top of page

நரகத்திற்கே போய்க் கொள்கிறோம்!

'வைகை இலக்கியத் திருவிழா 2024' நேற்று ஆரம்பித்தது.  இன்று முடிந்து விடும். 


 நான் சென்ற போது, சு. வெங்கடேசன் விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றிக் கொண்டிருந்தார்.  வழக்கம் போல மிகையுணர்ச்சிகள் புரண்டோடும் உரை. திராவிட மேடைப்பேச்சாளர்களுக்கும் சுவெ போன்ற பேச்சாளர்களுக்குமான வேறுபாடு ஒன்றே ஒன்று தான் - சுவே போன்றவர்களிடம் நபர்களைத் துதி பாடுவதும் அசட்டு நகைச்சுவைகளும் இருக்காது.  மற்றபடி, விதவிதமானப் பெருமிதங்களுக்கு பஞ்சமில்லை.  



மதுரை, பிற நகரங்களிலிருந்து எப்படி வித்தியாசமானது என்பதே அவருடைய பேச்சின் சாராம்சம்.  தமிழில் இதுவொரு பிணி.  எல்லா நகரத்தவர்களுக்கும் இது உண்டு.  தங்களது நகரத்தின் பெருமையை சவால் விட்டும், வேறேங்கும் கிளைகள் கிடையாது என்று சொல்லியுமே நிரூபிக்க முயல்வார்கள்.  சுவெயும் மதுரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய தமிழ்ப் பெருமைகளைப் பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார்.  


அதன் பின் தேவதாஸ் பேச ஆரம்பித்தார்.  அவர் பேச ஆரம்பித்தத்துமே மாவட்ட ஆட்சித் தலைவரும் சுவெயும் மேடையிலிருந்து இறங்கி முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டனர்.  அவர்களது நேரடிப்  பார்வை இல்லை என்று தெரிந்ததும், அரங்கத்தில் அமர வைக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் வெளியேறத் தொடங்கினர் 


அதன் பின் பேராசிரியர் இ. முத்தையா பேசும் போது நிலைமை இன்னும் மோசமாகியது.  வெளியே தேநீர் வழங்கப்படுகிறது என்று யாரோ வதந்தியைப் பரப்பியிருக்க வேண்டும், கூட்டம் கொத்து கொத்தாக உள்ளே வருவதும் வெளியேறுவதுமாக இருந்தது.  இந்த நேரம் மாவட்ட ஆட்சித்தலைவ்ரும், சுவெயும் அரங்கில் இல்லை.


மதியம் 12.15 மணியளவில் தொடக்க விழா முடிந்து, இடைவேளையே இல்லாமல் (இ.முத்தையா பேசும் போது தான் இடைவேளை எடுத்துக் கொண்டார்களே என்று நினைத்திருக்கலாம்.) அடுத்த அமர்வு தொடங்கியது.  இந்த அமர்வில் மூன்று பேர் பேசியாக வேண்டும்.  ச. தமிழ்செல்வன், அ. ராமசாமி, நான்.   


தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றை ஒளிப்படங்களுடன் மாணவர்களுக்கு விளக்க ஆரம்பித்த தம்ழ்ச்செல்வனை 1980களோடு நிறுத்த வைத்தார்கள்.  அடுத்த 40 ஆண்டு தமிழ்ச் சிறுகதை வரலாறு சொல்லப்படாமலேயே போயிற்று.


அடுத்து பேச அழைக்கப்பட்ட அ. ராமசாமிக்கு 30 நிமிடம் என்று சொன்னார்கள்.  அவர் ஆரம்பித்த போது 1.00 மணி.  நான் இவ்வளவையும் பார்த்துக் கொண்டு திக் திக்கென்று உட்கார்ந்து கொண்டிருந்தேன்.  எனக்கு நிச்சயமாய் 1.30 மணி போல வாய்ப்பு தருவார்கள்.  அந்த நேரம், பாதி மானவர்களைக் காணாது; மீதமுள்ளவர்கள் மதிய உணவுப் பந்திக்கு செல்ல துடித்துக் கொண்டிருப்பார்கள்.  இதனிடையே நான் 'வழக்காறுகளை வாசித்தல்' என்று பேசியாக வேண்டும் என்பதை நினைத்து என்னையே நான் நொந்து  கொண்டிருந்தேன்.  


இது எனக்கு சகஜம்.  ஒன்று என்னை இது போன்ற விழாக்களுக்கு அழைக்க மாட்டார்கள்.  இல்லையென்றால், பசி நேரத்தில் என்னைப் பேசும் படி பணிப்பார்கள்.  இது மதுரையில் என்று மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் எனக்கு இப்படித்தான் நடந்திருக்கிறது.  அகஸ்மாத்தாக என் பெயர் காலை 10 அல்லது 11 மணியளவில் இடம்பெற்றிருந்தாலும் யாராவது ஒரு 'பின்னால் பேசக்கூடிய பேச்சாளர்' அவசரமாய் போக வேண்டியிருக்கிறது என்று சொல்லி, என்னை மரபான 1.30 மணி slotக்கு மாற்றிவிடுவார்கள்.  இந்திய ரயில்வேயில் Lower berthல் முன்பதிவு செய்த தனி நபர்களின் சீட்டுகள் பறிக்கப்பட்டு, Side Upperல் அல்லது Upper Berthல்  தூக்கி வீசப்படுவார்களே அதே மாதிரி தான் இதுவும்.  இப்படித் திட்டமிடுவதற்கென்றே என் விரோதிகள் தமிழகமெங்கும் இருக்கிறார்கள்!


