top of page

திராவிட மேட்டிமையின் குறியீட்டு அடையாளமே வெள்ளாளப் பெருமிதம்!


சந்திப்பு: பா. ச. அரிபாபு, இரா. கார்த்திக்


(நாட்டுப்புறவியல் பேராசிரியரும், பண்பாட்டு ஆய்வாளருமான டி. தருமராஜ் தமிழகத்துச் சிந்தனையாளர்களில் மிக முக்கியமானவர். மொழியியல், மானுடவியல், கலை, இலக்கியம், சினிமா, கோட்பாடு எனப் பல அறிவுத்துறைகளிலும் தனது பங்களிப்பைத் தீவிரமாகச் செலுத்தி வருபவர். ‘கலகக்காரர்களும் எதிர்க் கதையாடல்களும், நான் பூர்வ பெளத்தன், சனங்களின் சாமிகள், தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?, உள்ளூர் வரலாறு, கபாலி, தமிழ் நாட்டுப்புறவியல், இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?, போன்ற நூல்களை எழுதியிருக்கும் இவர் 2020 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை’ தமிழ்ச் சூழலில் தீவிரக் கவனம் பெற்றது.


நாட்டுப்புறவியல் ஆய்வுகளில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வரும் இவரது ஆய்வுப் போக்கானது முற்றிலும் மாறுபட்ட ஒன்று. நாட்டுப்புறக் கலை, கலைஞர்கள் மற்றும் வழக்காறுகள் ஆகியனவற்றை ஆய்வுக்கு உட்படுத்தாமல் புனிதமெனக் கருதித் தொகுப்பதும் ஆவணப்படுத்துவதுமே ஆய்வெனக் கருதும் போக்கை மறுத்து வழக்காறுகளுக்குள் ஒளிந்திருக்கும் அரசியலைப் பேசியவர். ஒடுக்கப்பட்டோரின் குரலாகவும் மாற்றுக் கதையாடலைக் கட்டமைக்கக் கூடியவராகவும் அறியப்படும் இவர், பொதுவெளியில் தொடர்ச்சியான உரையாடலை முன்னெடுத்து வருபவர்.


2021, கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை, மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் புலத்தில் டி. தருமராஜை சந்தித்தோம். மெல்லிதாக வானம் தூறத் தொடங்கியிருந்தது. பிற்பகல் தொடங்கி அந்தி சாயும் நேரம் வரைக்கும் தொடர்ந்த உரையாடலில் நாட்டுப்புறவியலுக்கும் நாட்டார் வழக்காற்றியலுக்குமான முரண், இயற்கை வேளாண்மை, பொது ஜனத் திரட்சி குறித்த அவதானிப்புகள் எனப் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். )


1 கேள்வி: எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்தப் பயணம்?


பதில்: எழுத்திலிருந்து ஆரம்பித்தது. எழுத்தாளனாவது தான் ஆசையாக இருந்தது. பள்ளிப்பருவத்திலேயே சிறுகதைகள் எழுதி அவை அச்சிலும் வந்து விட்டன. அந்நாட்களில் வலிமையான சிற்றிதழ் இயக்கமொன்று தமிழில் இருந்தது. அதைப் படைப்பிலக்கியம் சார்ந்தது என்றே பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்படி இல்லை. எல்லாவிதக் கலைகளையும் அரசியலையும் பேசக்கூடிய தமிழ்த் தளமாக அன்றைக்கு சிற்றிதழ்களே இருந்தன. ஓவியம், திரைப்படம், இலக்கியம், அரசியல், சமூகம், கோட்பாடுகள் என்று அனைத்தையும் குறித்த விவாதங்கள் அதில் நடைபெற்றன. அன்றைய இளைஞர்கள் அதன் மீதே ஈர்க்கப்பட்டோம். அதுவொரு கூட்டுச் செயல்பாடும் கூட. கையெழுத்துப் பத்திரிகை நடத்துவது, இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்வது - நடத்துவது, திரைப்பட இயக்கங்களைக் கட்டுவது, அச்சிதழ்கள் வெளியிடுவது, நவீன நாடக முயற்சிகளை மேற்கொள்வது, புத்தகங்களைத் தேடிப் பயணங்களை மேற்கொள்வது என்று அதுவொரு வாழ்க்கை முறை. எழுத்தாளராவதும் திரைக்கலைஞராவதுமே எங்களுடைய கனவாக இருந்தது. இப்படித்தான் ஆரம்பித்தது.



2 கேள்வி: நீங்கள் இளங்கலை வேதியியல் படித்தவர்.


பதில்: ஏதாவதொரு இளங்கலைப் பட்டம் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் அப்பொழுது இருந்தது. அந்த நாட்களில் அறிவியல் படிப்பது தான் கெளரவம். அப்படிப் படித்தது தான் வேதியியல். சிற்றிதழ் இயக்க ஈடுபாட்டால், இலக்கியத்தைப் பாடமாகப் படிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.


3 கேள்வி: சிற்றிதழ் இயக்கத்திலிருந்து நாட்டுப்புறவியலுக்கு எப்படி?


பதில்: 1986ம் ஆண்டு அருட்தந்தை ஜெயபதி ஏற்பாட்டில் ஒரு மாத சிறுகதைப் பயிலரங்கு நடந்தது. எஸ். ஆல்பர்ட்டையும் எம். டி. முத்துக்குமாரசாமியையும் அங்கு தான் சந்திக்கிறேன். அந்தப் பயிலரங்கில் எழுதியது தான் எஸ். வி. ராஜதுரையின் ‘இனி’யில் வெளியான ’அன்புள்ள தாத்தா பாட்டிக்கு’ என்ற சிறுகதை. அந்தக் கதையைப் பயிலரங்கில் எல்லோரும் கொண்டாடினார்கள். பன்றிக்கறி சமைத்துப் போடும் தாத்தா பற்றிய கதை அது. அதன் இலக்கிய நேர்த்திக்காகக் கொண்டாடுகிறார்கள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். அதில் ஆரவாரமாய் வெளிப்படும் இனவரையியல் கூறுகளையும் தலித் இலக்கியக் கூறுகளையும் அப்பொழுது நான் உணர்ந்திருக்கவில்லை.


அந்தப் பயிலரங்கிலேயே பின்னை நவீன எழுத்து முறை எங்களுக்கு அறிமுகமானது. நான் அப்பொழுது இளங்கலை படித்துக் கொண்டிருக்கிறேன். ஏதோ விளங்கியது போல இருக்கிறது; ஆனால், விளங்கவும் இல்லை. பின்னை நவீனம் அத்தனைக் கவர்ச்சிகரமாக இருந்தது. அந்தப் பயிலரங்கின் முக்கியமான விளைவு தான், தூய சவேரியார் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட நாட்டார் வழக்காற்றியல் துறை. சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தவன் பின்னை நவீனத்துவத்தின் வழியாக நாட்டுப்புறவியலுக்கு வந்து சேர்ந்த கதை இது.


4 கேள்வி: பின்னை நவீனத்துவமும் நாட்டுப்புறவியலும்… எப்படி?


பதில்: ஒரு கையில் மார்க்வெஸின் நூற்றாண்டுத் தனிமை நாவலையும் இன்னொரு கையில் கிளாட் லெவி ஸ்ட்ராஸின் அமைப்பியல் மானிடவியலையும் வைத்துக் கொண்டு தான் நாட்டுப்புறவியல் கற்றோம். நவீனத்துவம் சமாதி கட்டியிருந்த தொன்மங்களைத் தோண்டியெடுக்க எங்களுக்கு பின்னை அமைப்பியல் முறையியல்களே துணை செய்தன. ஆனால், நாட்டார் வழக்காற்றியல் துறை ஒரு கலவையாக இருந்தது. மானிடவியலாளர்கள் ஒரு புறம், இலக்கியத் துறையினர் ஒரு பக்கம், பின்னை நவீனத்தும் பேசும் நாங்கள் இன்னொரு பக்கம். இவர்களுள் திராவிட இயக்க ஆதரவாளர்களும் இருந்தார்கள்; பொதுவுடமை ஆதரவாளர்களும் இருந்தார்கள்.



5 கேள்வி: நா.வானமாமலை, தே.லூர்துவின் தாக்கம் உங்களிடம் இல்லை என்கிறீர்களா?


