பில் (Bhil) என்றொரு பழங்குடியினம். (‘பில்’ சமஸ்கிருதச் சொல்; தமிழில் ‘வில்’ என்று பொருள்.) வட இந்தியாவில் காணப்படுகிறது. தங்களை ஏகலைவனின் வாரிசுகள் என்று அழைக்கிறார்கள். வால்மீகியும் ஒரு வில்தான் என்பது அவர்கள் நம்பிக்கை. நாமும் தைரியமாய் நம்பலாம் என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில், அவர்களுக்கு ‘ஏக கலைகளும்’ தெரிந்திருக்கிறது.
அவர்களின் ஓவியங்கள் அத்தனை அழகு. அவற்றை பிதோரா (Pthora) என்கிறார்கள். பெரும்பாலும், சுவர்களிலும், பாறைகளிலுமே வரைகிறார்கள். இன்னும் ஆச்சரியம் என்னவென்றால், எல்லா வில்லுக்குமே வரையத் தெரிந்திருக்கிறது. ‘அது எப்படி?’ என்றால், குழந்தையிலேயே தாய் வரையக் கற்றுத் தருகிறாராம். மற்ற பண்பாடுகளில் பேசச் சொல்லித் தருவது போல, வில் தாய்மார்கள் வரையச் சொல்லித் தருகிறார்கள் போலும். தாய்மொழி மாதிரி, பிதோரா என்பது தாய் ஓவியம்!
பிதோரா ஓவியங்களில் தாவரங்களும் விலங்குகளுமே அதிகம் இடம்பெறுகின்றன. விதிவிலக்காக, ஒரு வேடனும் இடம்பெறுகிறான். அவன் பெயரும் ஓவியம்தான், அதாவது, பிதோரா. பிதோராவில் வரையப்படும் குதிரைகள் அற்புதமானவை. அதுவே பிதோராவின் வாகனமும் கூட.
வில் பழங்குடிகளின் அரசன் பெயரைச் சொன்னால் பொய் சொல்கிறேன் என்பீர்கள். ஆனால், நான் சொல்வது உண்மை. அவன் பெயர், தருமராஜ்!
ஒரு நாள் தருமராஜின் ஆட்சிக்காலத்தில் பில்களுக்கு ‘சிரிப்பு’ என்றால் என்ன என்று மறந்து போகிறது. யாரும் யாரையும் பார்த்து சிரிப்பதில்லை. வெளியாட்கள் சிரித்தாலும், அதைச் சிரிப்பு என்று கண்டுபிடிக்கத் தெரியவில்லை. ‘ஏன், அந்த ஆள் அடிக்கடி பல்லை பல்லைக் காட்டுகிறான்?’ என்று கேட்டிருக்கிறார்கள்.
அவர்களது வன தேவதையின் பெயர் ஹிமாலி ஹர்தா (Himali Hartha). அதுதான் சிரிப்பை திருடிக் கொண்டது என்று சொன்னார்கள். சிரிப்பை ஒரு குடுவையில் அடைத்து, மேகத்தில் எங்கோ ஒளித்து வைத்து விட்டதாய் கதை சொன்னார்கள். சிரிப்பை மட்டுமல்ல, வில்களின் சப்தத்தையே வனதேவதை திருடிக்கொண்டு சென்றதாகக் கதை உண்டு. வனதேவதைக்கு ‘பிதோரா வேடன்’ மீது கோபம் என்று காரணமும் சொன்னார்கள். இப்படியெல்லாம் நடக்குமா, சிரிப்பை குடுவையில் அடைத்துவைக்க முடியுமா என்றெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது. பில்களுக்கு சிரிப்பு மறந்துவிட்டது என்ற சூழலில், அதை மீட்டு வருவதற்கான வழியைத்தான் பார்க்கவேண்டும்.
தருமாராஜ், பிதோராவிடம் அதைத்தான் சொன்னார். ‘போய், சிரிப்பை மீட்டு வா!’
குதிரையில் ஏறிப் போய், தேவதையின் பல்வேறு சோதனைகளை வெற்றிகரமாகக் கடந்து, சிரிப்பை மீட்டு வந்தான், பிதோரா.
வில்களிடம் இப்படி நிறைய நிறையக் கதைகள் உண்டு. உலகம், ஒரு அண்ணன் தங்கையிடமிருந்துதான் தோன்றியது என்று ஒரு கதை சொல்கிறார்கள். கடவுள்கள் சிறப்பு அனுமதி தந்த பின்பு, அண்ணனும் தங்கையும் இணைந்து ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள்; அந்த ஏழு குழந்தைகளே இன்றைய உலக மக்கள். அப்படியானால், உலகம் முச்சூடும் வில்கள்தான் இருக்கிறார்கள்.
