top of page

தமிழில் சிந்தித்தலும் தருமராஜின் எழுத்தும்

BChidhambaram


சிந்தனையே மொழியில் தான் நிகழ்கிறது எனும்போது, ‘தமிழில் சிந்திப்பது’ என்று தனியாக என்ன இருக்கிறது எனத்தோன்றலாம். இருப்பது போலத்தான் தெரிகிறது.


ஒரு மொழிச்சூழலில் சிந்திப்பது அச்சூழலின் அறிதல், அறியாமை இரண்டின் பயனாலாகிறது. ஒரு உதாரணமாக இசை குறித்து தமிழில் சிந்தித்தலை எடுத்துக் கொள்வோம். இது பல்வேறு சிக்கல்களைத் தாங்கியது. இசையை ரசிப்பவர்கள், கற்றுக்கொள்பவர்கள், கோட்பாட்டாளர்கள், கலைஞர்கள் என அனைவரையும் வஞ்சனையில்லாமல் பாதிப்பது. இசையைப் புரிந்துகொள்ளவே முடியாது என்பதில் துவங்கி இசையே தெய்வீகம், அல்லது மரபு, செவ்விசையாக அறியப்படுவது என, இங்கே நிலவும் பலநூறு திரைகளைக் கடந்து இசையை சிந்தித்தல், உரையாடுதல் அனைவருக்குமே சிக்கலானதாகிறது.


ஒரு ஒப்பீடிற்கு, Schoenberg, Hindemith, Rosen, Tovey போன்றோருக்கு இசையின் தெய்வீகம் பற்றியோ, சாதியச் சிக்கல் பற்றியோ, இசை மரபுகள் பற்றியோ இந்த அளவிற்கு சம்பந்தம் இல்லை. அவர்களுடைய இசைக்கோட்பாட்டு எழுத்துக்கள், ஒலியின் பௌதீகத்தில் துவங்கி நேரடியாக இசை கட்டுமானங்களுக்குள் செல்பவை. ஆனால் ஒருவேளை அவர்கள் தமிழில் இசைகுறித்து தமிழர்களுக்கு (இசைக் கலைஞர்களுக்கு கூட) எழுதினால் இவையனைத்தும் மைய பொருட்டாக மாறிவிடும். எனவே ‘தமிழில் சிந்தித்தல்’ என்பது ஒரு தனி நிலைதான்.

இதுபோன்ற சிக்கல்கள் இங்கே இசைக்கு மட்டும் உரியதாக இருக்க முடியாது. எனவே இங்கே சிந்தனையாளர்களாக அறியப்படுபவர்கள் அவரவர் தளங்களில் இதனை எதிர்கொண்டே ஆக வேண்டும். ஆனால் இச்சிக்கல்களோ, இதற்கான விடைகளோ தென்படும் என்று தேடினாலோ (அல்லது தேடாமல் கிடைக்குமாறோ) அரிதாகத் தான் தமிழில் ஏதாவது கிடைக்கிறது.


‘இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளரில்லை’ என்ற தலைப்பைக் கொண்ட கட்டுரையின் மூலமே திரு.தருமராஜின் அறிமுகம் கிட்டியது. தலைப்பில் துவங்கி அக்கட்டுரை அதுகாறும் ராஜாவை அணுகுவதில் தடுமாறிய, அதனால் அவரை சில வளையங்களில் திரும்ப திரும்ப பேசிவந்த தமிழ்ச்சூழலில், மாற்றாக ஒருவர் கிடைத்ததாகத் தோன்றியது. மேலும் அக்கட்டுரை ஒருவிபத்து மாதிரியும் தெரியவில்லை. துணுக்குகளாலான அக்கட்டுரையின் வீச்சும், சொல்வன்மையும் அவரது பிறகட்டுரைகளை உடனடியாக வாசிக்கவைத்தபோது, அவை மேலே சொன்ன தமிழில் சிந்தித்தலின் ஆதாரமான சிக்கல்களை வெளிக்கொண்டு வருபவையாகவும், அதற்கான விடைகளைத் தேடுபவையாகவும் பெரும் நம்பிக்கையளியத்தவை. எனவே தருமராஜின் எழுத்து முக்கியமானதாக இருப்பதோடு நில்லாமல் ஒரு வகையில் விரிவான பயன்பாட்டுக்குரியதாகவும் அமைகிறது.


