top of page

நாட்டுப்புறவியலின் ‘எதிர்த்தரவு’

Updated: Sep 26, 2023நாட்டுப்புறவியல் மாணவர்கள் மத்தியில் ஒரு மூடநம்பிக்கை உண்டு – அவர்கள் எந்த வழக்காறைத் தேடிச் செல்கிறீர்களோ, அது அவர்களுக்குக் கிடைக்காது!


கதை சேகரிக்கப் போனால், கதை கிடைக்காது. சில பழமொழிகள் அல்லது விடுகதைகளோடு திரும்பி வருவார்கள். பாடல் சேகரிக்கப் போனால், அவர்கள் போன நேரத்திற்கு அந்த ஊரில் சின்ன குழந்தைகள் மட்டும் பாண்டி விளையாடிக் கொண்டிருக்கும். ஊர் வரலாறைச் சேகரிக்கச் சென்றால், அதுவெல்லாம் தெரிந்த பெரியவர் கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் இறந்து போயிருப்பார். கோவில் பற்றியும் தெய்வம் பற்றியும் தெரிந்து வரப்போனால், ஏதாவதொரு சண்டையில் கோவிலையே பூட்டி வைத்திருப்பார்கள்.


தகவல் கிடைக்காத விரக்தியில், ஆய்வாளர்கள் திரும்பி வரும் ஒவ்வொரு முறையும் நான் சொல்வது இதுதான் – ‘இல்லை, என்பது இன்னொரு வழக்காறு!’


இதை நான் ‘எதிர்த்தரவு’ (anti-data) என்று அவர்களுக்குச் சொல்லித் தந்திருக்கிறேன். இந்த வார்த்தையை நீங்கள் இதற்கு முன் கேட்டிருக்க வாய்ப்பில்லை. அதனால் உங்களுக்கு வரிசையாய் கேள்விகள் எழுவது எனக்குத் தெரிகிறது. ஒரு எதிர்த்தரவை எவ்வாறு அடையாளம் காண்பது? அதன் முக்கியத்துவம் என்ன? அதை விவரிப்பது எவ்வாறு? அதைக் கொண்டு ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்வது எப்படி? இந்த எதிர்த்தரவுகளுக்கு மென்விவரணை (thin description), அடர்விவரணை (thick description) இனவரைவியல் (ethnography) உண்டா?


இதற்கெல்லாம் பதில் சொல்வதற்கு முன், என்னுடைய கள ஆய்வுகளிலிருந்து ‘எதிர்த்தரவு’ என்ற வழக்காறை நான் எவ்வாறு கண்டுபிடித்தேன் என்பதை உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். கொஞ்சம், சுற்றி வளைத்துதான் சொல்வேன். நீங்கள் கேட்கவேண்டும்.


*


1999ஆம் வருடம், பின்லாந்திலுள்ள டர்ட்டு என்ற நகரில், கோடைகாலப் பயிற்சி ஒன்றுக்காக நான் ஒரு மாதகாலம் தங்கியிருந்தேன். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த முப்பது இளம் நாட்டுப்புறவியலாளர்கள் அந்தப் பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தோம். தமிழ் நாட்டிலிருந்து நான்.


காலை எட்டு மணியிலிருந்து இரவு ஏழு மணி வரை தொடர்ச்சியாக வகுப்புகள் இருக்கும். பின்லாந்தின் கோடைகாலம் விசித்திரமானது. குளிரும், ஆனால் இருட்டாது. மூன்று மணி நேரம் மட்டும்தான் இரவு. தாஸ்தோவேய்ஸ்கியின் வெண்ணிற இரவுகளின் பிராந்தியம் அது.


இரவு ஏழு மணிக்கு மேல் மதுக்கூடங்களில் அரட்டை ஆரம்பிக்கும். அப்படியொரு அரட்டையில்தான் இந்தப் பேச்சு வந்தது. ஒவ்வொருவரும் வரிசையாக, தாங்கள் எவ்வாறு நாட்டுப்புறவியல் ஆய்வுகளுக்கு வந்து சேர்ந்தோம் என்று சொல்ல வேண்டும். தலைக்கு ஐந்து நிமிடம். அந்த நிமிடங்களுக்குள் உங்களது கதையைச் சொல்லி விட வேண்டும்.


‘நீ எப்படி நாட்டுப்புறவியலுக்குள் வந்தாய்?’ என்று என்னிடம் அது வரையில் யாரும் கேட்டிருக்கவில்லை. அந்த நேரம் நான் எனது முனைவர் பட்டத்தையெல்லாம் முடித்து விட்டிருந்தேன். 1988லிருந்து நாட்டுப்புறவியல் ஆய்வுகளைச் செய்து வருகிறேன். இந்தக் கேள்வியை இது வரை என்னிடம் யாரும் கேட்டிருக்கவில்லை; நானும் யோசித்திருக்கவில்லை.