பதிள்: நிச்சயமாக இல்லை. என்னிடம் மட்டுமல்ல. நாட்டார் வழக்காற்றியலைக் கல்வியாகக் கற்றுக் கொண்ட யாரிடமும் இல்லை. நாட்டுப்புறவியல் வரலாற்றில் நா. வானமாமலையும் தே. லூர்துவும் முக்கியமானவர்கள். ஆனால், கருத்தாக்க அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் இல்லை.


6 கேள்வி: பள்ளிப் பருவத்திலேயே ஒருவர் எழுதத் தொடங்குவது சாதாரணமானதல்ல. அது அபூர்வமாகத்தான் நிகழும். அப்போதே கோட்பாடுகளை படித்தது மேற்கத்திய எழுத்தாளர்களின்பால் அறிமுகம் ஏற்படுவது, வாசித்தது, இது அபூர்வமானது தான். அப்போதே சிறுகதைகள் எழுதத் துவங்குனீர்கள். உலக இலக்கியத்தை பற்றிய புரிதல் இருந்திருக்கிறது ஆனால் இன்று அந்த தருமராஜ் இல்லையே? ஒரு சிறுகதை ஆசிரியராகவோ நாவலாசிரியராகவோ ஆகாமல் தீவிர ஆய்வாளராக வந்த நிற்கிறீர்கள். அன்றிலிருந்து எழுதியிருந்தால் தமிழின் முக்கியமான எழுத்தாளர் ஆக கூட வந்து இருக்க இயலும். எவ்வாறு முழுதாக மாறி இந்த நிலையை அடைந்தீர்கள்?


பதில்: படைப்பிலக்கியமும் ஆய்வும் முற்றிலும் வேறு வேறானவை என்று நான் நினைக்கவில்லை. ஆனால், அப்படியொரு மயக்கம் தமிழில் இருக்கிறது. ரொம்ப வருடங்களுக்கு நானும் கூட அப்படித்தான் நினைத்திருந்தேன். எழுத்தாளனாவதும் ஆய்வாளனாவதும் இரு வேறு துருவங்கள் என்று. படைப்பிலக்கியத்தின் மீது அப்படியொரு உன்னதம் கவிந்திருக்கிறது. 1985ல் ‘நிதர்சனா’ என்ற கையெழுத்துப் பத்திரிகை கொண்டு வந்த போதும் சரி, 88ல் ‘அஸ்வமேதா’ என்ற அச்சிதழ் கொண்டு வந்த போதும் சரி, நானடைந்த உள்ளக் கிளர்ச்சியைப் படைப்பிலக்கியமே வழங்குகிறது என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆய்விற்கு வந்த பின்பு, அந்தப் படைப்பூக்கம் என்னை விட்டு விலகிப் போய்க்கொண்டிருப்பதாகவும் ஒரு பயம் இருந்தது. சொன்னால் வேடிக்கையாக இருக்கும், ஒரு நெகிழ்வான உரையாடலில், ‘என்னால் சிறுகதைகளை எழுத முடியவில்லை; அதற்கான மொழியையும் மனதையும் நான் தொலைத்து விட்டேன்’ என்று ஜெயபதியிடமும், சி. மோகனிடமும் ஏங்கி ஏங்கி அழுதிருக்கிறேன்.


7 கேள்வி: அவ்வளவு வலி நிரம்பியதா?


பதில்: அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தேன். அதைக் கடந்து வருவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. இங்கே தமிழில் ஏற்கனவே வழங்கி வந்த ஆய்வு மொழியின் பிரச்சினை ஒரு பக்கம், படைப்பிலக்கியம் மீதான கர்வம் இன்னொரு பக்கம்… ஆய்வாளன் என்றாலே எல்லோரும் துக்கம் விசாரிக்கிற நிலைக்கு இருந்தது. ‘ஒரு நாவல் எழுதுங்க எல்லாம் சரியாப் போகும்’ என்று கைமருந்து கூட சொன்னார்கள். எனக்கான மொழியொன்றையும், ஆய்வு மனமொன்றையும் உருவாக்க வேண்டிய அவசியத்தை அப்பொழுது தான் நான் உணர்ந்தேன்.


8 கேள்வி: உங்கள் மொழி வளமும், நடையும் சிலாகிக்கப்படுகிறது… அதை எப்படி உருவாக்கிக் கொண்டீர்கள்?


பதில்: முழுக்க முழுக்க ஆய்வு என்று முடிவு செய்த பின்பு எனக்கான மொழியை நான் இழந்து விட்டது போல இருந்தது. தமிழில் புழங்கி வந்த திருகலான மொழியிலேயே நானும் எழுதிக் கொண்டிருந்தேன். நான் பழகிய மொழி படைப்பிலக்கியத்திற்கானது என்றும், அதை நான் இழந்து கொண்டிருக்கிறேன் என்றும் பயந்தேன். அறிவியலைப் பேசுவதற்கான மொழி தட்டையாகத்தான் இருக்கும் என்றொரு கண்மூடித்தனம் எனக்கு இருந்தது. அப்பொழுது தான் அயோத்திதாசர் என் கைகளில் கிடைத்தார். அவர் வேறு மாதிரியாக இருந்தார். முழு ஆய்வு மனதோடு அவரை அணுகுவதில் சிக்கல் இருந்தது. அவர் எனக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தினார். படைப்பூக்கத்துடனும் அணுகினால் தவிர அவரை நெருங்க முடியாது என்ற நிர்பந்தம் ஏற்பட்டது. இப்பொழுதே, என் சிக்கல் கொஞ்சம் கொஞ்சமாக துலங்கத் தொடங்கியது. ஒரு நாள் திடீரென்று என்னையே நான் கேட்டுக் கொண்டேன் - படைப்பூக்க மொழியென்றும் ஆய்வு மொழியென்றும் தனித்தனியே இருக்க வேண்டிய அவசியம் என்ன?


9 கேள்வி: உங்களிடம் நடந்த அறிவியலையும் புனைவையும் இணைக்கிற புள்ளி இது தானா? அயோத்திதாசர் தான் இதை நிகழ்த்துகிறாரா?


பதில்: அயோத்திதாசர் என்னை உந்தித் தள்ளினார். அவருக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள். இந்த நூற்றாண்டில் திரும்பி வந்த அவருக்கும் ‘ஆய்வு - புனைவு’ பிரச்சினை இருந்தது. அவரது எழுத்தையும், சிந்தனையையும் கூட புனைவா, அறிவியலா என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சொல்ல முடியாத சோம்பலில், ‘அவர் ஒரு கற்பனாவாதி’ என்று புறந்தள்ளவே நிறைய பேர் விரும்பினர். நானும் அயோத்திதாசரும் நெருங்கி வந்த தருணம் இது. நான் அவரிடமுள்ள அறிவியலை நிரூபிப்பதன் மூலம் எனது சிக்கலைத் தீர்த்து விடலாம் என்று நம்பினேன். அந்த நம்பிக்கையின் நம்பிக்கையே, அயோத்திதாசர்.


10 கேள்வி: ஆனால், அயோத்திதாசரின் எழுத்து முறையையும் நீங்கள் பின்பற்றவில்லை. அவர் எழுத்தில் தொடர்ச்சியாக ஒரு பிரசங்கி தென்படுகிறார். உங்கள் எழுத்து ஒரு சுழல் படிக்கட்டைப் போல சரேலென்று இறங்குகிறது. இது எப்படி சாத்தியமானது?


