top of page

மறதியின் மொழி: அஸ்வகோஷர் முதல் அயோத்திதாசர் வரை - பவணந்தி வேம்புலு

(அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் விமர்சனம்) பகுதி 1: ஒன்றைக் கடக்கும் ஒன்றாய் Palimpsest என்பதை அதன் நேர் அர்த்தத்தில் தமிழில் மொழிபெயர்க்க முடியுமா? என்னால் இயலவில்லை. இதுவொரு ஐரோப்பிய வடிவுச்சொல்; Book என்பதைப் போலவே இதுவும். ஆனால் Book புத்தகம் என்றானதைப் போல Palimpsest என்பதால் ஒரு தமிழ் வடிவம் கொள்ள முடியவில்லை; ஒரு இடறல் இருந்து கொண்டேயிருக்கிறது.

ஐரோப்பியச் சுவடிப் பண்பாடுக்கெனத் தனித்த சில குணப்பாடுகளுண்டு; பெரும்பாலும் நமது பனையோலையைப் போல பெப்பைரஸ் (papyrus) எனப்படும் ஒருவித மூங்கில் பட்டைகளில் எழுதப்பட்டு வந்தாலும், பாச்மென்ட் (parchment) எனப்படும் ஆட்டுத் தோலிலும், வெலம் (vellum) எனப்படும் இளங்கன்றின் தோலிலும் கூட எழுதப்பட்டன. மூங்கில் சுவடிகளை விட வரைதோல் சுவடிகளின் அழிமானம் குறைவென்பதால் அவற்றிற்கானத் தேவைகளும் அதிகம்; இருப்பினும் வரைதோலின் உற்பத்திக் குறைவும், உற்பத்திச் செலவும், அதோடு கூட ஐரோப்பாவில் அன்று நிலவிய நிரந்தர போர்ச்சூழல்களும் ஒன்றிணைந்து அவற்றின் பயன்பாட்டைப் பெரிதும் மட்டுப்பத்தி வந்தன. இதனால் ஒரு விநோதமான பழக்கமொன்று அன்றைய ஐரோப்பாவில் உருவாகியிருந்தது; ஏற்கனெவே எழுதப்பட்டிருக்கும் வரைதோலின் எழுத்துக்களைச் சற்றே சுரண்டிவிட்டு அதன் மேலாகவே புதிதாக எழுதிக்கொள்ளும் வழமை ஒன்று தோன்றியது. ஊன்றிக் கவனித்தால் மேலெழுதப்பட்டவற்றின் ஊடாகக் கீழெழுதப்பட்ட எழுத்துருக்களையும் வாசித்து விடக் கூடியதாகவே அச்சுவடிகளிருக்கும்; இப்படியான ஊடுபோக்கில் இழை மேலிழையாய் எழுதப்பட்டிருக்கும் சுவடிகளைத் தான் பெலிம்செஸ்ட் (Palimpsest) எனச் சொல்வதுண்டு. தமிழ்ச் சுவடிப் பண்பாட்டில் இடைச் செருகல்கள் மலிந்திருந்தனவேயன்றி, மேற்சொன்ன ஒன்றின் மேல் ஒன்றான ஊடுபோக்கான குறுக்குச் சால் எழுத்து முறைகள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அதற்கு நமது பனையோலைகளின் விருத்தியும், தன்மையும் காரணமாயிருக்கலாம். ஆக பெலிம்செஸ்ட் (Palimpsest) ஒரு ஐரோப்பியப் பகாப்பதமாகவே தமிழில் இன்றளவும் இருந்து வருகிறது.

