top of page

தண்டனைகளின் காலம்1


குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்து நான் அப்பொழுது ஆராய்ந்து கொண்டிருந்தேன். டெல்லியில் உள்ள மிகப் பிரபலமான பல்கலைக்கழகமொன்றில் இதைச் செய்வதற்கு என்னை அனுமதித்திருந்தார்கள். எனக்கு இருபத்தெட்டு இருபத்தொன்பது வயதிருக்கலாம்.


இந்தியாவில் என்றைக்குமே குற்றங்களுக்கும் தண்டனைகளுக்கும் குறைவில்லையென்பதால், நான் சுழன்று சுழன்று எனக்குத் தேவையான ஆதாரங்களைச் சேகரிப்பது என்பதே அப்பொழுது முக்கியமாய் இருந்தது. அடிப்படையில் நான் தமிழ்நாட்டின் தென்மூலையிலிருந்து வந்தவன் என்பதால் எனது ஆராய்ச்சிப் பகுதியென நான் தமிழ்நாட்டை மட்டுமே எடுத்துக் கொண்டேன்.


இதனால் சுமார் நான்காண்டு கால வனவாசத்திற்குப் பின் ஓர் அந்நிய மிருகமென நான் தமிழ்நாட்டில் திரிய வேண்டியிருந்தது. சொல்லப்போனால் தமிழகத்தின் புதிய முகமொன்றைக்கூட (என்னைப் பொருத்த அளவில்) என்னால் பார்க்க முடிந்தது.


சங்க இலக்கியங்கள் வழக்கம் போல் எல்லா ஆய்வாளர்களுக்கும் உதவுவதைப் போல் எனக்கும் ஏராளமான தண்டனை விவரணைகள் தந்து உதவின. கணைக்கால் இரும்பொறையோ வேறு யாரோ ஒரு மன்னன் (என்னால் இது போன்ற நபர்களின் பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்ள முடிவதில்லை. எனது ஆய்வுக் காலத்தில் இதிலெல்லாம் நான் அத்துப்படியாய் இருந்தேன் என்றாலும், பெயர்களை மட்டும் காலம் கவனமாய் முழுங்கிவிடுகிறது.) போரில் தோற்றுப்போனேனேயென மருகி, தனக்குத் தானே தண்டனை வழங்குவதாய் வடக்கிலிருந்து உயிர் விட்டிருந்தான்.


இன்னொரு சங்ககால மன்னன் சிறையில் அடைபட்டு, தாகத்திற்கு மூத்திரம் பெய்து தந்த எதிரிகளை நினைத்து, தற்கொலை செய்திருந்தான். பாண்டியன் நெடுஞ்செழியன் கதை இன்னும் மோசம். முத்தோ மாணிக்கமோ என்ற குழப்பத்தில் இதயம் வெடித்து இறந்திருந்தான். கூடவே அவனது பத்தினியும் ஏதோ கணவனுடன் உலவப் போவது போல் தன் இதயத்தை தானே வெடித்திறந்தாள். இவையெல்லாமே கேவலம், வருத்தம், தன்மானம் போன்றவை தாங்காமல் அவரவர் அவரவர்க்கோ அல்லது அதன் மூலம் பிறர்க்கோ தண்டனை தருவது போல் உயிர் விட்டிருந்த நிகழ்ச்சிகள்.


வரலாறு என எழுதப்பட்டிருக்கும் காலங்களில் இன்னும் அதிகமான, மேலும் கொடூரமான தண்டனைகள் கூட வழங்கப்பட்டுள்ளன. சைவர்கள் ஏதோ திருவிழாக் கொண்டாட்டம் போல் கூட்டம் கூட்டமாய் வைணவர்களை அள்ளி வந்து நீளமான குத்தீட்டிகளில் உட்கார வைத்து கழுவேத்தியிருக்கிறார்கள்.. இன்றைய சைவக் கோவில்களில் கழுவேத்தி முக்கு என்ற பெயரிலேயே சில நாற்சந்திகள் இருக்கின்றன. கழுவேற்றப்பட்டவர்களின் இரத்தமும் கதறலும் சைவக் கோவில்களைச் சுற்றி, சுற்றி அந்தக் காலங்களில் ஓடியிருக்கக்கூடும்.


அக்காலத்தில் தண்டனைகள் குறித்த நூலொன்றும் எழுதப்பட்டிருந்தது. தமிழில் செய்யப்பட்டதில்லை என்றாலும் பிராமணர்கள் வழி தமிழகத்திலும் இது செயல்பட்டு வந்திருக்கின்றது. மனுநீதி என்கிற இந்நூல் தண்ணீர் குடிப்பதிலிருந்து கள்ள உடலுறவு கொள்வது வரையில் இன்னின்ன குற்றங்களுக்கு இன்னின்ன தண்டனைகள் என்கிறது.2


சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு அதாவது 1994-ல் இப்படியான குற்றங்களையும் தண்டனைகளையும் தேடி அலைந்து கொண்டிருக்கையில், நான் நீதியின் பேரில் வெறி கொண்டலைவதாய் நண்பன் ...லா எனக்கு அடிக்கடிச் சொல்வான். ஆனால் உண்மையில் நான் வெறி பிடித்தலைந்தேனோ இல்லையோ, குற்றங்கள், அவற்றிற்கு வழங்கப்படும் தண்டனைகள், அவற்றிற்கான மனோபாவம் என்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது.


சிறு வயதிலிருந்தே, என்னையறியாமலேயே, தண்டனைகளின் ஒழுங்கைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமாயிருந்தேன். சிறு பிள்ளைகளாய் இருக்கையில் தேவாலயத்தில் அமர்ந்திருந்த நரைத்த பாதிரியிடம் பாவசங்கீர்த்தனமென்கிற பெயரில் எங்களின் குற்றங்களைச் சொல்லி தண்டனை பெற்றுக் கொள்வோம். இரண்டு, மூன்று முறைகளில் எனக்கு அதன் ஒழுங்கு அத்துப்படியாகி அதுமுதல் எனக்கு நானே பாவசங்கீர்த்தனம் வழங்கிக் கொண்டேன்.


திருட்டு என்றால் பத்து முறை பரலோக பிதாவை நோக்கி செபம் செய்ய வேண்டும். பொய்யென்றால், அது ஐந்து முறை போதும், கெட்ட நினைவுகள் வந்தது என்றால் பரலோக பிதா மட்டும் போதாது கூடவே அருள் நிறைந்த மரியை ஐந்து முறை செபம் செய்யவேண்டும்.


இதனை யாராலும் கூட மிக எளியதாய் பழகிக் கொள்ளமுடியும். இந்த இரகசியத்தை என் நண்பர்களுக்கெல்லாம் கூட சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர்கள் என்றுமே தங்களுக்குத் தாங்களே இப்படித் தண்டனை தருவதில் நம்பிக்கை வைத்திருக்கவில்லை.


இயேசுவின் மீது பக்தியான அப்பாவின் தண்டனை முறை வித்தியாசமானது. தன் வாழிடத்தை விட்டு எங்களின் வாழிடத்திற்குள் நுழைந்து விடும் சிறு எலியின் குற்றத்திற்கு அப்பா வழங்கும் தண்டனை, மரணம். வீட்டின் அமைதியை அது கலைப்பதாய் சொல்லி, அப்பா ஏகப்பட்ட அமளி துமளியுடன் எலிக்கு மரணம் வழங்குவார். இதை யெல்லாம் விடவும் தண்டனைகளின் பேரில் நான் வெறி கொண்டதன் காரணம் (வெறி கொண்டேன்’ என்பது உண்மைதான் போலும்!) எனது பதினான்காம் வயதில் நடந்தது.