பதில்: ஆய்வும் படைப்பூக்கம் நிரம்பியது என்ற தெளிவு மிகப் பெரிய ஆசுவாசமாக இருந்தது. அதுவொரு அற்புதமான திறப்பு. பறவையிலிருந்து பிரிந்த இறகு போல ஒரு நினைப்பு. படைப்பூக்கம் என்றும், அதிலிருந்து பெறப்படும் மனக்கிளர்ச்சி என்றும் எதைச் சொல்கிறோம் என்று நான் விளங்கிக் கொள்ள விரும்பினேன். அந்நாட்களில், குறைந்தபட்சம் பத்து நாவல்களை எழுதுவதற்கானத் திட்டங்கள் என்னிடம் இருந்தன. ஒவ்வொரு முறையும், சிறுகதையைப் போன்ற ஒரு காட்சி எனக்குள் விரிந்து, பின் யோசிக்க யோசிக்க அது நாவலாகப் படர்வதை நான் உணர்ந்திருக்கிறேன். உதாரணத்திற்கு, ‘நிழலைத் திருத்தித் தருவதாகச் சொல்லிக் கொண்டு ஒரு நாடோடிக் கூட்டம் ஊருக்குள் வருகிறார்கள். அவர்களது நிழல் தரையில் விழுவதில்லை’ என்றொரு பிம்பம் மனதிற்குள் தோன்றி நாளடைவில் பல கிளைக்கதைகளுடன் ஒரு நாவலாக வளர்ந்து நின்றது. அதற்குப் பெயர் கூட எழுதி வைத்திருந்தேன் - ‘நிதிநி’. நிழல் திருத்தும் நிலையம்.


11 கேள்வி: நிஜமாகவே அற்புதமாக இருக்கிறது. இதை நீங்கள் நிச்சயம் எழுத வேண்டும்.


பதில்: இப்படித்தான், இந்தக் காட்சிகள் நம்மை ஏமாற்றி மயக்குகின்றன. கொல்லாத கத்தியை செய்ய விரும்பிய கொல்லன்; தான் விரும்பிய பெண்களுக்கெல்லாம் ஒரே முகச்சாயல் என்று கண்டு கொண்டவன், அது தனது தாயின் சாயல் என்றும், அது தன்னைச் சிறுவயதில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தவனின் சாயல் என்றும் கண்டு பதறுவது; தான் யாரென்பதை மறந்து விட்ட டெய்லர், தனக்கு துரோகம் செய்தவன் தான் நானோ என்று சந்தேகப்படுகிறான்; தனது வாழ்க்கை சுவராஸ்யமற்றது என்று நம்பும் ஒருவன், வித்தியாசமான சுயசரிதைகளை வாசித்து, அவற்றிலிருந்து கற்பனையாக சம்பங்களை உருவாக்கிக் கொண்டு எழுதும் பரபரப்பான தன்வரலாற்றுக் கதை.


ஒவ்வொரு முறையும் எனக்குள் ஒரு காட்சி தோன்றுகிறது, அதை நான் தொடர் காட்சிகளாக வளர்க்க ஆரம்பிக்கிறேன், பின் அது ஒரு எழுதப்படாத நாவலாக எனக்குள் அடுக்கப்படுகிறது என்பதை நான் விளங்கிக் கொண்டேன். இந்த நாவல்களை எழுத ஆரம்பிக்கும் பொழுது தான் நான் சிக்கலை எதிர்கொள்கிறேன். எனது ஆய்வு மனம், குறுக்கே நிற்கிறது. ஆய்வு மொழி, அந்தக் காட்சிகளை சிதைத்து விடுகிறது. ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் போல எங்கேயாவது கண்காணாத இடத்திற்குச் சென்று விட்டால் இந்த நாவல்களையெல்லாம் எழுதி முடித்து விடலாம் என்று கூட நினைத்திருக்கிறேன். என் சிக்கல் இது தான், எனக்குள் காட்சிகள் பெருக்கெடுக்கின்றன, ஆனால் அவற்றை படைப்பாக எழுதுவதில் தடைகள் இருக்கின்றன. அதற்கான கவித்துவத்தை இழந்து கொண்டிருப்பதாக நினைத்து தான் அழுது புரண்டது.


நான் எவ்வாறு காட்சிகளைக் கற்பனை செய்கிறேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன். பார்த்தால், நான் மட்டுமல்ல எல்லோருமே காட்சிகளாகத்தான் யோசிக்கிறார்கள் என்று விளங்கியது. உறைந்த காட்சிகள் போன்று தோன்றுபவை, நெருங்கிப் போனால் நகர்கின்றன; சுருண்டு, கலங்கி, பின் உங்களை விழுங்கியும் விடுகின்றன. அப்பொழுது தான், ஞாபகம் மட்டுமல்ல யோசனையும் கூட பிம்பங்களாக அடுக்கப்பட்டிருப்பது விளங்கத் தொடங்கியது. எனக்குத் தோன்றுகிற யோசனைகளையெல்லாம் சிறுகதைகளாகவோ அல்லது நாவல்களாகவோ கற்பனை செய்து கொள்வது ஏன் என்ற கேள்வியை நான் கேட்டுக் கொண்டேன்.


12 கேள்வி: படைப்புமனம் என்று தனியே எதுவும் இல்லை என்று சொல்வீர்களா?


பதில்: படைப்புமனம் இருக்கிறது; இலக்கியமனம் என்று தான் எதுவும் இல்லை என்று சொல்கிறேன். அதுவொரு சட்டகம் மட்டுமே. அதில் நுட்பம் மட்டுமே செயல்படுகிறது. ஆனால், படைப்புச்செயல் நுட்பத்திற்கும் மூத்தது. அதுவே உள்ளிருந்து வருகிறது. அப்படியானக் காட்சிகளை சிலர் நாவல்களாக மாற்றுகிறார்கள், சிலர் ஓவியங்களாக, சிலர் திரைப்படங்களாக, சிலர் மண்பொம்மைகளாக, சிலர் அறிவியலாக. எனக்குள் தோன்றும் காட்சிகளை படைப்புமனம் உருவாக்கிக் கொண்டிருப்பதாகவும், அதை ஆய்வுமனம் தொடர்ந்து அழிக்க முயல்கிறது என்றும் நான் நம்பிக் கொண்டிருந்தது மிகப் பெரிய நாடகம் என்று விளங்கியது இப்படித்தான். இந்தத் தெளிவு, அற்புதமான சுதந்திரவுணர்வை வழங்குகிறது. எனக்குள் தோன்றிய புனைவுக் காட்சிகளனைத்தும் எனது அறிவியல் முயற்சிகளின் விளைவுகளே என்று யோசிப்பது என்னை உந்தித் தள்ளியது. நான் இப்பொழுது, காட்சிகளைக் கற்பனை செய்யும் வழக்கத்தை ஆய்வுகளின் ஒரு அங்கமாக உருமாற்றிக் கொள்ளத் தொடங்கினேன்.


13 கேள்வி: இதற்கு முன்மாதிரி என்று யாராவது இருந்தார்களா?


பதில்: நிறைய பேர். குறிப்பாக ஃப்ரெஞ்சிலும் ஜெர்மனிலும் எழுதக்கூடிய பலருடைய எழுத்துகள் எனக்கு முன்மாதிரியாக இருந்தன. மிஷல் ஃபூக்கோவின் ஒரு புத்தகம் இந்த வகையில் என் ஆதர்ஷம். The Order of Things என்ற அந்த புத்தகத்தை முதன் முறையாக விலைக்கு வாங்கி வந்தேன். அதனால் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் வேலையாக ஒரு அட்டையைப் போட்டேன். சகல பக்திகளோடு அதை வாசிக்க ஆரம்பித்தால், முதல் கட்டுரை தலைகால் புரியவில்லை. என்ன சொல்கிறார், எதைச் சொல்கிறார் என்று சுத்தமாக விளங்கவில்லை. அது கோட்பாடாகவும் இல்லை, முன்னுரையாகவும் இல்லை; சுருக்கமாகச் சொன்னால், எதைப் பேசுகிறது என்றே விளங்கவில்லை. புத்தகத்தின் அத்தனை பக்கங்களிலும் அதற்கான சங்கேதங்களைத் தேடிப் பார்க்கிறேன், எதுவுமே கதைக்காகவில்லை. புத்தகத்தை ‘நாலா பக்கமிருந்தும் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருக்கிறேன்’. ஒரு நாள் தற்செயலாய் மிகச் சின்ன எழுத்துகளில் அடிக்கோடிடப்பட்டிருந்த அந்த வரியைக் கவனிக்கிறேன் - Diego Velazquesன் Las Meninas என்ற ஓவியத்தைப் பற்றியே அந்தக் கட்டுரை பேசுவதாகவும், அந்த ஓவியம் முன்னட்டையில் இருப்பதாகவும் அதில் சொல்லப்பட்டிருந்தது. அவசர அவசரமாக போட்டிருந்த அட்டையைக் கழற்றி விட்டு, அந்த முதல் கட்டுரையை வாசித்தால், அந்த ஓவியம் விதவிதமான பார்வைக் கோணங்களை உடையது என்றே ஃபூக்கோ விவரித்துக் கொண்டிருக்கிறார். அந்த ஓவியக் காட்சியைப் பார்க்காமல் அக்கட்டுரை அட்சரம் விளங்காது. அந்தக் காட்சியைத் தான் அட்டைபோட்டு மறைத்திருக்கிறேன். இப்படி ஒவ்வொரு புத்தகத்தோடும் எனக்கு அந்தரங்கமான அனுபவங்கள் இருக்கின்றன. எல்லோருக்கும் இருக்க வேண்டும். இல்லையென்றால் புத்தகங்களை உங்களால் விரும்ப முடியாது. அந்த அத்தனை அனுபங்களும் காட்சிகளாகவே நமக்கு நினைவிலிருக்கின்றன. பல்வேறு பார்வைக் கோணங்களைப் பற்றி பேசுகிற The Order of Things புத்தகத்தை ‘நாலாபுறமும் எட்டி எட்டிப் பார்த்தது’ போலவே நான் நினைவில் வைத்திருக்கிறேன். இது தான் அந்தப் புத்தகத்தின் ஒட்டுமொத்த சாரமும்.