அ. ராமசாமியே 1.00 மணிக்கு மேடையில் சும்மா நின்று கொண்டு  பேசுவதற்குத் தயங்கினார்.  அந்த மேடையிலிருந்த podium பேச்சாளரின் முகத்தை மட்டுமே காட்டும் வகையில் உயரமாகவும் அகலமாகவும் இருந்தது.  அதனால் அ. ரா. பயந்திருக்கலாம்.  அவர் ஒரு கை ஒலிவாங்கியை வாங்கிக் கொண்டு மேடையின் பக்கவாட்டில் நடந்த படியே பேசலானார்.  ஆனால் அதுவும் கூட பெரிதாய் உதவி செய்யவில்லை போலும்.  


சமகாலத் தமிழிலக்கியம் தான் அவர் பேச விரும்பிய தலைப்பு.  அதிலும் குறிப்பாக பிற நாட்டுத் தமிழர்கள் எழுதும் தமிழிலக்கியத்தை அவர் பேச விரும்பினார்.  சமகாலம் என்பதற்கு 'இன்று' என்று விளக்கம் தந்து, அதற்குத் தோதாக Valentine’s Day என்றெல்லாம் சொல்லி மாணவர்களை உற்சாகப்படுத்தி, தலைப்பிற்கு வந்து சேர்ந்த பொழுது, எனக்கான 1.30 மணியைக் கடந்து விட்டிருந்தார்.  இறங்குங்கள் என்று அவருக்கு சைகை காட்டினார்கள்.   மனமில்லாமல், ஆனாலும் பெருந்தன்மையாக அ.ரா. மேடையை எனக்கு விட்டுத் தந்தார்.  ஆனால், அது பெருந்தன்மை அல்ல, பழிவாங்கல் என்று எனக்கு மேடையேறியதும் தான் தெரிந்தது.  


அரங்கம் மிகப் பெரியது.  அழகானதும் கூட.  நான் மேடையேறிய போது, ஒரு பகுதி ஆட்கள் யாரும் இல்லை.  அதாவது வாசல் இருக்கும் பகுதி காலியாக இருந்தது.  வாசல் பகுதியில் உட்கார்ந்திருந்த ஆட்கள் வெளியேறுகிறார்கள் என்றால், அடுத்த பகுதியினர் கொஞ்சம் தயக்கத்தோடே அரங்கில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொண்டேன்.  எடுத்த எடுப்பில் கூட்டத்தைப் பார்த்து, 'பசிக்குதா?' என்று கேட்டேன்.  கூச்சமே இல்லாமல் மொத்த பேரும் 'ஆமாம்' என்றனர்.  மேடை நாகரீகம் போல, பார்வையாளர் நாகரீகம் என்று ஒன்று இருப்பதாகவே அவர்களுக்குத் தெரியவில்லை.  'இல்லை ஐயா, நீங்கள் பேசுங்கள்; நாங்கள் கேட்கிறோம்' என்றல்லவா அவர்கள் சொல்லியிருக்க வேண்டும்?  


இத்தனை பசியோடு இருப்பவர்கள் முன், வழக்காறுகளைப் பற்றி என்ன பேசுவது என்று திகைத்து நின்றிருந்த போது, இவ்வளவு அழகாகக் கட்டப்பட்டிருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இத்தனை தர்மசங்கடம் வந்திருக்க வேண்டுமா என்று ஒரு கணம் தோன்றியது.  புத்தக மாளிகையில் பேச்சு பற்றி பேசுவது என்றொரு முரண் மனதில் நிழலாடியது.  அதை அப்படியே மேடையில் சொன்னேன்.   


எழுதப் படிக்கத் தெரிந்தவர்களே கூட இன்று புத்தகங்களைக் கண்டு கொள்வதில்லை, ஆனால் எழுதப் படிக்கவே தெரியாத மக்கள் புத்தகங்களைப் படித்திருக்கிறார்கள் தெரியுமா என்றேன்.  யாருக்கும் தெரியவில்லை.  எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எப்படி புத்தகம் வாசிப்பார்கள்? பொய் சொல்லாதீங்க சார் என்பது போலப் பார்த்தார்கள். 


