top of page

தலித் இலக்கியம் என்ற விபத்து!




கடிதம் 1

குரலற்றவர்களின் குரலுக்குத் தந்திருக்கும் விளக்கம் நன்றாக இருக்கிறது. நெடுநாளாகவே ‘தலித் இலக்கியம், அரவாணி இலக்கியம்’ என்று பிறர் சொல்லும் பொழுது எனக்குப் புரியாத சங்கடம் இருக்கும். நான் என்னை LGBT நபர் என்று உணர ஆரம்பித்த கணத்திலிருந்து இந்தப் பிரச்சினை இருக்கிறது. ஒரு queer நபராக நான் சரியாகத்தானே பேசுகிறேன்? இது ஏன் மற்றவர்களுக்குப் புரியவில்லை. நான் பேசும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டுமா என்று நிறைய நாட்கள் குழம்பியிருக்கிறேன். உங்கள் கட்டுரையில் அதற்குத் தெளிவு கிடைத்ததாக உணர்கிறேன். நான் பேசுவதில் எந்தச் சிக்கலும் இல்லை, என்னை விளங்கிக்கொள்ளும் ‘காதுகள்’தான் மக்களிடம் இல்லை என்பது எனக்குப் பாரம் நீங்கியதுபோல் இருக்கிறது.

– பிரமிளா ராஜ்


கடிதம் 2

கிழக்கு டுடேவில் நீங்கள் எழுதிவரும் தொடரை வாசித்து வருகிறேன். ‘நீல ஆரவாரம்’ வாசிக்கையில் சில கேள்விகளை எழுப்பியும் சில தெளிவுகளைத் தந்தும் இருக்கிறது.

தலித் பண்பாடு கலகப் பண்பாடு எனில் எதிர்க் கலாசாரத்தை மொழியனுபவமாக்குவதில் தலித் இலக்கியவாதிகளுக்குப் போதிய பயிற்சி இல்லையா? கவித்துவ தன்னிலைகள் அருவமாக உருவாக்கப்படும் தேவையை தலித் அரசியல் தடுக்கிறதா? அல்லது தலித் இலக்கிய வகைமை நேரடியான எதார்த்தமயமான எழுத்து முறைமையை வலியுறுத்துவதால் உள்ளதை உள்ளபடி எதார்த்த எழுத்தின் வழியே வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயமும் அருவமாக, பூடகமாக இங்கு எதையும் சொல்லக்கூடாது எனவும் தலித் இலக்கிய வகைமை தடைகளையும் எல்லைகளையும் தலித் இலக்கியவாதிகளுக்கு போட்டிருக்கிறதா? அவ்வாறு முயற்சிக்கும்போது மொழியின் சலம்பல்கள் இலக்கியவாதியை அச்சுறுத்துகிறதா? ஏன் அருவமாக தலித் இலக்கியப் பிரதிகள் எழுதப்படுவதில்லை? ஒரு தலித் இலக்கியப் பிரதி அது பேசும் அரசியலுக்கு எதிராகத் திரும்பக்கூடிய சாத்தியங்கள் எழும் இடங்கள் அதைக் கையாளுவதற்கான முறைமைகள் ஏதேனும் இருக்கிறதா? மொழியின் சாத்தியங்களில் கவிதை எப்படி அகப்பட்டுவிடுகிறது ? அதைக் கடப்பது எப்படி?

இலக்கிய, மொழியனுபவங்களின் போதாமையும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் அதனைக் கடத்தும் யோசனைகளுமே தலித்துகளை இலக்கியத்தை அரசியல் கருவியாக்கிக் கொள்ளத் தூண்டுகின்றனவா? அப்படியென்றால் இந்த நம்பிக்கை எங்கிருந்து வருகிறது, பிரதியும் வடிவமும் என்றென்றுக்குமானதா? என்றால் பிரச்சனைபாடுகளும் என்றென்றைக்குமானதா?

இக்கடிதத்தையே பதற்றத்தில் எழுதிவிட்டேன். சனிக்கிழமைகளில் பேராசிரியரின் உரைகளைக் கேட்க பல்கலையில் நாட்புறவியல் துறைக்கு வந்துள்ளேன்.

