top of page

பாண்டியன், எஸ்பொ, செல்வா கனகநாயகம் ஒரு திரைப்படத்திற்காவது திரைக்கதை எழுதாதது யாருடைய தவறு?






பொதுப்புத்தியிலிருந்து சம அளவு விலகியிருந்த அல்லது விலக்கப்பட்டிருந்தவர்கள் MSS பாண்டியனும் ருத்ரையாவும் (இந்தப் பதிவை இப்படி வேறொரு மூலையிலிருந்து ஆரம்பிக்க என்னை அனுமதியுங்கள்).

பாண்டியனின் எழுத்துகள் எப்படி கல்வி நிலைய வளாகங்களைக் கடக்கவில்லையோ அதே போல் ருத்ரையாவின் படங்கள் மாற்று சினிமா வெளியைக் கடக்கவில்லை. இதில் ஏதும் தவறு இருப்பதாக நினைக்கவில்லை; குறை சொல்வதற்கும் எதுவுமில்லை. ஏனென்றால், இரண்டுமே, வாசகராய் இருப்பதற்கும் பார்வையாளராய் இருப்பதற்கும் சற்று அதிகப்படியான பொறுமையை வேண்டுபவை.




ஆனால், இவ்விருவரின் மறைவையும் தமிழகத்து பெரும் பத்திரிகைகள் எவ்வாறு கையாண்டன எனபது நிச்சயமாய் ஆரோக்கியமானதல்ல என்பது மட்டும் நமக்குத் தெரியும். ருத்ரையாவிற்கு வருகிற இரங்கல் கட்டுரைகளில் கால்வாசி கூட பாண்டியனுக்கு வரவில்லை. அதுவும் கூட செல்வா கனகநாயகத்திற்கும் எஸ்பொவிற்கும் வரப்போவதில்லை.

இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?


ருத்ரையாவின் மறைவிற்கு தெரிவிக்கப்படுகிற வருத்தங்கள், ஆதங்கங்கள் எல்லாமே அவர் ரஜினிகாந்த், கமலஹாசன், ஸ்ரீபிரியா போன்ற திரைக்கலைஞர்களை வைத்து திரைப்படம் எடுத்தார் என்பதனால் தானா? அந்தப் படத்தில், ஒரு வேளை, முழுக்க முழுக்க முகம் தெரியாத / முகவரி இழந்த நட்சத்திரங்கள் நடித்திருந்தால் ருத்ரையாவின் மறைவை நமது வெகுஜன ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் விட்டிருக்குமோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.


இத்தனைக்கும் பாண்டியன் எழுதிய கட்டுரைகளும் நூற்களும் வெகுஜன ஊடகங்களைப் பற்றியும், வெகுஜன இயக்கங்களைப் பற்றியும் தான். எம்ஜியார் பற்றி அப்படி என்ன தான் இந்த பாண்டியன் தனது image trap ல் எழுதிவிட்டார் என்று யாருக்கும் தோன்றவில்லை. திராவிட சித்தாந்தத்தையும் இயக்கங்களையும் குறித்து ஆங்கிலம் பேசும் அறிவுலகில் தொடர்ந்து விவாதத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த அவரது மறைவு எந்தத் திராவிடக் கட்சியையும் அசைத்துப் பார்க்கவில்லை.


****


தமிழ்ச் சமூகம் ஒவ்வொரு முறை தனது அறிஞர்களையும், கலைஞர்களையும் இழக்கும் பொழுதும், இது போன்ற சொரணையற்றத் தன்மையையே ஏன் கொண்டிருக்க வேண்டும்?


இதோ இப்பொழுது, செல்வா கனகநாயகமும், எஸ். பொ.வும் மறைந்த செய்தி வந்திருக்கிறது. இவர்களெல்லாம் யார் என்று தான் 'தமிழ் வெகுஜன வாசகன்' கேட்கிறான் என்று சொல்கிறார்கள். அவனுக்கு குஷ்பு காங்கிரசில் சேர்ந்ததும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பதும், அவ்வாறு வந்தால் குஷ்புவும் ரஜினியும் கூட்டணி வைப்பார்களா என்பதும், அக்கூட்டணி அண்ணாமலை போல இருக்குமோ என்பதும் தான் கவலை என்று சொல்லப்படுகிறது. இப்படி விரல் சூப்பும் வாசகர் எங்கே தான் இருக்கிறார்?