அந்த மதுக்குழாமில் நல்ல வேளையாக பத்து பேருக்கு மேல் இருந்தோம். எனது முறை வருவதற்கு இன்னும் நேரமிருந்தது. ஒரு எஸ்தோனியப் பெண் தனது அனுபவத்தை சொல்லிக் கொண்டிருந்தாள். அதைத் தொடர்ந்து, பின்லாந்து மாணவி ஒருவர் சொல்ல வேண்டும். அப்புறம், ஓர் இஸ்ரேலியர், ஒரு ரஷ்யர், ஒரு சீனர், அப்புறமாய் நான் உட்கார்ந்திருக்கிறேன். அதனால், எனக்கு யோசிக்க நேரம் இருந்தது.


பின்லாந்து மாணவி எல்லா பின்லாந்தியர்களையும் போல, பள்ளிக்கூட நாட்களிலேயே தனக்கு நாட்டுப்புறவியல் அறிமுகம் இருந்தது என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவளது கதையில் தவறாமல் காலேவாலா அருங்காட்சியகங்களுக்கு அதிக இடம் இருந்தது. தானும் தனது நண்பர்களும் காலேவாலா பாடல்களைப் பாடி எவ்வாறு விளையாடுவோம் என்று அவள் உணர்ச்சி பொங்க விவரித்துக் கொண்டிருந்தாள்.


அவளது உணர்வுகளை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. அங்கிருந்த ஒரு மாத காலமும் பின்லாந்து என்ற ஐரோப்பிய தேசம் எவ்வாறு காலேவாலா என்ற நாட்டுப்புறக் காப்பியத்தால் செய்யப்பட்டிருக்கிறது என்பதைத்தான் நாங்கள் தொடர்ந்து கேட்டும் பார்த்தும் கொண்டிருந்தோம்.


காலேவாலா கதாபாத்திர ஒப்பனை தரித்து இன்றைக்கும் உலாவரும் நிஜ பின்லாந்தியர்களை நான் அந்தப் பயணத்தில் பார்த்திருந்தேன். வெண்ணிற தாடியோடு, நீள அங்கி போன்ற ஆடையணிந்து, அக்காப்பியத்தில் விவரிக்கப்படும் யாழ் போன்ற இசைக்கருவியை இசைப்பதையே தன் வாழ் நாள் தேர்வாகக் கொண்ட நிறைய காலேவாலர்கள் அங்கு இருந்தனர். ஏறக்குறைய, நம்ம ஊர் காந்தியவாதிகள் போல.


உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஏற்றுக் கொண்டதற்காக அர்ப்பணித்துவிடுவது. ஆனால், காலேவாலர்களுக்கும் காந்தியவாதிகளுக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. காலேவாலர்களிடம் தனித்த சித்தாந்தம் எதுவும் இருக்கவில்லை. அப்புனைவின் காப்பியக் குணமும் அதன்மீது எழுப்பப்பட்டுள்ள தேசியமுமே அவர்களை இயக்கிக் கொண்டிருந்தது.


அதன் பின் அடுத்தடுத்து பேசிய இஸ்ரேலியர், ரஷ்யர், சீனர்களிடம் ஓர் ஒற்றுமை இருந்தது. அவர்களனைவரும், நாட்டுப்புறவியலை ஆவணக்காப்பகங்களில் எதிர் கொண்டதாகச் சொன்னார்கள். தங்கள் நாட்டு ஆவணக்காப்பகங்களில் நாட்டுப்புற வழக்காறுகளுக்கென்று தனிப் பிரிவுகள் உள்ளன என்றும், அதைத் தற்செயலாகவோ அல்லது நண்பர்கள் அறிமுகப்படுத்தியோ நாங்கள் தெரிந்து கொண்டோம் என்று அவர்கள் சொன்னார்கள்.


இத்தனை அரிய பொக்கிஷங்கள் ஆவணக்காப்பகங்களில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி புதைந்து கிடப்பதைக் கண்டு தாங்கள் வியப்படைந்ததாக அவர்கள் சொல்ல விரும்பினார்கள். அந்த வியப்பு, நாளடைவில் தத்தம் வாழ்க்கைத் திட்டத்தை உருவாக்க துணை செய்தது என்றும் அவர்கள் விவரித்தார்கள். அந்தக் காலங்களில்தான் மக்கள் எத்தனை கற்பனா சக்தியுடன் வாழ்ந்திருக்கிறார்கள் என்று தாங்கள் கிளர்ச்சி உற்றதாக தெரிவித்தார்கள்.


