top of page

பெரியார் தோற்ற இடமும் அயோத்திதாசர் வென்ற இடமும்



அன்புள்ள தருமராஜ்,


லாக்லவ்வின் காலிக்குறிப்பான் பற்றிய கட்டுரையை வாசித்துவிட்டு இதை எழுதுகிறேன். முதலிரண்டு பகுதிகளை விடவும், மூன்றாவது பகுதியில் கட்டுரை வேகமெடுத்ததை உணர முடிந்தது.


லாக்லவ்வின் சிந்தனையைத் தொடர்ந்து நீங்கள் பேசி வருவதை அறிவேன். இது குறித்து எனக்கொரு கேள்வி உள்ளது. காலிக்குறிப்பானில் அதிகாரம் குவிக்கப்படுவதாய் சொல்கிறீர்கள். வெற்றிடத்தில் அதிகாரம் குவிக்கப்பட முடியுமா? அதிகாரம் எல்லா உயிர்களாலும் விரும்பப்படக் கூடியதுதானே?


அப்படியிருக்க, வெற்றிடத்தில் குவிக்கப்படும் அதிகாரத்தின் தனிச் சிறப்பு என்ன?

அது ஏன் மோகத்தைக் கிளறுகிறது?


குணசேகரன், கோவை.


*


அன்புள்ள குணா,


லாக்லவ், ‘empty’ என்று எழுதுவதை நான் வெற்றிடம் என்று மொழிபெயர்க்காமல், காலி என்றே சொல்லிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ‘வெற்றிடம்’ என்பது தூய கற்பனை. அப்படியொன்று இவ்வுலகில் இருக்க சாத்தியமில்லை. ஆனாலும், தத்துவார்த்த விவாதங்களுக்காக ‘வெற்றிடம்’ என்ற ஒன்றை நாம் கற்பனை செய்து கொள்கிறோம்.


உண்மையில், இவ்வுலகில் வெற்றிடம் என்று அறியப்படுவது அனைத்தும் காலியான இடங்கள் மட்டுமே. அதாவது, ஏதோவொன்று அங்கிருந்து வெளியேறியதால் உருவான காலி இடம். ‘புலி சேர்ந்து போகிய கல்லளை’ என்றொரு தொடர் சங்கப்பாடலில் இடம் பெறுகிறது. காவற்பெண்டு எழுதிய கவிதை அது.


சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன் யாண்டு உளனோ என வினவுதி; என்மகன் யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்; புலி சேர்ந்து போகிய கல்அளை போல ஈன்ற வயிறோ இதுவே; தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!


உன் மகன் எங்கே? எப்பொழுது வருவான்? என்ற கேள்விக்கு ஒரு மூத்தத் தாய் பதில் சொல்வதாய் கருதப்படும் பாடல் இது. ‘இதோ இந்த வயிற்றில்தான் அவன் இருந்தான். இப்பொழுது இந்த வயிறு, புலியிருந்து சென்ற குகை போல இருக்கிறது. அவன் வருவான்! சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு வருவான்!’ என்று அந்தத் தாய் பதில் சொல்கிறாள்.


காலிக் குறிப்பானுக்கு மிகச் சிறந்த உதாரணம் இது. புலியிருந்து சென்ற குகையில், அதன் கால் தடங்கள், எச்சங்கள், உதிர்ந்த ரோமங்கள், முடை நாற்றம்கூட இன்னமும் இருக்கமுடியும். இந்தத் தடயங்களே அங்கு புலியிருந்து சென்றதாக நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்தக் குகை, வெற்றிடக் குகை அல்ல; காலியான குகை. புலியின் ஞாபகங்களைச் சுமந்திருக்கும் குகை. அதன்மூலம், யாரும் சொந்தம் கொண்டாடியிருக்காத பாரம்பரியத்தைத் தன்னுள்ளே வைத்திருக்கும் குகை.


தனக்கான அர்த்தங்களைத் துறக்கிற ஒவ்வொரு காலிக் குறிப்பானும் இப்படியொரு விசையைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. சகலத்தையும் ஈர்க்கிற விசை! அரசியல் தளத்தில் இந்த விசையையே அதிகாரம் என்று அழைக்கிறோம்.


பிற அதிகாரங்களுக்கும் காலிக் குறிப்பானில் உருவாகும் அதிகாரத்திற்கும் அடிப்படையான வேறுபாடு ஒன்று உள்ளது. பிற அதிகாரங்கள், நிகழ்த்தப்படுவதன் மூலமே உருவாகின்றன. ஒரு பேச்சுச் செயல் போல.


‘கதவை மூடு!’ என்று கர்ஜிப்பதன் மூலம், ஓர் அதிகாரியால் தனது அதிகாரத்தை உருவாக்கமுடியும். ‘சண்டாளா!’ என்று கூச்சலிடுவதன் மூலம், ஒருவரால் சாதி அதிகாரத்தைச் செயல்படுத்த முடியும். அதே நேரம், கர்ஜிக்கத் தெரியாத அதிகாரிக்கும் கூச்சலிடத் தெரியாத சாதி வெறியனுக்கும் அதிகாரத்தை யாரும் தட்டில் வைத்துத் தருவதில்லை.


