லப்பர் பந்து என்றொரு திரைப்படம். அதன் இறுதிக்காட்சியில் ஒரு விளையாட்டுப் போட்டியைக் காட்டுகிறார்கள். அங்கே இரு அணிகள் சவால் விட்டுக் கொள்கின்றன. ஒன்று பழைய அணி, இன்னொன்று அப்பொழுது தான் உருவாக்கப்பட்ட புதிய அணி. இவ்விருவருக்கும் தான் பந்தயம். யார் தோற்கிறார்களோ அவர்கள் மைதானம் பக்கமே தலைவைத்துப் படுக்கக்கூடாது என்பது தான் போட்டியின் வெற்றியும் தண்டனையும். கேட்டதுமே இது வழக்கமான விளையாட்டுப் போட்டி அல்ல என்பது நமக்கு விளங்கி விடுகிறது. புராணங்களில் அல்லது கெளபாய் படங்களில் காட்டப்படும் வாழ்வா சாவா மாதிரியான போட்டி இது.

அவ்விரு அணிகளும் இதற்கு ஒத்துக் கொள்வதின் காரணம், ஒரு விரோதம்; விரோதத்திற்கானக் காரணம், தீண்டாமை. பழைய அணியில், தாழ்த்தப்படவர்களை சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று தீண்டாமையைக் கடைபிடிக்கப்படுகிறது. கதையின் நாயகன் ஒரு தலித். அவனும் அவன் நண்பர்களும் வெகுண்டு புதிய அணியை உருவாக்குகிறார்கள். பழைய அணியிடம் சவாலும் விடுகிறார்கள். ஒரு பக்கம் அரசியல்படுத்தப்பட்ட தலித்துகள்; இன்னொரு பக்கம் தீண்டாமையைக் கடைபிடிக்கும் பழந்தமிழர்கள். இது தான் படத்தின் கவர்ச்சிக்குக் காரணம்.
மைதானத்தை விட்டு விலக்கி வைக்கிற தண்டனையைப் புதிய அணியின் அரசியல் தலித்துகள் எப்படி ஒத்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் எழுப்பும் உரிமைக்குரலே அப்படியொரு தீண்டாமையை எதிர்த்து தான் எனும் போது இந்த இடம் கொஞ்சம் நெருடுகிறது. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் வரிசையில் தீண்டாமைக்கு தீண்டாமை என்று தலித்துகள் யோசித்திருக்கலாம். சரி, கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்து விட்டார்கள் என்று தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
போட்டி ஆரம்பிக்கிறது. அரசியல் தலித்துகளின் அணி அதிரடியாய் இன்னொரு புரட்சியையும் செய்கிறது - முதன் முறையாக ஒரு பெண் ஆட்டக்காரரையும் அணியில் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆண்களுக்கு சமமாய் அந்தப் பெண்ணும் அக்கிராமத்தில் களமிறங்குகிறாள். முதலில் சிலர் தயங்கினாலும் பின் அரைகுறை மனதோடு ஏற்றுக் கொள்கிறார்கள். திரைப்படங்களின் இலக்கணப்படி தலித் அணியே வெற்றியை நோக்கி முன்னேறுகிறது.
சாதி அணியினர் திகைக்கிறார்கள். வெற்றி கையை விட்டு நழுவுவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது மானப்பிரச்சினை என்பது அவர்களுக்கு விளங்குகிறது. பந்தயத்தில் தோற்றுப் போனால், பாரம்பரியம் அழியும்; பெருமை சிதையும்; ஜென்மத்திற்கும் மைதானம் பக்கமே வர முடியாது. போதாக்குறைக்கு, தலித்துகளிடம் தோற்றுப்போவதை விட கேவலம் வேறு இல்லை. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று துடிக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. நல்ல ஆட்டக்காரர்களை எங்கிருந்தாவது அழைத்து வந்து அணியில் சேர்ப்பது. உடனடியாகத் தேடவும் ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் துரதிர்ஷ்டம் அந்த நல்லவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்திருக்கிறார்கள். இப்பொழுது வேறு வழியில்லை. வெற்றி பெற்றாக வேண்டும். காலனி ஆட்டக்காரர்களை அணியில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
எதிரணியில் நிகழும் இந்த மாற்றத்தை தலித் அணி உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருக்கிறது. பந்தயத்திற்கு முன்பு வரை தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லிய பழைய அணிக்குள் நடைபெறும் மாற்றம் அவர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இதைத்தானே நாம் எதிர்பார்த்தோம் என்ற தொனியில் யோசிக்க ஆரம்பிக்கிறார்கள்.
தாங்கள் மூட்டிய தீ பற்றிக் கொண்டதாக சந்தோசப்படுகிறார்கள். இந்தப் பொறி அணைந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காக அதிர்ச்சிகரமான முடிவொன்றையும் எடுக்கிறார்கள். சாதி அணியில் நிகழ்ந்த புரட்சிகர மாற்றத்தைத் தக்கவைக்க வேண்டும்; அதற்காகப் போட்டியில் தோற்றுப்போவது என்று முடிவெடுக்கிறார்கள். தோற்று தியாகிகளாகவும் மாறுவதுடன் படம் முடிகிறது.