14 கேள்வி: காட்சிகளுக்கு தர்க்கம் இருப்பதாகச் சொல்கிறீர்கள் என்று இதைப் புரிந்து கொள்ளலாமா? உங்களது வாதத்தின் படி, அறிவியலுக்கும் புனைவிற்கும் காட்சிகளின் தர்க்கத்தைப் பொறுத்த அளவில் வேறுபாடுகள் இல்லை, இல்லையா?


பதில்: ஏறக்குறைய அப்படித்தான். நான், எனக்குள்ளிருப்பதாக நம்பிக்கொண்டிருந்தது புனைவாளன் அல்ல; காட்சிகளின் தர்க்கத்தை வளர்க்கத் தெரிந்தவன். எந்தவொரு உணர்வையும் சம்பவமாக, நிகழ்வாக விவரிக்கத் தெரிந்தவன். இந்த சூட்சுமத்தைத் தான் புனைவு என்று சுருக்கி விடுகிறோம் என்று எனக்கு விளங்கியது. அதனால் அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்று கற்பனை செய்கிறோம் என்பதும் துலங்கியது. ஆனால், உண்மையில், காட்சிகளின் தர்க்கத்தைப் பொறுத்தவரை, அறிவியலுக்கும் புனைவிற்கும் வேறுபாடுகள் இல்லை.


இந்தத் தெளிவே ஆய்வு மொழியைத் தேடும் பயணத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. நான் என்னை எழுத்தாளன் என்று நினைக்கத் தொடங்கிய நாட்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பினேன். அந்த நாட்களில் எனக்குள் என்ன நடந்தது, அவ்வாறு நடந்ததை எந்தச் சூழலில் நான் இலக்கியக் குணம் என்று நம்பத் தொடங்கினேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.


15 கேள்வி: நீங்கள் உங்களை எழுத்தாளராக நினைக்க ஆரம்பித்த தருணத்தையா? சிறுவயதில், எழுத்தாளராவது தான் லட்சியம் என்று சொல்லியிருக்கிறீர்களே, அந்த நினைப்பு எப்படி வந்தது என்றா?


பதில்: ஆமாம். அந்த லட்சியத்தை எது உருவாக்கியது என்பதைத் தான் தேடத் தொடங்கினேன். சிறுவயதில் எங்களைச் சமாளிப்பது என் பெற்றோருக்கு துர்கனவாக இருந்திருக்க வேண்டும். நாங்கள் சதா சண்டையிட்டுக் கொள்ளும் சகோதரர்கள். அது விபரீத எல்லைக்குக்கூடச் செல்வது உண்டு. சகோதரச் சண்டையில் கற்களைக் கொண்டெல்லாம் ஒருவரையொருவர் தாக்கியிருக்கிறோம். கல்லெறிந்து கொண்டதில் ஓட்டுக் கூரைகள் பலமுறை உடைந்திருக்கின்றன. கோடை விடுமுறை காலங்களில் இந்தச் சண்டை உக்கிரமடையும். இதைத் தவிர்ப்பதற்கு எனது பெற்றோர் கண்டுபிடித்த உத்தி, விடுமுறை காலங்களிலும் பள்ளிக்கூட நூலகத்தில் போய் என்னை அடைத்து விடுவது. அதுவொரு சிறைவாசம் போல எனக்கு விதிக்கப்பட்டது.


கோடை விடுமுறையில், ஒரேயொரு இளம் நூலகர் மட்டும் ஒட்டு மொத்த பள்ளிக்கூடத்தையும் திறந்து வைத்துக் கொண்டிருப்பார். அவர் தான் எனக்கு சிறை அதிகாரி. நூலகத்தை விட்டு நான் வெளியே செல்ல முடியாது. எவ்வளவு நேரம் தான் சும்மாவே உட்கார்ந்திருக்க முடியும்? அங்கிருந்த எல்லா புத்தகங்களையும் வாசிக்க ஆரம்பித்தேன். எனக்கு வாசிப்புப் பழக்கம் இப்படி தான் உருவானது. டால்ஸ்டாயின் ‘போரும் சமாதானமும்’ நூலின் தமிழ்ச் சுருக்க வடிவத்தை அங்கே படித்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அதில் இடம்பெற்ற ‘ரஸ்தா’ என்ற வார்த்தை கப்பிக் கற்களோடு இன்னமும் நினைவில் இருக்கிறது. அப்பொழுது எனக்கு பதினொரு வயதிருக்கலாம்.


எனது முதல் எழுத்து வேலையும் அப்பொழுது தான் நடந்தது. சவேரியார் பள்ளியில், ஒரேயொரு பிரிவு மட்டும் ஆங்கில வழிக் கல்வி. அந்தப் பிரிவில் சேர்வது கெளரவம். தமிழில் பேசக்கூடாது. பேசினால் ‘donkey’ என்று எழுதப்பட்ட அட்டையைக் கழுத்தில் மாட்டி விடுவார்கள். அப்பொழுது வேதநாயகம் என்றொரு ஆசிரியர் இருந்தார். அவர் தான் வகுப்பாசிரியர். எங்கே நாங்கள் தமிழை மறந்து விடுவோமோ என்ற பயத்தில் அவரொரு தந்திரத்தைப் பயன்படுத்தினார். அதன் படி, அவர் வாரம் ஒரு முறை எங்களுக்கு ஒரு நாட்டுப்புறக்கதையைச் சொல்வார். அதை நாங்கள் மறு வாரம் தமிழில் எழுதிக் கொண்டு வர வேண்டும். இது முதலில் மிரட்சியாக இருந்தாலும் போகப்போக உன்மத்தம் பிடிக்க வைத்தது. அத்தனை சிரத்தையாக அக்காரியத்தை செய்து கொண்டிருந்தேன். வாராவாரம் ஒரு கதை; மூன்று வருடங்களுக்கு இது தொடர்ந்தது. அவற்றையெல்லாம் அவர் படித்தாரா என்று தெரியவில்லை. ஆனால், நாங்கள் சளைக்கவேயில்லை. இது தான் எனது முதல் எழுத்துப் பயிற்சி. நாட்டுப்புறக் கதைகளை அவர் சுவராஸ்யமாக சொன்னாரா என்பது நினைவில் இல்லை. ஆனால், நான் அவற்றை காட்சிகளாகவும், உரையாடல்களாகவும் எழுதியிருந்தது ஞாபகமிருக்கிறது.


நாட்டுப்புறக் கதைகளை சம்பவங்களின் சுரங்கம் என்று சொல்ல வேண்டும். அவை காட்சிகளை அடுக்குவதன் மூலம் உணர்வுச் சிக்கலை வெளிப்படுத்த முனைகின்றன. நினைவோடையின் மூலம் சிக்கல்களை உருவாக்குவதைப் போல, நிகழ்வுகளின் மூலம் உருவாக்கும் தொழினுட்பம் இது. இப்படித்தான் எனது புனைவெழுத்து முறை ஆரம்பிக்கிறது.