இன்னொரு கதையில், அந்த ஏழு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு கடவுள் ஒரு மாட்டைத் தந்தார்; தந்து, நிலத்தை உழுது சாப்பிட்டுக்கொள் என்றார். அக்குழந்தையோ அம்மாட்டை அடித்துத் தின்றுவிட்டது. கோபப்பட்ட கடவுள், அக்குழந்தையை காட்டுக்குள் வேட்டையாடித் திரியும்படி அடித்துத் துரத்தினார். அதுதான் வில். அதன் வழி வந்தவனே, ஏகலைவன்!
வில்களின் பொருளாதாரம் கால்நடை மேய்ப்பால் உருவானது. கொஞ்சம் கொஞ்சம் விவசாயமும் உண்டு என்றாலும், மாடுகளே அவர்களுக்கு செல்வம். இதற்கும் ஒரு காரணக்கதை சொல்லப்படுகிறது.
அவர்களது அரசன் தருமாராஜுக்கு பெண் பார்த்து, திருமணம் நிச்சயம் செய்தார்கள். பெண், பக்கத்து காடு. சீதனமாக என்ன தருவீர்கள் என்று கேட்டபொழுது, பெண்ணின் தகப்பனார் தனது பசு மாடொன்றை அனுப்பி வைத்தார். அந்தக் காடு விட்டு, தன் காடு போகிற வழியில்தான் தருமாராஜ் அந்த மாட்டை நன்றாகக் கவனித்தார். அது, ஒரு ஊனமுற்ற பசு.
வந்ததே கோபம். கன்னாபின்னாவென்று திட்டி, அம்மாட்டை அங்கேயே விட்டுவிட்டு வந்தாலே ஆச்சு என்று கத்தினார். அவரது மனைவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஊனமுற்ற பசுவை நடுக்காட்டில் எப்படி விட்டுச் செல்வது?
அருகிலொரு எறும்புப் புற்று இருந்தது. அதில், நாகராஜா இருந்தார். தருமராஜின் மனைவி நாகராஜனிடம் வேண்ட ஆரம்பித்தார். ‘காப்பாற்று, காப்பாற்று!’
இரக்கப்பட்ட நாகராஜா ஒரு யோசனை சொன்னார். ‘உன் சுண்டு விரலிலிருந்து இரண்டு சொட்டு ரத்தத்தை ஒரு கல்லில் வடியவிட்டு, ஊனமுற்ற பசுவை பள்ளத்தில் மறைத்து வை. நான் பார்த்துக்கொள்கிறேன்’.
அப்படியே செய்து விட்டு எல்லோரும் தங்கள் காடு வந்து சேர்ந்தார்கள். அன்றிரவு, தருமராஜுக்கு ஒரு கனவு வந்தது. அக்கனவில், ஊனமுற்ற பசுவைச் சுற்றி பெரிய மாட்டு மந்தையே இருந்தது. எண்ணிக்கையற்ற மாடுகள். தன்னையும் தனது மந்தையையும் அழைத்துச் செல்லும்படியும், அப்படிச் செல்லும்போது திரும்பிப் பார்க்காமல் செல்லும் படியும் பசு கனவில் அவரிடம் சொன்னது. மறு நாள் காலையிலேயே தருமராஜ் அந்த இடத்திற்குப் போய்விட்டார்.
பார்த்தால், கனவில் கண்டது அப்படியே நிஜம். பள்ளம் நிறைய மாடுகள். உடனே, கனவில் சொன்னபடியே தருமராஜ் அம்மந்தையை ஓட்டிக் கொண்டு தனது இருப்பிடம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவர் பின்னால் பெருந்திரளாக மாடுகள் வர ஆரம்பித்தன. அவர் நடக்க நடக்க வரிசை நீண்டு கொண்டே சென்றது. தன் பின்னால் மொது மொதுவென்று இன்னமும் வந்து கொண்டிருக்கும் மாட்டு வரிசையை நினைத்து தருமராஜுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. பின்னால் திரும்பிப் பார்க்கவும் வழியில்லை. பார்க்கக்கூடாது என்று கனவில் சொல்லியிருக்கிறதே!