என்னுடன் பிறந்த நான்கு பேரோடு சேர்த்து, நாங்கள் ஐந்து பேரும் பெரும் துன்பம் தரும் பிள்ளைகளாய் இருந்தோம். ஓயாது சண்டையிடுவதும், பொருட்களை உடைப்பதும் எங்களது அன்றாட வேலைகளாய் இருந்தன. அதிக நேரங்களை வெளியிலேயே என் அப்பா செலவழிப்பதால் எங்களைத் கவனித்துக் கொள்கிற முழுப் பொறுப்பும் எங்கள் அம்மாவின் தலையில் விழுந்திருந்தது. குறிப்பிட்ட தினத்தில் நாங்கள் ஐவரும், அம்மாவுமாய் சேர்ந்து ஒரு பெரிய கனவொன்றைக் கண்டோம், அம்மாவின் கருத்துப்படி இதுவொரு கெட்ட கனவு.


அந்தக் கனவு வழக்கம் போல் எங்கள் ஐவரின் சண்டையில் தொடங்கியது. என்ன காரணத்திற்காகச் சண்டை போட்டோம் என்பது நினைவில்லை. ஆனால் சண்டை ஆக்ரோஷமாய் நடந்து கொண்டிருந்தது. அன்றைய கனவில் நாங்கள் வழக்கத்தை விடவும் ‘அதிகமாகவே’ (அதிகமாகவே என்பது அம்மாவின் முடிவு) போய்விட நாங்கள் அதிர்ச்சியடையும் வகையில் அம்மா ஒரு காரியம் செய்தார்கள்.


கிணற்றிலிருந்து நீரிறைக்கப் பயன்படும் பெரிய வடக்கயிறொன்றை அவிழ்த்து, முதலில் வீட்டு உத்தரத்தில் கட்டினார்கள். பின்பு தொங்கிக் கொண்டிருந்த மறுமுனையை ஒரு சுருக்கு போல் செய்து, தன் தலையை அதில் மாட்டிக்கொண்டு ஏறி நின்று கொண்டிருந்த மரப்பலகையை உதைத்துவிட முயன்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது எங்களின் சண்டை உச்ச நிலையை அடைந்து கொண்டிருந்தது.


அம்மா செய்யும் காரியத்தைப் பார்த்த பின்பு தான், முதன் முறையாய், சாவு எங்களுக்குள் ஒளிந்து கொண்டிருப்பதுபோல் நாங்கள் ஐவரும் ஒன்றாய் உணர்ந்தோம். ஓடிப் போய் அம்மாவின் கால்களைப் பற்றிக் கொண்டு ‘வேண்டாம், வேண்டாம்’ என்று கதறினோம்.


அம்மாவோ பிடிவாதமாய், ‘முடியவே முடியாது, தன்னால் தாங்க முடியவில்லை, தன்னை நிம்மதியாய் சாகவாவது விடுமாறு’ எங்களிடம் அழுதபடியே கூறினார்கள். இனி நாங்கள் இப்படிச் செய்வதில்லை. நல்ல பிள்ளைகளாய் இருப்போமென்று என் அண்ணன் அம்மாவிற்குச் சொன்னான். அம்மாவோ கேட்பதாய் காணோம். காலைப் பிடித்துக் கொண்டிருந்த எங்களையும், நின்று கொண்டிருந்த மரப்பலகையையும் ஒருசேர உதைத்துவிட முயன்று கொண்டிருந்தார்கள்.


உடனே நாங்கள் எல்லோரும் தனித்தனியாய் இனி இது போல் சண்டை இடுவதில்லை என்று விளக்கிக் கூறி அம்மாவை இறங்கி வரும்படி கேட்டுக் கொண்டிருந்தோம். அம்மாவோ அழுத கண்களோடு, எங்களை நம்ப முடியாது என்று கூறி, வெளியிலேயே சுற்றித்திரியும் அப்பாவையும் இடையிடையே குற்றம் சொல்லியபடி, மீண்டும் அதிக பலத்தோடு இறந்து விடுவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.


அம்மாவின் கால் உதறல்கள் படிப்படியாக உக்கிரமடைந்து வருவதை அந்த நேரத்தில் என்னால் நன்றாகவே உணர முடிந்தது. எங்களின் பிடியிலிருந்து அம்மா அதலபாதாளமொன்றில் விழ இருப்பது போல் நாங்கள் உணர்ந்தோம். எங்களுடைய கதறலும் அம்மாவின் அழுகையுடன் கூடிய உதறலும் கணத்திற்கு கணம் அதிகரித்துக் கொண்டே இருந்தன. எங்களின் கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.


அண்ணன் தான் கடைசியில், எங்களை நம்பும்படிச் செய்ய நாங்கள் என்ன பண்ண வேண்டுமென்று அம்மாவைக் கேட்டான். அம்மா அப்பொழுது தான் இப்படிச் சொன்னார்கள்: 'குழந்தையேசு சொரூபத்தின் மீது எல்லோரும் சத்தியம் செய்யுங்கள். அப்பொழுதுதான் நான் இறங்குவேன்'.


எங்கள் ஐவருக்கும் இதைக் கேட்டு திகைப்பாக இருந்தாலும், அம்மா எங்களை ஏமாற்றிவிடக் கூடும், நாங்கள் குழந்தையேசு சொரூபம் பக்கம் நகர்ந்ததும் தன் காரியத்தை முடித்துக் கொள்ளக்கூடும் என்று பயந்தோம். எனவே ஒவ்வொருவராகச் சென்று சொரூபத்தின் மீது கை வைத்து சத்தியம் செய்தோம். ஒருவர் சத்தியம் செய்கையில் நால்வரும் அம்மாவின் கால்களைப் பத்திரமாய் பிடித்துக் கொண்டிருந்தோம். எல்லோரும் சத்தியம் செய்ததும் அம்மா கயிற்றை அவிழ்த்து கீழே இறங்கினார்கள். அதன் பின் நாங்கள் கனவிலிருந்து தனித்தனியே விழித்து எழுந்தோம்.


அந்தக் கனவிற்குப் பின் நாங்கள் எல்லோரும் ஒருவித நம்பிக்கையின்மையும், கலக்கமும், வெட்கமும் கொண்டு கொஞ்ச நாட்களுக்கு மெளனமாகவே சுற்றித்திரிந்தோம். நாளடைவில் என் சகோதரர்களும் சகோதரிகளும் ஏன் அம்மாவும் கூட அந்தக் கனவை ஒரு கெட்டகனவென்று சொல்லி மறந்து போனார்கள்.


ஆனால் விட்டின் நடு அறையில் எப்பொழுதும் பிரம்மாண்டமாய் நிற்கும் அந்தச் சொரூபம் என்னைக் காலமெல்லாம் கலக்கத்திலேயே வைத்திருந்தது. நான் அந்தக் கனவை இன்னும் மறக்கவில்லை என்பதைக் கண்டு கொண்ட அம்மா ஒரு நாள் என்னைக் கூட்டி வைத்து, கனவுகளை மறக்கடிக்கும் பச்சிலையொன்றை அரைத்து விழுங்கும்படிச் சொன்னார்கள். வழக்கமாய் சொன்னதைக் கேட்கும் அம்மாவின் பச்சிலைகள் இந்த விஷயத்தில் மட்டும் பலிக்கவேயில்லை. என்னையே காறி உமிழ்ந்து கொள்ளாத குறையாக அந்தக்கனவு எனக்குள் சொல்லப்பட்டிருந்தது. ஆக தண்டனைகள் குறித்து நான் புலம்பிக் கொண்டிருப்பது (இதுவும் எனது நண்பன் .....லா சொல்வது தான்) தற்செயலானது அல்ல என்றே நான் நினைக்கிறேன்.