இதற்கு ஒரு உதாரணமாக அவரது ஒரு கட்டுரையை எடுத்துக்கொண்டு, அவரது பார்வைகள் ஏன் முக்கியமானவை என்றும், விரிவான பயனாக வேறொரு களத்தில் எவ்வாறு பொருந்துகிறது என்றும் பார்க்கலாம்.


இதற்குள் செல்ல, முதலில் ஒரு முன்கதை சுருக்கம்..


மேற்கிசை கற்றுக் கொண்டும், அதன் தொடர்பில் மேற்கிசை கோட்பாடுகள் மற்றும் வரலாறு குறித்து, தடுமாறி ஒருவழியாக (எனக்கு) தெளிவடையத் துவங்கிய காலம் அது. அப்போது எதேச்சையாக வாசிக்க கிடைத்த புத்தகம் விபுலாணந்தரின் ‘யாழ் நூல்’. இப்புத்தகம் தூக்கிவாரிப் போட்டது என்று சொல்வது குறைவே. ஏனெனில் அதில்தான் சிலப்பதிகாரத்தின் இசைச்செய்திகளை முதன்முதலில் படிக்க நேர்ந்தது. மேற்கிசை அறிமுகமின்றி முதலில் இதனை படித்திருந்தால் வேறு. ஆனால் மேற்கிசையின் வரலாறுகள் பின்னணியில், தொனிமுறைகளின் பின்னணியில் அதனைப் படித்த போது கிடைத்த துலக்கம் முற்றிலும் வேறானது. ஒருபுறம் இத்தகைய இசையறிவு தமிழில் சங்க, சிலப்பதிகார, மத்திய காலங்களில் இருந்ததன் இயல்பான வியப்பு… மறுபுறம் இன்றைய காலத்தில் அது முற்றிலும் நீர்த்து, அப்படி ஒன்றின் இருப்பே மறைந்து, தமிழிசை பற்றி தெரிந்து கொள்ளவே மேற்கிசையின் துணை கொண்டுதான் முடியும் என்ற யதார்த்த சோகம்.


இந்த பின்னணியில், தமிழிசை பற்றிய ஆய்வுகள், முன்னெடுப்பு வரலாறுகள் குறித்த ஆர்வம் ஏற்பட்டது. சிலப்பதிகாரம் பதிப்பிக்கப்பட்ட பின்னரே, அதில் இருந்த இசைச்செய்திகளைக் கொண்டு தமிழிசை ஆய்வுகள் தொடங்குகின்றன. அதாவது இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலகட்டங்கள். இதனை சிலப்பதிகாரத்தைப் பதிப்பித்த உ.வே.சா துவங்கிச் செய்தாலும், தமிழிசையை அதன் தொனிமுறையை, இசை ஆராய்ச்சியாக அணுகி அதனை முன்னுக்கு எடுத்துவந்தது ஆபிரகாம பண்டிதரே. அவர் துவங்கி தமிழிசை குறித்து அற்புதமான புத்தகங்களும், ஆய்வுகளும் வெளிவந்துள்ளன. போலவே பல்வேறு முன்னெடுப்புகளில் தமிழிசையின் மீட்டுருவாக்கமும் நிகழ்ந்துள்ளது. சென்ற நூற்றாண்டின் துவக்கங்களில் தோன்றிய இந்த தமிழிசை இயக்கம் ஒரு நூற்றாண்டாக தமிழில் கனவுகண்டு நிகழந்த அற்புதமான முயற்சி என்பதில் சந்தேகமேயில்லை.