வர வர மாடுகளின் சப்தம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. இன்னுமா வருகின்றன? இத்தனை மாடுகளா? இவ்வளவு சத்தம் கேட்கிறதே? ஒரு கட்டத்தில் தருமராஜ் குடைச்சல் தாங்காமல் திரும்பிப் பார்த்து விட்டார். அத்தோடு, மாடுகள் வருவது நின்று விட்டது. கடைசியாய், ஒரே ஒரு காளை மட்டும் பள்ளத்திற்குள் நின்று கொண்டிருந்தது. ‘அடச்சே…’ என்று தன்னையே நொந்து கொண்டு அந்த மாடுகளோடு இருப்பிடம் திரும்பினார் தருமராஜ். இதனால்தான் பசுக்களின் எண்ணிக்கையை விட காளைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றன என்று வில்கள் சொல்லிக் கொண்டனர்.
இப்படித்தான், வில்களுக்கு கணக்கிலடங்கா கால்நடைகள் கிடைத்தன. இந்தச் சம்பவத்தை நினைவில் கொள்ளவும், பசுக்களுக்கு மரியாதை செய்யவும் அவர்களிடம் ஒரு சடங்கு இருக்கிறது. அதைத் திருவிழாவாகவும் செய்கிறார்கள். அதற்கு, ‘காய் கோஹ்ரி’ (Gaai Ghorei) என்று பெயர்.
காய் கோஹ்ரி தீபாவளியை ஒட்டி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு மறுநாள் ஊரிலுள்ள மாடுகளையெல்லாம் (பெரும்பாலும் பசுக்கள்) வண்ணங்களாலும் மயிலிறகாலும் அலங்கரிக்கிறார்கள். அம்மாடுகள் அனைத்தும் ஊரின் பொது இடத்தில் திரட்டப்படுகின்றன. பின், ஒரு தோரண வாயிலின் வழியே அம்மாடுகள் விரட்டப்படுகின்றன. இதற்காகப் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை காது கிழியும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. மேள தாளங்கள் இசைக்கப்பட்டன.
சத்தம் கேட்டு மிரளும் மாடுகள் வாயிலின் வழியே வெகுண்டு ஓடும். அவை ஓடி வரும் வழியில், அவ்வூரின் ஆண்கள் தரையில் படுத்துக் கொள்கின்றனர். குப்புறப் படுத்துக் கொண்டு, இரு கைகளாலும் கண்களைப் பொத்திக் கொள்கின்றனர். மிரண்டு பாயும் மாடுகள், அவர்களின் முதுகின் மேல் மிதித்துக் கொண்டு ஓடுகின்றன. இப்படி ஊர் ஆண்கள் மிதி படுவது வளமையைத் தரும் என்று பெண்கள் நம்புகின்றனர். இந்தச் சடங்கு, இன்றளவும் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் கிராமங்களில் நடைபெற்று வருகிறது.
புராணக் கதையின் படி, அரசன் தருமராஜ், பள்ளத்திலிருந்து மாட்டு மந்தையை ஓட்டி வந்த சம்பவத்தை நிகழ்த்திக் காட்டுவது போல இச்சடங்கு அமைந்துள்ளது. எல்லா சடங்குகளும் புராணக் கதைகளை நடித்துக் காட்டுபவையே; எல்லா புராணக் கதைகளும் சடங்குகளின் மூலமே நினைவு கொள்ளப்படுகின்றன என்பது ஒரு பார்வை (ஜோசப் காம்ஃபல் Joseph Campbell).
ஆனால், சில மானிடவியலாளர்கள் இதை ஒத்துக் கொள்வதில்லை. சடங்குகளுக்கும் புராணங்களுக்கும் தொடர்புகள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளும் அவர்கள், இவ்விரண்டும் ஒன்றையொன்று ஆதரிக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, ‘புராணங்கள் சடங்குகளுக்கு விளக்கமளிக்கும் வேலையையே செய்கின்றன; அதிலும் அகோரமான விளக்கங்களை’ என்று சொல்கிறவர்கள் உண்டு (புரோனிஸ்லோவ் மாலினோவ்ஸ்கி Bronislaw
Malinowsky).
மாடுகள் குறித்து (அதிலும் பசுக்கள் குறித்து) மட்டுமே அலட்டிக் கொள்கிற நாட்டில் இப்படியொரு சடங்கு நிகழ்த்தப்படுவதில் ஆச்சரியமில்லை. ஆனால், இந்த காய் கோஹ்ரி என்ற சடங்கு, காளைகளைத் தழுவிக் கொள்கிற தமிழர்களுக்கு வேடிக்கையான தலைகீழ் விகிதமொன்றை நினைவுபடுத்தக்கூடும்.
