top of page

‘தாய்மொழி’ என்ற ஏமாற்று வேலை



நேற்றைய சென்னைப் பல்கலைக்கழக கருத்தரங்கம், ஒரு சுவராஸ்யமான தகவலோடு ஆரம்பித்தது. Endangered Languages என்ற பதத்தை எப்படி தமிழ் படுத்தினார்கள் என்ற கதையை ஒரு பேராசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார். முதலில், ‘அழிமொழி’ என்று தான் யோசித்தார்களாம், ஆனால், அது வினைத்தொகையாக இருக்கிறது என்பதால் ‘அழிநிலை மொழி’ என்று மாற்றி விட்டனர். வினைத்தொகைகள் எப்பொழுதுமே விபரீதமானவை - பேராசிரியர்களைப் போல. அந்த விபரீதம் பற்றியே நான் மதியத்தில் பேசுவதாக இருந்தேன்.


சந்ரு, தனது கலை பற்றிய பார்வைகளை செப்பனிட்டுக் கொள்வதற்கு பழங்குடி மக்கள் எவ்வளவு தூரம் அனுசரணையாய் இருந்தார்கள் என்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். ஒரு பழங்குடியின பெரியவர், யானைக்கூட்டத்தைக் காட்டி, ‘அது எங்க பாட்டி தான்’ என்று சொன்னதை, தான் ஓவியமாக வரைந்ததை பற்றி பேசினார். ஒரு பழங்குடியினத்தின் மொழி அழிகிறது என்றால், அதன் ‘லேண்ட்ஸ்கேப்’ அழிகிறது என்றார். இந்த விஷயம் எனது மதிய பேச்சுக்கு நெருக்கமாக இருந்தது.


அதனைத் தொடர்ந்து, பேராசிரியர் கல்யாணி, இருளர் பழங்குடியினரோடு தான் மேற்கொண்டிருக்கும் மனிதவுரிமைப் பாதுகாப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். தனது உரை நெடுகிலும், எதைச் சொல்வது எதை விடுவது என்ற பதட்டத்திலேயே இருந்தார். அவ்வளவு அனுபவங்கள்! அத்திபூத்த மாதிரி கிடைக்கும் இந்த ஒன்றிரண்டு வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பதட்டம் அது. இருளர் போன்ற பழங்குடிகள் படும் துயரத்தை ‘மற்றவர்களுக்கு’ எப்படியாவது தெரியப்படுத்திவிட வேண்டும் என்ற ஆவேசத்தில் இருந்தார்.


இவ்வளவுக்கும் இடையே, காலை அமர்வு முழுவதும், அழிநிலை மொழிகள் நடுவத்தின் தலைவர் கோ. பழனி, அரங்கின் பின்பகுதி பார்வையாளர்களைப் பார்த்து, ‘நான் பேசுவது கேட்கிறதா? கேட்கிறதா?’ என்று மைக்கில் கேட்டுக் கொண்டே இருந்தார். ‘கேட்கவில்லை’ என்று யாருமே சொல்லவில்லை. ‘நான் கேட்குதானு கேட்கிறதே அவங்களுக்கு கேட்கல, சார்’ என்றார் பரிதாபமாக. இந்தக் ‘கேள்விப் பிரச்சினை’ சாப்பாட்டுக்கு அப்புறமாகத்தான் சரியானது.


சாப்பிடும் போது, பாலமுருகனோடும் அழகரசனோடும் பேசிக்கொண்டிருந்தேன். நாடெங்கும் உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாக அமைப்புகள் எவ்வாறு படிப்படியாக நம்பிக்கை இழந்து வந்திருக்கின்றன என்று பேசிக்கொண்டிருந்தோம். ஜேயென்யு, ஹைதராபாத், பாண்டிச்சேரி, மதுரை என்று நடைபெற்ற அத்தனை மாணவர் போராட்டங்களும், நிர்வாக அமைப்புகளின் தோல்வியில் உருவானவை தான் என்பதை பேசிக்கொண்டிருந்தோம்.


மதியம், ‘குறும்பர்: மொழி - பண்பாடு' குறித்து தே. சிவகணேஷ் நீண்ட உரையொன்றை வழங்கினார். சுமார் ஒரு மணி நேரம்! அவரே குறும்பர் பழங்குடியைச் சார்ந்தவர் என்பதால், அவருக்கு வழங்கப்பட்ட அரை மணி நேரம் முடிந்த பின்பும் பேசிக்கொண்டிருந்தவரை ‘போதும்' என்று சொல்வதற்கு எனக்கு வாய் வரவே இல்லை. அறிஞர்கள் கால நேரம் தெரியாமல் ஆவேசப்படும் போது ’போதும்' என்று சொல்லும் அரிய பணியும் அந்த மதிய அமர்வில் எனக்குத் தான் வழங்கப்பட்டிருந்தது. Can subaltern speak என்று காயத்ரி சக்கரவர்த்தி ஸ்பீவாக் கையில் பிரம்போடு நிற்பது போலவே இருந்தது.