எனது ஆராய்ச்சிக்கென்று தமிழகத்தில் அலைந்து கொண்டிருந்த பொழுது தான் ...குளம் என முடியும் ஒரு கிராமத்தில் நான் அவனைப் பார்த்தேன். 1994ம் வருடம் என்று ஞாபகம், சித்திரை மாதம் அக்கினி நட்சத்திரம் இன்னமும் ஆரம்பித்திருக்கவிலை. அக்கிராமத்தின் நடுவிலிருந்த ஊர் மந்தையில் தனது தண்டனைக்காக வேண்டி அவன் காத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு மரணம் தண்டனையாக வழங்கப்பட்டிருந்தது. அவன் கதையைத் தான் இங்கு நான் சொல்லப் போகிறேன்.3


நான் முதன் முதலில் அவனைப் பார்த்த பொழுது அந்த இடத்தில் சாவின் களை ஏற்கனவே நிரம்பியிருப்பது. அவன் கடந்த பத்து நாட்களாய் தனது தண்டனைக்காக அங்கே காத்துக் கொண்டிருப்பதாய் எனக்குச் சொன்னார்கள்.


அவனுடைய உறவினர்கள் என்று சொல்லப்பட்ட சிலர் சற்று எட்டிய தூரத்தில் ஒரு கட்டிடத்தின் சிதிலமடைந்த நிழலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நிழல் நகர்வதற்கேற்ப கட்டிடத்தின் அப்புறமும், இப்புறமும் மாறி மாறி அவர்கள் உட்கார வேண்டியதிருக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன்.


அவர்களில் ஒரு சிறு பெண் குழந்தையைத் தவிர மற்ற அனைவரும் பெரியவர்களாய் இருந்தனர். பாதிக்கும் மேல் பெண்கள். அப்பெண் குழந்தை அந்த மனிதனின் ஒரே பெண் என்று எனக்குச் சொன்னார்கள். தனக்கு வழங்கப் போகிற தண்டனையை குழந்தை பார்க்க வேண்டுமென்று அவன் விரும்பியதாலேயே அக்குழந்தையை அங்கே வைத்துக் கொண்டிருப்பதாகவும் மற்றபடி வழக்கமாய் சிறு குழந்தைகள் இதைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் எனக்குச் சொன்னார்கள்.


.......குளம் என்கிற அவ்வூரில் இவர்களின் குடியிருப்பு ஊரின் பிட்டத்தில் இருந்தது. கடந்த பத்து நாட்களாய் அம்மனிதனுக்கும் அவனுடைய உறவினர்களுக்கும் யாராவது உணவு கொண்டு வந்து கொண்டிருந்தனர். எல்லோருக்குமே பொதுவாய், அம்மனிதனுக்கான தண்டனையைச் சீக்கிரம் முடித்துவிட்டால் தேவலை என்பதுபோல் இருந்தது.


வழக்கமாய் தீர்ப்பாகிய இரண்டு மூன்று தினங்களுக்குள் முடிந்து போகிற இந்நிகழச்சி இந்த முறைதான் இழுபறியாய்க் கிடக்கிறது என்று அபிப்பிராயப்பட்டனர். அம்மனிதனின் மனைவி கூட அக்கூட்டத்தில் இருப்பதாய் எனக்குச் சொன்னார்கள். என்னால் முதல் நாளில் அப்பெண்ணைப் பார்க்க முடியவில்லை. ஆனால் மூன்றாவது தினம் பார்த்தேன். கற்களுக்காய குதறப்பட்ட குன்றைப் போலிருந்தது அப்பெண்ணின் முகம். துயரத்தையோ, துக்கத்தையோ எதையுமே அவள் வெளியிட விரும்பாதது போல் உட்கார்ந்திருந்தாள். அடிக்கடி தன் பெண் குழந்தையை இழுத்து மடியில் இருத்திக் கொண்டதிலிருந்து அவள் கொடும் வேதனையிலிருக்கிறாள் என்று மட்டும் புரிந்தது. இவர்களைத் தவிர அக்கிராமத்தின் பிற சனங்களும் அங்கே வருவதும் போவதுமாய் இருந்தனர். அவர்கள் சாதாரணமாய் இருப்பது போல காட்டிக் கொண்டாலும் அவர்களிடம் வேடிக்கைப் பார்க்கும் தன்மையானது மிதமிஞ்சித் தெரிந்தது.


எனக்கு இம்மனிதனைப் பற்றி முதலில் கூறியவர், பக்கத்து நகரத்திலுள்ள நண்பர் ஒருவர். தண்டனைகள் குறித்து ஆராய்ந்து கொண்டிருந்ததால் இயல்பாகவே நான் மனித உரிமைகள் குறித்து மிகுந்த அக்கறையுடன் இருக்கலானேன். மனித உரிமைகள் மீறப்படுவதன் மிக அதீத நிலை மரணம் தண்டனையாக வழங்கப்படுதல். எனவே மரண தண்டனையை அறவே ஒழித்துவிட வேண்டுமென நண்பர்கள் பலர் அந்நாட்களில் அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து வந்தோம். எனக்கு இம்மனிதனைப் பற்றிச் சொல்லியதும் அத்தகைய நண்பர்களில் ஒருவர்தான்.


அம்மனிதன் குறித்த வழக்கு .....வேலி எனும் நகரின் நீதி மன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது இக்குற்றத்திற்கு மரணதண்டனை நிச்சயம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. எனவே எனது நண்பர் வேறு சிலருடன் சேர்ந்து ஒரு பிரபலமான வழக்கறிஞரை அமர்த்தி மரண தண்டனையை எதிர்த்து வாதிடச் செய்தாராம். மிகவும் சிறப்பான காரியம் தான் என்றாலும், இம்மனிதனே கடைசியில் தனக்கு மரண தண்டனையை வழங்குங்கள் என்றும் அதையும் பொதுயிடத்தில் வழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டது வழக்கையே திசை திருப்பிவிட்டது. கடைசியில் எல்லாமே கை நழுவிப் போனது போலாயிற்று. நீங்கள் போய் அவனைச் சந்தியுங்கள் என்று சொல்லி அக்கிராமத்திற்கு என்னை அனுப்பி வைத்தார்.


நான் அவனிடம் சென்று பேச விரும்பினேன். ஒருவன் தனக்கு மரணத்தை வழங்கும்படி விரும்பிக் கேட்டுக்கொண்டதை விளங்கிக் கொள்ள விரும்பினேன். அதிலும் தன் மரணத்தை தன் சிறு குழந்தை பார்க்க வேண்டுமென்று சொல்லியிருந்தானென்றால் விஷயம் எவ்வளவு சிக்கலானது என்பதை என்னால் உணர முடிந்தது.


நான் முதலில் அவனிடம் சென்று பேச “உனக்கு வழங்கப்பட்ட சாவு இல்லை நான்” என்றே அறிமுகம் செய்துக் கொண்டேன்.


ஏனெனில் மரணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் அவன், அந்நியனான என்னை வெகு எளிதாய் ‘சாவு’ என தப்பார்த்தம் செய்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்று எனக்குத் தெரிந்திருந்தது. எனவே என்னை நான் இப்படியாக அறிமுகம் செய்வது தான் சரியென்றும் எனக்குப்பட்டது.


அவன் என்னை இப்படி எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் பார்த்தான் என்று தான் நினைக்கிறேன். குழப்பத்தில், நான் என்ன சொல்கிறேனென்று விளங்கவில்லை என்று கூறினான். நான் மறுபடியும் ரொம்பவும் தெளிவாய், அவனுக்கான சாவு நானில்லை என்று மறுபடியும் கூறினேன். அவன் சிறிது நேரம் என்னை வெறிக்கப் பார்த்துவிட்டு, “பெறவு யாருக்கான சாவு?”


“எல்லாருமே ஒவ்வொருவிதத்தில் யாருடைய சாவின் அடையாளமாகத்தானே இருக்கிறோம்” என்று சொன்னேன்.


“நீங்கவேணா அப்படியிருக்கலாம். ஆனா நாங்க யாருக்குச் சாவாக இருக்க முடியும்?”


என்னால் இதை எப்படி இவனுக்கு விளக்கிச் சொல்வதென்று தெரியவில்லை. வெளிப்படையான அடையாளங்கள் இல்லையென்பது உண்மைதான். “ஆனால் எல்லோருமே உணர்கிறோம் தானே?” என்று மட்டும் அவனிடம் சொன்னேன்.