ஆனால், ஒரு பிராமணன், எதையும் செய்து காட்டாமலேயே அவனுக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டுவிடுகிறது. அவன் தனது அதிகாரத்தை நிகழ்த்திக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.


இதுதான், பிற அதிகாரங்களுக்கும் காலிக் குறிப்பானின் அதிகாரத்திற்குமான வேறுபாடு. பிராமணரல்லாதோரின் சாதி அதிகாரம் நிகழ்த்தப்படுவதன் மூலமே உருவாகிறது. இதனால், அதை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. வேங்கைவயல் வரைக்கும் அதை நாம் ஒவ்வொரு முறை எதிர்கொள்ளும் போதும், ஓங்கிக் குரல் எழுப்ப முடிகிறது. ஆனால், ‘பிராமணம்’ என்ற காலிக்குறிப்பானை ஆக்கிரமித்துள்ள வேஷ பிராமணர்களின் அதிகாரம் இப்படி இல்லை. அது, அவர்கள் எதையும் செய்யாமல் இருக்கும்போதே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


இதனால், சாதி பற்றிய ஒவ்வொரு விவாதத்தின் போதும், பிராமணர்கள் தங்களை பிராமணரல்லாதோரோடு ஒப்பிட்டுக் கொண்டு, ‘நாங்கள் அப்படியெல்லாம் செயல்படவில்லையே!’ என்று சொல்வதைக் கவனித்துப் பாருங்கள். அவர்கள் பெரும்பாலும் நிஜத்தையே சொல்கிறார்கள். அவர்கள், தங்களின் சாதி அதிகாரத்தை நிகழ்த்த வேண்டிய அவசியமேயில்லை. ஏனெனில், அவர்கள் சுவீகரித்திருப்பது காலிக்குறிப்பான் வழங்கிய அதிகாரம். பிராமணரல்லாதோரின் அதிகாரத்தை ‘ஈட்டப்படும் அதிகாரம்’ என்று சொன்னால், பிராமணர்களின் அதிகாரம் ‘ஆக்கிரமிக்கும் அதிகாரம்’ என்று சொல்லப்பட வேண்டும்.


ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும், எத்தகைய சாதி அதிகாரத்திற்கும் வாய்ப்பற்றிருந்த நாடார் சாதியினர், இருபதாம் நூற்றாண்டில் அடைந்த சமூகப் பொருளாதார முன்னேற்றத்தின் மூலம் ஈட்டிய சாதி அதிகாரத்தை நினைத்துப் பாருங்கள். அத்தனை பிற்படுத்தப்பட்ட சாதி அதிகாரமும் இப்படி ஈட்டப்படுவதே. ஆனால், பிராமணர்களின் சாதி அதிகாரம் ‘ஆக்கிரமிக்கப்பட்ட அதிகாரம்’!

அயோத்திதாசர், இன்றைய பிராமாணர்களை ‘வேஷ பிராமணர்’ என்று அழைப்பதிலுள்ள நியாயம் இப்பொழுது உங்களுக்கு விளங்கியிருக்கும். புலியிருந்து சென்ற கல்லளையில் உட்கார்ந்து கொண்ட பிராமணர்கள், புலியின் வாரிசுகள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்கள் என்பதே அயோத்திதாசரின் குற்றச்சாட்டு.


பெரியாருக்கும் அயோத்திதாசருக்கும் சாதி அதிகாரத்தை எதிர்ப்பதிலுள்ள மாற்றுக்கருத்தும் இதன் அடிப்படையிலேயே உருவாகுகிறது. பெரியார், எல்லா சாதி அதிகாரங்களும் ஈட்டப்படுவதே என்று நம்பினார். அதனால், ஈட்டப்படும் முறைகளை விசாரணைக்கு உட்படுத்துவதன்மூலம், அவ்வதிகாரத்தை நிர்மூலம் செய்ய முடியும் என்று நம்பினார். அந்த வகையில், பிராமண அதிகாரம் பனுவல்களாலும் சடங்குகளாலும் ஈட்டப்படுவதாக நினைத்து அவர் வாழ்நாள் முழுவதும் அதை விமர்சித்து வந்தார். கடவுள் என்ற கற்பனையே பிராமணர்களின் அதிகாரம் ஈட்டும் தந்திரம் என்று நம்பியதால், கடவுளை மறுக்க முனைந்தார்.


ஆனால், அயோத்திதாசரின் சிந்தனை இன்னும் துல்லியமானது. பிராமணர்கள் கைக்கொண்ட அதிகாரம் ஈட்டப்படுவதல்ல என்பதை அவர் ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டிருந்தார். அவர்கள் எதையும் நிகழ்த்தாமலேயே அது அவர்களுக்கு வழங்கப்படுவதை அவர் உணர்ந்திருந்தார். எல்லோருக்கும் பொதுவான அதிகாரத்தை (பிராமணம்) அவர்கள் ஆக்கிரமித்த விஷயத்தையே அவர் ‘வேஷம், வேஷம்’ என்று சொல்லி வந்தார். காலிக்குறிப்பானின் அதிகாரத்தை நிர்மூலமாக்குவது வீண் வேலை என்று அவருக்குத் தெரிந்திருந்தது. அது சாத்தியமும் அல்ல என்று அவர் கண்டிருந்தார்.