இந்தப் படம் எல்லோருக்குமே இனிக்கிறது. குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்களுக்கு இது கூடுதல் உவகையைத் தருகிறது. தலித்துகள் இந்தப் படம் குறித்து பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவர்களுக்கு பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் என்று ஏற்கனவே ஆட்கள் இருப்பது காரணமாக இருக்கலாம். ஆனால், படத்தை விதந்து பேசுகிறவர்கள் அனைவரும், தலித் பிரச்சினையை இந்தப்படமே நேர்மையாகப் பேசுகிறது என்பது போல கருத்து தெரிவிக்கிறார்கள். படத்தை உருவாக்கிய அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிகின்றன.
இதையெல்லாம் பார்க்கும் போது நமக்கு ஏன் ஒரு எழவும் விளங்குவதில்லை என்றே சடைப்பாய் இருக்கிறது. திரைப்படங்களிடம் இவ்வளவு மோசமாக ஏமாறக்கூடியவர்கள் உலகில் வேறு எங்காவது இருப்பார்களா என்றும் தெரியவில்லை. ஒரு குழந்தையை ஏமாற்றுவது போல நம் எல்லோரையும் எப்படி ஏமாற்றி விட முடிகிறது? எந்த அரசியல்படுத்தப்பட்ட தலித்தாவது நிஜ வாழ்வில் இப்படியொரு தியாகத்தை செய்ய முன்வருவாரா என்ற கேள்வி ஏன் நம் யாருக்குமே எழவில்லை. அரசியல் அதிகாரம் முதற்கொண்டு தங்களுக்கான பங்கினைப் பெறுவதற்கு ஓயாது போராடிக் கொண்டிருக்கும் தலித்துகள் தியாக சொரூபங்களாக அத்தனை அதிகாரத்தையும் உங்களிடம் ஒப்படைத்து விட்டு விலகி விடுவார்கள் என்று எப்படி நீங்கள் கற்பனை செய்கிறீர்கள் என்றே எனக்கு கேட்கத் தோன்றுகிறது.
யோசித்துப் பாருங்கள். அந்தப் போட்டியில் தோற்றுப் போனால், அரசியல் தலித்துகளால் மைதானம் பக்கமே வரமுடியாமல் போகும். இது அவர்களே அவர்களுக்கு விதித்துக் கொண்ட தீண்டாமைப் பொறி. வெற்றி என்றால், சாதி பார்க்கும் உங்கள் அனைவரையும் விலக்கி வைக்கிற அதிகாரம் அவர்களுக்குக் கிடைத்து விடும். தோல்வியோ அவர்கள் மீது செலுத்தப்படும் தீண்டாமையை நியாயம் என்று நிரூபித்து விடும். ஒரு சில தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன என்கிற காரணத்திற்காக அந்த தலித்துகள் நிச்சயமாக தங்களது அரசியலைப் பலி கொடுக்க முன்வர மாட்டார்கள். மாறாக அவர்கள் அந்தப் போட்டியில் வெற்றி பெற்று, தீண்டாமையற்ற மைதானத்தை உருவாக்கவே விரும்பியிருப்பார்கள். தீண்டாமையற்ற என்று கூட சொல்ல முடியாது. அவர்களிடமும் கடைபிடிக்க வேண்டிய தீண்டாமையொன்று இருக்கிறது - தீண்டாமை கடைபிடிப்பவர்களை விலக்கி வைப்பது. பழைய அணியை நிச்சயமாய் அவர்கள் அங்கிருந்து விரட்டுவார்கள். அல்லது, இரக்கம் காட்டி பிழைத்துப் போங்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அந்தப் போட்டி, விளையாட்டின் வெற்றி தோல்வி என்பதையெல்லாம் கடந்து, சமூக அதிகாரத்தைக் கைப்பற்றுதல் என்று மாறி விட்டதை உணர்ந்த தலித்துகள் இப்படியொரு தியாகத்தை செய்வார்கள் என்று எப்படி உங்களால் இன்னமும் நம்ப முடிகிறது? கூடவே, கூச்சமில்லாமல் பரிந்துரைக்கவும் செய்கிறீர்கள்! தலித் பிரச்சினையை அணுகுகிற முறையியலில் நமக்குக் கொஞ்சம் கூட பயிற்சியில்லை என்றே நான் நினைக்கிறேன். அரசியல்படுத்தப்பட்ட தலித்துகள் நம்மை விட்டு வெகுதூரம் விலகிச்சென்ற பின்பும், அவர்களை இன்னமும் சிதம்பரத்தில் ஜோதிமயமான நந்தன் போன்ற தொன்மக் கதாபத்திரங்களாகவே கற்பனை செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்று நான் சந்தேகப்படுகிறேன். அரசியல்படுத்தப்பட்ட தலித்துகளை விளங்கிக் கொள்வதில் நாம் எங்கே தவறு செய்கிறோம்?
