top of page

பார்ப்பனர் - பிராமணர் பிரச்சினை



(இதே விஷயங்களை எனது 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன். தமிழர்களுக்கு புத்தக வாசிப்பு அறிவு குறைவு என்பதால் அதை இங்கே திரும்ப எழுதுகிறேன். திரும்ப எழுதுவது தான் எனது முறையியலும் கூட.)


1

அயோத்திதாசரின் காலகட்டத்தில், வரலாறு மாபெரும் தொழிற்கூடமாக உருவாகிக் கொண்டிருந்தது. மொழியியல், அகழ்வாராய்ச்சி, மானிடவியல் என்று பல்வேறு புதிய தொழில்நுட்பவாதிகள் இணைந்து பணியாற்றிய தொழிற்கூடம் அது (Armenteros, Carolina, 2019, The Enlightened Conseratism of the Malabar Missions: Gaston-Laurent Coeurdoux (1691-1779) and the Making of an Anthropological Classic, in Journal of Jesuit Studies, Vol 6, Iss. 3, page 439-466).

ஒரு புறம் இந்தோ - ஐரோப்பிய மொழிக்குடும்ப ஆய்வுகள் நடைபெற்றன என்றால், இன்னொரு பக்கம் திராவிட மொழிக்குடும்ப ஆய்வுகள்; அதனருகிலேயே சிந்துச் சமவெளி அகழ்வாய்வுகளும், மத்திய ஆசிய அகழ்வாய்வுகளும்; போதாக்குறைக்கு வேத நாகரீக ஆய்வுகளும், பழங்குடியின ஆய்வுகளும் என்று வரலாறு வெவ்வேறு தாழிகளில் கடையப்பட்டுக் கொண்டிருந்தது. எதிரும் புதிருமாகத் தோன்றும் நிலைப்பாடுகள் ஆய்வுகளின் பாலபாடம். அந்த வகையில், ஆரியர் - திராவிடர் முரண், அக்காலத்தின் ஆகப்பெரிய கற்பனையாக இருந்தது. அக்காலகட்ட வரலாறு எந்தவிதக் கூச்ச நாச்சமுமின்றி ஆரியர் பிம்பத்தை ஊதிப் பெருக்கி வந்ததை நிறைய புத்தகங்கள் சொல்கின்றன (Figueira, Dorothy M, 2002, Aryans, Jews, Brahmins. Theroizing Authority through Myths and Identity, State University of New York Press; Trautmann, Thomas R, 1997, Aryans and British India, University of California Press). காலனிய நலன்களைப் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட ஆரிய பிம்பத்திற்கான நியாயம் அதனை பிராமணர்களுடன் பங்கிட்டுக்கொள்வதன் மூலம் நேர் செய்யபப்ட்டது. காலனியர்கள் இந்தியாவை எழுத்துப் பனுவல்களின் சுரங்கமாகவே கற்பனைச் செய்திருந்தனர். சமஸ்கிருத, பாலி, தமிழ் ஏடுகளை வாசித்து முடிப்பதற்காகவே நிறைய ஐரோப்பிய கனவான்கள் மறுபிறப்பில் நம்பிக்கை வைக்கத் தொடங்கினார்கள். மார்க்ஸ் முல்லர் மாதிரியான இந்தியவியல் ஆய்வாளர்கள், ஐரோப்பாவின் காலம், இந்தியாவில் உறைந்து நிற்பதாய் எழுத ஆரம்பித்தார்கள். இந்த வகைக் காலனிய வரலாற்றுவரைவியல் இந்தியாவில் வேடிக்கையான திருப்பங்களைக் கொண்டிருந்தது. எழுத்துப் பனுவல்களைப் பாதுகாத்து வைத்திப்பதும், அதிலிருந்து ஞானத்தை உருவாக்கிக் கொள்வதும் வேறு வேறான செயல்பாடுகள் என்ற இந்திய வகைப்பாட்டை காலனிய ஆய்வாளர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஆவணக்காப்பாளர்களே அறிஞர்கள்; நூலகர்களே தத்துவ ஆசிரியர்கள். ஐரோப்பிய