தொடர்ந்து தங்களது எழுத்துகளை வாசித்தும் உரைகளைக் கேட்டும் வருகிறேன். பேராசிரியருக்கு எனது வணக்கமும் நன்றியும்.


– அ. பிரசாத், சமயநல்லூர்

0



‘ராஜாவின் அரசியல்’ கட்டுரை பல்வேறு விதமான திறப்புகளைத் தர வல்லது. நான் என்னுடைய எழுத்தை, அது கட்டுரையாக இருந்தாலும் சரி, புனைவாக இருந்தாலும் சரி, பன்முகத்தன்மை வெளிப்படும் விதமாகவே அமைத்துக் கொள்கிறேன். இதற்காக நான் பல மடங்கு மெனக்கிடவும் செய்கிறேன். ஒரு கட்டுரையை எழுதுவதற்கு நான் எடுத்துக் கொள்ளும் கால அளவு யாரும் கற்பனை செய்ய முடியாதது. சில நேரங்களில் ஒரு கட்டுரைக்கு வருடங்கள்கூடக் காத்திருந்திருக்கிறேன். எனக்கு எப்பொழுதுமே தரவுகள் போதாது. அத்தரவுகள் எனக்குள் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்களுக்காக நான் காத்திருக்கத் தொடங்குகிறேன்.


கட்டுரை எழுதுவதற்கு ரசாயன மாற்றங்கள் தேவையா என்று ஆச்சரியப்படலாம். எனக்குத் தேவை. அந்தத் தரவு எனக்குள் ஊறித் திளைக்க வேண்டும். அது வழங்கக்கூடிய பல்வேறு வியாக்கியான சாத்தியங்களை நான் தொடர்ந்து மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். சில நேரம் சத்தமாகக்கூட.


தன்னந்தனியே சத்தமாகப் பேசும் பழக்கம் எனக்கு சிறு வயதிலிருந்தே இருந்தது. ஆனால் யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் ரகசியமாகவே பேசுவேன். பல நேரம், சத்தம் வராத உடல் பாவனைகளாக இருக்கும். தலையை உதறி எதையாவது மறுத்துக் கொண்டிருப்பேன், கைகளைக் காற்றில் வீசி ஏற்கனவே ‘முட்டாள்தனமாய்’ நடந்து கொண்டதை அழிக்க முயற்சி செய்வேன், வெவ்வேறு தொனிகளில் ஒரே வாக்கியத்தைச் சொல்லிச் சொல்லி, மீண்டும் மீண்டும் அதிருப்தி அடைவேன். இதை எல்லாம் நான் தனியாக நடந்து செல்லும்போது மட்டுமே செய்வேன். யாரும் பார்த்து விடக்கூடாது என்பதில் அதி கவனமாக இருப்பேன். ஆனால், இதை ஒரு நாள் என் தங்கை மிக எளிதாய் கண்டுபிடித்தாள்.


‘நீ நடந்து போகும் போது, உன் நிழல்ட்ட பேசிக்கிட்டே போற.’


உடனடியாக. எனக்கு வெட்கமே வந்தது. யாருக்கும் தெரியாதது இவளுக்கு எப்படித் தெரிந்தது.


‘நீ எப்ப பாத்தே?’


‘எனக்குத் தெரியும். நீயும் பேசுவ, சின்னண்ணனும் பேசுவான்.’


என் தம்பி இப்படித் தனியே என்னைவிட மோசமாகப் பேசிக்கொள்வதை அவளே எனக்குக் காட்டித்தந்தாள். பெண்களின் உள்ளுணர்வுகளில் இதுவும் ஒன்று என்று அன்றைக்குத் தத்துப்பித்தென்று நினைத்துக் கொண்டேன்.


தம்பியின் தனியே பேசும் கதை என்னைவிட மோசம். அவன் மிகச் சரியாகக் காலையில் பல் விளக்கும்போது காணாமல் போவான்.


‘இங்கதான நின்னு விளக்கிட்டிருந்தான், எங்க காணும்?’


‘முடுக்குல நிப்பான் பாரு.’