தெலுங்குத் துறை பேராசிரியர் மா. சம்பத் குமார், எருகுலா பழங்குடி பற்றிய கட்டுரையை வாசித்தார். நாட்டுபுறவியல், மானிடவியல் சம்பிரதாயங்களோடு எழுதப்பட்டிருந்த கட்டுரை அது. ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டதால், சென்னைப் பல்கலைக்கழக தமிழ் துறை மாணவர்கள் தங்களது காலனிய எதிர்ப்பை காந்தியவழியில் காட்டிக் கொண்டிருந்தனர்.


நீலகிரியில் வாழும் இருளர் குறித்த தனது கள ஆய்வு அனுபவங்களை, பா. ஞான பாரதி தொகுத்துச் சொன்னார். அவர் சொன்ன ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் சுவராஸ்யமானது: அல்பெனியாவில் சுமார் 600 இருளர்கள் வாழ்ந்து வருவதாக தாம் கேள்விப்பட்டதாகவும், அது குறித்த முழு விபரங்களை தேடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ‘அல்பெனியாவில் இருளர்' என்ற தலைப்பில் யாராவது நாவல் எழுதுங்களேன்.


இதனிடையே முக்கால்வாசி அரங்கம் நிறைந்திருந்த போது நான் பேசினேன். நான் பேசியதன் சுருக்கம் இது தான்:


“மொழி அழிதல் என்றால் என்ன? அதை எவ்வாறு தீர்மானிக்கிறோம்?


Endangered languages என்று பேசுகிற ஐநா வும், பிற அமைப்புகளும், Endangered species ஐ எவ்வாறு தீர்மானிக்கிறார்களோ அவ்வாறே, ஒரு மொழியை பேசக்கூடிய நபர்களின் தலையை எண்ணி, மொழி அழிந்து விட்டதா இல்லையா என்று முடிவு செய்கிறார்கள்.


சென்ற நூற்றாண்டு முழுக்க தமிழக அரசியல் அரங்கில் தொடர்ந்து எதிர்க்கப்பட்டு வந்த ‘சமஸ்கிருதம்’, அழிந்த மொழியா, அழியும் மொழியா அல்லது அழியப் போகும் மொழியா?


பேசுகிறவர்களின் தலையை எண்ணி முடிவு செய்தால், சமஸ்கிருதம், ஏற்கனவே அழிந்து போன மொழி. அந்த இறந்த மொழியை எதிர்த்தா இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன?


இல்லை, சமஸ்கிருதம் அழிந்து விடவில்லை, அது இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால், அது எப்படி உயிர் வாழ்கிறது? ஒரு மொழி, பேசக்கூடிய ஆட்கள் இல்லையென்றாலும், உயிரோடு இருக்க முடியுமா?


மொழி, பேச்சு தவிர வேறு என்னென்ன வேலைகளைச் செய்கிறது? செய்கிறது என்றால், மொழி, கருத்துப்புலப்படுத்த சாதனம் என்று சொல்வது பாதி உண்மை மட்டும் தானா?


12வது நூற்றாண்டு ப்ரெஞ்ச் சிந்தனையாளர், பியர் அபிலார்ட், மொழி குறித்து ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார், ‘மொழி, கருத்துப்புலப்படுத்த கருவி மட்டும் அல்ல; அது சிந்திக்கும் கருவியும் கூட’.


20ம் நூற்றாண்டில், மார்லோ பாண்டி, Phenomenology of perception, என்ற நூலில் இந்த மொழி - சிந்தனை என்ற கருத்தையொட்டி, பேசும் தன்னிலை, சிந்திக்கும் தன்னிலை என்ற கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவரைப் பொறுத்தவரை, பேசுவது என்பது கிளிப்பிள்ளை போல காதில் விழுந்ததை திரும்ப சொல்வது; இந்த கிளிப்பிள்ளை பருவத்திலிருந்து விடுபட்டு, என்றைக்கு ஒருவன் கருத்தாக்கங்களை முழுமையாக விளங்கிக் கொண்டு மொழியை பயன்படுத்தத் தொடங்குகிறானோ அன்றைக்கே அவன் மொழியை சிந்திக்கவும் பயன்படுத்துகிறான் என்று பொருள்.