இப்போது நாம் சிக்கலுக்குள் செல்வோம்…


தமிழிசை வரலாறு கிடைப்பதற்கு முன்னர், கர்னாடக இசையின் வரலாறு ஒருவாறு இங்கே இருக்கிறது. அவ்வரலாறு இந்திய இசையின் வரலாற்றின் தொடர்ச்சியாக, வேதத்தில் தோன்றிய இசையாக, தெய்வீக இசையாக, பக்தியே மையமான இசையாக, முக்கியமாக பழம்பெருமையான இசையாக நிறுவப்பட்டிருக்கிறது. அதற்கு வேதங்கள், நாட்டிய சாஸ்திரம், பிற்கால சமஸ்கிருத நூல்கள் என ஒரு தொடர்ச்சி கிடைக்கிறது. இந்நிலையில் வேதத்தில் பிறந்த இசைக்கு திருப்பமாக தமிழில் ஒரு இசைமுறை கிடைக்கிறது. இந்தப் புதிய வரவை இருதுருவங்களும் எவ்வாறு எதிர்கொண்டன என்பது காண சுவாரசியமானது.


இதனை இந்திய பண்பாடுகளுள் ஒன்றாகக் கண்ட பார்வைகளில் இருந்து, தமிழிசை என்று தனியாக ஒன்றெல்லாம் சொல்ல முடியாது, கிடையாது என்று பதட்டத்தோடு, சிலவேளைகளில் முறுவலையும் அல்லது கடும் எரிச்சலையும் (வெங்கட்சாமிநாதன் போன்ற) வரவழைக்கும் போக்குகள் ஒருபுறம். இது எதிர்பார்த்ததுதான்.


ஆனால் தமிழிசையாளர்கள் இதனை எதிர்கொண்டது நாம் கூர்ந்து பார்க்க வேண்டியது. தமிழிசையின் தனித்துவத்தை நிறுவும் அதே வேளையில் அவர்களது சிந்தனைப் போக்கு பெருமளவில் சமஸ்கிருத இசையினால் பாதிக்கப்படுபவதை நாம் காணலாம். ஒரு எதிர் அரசியலாக இதன் தேவையும் இருந்தது என்றாலும் இதன் பலன் சென்ற நூற்றாண்டின் தமிழிசை முயற்சிகளில் பலவடிவங்களில் தெரிபவை. சமஸ்கிருத இசை குறித்த கதையாடல்கள் போலவே தமிழிசையே உலகின் முதல் இசை என்ற தொனியிலும், அல்லது அதன் பழம்பெருமையிலும், அந்த பழமையின் மீட்பிலும் இப்போக்கு பெருமளவில் சிக்கிக்கொள்வதை நாம் காணலாம்.


இச்சிக்கல் குறித்து சிலகாலமாக சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் திரு. தருமராஜின் இச்சிறிய கட்டுரை வெளிவந்தது.


இக்கட்டுரை ‘தாய்மொழி எனும் ஏமாற்றுவேலை’ பற்றி பேசுகிறது. அதில் அவர் ஒரு மொழியின் உயிர் பற்றி பேசும் போது இவ்வாறு குறிப்பிடுகிறார்.


“தமிழ் பேசும் மொழியாக மட்டுமே இருக்கிறது; ஆனால், நமது சிந்தனை மொழியாக சமஸ்கிருதமே இருக்கிறது என்பதற்கு வகை தொகையில்லாமல் உதாரணங்கள் உண்டு”


இவ்வரி, மேலே கண்ட தமிழிசையின் சிக்கலுக்கு எவ்வளவு பொருத்தமாகிறது. ஆம், நாம் தமிழிசை குறித்து பேசுவதாகச் சொன்னாலும் நமது சிந்தனை முறை சமஸ்கிருத இசைமுறையின் பாதிப்பில் இருக்கிறது. இதுவே பல்வேறு குழப்பங்களுக்கு வித்திடுகிறது.