இதைக் கேட்டு அவன் என்னைக் கேலியாய் ஒரு சிரிப்பு சிரித்தான். கொஞ்ச நேரம் தலையைக் குனிந்தபடி தரையையே பார்த்துக் கொண்டிருந்தான். தனக்குள் இன்னமும் சத்தமில்லாமல் அவன் சிரிப்பதாகவே எனக்குப்பட்டது.


அப்படியே இருந்தவன் திடீரென்று என்னிடம், “நெசம் தான். வாழ்க்கைனு ஒண்ணு இருந்தா, அதுக்கு அர்த்தம்னு ஏதும் இருந்தா, அது புரியும்னும் இருந்தா எல்லாமே நெசம்தான். நீங்க சொல்றாப்ல மத்தவன் சாவுக்கு சாச்சியா இருக்கது கூட புரியும் தான். ஆனா அர்த்தமே இல்லாத்திலிருந்து என்ன மயித்த புரியும்? ...தோ முப்பது வயசாவுது. இத்தன காலமும் புரிஞ்சது எதுக்குமே அர்த்தம் கெடையாதுங்கறது தான்”.


எனக்கு அவன் இப்படிப் பேசியது ஆச்சரியமாய் இருந்தது. அர்த்தமில்லாத வாழ்க்கை என்பது உண்டா என்று எனக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. “நிஜமாகவே அர்த்தமில்லை என்று நம்புகிறாயா?”


“இருந்துச்சு! சொல்லியிருக்காங்க, ஒரு காலத்துல அர்த்தமெல்லாம் இருந்துச்சு! ஆனா அப்போ நாங்க மட்டும் தான் இந்த மண்ண காத்திட்டிருந்தோம். என்னிக்கு அவுகெல்லாம் வந்தாகளோ அன்னிக்கே மண்ணு மட்டும் போவல, இருந்த அர்த்தமும் போயிருச்சு, எல்லாத்தயும் புடுங்கிட்டு பதிலுக்கு கையில் இந்த நாறப்பொழப்ப கொடுத்துட்டாவ'.


இதற்கு சொல்லக்கூடிய பதிலென்று எதையும் நான் வைத்திருக்கவில்லை. எங்கள் சந்திப்பு தவறாகத் தொடங்கி தவறாகவே முடியப் போகிறது என்று எனக்குப் பட்டது. ஆரம்பித்ததே சரியில்லை. இருவருமே மெளனமாய் இருந்தோம். நான் அவனிடமிருந்து விடைபெற்றுச் செல்லும் கணம் வந்துவிட்டது போல உணர்ந்தேன். அவனும் கூட அந்தக் கணத்தில், நான் இதோ எழுந்து போகப் போகிறேன் என்று நினைத்திருக்கலாம். அப்படியொரு மெளனம் எங்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தது.


ஆனால் இந்தச் சந்திப்பை இப்படித் தோல்வியில் முடித்து விட நான் விரும்பவில்லை. அவனுடன் பேசுவதை நான் விரும்பினேன். அதன் மூலம் அவனைப் பேச வைக்க விரும்பினேன். ஆனால் எல்லாமே பொய் போல் பொலபொலவென்று உதிர்ந்து கொண்டிருந்தது. அவனுடன் மேற்கொண்டு பேசுவதானால், அவன் என்னை நம்ப வேண்டும் என்று எனக்குப்பட்டது. அவன் இதுவரையில் என்னை நம்பவில்லை என்பதையும் நான் அப்பொழுது உணர்ந்தேன். நம்பும்படி நான் பேசியிருக்கவுமில்லை. மிக மோசமாக பேச்சைத் தொடங்கியதற்காய் என்னையே நான் அந்த நேரம் திட்டிக் கொண்டேன். வேறு வழியேயில்லாமல் கடைசியில் அவனிடம் நேரடியாகவே, 'நீ என்னை நம்பவில்லை போல் தெரிகிறது' என்று சொல்லி விட்டேன்.


அவன் அதற்கு லேசாய் சிரித்தான், “செத்துப்போவறதுக்கா இங்கன ஒக்கார்ந்துருக்கேன். சாகப் போறவனுக்கு யார நம்பி என்னாவப் போவுது?”


“ஆனால், இந்தச் சாவு நீயே வேண்டிக் கொண்டதுதானே. இதைத் தவிர்த்திருக்க முடியுமென்று எனது நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் திறமையான வழக்கறிஞரைக் கூட நியமித்திருந்தார்கள்.”


அவன் இதைக் கேட்டதும், என்னில் ஆர்வம் கொண்டவன் போல் தெரிந்தான். “அவங்கள்லாம் உங்களச் சேர்ந்தவுகளா?” என்றும் என்னிடம் கேட்டான்.


நான் அவனிடம், “ஆமாம் அவர்கள் என் நண்பர்கள் தான்” என்று சொன்னேன்.


அவன் மறுபடியும் மெளனத்தில் ஆழ்ந்தது போல் காணப்பட்டான். எதையோ யோசிக்கிறான் என்று எனக்குப் புரிந்தது. திடீரென்று ஏதோ தோன்றியவன் போல் என்புறம் திரும்பி, “நீங்க என் கதையக் கேக்கமுடியுமா?" என்றான். "அவுங்க என்னிய தேடிட்டு வரலன்னா என் கதைய நான் முழுசா ஒங்களுக்குச் சொல்ல முடியும். ஒங்களுக்கு அவசரமில்லியே?"


எனக்கென்ன அவசரம்? நான் இதைத்தான் விரும்பினேன். அவன் தானாகச் சொல்லவேண்டுமென்று விரும்பினேன். அவன், அவன் பற்றி சொல்லவேண்டு மென்று விரும்பினேன். எனக்கு நேரம் பற்றிக் கவலையில்லையென்றும், அவன் சொல்வதைக் கேட்க விரும்பவே செய்வேனென்றும் நான் அவனிடம் கூறினேன்.


பதிலுக்கு அவன் நன்றியுடன் என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு, ‘அவுங்க வந்துராம இருக்கட்டும்’ என்று சொல்லி தன் கதையை எனக்குச் சொல்லலானான்.


4


அவன் பெயர் பரமசிவனாய் இருந்தது. அவனை எல்லோரும் சிவன் என்று கூப்பிட்டார்கள்... குளம் எனும் கிராமத்தில்தான் அவன் பிறந்தது. அவன் எந்த வருடம் பிறந்தான் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், அவன் குடியிருப்பில் பத்து குடிசைகள் ஒரு நாள் இரவில் தீப்பிடித்துக் கொண்டு, நான்கு பேர் பெண்களும் குழந்தைகளுமாய் இறந்து போனவருடத்தில் அவன் பிறந்ததாய் அவனுக்குச் சொல்லப்பட்டிருந்தது.அவனுக்கு நான்கு வயதாயிருக்கையில் பெரும் பஞ்சமொன்று வந்தது. தொடர்ந்து மூன்று வருடங்களாக மழையே பெய்திருக்கவில்லை. பிழைப்புக்காக வேண்டி அவனது குடும்பம் அவனது நாலாவது வயதில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தேயிலைக்காடுகளில், தேயிலை பறிக்கும் கூலிகளாக மாறி மலைகளில் குடியேறிற்று. இவையெல்லாமே அவன் வளர்ந்த பின்பு பிறரைக் கேட்டுத் தெரிந்த கொண்டவைகள். அவனுக்கு விபரம் தெரிந்த ஞாபகம் தேயிலைக் காடுகளில் தான் துவங்குகிறது.


தேயிலைத் தோட்டங்களில் ‘லைன் வீடுகள்’ என்று சொல்லப்பட்ட வீடுகளில் ஒன்று அவர்களுடைய வீடாய் இருந்தது. அவனது அப்பாவும் அம்மாவும் தேயிலைக் கொழுந்து பறிப்பதற்காகச் சென்று விடுகையில் இவன் அவனொத்த சிறுவர்களுடன் காடுகளில் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தான்.