வாடிவாசல் வழியே மிரண்டு வரும் காளையின் திமிலைப் பற்றிக்கொண்டு, சில மணித்துளிகள் அதன் மீது சவாரி செய்வதன் மூலம் வளமையைப் பெறலாம் என்று தமிழர்கள் நம்புவதற்கு முற்றிலும் எதிராக, வட இந்தியர்கள் பசுக்கள் தங்களைத் துவம்சம் செய்து ஓடுவதன் மூலம் வளமை கிடைப்பதாக நம்புகிறார்கள். ஏறு தழுவுதல், தமிழ் வழக்கம் மட்டுமல்ல, அது வெவ்வேறு வடிவங்களில் தென் இந்தியா முழுமைக்கும் காணப்படுகிறது என்று கொண்டால், மிகத் தெளிவான தென் – வட இந்திய எதிர்மறையொன்று செயல்படுவதை நம்மால் உணர முடியும். ஒன்றில், பசு; இன்னொன்றில், காளை. ஒன்று, கால்நடை சமூக வளம்; இன்னொன்று, வேளாண் சமூக வளம். ஒன்று, கால்நடையைத் தெய்வமாகக் கருதுகிறது; இன்னொன்று, தழுவிக்கொள்ளும் தோழனாகக் கருதுகிறது.
இரட்டை எதிர்மறைகளின் மீது காதல் கொண்ட மானிடவியலாளர் கிளாட் லெவிஸ்ட்ராஸ் (Claude Levi-Strauss) இப்படியான எதிரும் புதிருமான குணங்களைக்கொண்ட பண்பாட்டு நிகழ்வுகளை ‘ஈர் ஒழுங்கமைவு’ (dual organization) என்று அழைக்கிறார். ஒரே சமூகத்தின், இரு வேறு பிரிவுகளுக்குள் அல்லது இரண்டு வேறுபட்ட சமூகங்களுக்குள் அல்லது இரண்டு நாடுகளுக்குள் இத்தகைய ஈர் ஒழுங்கமைவை பார்க்க முடிகிறது என்பது லெவிஸ்ட்ராஸின் ஆய்வு முடிவு.
கால்நடைகளை உற்பத்திப் பொருளாகக் கருதுகிற (இறைச்சியாகவோ அல்லது பால் பொருட்களாகவோ) பண்பாட்டிற்கும், அவற்றை உற்பத்தி சக்தியாக (உழைப்பை வழங்கும்) நினைக்கிற பண்பாட்டிற்குமான மோதலே இந்திய வரலாற்றின் மைய முரணாக இருந்திருக்கிறது. அதாவது, வணிகத்திற்கும் வேளாண்மைக்குமான முரண்; சமணத்திற்கும் பெளத்ததிற்குமான மோதல்; சைவத்திற்கும் வைணவத்திற்குமான சண்டை; ஆரியத்திற்கும் திராவிடத்திற்குமான உரசல் என்று அனைத்தும் இந்த ‘ஈர்” அணுகுமுறையிலிருந்தே கிளைக்கின்றன.
எனக்கிருக்கும் கேள்வியெல்லாம், ஏன் வட இந்திய மாட்டுச் சடங்கு ‘பசுக்களிடம் மிதிபடுதல்’ என்ற அதீத பாசாங்கோடும், தென் இந்திய சடங்கு ‘ஏறு தழுவுதல்’ என்ற அதீதக் கூச்சத்துடனும் காணப்படுகின்றன என்பதுதான்!
எல்லா சடங்குகளும் அதிகபட்சமானவையே. மிகைப்படுத்துதல் அவற்றின் இயல்பு. நாடகத்தன்மையே அவற்றின் வெளிப்பாடு. சடங்குகளிலிருந்தே விளையாட்டுகளும் கலைகளும் தோன்றின என்று ரிச்சர்ட் செக்னர் (Richard Schechner) பேச ஆரம்பிப்பதற்கு சடங்குகளின் இந்த அதீத குணமே காரணம்.
அன்றாட வாழ்க்கையிலிருந்து சடங்குகள் பாரதூரம் விலகி நிற்கின்றன. நிறைய நேரங்களில் தலைகீழாக வவ்வால்களைப் போல இச்சமூகத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்றன. பசுக்களை உறிஞ்சிக்கொள்கிற அன்றாட வாழ்க்கைக்குத் தலைகீழாக அவற்றால் மிதிபடுவது போன்ற சடங்கினை செய்துகொள்வது; தினசரி அடிமைபோல நடத்தப்படுகிறவர்களை ஒரு சடங்கு நாளில் தெய்வமாகக் கொண்டாடுவது; சமூகத்தின் கடைக்கோடியில், மனிதர்களாகவே மதிக்கப்படாத பிரிவினரை ‘கடவுளின் குழந்தைகள்’ (ஹரிஜன்) என்று அழைப்பது; கடவுளின் மகன், சாமானியர்களின் கால்களைக் கழுவுவது என்று பல்வேறு வவ்வால்கள். அந்த வகையில், சடங்கு என்பது ‘மற்றவரின் (others) ஆசையை நிறைவேற்ற விரும்பும் நம் ஆசை’.