சமஸ்கிருத இசை போன்றே இசையின் மேன்மை என்பது அதன் பழம்பெருமையில் இருப்பதான கற்பனையில் தமிழிசை முன்னெடுப்புகள் சிக்கிக் கொள்கிறது. இச்சிக்கல் தமிழிசையினை மீட்பதான முயற்சிகளில் தெளிவாக வெளிப்படுகிறது. இம்முயற்சிகள் திரும்ப திரும்ப ஓரே மாதிரியான முன்னெடுப்புகளில் சுற்றுகின்றன. ஏற்கனவே இன்றைய கர்னாடக இசை, 19ம் நூற்றாண்டில் உறைந்து போகும் நிலையில் இருந்தால், தமிழிசை விழாக்கள் மற்றும் கச்சேரிகள் பெரும்பாலும் ஏழாம் நூற்றாண்டு தேவாரங்களைப் பாடுவதாகவும், அல்லது பழைய தமிழ்க்கீர்த்தனைகளைப் பாடுவதாகவும், அல்லது வழக்கமான நாதசுவரக் கச்சேரிகளாகவும் இருக்கின்றன. இவற்றிற்கு இடம் இல்லாமல் இல்லை. ஆனால் இவை மட்டுமே தமிழிசை மீட்பாகாது.


மீண்டும், தருமராஜ் இக்கட்டுரையில் குறிப்பிடும் நிலைதான் தமிழிசைக்கு நேர்வது


“ஒரு பழங்குடியினம் மகுடம் என்ற இசைக்கருவியை வாசிக்கும் பண்பாடு கொண்டது என்று மானிடவியலாளர்கள் கண்டு பிடித்து விட்டால், அந்தப் பழங்குடியைச் சார்ந்த ஒருவர், காலாகாலமும் மகுடத்தை வாசித்துக் காட்டியே தனது பழங்குடித்தன்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தை மானிடவியலே ஏற்படுத்துகிறது”


இது போலத்தான் தமிழிசை என்றாலே தேவாரம் பாடுதல் என்று நினைத்துக் கொள்வது, அல்லது தமிழிசைப் பண்களின் பட்டியலை வழங்குவது, அல்லது அப்பண்களை இன்றைய ராகங்களோடு பொருத்தம் பார்த்து வழங்குவது என இப்போக்கு பல கோளாறுகளுக்கு வித்தாகிறது. சமஸ்கிருத இசைக்கு மாற்றாக ஒன்றைச் சொல்வதாக நினைத்து, அதன் மையச்சிக்கலான பழமைவாதத்தை அப்படியே தக்கவைத்துக் கொள்கிறது.


இக்குழப்பத்தின் முக்கிய காரணம் எது தமிழிசை என்ற கேள்வியில் இருக்கிறது. இது எப்போதுக்குமான கேள்விதான். எது செவ்விசை, எது கர்னாடக இசை எனும் கேள்வியைப் போன்றதே இதுவும்.


எது செவ்விசை என்ற கேள்விக்கு, நம் மனதில் தோன்றும் பதில்களை நினைத்துப் பார்த்தால் அவை பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பாணி, இடம், வெளித்தோற்றம் இவற்றை சுற்றியே அமைந்திருக்கும். ஒருமுறை கர்னாடக இசை பயிலச் சென்ற போது ஒருவர் வேஷ்டி அணிந்து வரச்சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. மாறாக செவ்விசை என்பது வேஷ்டியோ, சூட் அணிந்த வயலின்ஸ்டோ, அல்லது ஒரு குறிப்பிட்ட இசை பாணியோ, கலைஞர்களோ, அவர்களின் உடல்மொழிகளோ, ரசனைமுறைகளோ, சபைகளோ அல்ல.

மீண்டும் தருமராஜின் கட்டுரையிலிருந்து


“மொழியியலாளர்கள், மொழியின் வெளிப்புறத் தன்மைகளே ஒரு மொழி என்று சொல்கிறார்கள். மானிடவியலர்கள், மொழியைக் காப்பாற்றுவது, இன்னொரு வேடிக்கை. அவர்களுக்கு மொழி என்றால் பண்பாடு என்று அர்த்தம்.

அப்படியானால், ஒரு மொழியைப் பாதுகாப்பது என்றால் என்ன?

மொழியைப் பாதுகாப்பது என்பது, அந்த மொழியில் சேகரிக்கப்பட்டுள்ள அறிவுத் தொகுதியை பாதுகாப்பது மட்டுமே”


இதனை நேரடியாக நாம் செவ்விசைக்கு அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்…ஒரு பிரதேசத்தின் செவ்விசை என்பது அப்பிரதேசத்தின் இசையறிவின் தொகுப்பே ஆகும். தமிழிசை என்றால் அது தமிழில், தமிழ்ச்சூழலில் வழங்கும் இசையறிவின் தொகுப்பே ஆகும்.