பெலிம்செஸ்ட் (Palimpsest) என்பதின் ஐரோப்பியப் பதப்பொருளை முதன்முதலில் நானறிந்தது ஒரு திரைப்படம் வாயிலாகத் தான்; ஜான்-ஜேக் அன்னோ (Jean-Jacques Annaud) இயக்கியிருந்த உம்பெர்ட்டோ எக்கோவின் (Umberto Eco) The Name of the Rose; தில்லியில் நண்பர் தருமராஜ் அவர்களுடன் சென்று ஏதோவொரு தூதரகத்தின் திரையிடலில் பார்த்ததான நினைவு. பின் அவர் மூலமாகவே எக்கோவும் அவரின் புனைவுகளும் பரிட்சையம். சமீபத்தில் தனது நூல் வெளியீட்டு விழாவில் தானெழுதுவதும் புனைவுகள் தானென்று அவர் சொன்ன போது என் நினைவில் மீண்டெழுந்து வந்ததும் உம்பெர்ட்டோ எக்கோ தான். இரு பேராசிரியர்கள், அதுவும் குறியீட்டியலாளர்கள், புனைவெனெ எழுதிக் கொண்டதும்; அப் புனைவுகளின் தீரமும் சாரமும் எனக்குள் ஒரு ஒப்பீட்டு வாசிப்பு முறையொன்றை உருவாக்கியிருந்தது: கீழடுக்கில் அயோத்திதாசரை பாஸ்கவில் நகரத்து வில்லியமாகவும் (William of Baskerville); மேலடுக்கில் அவரை பௌடுயினோவாகவும் (Baudolino); சுருங்கச் சொல்வதென்றால் ஒரு குறுக்குச் சால் வாசிப்பாக (Palimpsestic reading);

அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை எனும் இந்நூல் ஒரு Palimpsest; இதை இந்நூலின் சமர்ப்பணப் பாயிரம் தெளிவாகவே காட்டித் தருகிறது. மேலோட்டமான வாசிப்பில் இப்பாயிரம் தமிழ் நூன்மரபின் தொடர்ச்சியெனப் படலாம்; ஆனால் அம்மரபின் எல்லைகளை மீறி இப்பாயிரம் கொள்ளும் பொருளமைதி வேறானது; சிலருக்கு விசித்திரமானதும் கூட; ஒன்றைக் கடந்த ஒன்றாக ஒன்றைக் கணிக்கும் எத்தனம்; வெண்டி டோனிகரின் வார்த்தைகளில் “palimpsest of names” (Wendy Doniger, 2009: 371); அந்த வகையில் இப்பாயிரம் இப்பனுவலுக்கான “இலட்சணமாகவும்” உருத்திரள்வதை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். பகுதி 2: ஒன்றில் கிளைக்கும் இரண்டாய் இந்நூல் மூவிழை அடுக்காலான ஒரு Palimpsest; இதன் மூன்று பகுதிகளுமே மூன்று விதமான Palimpsest; முதல் பகுதி சற்றேறக்குறைய இருபதாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது; ஆக இந்நூலின் அடியிழை இதுவே; இங்கு தருமராஜின் உத்தி அயோத்திதாசரை நந்தனுக்கு மேலிழையாகவும்; பெரியாருக்குக் கீழிழையாகவும் பரந்து இழையோடிக் கிடக்கும் ஒரு Palimpsest-ஆக அவரை வாசித்தறிவது. இவ்வாறான வாசிப்பொன்றில் “பாரம்பரிய ஞாபகம்” (பக். 13) திரள்வதாகவும்; பின் அதையொரு பெருங்கதையாடலாக அயோத்திதாசர் திரட்டிக் கொள்வதாகவும் தருமராஜ் பொருள் கூட்டுகிறார்; கூடவே அப் பெருங்கதையாடலைத் “தமிழ் பௌத்தம்” (பக். 56) எனவும் அடையாளப்படுத்துகிறார்.