தேயிலைக் கூலிகளின் குழந்தைகளுக்கென்று ஒரு சிறு பள்ளிக்கூடம் அங்கே இருந்தது. இருக்கிற அத்தனை குழந்தைகளும் சுமார் நான்கு வயது முதல் பதினைந்து வயது வரையில் ஒரே வகுப்பில் படித்தனர்.


ஒரு குண்டு குண்டான மலையாளப் பெரியம்மா தான் டீச்சர். இவன் அந்தப் பள்ளிக் கூடத்தில் படித்த ஐந்து வருடங்களும் அந்தப் பெரியம்மா எப்படியாவது இவர்களுக்கு ஆனா ஆவன்னா சொல்லித் தந்து விடுவது எனும் சபதம் மேற்கொண்டு செயல்பட்டு வந்தார்கள்.


இடையிடையே எல்லோருமாய் சேர்ந்து கிறிஸ்தவப் பாடல்கள் பாடுவார்கள். மதியம் சோறு போட்டதும் பள்ளிக்கூடம் முடிந்துவிடும். மதிய நேரங்களில் தான் விறகு பொறுக்கச் செல்வது. தனது பத்தாவது வயதில் இவன் ஏலக்காய் தோட்டங்களில் திருடும்படி இவனது நண்பர்கள் பார்த்துக் கொண்டனர். அந்த மலைக் காட்டில் அவன் வாழ்ந்த மீத ஐந்து வருடங்களையும் நல்ல திருடனாகவே கழித்தான். ஒரேயொரு முறை மட்டும் சிறு தவறொன்றினால் எக்குத்தப்பாக தேயிலைத் தோட்டத்து வெள்ளைக்காரத்துரையிடம் மாட்டியிருக்கிறான். வெள்ளைக்காரத்துரை இவனைக் கன்னத்தில் ஓங்கியரைந்து இங்கிலீஷில் ஏதோ திட்டிவிட்டு (கெட்ட வார்த்தையாகத்தான் இருக்க வேண்டும்) காறி மூஞ்சில் துப்பினான். பின் என்ன நினைத்தானோ வேகவேகமாகப் போய்விட்டான்.


இவனுக்கு பதினைந்து வயதிருக்கையில் கிராமத்திலிருந்து இவர்களைப் பார்க்க இவன் மாமா வந்திருந்தார். ஊரில் மழை பெய்கிறதாகவும் விவசாயம் ஆரம்பித்து விட்டதென்றும் இனி தைரியமாய் ஊருக்கு வரலாம் என்று சொன்னதும் இவன் குடும்பம் பழையபடி கிராமத்திற்கு வந்தது.


ஊரில் அப்படியொன்றும் சொல்லிக் கொள்கிறார் போல் விவசாயம் நடக்கவில்லை. அந்த வருடத்து இறுதியில் அவனது அப்பா நாம் மறுபடியும் தேயிலைக் காடுகளுக்கே போய்விடலாம் என்றார். அவனது அம்மாவோ தன்னால் செத்தாலும் அங்கு வர முடியாதென்றும் அந்தக் குளிரிலும் அட்டைக் கடியிலும் கிடந்து உழல்வதற்கு இங்கேயே சாவேன் என்றாள். இதனால் கிராமத்திலேயே இருப்பது என்பது முடிவாயிற்று.


ஆனால் உண்மையில் அப்பாவுக்கு தேயிலைத் தோட்டத்தில் ஒரு மலையாளப் பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் அதனால் அம்மா வரமாட்டேன் என்றாள் என்றும் இவன் ரொம்ப காலம் சென்று தெரிந்து கொண்டான்.


மறுவருடம் பெய்வதாகச் சொல்லியிருந்த மழையும் பெய்யவில்லை. கிணறுகளில் தண்ணீர் மறுபடியும் கீழிறங்கிவிட்டது. குளங்களில் கரம்பை தோண்டினார்கள். கேரளத்துக்காரன் மேற்குத் தொடர்ச்சி மலையின் தண்ணீரை அவன் பக்கமாய் திருப்பிக் கொண்டதால் தான் குளங்கள் பெருகவில்லையென நகரத்திலிருந்து வந்து போகும் தோழர்கள் சிலர் கூறினர். சிவகாசிக்காரனின் தீப்பெட்டித் தொழிலுக்காக காமராசர் கூட கேரளக்காரன் இப்படிச் செய்ததை சரியென்று ஒப்புக் கொண்டார் என்பதாகவும் சொன்னார்கள்.


அந்த வருட இறுதியில் உள்ளூர் நாயக்கர் ஒருவர் வீட்டில் இருந்து மூட்டை நெல்லும் நாற்பது பவுன் நகையும் கொள்ளை போயிற்று. அதற்காக இவனது குடியிருப்புக்கு வந்த காவலர்கள் சிகப்பு துண்டுபோட்ட சில தோழர்களை கரும்புக் காட்டில் வைத்து இழுத்துப்போனார்கள். அப்படி இழுத்துப் போகப்பட்டவர்களில் இவனது மாமாவும் ஒருவர்.


காவலர்கள் கொண்டு போன தோழர்கள் யாரும் திரும்ப வரவில்லை. காவல் துறையினர் கொன்று விட்டதாய் சிலர் பேசிக்கொண்டனர். காவல்துறையோ அவர்களை எப்பொழுதோ திருப்பி அனுப்பிவிட்டோம் என்றது. அதன்பின் நகரத்துத் தோழர்கள் யாரும் அக்கிராமத்தின் பக்கம் வருவதில்லை.


இதற்கு மறுவருடம் முதல் சிவகாசி தீப்பெட்டி ஆபிஸிலிருந்து தினசரி நாலு முறை பஸ்ஸொன்று வந்து போகத் துவங்கிற்று. இவனது குடியிருப்பிலிருந்த அத்தனை சிறு குழந்தைகளுக்கும் வேலை தருவதாகச் சொல்லி அவர்களாய் அழைத்துச் சென்றனர். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் கணிசமாக சாப்பாட்டிற்கான பணம் வந்தது. பெரியவர்கள் விவசாயம் செத்துப் போய் கல் குவாரியில் பாறைகளை உடைக்கையில் குழந்தைகள் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து தீப்பெட்டி ஆபிஸிற்கு சென்றனர்.


அந்த வருட மத்தியில் சாணி பொறுக்குவதற்காக போன இவனது தங்கை அழுகையோடு ஓடி வந்தாள். அவள் பூப்படைந்து மிகச்சரியாக ஒரு வருடம் ஆகியிருந்தது, அழுதுகொண்டே ‘சம்சாரி வீட்ல பேண்ட் சட்டை போட்டிருந்தவன்....’ என்று மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது. இவன் முதலில் செய்தது வீட்டுக்குள் ஓடிப் போய் தேயிலைக் காடுகளில் விறகு வெட்டும் அரிவாளை எடுத்தது தான்.


அரிவாளுடன் வெளியே ஓடியவனை அம்மா வாசலில் மறித்து நின்று தடுத்தாள். அவன் வெட்டுவதானால் தன்னை முதலில் வெட்டட்டும் என்றாள். “உடன் பொறந்தது தான் காணாமப் போச்சு. வயித்ல வந்ததாது தங்கட்டும்டா. நீ ஒருத்தனாவது உயிரோட இரு. நீயும் காணாமப் போயிராதடா செவனு” என்றழுதாள்.


அப்பா இவனது தங்கையை அழாமல் அடக்கி அடுத்த வருடமே மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைத்தார். இவனுக்கானால் ஆத்தாமை தாளாமல் கொஞ்ச நாள் வீட்டிற்கே வராமல் திரிந்தான். சம்சாரி வீட்டு பேண்ட் சட்டை போட்ட பையனை அவனால் ஒரு தரம் பார்க்க முடிந்தது. நகரத்தில் உயர் படிப்பு படிக்கிறதாய் சொன்னார்கள்.