என் முறை வந்தது. இந்த இடைவேளையில் நான் எனக்குரிய பதிலைக் கண்டு பிடித்திருந்தேன். அந்தப் பதில் அங்கிருந்த வெவ்வேறு நாட்டு இளம் நாட்டுப்புறவியலாளர்களையும் ஒரு சேர ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. நாட்டுப்புறவியல் குறித்த அவர்களது வியப்புகள், ஆச்சரியங்கள், உணர்வெழுச்சிகள் கடந்து இன்னொரு உலகம் இருப்பதை எனது பதில் அவர்களுக்கு உணர்த்தியது. வாழ்க்கையில் ஒரு முறையேனும் அந்த உலகத்தை பார்த்துவிடும் வேட்கை தங்களுக்கு வந்திருப்பதாக அதன் பின் பலரும் என்னிடம் பல்வேறு தருணங்களில் சொல்லியிருந்தார்கள். நான் எவ்வாறு நாட்டுப்புறவியலுக்குள் வந்து சேர்ந்தேன் என்ற கதையை இப்படித்தான் ஆரம்பித்தேன்:


‘என் உறவினர்களில் பலரும் இன்றைக்கும் கிராமங்களில்தான் வசித்து வருகிறார்கள். அவர்களில் நிறைய பேர் மிகச்சிறந்த கதைசொல்லிகள்கூட. என் தாத்தாவும் பாட்டியும் இன்றைக்கும் எனக்கு நிறைய கதைகளைச் சொல்கிறவர்கள்தான். நான் இவர்களைத்தான் படிக்க விரும்பினேன். இதனால் மட்டுமே நாட்டுப்புறவியலைத் தேர்ந்தெடுத்தேன்!’


இந்தப் பதில் அவர்களை எவ்வளவு தூரம் பாதித்திருக்கும் என்று உங்களால் உணர முடிகிறதா? நாட்டுப்புற வழக்காறுகளைப் புத்தகங்களிலும், ஆவணங்களிலும், ஒலி-ஒளிப்பதிவுக் கருவிகளிலும், செயற்கையான மீட்டுருவாக்கங்களிலும் மட்டுமே கற்பனை செய்து வந்திருந்த அவர்களுக்கு, ரத்தமும் சதையுமாய் ஒரு வழக்காறு இருக்க முடியும் என்ற விஷயம் அதிர்ச்சியாக இருந்தது. அதிலும் அந்த வழக்காறுகளின் நேரடி சாட்சியாய் ஒரு மனிதன் தங்களோடு இந்த மதுக்கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறான் என்ற செய்தி உன்மத்தத்தையே வரவழைத்திருக்கும்.


என்னருகில் அமர்ந்திருந்த அமெரிக்கப் பெண் ஒரு முறை என் தோளை இறுக அணைத்துக் கொண்டாள். சில நொடிகளுக்கு அவள் என்னை விடவில்லை. அப்பொழுதுதான் பிடுங்கிய, மண் அப்பியிருக்கும் வேர்க்கடலைச் செடியைப் பார்ப்பது போல அவர்கள் என்னை பார்த்தார்கள். அந்த நேரமே எல்லோரும் என்னிடம் ஒரு முறையேனும் கை குலுக்கி வாழ்த்து தெரிவிக்க ஆர்வமாய் இருந்தார்கள்.


எனது கதையில் இட்டுக்கட்டியது எதுவும் இல்லை. மதுக்கூடத்திற்காக சொல்லப்பட்டதும் இல்லை. என் முறை வரும் வரைக்கும், நிஜமாகவே நான் அந்தக் கேள்வியைத் திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டுதான் இருந்தேன்.


அந்த வருடத்துக் குழுவில் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து யாரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவில்லை. அப்படி யாராவது இருந்திருந்தால் இன்னொரு கதையை அவர்களும் சொல்லியிருக்க முடியும். ஒன்றிரண்டு சீனர்கள் இருந்தனர். ஆனால் அவர்களும்கூட நகர்ப்புறச் சீனத்திலிருந்து வந்திருந்தவர்கள். அவர்களுக்கும் கிராமம் தொலைதூர வாழிடமாகவே இருந்தது. அவர்களும்கூட அவர்கள் நாட்டு வழக்காறுகளை ஆவணக்காப்பகத்திலேயே அறிந்து கொண்டிருந்தார்கள்.


என் கதையைக் கேட்ட பலரும் என்னிடம் பகிர்ந்து கொண்ட இன்னொரு சேதியும் உண்டு – அதாவது, நான் மட்டுமே நாட்டுப்புறவியலை நோக்கி ஒரு அர்த்தத்தோடு வந்திருக்கிறேன். அதாவது, நான் நாட்டுப்புறவியலைத் தேர்ந்தெடுத்ததில் ஓர் இயல்புத் தன்மை இருக்கிறது. அவர்களிடம் இல்லாத சமூகக் காரணி என்னிடம் இருக்கிறது.