இதுவரையான அவரின் வாசிப்பில் சிக்கலொன்றும் இல்லை; ஆனால் அயோத்திதாசரின் தமிழ் பௌத்தத்தைத் தொன்மமா இல்லை நவீனமா என இனம் காண்பதில் ஆரம்பிக்கிறது அவர் வாசிப்பின் முதல் சிக்கல். ஒரு நாட்டுப்புறவியலாளராக தாசரின் பௌத்தத்தைத் தொன்மங்களின் தொகுப்பென்று அடையாளங் காணும் தருமராஜ் அத்தொன்மங்கள் நந்தனைப் போல் ஒரு பாரம்பரிய ஞாபகங்களாகத் தொடராமல் “அறுந்த கண்ணியாய்”, “வீழ்ந்த மரபாகிப்” போனதாகவும் சொல்கிறார். அப்படி மக்கிப்போன பௌத்த பாரம்பரிய ஞாபகங்களை வரலாற்றின் பக்கங்களுக்குள் திரும்பத் துலக்கம் பெற வைத்தவராக அயோத்திதாசரை அடையாளம் காண்கிறார். அதாவது தமிழ் பௌத்தத்தைத் தொன்மமாகவும்; அயோத்திதாசரை நவீனமாகவும்; இப்படி அயோத்திதாசரை ஒரு நவீனத்துவராகவும்; தொன்மங்களை அவர் வாசித்தறியும் பாங்கினை “நவீனத்தின் வசீகரமென்றும்” (பக். 101) நூலின் முதல் பகுதியில் அறிந்துணரும் தருமராஜ் அதன் இரண்டாம் பகுதியில் உருவாக்கித் தரும் அயோத்திதாசரின் பிம்பமோ முற்றிலும் எதிர்மறையானது; இங்கு அயோத்திதாசர் தொன்மங்களின் அந்தரார்த்தமறிந்தவராக அத் தொன்மங்களைத் “திரும்ப எழுதும்” (பக். 152) போது “பாரம்பரிய அறிவு மரபொன்றின்” (பக். 154) நீட்சியாய் நவீனத்துவத்திற்கு எதிரானவராக உருமாறிப் போகிறார்; சுருங்கச் சொல்வதென்றால் வாசிக்கும் போது நவீனத்துவராகவும்; எழுதும் போது மரபாளராகவும் அயோத்திதாசர் மாயம் கொள்வதாக தருமராஜ் அனுமானம் செய்துகொள்கிறார். “இரண்டு அயோத்திதாசர்கள்” (பக். 138) எனப் பிரித்தொதுக்கிக் கொள்வதும் இதனால் தான்.

புனைவொன்றிற்கானப் புதிராகத் தாசரைக் கருதும் தருமராஜ், அப்புதிருக்கான விடையாக எழுதிச் செல்வது தான் இந்நூலின் மூன்றாம் பகுதி என நினைக்கிறேன். அயோத்திதாசர் வாசிக்கும் போது பாஸ்கவில் நகரத்து வில்லியமாகவும்; எழுதும் போது பௌடுயினோவாகவும் உருமாறிப் போவதின் மர்மத்தை உம்பெர்ட்டோ எக்கோவைப் போலவே தருமராஜும் கலைத்துப் போடுவாரெனப் பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் “நவீனத்துவத்தின் உபகரணங்களை வெற்றிகரமாகக் கையாளுகிற அயோத்திதாசர் … மரபு சார்ந்து யோசிக்கிற கட்டுப்பெட்டியாகவே இருக்கிறார்” (பக். 322) எனச் சொல்லி சட்டென்று புதிரை முடித்துக் கொண்டதில் சற்று ஏமாற்றம் தானெனக்கு. இப்பொழுது புரியுமென நினைக்கிறேன்; ஏனவர் அயோத்திதாசரை நந்தனுக்கும், பெரியாருக்கும் இடையோடும் ஒரு palimpsest ஆக உருவகிக்கிறாரென! பகுதி 3: காவியமும் காலிக் குறிப்பான்களும் இந்நூலின் இரண்டாவது பகுதி என்னளவில் மிக முக்கியமானதும், சாரமானதுமாகும்; அயோத்திதாசர் ஆய்வுகளில் புதிய திசைகளுக்கானத் தடங்களைக் கொண்ட பகுதி இது. இங்கு தருமராஜ் வேறொருவிதமான palimpsest ஒன்றை உருவகப்படுத்துகிறார். அயோத்திதாசரை ஒரு palimpsestic எழுத்தாளராக; அவர் எழுத்துக்கள் யாவும் palimpsest குணம் கொண்டதாக; அதாவது “திரும்ப எழுதுதலாக” (பக். 117); அயோத்திதாசரின் இந்தத் திரும்ப எழுதும் முறையியலை மிகத் துல்லியமாக அவதானித்து விளக்கும் தருமராஜ் அதை “(பண்பாட்டு) நிகழ்வுகள் மீதான நம்பிக்கை” சார்ந்ததென்றும்; “பனுவலின் மீதான அவநம்பிக்கை” (பக். 146) என்றும் பகுத்துச் சொல்வதில் ஆரம்பிக்கிறது மற்றுமொரு சிக்கல்.