முடுக்கில்தான் நின்றான். கையில் பல் விளக்க பிரஷ்ஷும் வைத்திருந்தான். ஆனால், பல் விளக்கவில்லை. அதை ஆட்டி ஆட்டி, அங்கிருந்த ஏணியோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான். ஒன்று இரண்டு வாக்கியங்கள் இல்லை. தொடர்ச்சியாக ரொம்ப நேரமாக அதோடு அவன் பேசிக் கொண்டிருந்தான். இங்கிருந்து ஒளிந்து நின்று பார்க்கிற எங்களுக்கு ஏணியும் அவனோடு பதிலுக்கு எதையோ பேசுவது போலவே இருந்தது. அவன் ஏணியோடு மட்டுமல்ல, எங்களது கொல்லைப்புறத்தில் இருந்த செடி, கொடிகளோடெல்லாம் பேசிக் கொண்டிருந்ததை நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கண்டுபிடித்தோம். இதுவே ஆச்சரியம் என்றால், இதைவிடப் பெரிய ஆச்சரியம் எங்களுக்குக் காத்திருந்தது.


இப்படி அவன் ஏணியோடும் செடிகளோடும் தனியே பேசிக் கொண்டிருப்பதை ஒரு நாள் கையும் களவுமாகப் பிடித்துக் கேட்டபோது, ‘ஆமா, அதுக்கென்ன?’ என்று சர்வ சாதாரணமாகக் கேட்டான்.

அவன் சொன்னதைக் கேட்ட பின்புதான், தனியே பேசிக் கொள்வது அவ்வளவு பெரிய தப்பு இல்லை என்று ஓர் ஆசுவாசம் வந்தது. கூடவே ஒரு சின்ன சந்தேகமும் இருந்தது. ஒரு வேளை இது குடும்ப நோயாக இருக்குமோ?


இந்தச் சந்தேகம் தீர்வதற்கு ஒரு பதினைந்து வருடங்கள் நான் காத்திருக்க வேண்டி வந்தது. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்தபோது, அதிகாலையில் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். ஆரவல்லி மலைத்தொடரின் மரங்கள் அடர்ந்த சாலையில், பனி மூட்டத்திற்குள் நடப்பது அவ்வளவு ரம்மியமாக இருக்கும். நெஞ்சத்தைக் கிள்ளாதே படைத்தில் வரும் ‘பருவமே புதிய பாடல் பாடு’வை நினைத்துக் கொள்ளுங்கள்.


அதிக நடமாட்டம் இருக்காது. அதனால், கூச்சமில்லாமல் நீங்கள் தனியே பேசிக் கொண்டு நடக்க முடியும். அது எனக்கு பெரிய வசதியாக இருந்தது. இப்படி இருக்குபோது, ஒரு நாள், இன்னொரு சப்தத்தையும் நான் கேட்டேன். எனக்கெதிரே இன்னொருவரும் தன்னந்தனியே பேசிக் கொண்டு வந்தார். அது, பேராசிரியர் ஹர்ஜித் சிங் கில். எனது முனைவர் பட்ட ஆய்வு மேற்பார்வையாளர். அருகில் யாரோ இருப்பது போல சப்தமாக பேசிக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தார்.


யாருடனோ ஆக்ரோஷமான விவாதத்தில் இறங்கியிருந்தார். அந்தக் கற்பனையான நபரின் கருத்தை அவர் சுத்தமாக ஒத்துக் கொள்ளவில்லை என்று தெரிந்தது. ஏறக்குறைய சண்டைதான் போட்டுக் கொண்டிருந்தார். அவரது உடல் பாவனைகள் எச்சரிக்கை விடுப்பது போல இருந்தன. நானும் அவரும் அந்தப் பனிமூட்டத்தில் எதிரெதிரே வந்து கொண்டிருக்கிறோம். ஒருவரையொருவர் தெளிவாகப் பார்க்க முடிகிற தூரம் வந்ததும், நான் வணக்கம் சொன்னேன். அவர் பதிலுக்கு கையைத் தூக்கி முகமன் செய்தார். ஒரு கணம் மட்டும் முகம் மலர்ந்தது. மறுகணம், அந்த இல்லாத நபரோடு தன் சண்டையை ஆரம்பித்து விட்டார். அந்த நிமிடம், எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றியது – ‘இந்த சர்தார், நம்ம ஊர்க்காரர்’. இந்த உலகில் நான் தனியே இல்லை!