நான் கலந்து கொண்ட எந்தவொரு உலகளாவிய நாட்டுப்புறவியல் அரங்கிலும் இப்படியொரு காட்சி கட்டாயமாய் இருந்தது. என்னை யார் என்று கேள்விப்பட்டதும், உலகில் எஞ்சியிருக்கும் கடைசி நாட்டுப்புறத்தவன் போல பாவிக்கத் தொடங்குவார்கள். அல்லது, அவர்களிடம் வந்து சேர்ந்திருக்கும் முதல் நாட்டுப்புறத்தவன் போலவும்.


முதலும் கடைசியுமான நாட்டுப்புறத்தானாக இருப்பது சின்ன அனுகூலம், பெரிய உபத்திரம். அந்த நேரங்களில், நீங்களே எதிர்பார்க்காத வெளிச்சம் உங்கள்மீது கொட்டப்படுவது அனுகூலத்தில் வரும். ஆனால், அதன்பின் எல்லா நேரங்களிலும் நீங்கள் ஒரு தனி நபர் இல்லை, கூட்டத்தின் பிரதிநிதி என்பது ஆகப்பெரிய உபத்திரம்.


இந்த உபத்திரத்திற்கு ஓர் உப உபத்திரமும் உண்டு. நாட்டுப்புறத்தவர்களின் வாழும் உதாரணம் நீங்கள் என்பதால், அதைத் தொடர்ச்சியாக நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் அணிந்திருக்கும் உடையின் மூலமோ (பொது அரங்குகளில் கலந்து கொள்கிற ஆப்பிரிக்கர்கள் தத்தம் பழங்குடியினப் பாரம்பரிய உடைகளில் தோன்றுவதும், தமிழர்கள் வேட்டி கட்டிக் கொள்வதும்), எதையாவது நிகழ்த்துவதன் மூலமோ (பறை போன்ற இசைக்கருவிகளை இசைத்துக் காட்டுவது, பாடல்களைப் பாடுவது, தங்களுக்கேயுரிய பிரத்தியோக வழக்கு மொழியில் பேசிக் காட்டுவது) இதை நீங்கள் செய்து வர வேண்டும். நாட்டுப்புறவியலாளரான ஏ.கே. ராமானுஜம் மிகச்சிறந்த கதைசொல்லி என்றே அமெரிக்க நண்பர்களால் அறியப்படுகிறார்; தன்னை நாட்டுப்புறப் பாடகனாக அங்கீகரித்த இந்தச் சமூகம் இறுதி வரை ஆய்வாளனாக ஒத்துக்கொள்ளவே இல்லை என்ற வருத்தம் கே. ஏ. குணசேகரனுக்கு இருந்தது.


இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால், எனக்கு இப்படி எந்த ஜாலங்களும் தெரிந்திருக்கவில்லை. குறைந்தபட்சம் வேட்டியாவது கட்டத் தெரிந்திருக்க வேண்டுமா இல்லையா? அதுவும் எனக்குத் தெரியவில்லை. பாட்டு சுத்தமாக வராது. எந்த ஆட்டத்தையும் நான் கற்றுக் கொண்டிருக்கவில்லை. ஆனால், என் உறவினர்களில் நிறைய பேருக்கு இது எல்லாமே சரளமாக வரும்.


நாட்டுப்புறவியலில் முதுகலை படித்து முடித்ததும், உடனடியாக எனக்கு வேலை கிடைத்தது. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் நாட்டுப்புறக்கதைகள் சேகரிப்பு திட்டத்தில் ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டேன். எனது வேலை, வாய்மொழியாகச் சொல்லப்படும் கதைகளை ஆவணப்படுத்துவது. இதற்காக பன்னிரெண்டு மாதங்கள் தென் தமிழகக் கிராமங்களில் தங்கியிருக்கும்படி எனக்கு வாய்த்தது.


முதுகலைப் படிப்பின் இரண்டு வருடங்களில் புத்தகங்கள் வழியாகவும், கோட்பாடுகளின் பின்னணியிலும் அறிந்து வைத்திருந்த வழக்காறுகளை நேருக்கு நேர் சந்திக்கப் போகிற உற்சாகத்தில் நான் அந்தப் பணியை ஆரம்பித்தேன். இது வாழ்நாளுக்கும் நினைத்துக் கொள்கிற புதுவித அனுபவமாக இருக்கப் போகிறது என்று எனக்கு நிச்சயமாய் தெரிந்திருந்தது. ஆனால், நான் புத்தகங்களில் கற்றுக் கொண்டிருந்த விஷயங்களை அது புரட்டிப் போடப்போகிறது என்று நான் அப்போது நினைத்திருக்கவில்லை.Kommentare


bottom of page