இச்சிக்கலின் சிடுக்கிலிருந்து விலகிக் கொள்ள அவர் கையாளும் உத்தி ஒன்றுண்டு: பனுவல்களின் அடிப்படையில் ஆதி வேதமெழுதிய அயோத்திதாசரை மொழிபெயர்ப்பாளராகவும் (பக். 137); பண்பாட்டு நிகழ்வுகளின் ஊடான இந்திரர் தேச சரித்திரம் எழுதியவரை வரலாற்றைத் திரும்ப எழுதியவராகவும் பிரித்து இணையாக நகர்த்தி வைத்துக் கொள்ளும் உத்தி அது (பக். 139); மொழிபெயர்த்தல் என்பதும் ஒருவித திரும்ப எழுதுதல் தானெனக் காலிக் குறிப்பான்களைப் பற்றிப் பேசுமொருவருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன?

அயோத்திதாசர் ஆய்வுகளில் தருமராஜின் சீரிய பங்களிப்பாக நான் கருதுவது “தமிழகத்து வாய்மொழிப் பண்பாட்டு மரபுகளிலும்” (பக். 139), “நாட்டுப்புற வழக்காறுகளிலும்” (பக். 143) பொருத்தி தாசரின் எழுத்துக்களை வாசித்துப் பார்க்குமொரு ஆய்வு முறையியலொன்றைத் தான்; அதே சமயம் இவ்வாய்வு முறையின் மீதான தருமராஜின் மாறாப்பிடிமானம் தாசரைத் தமிழ் நாட்டுப்புறவியலின் மூலவராக மட்டுமே தரிசித்து; “ஆதி வேதம் எழுதிய அயோத்திதாசர் குறித்து இப்போதைக்கு நமக்கு அக்கறையில்லை” (பக். 141) எனவும்; “அவரைக் கொண்டாடுவதற்கான காரணங்கள் ஆதி வேதம் என்ற நூலில் இல்லை” எனவுமானக் கணிப்பொன்றிற்கு அவரை உந்தித் தள்ளியும் விடுகிறது.

திரும்ப எழுதுதல் என்பது ஒரு இந்தியக் குணம்; ஐரோப்பிய palimpsest போல; காவியம் என்பது அதன் மிகச் சிறந்த வெளிப்பாடு; sarvatodikka hi kavayah; இன்றளவும் இராமாயாண, மகாபாரதக் கதைகள் திரும்பத் திரும்ப நாட்டார் / உள்ளூர் மரபுகளில் எழுதப்பட்டு வருவதுண்டு தானே. அஸ்வகோஷரின் புத்தசரிதம் அப்படியானதொரு பௌத்தக் காவியமே; பௌத்தத்திற்கு மதம் மாறிய அஸ்வகோஷர் கிருஷ்ணார்ஜுன ஸ்வதர்மத்திலிருந்து புத்த(அ)சோக தம்மத்தை வேறுபடுத்திக் காட்ட பழம்புராணங்களைப் பௌத்த சாரத்தில் திரும்ப எழுதியதின் விளைவே புத்தசரிதம் எனச் சொல்லப்படுவதுண்டு (E.H. Johnston, 1936: xlvii; Alf Hiltebeitel, 2006: 283). அந்த வகையில் அயோத்திதாசரின் ஆதி வேதமும், இந்திரர் தேச சரித்திரமும் இரட்டைக் காப்பியங்கள்; அஸ்வகோஷரின் புத்தசரிதம், நாராதிய புராணம் போல; மணிமேகலை, சிலப்பதிகாரம் (கோவலன் சரித்திரம்) போலவும்; “அயோத்திதாசரின் முறையியல்களை பேச வேண்டிய நிர்பந்தம்” (பக்.199) ஒன்றின்று ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டும் இந்நூல் தாசரின் செவ்வியல் குணங்களையும், கூறுகளையும் பேச மறுப்பதேன்? பகுதி 4: மொழியின் அந்தரங்கமும், பகிரங்கமும் இந்நூலின் மூன்றாவது பகுதி ஒரு பேராசையின் சாகசப் பயணமென்பேன்; முதலிரு பகுதிகளும் அயோத்திதாசரின் வாசிப்பையும், எழுதுதலையும் ஆய்விற்குட்படுத்தியதென்றால், இப்பகுதி அயோத்திதாசரை, அயோத்திதாசரெனும் மனிதரை, அவரின் ஆளுமையை ஆய்வெளிக்குள் அழைத்து வருகிறெதெனலாம். “ஒரு கற்பனையை நிஜத்தோடு கலந்து மிகையுலகு ஒன்றை உருவாக்குவதாகத்” (பக். 15) தாசரை மதிப்பீடு செய்யும் தருமராஜ், அந்தக் “கற்பனை உலகு ஒரே நேரத்தில் கவர்ச்சியாகவும், பயமுறுத்துவதாகவும்” (பக். 234) தானுணர்வதாய்ச் சொல்கிறார்; இந்தக் கலவையான உணர்வே அயோத்திதாசரை “என்ன மாதிரியான நபர்?” என்றும்; “மெய்யாகவே அவர் யார்?” (பக். 234) என்றும் தருமராஜை கேள்விகள் கேட்கத் தூண்டுகிறது.