நமக்கு நாமே பேசிக் கொண்டு நடப்பதற்குத் தோதானவை பழைய வழித்தடங்கள் மட்டுமே. புதிய வழித்தடங்கள் நம் கவனத்தைச் சிதறடிக்கும். பராக்குப் பார்க்கத் தூண்டும். அதே போல, பழைய வழித்தடங்களில் நீண்ட தூரங்களும் கதைக்கு உதவாது. அதே போல, செக்கு மாட்டுத் தடம் போன்ற (எட்டு போட்டு நடப்பது என்று சொல்வார்கள்) குண்டுச் சட்டிகளும் உதவாது.


என் அனுபவத்தில், விளையாட்டு மைதானம் அல்லது அதைவிட அளவில் சிறிய சுற்றுப்பாதை இந்த விஷயத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தும். சுற்றுப்பாதைகளில் நடக்கும் போது, உங்கள் நடையில் ஓர் ஒத்திசைவு தோன்ற ஆரம்பிக்கும். நடைபாதையில் பாதி புதைந்தும் பாதி துருத்திய படியும் இருக்கும் கல், அல்லது ஒரு சிறு பள்ளம், அல்லது ஒரு வித்தியாசமான மண் நிறம், அல்லது ஒரு வளைவு, மரம், கம்பம், அல்லது அந்தப் பகுதியில் மட்டும் வீசும் எதிர்க்காற்று…இப்படியான அடையாளங்களை நீங்கள் கவனிக்க ஆரம்பிப்பீர்கள்.


அந்த அடையாளங்களைத் திரும்பத் திரும்ப நீங்கள் எதிர்கொள்ளும்போது, உங்களுக்குள் ஒரு லயம் உருவாக ஆரம்பிக்கிறது. இதற்கு, நடையில் லயிக்க ஆரம்பிக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்தப் பிரபஞ்சத்தின் அத்தனை இயக்க விதிகளோடும் உங்கள் உடல் இசையத் தொடங்குகிறது என்று பொருள். காலாதீத ஈர்ப்பு விசையோடும், சகப் பொருட்களின் இயக்க விசையோடும் நீங்கள் ஒத்திசைய ஆரம்பிக்கிறீர்கள். தனியே பேசிக் கொள்ளவும் யோசிக்கவும் இந்த ஒத்திசைவே அடிநாதம். இந்தச் சுரத்தைப் பிடித்துவிட்டால் போதும், அதன் பின் தனியே பேசித் திரிவதிலிருந்து உங்களை யாரும் தடுத்துவிட முடியாது. என் எழுத்தை நான் இப்படியே வடிவமைக்கிறேன்.


தனியே பேசிக் கொள்ளும்போது, இரண்டு விஷயங்களே பிரதானம். ஒன்று, அதிருப்தியோடு முடிந்த சம்பவத்தை மனதிற்குள் திரும்பத் திரும்ப ஓட்டி சரி செய்ய முயல்வது; இரண்டு, நாளை நடக்கவிருக்கும் காரியம் சரியாக அமைய வேண்டுமே என்பதற்காக திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது. கேட்பதற்கு Soliloquy போலத் தோன்றலாம். ஆனால், இது அது அல்ல.


தமிழில் ‘தனிப்பேச்சு’ என்று அழைக்கப்படும் soliloquy ஒரு நாடக உத்தி, கதையாடல் வசதிக்காக உருவாக்கப்பட்டது. பெரும்பாலும், ஒரு கதாபாத்திரம் தன் மனதிற்குள் என்ன நினைக்கிறது என்பதைப் பார்வையாளருக்கு உணர்த்தவே இதைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு சம்பவம் நிகழும்போது, கதாபாத்திரங்களால் வெளிப்படுத்த முடியாது போன கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான நாடக வாய்ப்பு இது. வெவ்வேறு காரணங்களால் கதாபாத்திரங்களால் வெளிப்படையாய் சொல்ல முடியாத செய்திகளால், கதையோட்டத்தில் எந்தச் சுணக்கமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற சுதாரிப்பில் உருவான சப்பைக்கட்டு. இதைக் ‘குரலற்றவர்களின் குரலோடு’ குழப்பிக் கொள்ள வேண்டாம்.