காலிக்குறிப்பானில் உருவாகும் அதிகாரத்தின் அடிப்படையான இயல்பு இது. தானாகத் திரண்டு வருவது. பெருந்திரளின் அபிப்பிராயத்தோடு திரண்டு வருவது. ஜனநாயகம் என்ற அமைப்பு உருவாக்கும் அதிகாரம் அது. வேறெந்த அதிகாரத்தையும்போல, இதை நிலைநிறுத்துவதற்கு நீங்கள் எதையும் மெனக்கிட வேண்டிய அவசியமில்லை. அதே போல, இந்த அதிகாரத்தைக் கைகொள்வதன்மூலம் நீங்கள் எந்த அபவாதத்திற்கும்கூட உட்படுவதில்லை. அந்த வகையில், காலிக்குறிப்பானில் திரளும் அதிகாரம் புனித முலாம் பூசப்பட்டது.


இந்த அதிகாரம் ஏன் சகல தரப்பிலும் மோகத்தைத் தூண்டுகிறது என்று இப்பொழுது உங்களுக்கு விளங்கியிருக்கும்.


சமூகவியலாளர்கள், ‘சமஸ்கிருதவயமாதல்’ என்றும், பெரியாரியர்கள் ‘பிராமண மோகம்’ என்றும் சொல்வதை இப்பொழுது நாம் வேறு மாதிரியாக விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அது உண்மையில், பிராமண சாதி மீதான மோகமோ அல்லது சமஸ்கிருத பண்பாட்டின் மீதான மோகமோ அல்ல; அது, இயல்பான, பிராமணம் என்ற காலிக்குறிப்பானை ஆக்கிரமிக்க விரும்புகிற வேட்கை.

இந்த வேட்கை, வழக்கமாய் சொல்லிக் கொண்டிருப்பது போல, மேட்டிமைக்கான உந்துதல் அல்ல. இந்த வேட்கை, ஜனநாயக அமைப்பின் இன்றியமையாத பண்பு. காலிக்குறிப்பானைக் காலியாகவே வைத்துக் கொண்டிருப்பதுதான் தீவிர ஜனநாயகத்தின் குணம் என்றால், எல்லோரும் அதை நோக்கி நகர்வது மட்டுமே, நிஜ வேஷ பிராமண எதிர்ப்பாக இருக்க முடியும். அதாவது, இந்திய வெகுஜன அரசியல் உருவாக்கி வைத்துள்ள பிராமணம் என்ற காலிக்குறிப்பானை ஆக்கிரமிக்க சகல திசைகளிலும் நடக்கும் முயற்சிகளை ஆதரிப்பது மட்டுமே நமது அரசியல் நிலைப்பாடாக இருக்கமுடியும்.


அப்படிச் செய்வதன் மூலம், நெடுங்காலமாக அப்பிராமணக் காலிக்குறிப்பானை எதேச்சதிகாரமாக ஆக்கிரமித்து நிற்கும் பிராமணர்களை அங்கிருந்து வெளியேற்ற முடியும். இந்தச் சூழலில், காலிக்குறிப்பானைக் காலியாகவே வைத்திருப்பதுதான் தீவிர ஜனநாயக அரசியல். அயோத்திதாசரின் ‘யதார்த்த – வேஷ பிராமணர்’ கருத்தாக்கத்தை இப்படியோர் அரசியல் நடவடிக்கையாகவே நான் விளங்கிக் கொள்கிறேன்.


‘பிராமணம்’ என்ற காலிக்குறிப்பான் நமக்கு இன்றைக்குத் தேவையா; அது மேட்டிமையைப் பிரதிபலிக்கவில்லையா; சமத்துவ அரசியலில் பிராமணத்திற்கு என்ன வேலை என்ற கேள்விகளையெல்லாம் நாம் கேட்கலாம். இந்தக் கேள்விகளில் அதிகபட்ச நியாயங்கள் இருப்பது உண்மை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இப்படியான மேட்டிமைக் காலிக்குறிப்பானையே வரலாறு நம்மீது திணித்திருக்கிறது. அதிலும், ஆக்கிரமிக்கப்பட்ட தன்மையோடு நம்மீது திணித்திருக்கிறது. இது வெகுஜன, பெருந்திரள் அரசியலின் தவிர்க்கமுடியாத தன்மை.


எப்படி, வெகுஜன அரசியல் ‘கடவுள்’ என்ற இல்லாத ஆகிருதியை இருப்பதாக நினைத்துக் கொண்டு இத்தனைக் குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறதோ அதே போல, ‘பிராமணம்’ என்ற ஆகிருதியையும் உருவாக்கியிருக்கிறது. கடவுளைக் காலியாக மாற்றுவது போலவே, பிராமணத்தையும் காலியாக மாற்றுவதுதான் இன்றைக்குத் தேவையான அரசியல்.







Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page