16 கேள்வி: இவ்வாறு எழுதத் தொடங்கியவர் புனைவு இலக்கியத்திலிருந்து விலகியது ஏன்?


பதில்: அப்படியொரு விலகல் நடக்கவில்லை என்று தான் நான் நினைக்கிறேன். புனைவு வேறு, அறிவியல் வேறு என்று நினைத்துக் கொண்டிருந்த காலகட்டம் முடிந்துவிட்டதாகவே நினைக்கிறேன். நமது மரபிலிருந்து எழும் எழுத்து இப்படித் தான் இருக்க முடியும் என்று நான் சொல்வேன். இந்த எழுத்து முறை உங்களுக்கு ஏற்படுத்தும் குழப்பம், உங்களுடைய நவீனத்துவ அளவுகோல்களின் குழப்பம். புனைவெழுத்தை ஏன் கைவிட்டீர்கள் என்று நீங்கள் கேட்பதும் கூட இப்படியான கேள்வி தான்.


என் எழுத்து அறிவியலுக்கும் புனைவிற்குமான இடைவெளியை இல்லாமல் ஆக்குகிறது. இடைவெளியை இல்லாமல் ஆக்குவதற்கும், ஒன்றை இன்னொன்றாக வலியுறுத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நான் ஒரு தொன்மத்தை வரலாறாக சாதிக்கவில்லை; அதே போல, ஒரு ஆய்வை நாவலாகவும் முன்வைக்கவில்லை. உங்களது அளவுகோல்களை மீறுகிறேன். அது புதிய சாத்தியங்களை வழங்குகிறது என்று நிரூபித்துக் காட்டுகிறேன். இதை எப்படி வகைப்படுத்துவது என்ற சிக்கலுக்குள் நான் செல்ல விரும்பவில்லை.


17. கேள்வி: தே. லூர்துவே நாட்டுப்புறவியலை தமிழ்நாட்டில் துறையாக தொடங்கியவர், அதனடிப்படையில் கேட்கிறேன், தே. லூர்துவின் நாட்டுப்புறவியல் சிந்தனா பள்ளி எப்படிப்பட்டது?


பதில்: சிந்தனா பள்ளி என்பதெல்லாம் பெரிய வார்த்தை. அடிப்படையில் லூர்து ஒரு கருவி. நாட்டுப்புறவியல் ஒரு கல்விப்புலமாகத் திரள்வதற்கு பல்வேறு காரணிகள் செயல்பட்டு, அது நிஜமாகத் திரண்டு வரும் தருணம் அவர் அங்கே தற்செயலாய் இருந்தார். அவருடைய முனைவர் பட்ட ஆய்வு பழமொழிகள் பற்றியது. தமிழ்ப் பேராசிரியர். பாளையங்கோட்டையில் நாட்டுப்புறவியல் கல்விப் புலமாக உருவானதற்கு குறியீட்டு அடையாளமாக இருந்தவர் நா. வானமாமலை. தனக்கிருந்த ‘கலை இலக்கிய பெருமன்ற’ இயக்கப் பின்புலத்தைக் கொண்டு, வழக்காறுகள் மீதான அக்கறையை பரவச் செய்தவர் அவர். கட்சி சார்ந்து, நாட்டுப்புறவியல் துறையில் இயங்கும் ஒரு குழுவை அவரால் உற்சாகப்படுத்த முடிந்திருந்தது.


மானிடவியலில் பயிற்சி பெற்றிருந்த ஜெயபதி, பண்பாட்டு ஆய்வுகள் தொடர்பான கல்வித் துறையொன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்த போது இயல்பான தேர்வாக, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி அமைந்ததற்கு நா. வானமாமலையின் பணிகள் ஒரு உந்துதல். அப்பொழுது அக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக செயல்பட்டு வந்த லூர்துவிடம் நிர்வாகப்பணிகள் வந்து சேர்ந்தன. அதை தனித்தவொரு துறையாகவும், ஆய்வு மையமாகவும் கட்டமைத்துக் காட்டியவர் அவர்.


18. கேள்வி: நாட்டுப்புறவியலா அல்லது நாட்டார் வழக்காற்றியலா என்பது தீர்க்கப்படாத கேள்வியா? பாளையங்கோட்டையில் செயல்படும் சிந்தனைப்புலம் நாட்டார் வழக்காற்றியல் என்ற பதத்தைப் பயன்படுத்துகிறது; தஞ்சை, மதுரை போன்ற இடங்களில் நாட்டுப்புறவியல் என்கிறார்கள். பாளையங்கோட்டையில் இருந்து வந்த நீங்கள் உங்கள் நூலுக்கு ‘தமிழ் நாட்டுப்புறவியல்’ என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்.


பதில்: நாட்டுப்புறவியலா அல்லது நாட்டார் வழக்காற்றியலா என்று நீண்ட காலமாக விவாதித்து வருகிறார்கள். நாட்டார் வழக்காற்றியல் சார்பாக வாதிடுகிறவர்களின் குற்றச்சாட்டு, ‘நாட்டுப்புறம்' என்ற சொல் இழிவாக தொனிக்கிறது. நாட்டுப்புறவியலுக்காக வாதம் செய்கிறவர்கள், இரண்டு விஷயங்களை முன்வைக்கிறார்கள்: ‘நாட்டார்’ என்ற பதம் சாதிக்குழுவைச் சுட்டுகிறது; மேலும், ‘நாட்டார் வழக்காற்றியல்’ என்ற பயன்பாட்டில் ஒரு மேட்டிமைத்தனம் இழையோடுகிறது. இதை இன்னும் சுருக்கமாகச் சொன்னால், நாட்டுப்புறவியல் இழிவானது என்றும், நாட்டார் வழக்காற்றியல் மேட்டிமையானது என்றும் குற்றச்சாட்டப்படுகிறது.


வழக்காறுகளை இழிவானது என்று சொல்லாதே என்று ஒரு பக்கமும், அதனை மேட்டிமையோடு அணுகாதே என்று இன்னொரு பக்கமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் ஏன் ஒரு தீர்வை எட்ட முடியவில்லை என்று தெரிகிறதா, இரண்டு பேருமே ஒரே விஷயத்தை தான் சொல்கிறார்கள்: வழக்காறுகளை மேட்டிமைத்தனத்தோடு இழிவு செய்யாதே!


19 கேள்வி: அப்படியானால் இவ்வளவு காலமும் சொல்லப்பட்டு வந்த முரணுக்கு என்ன பொருள்?


பதில்: நாட்டுப்புறவியல் ஒரு கல்விப்புலமாக உருவாகி வந்ததை தமிழகத்தின் அரசியல் வரலாற்றோடு இணைத்து விளங்கிக் கொள்ள வேண்டிய தேவையை இந்த முரண் சுட்டிக் காட்டுகிறது. இந்த இரு முரண்பட்ட வாதங்களும், நாட்டார் அல்லது நாட்டுப்புறத்தவர் யார் என்று வரையறுப்பதில் இணக்கம் காட்டுகின்றன. மிகத் தெளிவாக, கிராமப்புற - விவசாய மரபைச் சேர்ந்த - வாய்மொழிப் பண்பாட்டை பேணுகிற - கிராமப்புற தெய்வங்களை வணங்குகிற - எளியவர்களே நாட்டார் என்பதில் இருவருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மக்களையே தமிழக அரசியல் சொல்லாடல், பிராமணரல்லாதோர் அல்லது திராவிடர் என்ற பெயரில் அழைக்கிறது. அந்த வகையில், நாட்டுப்புறவியல் என்ற கல்விப்புலம் திராவிட சித்தாந்தத்தை பெருமளவில் உள்வாங்கியிருப்பதை நீங்கள் உணர முடியும். நா. வானமாமலை சார்ந்து விரிவாகப் பேசப்பட்ட மார்க்சிய பின்புலம், நாட்டுப்புறவியலின் திராவிடச் சார்பை மறைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.


20 கேள்வி: நாட்டுப்புறவியல் என்றால் திராவிடப் பண்பாட்டியல் என்று சொல்கிறீர்களா?


