top of page

சீலியின் சரீரம் (சிறுகதை)





பாவமன்னிப்புக் கூண்டின் ‘பாதிரியார் இருக்கையில்’ சங்கோஜத்துடன் உட்கார்ந்திருந்தார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அலெக்ஸ் மாதாபிள்ளை. தங்கச் சிலுவை பொறித்த மஞ்சள் நிற வஸ்திரப்பட்டி அவர் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. கூண்டுக்கு வெளியே, பாவமன்னிப்பு கேட்கிறவர்களின் இடத்தில், பாதிரியார் முழங்காலிட்டு அமர்ந்திருந்தார். இதை யார் பார்த்தலும் நிச்சயம் அதிர்ச்சி அடைவார்கள். நல்லவேளையாக, அந்த நேரத்தில் இறைமக்களில் யாரும் கோவிலுக்குள் இல்லை. இனிமேலும் வந்து விடாதபடிக்கு எல்லாக் கதவுகளும் உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்தன.


‘இது வேண்டாமே ஃபாதர்’. கொஞ்ச நேரமாக இதேயேதான் சொல்லிக் கொண்டிருக்கிறார் மாதாபிள்ளை.


முன்னாள் குத்துச்சண்டை வீரரைப் போல் தோற்றமளித்த அருட்பணியாளர் பாக்கியராஜ் அவர் சொல்கிற எதையும் கேட்கிற மனநிலையில் இல்லை. தன் பாவத்தை யாரிடமாவது சொல்லிவிட்டால் போதும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.


‘நான் பாவியாய் இருக்கிறேன், சார். அறிக்கையிடாத என் பாவம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று கொண்டிருக்கிறது’.


கூண்டுக்குள் மாதாபிள்ளை நிஜமாகவே நெளிந்து கொண்டிருந்தார். பட்டு வஸ்திரத்தின் கனத்தைத் தாங்க முடியாதவர் போல் அவர் உடல் கூன் விழுந்து போயிருந்தது. பாவசங்கீர்த்தனத்தின் போது, கடவுளின் பிரதிநிதியாக பாதிரிமார் மட்டுமே அணியும் மிக மெல்லிய வஸ்திரம் அது. அருட்தந்தையின் கட்டாயத்தின் பேரிலேயே அதை அணிந்திருந்தார்.


‘என் பாவங்களுக்கு செவிமடுத்து, இயேசுவின் பெயரால் எனக்கு நீங்கள் மன்னிப்பு வழங்க வேண்டும், சார்’. பாக்கியராஜின் குரல் இந்த முறை தழுதழுத்தது. கொஞ்சம் விட்டால் உடைந்து அழுவார் போல் இருந்தது.


அந்த நேரம், அலெக்ஸ் மாதாபிள்ளைக்கு எங்கிருந்து அந்தக் குருட்டு தைரியம் வந்தது என்று தெரியவில்லை. ஆஜானுபாகுவான மனிதன் அழுவதாவது என்று அவருக்குத் தோன்றியிருக்கலாம். ஏதோ முடிவு செய்தவர் போல பாவமன்னிப்புக் கூண்டுக்குள் நிமிர்ந்து உட்கார்ந்தார். பட்டு வஸ்திரத்தை மேலிருந்து கீழாக நீவி விட்டுக் கொண்டார். ஒரு முறை நன்றாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டார். பின், பாதிரியார்களைப் போலவே முகத்தை இறுக்கிக் கொண்டு,‘பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே… உங்கள் பாவங்களை அறிவுயுங்கள், ஃபாதர்’ என்றார்.

மாதாபிள்ளையின் மாற்றத்தைக் கண்டு அருட்தந்தைக்கு அதிர்ச்சிதான். இவ்வளவு சீக்கிரம் அவர் சம்மதிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், அதைக் காட்டிக் கொள்வதற்கான நேரம் இதுவல்ல என்று அவருக்குத் தெரியும்.


பாவத்தை அறிக்கையிட பாதிரியார் தயாரானார். வழக்கமாய், பிரசங்கத்தின் போது செய்வதைப் போலவே, ஒரு கணம் அமைதி காத்தார்; செருமினார்; தலையை நிமிர்த்தி சுற்றுப்புறத்தை அளந்தார்; பின், கணீரென்ற குரலில் ராகமிட்டு பேச ஆரம்பித்தார். ’நான் அயலானின் மனைவியை இச்சித்தேன், ஆண்டவனே! அதனால் பாவியாய் இருக்கிறேன்!’

மாதாபிள்ளை கூண்டுக்குள் இருந்தபடியே, வலது கையால் பாதிரியாரின் திசையை நோக்கி

காற்றில் சிலுவை வரைந்தார். ‘மேற்கொண்டு சொல்லுங்க’ என்று அர்த்தம்.


*


‘இந்தப் பங்கிற்கு வந்து சேர்ந்த முதல் நாள். நான் அவளைப் பார்த்தேன், இயேசுவே! (அந்த நாட்களை மாதாபிள்ளைக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. மூன்று நான்கு வருடங்களாகப் பங்குத்தந்தை யாருமின்றி ஊர் தவித்துக் கொண்டிருந்த போது, அதிசயமாய் வந்தவர் பாக்கியராஜ். வேறு யாரும் இந்த ஊருக்கு வர சம்மதிக்கவில்லை என்பது ஒரு காரணம். ஊரில் அத்தனை பேரும் தலித் கிறிஸ்தவர்கள். இதற்கு முன்னிருந்த பாதிரியார் பேச்சுவாக்கில் சாதிப் பெயரைச் சொல்லி திட்டிவிட்டதால் ஊரிலிருந்து விரட்டப்பட்டிருந்தார். அதனால் இந்த ஊருக்குப் பங்குத்தந்தையாக வர எல்லோருமே பயந்தனர். அப்படியொரு இக்கட்டான சூழலில் துணிந்து வந்தவர் இவர். ஏழூர் பிள்ளைமார்.)