யாரவர் எனும் அந்தக் கேள்விக்கான பதிலை அலாய்சியஸைப் போல் வரலாற்றிற்குள் தேடப் போவதில்லை என்று ஆரம்பத்திலேயேத் தெளிவாகச் சொல்லிவிடுகிறார் (பக். 235). சரி; பின்னெங்கே தேடுவதாக உத்தேசமவருக்கு? மொழிக்குள்; தமிழ் மொழிக்குள்; சரி; எப்படித் தேடுவதாக உத்தேசம்? மறதிக்கும், ஞாபகத்திற்கும் ஊடாக விரவிக் கிடக்குமொரு palimpsest ஆக! தருமராஜின் வார்த்தைகளிலேயே சொல்வெதென்றால் “மறதியையும் ஞாபகத்தையும் விளங்கிக் கொள்ளாமல் இந்த அயோத்திதாசரை விளங்கிக்கொள்ள முடியாது” (பக். 232). சரி; எந்த மறதி?, எந்த ஞாபகம்? இன்னும் சரியாகக் கேட்பதென்றால் எவரின் மறதியில், அல்லது எவரின் ஞாபகத்தில் தாசரின் மெய்யுரு பொதிந்திருப்பதாகத் தருமராஜ் பொருள் கொள்கிறார்? “ஒரு நூற்றாண்டு மறதியென” நூலின் முற்பகுதியில் மறதியை வரலாற்றில் வைத்து அளவீடு செய்து பார்த்தவர், பிற்பகுதியில் மறதியை மொழியின் மௌனம் எனவும்; ஞாபகத்தை மொழியின் சேகரமெனவும் (பக். 238) மொழிக்குள் வைத்து உரை செய்து கொள்வதேன்? இந்நூலின் வாசிப்பில் இதுவொரு முனைவளைவுத் திருப்பம்; முதலிரு பகுதிகளில் தாசரின் சிந்தனாமுறையைத் தமிழ் பண்பாட்டின் அதுவும் நாட்டார் பண்பாட்டின் குணக்கூறுகளின் வழியாகவே அர்த்தப்படுத்தி வந்த தருமராஜ், தாசரின் ஆளுமையை மட்டும் பண்பாட்டுக் கூறுகளில் காணாமல் மொழியின் அந்தரார்த்தங்களுக்குள் தேடியலைவதேன்?

தாசரின் புற மெய்யை அதாவது என்ன மாதிரியான நபர்? என்ற கேள்விக்கான பதில் தமிழ் நாட்டார் பண்பாட்டுக் கூறுகளில் “பகிரங்கமாக” இருப்பதாகவும்; மாறாக, தாசரின் உள் மெய், அதாவது மெய்யாகவே அவர் யார்? என்ற கேள்விக்கான விடை தமிழ் மொழியின் “அந்தரங்கத்தில்” இருப்பதாகவும் தருமராஜ் தனக்கான ஆய்வுக் கருதுகோள் ஒன்றை இங்கே தீர்மானம் செய்து கொள்கிறார் (பக். 220-221). இந்நூலின் மூன்றாவது பகுதி இவ்வாய்வுக் கருதுகோளின் அடிப்படையில் அவர் மேற்கொண்ட “அயோத்திதாசர் குறித்த பரிசோதனைகளின்” (பக். 12) முடிவெனவும்; இதுவரையான அயோத்திதாசர் ஆய்வுகளெல்லாம் தாசரைப் பகிரங்கப்படுத்துவனவென்றால்; தருமராஜின் ஆய்வு தாசரை அந்தரங்கப்படுத்துவதின் விழைவென்றும் சொல்லலாம்.