பதில்: வெளிப்படையாய் அப்படி அறிவிக்கவில்லையே தவிர, நடந்ததென்னவோ அதை அடியொற்றித்தான். பிராமணர்களையும் அவர்களது சார்பையும் தவிர்த்த தமிழ்ப் பண்பாட்டையே நாட்டுப்புறவியல் தனது ஆய்வுப் பொருளாகக் கொள்கிறது. நாட்டுப்புற தெய்வங்களை மேனிலையாக்கம் செய்வது குறித்து தமிழில் செய்யப்பட்ட அத்தனை ஆய்வுகளையும் எடுத்துப் பாருங்கள். அதில் வெளிப்படும் பிராமண எதிர்ப்பை விடவும் பெரிய எதிர்ப்பை நீங்கள் அரசியல் களத்தில் கூட கண்டிருக்கமுடியாது. சமஸ்கிருதவயமாதலுக்கு எதிரான குரலும், பெருந்தெய்வம் - சிறுதெய்வம் என்ற பாகுபாட்டிற்கு எதிரான குரலும் இந்த பிரக்ஞையிலிருந்தே உருவாகிவருகிறது.


21 கேள்வி: இந்தத் திராவிட / பிராமணரல்லாதோர் குரலும் கூட இருவருக்கும் பொதுவானது தானே! அப்படியானால், அவர்களின் முரணுக்கு என்ன காரணம்?


பதில்: திராவிட இயக்கம், சாதுர்யமாகப் பேசத் தவிர்த்த விஷயம் ‘நாட்டுப்புறவியல்’ மூலமாக வெளிப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். பிராமணரல்லாதோர் அரசியலின் மிக முக்கிய புள்ளியான ‘சாதியொழிப்பு’ அன்றைக்கிருந்த சூழலுக்கு ஏற்ப ‘பிராமண எதிர்ப்பாக’ திரண்டு நின்றது. அப்பொழுதும், அதன் பின்பும் கூட இந்த ‘பிராமணமயமாதல்’ குறித்து விமர்சனங்கள் இருந்தன. ஒட்டுமொத்த சாதி ஒழிப்பையும் பிராமண எதிர்ப்பாக சுருக்குவது வெகுஜன அரசியலுக்கு வேண்டுமானால் சரியாக இருக்க முடியுமே தவிர, கருத்தளவில் நியாயமானதாக இருக்க முடியாது என்று விவாதிக்கப்பட்டது. ஆனாலு, திராவிட இயக்கம் பிராமணரின் மேல் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் குவித்தது ஒரு யுத்த தந்திரம். பிராமணர்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல், சாதியமைப்பை சுயநலனிற்காகப் பயன்படுத்திக் கொண்ட சில மேட்டிமை திராவிட சாதிகள், ‘பிராமணரல்லாதோர்’ என்ற ‘சாதியொழிப்பு’ கருத்தாக்க நிழலில் பதுங்கியிருந்தன என்பதே நிஜம். இன்றைக்கு விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படும் திராவிடத்தின் சனாதன முகத்தை இந்த மேட்டிமை சாதிகளே தாங்கி நிற்கின்றன.


இந்த விமர்சனத்தை நாட்டுப்புறவியல், பெயரிடும் சிக்கலாக விவாதித்துக் கொண்டிருந்தது என்று நான் நினைக்கிறேன். முதன்முறையாக, ‘நாட்டுப்புறம்’ என்ற பெயரின் கீழ் பிராமணரல்லாத மக்கள் யோசிக்கப்படுகையில், அதன் உள்முரண்கள் வெளிப்படத் தொடங்குகின்றன. அது நாள் வரையில் ‘பிராமணரல்லாதோர்’ நிழலில் பதுங்கியிருந்த திராவிட மேட்டிமை சாதிகளின் கயமையும் தந்திரமும் வெட்டவெளிச்சமாகியது என்பதைக் கவனியுங்கள். நாட்டார் வழக்காற்றியல் என்ற பதத்தின் மீதான விமர்சனத்தில் திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் ‘மேட்டிமைத்தனம்’ என்ற குற்றச்சாட்டு, திராவிடச் சாதிகளின் மேட்டிமைத்தனத்தையே மறைமுகமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், திராவிட இயக்கத்தின் பிராமண எதிர்ப்பைப் போல, நாட்டுப்புறவியலின் வெள்ளாள எதிர்ப்பே, நாட்டார் வழக்காற்றியல் எதிர்ப்பாக வெளிப்பட்டது.


22. திருநெல்வேலிக்கும் தமிழகத்தின் இதர பகுதிகளுக்குமான வேறுபாட்டை ‘வேளாளர் - பிற திராவிட சாதிகள்’ என்ற முரண்பாடாகச் சுருக்க முடியுமா? ஒரு கருத்தாக்க முரணை சாதிய முரணாக சித்தரிப்பது எவ்வளவு தூரம் சரியானது? நீங்கள் குறிப்பிடுவது போல இது வேளாளர் எதிர்ப்பு தான் என்பதற்கு என்ன ஆதாரம்?


பதில்: சாதிய முரணாக விளக்குவது பிரச்சினையை சுருக்குவது அல்ல, கூர்மைப்படுத்துவது. திராவிட இயக்க ‘பிராமண எதிர்ப்பு’ எவ்வாறு சாதிய எதிர்ப்பு இல்லையோ அதே போல நாட்டுப்புறவியலின் ‘வேளாள எதிர்ப்பும்’ சாதிய எதிர்ப்பு அல்ல. சனாதன எதிர்ப்பைப் போல இது மேட்டிமையின் எதிர்ப்பு. வேளாளர் என்பதை திருநெல்வேலி என்ற நிலப்பரப்போடு அல்லது சிலக் குறிப்பிட்ட ஆய்வாளர்களோடு மட்டுமே யோசிக்க வேண்டிய அவசியமில்லை. தமிழக நாட்டுப்புறவியல் உரையாடல்கள், திராவிடச் சொல்லாடல் பூசி மெழுகிய உள்முரண்களை வெளிப்படுத்துகின்றன என்பதே என் விளக்கம். அதற்கான சூழல்கள் கனிந்து வந்தன என்பதே உண்மை. சனாதனத்திலிருந்து தான் மேலாண்மை உருவாக வேண்டுமென்பதில்லை, மேட்டிமையிலிருந்தும் உருவாக முடியும் என்பதே நாட்டுப்புறவியலின் விமர்சனம். திராவிட மேட்டிமையின் குறியீட்டு அடையாளமே ‘வேளாளர் பெருமிதம்’. அந்தப் பெருமிதமே ‘நாட்டார் வழக்காற்றியல்’ என்ற பெயராக முன்வைக்கப்பட்டது.


23: ஆனால், நாட்டார் வழக்காற்றியல் தானே கோட்பாட்டுரீதியிலான பார்வையை முன்வைத்தது? மேட்டிமைத்தனம் என்ற குற்றச்சாட்டு இந்தக் கோட்பாட்டுப் பார்வையையும் கண்டிக்கிறதே?


பதில்: நாட்டார் வழக்காற்றியலை ஆதரிக்கிறவர்கள் அறிவியல்பூர்வமாய் அணுகுகிறார்கள் (கோட்பாட்டு அணுகுமுறையை நான் இப்படி சொல்லிக் கொள்கிறேன்), நாட்டுப்புறவியல்காரர்கள் உணர்வுபூர்வமாய் அணுகுகிறார்கள் என்று அர்த்தம் அல்ல. அது, தகவல் பிழையான வாதமும் கூட. இரண்டு பக்கமும் கோட்பாட்டு ஆதரவாளர்கள் உண்டு. கோட்பாட்டுப் பின்புலத்தை மேட்டிமை என்று சொல்வது ஒட்டுமொத்த பிரச்சினையையும் திசைதிருப்புவதாக மாறிவிடும். பிரச்சினை கோட்பாடுகளால் அல்ல, மனச்சாய்வுகளால் உருவாகியது. வழக்காறுகளை விதந்தோதும் மனச்சாய்வு, அதைக் காப்பாற்றுவதே என் பணி என்ற மனச்சாய்வு, வழக்காறுகள் ஒடுக்கப்பட்டோரின் ஆயுதங்கள் என்று கருதும் மனச்சாய்வு, பண்பாடு மேன்மையானது என்ற மனச்சாய்வு, இப்படி பல.


24 கேள்வி: சு. சண்முகசுந்தரத்தின் ‘அகத்தார் - புறத்தார்’ என்ற வகைப்பாடு இந்த அடிப்படையில் உருவானதா?