அதுவொரு மத்தியான வேளை. அவளை நான் பார்த்தேன். மிகச் சின்ன உருவம். என் கவனத்தை ஈர்க்கும் எதுவும் அவளிடம் இல்லை. ஆனால், அவளை நான் அடிக்கடி பார்க்க முடிந்தது. பங்குத்தந்தை அறையிலிருந்த பெரிய ஜன்னல் வழியே பார்த்தால், வாத மரத்தடியில் நிற்பாள். திருப்பலியின் போது, முதல் வரிசையில் உட்கார்ந்திருப்பாள். மாலை நேர நடைப்பயிற்சியின்போது நிச்சயமாய் ஏதாவதொரு வேலையாக எதிரே வருவாள். பங்கு மக்களில் யார் வீட்டிற்கு ஜெபிக்கப் போனாலும் அவளை அவ்வீட்டின் அருகே பார்க்க முடியும். கோவிலை சுத்தம் செய்ய ஆட்கள் வந்தால் கூட, அவர்களோடு அவளும் இருப்பாள். நான் அவளை உன்னிப்பாய் கவனிக்க ஆரம்பித்தேன்.


யார் இந்தப் பெண்? என்று சின்னப்பனிடம் கேட்டேன். (சின்னப்பன், கோவில்பிள்ளையாக வேலை பார்க்கிறார். பங்குத்தந்தையின் வீடு, கோவில் இரண்டையும் பராமரிப்பது அவரது வேலை. அருமையான சமையல்காரர். வெள்ளைச்சட்டையும் வேட்டியும்தான் நிரந்தர உடை. எல்லா பாதிரியார்களுக்கும் அவர்தான் வலது கை. இது ஊரில் எல்லோருக்குமே தெரியும்.)

‘என் சம்சாரம், ஃபாதர்’ என்றான் சின்னப்பன். (சின்னப்பனின் சம்சாரம் பெயர், ஜெயசீலி. நாகலாபுரத்திலிருந்து வாக்கப்பட்டு வந்த பெண். திருமணமாகி நான்கைந்து வருடங்கள் இருக்கும். ஒரு கைக்குழந்தை இருக்கிறது.)


நான் போகிற இடத்திலெல்லாம் அவள் எப்படி இருந்தாள் என்பது எனக்கு உடனடியாக விளங்கிவிட்டது. அவள் உண்மையில் சின்னப்பனைத்தான் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தாள். சின்னப்பன் பெரும்பாலும் என்னோடே இருப்பதால், என் கண்களில் அடிக்கடி தென்பட்டிருக்கிறாள். அதன் பின், சின்னப்பனும் சீலியும் கண் ஜாடை செய்து கொள்வதையும், அர்த்தபூர்வமாய் சிரித்துக் கொள்வதையும் நான் பலமுறை பார்த்திருக்கிறேன். சில ஜோடிகளைப் பார்த்தால் நமக்குள் ஒரு இனம்புரியாத அமைதி ஏற்படுமே, அதை அவர்களிடம் நான் உணர்ந்திருக்கிறேன். என் சந்தேகம் அன்றே தீர்ந்துவிட்டது. ஆனால், எல்லாம் இப்படியே போய்க்கொண்டிருக்கவில்லை.


கொஞ்ச நாட்களிலேயே சீலி, என்னையே பார்ப்பதாய் எனக்கு மறுபடியும் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது. அவள் என்னை நெருங்கி வர முயல்வதாகவும், வந்து ஏதோ சொல்ல விரும்புவதாகவும் எனக்குப்பட்டது. முக்கியமாய் சின்னப்பன் என்னருகே இல்லாத தருணங்களை அவள் உருவாக்க விரும்புவதாகத் தோன்றியது. இது எனக்குப் பயத்தையே தந்தது. இது ஒரு பெரிய சதித்திட்டமாக இருக்கலாம் என்று நினைத்தேன். பெண் விவகாரத்தில் சிக்க வைத்து என்னை அசிங்கப்படுத்த திட்டமிடுகிறார்கள்! (பாதிரியார்கள் பாலியல் புகாரில் சிக்கி அசிங்கப்படுவது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்திருப்பது உண்மை. சிலர் விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறார்கள். வேறு சிலர் கட்டி வைத்து உதைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், சபையிலிருந்தும் துரத்தப்பட்டிருக்கிறார்கள். பாதிரியார்களின் பெண் சகவாசமும், அவர்கள் மேற்கொள்ளும் ஆடம்பர வாழ்க்கையும் மக்களால் தொடர்ந்து வெறுக்கப்படுவது பாதிரியார்களுக்கே நன்றாகத் தெரியும்.)


சீலி, தலித் கிறிஸ்தவ அமைப்புகளின் சதிகாரியாக இருக்க வேண்டும் என்றே நான் சந்தேகப்பட்டேன். இதனால் அவளை நான் கூடுதல் எச்சரிக்கையுடன் கவனிக்க ஆரம்பித்தேன். இந்தச்சதியில் சின்னப்பனுக்கும் பங்கிருக்கும் என்பதால், அவனையும் நான் சந்தேகப்பட ஆரம்பித்தேன். இப்பங்கிலிருந்து என்னை விரட்டி அடிப்பதற்கான திட்டம் என்று நான் பூரணமாக நம்பினேன். இந்த ஊருக்கு வருவதற்கு முன் பேராயர் முதற்கொண்டு பலரும் இது குறித்து எச்சரித்து இருந்தார்கள். நான் சுதாரிப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டேன். (‘தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம்’ என்ற பெயரில் அவ்வூர் இளைஞர்கள் இணைந்து செயல்படுவது உண்மை. அரசாலும் சபையாலும் ஒரே நேரத்தில் ஏமாற்றப்படுகிறோம் என்ற கோபம் அவர்களிடம் உண்டு. அரசு தங்களைக் கைவிட்டதற்கு கிறிஸ்தவமே காரணம் என்று அவர்கள் தீவிரமாக நம்பினார்கள். அதனால் இயல்பாகவே பாதிரியார்களை இவ்வூர்க்காரர்கள் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், அதற்காக இது போன்றெல்லாம் சதித்திட்டம் தீட்டுவார்கள் என்று மாதாபிள்ளை நம்பவில்லை. மேலும், அவருக்குத் தெரியாமல் அந்த இளைஞர்கள் எதையும் செய்வதில்லை.)