ஒலி பற்றி, அதனைக் கலையனுபவமாக வழங்குவது பற்றிய அறிவும் சிந்தனையும் தான் ஒரு செவ்விசை இயக்கத்தின் அடிப்படையாக இருக்க முடியும். மற்றவை அதன் வெளிப்பாடுகள் தான். மேலும் ஒலியை செவியனுபவமாக வழங்குவது பற்றிய இன்றைய அறிவும், சிந்தனையும் நிரந்தரமானது அல்ல. அதுவும் கால மாற்றங்களை சந்திப்பது. ஆனால் சிந்தித்தல் மாறாதது. அது நாட்டுப்புற இசையாகவோ, கர்னாடக இசையாகவோ, திரையிசையாகவோ, மேற்கிசையாகவோ வேறு எந்த இசைவடிவாகவோ இருக்கலாம். இதனை உணர்வதும், இங்கே இசைகுறித்து சிந்திப்பதும், அதனைத் தொகுப்பதும், அச்சிந்தனைகளின் பயனாக இசை நிகழ்வதுமே தமிழிசை முன்னெடுப்பாக இருக்க முடியும்.


தருமராஜ் மொழியைக் காப்பது குறித்து சொல்வது பொருத்தமானதாகிறது.


“அந்த வகையில், அழிந்து கொண்டிருக்கும் பழங்குடி மொழிகளை மட்டுமல்ல, உயிரோடு இருப்பதாய் நம்பிக்கொண்டிருக்கிற செல்வாக்கான மொழிகளையும், சிந்திக்கும் மொழிகளாக பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கிறது.”


அவரது கட்டுரை தாய்மொழி பற்றியதான கட்டுரையாக இருந்தாலும், அதன் ஆதாரமான சிக்கலைப் பற்றிப் பேசுவதால், இதற்கிணையான மற்றொரு களத்தின் ஆணிவேருக்குள் செல்கிறது. அவரது பலகட்டுரைகளில் இப்படி ஏதாவது நடந்து விடுகிறது. இதன்மூலம் தமிழில் வெகுஅரிதாகக் கிடைக்கும் சிந்திப்பதற்கான கட்டமைப்புகளை (Frameworks) இவருடைய எழுத்து வழங்கிவிடுகிறது.


தமிழில் சிந்திப்பதற்கு ஏதுவாக, தமிழின் இலக்கியவாதிகள் பல பயங்கரமான பொதுமைப்படுத்தல்களை வழங்கியுள்ளார்கள். அதில் ஒன்று கல்விப்புலத்திலிருந்து வருபவர்கள் வறட்டு சிந்தனையாளர்கள் என்பது. கொஞ்சம் சிக்கலாகத் தெரிந்தால் அவர்கள் எழுத்தில் மொழி இல்லை, கலை நயம் இல்லை என்பது. (பகுத்தறிவு கலைக்கு உதவாது, இசை தெரிந்தவர்களுக்கு இசையே தெரியாது(!) என்பது போல வகைவகையாக இவர்கள் வழங்கியுள்ள முடிவுகளுக்கெல்லாம் அளவேயில்லை).


நேர்மாறாக கல்விப்புலத்திலிருந்து வரும் தருமராஜின் பேசுபொருள் மட்டுமல்லாது அவரது பேசுமுறையும் கூர்மையானது. அதன் காரணமும் அவர் பேசுபொருளிலிருந்து அதற்கான தேவையிலிருந்து பிறப்பதுதான் என்றே தோன்றுகிறது.


அவருடைய கட்டுரைகள் எப்பொழுதுமே எழுதப்படுவதை மீறிச் செயல்படுபவையாக, ஒரு polyphonic தன்மையைக் கொண்டவையாக விளங்குகின்றன. மேற்சொன்ன தமிழிசைக்கான பொருத்தம் ஒரு உதாரணம் என்றாலும் அவரே கட்டுரைகளில் வேறொரு கண்ணியை இணைகோடாக நகர்த்தியே செல்கிறார். அவருடைய ‘திராவிட காலத்தில் பிராமணர்களுக்கு சாபவிமோசனம் உண்டா‘ என்ற கட்டுரை ஒரு அருமையான உதாரணம். அவருடைய கருத்தொருமையினாலும் (consistency) , இருவேறு கட்டுரைகளில் தானாக இந்த இணைகோட்டுப் பதிவு நிகழ்வதும் நடக்கிறது.