நான் குறிப்பிடும் ‘தன்னந்தனியே பேசிக் கொள்தல்’ நாடக உத்தி அல்ல, பெரும்பாலும் நடந்து முடிந்தது மீதான அதிருப்தியிலும், நடக்கவிருப்பது மீதான பதட்டத்திலும் உருவாகும் பேச்சு இது. இதைப் பேச்சு என்று சொல்லமுடியுமா என்றால், ஆமாம் அப்படித்தான் அழைக்க வேண்டும். அபப்டியானால், யாரோடு யார் பேசுகிறார் என்று நீங்கள் கேட்கலாம். இறந்த காலத்தில் யாரோடோ பேச முடியாமல் போனதையே நான் இப்பொழுதும் பேசிப் பேசிப் மாய்கிறேன்; வருங்காலத்தில் யாரோடோ பேச முடியாமல் போகுமென்று தெரியும் விஷயத்தைப் பேசிப் பேசிப் பழகுகிறேன். வரலாற்றின்மீதான அதிருப்தியும், எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையுமே என்னையும் பலரையும் தன்னந்தனியே பேசிக் கொள்ள வைக்கிறது.


இந்த அதிருப்தியும் அவநம்பிக்கையும் ‘குரலற்றவர்களின்’ உளவியலில் ஏற்படுத்தும் விளைவுகள் பாதகமானவை. அவை, முதலில் அவர்களின் தன்னிலையைச் சிதைக்க ஆரம்பிக்கின்றன. இந்தச் சிதைவைப் புலம்பலாக வெளிப்படுத்துவது ஒரு வகை. பெரும்பாலோர் மேற்கொள்ளும் உத்தி இது. இச்சிதைவையே மூலதனமாக மாற்றிக் கொள்வதும் உண்டு. நவீனத்துவம் பேசிய ஒடுக்கப்பட்டோர் அரசியல் உளச்சிதைவை மூலதனமாகவே பார்த்தது. அதனால், அச்சிதைவை மறுவுற்பத்தி செய்து கொள்ளவும் அது சொல்லித் தந்தது.


ஆனால், இச்சிதைவை ஆக்கபூர்வமாகவும் ஒருவரால் எதிர்கொள்ள முடியும். அதுவே, ‘தனக்குத் தானே பேசிக் கொள்ளுதல்’. இது நிஜமாகவே படைப்பாக்கத்தைக் கோரும் செயல். படைப்பின் லஹரியில் திளைப்பது வேறு. படைப்பதன்மூலம் துன்பக்கேணியிலிருந்து வெளியேறுவது வேறு. குரலற்ற படைப்பாளிகள் தனக்குத் தானே பேசிக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இப் படைப்பூக்கச் செயலின் வரலாற்று உதாரணம், அயோத்திதாசரின் ‘தமிழன்’ இதழ் எழுத்துகள்.


தனது குரல் யாருக்குக் கேட்கவில்லையோ அவர்களிடமே அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அதனாலேயே அவ்வெழுத்துகளில் வரலாறு மீதான அதிருப்தியின், எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையின் நெடி தூக்கலாக வீசுகிறது. ஆனாலும் அவர் சோர்வில்லாமல் ஒட்டுமொத்த ‘தமிழர்களிடம்’ தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். அவர் பேசியதை, பேசிய காலத்தில் யாரும் காது கொடுத்து கேட்கவில்லை என்பது வேறு விஷயம். ஆனால், அவர் தனது குரலற்ற நிலையைப் படைப்பூக்கத்தின் மூலம் வென்றுவிட நினைத்தார் என்பதில் சந்தேகமில்லை. தொடர்ந்து பெருங்குரலெடுத்துப் பேசிக் கொண்டே இருந்தார். இதழியல் மூலமாகவும், புத்தக அச்சாக்கம் மூலமாகவும் அவர் தனது குரல் நிலைபெறும் படியும் பார்த்துக் கொண்டார். அந்தக் குரலை நாம் நூறாண்டுகளுக்குப் பின் கேட்கப் பழகினோம். இது வரலாறு.