நான் விலகி விலகிப் போனாலும், சீலி என்னை விடுவதாய் இல்லை. ஒவ்வொரு முறை நான் அவளை உதாசீனப்படுத்தும் பொழுதும் அவள் முகம் குன்றிப்போகிறது. ஆனால் மறுநாள், எதுவுமே நடக்காதது போல மீண்டும் அங்குமிங்கும் நடந்துகொண்டிருப்பாள். ஆட்களோடு ஆட்களாக தூரத்தில் நின்று கொண்டிருப்பாள். அப்படி நிற்கிற ஒவ்வொரு முறையும் அவள் என்னருகே தொட்டுவிடும் தூரத்தில் இருப்பது போலவே எனக்குத் தோன்றும். பிரேமைதான். சில நாட்கள் அவள் புடவையின் நுனி என் மேல் உரசிக் கொண்டிருப்பதாக உணர்ந்து பதறியிருக்கிறேன். இது என் உள்ளுணர்வின் கோளாறு. புத்தியை மீறிய ஏதோ ஒன்று அவளை நோக்கி என்னைத் தள்ளுகிறது என்று மட்டும் விளங்கியது. ஆனால் அது என்ன என்று தெரியவில்லை.


இதிலிருந்து நான் எப்படியாவது தப்பியாக வேண்டும் என்று எனக்குள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேன். அதற்கான உபாயங்களை யோசிக்க ஆரம்பித்தேன். அதிலொன்றுதான் நினைவுகளைச் சேகரிப்பது. வரலாற்றின் மீது எனக்கு இயல்பாகவே பெருவிருப்பம் இருந்தது. யாருக்குத்தான் பழைய கதைகளைப் பேசப் பிடிக்காது. இந்த வட்டாரத்தில் கிறிஸ்தவம் பரவிய வரலாறைத் தொகுக்கப் போகிறேன் என்று எனக்கு நானே சொல்லி கொண்டேன். உங்கள் அத்தனை பேரையும் அதில் ஈடுபடுத்தியதும் அதனால்தான். அந்த காரியம் ஒரு சுழலைப் போல் என்னை விழுங்கிவிட வேண்டும் என்று நான் விரும்பினேன். நிகழ்காலச் சதியிலிருந்து தப்பிக்க வரலாற்றைவிட வேறு உருப்படியான வழி இருப்பதாகத் தெரியவில்லை.


இந்த உத்தி பயனளித்தது. உங்களுக்கே நன்றாகத் தெரியும். நான் அந்த நாட்களில் பைத்தியம் போல இருந்தேன். என்னைச் சுற்றிலும் ஆவணங்களும், புத்தகங்களும், படியெடுத்த தாள்களும் மட்டுமே இருந்தன. அந்நாட்களில், சீலி என்றில்லை வேறு எந்தவொரு நிகழ்கால மனிதனும் பொருட்டாகத் தோன்றவில்லை. ஞாபகத்தைப் போல போதை தரும் பானம் எதுவுமில்லை, இல்லையா?


கடந்த ஐநூறு வருடங்களில் இந்த வட்டாரம்தான் எத்தனை விதவிதமான மனிதர்களைக் கண்டிருக்கிறது! எல்லாவற்றையும் ஐரோப்பிய மிஷனரிகள் எழுதி வைத்திருந்தார்கள். மிஷனரிகளிடம் ஒரு சட்டம் இருந்தது. எல்லா பங்குத்தளத்திற்கும் ஒரு முதியவர் ஒரு இளையவர் என்று இரு பாதிரிகள் நியமிக்கப்படுவார்கள். இளைய பாதிரிகளின் சரீரத் தடுமாற்றங்களை முதியவர் சரி செய்வார் என்ற ஏற்பாடு இது. இரண்டு பேருமே தனிதனியாய் அறிக்கைகளை சமர்ப்பித்திருக்கிறார்கள். அதனால், ஒரே விஷயத்திற்கு நமக்கு இரண்டு ஞாபகங்கள் கிடைக்கின்றன. முதிய ஞாபகமும், இளைய ஞாபகமும்.


கொன்சாலேஸ், கெளசானல், மார்ட்டின் என்று பலருடைய நாட்குறிப்புகளை என்னால் தேடி எடுக்க முடிந்தது. அந்த நாட்குறிப்புகளும், அறிக்கைகளும் இறந்த காலச் சாமானியர்களுக்கு உயிரூட்டுவதை நான் என் கண்ணால் பார்த்தேன். இப்பிரதேசமெங்கும் அலைந்து திரிந்திருந்த நாடோடிப் போதகர்களை அங்கேயே நான் அங்கே கண்டுபிடித்தேன்.