தமிழகத்தில், 20 ம் நூற்றாண்டில், அயோத்திதாசர், ஒருவன் எதில் சாதிக்கிறானோ அதுவே அவனது மொழி என்கிறார். சாதிக்கிறான் என்றால், எவ்வாறு சிந்திக்கிறான், எவ்வாறு செயல்படுகிறான் என்று அர்த்தம்.


அப்படியானால், மொழி அடையாளம் நாமெல்லாம் கற்பனை செய்வது போல பிறப்பால் தீர்மானிக்கப்படுவது இல்லை. ‘தாய் மொழி' என்ற கற்பனைக்கும் ‘பிறப்பால் சாதி தீர்மானிக்கப்படுகிறது’ என்று நம்புவதற்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கவில்லை.


இரண்டுமே, இரத்த சம்பந்தத்தைத் தான் பேசுகிறது. சாதி இரத்தத்தால் தீர்மானிக்கப்படுகிறது; மொழியும் இரத்தத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அயோத்திதாசர், இந்தக் கற்பனையை அடியோடு நிர்மூலமாக்கிவிடுகிறார். சாதியையோ (அப்படியொன்று இருக்கிறது என்று நம்பினால்) அல்லது மொழியையோ பிறப்பு தீர்மானிப்பதில்லை, ஒரு நபரின் சிந்தனையும் செயலும் தான் இரண்டையும் தீர்மானிக்கின்றன.


அதாவது, தமிழன் என்பது பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறது என்பதெல்லாம் முழுக்க புரூடா! இதை அப்படியே, ‘இந்தியா எனது தாய் நாடு’, ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ போன்ற அத்தனை கற்பனைகளையும் கலைத்துப் போட பயன்படுத்த முடியும்.


எந்தவொரு புதிய விஷயத்தையும், அதாவது, தேசியம், சுதந்திரம் போன்ற நவீன விஷயத்தையும் பேசும் பொழுது நாம் இப்படி சறுக்கி விழுவதன் காரணம் என்ன? எல்லாவற்றையும் பிறப்போடும், இரத்தத்தோடும் தொடர்பு படுத்தியே யோசிக்க நம்மை யார் பழக்கியது?


இந்த இடத்தில் தான் சமஸ்கிருதம், பேசுவதற்கு ஆள் இல்லாமல் போனாலும், உயிரோடு இருப்பதற்கான காரணங்கள் நமக்குப் புலப்படத் தொடங்குகின்றன. அது பேசப்படுவது இல்லையே தவிர, அதன் கருத்தாக்கங்களைத் தான் எல்லோரும் சிந்திக்கிறவர்களாக இருக்கிறோம். நாம் பேசுவது தமிழாகவோ, மலையாளமாகவோ, தெலுங்காகவோ இருக்கலாம்; ஆனால், எல்லோரும் சமஸ்கிருதத்தில் சிந்திக்கிறவர்களாக இருக்கிறோம் என்பது தான் இந்த ஒட்டுமொத்த கோளாறுகளின் மையம்.


தமிழ் பேசும் மொழியாக மட்டுமே இருக்கிறது; ஆனால், நமது சிந்தனை மொழியாக சமஸ்கிருதமே இருக்கிறது என்பதற்கு வகை தொகையில்லாமல் உதாரணங்கள் உண்டு. ஏறக்குறைய, சமஸ்கிருத காலனியாக்கத்தின் பிடியில் தான் ஏராளமான இந்திய மொழிகளும் அவற்றைப் பேசுகிறவர்களும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.


பழங்குடி மொழிகள் மட்டுமல்ல, இங்கு செல்வாக்கோடு உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதாய் சொல்லக்கூடிய ஏராளமான மொழிகளும் நடைபிணங்களாகத் தான் இருக்கின்றன. அப்படியானால், அழிந்து கொண்டிருக்கும் மொழியைக் காப்பாற்றுவது என்றால் என்ன?


இதற்கு, மொழியியலாளர்கள், மொழியின் வெளிப்புறத் தன்மைகளே ஒரு மொழி என்று சொல்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, மொழி, ஒரு பேசும் கருவி, அவ்வளவு தான். அதனால் அவர்கள், அழிந்து கொண்டிருக்கும் மொழிக்கு அகராதி உருவாக்குகிறார்கள்; புதிதாய் இலக்கணம் எழுதுகிறார்கள்; வாய்மொழி இலக்கியங்களை எழுத்து வடிவிற்கு மாற்றுகிறார்கள். அதாவது, கோமாவில் படுத்திருக்கும் மொழியை, தங்களது அறிவியலின் மூலம் தொடர்ந்து உயிரோடு வைத்திருக்க முயற்சிக்கிறார்கள்.


