'பேச்சுரிமை' மறுக்கப்படும் பொழுதே 'கருத்துச் சுதந்திரம்' என்ற பேச்சு மேலெழுந்து வருகிறது. பத்ரியின் கைது, பேச்சுரிமை மறுப்பாகவும் கருத்துச் சுதந்திரத்திற்கான ஆபத்தாகவும் பார்க்க முடியுமா என்றால், நான் இல்லை என்றே சொல்வேன்.
ஏனெனில் பத்ரிக்கு மறுக்கப்பட்டது அடிப்படையான பேச்சுரிமை அல்ல, அவர் கோரும் ‘வானளாவிய பேச்சுரிமையே’ இங்கு மறுக்கப்படுகிறது. வரலாற்றில், தமிழகப் பிராமணர்கள் வானளாவிய பேச்சுரிமையைக் கொண்டிருந்தவர்கள் / ருப்பவர்கள் என்பதற்கு வண்டி வண்டியாய் ஆதாரங்கள் உண்டு. வர்ணாஸ்ரம சனாதனம் முதல் இன்றைய நவீன வரலாற்று வரைவியல் வரை அவர்களது வானளாவிய பேச்சுரிமையை நாம் ஒவ்வொரு முறையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிராமணர் புனையும் கதைகளின் மீது ‘புனிதம்’ ஏற்றப்படுவதும், மற்றவர் புனையும் கதைகளை ‘அபத்தம்’ என்று தூற்றுவதும் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருப்பது தான்.
பிராமணர்களின் வானளாவிய பேச்சுரிமை என்பது மற்ற அத்தனை பேரின் பேச்சுரிமை மறுப்பின் மீதே கட்டப்பட்டிருக்கிறது. என்றைக்குப் பிராமணர்களின் வானளாவிய பேச்சுரிமை மட்டுப்படுத்தப்படுகிறதோ அன்றே மற்ற அனைவரின் பேச்சுரிமையும் மீட்கப்படும். அயோத்திதாசரிலிருந்து ஆரம்பிக்கிற சுயமரியாதை - பகுத்தறிவு சார்ந்த திராவிடச் சிந்தனை பிராமணர்களின் வானளாவிய பேச்சுரிமையையே கேள்விக்கு உட்படுத்துகிறது.
அயோத்திதாசர், மற்றவர்களின் பேச்சுரிமையை பிரதான பேசுபொருளாக்கினார்; பெரியாரோ, பிராமணர்களின் வானளாவிய அதிகாரத்தை அழித்தொழிக்க முனைந்தார். இரண்டும், ஒரே அரசியலின் இரண்டு பக்கங்கள்.
பிராமணர்கள், திராவிட காலத்தில் தங்களைப் பலியாடுகளாக சித்தரிப்பது, இந்த வானளாவிய பேச்சுரிமை மறுப்பினால் மட்டுமே. அசோகமித்திரன்கள் தங்களை யூதக் குடிகளாகக் கற்பனை செய்து கொள்வதும் ‘பிராமணப்புனிதம்’ மறுக்கப்படும் வேதனையால் தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
‘பேச்சுரிமை மறுப்பு’ என்பது அடிப்படையான மனிதவுரிமை மீறல். அதில் சந்தேகமில்லை. ஆனால், அதை நீங்கள் சந்தர்ப்பத்திற்கு சந்தர்ப்பம் பயன்படுத்த முடியாது. பேச்சுரிமை மறுப்பு என்பது வேறு, வானளாவிய பேச்சுரிமை மறுப்பு என்பது வேறு.
வானளாவிய பேச்சுரிமை மறுப்பு, ஒடுக்கப்பட்டோர் அரசியலின் இன்றியமையாத அத்தியாயம்! இந்த அடிப்படையானப் புரிதல் கூட இல்லாத அறிஞர்களோடும், போராளிகளோடும் தான் நாம் வாழ்ந்து தொலைக்க வேண்டியிருக்கிறது.