மேலும் அவர் தனது எழுத்தில் காலத்தை பயன்படுத்துவது அலாதியானது. சரளமாக அவரால் கால நேர்க்கோடுகளை கலைத்துப் போட்டு மீளமுடிகிறது. மீண்டும் இது அவரது சிந்தனைமுறையினால் நிகழ்வதைக் குறிப்பிட வேண்டும். சங்ககாலத்திலிந்து நிகழும்காலம்வரை தமிழகத்தை அவரால் ஒரு காலத்தொடர்ச்சியில் காணமுடிவதாகத் தோன்றுகிறது. அது வெறுமனே இப்போது போலத்தான் முன்பொரு காலத்திலும் என்பது போல அல்ல. அதனால்தான் அவரால் 96 படத்தின் தோழர்குழுவைக் கொண்டு, சங்ககாலம் தொட்டு தமிழில் காதல் மொழி குழு மொழியாக இயங்குவதைச் சொல்ல முடிகிறது, கைசிக நாடகத்தில் தமிழின் சாதிய அரசியலை, அயோத்திதாசரின் பௌத்ததோடு இளையராஜாவின் இசையை, அயோத்திதாசரின் கனவோடு ஆபிரகாம பண்டிதரை… இதனை அவர் மொழியிலேயே சொல்வதானால் அவரால் தமிழ்ச்சமூகத்தை ‘ஆநின்று’ பார்க்க முடிகிறது.


ஆனால் இதனைத் தாண்டி ஆச்சர்யமளிக்கும் ஒன்று, அவரால் சில பதங்களை நமக்கு மறக்க முடியாததாக்கிவிட முடிவதைதான். போலச் செய்தலும் திரும்பச் செய்தலும், ராஜதந்திரியைக் கொல்வது எப்படி, காதுள்ள எல்லாருக்கும்… இவ்வாறு அவரது பலகட்டுரைகளின் சொற்சேர்க்கைகள், தலைப்புகள் நமக்கே தெரியாமல் மந்திரங்களாக ஒட்டிக்கொள்கின்றன. (ஒருவேளை மாணவர்களை பரீட்சைக்கு தயாரிக்கும் உத்தியிலிருந்து வந்ததா என்பது ஆசிரியருக்கே வெளிச்சம்). அதன் காரணமும் இவை வெற்று சொற்சேர்க்கைகளாக அல்லாமல் ஒரு கருத்துத்திரட்சியின் அடையாளமாக மாறிவிடுவதால்தான்.


இது போன்ற வெளிப்பாட்டு முறைகளும், கட்டுரைகளுக்குத் தோதான வடிவத் தேர்வுகளும், ஒரு அருமையான ஒலிநயத்தில் அமையும் அவரது வாக்கியங்களும் அவரது கட்டுரைகளை மீள்வாசிக்கத் தூண்டுபவை.


சமூகம், அரசியல், தலித்தியம், மொழி, இலக்கியம், கலை என பலதளங்களில் அவரின் எழுத்துக்கள் பேசுபொருளிலும், முறையிலும் தமிழில் சிந்திப்பதற்கான நம்பிக்கையையும், ஆசுவாசத்தையும், முக்கியமாக நிறைய கற்றுகொள்ளவும் அளிப்பவை. அதற்கு அவருக்கு நன்றிகள் பல.


அவரைத் தொடர்ந்து படித்ததில், அயோத்திதாசர் பற்றிய அவருடைய புதிய புத்தகம், அவரது நீண்ட கால ஆய்விலிருந்து வருவதாகத் தோன்றுகிறது. புதிய புத்தகத்தின் வெளியீட்டிற்கு அவருக்கு வாழுத்துக்கள்.

Comments


bottom of page