தருமராஜின் கருதுகோளும், பரிசோதனைகளும் விவாதங்களுக்குரியவைகள்; மேலதிக ஆய்வுகளுக்கானவைகள்; குறிப்பாக அயோத்திதாசரின் மெய்யுருவாகத் “தமிழ் பௌத்த மொழித் தத்துவம்” (பக். 216) எனவொன்றை அவர் கட்டமைப்பது; முதலில் “தமிழ் பௌத்த மொழி” என தருமராஜ் பேசுவதின் அர்த்தத்தைப் புரிந்தாக வேண்டும்; சைவத் தமிழ்; வைஷ்ணவத் தமிழ்; இஸ்லாமியத் தமிழ்; கிருத்துவத் தமிழ் எனுமிந்த வரிசையில் பௌத்தத் தமிழ் என அவர் பேசுவதில்லை; அதாவது தமிழிலக்கிய வரலாற்றில் ஏகதேசமெனத் தொனிக்கும் சமயங்களின் கொடை வரலாறல்ல இது; மாறாக, அது ஒரு கதை; “எழுத்தைத் திட்டமிட்ட கதை; மொழியும், தத்துவமும் ஒன்றை ஒன்று தழுவிக் கொண்ட கதை” (பக். 265).

அந்தக் கதையை தருமராஜ் இப்படிச் சொல்கிறார்: ஆதியில் மொழி வாசனையாக இருந்தது; பின் கீழிறங்கி ஒலியாக மாறியது; பின்னும் கீழிறங்கி வரி வடிவம் ஆனது; மொழி வரியான போது உருவானதே இலக்கணம்; மற்றைய சமயங்களெல்லாம் இவ்விலக்கண சூத்திரவிதிகளுக்குட்பட்டுத் தமிழில் கால் கொண்டவைகள்; ஆனால் பௌத்தம் மொழி ஒலியாக இருந்த போதே சூல் கொண்டதெனவும்; அதனாலேயே தமிழின் இலக்கண வரம்புகளுக்குள் அடைபடுவதில்லையெனவும்; மாறாகத் தமிழுக்கெனத் தனித்த இலட்சணங்களிருப்பதாகவும்; அவைகள் தமிழ் மொழி வாசனையாயிருந்து ஒலியான போதும்; பின் ஒலியிலிருந்து வரியானபோதும் உருவானவைகளென்றும்; ஆக பிற சமயங்களைப் போலல்லாமல் தமிழுக்கும் பௌத்தத்திற்குமான உறவு அதன் ஆதி இலட்சணங்களில் படிந்திருப்பதாகவும் சொல்லிக் கதையை முடிக்கிறார். தமிழை அதன் இலக்கணங்களின் ஜாலங்களிலிருந்து விலக்கி இலட்சணங்களின் ஆழங்களில் பார்த்ததும்; பௌத்தத் தரிசனங்களே தமிழின் இலட்சணங்களென்று கண்டடைந்ததும்; தமிழைச் சைவமெனத் தரிசித்த சிந்தனைப் போக்கொன்றின் எதிர் சொல்லாடலாகத் தமிழை பௌத்தமாய்த் தரிசித்ததிலுமிருக்கிறது அயோத்திதாசரெனும் ஆளுமையின் உச்சம். இதைத் தெளிவுறவேக் கவனப்படுத்தியிருக்கும் தருமராஜ், தாசரின் இலக்கண / இலட்சண வகைப்பாடுகளை ஐரோப்பிய மொழியியல் தத்துவ வகைப்பாடுகளான மொழியின் பொருள்கோளியல் (epistemology) / மெய்ப்பொருளியலுடன் (ontology) (பக். 270) பிணைத்துத் தாசரை விரித்தெழுதும் பாங்கினைத் தான் புரிந்து கொள்ள இயலவில்லை. அதுவும் “பாரம்பரிய அறிவு மரபின்” திரட்சியெனத் தன்னால் அடையாளம் காட்டப்படும் ஒருவரின் மொழியாளுமையை மட்டும் ஐரோப்பிய அறிவு மரபில் வைத்துப் பொருள் கூட்டிப் பேசுவதின் பொருளொன்றும் விளங்குவதில்லை.