மானிடவியலர்கள், மொழியைக் காப்பாற்றுவது, இன்னொரு வேடிக்கை. அவர்களுக்கு மொழி என்றால் பண்பாடு என்று அர்த்தம். பண்பாடு என்றால் அன்றாட வாழ்க்கை என்று அர்த்தம்.


அப்படியானால், ஒரு பழங்குடியின் மொழியைப் பாதுகாப்பது என்பது, அவர்களது நிகழ்கால பண்பாட்டுச் சூழலைப் பாதுகாப்பது என்று அர்த்தம். அடிப்படையில், இது ஒரு கண்மூடித்தனம்.


ஒரு பழங்குடியினம் மகுடம் என்ற இசைக்கருவியை வாசிக்கும் பண்பாடு கொண்டது என்று மானிடவியலாளர்கள் கண்டு பிடித்து விட்டால், அந்தப் பழங்குடியைச் சார்ந்த ஒருவர், காலாகாலமும் மகுடத்தை வாசித்துக் காட்டியே தனது பழங்குடித்தன்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தை மானிடவியலே ஏற்படுத்துகிறது. அந்தப் பழங்குடியினம் என்னென்ன குலம், கோத்திரம் அடிப்படையில் திருமணம் செய்கிறது என்று மானிடவியலாளர்கள் எழுதி வைத்திருக்கிறார்களோ அந்த முறையிலிருந்து கொஞ்சம் மாறி, சாதி மீறிய திருமணத்தை ஒரு பழங்குடி நபர் செய்கிறார் என்றால், அவரது பழங்குடி உரிமையை ரத்து செய்து பழிவாங்கும் நடவடிக்கைக்கே மானிடவியல் துணைபுரிந்து கொண்டிருக்கிறது.


அப்படியானால், ஒரு மொழியைப் பாதுகாப்பது என்றால் என்ன?


மொழியைப் பாதுகாப்பது என்பது, அந்த மொழியில் சேகரிக்கப்பட்டுள்ள அறிவுத் தொகுதியை பாதுகாப்பது மட்டுமே. ஒவ்வொரு பழங்குடியும் தனது நிலப்பரப்பில் வாழ்வது குறித்த ஞானத்தையே தனது பண்பாட்டு சொத்தாக பாதுகாக்க விரும்புகிறது. அதையே கருத்தாக்கங்களாக தனது மொழியில் பொதிந்து வைத்திருக்கிறது. இந்த அறிவுத்தொகுதியை பாதுகாப்பதே, மொழியைப் பாதுகாப்பது.


அந்த வகையில், அழிந்து கொண்டிருக்கும் பழங்குடி மொழிகளை மட்டுமல்ல, உயிரோடு இருப்பதாய் நம்பிக்கொண்டிருக்கிற செல்வாக்கான மொழிகளையும், சிந்திக்கும் மொழிகளாக பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கிறது.”


இது தான் நான் பேசியது.


நான் பேசும் போதே பார்வையாளர்களில் பலர், உற்சாகமடைந்ததை நான் கவனித்தேன். நிறைய பேரின் முகங்களில் விளக்கு எரிந்தது. தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஆமோதித்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தனர். இதுவெல்லாம் பேசுகிறவனுக்கு கிடைக்கிற கைதட்டல் மாதிரி. நேற்று, குறைவான நேரமே பேசினேன் என்றாலும், எனக்கே திருப்தியாய் பேசினேன்.


பேசி முடித்து, மேடையை விட்டு இறங்கியதும் தான் அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது.


முதல் வரிசையில், பழனிக்கு அருகில் அமர்ந்து, இந்த உரையை படபடத்த உற்சாகத்துடன் கேட்டுக் கொண்டிருந்த அவரது மகள் இளஎழினி (பத்து வயது), வேகமாய் எழுந்து வந்து, எனக்குக் கை கொடுத்து, ‘மாமா, செமையா இருந்தது… சான்ஸே இல்ல' என்று பெரிய மனுஷி போலச் சொன்னதைத் தான் இந்த நிமிடம் வரைக்கும் எனக்கு நம்பமுடியவில்லை.





Comments


bottom of page