கொஞ்ச நாளில் இவன் குடியிருப்பைச் சேர்ந்த ஒரு பெரியவர் உழவுக்கான கூலி கேட்டு ஊருக்குள் போகையில், ஊரில் திருடனென்று சொல்லி கட்டி வைத்து அடித்தார்கள். இருட்டும் வேளையில் குளக்கரையில் வீசப்பட்ட அப்பெரியவர் யாரும் பார்க்காமல் இறந்து போனார்.


இது இவர்களை உசுப்பேத்திவிட, இவனும் இன்னும் சிலரும் காவல் நிலையம் சென்று புகார் தந்தனர். மறுபடியும் நகரத்துத் தோழர்களை சந்தித்து இதுகுறித்து பேசினர். முடிவாக அப்பெரியவர் திருடும் எண்ணத்தில் தான் ஊருக்குள் வந்தாரென்பது நிரூபணமாயிற்று. இவன் இந்த விஷயத்தில் தலைகால் புரியாமல் அலைவது குறித்து வருத்தப் பட்ட அவனது அப்பாவும் அம்மாவும் ஒரு நல்ல நாளில், காணாமல் போன மாமனின் மகளை இவனுக்குக் கட்டி வைத்தனர்.


அவன் மாமன் மகளின் பெயர் காளியம்மாளாக இருந்தது. இவனுக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு கலக்கம் இருந்ததென்றால் அது காளியம்மாள் தான். காளியம்மாள் தினசரி கூலிக்காய் சென்று வந்து கொண்டிருந்தாள். கடைசி வரையில் அவளாக அவனிடம் எதுவுமே பேசியிருக்கவில்லை. ஒரு இறுகிய மெளனம் போலவே வளைய வந்து கொண்டிருந்தாள்.


தகப்பனை காவல் துறையினர் கரும்புக்காட்டில் வைத்து இழுத்துச் செல்கையில் அவளுக்குப் பத்து வயது. காவலர்கள் கொண்டு சென்ற தகப்பன் மாயமாய் மறைந்து போனான் என்று அறிந்த பொழுது அவளுக்கு அதற்காக என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்திருக்கவில்லை. அடுத்த இரண்டு வருடங்களில் அவளது தாயும் இறந்து போன பொழுதும் கூட தான் யாருமற்ற அனாதையானோம் என்கிற உணர்வின்றி, ஏதோ காலம் காலமாய் இதையெல்லாம் பார்த்துச் சலித்தவள் போல்தான் நின்று கொண்டிருந்தாள்.


சுற்றியிருந்த பெண்களெல்லாம் பிணத்தை நடுவில் போட்டு அழுதபடி, அவளையும் அழுது விடும்படி கேட்டு அவள் தலையில் மடேர், மடேரென்று அடித்த பொழுது கூட அவள் கல் போலத்தான் நின்றாள். சிவனைக் கட்டிக் கொள்கிறாயா என்று அவளிடம் கேட்கப்பட்ட பொழுது, அவளுக்கு தலையாட்டுவதற்கோ மறுப்பதற்கோ எவ்வித காரணமும் இருக்கவில்லை.


கல்யாணமான கொஞ்ச நாட்களிலேயே இவன் அவளுக்கென்று தனியான ஆசாபாசங்கள் எதுவுமிருக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டான். ஏனிப்படி இவள் இருக்க வேண்டும் என்பது தான் அவனுக்குக் கடைசி வரையில் விளங்கவே இல்லை. ஒரு நாள் இதற்கெல்லாம் என்ன அர்த்தம்’ என்று அவளிடமே கேட்டபொழுது தான் அவள் அவனுக்கு இப்படிப் பதில் சொன்னாள்:


என்னிய மட்டும் ஆளுக்காளு கேக்கீக்ளே, எங்க அப்பா காணாமல் போனதுக்கு அர்த்தம் உண்டுமா? பன்னெண்டு வயசில யாருமேயில்லாம நின்னேனே அதுக்கு அர்த்தம் உண்டுமா? இல்ல, ஒங்கள எப்படா தீக்கலாம்னு கங்கனம் கட்டிட்டுத் திரியிறாகளே அதுக்குத்தான் அர்த்தம் உண்டுமா? நம்ம பாப்பாவ சம்சாரி வூட்டுப் பையன் தொட்டதுக்கு நீங்க என்ன அர்த்தம் சொல்வீக? ஊர்காட்ல பஞ்சம்னதும் இந்த பள்ளக்குடி மட்டும் தேயிலக் காட்டுக்கு ஓடுச்சே ஏன்? எந்நேரமும் செத்துப் போவாருனு தெரிஞ்சும் ஒமக்கும் வாக்கப்பட்டேனே ஏன்? கல்லுய்யா, கல்லு! வானத்தில இருந்து பொத்துனு விழுந்துட்ட கல்லு. குண்டி தொடைக்கிறவன் குண்டி தொடச்சிக்கலாம். உக்கார நெனைக்கிறவன் உக்காந்துக்கலாம். இப்ப கேளும், கல்லு என்னைக்காச்சும் அழுவுமா இல்ல சிரிக்கத்தான் சிரிக்குமா?


இந்த இடத்தில் சிவன் அவனுடைய கதையைச் சொல்வதை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்து கேட்டான்: “இப்ப சொல்லுங்க, ஏதாச்சும் அர்த்தமிருக்க முடியுமா? இது எனக்குக்கூட ஒறைக்கல. அதோ, அந்தச் சுவத்தோரம் உக்காந்துருக்கே அந்தக் காளியம்மா சொல்லுச்சு.”


நான் வெட்கத்தில் தலை குனிந்து உட்கார்ந்திருந்தேன். என் முகத்தில் காறித் துப்பினாற் போலிருந்தது. நான் அது நாள் வரையில் எதனை அறிவு என்று நினைத்து வழிபட்டுக் கொண்டிருந்தேனோ அதனை இவன் சர்வ சாதாரணமாய் எட்டி உதைத்துக் கொண்டிருந்தான்.


“என் மேல அவுங்க சொன்ன குத்தம் என்ன தெரியுமா? பெரிய, பெரிய நீதிபதியெல்லாம் பேசுறான். படிச்சவன்னு சொல்லிட்டு வந்த அத்தனபேரும் அப்படி நீ செஞ்சியானு கேக்கிறான். பாதிபேர் ‘அவன் அப்படி செஞ்சான், நான் என் கண்ணால பாத்தேங்குறான்’ என் மேல என்ன வழக்கு தெரியுமா?


அவுக கோவில் இருக்ற பக்கமா நான் சட்டை போட்டுக்கிட்டு நடந்து போனேனாம். அதனால் அந்த கோயிலும், சாமியும், ஏன் சுத்துபட்டே அழுவிப் போச்சாம். அதைத் தட்டிக் கேட்டதுக்கு கொன்னுடுவேன்னு மிரட்டுனனாம். நீதிமன்றத்ல கேக்குறான்,


அவுங்க சார்பா வாதாடுன வக்கீல் கேக்குறான், நீ போனியா, அதனால அந்தயெடம் அழுவிப்போச்சா, இது உண்மைதானா? இதுக்கு சாட்சியா மூணு பேரு. மூணு பேரும் நீதிபதிகிட்ட சொல்றான், நான் அந்த எடத்துக்கு போனதும் பீ நாத்தாம் நாறுச்சாம், எம்மேல பொண வாட வீசுச்சாம்.


மூணாவது ஆளு சொல்றான், ‘அந்த இடமே கன்னங்கரேல்னு இருண்டு போச்சு ஜட்ஜீங்களே!’.


இதெல்லாம் பத்தாதுனு உள்ளூர் தாசில்தாரு ‘ஆமா சாமி, நானும் போயி எடத்தப் பாத்தேன். இவுக சொல்றதெல்லாம் வாஸ்தவம்தான்’ னு நீதிபதி கிட்ட பேப்பர்ல எழுதிக் குடுக்கிறான். கடைசியில நீதிபதியும் என்னைப் பார்த்து என்ன கேட்டான் தெரியுமா?