தலித்துகளை இன்னமும் தாழ்த்தப்பட்டவர்களாகவே நினைப்பதிலிருந்து இந்தக் கோளாறு ஆரம்பிக்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து நமக்கிருக்கும் சித்திரத்தைத் திரைப்படங்களில் இன்னும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அவை அனைத்துமே அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சொல்வதை விடவும், எப்படி இருந்தால் நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்ற நோக்கத்திலேயே அமைந்திருக்கின்றன.
தாழ்த்தப்பட்டவர்கள் என்று இல்லை, ஒடுக்கப்பட்ட எவரையும் பற்றி நம்மிடமுள்ள சித்தரிப்புகள் இப்படியானவை தான். நமது எதிர்ப்பார்ப்புகளைத்தான் அப்படி வடித்து வைத்திருக்கிறோம். இதில் ஆக மோசம், பெண்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் பற்றிய அபிப்பிராயங்கள். நம்மைப் பொறுத்தவரை இரண்டு பேரும் வேறுபடுத்த முடியாதவர்கள். இரண்டு பேரின் மீதும் நம் சமூகத்தில் தீண்டாமை உண்டு. இருவருமே ஒட்டுண்ணிகள். ஆனாலும் நேரடியான பொருளுற்பத்தியில் ஈடுபடுகிறவர்கள். சொல்லி வைத்தது போல் இருவருக்குமே சுயம் கிடையாது. அதனால் இருவருமே நமது போகப்பொருட்கள். ஏறக்குறைய எல்லா தமிழ் திரைப்படங்களிலும் இவர்களைத் துய்க்கும் வழிமுறைகளே விவரிக்கப்படுகின்றன.
இரண்டாவது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான நமது தந்திரங்கள் அனைத்தும் பழைய வகை. இதை எத்தனை பேர் உணர்ந்து கொண்டீர்கள் என்று தெரியவில்லை. காலங்காலமாக நாம் ஒரே உத்தியைத் தான் கடைப்பிடித்து வருகிறோம். எப்பொழுதெல்லாம் நமக்குக் கீழிருப்பவர்கள் போர்க்கொடி தூக்குகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்களில் கடைக்கோடி நபர்களுக்கு சில சலுகைகளை வழங்குவது நம் வழக்கம். இந்த வியூகம் ஆரம்ப நாட்களில் மிகச் சிறப்பான வெற்றிகளை நமக்குக் கொண்டு வந்தது என்பது உண்மை. இப்படி கடைக்கோடி தாழ்த்தப்பட்டவர்களுக்கு சில வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், நம்மால் அவர்களைத் திகைக்க வைக்க முடிந்தது; அவர்கள், அவர்களை எதிர்த்தே நிற்கிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்க முடிந்தது; அதன் மூலம் அவர்களின் எதிர்ப்பை மழுங்கடிக்க முடிந்தது; இறுதியில் அவர்களைத் துண்டு துண்டுகளாக்கி ஒடுக்கவும் முடிந்தது. ஆனால், இந்த உத்தியை அரசியல் தலித்துகள் அறிந்து கொண்டார்கள் என்பது மட்டுமல்ல, அதை அப்பட்டமாய் உலகிற்கே காட்டி நம்மை வெட்கப்பட வைத்தார்கள் என்பது தான் உண்மை. அதற்குப் பின்பும் தலித்துகளை வெற்றி கொள்ளும் புதிய உத்திகளை நம்மால் உருவாக்க முடியவில்லை என்பது தான் அவலம்.
மூன்றாவதாக, தலித் அரசியல் பேசும் திரைப்படங்களை ஏற்கனவஏ உருவாக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதை நாம் கவனித்தோமா என்று தெரியவில்லை. அப்படி உருவாக்கப்படுகிற படங்கள் நாம் உருவாக்கி வைத்துள்ள இலட்சிய வடிவங்களை விமர்சிப்பதிலிருந்தே ஆரம்பிக்கின்றன . பா. ரஞ்சித்தின் அட்டகத்தியில் சித்தரிக்கப்பட்ட இளைஞன் அப்படியொரு உதாரணம். காதல் - காதல் தோல்வி மீது கட்டப்பட்டிருந்த காவியக் குணங்களை நகைப்பிற்கு உட்படுத்துவதே அந்தத் திரைப்படத்தின் அரசியல் கூற்றாக இருந்தது. காலா, கபாலி போன்ற டான் படங்கள் நமது அடியாட்கள் தாதாக்களாக உருமாறிய கதையையே விவரித்தன. இப்படி ஏற்கனவே நாம் நிர்மாணித்திருந்த ஒடுக்கப்பட்டவர் பற்றிய ‘மாதிரி’ வடிவங்களை நகைப்புக்குள்ளாக்கும் அல்லது தலைகீழாக்கும் வேலையையே தலித் படங்கள் செய்து வந்தன. நமது எல்லா தந்திரங்களும் தகர்ந்து போயின என்பது தான் உண்மை.
இந்த உண்மைகளை எதிர்கொள்ளத் தெரியாமல், இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை.
Commentaires