உங்களுக்கே நன்றாகத் தெரியும். 1840களில் யோவான் என்ற பெயருடைய நாடோடி ஒருவர் இந்த வட்டாரத்தில் போதகம் செய்து கொண்டிருந்ததாக ரெய்னீஸின் நாட்குறிப்புகளில் சொல்லப்பட்டிருக்கிறது. வியாபாரியான அந்த யோவான் தான் போகிற பகுதிகளுக்கெல்லாம் சிறு குருசொன்றை கொண்டு சென்றதாகவும், அந்தக் குருசை நட்டு வைத்த இடத்திலேயே இந்தக் கோவில் கட்டப்பட்டிருக்கிறது என்றும் நம்மால் கண்டுபிடிக்க முடிந்தது. அந்த வகையில், இந்தக் கோவில் முந்நூறு வருடங்கள் பழமையானது என்று தெரிய வந்தபோது இந்த மறைமாவட்டமே என்னை ஆச்சரியத்தில் பார்த்தது.


அந்த யோவான் இவ்வூரில்தான் புதைக்கப்பட்டார் என்பதையும், அவரது வழித்தோன்றல்கள் இன்னமும் இந்த ஊரில் ‘ஏவாரிக் குடும்பமாக’, ஆனால் இந்துக்களாக வசிக்கிறார்கள் என்பதையும் என்னால் உறுதி செய்ய முடிந்தது. இதன் பின்பு அக்குடும்பத்தைச் சார்ந்த இருவர் கிறிஸ்துவை ஏற்று, மனந்திரும்பினார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். (அவ்வூரில் சொற்பமாக வாழும் வெள்ளாளர்களில் ஏவாரிக் குடும்பமும் ஒன்று. பலசரக்கு மண்டி அவர்களது பரம்பரைத் தொழில். காந்திமதியும் ஆவுடையப்பனும் அக்குடும்பத்தின் இளைய தம்பதிகள். பாளையங்கோட்டைப் பேராயர் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் அவர்கள் ஞானஸ்நானம் வாங்கிக் கொள்ளும்படி பாக்கியராஜ் ஏற்பாடு செய்திருந்தார். அன்றைய தினம், பேராயர் தனது பிரசங்கத்தில் யோவான் என்ற ஏவாரியை ஞாபகம் கூர்ந்து வியந்தார். அக்குடும்பத்திலிருந்து இருவர் மனந்திரும்பி வந்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறினார். இந்த அற்புதத்திற்குக் காரணமான அருட்தந்தை பாக்கியராஜை நவீன சவேரியார் என்றார். இந்த விஷயத்தில் மாதாபிள்ளைக்கு ஒரு நெருடல் இருந்தது. யோவானைப் பற்றி எழுதும் போது ரெய்னீஸ், அவரொரு ‘பறையா கிறிஸ்தவர்’ என்று எழுதியிருந்ததை அவர் வாசித்திருந்தார். அந்த யோவான் குடும்பம் இன்றைக்குத் தங்களை வெள்ளாளர் என்று சொல்லிக் கொள்வதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதைப் பற்றி பாக்கியராஜிடம் கேட்ட பொழுது, ‘ஆதியிலே இங்கு எல்லோருமே பறையர் என்று தானே கால்டுவெல்லும் எழுதியிருக்கிறார்’ என்று சொல்லி முடித்துக் கொண்டார். இந்த நேரம், உட்புறமாய் தாளிடப்பட்டிருந்த கோவிலின் பிரதான வாசலருகே மனித நிழல்கள் வந்து வந்து செல்வதை மாதாபிள்ளை பார்த்தார். யாரோ சிலர், கதவு உட்புறமாய் பூட்டியிருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.)


யோவானின் வாரிசுகள் மனந்திரும்பி திருச்சபைக்குத் வந்ததைப் பார்க்க இறுதித்தீர்ப்பு நாளில் இறந்தவர்கள் உயிர்த்தெழுவது போலவே இருந்தது. பரமபிதா செய்யப் போகிற காரியத்தை வரலாறு செய்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டேன். ஒரு வேளை, வரலாறேகூட பிதாவின் ஆயுதமாக இருக்கலாம்.


வரலாறு எல்லோரையும் விடுதலை செய்கிறது. ஞாபகத்தில் சிறைப்பட்டிருந்தவர்களை அது நிகழ்காலத்திற்குக் கொண்டு வருகிறது. எனது அன்றைய தினங்களை உலக மீட்போடே கழித்துக் கொண்டிருந்தேன். இயேசு நமக்குள் வரலாறாக இருந்தார் என்றே நான் சொல்வேன். இதை விடச் சிறந்த இறையனுபவம் இருக்க முடியுமா? அந்நாட்களில் நான் நிஜமாகவே கடவுளுக்குத் திரும்பத் திரும்ப நன்றி தெரிவித்தேன்.


அப்பொழுதுதான் நான் எனக்குள் அந்த வாக்கியம் ஒலிக்கக் கேட்டேன் – நினைவில்லையா, என் முகம்? பாதாளத்திலிருந்து கேட்டது அந்தக் குரல். அந்த நேரம், சலசலக்கும் நீரில் படரும் சித்திரம் போல ஒரு முகமும் என் கண் முன்னே தோன்றியது. அதை சீலி என்று கண்டுபிடிக்க அதிக நேரம் பிடிக்கவில்லை. ஆனால், சீலியின் முகம் ஏன் என்னை நினைவில்லையா என்று கேட்க வேண்டும்? அவளை இதற்கு முன் நான் எங்கே பார்த்திருக்கிறேன். என் பால்ய நினைவுகளிலிருந்து அவள் வருவது எப்படி? யோசிக்க, யோசிக்க, அந்த முகம் எனக்கு நன்கு பரிச்சயமான முகம் என்பதை நான் நம்ப ஆரம்பித்தேன்.


