‘சோறு போட்டார்’ என்ற கதைகளைப் பொருட்படுத்தாமல் விஜய்காந்தின் திரைத்தோற்றத்தை மட்டுமே தீவிரமாக நேசிக்கும் ரசிகர்களும் இந்த உலகத்தில் உண்டு. ரஜினியும் கறுப்பு தான் என்றாலும், விஜய்காந்தின் கறுத்த நிறம் அவர்க்ளுக்கு நெருக்கமாக இருந்தது. வெறும் கறுப்பை விடவும் எண்ணெய் பூசியக் கறுப்பை நிறைய பேருக்குப் பிடிப்பதைப் போல அவர்களுக்கு விஜய்காந்தைப் பிடித்திருந்தது.
இந்த ரசிகர்களில் பெரும்பாலோர் குக்கிராமங்களில் இருந்தார்கள். இவர்களுள் விடலைகள் அதிகம். அவர்கள், விஜய்காந்த் வசனத்தை உச்சரிக்கும் பாணியை அடிக்கடி சிலாகிப்பார்கள். தேசப்பற்று, நீதி, நியாயம் என்றெல்லாம் ஜல்லி அடிக்காத வேளைகளில் விஜய்காந்தின் வசன உச்சரிப்பில் ஒரு குணட்டல் தானாகவே வந்து ஒட்டிக் கொள்ளும். அப்பொழுது அவருடைய உடல் பாவனைகளில் பெண்மை வெளிப்படும். இதை அவருடைய ரசிகர்கள் கைதட்டிக் கொண்டாடுகிறார்கள்.
தமிழர்களுக்கு பெண்மை மிளிரும் ஆண் கதாநாயகர்களை ஏனோ அதிகம் பிடித்திருந்தது. இப்படிச் சொன்னதும், நளினம் கூடிய நாயகர்கள் வரிசையில் வெளிறிய தோல் கொண்ட எம்ஜியாரையும் கமலஹாசனையுமே பலரும் சொல்வது உண்டு.
ஆனால், உண்மையில், நாயகர்களில் பெண்மை மிளிர வெளிப்பட்டவர்கள் வேறு மூவர். அவர்கள், பாக்கியராஜ், விஜய்காந்த், ராமராஜன். இவர்களின் திரைத்தோற்றம் கிராமப்புற ரசிகர்களிடம் ஏற்படுத்திய கொந்தளிப்பான உணர்ச்சியை இப்பொழுது வரை யாரும் தீவிரமாக யோசித்திருக்கவில்லை. திரைப்படத்தில் பாலியல் என்றதும், ‘போகப்பொருளாகப் பயன்படும் பெண்ணுடல்’ என்று பேசுவதிலிருந்து கொஞ்சம் முன்னேறி, இது போன்ற பெண்மை கலந்த ஆண் கதாபாத்திரங்கள் தமிழர்களுக்கு ஏற்படுத்தும் பாலியல் இச்சையையும் நாம் விவாதிக்க வேண்டும். பெண்மை கலந்த ஆண் நாயகர்கள் கொண்டாடப்படுவது ஒரு தமிழ் queer விவாதப்பொருள். இதற்கு மேல் இதை முகநூலில் விவாதிக முடியாது. விரிவாய் வேறு தளத்தில் பேசலாம்.
Comments