‘குரலற்றவர்களின் குரல்’ விவாதத்தில், நமக்குக் கிடைக்கும் வரலாற்று உதாரணம் அயோத்திதாசர் என்றால், சமகால உதாரணம் இளையராஜா. இளையராஜாவே ‘குரலற்றவர்களின்’ அரசியலில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தினார். அவருக்கு முன்பும் சரி, பின்பும் சரி, குரலற்றவர்களின் குரலை ஒலிக்கச் செய்வதில் மட்டுமே எல்லோரும் கவனம் செலுத்தியிருந்த சூழலில், ராஜாவே கேட்பவர்களின் காதுகளை நோக்கி கவனத்தைத் திருப்பினார். அவர் தேர்ந்து கொண்ட ‘இசை’ என்ற தளம் இக்கோணத்தை அவருக்கு வழங்கியது என்று நாம் யூகிக்கலாம். ஆனாலும், அதை உணரும் நுண்மை அவரிடம் இருந்தது உண்மை.


அவரே, குரலற்றவர்களின் பிரச்சினை பேசுவது பற்றியல்ல, கேட்பதைப் பற்றி என்று முதலில் உணர்ந்து கொண்டவர். ஏனெனில், அவருக்கு குரலற்றவனாகத் தனது குரல் வளம் பற்றியும், படைப்பூக்கம் பற்றியும் எந்தக் கணத்திலும் சந்தேகம் வந்ததில்லை. சுயகழிவிரக்கம் அவரின் பாஷையில் இல்லவே இல்லை. அவர், தன் இசையைக் கேட்பதற்கான காதுகளைத் தொடர்ந்து செப்பனிட்டுக் கொண்டிருந்தார்.


அயோத்திதாசர் – இளையராஜா வரிசையில் தலித் இலக்கியம் அல்லது பண்பாடு என்று பேசப்பட்டதற்கு எந்த இடமும் இல்லை. சொல்லப்போனால், ‘தலித் இலக்கியம்’ தமிழில் நிகழ்ந்த மாபெரும் விபத்து என்பதே என் கணிப்பு. சிறுபிள்ளைத்தனம் என்றுகூடச் சொல்வேன். இந்தியாவின் பிற மொழிகளில் வேண்டுமானால் தலித் இலக்கியத்திற்கான வரலாற்று நியாயங்களை ஒருவரால் காட்ட முடியும். ஆனால், தமிழில் வீசிய தலித் இலக்கிய அலை, வரலாற்றுப் பிரக்ஞையற்றது.


இருபதாம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் அயோத்திதாசர் மாதிரியான ஆளுமை அத்தனைப் படைப்பூக்கத்தோடும், பெருங்குரலோடும் ‘குரலற்றவர்களின் குரலாக’ முழங்கியதை மறந்துவிட்டும், சமகாலத்தில் இளையராஜா மாதிரியான இன்னொரு ஆளுமை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அதே பிரச்சினையை அணுகியதை உணர்ந்து கொள்ளாமலும், இந்தியா முழுமைக்கும் அம்பேத்கரின் புண்ணியத்தில் கட்டமைக்கப்பட்ட ‘தலித்’ ஓர்மைக்குள் மாட்டிக் கொண்டு விழிபிதுங்கிய பார்வையே தமிழில் தலித் இலக்கியமாக முன்வைக்கப்பட்டது.