எல்லோருடைய நினைவுகளிலும் முகக்குவியல் உண்டு. விதவிதமான முகங்கள். சில சிரித்தபடி, சில அழுதவாக்கில், சில கோரமாக. மனித முகங்களைப் பற்றி என்னிடம் ஒரு பழக்கம் இருந்தது. எந்த முகத்தைப் பார்த்தாலும், உடனே அதன் வயோதிகத்தை என்னால் கற்பனை செய்து விட முடியும். குறிப்பாகப் பெண் முகங்களின் வயோதீகத்தை என்னால் நொடியில் கண்டுபிடித்துவிட முடியும். இதை எப்படிப் பழகினேன் என்று நினைவில்லை. ஆனால், பார்த்த மாத்திரத்தில் அனிச்சை போல இது எனக்குள் நடந்து விடும். இதனால் நான் யாரையும் நேரடியாய் பார்ப்பதில்லை என்பது ஒரு குறை. ஒவ்வொரு முறையும், முப்பது நாற்பது வருடங்கள் கழித்தே அவர்களைப் பார்க்கிறேன். அவர்களின் முதிர்ந்த பருவத்தை தானே நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.


ஆனால், இதில் விதிவிலக்கு உண்டு. சில முகங்களை மட்டும் வயோதிகம் தீண்டுவதே இல்லை என்பதை நான் கண்டிருக்கிறேன். அம்முகங்கள் எல்லா பருவத்திலும் இளமையாக இருக்கின்றன. ஒரு குழந்தையைப் போல; அப்பொழுதே ஊதப்பட்ட பலூனைப் போல; மேரிமாதாவின் முகம் அப்படியொன்று. வியாகுல அன்னையை வயோதிகம் அண்டுவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.


செமினரியில் சேர்ந்த புதிதில் இந்த முகப் பழக்கத்தால் ஒரு சிக்கல் எழுந்தது. அது எனது விடலைப்பருவம். ஒரு பக்கம் இயல்பான பாலுணர்வு; இன்னொரு பக்கம் பயமுறுத்தும் குருமடப் பிரம்மச்சர்யம். மாணவர்கள் நாங்கள், மாபெரும் குழப்பத்தில் இருந்தோம். அமலோற்பவதாஸ்தான் எங்களது விகார், அதாவது மூத்த குரு. அப்பொழுதே அவருக்கு அறுபது வயது இருக்கும். ஒரு வகையில் அவர் எனக்கு உறவுமுறையும் கூட. ஏழூர்காரர். அதனால் எனக்கு சில ரகசிய சலுகைகள் இருந்தன. ஆனால், ஒழுக்க விஷயத்தில் அமலன் கெடுபிடியானவர்.


அந்நாட்களில் செமினரி மாணவர்கள் அனைவருக்குமே கையடிக்கிற பழக்கம் இருந்தது. எல்லோருக்கும் இது தெரியும். பெண் சகவாசம்தான் தீங்கே தவிர, கையடிப்பது தவறல்ல என்றொரு ரகசிய விளக்கமும் நிலவி வந்தது. ஆனாலும், அது அசிங்கம்தான். எல்லோரும் செய்யும் அசிங்கம் என்பதால் பொருட்படுத்துவதில்லை. யாரும் யாரையும் காட்டித்தருவதும் இல்லை. இதற்காக வண்ண காமப் புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டன. டெபோனேர்தான் உச்சபட்சம். என்னிடம் அதிலொரு பிரதி இருந்தது. ஆனால் அதிலிருந்த எந்த நிர்வாணப்படமும் என்னைத் தீண்டியதில்லை.


எல்லோரும் ஏன் நிர்வாணத்தை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்றே நான் யோசித்துக் கொண்டிருந்தேன். நிர்வாணத்தைவிட, நிர்வாணத்திற்கு முந்தைய கணம் தானே விஷம்? அதிலும், வயோதீகம் தீண்டாத நிர்மல முகங்களின் நிர்வாணத்திற்கு முந்தைய கணம் ஆலகால விஷம். அந்த முகங்களின்மீது, போலிக் கள்ளத்தனமொன்று பாவமாக வந்து சேர்ந்தது என்றால், கேட்கவே வேண்டாம்! கதவிடுக்கின் வழியே வந்து செல்கிற ஒரு வியாகுல முகபாவம் எனக்குப் போதும். வீம்புபிடித்த பாராமுகம் என்னைக் கிறக்கும். சிணுங்கும் கண்களை மாத்திரம் அதில் பொருத்த முடிந்தால், உன்மத்தம். பிடித்திழுக்கும் போது, திணறி முறுகும் கரங்கள் அழகு! வக்கணம் காட்டும் உதடுகளைச் சும்மா கடந்து செல்ல முடியுமா என்ன? உடைந்து அழுவதற்கு முந்தைய கணத்து ஈர விழிகளுக்கு இணையான கவர்ச்சியை நான் பார்க்கவில்லை. அனாதரவாய் நோக்கும் கண்கள், அழத்துடிக்கும் கீழுதடு… எல்லாமே விஷம் நிரம்பிய கொடுக்குகள். எனது டெபோனேர் பிரதிக்குள் கன்னிமேரியின் ஓவியமொன்றை நான் வைத்திருந்தேன். (இந்த நேரம், கோவில் வாசலில் நடமாடும் நிழல்கள் அதிகரிப்பதை மாதாபிள்ளை பார்த்தார். பக்கவாட்டுச் சன்னல்களின் பின்னும் ஆட்கள் நடமாடுவது போலிருந்தது. என்றைக்கும் இல்லாத அதிசயமாய் கோவில் உட்புறமாய் சாத்தப்பட்டிருப்பது அவர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்திருக்கலாம். அதிலும், பங்குத்தந்தையை அவரது அறையில் காணவில்லை; கோவிலும் அடைக்கப்பட்டிருக்கிறது போன்ற விஷயங்களை அவர்கள் பரபரப்பாய் பேசுகிறார்கள் போல.)