*
இது ஜனநாயக நாடு என்றும், இங்கு குடிமை உணர்வு பெருகி வழிகிறது என்றோ நான் நம்பவில்லை. மக்களாட்சியின் துரதிர்ஷ்டங்களை மட்டுமே முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்திய ஜனநாயகம். இதன் சட்டதிட்டங்களை வகுக்கிற வாய்ப்பு இருந்த போதும், அம்பேத்கரிடம் அவியாமல் கனன்று கொண்டிருந்தது ‘இந்திய ஜனநாயகம்’ பற்றிய அவநம்பிக்கை மட்டுமே. இந்திய இறையாண்மையை அவர் நம்ப மறுத்ததன் வெளிப்பாடே இட ஒதுக்கீடும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களும். பாரம்பரிய ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கான எந்த முகாந்திரமும் இல்லாமல் தான் இந்திய ஜனநாயகம் கட்டமைக்கப்பட்டது.
எந்தவித பாரம்பரிய அதிகாரமும் அந்தஸ்தும் இல்லாத சிறுபான்மையினர் (சாதி, மத, மொழி, பால் என்று அனைத்தும்) இத்தேசத்தில் எத்தகையத் திகிலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை யாரும் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. ‘இயல்பாகவே கருத்துச் சுதந்திரம் அற்றவர்கள்’ என்றொரு பிரிவு இந்த நாட்டில் உண்டு என்பது கருத்துச் சுதந்திரப் போராளிகள் யாருக்கும் தெரியாது. ஏனெனில், இங்கு பேசப்படும் எல்லா நவீன கருத்துக்களும் பாரம்பரிய வலைப்பின்னலையே நம்பியிருக்கின்றன. ஒரு உதாரணத்திற்கு, விலங்குகள் மீதான நலனைப் பேசுபவர்களும் சைவ உணவே மேன்மையானது என்று பேசுபவர்களும் ஒரே ஆட்கள் தாம். அசைவ உணவு மீதான வெறுப்பு ‘மரபான இனத்துவேசம்’ என்று விமர்சிக்கப்பட்ட பொழுது, அவர்கள் தங்களை நவீனர்களாகக் காட்டிக் கொள்ள (ஃப்ளூ கிராஸ்) விலங்குகள் நலனைப் பேச ஆரம்பித்தார்கள்.
*
‘கருத்துச் சுதந்திரம்’ தொடர்பான உரையாடலில் கீழ்க்கண்ட விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
1. சுதந்திரம், உண்மை, அறம் போன்ற கருத்துக்களுக்கு தத்துவத்தில் தரப்படும் விளக்கங்களை வெகுஜனத் தளங்களுக்கும் நீட்டிக்க முடியுமா என்பதை ஏன் நமது நண்பர்கள் யோசிக்கவில்லை?
2. எப்படி ‘நிறை உண்மை’ இல்லையோ அப்படியே ‘நிறை சுதந்திரமும்’ ‘நிறை அறமும்’ இல்லை, இல்லையா?
3. தத்துவார்த்த உரையாடல்களுக்கு வெளியே, நடைமுறை வாழ்க்கையில் உண்மை, சுதந்திரம், அறம் போன்ற விழுமியங்களின் பணி, ‘நம்பிக்கையை’ தோற்றுவிப்பதாக இருக்க வேண்டும் என்பதே விதி. நம்பிக்கை என்றால், மனிதர்களுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கை, சமூகக் கட்டுமானம் மீதான நம்பிக்கை, சமூக நிறுவனங்கள் மீதான நம்பிக்கை என்று பலவும் அடங்கும். இந்த நம்பிக்கையைக் குலைக்கும் எந்தவொரு செயலும் உண்மையற்றது, சுதந்திரமற்றது, அறமற்றது என்றே மதிப்பிடப்படும்.