‘இப்படியெல்லாம் நடந்ததா? நீ போனது உண்மையா? நெசம்தானா?’ – எனக்கு அந்த நேரம்தான் ‘அடக் கூறுகெட்ட கழுதைகளானு' வெப்ராளாம் தாங்க முடியல. உடனேதான் நீதிபதிகிட்ட “ஐயா, ஜட்ஐய்யா, நான் தொடைச்சி போட்டகல்லு. நீங்களும் வேண்ணா ஒங்க பங்குக்கு குண்டிய தொடச்சிப் போடுங்க. இதுல கல்லுக்கிட்ட போயி, நான் என் குண்டிய தொடைக்கவா வேண்டாமானு கேக்குறீகளேனு சொன்னேன்.


அந்த நீதிபதி வெளிநாடெல்லாம் போயி எக்கச்சக்கமா படிச்சவராம். நான் இப்டி சொன்னதும், ஏதோ குண்டின்னா என்னன்னே தெரியாத மாதிரி திரு திருனு முழிக்கிறாரு. அப்புறம் நடந்தது தான் தெரிஞ்சுறுக்குமே. இப்பவும் நான் ஒங்கள அதே தான் கேக்குறேன். நாங்க யாருக்காச்சும் சாவோட சாட்சியமா இருக்க முடியுமா?


சிவன் இப்படி கேட்பதற்கு பதிலாக என் முகத்தில் காறித் துப்பியிருந்தால் நான் இன்னமும் சமாதானமாய் இருந்திருப்பேன் போல் பட்டது. நிச்சயமாய் நான் தப்பிதமாய் சொல்லிவிட்டதை உணர்ந்தேன். அதை அவனிடமே சொல்லவும் செய்தேன். அவன் அப்படித்தான் என்பது போல் தலையை மட்டும் ஆட்டினான். கொஞ்ச நேரம் போல் நாங்கள் மறந்திருந்த சாவின் வாடை மறுபடியும் அங்கே வீசத்துவங்கிற்று.


“எனக்கு இன்னமும் சில விஷயங்கள் புரியவில்லை” என்று நான் அவனிடம் கூறினேன். நிஜமும் அதுதான். அவன் ஏன் தனக்கு மரணதண்டனை வேண்டுமென்றான் என்றும் தன் குழந்தை அதைப் பார்க்க வேண்டும் என விரும்பியதையும் நான் மேலும் விளங்கிக் கொள்ள விரும்பினேன்.


இவன் இப்பொழுது என் மீது சலிப்புற்றவன் போலிருந்தான். “என்ன வேணும் உங்களுக்கு? எதைத் தேடி இப்படி அலையிறீங்க?' என்று என்னைக் கேலியாய்க் கேட்டான்.


நான் அவனுடைய கேலியைக் கொஞ்சமும் மதிக்காமல் “நீ ஏன் என்னைக் கொன்று விடுங்கள் என்று நீதிபதியிடம் கேட்டாய்?” என்றேன். உனக்கு மரணதண்டனை வழங்கப்படுவது என்பது வெகு நிச்சயமாய் இருந்தது. அப்படியிருந்தும், நியே வலியப் போய் என்னை கொன்றுவிடுங்கள் என்று சொன்னது ஏன்?


இதற்கு அவன் கொஞ்சம் கூடத் தயக்கமின்றி 'ஒங்களோட நண்பர்கள் தான்' என்றான். நான் பதறிப்போனேன். அவர்கள் அவனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற விரும்பியவர்கள். ஆனால், அவர்களைத் தான் அவன் காரணம் என்கிறான்.


அவுக எல்லாருக்கும் என்னத் தப்பிக்க வச்சிரனும்னு ஆசை. மொதல்ல நான் கூட இத பெருசா எடுத்துக்கல. ஆனா ஒரு சமயத்துல எனக்கே பயமாப் போச்சி. எங்கே நீங்க சொல்றதக் கேட்டு நீதிபதி கூட என்னை விட்டுருவானோனு பயந்தேன். ஒங்க ஆட்களுகெல்லாம் நான் மரணத்திலிருந்து தப்பிச்சுட்டா போதும்னு இருக்கு.


பெரிய வக்கிலு கூட வச்சிருந்தாக அவுரு எனக்கோசரம் நீதிபதிகிட்ட கால்ல விழாத குறையா கெஞ்சுறாரு. அப்பத்தான் எனக்கு ச்சீய்னுபோச்சு. அப்பத்தான் எனக்குப்பட்டுது – ஒங்களுக்கும் எங்களுக்கும் ஒத்துக்காதுனு. நீங்க வேற நாங்க வேறனு.


இப்பவும் அதையே தான் சொன்னேன். அப்பவும் அதையே தான் சொன்னேன். நான் குத்தம் பண்ணேன்னு சொல்றேல்ல, என்னிய கொன்னுரு, ஆனா ஒண்ணு என்னிய என் சொக்காரு முன்னால கொல்லணும், இன்னியும் நாங்க காணாமப் போய்ட்டே இருக்க முடியாது. கொல்லனுமா கொல்லு! ஆனா அத எங்காளுக முன்னாடி செய்யி, அவ்வளவ் தான்” என்று படபடவென்று பேசினான்.


“ஆனால் அவர்கள் உன் மீது சொல்லும் குற்றம் இப்பொழுது பழைய குற்றமல்ல தெரியுமா? நீ அவர்களின் பெண்களை கேலி செய்ததால் தான் உன்னைக் கொல்லப் போவதாய் சொல்கிறார்கள்'.


இதைக் கேட்டதும் அவன் தன் மேல் துண்டை விலக்கி தன் வயிற்றை எனக்குக் காட்டினான். “கா வயித்து சோத்துக்கு அல்லாடவே எங்களுக்கு நேரமில்ல சாமி. இதுல ஊர்ப் பொம்பளைகளை எங்க போயி கை நீட்ட. பொட்டப் புள்ளகள பூட்டி பூட்டி வக்கிறவன் தான் பொம்பளக்கி அலைவான். நாங்க எங்க புள்ளகளை பூட்டி வக்கிறதில்ல, பூட்டி வைக்கிறதெல்லாம் அவுக பழக்கம்'.


“எப்படியும் அவுங்க சொல்ற காரணம் தான் எழுத்துல வரும். நீ சொல்றது இல்ல. இன்னிக்கு மட்டுமில்ல இன்னும் வருசங்கள் கழிஞ்சும் எழுனதுதான் உண்மைனு பேசுவாங்க.”


“எதுல எழுதுவாக? பத்திரிகைல எழுதுவாகளா? இல்ல பொத்தகத்ல எழுதுவாகளா? நீங்க எப்படி வாயில சொல்றத நம்புறதில்லியோ அதே மாதிரி நாங்க எழுத்துலவுள்ளத நம்புறதில்ல. எங்களுக்கு சொல்தான் முக்கியம். எழுத்து குப்பை.”


அவனுடைய இந்த பதில் என்னை மறுபடியும் ஆழம் தெரியாத அதல பாதாளத்திற்குள் தள்ளிவிட்டிருந்தது. தொடக்கத்திலிருந்தே அவனுடைய ஒவ்வொரு சொல்லும் என்னை எனக்கே மகாமட்டமாய் காட்டிக் கொண்டிருந்தது என்பதை நான் உணர்ந்திருந்தேன்.


நீதிகளின் பேரில் வெறி கொண்டலைந்து கொண்டிருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாய் எதையோ நெருங்கிக் கொண்டிருப்பது போல் எனக்குப் பட்டது. இன்னும் சில சொற்களில் நான் தேடித் கொண்டிருந்த எதையோ அடையப் போகிறேன் என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்.