அந்த டெபோனேர் பிரதியைக் காப்பாற்றுவது பெரிய பாடாக இருந்தது. அதை முதிய குருக்களிடம் இருந்து காப்பாற்றுவதை விடவும், குரு மாணவர்களிடம் இருந்து காப்பாற்றுவது பெரிய பாடாக இருந்தது. வியாகுலமேரியின் சித்திரத்தை நான் இப்படி பயன்படுத்துகிறேன் என்று தெரிந்தால், அவ்வளவுதான்! நான் ஒவ்வொரு கணமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது. எவ்வளவோ கவனமாக இருந்தும், அந்த டெபோனேர் மிகச்சரியாக அமலனின் கைகளில் கிடைத்தது. என்னை அத்தனைக் கேவலமாக நான் வேறு எப்போதும் உணர்ந்தது இல்லை. என்னை ஏற இறங்க பார்த்த அமலன், ‘மாதாவின் படத்தை வைத்திருந்தால் இந்த அசிங்கம் புனிதமாகி விடுமா?’ என்றார்.

அவர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று எனக்கு உடனே விளங்கிவிட்டது. என் பிரச்சினை டெபோனேர் அல்ல; மாதாதான் என்பதை நான் அவருக்கு விவரிக்க ஆரம்பித்தேன். எனக்கு அன்று கோர்வையாகச் சொல்ல வரவில்லை. பாதி அழுதேன். மீதி அரற்றினேன். மாதாவின் திருவுருவம் எனக்குக் காமத்தைத் தருகிறது என்றால் நான் மாபாவி தானே. தொட்டு வணங்க வேண்டிய படத்தை மஞ்சள் பத்திரிகையில் வைத்திருக்கிறேன் என்றால் நான் எப்படிப்பட்ட கொடூரன்? இது மட்டும் வெளியே தெரிந்தால் என்னாகும்? நான் சொல்லச் சொல்ல அவர் முகம் பேயறைந்தது போல மாறிக் கொண்டிருந்தது. ஆனால், பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். நான் சொல்லி முடிக்கும் வரை அவர் எதுவும் பேசவில்லை. அவரது மெளனத்தைப் பார்க்கும் போது, அதன் பின்பும்கூட எதுவுமே பேசமாட்டாரோ என்றே எனக்குத் தோன்றியது.


‘ஏதாவது சொல்லுங்க ஃபாதர். நீங்க பேசாம இருக்குறது பயமாருக்கு. நான் பாவி. என்னை அனுப்பிருங்க. நான் எங்கேயாவது போயிர்ரேன்’ என்று வெடித்து அழுதேன்.


அந்த நேரம் அமலன் சொன்ன வார்த்தைகள் தெய்வத்திற்கு சமானம். அவைதான் இன்று வரை என்னைக் காத்துக் கொண்டிருக்கின்றன. ‘கலங்காதே பாக்கி!’ என்றார். காமம், சரீரத்தின் இயல்பான வெளிப்பாடு என்று தொடங்கியவர், இந்திய ஆன்மீக மரபில் காமம் எவ்வாறு வழிபாட்டு முறையாக இருந்திருக்கிறது என்பதை விளக்க ஆரம்பித்தார். தாகினி பற்றி குறிப்பிட்டார். இந்துக்களின் சின்ன தெய்வங்களை விவரித்தார். அவற்றிற்கு செய்யப்படும் தாந்திரீக வழிபாடுகளை சொல்ல ஆரம்பித்தார். அவர் அன்றைக்கு பேசிய நிறைய விஷயங்கள் எனக்கு இன்று வரையிலும் விளங்கவில்லை. ஆனால், ஒன்று மட்டும் விளங்கியது. எனக்குள் நிகழ்வது சாத்தானின் வேலை அல்ல; இந்திய கிறிஸ்தவத்தில் இதுவும் ஒரு வழிபாட்டு முறையாக இருக்க முடியும். நான் கன்னிமேரியீன் மீது கொள்ளும் கிளர்ச்சியை இன்னமும் காமம் என்று சொல்லி மருகத் தேவையில்லை. அது பாவமும் அல்ல.


வியாகுலத்தை ஒத்த அந்த முகமும் அதன் பாவனைகளும் என் சின்ன தெய்வத்தின் சாயல்களாக இருக்க முடியும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அதன் பின் அந்த முகம் என் நினைவுகளில் வழிபடும் உருவமாக நிலைத்து விட்டது. எல்லாமே நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. இந்த ஊரில் சீலியைப் பார்க்கும் வரையில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. நிம்மதியாக இருந்தேன். என் நிம்மதியைக் குலைக்கும் வாக்கியத்தை இந்த ஊரில் நான் கேட்டேன். என்னை நினைவில்லையா என்று என்னைக் கேட்டது சீலியின் முகம்.

அப்புறம்தான் கவனித்தேன். சீலிக்கு என் சின்ன தெய்வத்தின் முகம். முகம் மட்டுமல்ல, பாவங்களும் அப்படியே அச்சு அசல். இது நிச்சயமாய் தெய்வ சங்கல்பமாகத்தான் இருக்க வேண்டும். என் தெய்வம் என்னைத் தேடி வந்திருக்கிறது. அதைப் புறக்கணிக்க முடியுமா? கொஞ்சம் கொஞ்சமாக நான் சீலியை நெருங்க ஆரம்பித்தேன். அவளோ ஏற்கனவே என்னையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள். அவளும் சரி, நானும் சரி இதைத் தவிர்க்க முடியாது என்பது எனக்கு விளங்கி விட்டது. (பூட்டப்பட்டிருந்த கோவில் வாசலில் நிறைய பேர் கூடிவிட்டது போல் இருந்தது. ஆட்களின் சலசலப்பும் கேட்க ஆரம்பித்தது. மாதாபிள்ளை விபரீதமாய் எதையோ உணர ஆரம்பித்தார்.)


ஒவ்வொரு கணமும் நான் தகித்துக் கொண்டிருந்தேன். அவள் எப்பொழுதும் என் அருகிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அல்லது, குறைந்தபட்சம் என் கண் பார்வையிலாவது இருக்கட்டும். நாங்கள் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. அதற்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன்.


