top of page

சீலியின் சரீரம், தலித் இலக்கியமா?



சீலியின் சரீரம்’ வாசித்த பலரும் அது தலித் சிறுகதையா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் தொலைபேசி மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் சொன்ன பதில்களை இங்கே தொகுத்துத் தர முடியுமா என்று பார்க்கிறேன்.


முதலில், தலித் இலக்கியம் என்ற வகைமை மீது எனக்கு நம்பிக்கை இல்லை.


நான் பலமுறை எழுதியிருப்பதைப் போல, தலித் இலக்கியம் என்ற வகைப்பாடு, எந்தவொரு புதிய கோணத்தையும் உங்களுக்கு வழங்குவதில்லை. அது, இலக்கியப் பிரதியை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை என்றே நான் நினைக்கிறேன். வேண்டுமானால், அது தலித் எழுத்தாளர்களை வேறொரு தளத்திற்கு இட்டுச் செல்கிறது என்று சொல்லலாம்.


பிரதிகளை சமூகச் சொத்தாகப் பாவிக்கும் பாரம்பரிய பழக்க வழக்க அநீதிக்கு எதிராக தலித் இலக்கியம் எழுதப்படுகிறது. பாரம்பரிய அநீதிக்கு எதிரான எந்தவொரு செயலையும் ‘பாரம்பரிய நீதி’ என்றே நீங்கள் மதிப்பிட முடியும். அந்த வகையில், காலங்காலமாய் சிலருக்கு மட்டுமே சொந்தப் பிரதிகள் இருக்கின்றன என்றால், அது எங்களுக்கும் வேண்டும் என்று தலித்துகள் தங்களுக்காக உருவாக்கிக் கொண்ட பிரதிகள் இவை.


தலித் இலக்கியம் என்பது பாரம்பரிய நீதி, என்று சொல்லும்போது, உங்களை அறியாமலேயே நீங்கள் ‘பாரம்பரியத்தை’ ஏற்றுக் கொண்டு விடுகிறீர்கள். எந்தவொரு தலித் செயல்பாடும் மரபு, பாரம்பரியம் போன்ற கட்டுப்பெட்டித் தனங்களை தன்னுள்ளே கொண்டிருப்பதன் காரணமும் இது தான். //‘தலித்’ என்றால், சாதி ஒழிய வேண்டும் என்று நினைப்பவர்களின் சாதி!// என்று சொல்வதில் ஒரு முரண் இருப்பது விளங்குகிறதா? இதைத்தான் நான் பாரம்பரிய நீதி என்று சொல்ல விரும்புகிறேன்.


நவீன இலக்கியம், பாரம்பரியத்தைக் கொன்று விடவே விரும்புகிறது. நீதி முதற்கொண்ட எல்லா வகையான பாரம்பரியத்தையும்.


தலித் இலக்கியப் பிரதிகளுக்குள் உங்களால் ஒரு இரைச்சலைக் கேட்க முடியும். அந்த இரைச்சலை விடுதலைக்கான முழக்கம் என்று அரசியலாளர்கள் விளக்குகின்றனர். ஆனால், நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரையில் அது வெளிப்படுவதே விடுதலைக்கான முழக்கமாகத்தான். ஏனெனில், அது பிறக்கும்போதே பாரம்பரியத்தைக் கொன்றுவிட்டுத் தான் பிறக்கிறது. எதிரியை வீழ்த்திய பின்பும், நீங்கள் விடுதலைக்கான முழக்கத்தை இடுகிறீர்கள் என்றால், அது இரைச்சலாக மட்டுமே பார்க்கப்படும். தலித் இலக்கியத்தின் விடுதலை முழக்கம் இரைச்சலாகப் பார்க்கப்படுவது

இதனால்தான்.


தலித் இலக்கியத்தின் ஆரம்பகாலக் குரல், விமர்சகனின் குரல். ஏற்கனவே எழுதப்பட்ட பிரதிகளில் தொனிக்கும், எதிர் தலித் மனோநிலையை வெளிப்படுத்திய குரல். கா.நா.சு., சி. சு. செல்லப்பா, புதுமைப்பித்தன், சுந்தரராமசாமியின் பிரதிகளில் ஒலிக்கும் மேட்டிமையின் குரலை வெளிப்படுத்துவதே இதன் நோக்கம்.


இப்படி ஆரம்பிக்கப்பட்ட தலித் இலக்கியத்திற்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன – ஏற்கனவே எழுதப்பட்ட மேட்டிமைப் பிரதிகளின் தலித் பக்கத்தை எழுதிப் பார்ப்பது, ஒன்று. ஒரு வேளை அப்படிச் செய்திருந்தால், புளியமரத்தின் கதைக்கு ஒரு தலித் வெர்சனை யாராவது எழுதியிருக்க முடியும். தோட்டியின் மகனுக்கு இன்னொன்று. நூறு நாற்காலிகளுக்கு வேறொன்று.