அதன் கோளாறு முன் தீர்மானங்களில் இருந்து ஆரம்பிக்கிறது. தலித் இலக்கியம், அப்படியொன்று எழுதப்படுவதற்கு முன்பே இரண்டு பிரதான கதாபாத்திரங்களைக் கொண்டிருந்தது. தலித் – தலித் அல்லாதவர். இவ்விருவருக்கும் ஏற்கனவே சொல்லப்பட்ட குணநலன்களும் இருந்தன; உடல் பாவனைகள் இருந்தன; எண்ணவோட்டங்கள் இருந்தன; வகைமாதிரிச் சிந்தனைகள் இருந்தன. ஒரு தலித் இலக்கியவாதி செய்ய வேண்டியதெல்லாம் தனக்கு நேர்ந்த அல்லது தான் பார்த்த சம்பவங்களை இக்கதாபாத்திரங்களைக் கொண்டு விவரிப்பது மட்டுமே. தலித் இலக்கியத்தின் பிரதான வகைமையாக ஏன் ‘தன்வரலாறு’ சொல்லப்படுகிறது என்பது இப்பொழுது உங்களுக்கு விளங்கியிருக்கும். என்னைப் பொறுத்தவரை எல்லா தலித் இலக்கியங்களும் ஒரே கதையமைப்பைக் கொண்டவை. அவற்றின் சூழல்களே வித்தியாசமானவை. ஒரு கதையின் வெவ்வேறு தழுவல்கள் என்று சொல்லலாம்.


ஒரு கட்டத்திற்கு மேலே தலித் இலக்கியம் காலாவதியாகிப் போனதற்கான காரணமும் இதுதான். அதில் ஊக்கத்துடன் செயல்பட படைப்பாளிக்கு எந்த வாய்ப்பும் இல்லை. இதனாலேயே, படைப்பூக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்த பூமணி, தன்னை அதிலிருந்து விலக்கியே வைத்திருந்தார். அவர் தன்னைக் குரலற்றவனாக என்றைக்குமே கருதியதில்லை என்று சொன்னார். அதை நிறைய பேரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அவரது கூற்றை ‘சாதித்துவேசம்’ என்பது போல் மலினப்படுத்தவே விரும்பினார்கள். அதே போல, ஆரம்பத்தில் ‘தலித் இலக்கிய’ அந்தஸ்து வசதியாகத் தெரிந்தாலும், நாளடைவில் அந்த வகைமாதிரி கதையமைப்பைவிட்டு, தான் விலகி வந்ததை உனர்ந்த இமையம் தன்னையும் குரலற்றவன் பட்டியலிலிருந்து விடுவிக்கக் கோரியதை நாம் பார்த்தோம்.


தலித் இலக்கியம் மட்டுமல்ல, எல்லாவிதக் ‘குரலற்றவர்களின் இலகியத்திலும்’ இந்தச் சிக்கல் இருந்தது. பெண்ணிய எழுத்துகள் முழுக்க முழுக்க ஒற்றைத் தன்மையுடன் வெளிப்படுவதன் காரணமும் இதுதான். மறுபடியும், தன்னைக் குரலற்றவளாகக் கற்பனை செய்வதிலிருந்தே இந்தக் கோளாறு ஆரம்பித்துவிடுகிறது. தொடர்ச்சியாக, எல்லா இலக்கியச் சிறுபிள்ளைத்தனங்களுக்கும் தார்மீக நியாயத்தை சலுகையாக வழங்க ஆரம்பிக்கிறது (இப்பொழுது தானே பேச ஆரம்பிக்கிறார்கள்!).


என்னைக் கேட்டால், படைப்பாளியின் சுயமரியாதைமீது அரசியல்வாதி செலுத்தும் வன்முறை இது என்பேன். அதாவது, ஒரு படைப்பின் அழகியலையும் கவித்துவத்தையும் அரசியல் தீர்மானிக்க அனுமதிப்பது ஒரு பண்பாட்டின் அவலம். நான் மிகக் கவனமாகவே, கோட்பாட்டாளன் என்ற பதத்தைத் தவிர்த்துவிட்டு அரசியல்வாதி என்று சொல்கிறேன்.


ஏனெனில், குரலற்றவர்கள் பற்றிக் கவலைப்படுகிற கோட்பாட்டாளனுக்குப் படைப்பே பிரதானமே தவிர, படைப்பாளி இல்லை. கருத்தளவில் ‘படைப்பாளி இறந்து போனான்’ என்று சொல்லியே அவன் தனது விமர்சனத்தை ஆரம்பிக்கிறான். தமிழில், தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் என்று வரையறுக்கிற பலரையும் மீண்டுமொரு முறை உற்றுப் பாருங்கள். எத்தனை அரசியல்வாதிகள் விமர்சகப் போர்வையில் உலா வருகிறார்கள் என்று உங்களுக்குப் புலப்படும்.





Comments


bottom of page