தமிழின் இலட்சணம் என அயோத்திதாசர் வழியில் தருமராஜ் தொகுத்துச் சொல்வது மூன்று: 1. ஒலிக்கா மெய்கள்; 2. மகர எகார யகரங்கள் (மெய்) மகர ஐகாரங்களாக (மை) ஆதேசம் ஆவது; 3. அமிழ்த எழுத்து, நச்செழுத்து என தமிழெழுத்துக்களைப் பகுத்து வைத்துக் கொள்வது; இவற்றுள் முதலிரு இலட்சணங்களை விரித்து ஐரோப்பிய மொழியியல் தத்துவங்களோடு புணர்ந்து ஒரு பின்-நவீனத்துவ சாரத்தில் தமிழ் பௌத்த மொழித் தத்துவம் ஒன்றை அயோத்திதாசரின் குரலில் சொல்வது தான் இந்நூலின் ஆகப்பெரிய சிக்கல்.

தொல்காப்பியம் முதல் முத்துவீரியம் வரையான தமிழின் இலக்கணிகள் ஆவி, அச்சாவி, சுரம், பூதம் என உயிரெழுத்துக்களையும்; வர்க்கம், ஆனகம், ஒற்று, உடம்பு, உடல், ஊமை என மெய்யெழுத்துக்களையும் பெயரிட்டு அழைத்திருப்பதும்; மெய் ஒலியன்களைத் திக்கல் என தருமராஜ் தத்துவப்படுத்துவதை தமிழின் முத்துவீரியம் ஊமையென்றே உருவகப்படுத்தி இருத்தலும் (முத்துவீரியம், 1889: எ) கவனத்திற்குரியவை. அதோடு புத்தன் என்பது பௌத்தன் என்றாதலைப் போல் பொம்மை என்பதும் பொய்மெய் என்றாவது தத்திதத்தின் பிரத்தியங்கள் என வீரசோழியம் தெளிவாகவே வரையறுத்திருக்கிறது (சி.வை. தாமோதரம், 2008:41). மற்றபடி தமிழ் எழுத்துக்களை அமிழ்தென்றும், நச்சென்றும் குணம் பார்க்கும் வழமையொன்று இன்றளவும் அறம் பாடிவிடுவதின் அச்சத்தில் வெளிப்படுவதும்; அதன் ஆகச் சிறந்த உதாரணாமாக நந்திக்கலம்பகம் இருப்பதும் வெளிப்படை.

இறுதியாக, “அழகு அல்லது லட்சணம் என்று சொல்வதை மொழியின் அக யதார்த்தம் என விளங்கிக் கொண்டால், பௌத்தமே தமிழின் ஆதாரம் என்று பொருள்” (பக். 287) என தருமராஜ் சொல்லும் போது அவர் மொழியை அக யதார்த்தம் / புற யதார்த்தம் எனப் பகுத்து வைத்துக் கொள்வதும்; புற யதார்த்தங்களை முற்றிலும் புறக்கணித்து விட்டு மொழியின் அழகு அதன் அக யதார்த்தத்தில் உள்ளுறையாய் இருப்பதாக நம்புவதும் விவாதங்களுக்குரியவைகள். மாறாக, பௌத்த சாரத்தில் தமிழ் மொழியை விளக்கும் வீரசோழியம் மொழியின் அழகை அல்லது இலட்சணத்தை அலங்காரங்களில் அதாவது புற யதார்த்தங்களில் காண்பதும்; தண்டியலங்காரத்தின் அணியியல் கூறுகளை புத்தமித்திரன் உள்வாங்கியிருப்பதாகவே தமிழ் பௌத்த ஆய்வாளரான அன்னி மோனிஸ் (Anne Monius, 2001: 120) கருதுவதும் இங்கே கவனத்திற்குரியவைகள்.

மொழியை அதன் அகத்தில் குறுக்கித் தத்துவப்படுத்திக் கொள்ளலாம் தான்; அதே போல் மொழியை அதன் புறத்தில் விரித்து சமூகப்படுத்திக் கொள்ளவும் வேண்டும் தானே? மொழியின் அந்தரங்கத்தைப் போலவே அதன் பகிரங்கமும் ஆய்வுக்குரியவைகள்.

0 views0 comments

Recent Posts

See All

தேவேந்திரத் தன்னிலை...

மாற்று வரலாற்றுவரைவியலில் கடந்தகால சம்பவங்களை அல்லது நிகழ்வுகளைக் கற்பனை செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன. உதாரணமாய், பூர்வ பெளத்தர்களை ‘பறையர்கள்’ என்று சொல்லி இழிவுபடுத்தினார்கள் என்பதை நிரூபிக்க விர

Comments


bottom of page