிக் கொண்டிருந்த கமலஹாசன் அதை மெளனமாக எதிர்கொள்ள முன்வந்தது, இரண்டுமே என்னைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான விஷயங்கள்.
இதற்காகவே, எல்லோரையும் போல், நான் மாரி செல்வராஜின் மாமன்னனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன் – ஒரு திரைப்படம், வெளியான மறுகணமே சிதறும்; யாரும் எதிர்ப்பார்க்காத தற்செயல் விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று நன்றாகத் தெரிந்திருந்தும்.
Comments