பதில்: ஏறக்குறைய பலரும் ‘வெள்ளாள எதிர்ப்பை’ பேசுவதற்கே முயற்சிக்கிறார்கள். சரியான வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறுவதைத் தான் வரலாறு சுட்டுகிறது. சண்முகசுந்தரம் ஒரு கட்டத்தில் வெருண்டு, இந்த மனப்போராட்டத்தை மத அடிப்படைவாதமாகவும், காலனிய எதிர்ப்பாகவும் வெளிப்படுத்த ஆரம்பிக்கிறார். அவரது ‘புறத்தார்’ என்ற கருத்தாக்கம் இந்து - கிறிஸ்தவம் என்ற ஆபத்தான முரணை வலிந்து கட்டமைக்க விரும்பியது. அதில் தென்படும் பாசிசக் கூறுகளை யாரும் பொருட்படுத்தவில்லை என்பது தான் உண்மை. ஏனெனில், நிஜ முரண் நாட்டுப்புற சாதிகள் - மேட்டிமை சாதிகள் என்பதாகவே திரண்டிருந்தது.


25 கேள்வி: நாட்டார் வழக்காற்றியல் என்ற பதத்தை எதிர்க்கிறவர்கள் அதனுள் தொழிற்படும் வெள்ளாளச் சார்பையே எதிர்க்க முனைந்தார்கள் என்று சொல்கிறீர்கள். அப்படியானால், அதை வெளிப்படையாகச் சொல்வதிலிருந்து அவர்களை எது தடுக்கிறது?


பதில்: திராவிட அரசியல் சொல்லாடலின் நெருக்கடி இது. உன்னிப்பாகக் கவனித்தால் நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் பலரும் திராவிடக் கொள்கைகளை ஆதரிக்கிறவர்கள் என்று உங்களுக்கு விளங்கும். நான் ஏற்கனவே சொன்னது போல, தமிழகத்தில் பெரிதும் விவாதிக்கப்பட்ட பிராமணமயமாதல் / சமஸ்கிருதமயமாதல் இதைத் துலக்கமாகக் காட்டும். ஆனால், திராவிடக் கொள்கையின் பண்பாட்டுப் புரிதலின்மை அச்சார்பை வெளிக்காட்ட தடுக்கிறது. நாட்டுப்புறப் பண்பாடு குறித்த திராவிடச் சொல்லாடல் மிகக் குழப்பமானது, அல்லது அப்படியொன்று உருவாகவில்லை என்றே சொல்ல வேண்டும். மார்க்சியச் சொல்லாடல் இந்தச் சிக்கலை புத்திசாலித்தனமாக எதிர் கொண்டது. நா. வானமாமலை இதற்காகப் போற்றப்பட வேண்டியவர். இதனால், பெரும்பான்மை நாட்டுப்புறவியலாளர்கள் தங்களது திராவிட இயக்கச் சார்பை அந்தரங்கமாகவே பேணி வந்தனர்; அவர்களது அறிவியல் முகம், மார்க்சியமாக இருந்தது.


26 கேள்வி: அந்தரங்கத்தில் திராவிடராகவும், பொதுவெளியில் மார்க்சியராகவும் செயல்பட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?


பதில்: ஆமாம், அப்படித்தான். இது, திராவிடச் சொல்லாடலின் கோளாறு என்றே நான் கணிக்கிறேன். இதனாலேயே பண்பாடு குறித்த திராவிட நிலைப்பாடு என்று எதுவும் கட்டமைக்கப்படவில்லை. கிராமப்புற தெய்வங்களையும், நம்பிக்கைகளையும், சடங்குகளையும், பிற்போக்கான சம்பிரதாயங்களையும் திராவிட அரசியல் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டுமென்பதற்கு வழிகாட்டுதல்கள் இல்லை. ‘இந்த நேரம் பெரியார் இருந்தால் என்ன சொல்வார்?’ என்பது நாட்டுப்புறவியலுக்கான பெரிய மனப்பிராந்தியாக இருந்தது. திராவிட அரசியலின் ஒரு அங்கமாக நாட்டுப்புறவியலை வளர்த்தெடுக்க முடியாமல் போனதன் காரணம் இது. தங்களது ஆய்வுகளைப் பார்த்து, ’என்னம்மா அங்க சத்தம்?’ என்று பெரியார் திடீரென்று கேட்டுவிடக்கூடும் என்ற பயம் எல்லோருக்கும் இருந்தது. ‘சும்மா, பேசிட்டிருக்கோம் ஐயா!’ என்று சொல்வதற்காகவே காத்திருந்தனர்.


27 கேள்வி: நாட்டுப்புறவியல் குறித்த திராவிட ஆய்வு முறை உருவாகவில்லை என்று சொல்கிறீர்களா? தொ. பரமசிவத்தின் ஆய்வுகளை எவ்வாறு கணிப்பது?


பதில்: வழக்காறுகள் குறித்த திராவிடக் கோட்பாடுகள் வெளிப்படையாக உருவாக்கப்படவில்லையே தவிர, மறைமுகமாக அவை வெளிப்பட்டுக் கொண்டே இருந்தன. ‘மேனிலையாக்கம்’ என்ற விமர்சனம் அப்படியொரு மறைமுக வெளிப்பாடு. கிராமப்புற தெய்வங்களை சமஸ்கிருதவயமாக்கலை எதிர்ப்பது போலவே, வழக்காற்றியலை மேனிலையாக்குவதையும் எதிர்த்தார்கள். இந்த இடத்திலேயே தொ. பரமசிவத்தின் எழுத்துகள் பலருக்கும் ஆசுவாசத்தைத் தருகிறது. அவர் தான் முதன் முதலில் தைரியமாக திராவிட நிலைப்பாடொன்றை எடுப்பதாக அறிவிக்கிறார். ஆனால், அப்படி அறிவித்த பின் ஒரு முறையியலையோ அணுகுமுறையையோ அவர் கட்டமைத்ததாகத் தெரியவில்லை. அவரது எழுத்துகள் முழுக்க முழுக்க ரசனை சார்ந்ததாகவே வெளிப்படுகிறது. வழக்காறுகளில் இலக்கிய அழகியலைத் தேடி கொண்டாடியது போல, தொ. பரமசிவம் பண்பாட்டு அழகியலைத் தேடித் தேடிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அதைத் தவிர வேறொன்றும் அவரது எழுத்துகளில் இல்லை.


28 கேள்வி: உங்களது நூலுக்கு ‘தமிழ் நாட்டுப்புறவியல்’ என்று பெயர் வைத்தது இந்தக் காரணங்களால் தானா? மறைமுகமான திராவிடச் சார்பை நீங்களும் வெளிப்படுத்துகிறீர்களா?


பதில்: அதிலுள்ள ‘தமிழ்’ என்ற சொல்லே திராவிடச் சார்பை மறுக்கக்கூடியது தான். நான் ‘நாட்டுப்புறவியல்’ என்ற சொல்லை முற்றிலும் புதிய அர்த்தத்தில் பயன்படுத்துகிறேன். கிராம்சியின் ‘அருங்காட்சியக’ வரையறையிலிருந்து இதனை உருவாக்கிக் கொள்கிறேன். அது நாள் வரையில், வழக்காறுகளை ஒடுக்கப்பட்டோரின் ஆயுதங்களாகக் கற்பனை செய்வது எனது வழக்காமாக இருந்தது. ஜேம்ஸ் ஸ்காட்டின் Weapons of the Weak, அகஸ்டோ போவலின் Theatre of the Oppressed இரண்டும் முக்கியமான புத்தகங்கள் என்று கருதினேன். நா. வானமாமலை தொடங்கி வைத்த ‘சமூக முரண்களை பிரதிபலிக்கும் வழக்காறுகள்’ என்ற கருதுகோளின் அடுத்த நிலை இது.