இரண்டாவது வாய்ப்பு, தனித்துவமான தலித் மேட்டிமைக் குரலைக் கொண்ட பிரதிகளை எழுதுவது. துரதிர்ஷ்டவசமாக தமிழில் இந்த இரண்டாவது வகையைத் தான் எல்லோருமே பின்பற்றினர். என் குழந்தை. எனக்கே எனக்கான குழந்தை. தலித் குழந்தை!


இதை ஆரம்பித்து வைத்தது, பாமாவின் கருக்கு என்ற நாவல். அதன் பின், இமையத்தின் கோவேறு கழுதைகள். கருக்கும், கழுதைகளும் உருவாக்கிய இரைச்சலைத்தான் பிற அனைத்து தலித் பிரதிகளும் வரிந்து கொள்ள ஆரம்பித்தன. கொஞ்சம் கொஞ்சமாக, தலித்துகளின் வாழ்க்கையை எழுதுவதற்கான கட்டுப்பெட்டித்தனங்கள் கெட்டிப்படத் தொடங்கின.


சீலியின் சரீரத்தில் தலித் இலக்கிய இரைச்சலை உங்களால் கேட்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், அது, கருக்கில் உருவாக்கப்பட்ட சட்டகத்திற்கு எதிரான அழகியலை வெளிப்படுத்தும் சிறுகதை. அதை நீங்கள் ஒரு பிரகடனமாக வாசிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள், அந்தப் பிரதியிலிருந்து எதை வருவிக்க முனைந்தாலும், அதற்கு எதிரான சான்றுகளையும் அது கொண்டிருக்கிறது. இதனால், அச்சிறுகதையை புத்திபூர்வமாய் அணுக முனைகிற வாசகர், அதற்குள்ளேயே சிக்கிக் கொள்வது அதன் திட்டம்.


பிரதிகளில் கேட்கும் இரைச்சலுக்குப் பன்னெடுங்காலமாக நம்மிடம் உதாரணங்கள் உண்டு. இரைச்சல் இல்லாத புராணங்கள் இல்லை. ஆனால், ‘புராண இரைச்சல்கள்’ ஆரவாரம் என்றே அழைக்கப்படுகின்றன. நவீனக் கலைஞன் புராணக்கதைகளை திரும்பச் சொல்லத் தொடங்கும் போது, இந்த ஆரவாரத்தையே முதலில் தவிர்க்கிறான். அதன் பின், அவ்வாரவாரத்தினால் அமுக்கப்பட்ட பிற பேச்சுகள் மேலெழுந்து வர உதவி செய்கிறான். நவீனத்தின் வேலை, ஆரவாரம் உள்ளிட்ட இரைச்சல்களைத் தவிர்ப்பது என்பதே பாலபாடம்.


புராணத்தின் ஆரவாரத்தை ஆன்மீகமாக மாற்றிய விதத்தை நீங்கள் கம்பனிடம் பார்க்க முடியும். கம்பன் காலத்து ‘நவீனத்துவம்’ அந்த மட்டே என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இருபதாம் நூற்றாண்டில், மகாபாரதத்தை மூலப்பொருளாகப் பயன்படுத்திய பீட்டர் ஃப்ரூக், நிலக்காட்சிகளின் வழியே அப்புராணத்தின் ஆரவாரத்தை மட்டுப்படுத்த முனைந்தது ஒரு வெற்றிகரமான பரிசோதனை. அதே போல, கிரிஷ் கர்னாட், நாட்டுப்புறப் பழங்கதைகளை நாடகமாக்கிய போது (ஹயவதனா), அவற்றின் இரைச்சலையே முதலில் கொன்றழிக்கிறார். ஆனால், வெண்முரசும் சரி, கல்கி, சாண்டில்யன் போன்றோரின் சரித்திர புதினங்களும் சரி, அந்த ஆரவாரத்தையே தங்களின் மூலதனமாகக் கொள்ள ஆரம்பிக்கின்றன.


இலக்கியப் பிரதிகளில் ஏன் இரைச்சலோ ஆரவாரமோ தவிர்க்கப்பட வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். எல்லா இலக்கியப் பிரதிகளும் கவித்துவத் தன்னிலைகளை உருவாக்கக் கூடியவை. இந்தத் தன்னிலைகளே, பிரதியின் பன்முக வாசிப்பை சாத்தியப்படுத்துகின்றன அல்லது அழிக்கின்றன. ஒரு வகையில், இதுவே இலக்கியப் பிரதிகளின் சுயம் என்றும் சொல்லலாம். தலித் இலக்கியங்கள் இந்த சுயத்தை என்றைக்குமே கோருவதில்லை. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தன்னிலைகளை அவை பெருவிருப்புடன் வரிந்து கொள்கின்றன. முன் சொல்லப்பட்ட எந்தத் தன்னிலையும் இரைச்சலே என்பது தான் எனது வாதம்.


சீலியின் சரீரம், அப்படியான எந்த முன் சொல்லப்பட்ட தன்னிலைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை என்பதைத் தேர்ந்த வாசகரால் உணர்ந்து கொள்ள முடியும்.









Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page