பாண்டியன், செல்வா போன்றவர்களை வெகுஜன ஊடகங்கள் ஏன் கண்டுகொளவதில்லை என்ற கேள்விக்கு, அவர்கள் பிரபலங்கள் இல்லை என்பதால் செய்திக்கான மரியாதை இல்லாதவர்கள் என்று கொஞ்ச காலம் முன்பு வரை சமாளித்துக் கொண்டிருந்தது போல இப்பொழுதும் முடியாது,


ஏனென்றால், யார் யார் பிரபலம், யார் யார் முக்கியஸ்தர்கள், யார் யார் அறிஞர்கள், யார் யார் விவாதிக்கிறவர்கள் என்பதை மக்களோ, அவ்வூடகங்களின் முதலாளிகளோ தீர்மானிப்பதை விடவும் அதில் எழுதக்கூடிய இதழாளர்களே அதிகம் தீர்மானிக்கிறார்கள் என்பதை எல்லோருமே அறிவோம்.

தமிழ் இதழியலில் இன்றைக்கு முன்வரிசையில் இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் பாண்டியனையும், செல்வாவையும், எஸ்பொவையும் நன்றாகத் தெரிகிறது அல்லது முயற்சி செய்தால் அடுத்த கணமே தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், இவர்களைத் தெரியாது என்று சொல்வதில் அடையக்கூடிய கிளுகிளுப்பு (அதாவது, தான் எதுவுமறியாத சாமானியன் என்று ஒப்புக்கொள்வதன் மூலம் அடையக்கூடிய கௌரவம்) அவர்களுக்கும், தமிழ் இதழியலுக்கும் தேவைப்படுகிறது.


தமிழ் journalist ஒரு வேடிக்கையான பிறவி. அவன்/ள் சீரிய இதழ்களைப் படிப்பார்; இலக்கியங்களை வாசிப்பார்; வெளிநாட்டுத் திரைப்படங்களை விழுந்து விழுந்து பார்ப்பார்; ஆனால், பேனாவைத் திறந்தால் மட்டும் தமிழ்த் திரைப்படங்களைக் கடந்து தனக்கு எதுவும் தெரியாது என்ற தோரணையில் எழுதுவார். நடிகைகளின் கவர்ச்சிப் படங்களையும், நடிகர்களின் பஞ்ச் வசனங்களையும் சிலாகித்துப் பேசுவார்; அதையே வெவ்வேறு தருணங்களில் பயன்படுத்தி பொதுப்பேச்சாகக் கட்டமைப்பார்; இடைக்கிடை தமிழ் நாட்டில் தான் இப்படி கேவலம், மலையாள நாட்டில் இப்படி இல்லை என்பார். கடைசியில் நேருக்கு நேராய் நீயுமா இப்படி என்று கேட்டால், இதைத் தானே வாசகர் விரும்புகிறார் என்பார்.


ஆனால், தமிழ் திரைப்படங்களின் மீது வெறி கொண்ட அப்படி வாசகர்கள் எங்காவது இருக்கிறார்களா என்றால் எங்கும் இல்லையென்பது தான் உண்மை. நடிக, நடிகையரின் பித்து பிடித்த ரசிகர்கள் தமிழகத்தில் உண்டு. ஆனால் அவர்கள் யாரும் வாசகர்கள் இல்லை. அவர்களின் வாழ்க்கை இன்னொரு தளத்தில் தத்தம் எல்லைகளிலான அதிகாரக் கனவுகளோடு நகர்ந்து செல்கிறது. அவர்கள் தங்களது விருப்ப நடிகரின் படம் இந்த இதழில் வந்திருக்கிறது என்பதைக் கடந்து எந்த வித ஈடுபாட்டையும் இதழ்களின் மீது காட்டுவதில்லை.