சின்னப்பனோ குழந்தையோ அவளருகே இல்லாத அந்த நாளும் வந்தது. நான் தண்ணீர் குடிப்பதற்காக கோவிலின் பின்புற அறைக்குள் நுழைந்தபோது, அவள் அவசர அவசரமாக கண்ணாடிக் குடுவையிலிருந்த நற்கருணைகளை எடுத்துத் தின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

தனியாக இருந்தாள். அவள் உதட்டைச் சுற்றிலும் நன்மையின் துகள்கள் படிந்திருந்தன. நான் திடுமென வருவேன் என்று அவள் நினைத்திருக்கவில்லை. கண்டதும், தப்பு செய்து மாட்டிக் கொண்ட சிறு குழந்தையாக மாறினாள். கைகளை அவசர அவசரமாக சேலையில் துடைத்துக் கொள்ள ஆரம்பித்தாள். வாயில் ஒட்டிக் கொண்டிருந்ததைத் தட்டி விட்டாள். அதனால், ஏற்கனவே கையில் ஒட்டியிருந்த நன்மைத் துகள்கள் இன்னும் கூடுதலாக உதட்டில் ஒட்ட ஆரம்பித்தன.

நான் அவளுடைய கைகளை எட்டிப் பிடிக்கத் தாவினேன். பயத்தில் பதறிப் பின் வாங்கினாள். அதே கள்ள முகபாவம். நான் அவளை மேலும் நெருங்கி நின்றேன். என்னைத் தவிர்க்க நினைக்கிறவள் போல சுவரோடு சுவராக ஒண்டினாள். அதே மருண்ட விழிகள். நான் நெருங்கி நின்று, நன்மைத் துகள்கள் படிந்த அவள் மார்பைப் பிடித்து ஏந்தினேன். அவள் கண்களில் ஏக்கம் கசியத் தொடங்கியது. நான் குனிந்து அவள் முலைகளை உறிஞ்சினேன். அடைக்கலம் தேடுவதைப் போல அவள் என் உடலோடு உடலாய் பொதிந்து கொண்டாள்.


எல்லாம் முடிந்த பின்பு, நான் அவளுக்குப் புத்தம் புதிய நற்கருணைப் பொட்டலத்தைச் சாப்பிடக் கொடுத்தேன். அவள் முகத்தில் முதல் முறையாக சிரிப்பு வந்தது. ‘எனக்கு ரொம்ப நாளா இது ஆசை. நிறைய ஒஸ்திய எடுத்து சாப்பிடனும். பூசை நேரத்தில நீங்க ஒண்ணு தான தருவீங்க’, என்றாள்.


இதைப் பேசி முடிப்பதற்குள், நற்கருணை அவளுடைய மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. மேற்கொண்டு பேச முடியாமல் தவித்தாள். நான், ‘சாப்பிடு. இது ஏசுவின் சரீரம்!’ என்றேன். கண்களில் நீர் வர ரொம்ப நேரம் சிரித்துக் கொண்டே இருந்தோம்.


அதன் பின், நாங்கள் பல முறை சந்தித்தோம். ஒவ்வொரு முறையும் அவளுக்குக் கை நிறைய நற்கருணை வேண்டும். சில நேரங்களில் ஒயினில் முக்கிய நன்மைகளையும் நான் அவளுக்குத் தின்னக் கொடுத்தேன்.


அதே போல, அவளுக்கு இன்னொரு பழக்கமும் இருந்தது. என் தோள்பட்டைகளில் வலுக்கொண்ட மட்டும் கடித்து வைப்பாள். உச்சநேரத்தில் பொறுக்க முடியாமல் கடித்து விடுவது அவளது பழக்கம். அந்தக் கடிதடம் பல நாட்களுக்கு மறையாது. ஒரு வகையில் அது எனக்குப் பூரிப்பையே தந்தது. ஒவ்வொரு கடிதடத்தையும் என் சின்ன தெய்வத்திற்கான வழிபாடு பூர்த்தி அடைந்தது என்ற அடையாளமாகவே நான் எடுத்துக் கொண்டேன்.


ஒரு முறை அகஸ்மாத்தாய் அதைப் பற்றி கேட்டேன். அப்போது அவள் முகத்தில் தோன்றும் வெட்கத்தை, சிணுங்கலைப் பார்க்க வேண்டும் என்பதே என் நோக்கம். அவள் என் மார்பிலோ புஜத்திலோ பொய்யாகக் குத்தி தலைகுனிந்து வார்த்தைகளின்றி திணறலாம். ‘இதையெல்லாமா கேட்பீங்க’ என்று சொல்லி பொய்யாகக் கோபித்துக் கொள்ளலாம். ஆனால், அவள் அன்று அப்படி எதுவும் செய்யவில்லை. நான் சொன்னதைக் கேட்டு என்னை வினோதமாய் பார்த்தாள். பின், ‘அத்தாட்சி வேண்டாமா?’ என்று கேட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.


அந்த கணம் என்னை யாரோ வலுக்கொண்டு தரையில் தூக்கி அடித்ததைப் போல உணர்ந்தேன். எவ்வளவு மோசமான பாவத்தை செய்து கொண்டிருக்கிறேன் என்று அந்த கணம் எனக்கு விளங்கியது. சின்ன தெய்வம் என்ற என் கற்பனை பொடிப்பொடியாய் சிதறி நொறுங்கியது. அவள், அப்பத்திற்காக ஏங்கி நிற்கும் சீலி மட்டுமே என்று எனக்கு விளங்கியது.