மொழியையும் பேசக்கூடியவர்கள், மடங்களில் கோவில்களில் ஏடுகளைப் பராமரிக்கும் பணியைச் செய்தவர்கள், ஏட்டுப் பிரதிகளை நாடெங்கும் அலைந்து திரிந்து சேகரித்தவர்கள், அதனைப் பிறருக்குக் கற்றுத்தரக் கூடியவர்கள் என்ற காரணங்களால், பிராமணர்களே இந்திய ஞான ஆசிரியர்கள் என்று காலனிய மூளைகள் நம்பத் தலைப்பட்டன. இந்த வேடிக்கையை அயோத்திதாசரே முதலில் சுட்டிக்காட்டுகிறார். இலக்கண அறிவிற்கும், இலட்சண அறிவிற்குமான வேறுபாடுகளைச் சொல்லி பிராமணர்களை ஞானவான்களாகக் காணும் காலனிய மூடத்தனத்தை கேலி செய்ய ஆரம்பிக்கிறார். ஏறக்குறைய பூர்வபெளத்த காலத்தில் பிராமணர்களின் ஞான வேஷத்தை அம்பலப்படுத்திய அதே சூழல் வரலாற்றில் திரும்ப நிகழ்கிறது. காலனிய ஆட்சியாளர்களின், ஆய்வாளர்களின் துணையோடு பிராமணர்கள் மீண்டுமொரு ஞான நாடகத்தை நடத்த ஆரம்பித்தார்கள். இதைத் தொடர்ச்சியாக அவர் அம்பலப்படுத்தி எழுதியதால், ‘அயோத்திதாசர் பறையர், பறையர்’ என்று சொல்வதற்கு வசதியாக இருந்தது. ஆனால், அவர் சுட்டிக்காட்டியதைப் போல, நிலமெங்கும் அலைந்து திரிந்த ஞானவான்களே இந்திய இலட்சணங்களை உருவாக்கினர் என்பதை ஆய்வுகலம் வெகு தாமதமாகவே கண்டுணர்ந்தது (Balcerowicz, Piotr, 2016, Early Asceticism in India. Ajivikism and Jainism, Routledge, London and New York). காலனியத்தின் ‘ஆரிய - திராவிட’ முரண் பொய்யான அடிப்படையில் கட்டப்பட்டிருக்கிறது என்பதை அயோத்திதாசரே முதலில் வெட்ட வெளிச்சமாக்கினார். இந்தியச் சிந்தனை மரபை, ஆரியம் - திராவிடம் என்ற இரட்டை எதிர்மறைகளின் பின்னணியில் விளக்கும் பொழுது அதன் செழுமையான மரபுகள் கறைபடுத்தப்படுகின்றன என்பதே அவரது குற்றச்சாட்டு. உதாரணமாக, பிராமணர்கள் முன்னெடுத்த வேதமரபின் எதிர்வினையாகவே பெளத்தம் போன்ற அவைதீக மரபுகள் தோன்றின என்பதிலுள்ள ‘மறை மேலாண்மையை’ அவரால் துல்லியமாக விவரிக்க முடிந்தது. வேதவாதம் அல்லது மீமாம்சை இந்தியச் சிந்தனை மரபில் மிகத் தாமதமாகவே வந்து சேர்கிறது என்பது அவரது உள்ளுணர்வு. இந்திய ஞான மரபில் நடைபெற்ற உருமாற்றங்களை ‘ஆரிய - திராவிட’ முரண் விளைவாக யோசிப்பதை விடவும் ‘வேஷ பிராமணிய’ விளைவாக யோசிப்பதே சரியாக இருக்கமுடியும் என்பதையே அவர் ஒரு கருதுகோளாக முன்மொழிகிறார். இதனை முன்னிட்டே, ‘வேஷ பிராமண எதிர்ப்பு’ என்ற அரசியல் பிரகடகனத்தையும் அவர் பேசத் தொடங்குகிறார். அந்த வகையில் ‘இந்திர தேச சரித்திரம்’, அரசியல் திட்ட வரைவிற்கான வாதப்பிரதிவாதங்களைக் கொண்ட நீண்ட வியாசம். காலனிய - வேஷ பிராமணியக் கூட்டால் கட்டமைக்கப்படும் இந்திய வரலாற்றிற்கான மாற்றாகவே அது முன்வைக்கப்படுகிறது.


2 views0 comments

Recent Posts

See All

தேவேந்திரத் தன்னிலை...

மாற்று வரலாற்றுவரைவியலில் கடந்தகால சம்பவங்களை அல்லது நிகழ்வுகளைக் கற்பனை செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன. உதாரணமாய், பூர்வ பெளத்தர்களை...

Comments


bottom of page