அவனோ எங்களது சந்திப்பு எப்போதோ முடிந்துவிட்டது போல் அங்கு உட்கார்ந்திருந்தான். என்னால் அவனிடம் மீண்டும் இப்படிக் கேட்பதை தடுக்க முடியாமல், “நீ என்னை மன்னிக்க வேண்டும். உன்னை நான் எரிச்சலூட்டுகிறேன் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் எனக்கு வேறு வழியிருக்கவில்லை. என்னிடம் இன்னுமொரு கேள்வி இருக்கிறது. அதற்கு பதில் தெரிந்துவிட்டால் என் குழப்பம் தெளிந்து விடும் என்று நம்புகிறேன். இந்தக் கேள்வியை வேறு யாரிடமும் கேட்க முடியுமென்று எனக்கு தெரியவில்லை. நீ மட்டுமே பதில் சொல்ல முடியுமென்று நம்புகிறேன். நீ கொல்லப்படுவதை உன் குழந்தை ஏன் பார்க்க வேண்டும்? அச்சிறு குழந்தைக்கு என்ன புரியுமென்று நீ நினைக்கிறாய்?”


இந்தக் கேள்வியில்தான் அவன் முதன் முதலாய் என்னைப் பார்த்து திடுக்குற்றான். அது வரையில் அவன் முகத்தில் என் குறித்து நிரம்பியிருந்த சலிப்பு விலகி, கொடூர வேதனையொன்று மெல்லப் பரவியது. அவன் கைகள் ஒருமுறை நடுங்கியதை நான் கண்டேன். அவன் கண்களில் பளபளவென நீர் வடிந்தது. கொஞ்ச நேரம் போல் தூரத்தில் நின்றிருந்த தன் குழந்தையையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.


பின் என் புறம் திரும்பி கமறலான குரலில் எனக்கு இப்படிச் சொன்னான்: “நான் என் வாழ்க்கையில் செய்யப் போற மொத குத்தம் அது தான். எந்தக் தகப்பனாது நான் சாவறதப் பாருனு தன் கொழந்தைக்கு சொல்வானா? அப்படிச் சொல்லத்தான் மனசு வருமா? நான் செய்றேன், செய்யப்போறேன். எம்புள்ள என் கழுத்துல அருவா எறங்குறத பார்க்கப்போவுது. எனக்குத் தெரியும், இது மா பாவம்னு தெரியும். இதுக்கு கொழந்தய கொன்னு போடலாம்னு தெரியும். ஆனா எனக்கு வேற வழி தெரியலயே.... எம்புள்ள காளியம்மயாட்டம் கல்லு போல மாறிறக் கூடாதுய்யா. எம் புள்ள பேசனும். அதோட அப்பன் காணமப் போவல, எல்லாருமா சேர்ந்து கொன்னு போட்டாகனு அதுக்குப் புரியனும். காளியம்ம மட்டும் எங்க மாமன் செத்ததப் பார்த்திருந்தா இப்படி பாறையாட்டம் நிப்பாளா. அய்யய்யோ அய்யானு... கூப்பாடாவது போட்ருப்பா. எம்புள்ள கூப்பாடு போடனும், ஒலகத்துக்கே கேக்குறாப்புல கதறனும். ஆனா இது கொடுமை. பாவம். பெரிய குத்தம். எனக்குத் தெரியுது... எம்புள்ளய கதற வச்சிட்டு நான் போப்போறேன்னு புரியுது... ஆனா எனக்கு வேற வழி தெரியலியே...... பள்ளு பறையால்லா பொறந்து தொலச்சிட்டோம்'.


அவன் அழுதுகொண்டிருந்தான். தலையைக் குனிந்து சத்தமாய் அழுது கொண்டிருந்தான். பெரிய பெரிய கேவல்கள் அவனிடமிருந்து கிளம்பின. நான் இடிந்து போய் உட்கார்ந்திருந்தேன். அவனுடைய வெற்று முதுகில் என் கைகளால் அவனைத் தடவித்தருவது தவிர வேறொன்றும் உபயோகமாய் எனக்கு செய்யத் தெரியவில்லை. விம்மலும் கேவலுமாய் இருந்தவனை சமாதானப்படுத்துவதற்கு சரியான சொற்களை அந்த நேரத்தில் நான் அறிந்திருக்கவில்லை. இப்படியாக பதினோராவது நாளும் கடந்து போயிற்று.


அதற்குப் பின் வந்த நாட்களில் எனக்கு அவனுடன் பேசுவதற்கோ கேட்பதற்கே எதுவுமிருக்கவில்லை. ஆனால் அங்கேயே நானும் மேற்கொண்டு மூன்று நாட்கள் வரை அவனது உறவினர்களுடன் உட்கார்ந்திருந்தேன்.


மூன்று நாட்களும் எதுவுமே நடைபெறவில்லை. அவனுக்கான தண்டனையை வழங்குவதில் ஏனிந்த தாமதமென எங்களில் யாருக்குமே விளங்கவில்லை. அதற்கடுத்த நாட்களில் எனக்கு அங்கு போய் உட்கார்ந்திருப்பதில் பயமும். மனம் மண்டிய கசப்பும் ஏற்பட பக்கத்திலிருந்த நகரத்து அறையில் முடங்கிக் கிடந்தேன்.

அதற்கடுத்த இரண்டாம் நாள், மிகச் சரியாக சித்திரை மாதம் 6ம் நாள் பகல் இரண்டு மணி போல், ஊருக்குள்ளிருந்து வந்த நான்கு பேர் அவனை அரிவாள் கொண்டு சரமாரியாய் வெட்டிக் கொன்றனர்,


5


அதற்கடுத்து எல்லாமே வழக்கம் போல நடைபெற்றன. இவன் வெட்டுண்டதைப் பார்த்த இவன் உறவினர்கள் மேற்கொண்டு அங்கு நிற்க பயந்து ஊரின் எதிர் திசை பார்த்து ஓடி ஒளிந்தனர். இவன் குடியிருப்பிலிருந்த பாதி குடும்பங்கள் உயிருக்குப் பயந்து போனயிடம் தெரியவில்லை.


பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இவன் கொல்லப்பட்டது இடம் பெற்றது. இரு சமுதாயத்தினருக்கிடையிலான பகையென்றும், பெண்களை மானபங்கப் படுத்தியதால் விவகாரம் முற்றியதென்றும் விவரிக்கப்பட்டிருந்தது. ஊரில் சிறப்புக் காவல் படையினர் குவிக்கப்பட்டனர். இறந்த சிவனின் மனைவி காளியம்மாளுக்கு முதலமைச்சர் பத்தாயிரம் ரூபாய் வழங்குவார் என்று சொல்லப்பட்டது. தண்டனை வழங்கிய நான்கு பேர் மீதும் கொலைக்குற்றம் சாட்டி காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.


அந்த நான்கு பேரும் பத்து நாட்களுக்குப் பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். உள்ளுர் காவல் நிலைய காவலர்கள் தங்கள் பணியை சரியே செய்யவில்லையென்று சொல்லி தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.


எண்ணிக்கையிலடங்கா தலித் விடுதலை இயக்கங்கள் இக்கொலையில் நீதி வழங்கப்பட வேண்டுமென்று கேட்டு அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தின. எதிர்கட்சிகள் ஆளுங்கட்சியை பதிவியை விட்டு விலகுமாறு வேண்டின. இந்த அமளிகளெல்லாம் அடங்கி நாடு அமைதி நிலைக்கு திரும்புவதற்கு மூன்று மாதங்களாயின. அதன் பின் எல்லாமே எல்லோருக்கும் மறந்து போயிற்று. ......குளம் சலனமின்றி அமைதியாய் இருப்பதாய் எழுதி வைத்துக் கொண்டார்கள்.

28 views1 comment

1 Comment


Guest
Sep 20, 2023

ஞானி நடத்திய நிகழில் வெளியான கதை தானே?


அரவிந்தன்

Like
bottom of page