நான் இதைத்தான் பாசாங்கு என்று சொல்கிறேன். இங்கே, மற்றவர்களின் ஆசை எது என்பதை நாம் முடிவு செய்கிறோம். பசுக்கள், மனிதர்களைத் துவம்சம் செய்ய விரும்புகின்றன; பெண்கள், தங்களை தெய்வமாக வணங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்; தீண்டத்தகாதவர்கள், தங்களை தெய்வக் குழந்தையாக நடத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். இவையனைத்தும் மற்றவர்களின் ஆசை என்ற நம் விருப்பம். பின், இவற்றையெல்லாம் நிறைவேற்றிவைக்க நாம் ஆசைப்படுகிறோம். சடங்குகளின் ஒழுங்கமைப்பு பற்றி ஆய்வு செய்த வான் ஜென்னப் (Van Gennep) இந்தக் கட்டத்தை தலைகீழாக்கம் (liminalility) என்று மிகச் சரியாகவே கணித்திருந்தார். சடங்கு என்பது, இயல்புக்கு மாறான, விரோதமான, புதிரான, நம்பும்படியற்ற, பாசாங்கு.
சடங்கு செய்கிறவர் மற்றவரின் ஆசையை நிறைவேற்ற விரும்புவதன் காரணம் மிக எளிது. அப்படிச் செய்வதன் மூலம் தன் வளம் பெருகும் என்பது அவரது ஆசை. இதற்காக, தன் வளத்திற்கு எதிரான மற்றவரின் ஆசை நிறைவேறுகிறது என்ற பாவனையை சடங்கின் மூலமாக ஏற்படுத்த விரும்புகிறார்.
அதுவரையில் சாதுவாக அழைத்து வரப்படும் அலங்கரிக்கப்பட்ட பசுக்கள், வெடி வெடிப்பதன் மூலமாகவும், மேளம் இசைப்பதன் மூலமாகவும், உலோக உணவுத் தட்டுகளை பலங்கொண்டு தட்டுவதன் மூலமாகவும் மிரட்டப்படுகின்றன. வன தேவதை ஹிமாலி ஹர்தா வில் பழங்குடிகளின் சப்தத்தை திருடிச் சென்றதன் காரணம் விளங்குகிறதா? மனிதர்கள் எழுப்பும் சத்தம் வனத்தை நிலைகுலைய வைக்கிறது. விலங்குகளை வேட்டையாடும் உத்திகளில் ஒன்று, சப்தமெழுப்பி அவற்றை மிரள வைப்பது.
காய் கோஹ்ரி அன்று எழுப்புகிற சப்தத்தில், மந்தை வெகுண்டு, தறிகெட்டு ஓடத் தொடங்குகிறது. வலிந்து உருவாக்கப்படும் மாடுகளின் கிளர்ச்சி இது. தொடர்ந்து, அக்கிளர்ச்சியில் மனிதர்கள் மிதி பட்டு வீழ்வதுபோன்று பாசாங்கு செய்கிறார்கள். இதன் மூலம், வளமை தக்கவைக்கப்படுவதாய் நம்புகிறார்கள். வெகுண்டோடும் மாட்டு மந்தை அழிவின் உருவகமாக சித்தரிக்கப்படுகிறது. மற்றவர்களுக்குள் உறங்கிக் கிடக்கும் அழிவிற்கான ஆசையைத் தூண்டி விடுவதே இச்சடங்கின் மைய நோக்கம். நாம் ஏற்கனவே பார்த்தது போல, மற்றவர்களின் ஆசையையும் கூட இவர்களேதான் கற்பனை செய்துகொள்கிறார்கள். அதாவது, மற்றவர்களின் ‘தீமையை அழிக்க விரும்பும் ஆசையை’யே தனது ‘தீமை’யாக முன்னிலைப்படுத்திக் கொள்வது. ழாக் லெக்கன் (Javques Lacan) சொல்வது போல, ‘மற்றவர்களின் வேட்கைதான் ஒவ்வொருவரின் வேட்கையும்’ என்பது நூற்றுக்கு நூறு சரி!
Comentários