ஆனால், அப்படியொரு பாமர, வெகுஜன, திரைப்பட மோகம் கொண்ட, மொன்னையான, முட்டாள் வாசகன் இருப்பதான பாவனையில் நமது இதழியலாளர்கள் எழுதிக்கொண்டிருப்பதும், அதே மன நிலையைச் சார்ந்தவன் தான் நான் என்று அடிக்கடி வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருப்பதும் தான் அந்தக் கற்பனையான வெகுஜன வாசகரை உருவாக்குகிறது என்பதை என்றாவது இவர்கள் உணர்வார்களா என்று தெரியவில்லை.


இவ்வாறு, தமிழ் இதழியல் உருவாக்கி வைத்துள்ள அந்தக் கற்பனையான தமிழ் வாசகனுக்குத் தான் பாண்டியன், செல்வா, எஸ்பொ மறைந்தது பற்றியெல்லாம் கவலையில்லை. அதனால், இவற்றிற்கு செய்திக்கான மரியாதையும் இல்லை.


தமிழ் இதழியலாளர்களின் குணாம்சம் இதுவென்றால், அவர்களது பொதுக் கனவு ஒன்று உண்டு - அது தமிழ்த் திரையுலகிற்குள் எப்பாடு பட்டாவது நுழைந்து விடுவது. அதற்கான வழிமுறைகளில் ஒன்று - தமிழ் இதழியல்! குமுதம், ஆவி, குங்குமம், இந்தியா டுடே என்று இதழ்களில் வேலை செய்வதன் மூலம் திரையுலகப் பிரமுகர்களின் பழக்கம் கிடைத்து அப்படியே நாலைந்து எருமைமாடு வாங்கி, பால் கறந்து, தயிராக்கி வித்து, வெண்ணெய் எடுத்து வித்து, ஒரு பெரிய எருமைப் பண்ணையே ஏற்படுத்தி, யாராவது ஓசிக்கு மோர் கேட்டால் எட்டி தான் உதைப்பார்கள்.

இந்த மனோபாவம் தான் தமிழ்த் திரைப்படத் தொழிலோடு சம்பந்தப்பட்டிராத எதையும் நான் எழுதமாட்டேன் அல்லது தெரிந்து கொண்டிருக்க மாட்டேன் என்ற கடிவாளத்தை மாட்டிக்கொளவதோடு நிற்காமல், அதை மீறி செயல்படுகிறவர்களைப் பற்றிய நையாண்டியையும் உற்பத்தி செய்ய வைக்கிறது. (சாரு, எஸ்ரா, மபு, ஜெ போன்றவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள், வம்புகள் எல்லாம் இந்த வகையைச் சார்ந்தவை தான்).


திரிஷாவிற்கு திருமணம் என்ற செய்தி கேட்டு பரபரப்பாகும் இந்த இதழியலாளர்களை, தொபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறுபிழைப்பு எடுத்து வந்ததையும், பிரபஞ்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதையும், கொஞ்ச நாட்களுக்கு முன்னால் சாரு மருத்துவமனையில் இருந்ததையும் பொதுஜனத்திற்கு சொல்வதிலிருந்து யார் தடுத்தார்கள் என்றால், அவர்களே தான்! அவர்கள் மனதிற்குள் உட்கார்ந்திருக்கும் கற்பனையான அந்த வாசகன் தான்!


இது தான் சாஸ்வதம் என்றால், பேசாமல் தமிழ் நாட்டில் எழுதத் தெரிந்த எல்லோரையும் செத்து மடிவதற்குள் குறைந்தபட்சம் ஒரு திரைப்படத்திலாவது (அதுவும் பிரபல நடிக நடிகையரின் படங்களில்) பணியாற்றும் படி கேட்டுக்கொள்ளலாம். கட்டாய ராணுவப் பணியைப் போல் கட்டாயத் திரைப்பட பணியை ஏற்படுத்தினால் கூட இந்தத் தமிழ்ச்சமூகம் பிழைத்துப் போகும். (அய்யோ....! இந்தத் திராவிடக் கட்சிகள் 'அம்மா / அய்யா திரைப்பயிற்சி' என்று இதைச் செய்தாலும் செய்யும்!

Commentaires

Noté 0 étoile sur 5.
Pas encore de note

Ajouter une note
bottom of page