4. ஒரு பேச்சு விளைவிக்கும் அவநம்பிக்கையே ஆகப்பெரும் ஒழுங்கீனம் என்று சொல்ல வேண்டும். மணிப்பூர் இந்துத்துவக் கலவரம் குறித்த என் கட்டுரைக்கு பி. ஆர். மகாதேவன் எழுதிய ‘குப்பைக்கவிதை’ தனிப்பட்ட முறையில் எனக்கு அவநம்பிக்கையையே தோற்றுவித்தது. என் சாதி, என் சமயம், என் தேசப்பற்று, என் ஒழுக்கம், என் நேர்மை குறித்து செய்யப்பட்ட அவதூறுகள், எனக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியதன் காரணம் மிக எளிமையானது - இதே காரணங்களைச் சொல்லியே இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது; மீறுகிறவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்;அதற்கும் அடங்காதவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மகாதேவன் என் மீது வாரி இறைத்த சேறு ஒரு தொடக்கப்புள்ளி என்று எனக்கு விளங்கியது. அது இறுதியிலும் இறுதியாக நான் படுகொலை செய்யப்படுவதில் போய் நிற்க முடியும் என்ற நடுக்கத்தையே நான் அதில் உணர்ந்தேன். ஒரு பதிப்பகம் என்ற அளவில் கிழக்கு மீதான என் நம்பிக்கை சிதைந்த கணம் இது.
5. அதன் பின் பத்ரி நடத்தியது ஒரு ‘பின்னைச் சுதந்திர’ நாடகம். என் கருத்துச் சுதந்தித்திற்கு எதிரான அடக்குமுறை சதியொன்றை மகாதேவன் பின்னத் தொடங்கினார் என்றால், பத்ரி, அந்தக் கருத்துச் சுதந்திரத்தையே கேலி செய்வது போன்ற காரியத்தைச் செய்யத் தொடங்கினார். சிறுபான்மையினர் குறித்தும், பழங்குடிகள் குறித்து, பெண்கள் குறித்தும், நீதி அமைப்புகள் குறித்தும் அவநம்பிக்கையை உருவாக்கும் பேச்சை பேச ஆரம்பித்தார். அதாவது, ஒரு கொடுங்கோல் அரசு கூட துணிந்து சொல்ல முடியாத விஷயங்களை தனி மனிதக் கருத்து என்ற பெயரில் வெளியிட ஆரம்பித்தார்; அது எனது கருத்துச் சுதந்திரம் என்றும் வாதிட ஆரம்பித்தார்.
6. அறிஞர்கள், கோட்பாட்டாளர்கள், சிந்தனையாளர்கள் என்று அறியப்பட்ட எண்மர் பத்ரியின் ‘பின்னைச் சுதந்திர’ நாடகத்தில் ஏமாந்து போனார்கள் என்றே இன்றும் நான் நம்ப விரும்புகிறேன். மானுடத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் எந்தவொரு செயலுக்கும் அறம், சுதந்திரம், உண்மை போன்ற எந்தவொரு விழுமியங்களும் இல்லை என்பதை அவர்கள் ஏன் மறந்து போனார்கள் என்று தெரியவில்லை.
7. ‘கருத்துச் சுதந்திரம்’ பற்றிய தமிழக உரையாடலை, மாதொருபாகனுக்கு முன் - பின் என்று பிரித்து யோசிக்க வேண்டுமென்றும் நான் நினைக்கிறேன். மாதொருபாகனுக்குப் பின் ‘கருத்துச் சுதந்திரம்’ என்ற பேச்சு, வணிகப் பொருளாகவும் மாற்றப்பட்டிருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறு, ‘தலித் அல்லது ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை’ உலகளாவிய வணிகப்பொருளாக மாற்றப்பட்டதோ அதே போல, இன்றைக்கு ‘கருத்துச் சுதந்திரப் போரும்’ மிக முக்கியமான வணிகப்பொருள். அது ஈட்டித் தரும் லாபம் அதிகம். இதன் காரணமாகவே, பத்ரி மேற்கொண்டது கருத்துச் சுதந்திரப் போராட்டம் அல்ல என்றும், அதைப் ‘பின்னை கருத்துச் சுதந்திரம்’ என்றே அழைக்க வேண்டும் என்றும் சொல்கிறேன். பின்னைச் சுதந்திரம் முழுக்க முழுக்க நாடகார்த்தமானது; வணிக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. அதில் அறம் என்று பேசுவதற்கு எதுவும் இல்லை.
Comments