ஒரு கட்டத்தில் வழக்காறுகளை, அவை ஒடுக்கப்பட்டோரின் ஆயுதங்கள் என்பதால், பொக்கிஷங்களாகக் கொண்டாடுகிறோமோ என்ற சந்தேகம் வரத் தொடங்கியது. எளிய மனிதர்களின் ஆன்மா அதில் வெளிப்படுவதாய் சொல்வதில் அவநம்பிக்கை உண்டானது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு வழங்கவேண்டிய அரசியல் முன்னுரிமையை எவ்வாறு வரையறுப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. அவர்களைக் கேள்விக்கு அப்பாற்பட்டவர்களாகவும், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் சித்தரிப்பது குறித்து ஏராளமான கேள்விகள் எழுந்தன. இதனிடையே, ஒடுக்குகிறவர் - ஒடுக்கப்பட்டவர் (நாட்டார்), இவர்களுக்கிடையே செயல்படும் ஆய்வாளரின் குண இயல்புகளை வரையறுக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது.


இன்னொரு பக்கம், எளிய மக்களின் அத்தனை வெளிப்பாடுகளையும் ஆயுதங்கள் என்று வகைப்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்தன. உதாரணத்திற்கு ‘தீண்டாமை’ மிகப் பிரபலமான வழக்காறாக அடித்தள மக்களிடம் வெளிப்படும் பொழுது, அதை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்வி உருவானது. ஆ. சிவசுப்பிரமணியன் போன்றவர்கள் வழக்காறுகளிலுள்ள புரட்சிகர பக்கங்களை மட்டும் அடையாளப்படுத்தும் பழக்கத்தை அறிவியலாக கற்றிருந்தனர். இது, ஆய்வாளரின் தன்னிலையையும், நேர்மையையும் தொடர்ந்து காயப்படுத்திக் கொண்டே இருந்தது.


வழக்காறுகளை என்ன நோக்கத்திற்காக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதில் தேடிய பொழுது கிராம்சியின் கருத்தே ஆறுதலாக அமைந்தது. நாட்டுப்புறவியல் என்பது ஒரு அறிவியல் என்றால், அது தன்னைத் தானே அழித்துக் கொள்வது தான் நியாயமாக இருக்க முடியும் என்று அவர் எழுதுவது சத்தியமான வார்த்தைகளாகத் தெரிந்தன. அந்த அடிப்படையில், நாட்டார் பண்பாட்டை தரங்குறைந்தது என்ற தொனியோடு விளக்கும் ‘நாட்டுப்புறம்’ என்ற அர்த்தம் மிகப் பொருத்தமாகத் தெரிந்தது. அந்த வார்த்தையில் ஏதாவதொரு ஏளனமோ அல்லது இழிவோ தென்படுகிறது என்றால், அது அந்த நாட்டாரின் சுயவிமர்சனம் என்று நான் விளங்கிக் கொண்டேன். அதாவது, அவரது நவீனத்துவ நகர்வு அது. அந்த நகர்வையே ஆய்வாளனாகிய நான் வலுப்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டேன். அந்த வகையில், ‘நாட்டார்’ - ‘வழக்காறு’ போன்ற சொற்கள் ஆய்வாளர்களின் சமாதானங்கள், விதந்தோதுதல்கள், புனிதப்படுத்தல்கள் என்று சொன்னால், ‘நாட்டுப்புறம்’ என்பதை தமிழ்ச்சமூகத்தின் நவீனத்துவ வேட்கை என்று நான் சொல்வேன்.


29. சரி, நாட்டுப்புறவியல் என்ற சொல் ’வெள்ளாளமயம்’ என்ற மேட்டிமைவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்று சொல்கிறீர்கள். ஆனால், நாட்டுப்புறவியல் என்ற சொல்லை நீங்கள் அப்படிப் பயன்படுத்தவில்லை என்றும் சொல்கிறீர்கள். உங்களது பயன்பாட்டில் நவீனத்துவத் தன்முனைப்பு மேலோங்கித் தெரிகிறது. இதுவும் ‘பாமரவாதத்திற்கு’ எதிரானது அல்லவா? அப்படியானால், இதையும் இன்னொரு ‘மேட்டிமைவாதம்’ என்று சொல்லலாமா?


பதில்: ‘பாமரம்’, ‘மேட்டிமை’ இல்லாத நாட்டுப்புறவியல் சிந்தனை இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அவ்விரு குணங்களும் சந்தித்துக் கொள்ளும் புள்ளி தானே ‘நாட்டுப்புறவியல்’. அதிலுள்ள, நாட்டுப்புறம் பாமரத்தையும், இயல் மேட்டிமையையும் சுட்டுவதிலிருந்து தப்பிக்க வழியில்லை. நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல்லுக்குப் பின்னாலுள்ள மேட்டிமை எவ்வாறு வெளிப்படுகிறது என்பது விளங்கினால் நான் பயன்படுத்துவதிலுள்ள வேறுபாடு உங்களுக்கு விளங்கும். நாட்டார் வழக்காற்றியல், வழக்காறை இன்னொரு அறிவியலாக வடிவமைக்க முயற்சிக்கிறது. ‘நாட்டார்’ என்றும் ‘வழக்காறு’ என்றும் இரு வகைமைகளை வரையறுக்கும் பொழுது அது மாபெரும் கருணையை வெளிப்படுத்துகிறது. அந்தக் கருணை போலியானது, ஆபத்தானது. நாட்டார் என்பவர் பண்பாட்டை பேணிக்காப்பவர், வழக்காறு என்பது செவ்வியலுக்கு இணையான, அதே நேரம் காலத்தால் முற்பட்ட சிந்தனையொழுங்கு என்று வாதிடும் பொழுது, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் தனது ‘மற்ற’வரையே கொண்டாட்டமாக வடிவமைக்க ஆரம்பிக்கிறார். இந்த மனப்பான்மையே மேட்டிமை. அதாவது, தமிழ்ச் சமூகத்தில், ‘செவ்வியல் - நாட்டுப்புறம்’ என்று வெளித்தெரியும்படியான இரண்டு உலகங்கள் செயல்படுகின்றன என்றும், அவற்றுள் ‘நாட்டுப்புறம்’ தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றது என்றும், அதற்கான நியாயங்களை அல்லது நீதியைப் பெற்றுத்தருவதே நாட்டார் வழக்காற்றியலின் பணி என்றும் சொல்வதே போலியான கருணை, மேட்டிமைத்தனம் என்று சொல்கிறேன். அப்படிச் செய்வதன் மூலம் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளன் தன்னை ஆகப்பெரிய கருணையாளனாகவும், வழக்கறிஞனாகவும் கற்பனை செய்து கொள்கிறான்.


30. இந்தக் கருணை, உங்களது ‘நாட்டுப்புறவியல்’ பயன்பாட்டில் வெளிப்படவில்லையா?


பதில்: நிச்சயமாக இல்லை. வழக்காறுகளை இன்னொரு சிந்தனா முறையாக நான் நினைக்கவில்லை; நாட்டார் என்பவர் பண்பாட்டு சேமக்கலன் என்று நான் நினைக்கவில்லை. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளன் அறிவியல் என்ற ஆயுதம் கொண்டு இவர்களைக் காக்க அவதரித்தவன் என்று நான் நினைக்கவில்லை. எனது நாட்டுப்புறவியலில், ஆய்வாளன், நாட்டார் என்ற பாமரத்திலிருந்தே உருவாகிறான். அதாவது, நான் என்னைப் பற்றியே தான் ஆய்வு செய்து கொள்கிறேன். அறிவியலாளன் என்று சொல்லும் போது நிச்சயமாய் அதிலொரு மேட்டிமை வெளிப்படும் என்றாலும், அது அந்தப் பாமரத்திலிருந்து உருவான மேட்டிமை. நாட்டுப்புறத்திலிருந்து கிளம்புகிற அறிவியல். நாட்டுப்புறமே அறிவியல் என்பதற்கும், நாட்டுப்புறத்திலிருந்து புறப்படும் அறிவியலுக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. அதனால் தான் அதை நான் வெறுமனே நாட்டுப்புறவியல் என்று அழைக்காமல், தமிழ் நாட்டுப்புறவியல் என்று சொல்ல விரும்புகிறேன். அதிலுள்ள தமிழ் என்ற சொல், ‘நமது’ என்ற அர்த்தத்தையே சுட்டுகிறது. இந்தத் தெளிவை நான் அயோத்திதாசரிடமிருந்து பெற்றுக் கொள்கிறேன். அதனால் தான் அவரைத் ‘தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை’ என்றும் அறிவிக்கிறேன்.


Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
bottom of page