 மிகச் சரியாக மாட்டிக் கொண்டார்கள் என்று எனக்குள் தோன்றி விட்டது.  உடனே அடுத்து, அன்னந்தண்ணியில்லாமல் நல்ல புத்தகங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால், சொர்க்கத்திற்குப் போகலாம் தெரியுமா என்றேன்.  இந்த முறை இன்னும் ஆரவமாகி 'அது எப்படி? என்பது போல நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.  நான் என்னை Hamelin நகரத்து Pied Piperராக  நினைத்துக் கொண்டேன்.   அதன் பின் நடந்தது, வரலாறு. 


நயினார் நோன்பையும், அதில் எழுத்தறிவு பெற்றவரை வாடகைக்கு அமர்த்தும் வழக்கத்தையும், அதில் நடைபெறும் விவாத முறையையும், அதை மதிக்காத அமராவதியின் கதையையும், தானம் செய்தால் போதுமா அல்லது நோன்பும் இருக்கவேண்டுமா என்ற விவாதத்தையும் அவர்களுக்கு விளக்க ஆரம்பித்தேன்.  இன்றைக்கு நீங்கள் பசியோடு உட்கார்ந்து இதைக் கேட்டுக் கொண்டிருப்பதற்கும் நயினார் நோன்பின் போது பசியோடு இருந்து சித்திரபுத்திரன் சரித்திரம் கேட்டுக் கொண்டிருப்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை என்று சொன்னேன்.  


மேலும் இந்திய மரபில் சொர்க்கம் வேண்டாம் நரகத்திற்கே போய்க் கொள்கிறோம் என்று சொன்ன இரண்டு தருணங்களை அவர்களுக்கு சுட்டிக் காட்டினேன்.  இரண்டு முறையும் சொல்லப்பட்டக் காரணம் ஒன்றே ஒன்று தான் - 'நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நரகத்தில் தான் எனக்கு வேண்டியர்களெல்லாம் இருப்பார்கள் போலிருக்கிறது.  யாரென்றே தெரியாத அந்நியர்களுடன் சொர்க்கத்தில் இருப்பதற்கு, நன்கு தெரிந்த ஆட்களுடன் நரகத்தில் இருக்கலாம்!.  எனது உரை சுபமாக முடிந்தது.  


உரை முடிந்ததும் இரண்டு பேர் மட்டும் கேள்விகளைக் கேட்கலாம் என்று அனுமதி தந்தார்கள்.  அந்த வாய்ப்பை ஒரே ஒரு பெண் மட்டும் பயன்படுத்திக் கொண்டாள்.  அவள் கேட்ட கேள்வி இது:  


'நான் ஒரு பணக்காரி என்று நினைத்துக் கொள்ளுங்கள்.  நான் ஏழைகளுக்கு ஒரு தானமும் செய்யவில்லை என்றும் நினைத்துக் கொள்ளுங்கள்.  இப்பொழுது நீங்கள் சொல்வது போல, நான் நயினார் நோன்பை மட்டும் கடைபிடித்தால் சொர்க்கத்திற்கு சென்று விட முடியுமா? அதாவது என்னிடம் எந்த நல்ல விஷயமும் இல்லை; ஆனால், நோன்பிருக்கிறேன்.  என்னால் சொர்க்கத்திற்குப் போய்விட முடியுமா?'


இது புத்திசாலித்தனமான கேள்வி.  அதற்கு இப்படித்தான் பதில் சொன்னேன்:


'ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கிய பணக்காரர்கள் என்பது ஒரு கற்பனை.  நீங்கள் சொல்வது போலத் தான் பெரும்பான்மை பணக்காரர்கள் இருக்கிறார்கள்.  அப்படியொரு பணக்காரர், அதாவது நீங்கள், நோன்பிருந்து, புத்தகங்களை வாசித்து, நல்ல விஷயங்களை விவாதிக்க ஆரம்பிக்கிறீர்கள் என்றால், அந்தப் புத்தகங்கள் உங்களை மேற்கொண்டு மோசமான மனிதராக இருக்க விடாது.  நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல மனிதராக மாறத் தொடங்குவீர்கள்.  புத்தகங்கள் உங்களை செழுமைப்படுத்தும்.  அதன் பின் நீங்கள் சொர்கத்திற்கு செல்வதில் எந்தத் தடையும் இருக்காது! அன்றைக்கு நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.  உங்கள் உறவினர்கள், நண்பர்களோடு நரகத்தில் இருக்க விரும்புகிறீர்களா? அல்லது, அந்நியர்களுடன் சொர்கத்திலா?'


44 views0 comments

Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación

ஆசிரியரின் பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

உங்கள் மின்அஞ்சலை இங்கே பகிருங்கள் 

இணைந்தமைக்கு நன்றி !

© எழுத்தாளர் டி. தருமராஜ் . அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தளம் வடிவமைப்பு & பராமரிப்பு - இளம்பரிதி , ஓவியங்கள் - ரஞ்சித் பரஞ்சோதி.

  • Youtube
  • Facebook
  • LinkedIn
WhatsApp Image 2023-08-01 at 3.07_edited
bottom of page