நான் அயலானின் மனைவியை இச்சித்துக் கொண்டிருக்கிறேன். இந்த உண்மை எனக்குத் தாமதமாகவே விளங்கியது. அவளை என் சின்ன தெய்வம் என்று நம்பி ஏமாந்தது என்னுடைய தவறு. இதனால் நான் பாவப் பெருங்குழியில் விழுந்திருக்கிறேன். இதை அறிக்கையிட்டால் மட்டுமே நான் ஈடேற முடியும் என்பது எனக்கு விளங்கியது. இன்னொரு பாதிரியாரிடம் அறிக்கையிடுவதை விடவும், இறைமக்களில் ஒருவரிடம் மன்னிப்பு கோருவதே நியாயமாகவும் இருக்கும் என்று நினைத்தேன். இதோ, என் பாவங்களுக்கான மன்னிப்பைக் கேட்டு நிற்கிறேன். எல்லாம் வல்ல இறைவனிடமிருந்து அதை நீங்கள்தான் பெற்றுத்தர வேண்டும், சார்.’


இவ்வளவையும் சொல்லி முடித்த பின்பு, அருட்தந்தை பாக்கியராஜிடம் எல்லையில்லா ஆசுவாசம் தெரிந்தது. மாதாபிள்ளையோ பதட்டத்தில் இருந்தார். வாசலில் சலசலப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சில குரல்கள் உரத்து கேட்க ஆரம்பிக்கின்றன. தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் ஆபத்தானது. வெளியே நிற்பவர்கள் எப்பொழுது உக்கிரமடைவார்கள் என்று தெரியாது. கதவை உடைத்துக் கொண்டு அவர்கள் எந்த நிமிடமும் உள்ளே வந்து விடலாம். ’என்ன செய்யலாம்?’ என்பது போல், மாதாபிள்ளை பாக்கியராஜிடம் கேட்டார்.


‘என் பாரம் என்னை விட்டு விலகியது, சார். நான், எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.’

இதற்கு மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை. விதிப்படி நடக்கட்டும். மாதாபிள்ளை நடந்து போய், பிரதான வாசலைத் திறந்தார். ஒட்டுமொத்த ஊரும் அங்குதான் நின்று கொண்டிருந்தது. சின்னப்பன் ரொம்பவும் பதட்டமாய் இருந்தார். பெரியவர்கள், சிறியவர்கள் என்ற பாகுபாடின்றி அத்தனை பேரும் அங்கே திரண்டிருந்தனர். மொதுமொதுவென்று உள்ளே வருவதற்கு தயாராக இருந்தனர். மாதாபிள்ளையின் கண்கள் கூட்டத்தில் சீலியைத் தேடின. முக்காடிட்ட பெண்கள் மத்தியில் அவளும் இருந்தாள். இடுப்பில் குழந்தை இருந்தது. ஒரு கணம் வியாகுல மாதாவோ என்றிருந்தது மாதாபிள்ளைக்கு.


கூட்டம் முண்டிக்கொண்டிருந்தது. மாதாபிள்ளை எல்லோரையும் அமைதியாய் இருக்கும்படி சொல்லிக் கொண்டிருந்தார். ஒவ்வொருவராய் உள்ளே வந்து உட்காருங்கள் என்று கத்த வேண்டியிருந்தது. உள்ளே வந்தவர்கள், பாவமன்னிப்புக் கூண்டில் அருட்தந்தை பாக்கியராஜ் இன்னமும் மண்டியிட்டு அமர்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மாதாபிள்ளையின் மார்பில் தொங்கிய பட்டு வஸ்திரமுத்தின் காரணமும் அவர்களுக்கு விளங்கவில்லை. இனியும் தாமதிக்க வழியில்லை என்று தெரிந்த போது, மாதாபிள்ளை எல்லாவற்றையும் கூட்டத்திற்கு சொல்ல ஆரம்பித்தார்.


ஒவ்வொன்றாக மாதாபிள்ளை சொல்லச் சொல்ல கூட்டம் நிலை கொள்ளாமல் தவித்தது. வயதான தம்பதிகள் சிலர் பயத்தில் ஜெபமாலை சொல்ல ஆரம்பித்தனர். எல்லோரின் பார்வையும் சின்னப்பனின் மீதே இருந்தது. அவர் வேறு எதையும் கவனிக்காதவர் போல, கூட்டத்தை அமைதியாய் இருக்கும்படி மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார். சீலியின் கண்களோ நிலைகுத்தியிருந்தன. எதைப் பார்க்கிறாள், எங்கே பார்க்கிறாள் என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை. அருட்தந்தையோ குனிந்த தலை நிமிரவில்லை; மண்டியிட்ட நிலையிலும் மாற்றமில்லை.


சீலியை தலித் கிறிஸ்தவ அமைப்பின் சதிகாரி என்றே அருட்தந்தை நினைத்தார் என்று சொன்னபோது, பலரும் ‘தூ… தூ…’ என்றனர். சிலர் காரித்துப்பவும் செய்தனர். பின், சீலியிடமிருந்து தப்பிப்பதற்காகவே அவர் வரலாற்றை எழுத ஆரம்பித்தார் என்று சொல்லும் போது, கூட்டத்திலிருந்து ‘ஆஹாங்…’ என்று குரல் எழும்பியது. குருமடத்தில் டெபோனேருக்குள் மாதா படம் வைத்திருந்ததை சொன்ன போது, நமட்டுச் சிரிப்புடன், எல்லோரும் நசநசவென்று தத்தம் அருகில் பேச ஆரம்பித்தனர். சின்னப்பன் இன்னும் வேகமாய் சுற்றி சுற்றி வந்து ‘அமைதியாய் இருங்கள்! அமைதியாய் இருங்கள்!’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.


‘நினைவில்லையா, என் முகம்?’ என்று ஒரு குரல் அருட்தந்தைக்குக் கேட்டதாக மாதாபிள்ளை சொல்ல ஆரம்பித்தார். இப்போது எல்லோருடைய பார்வையும் சீலியை நோக்கித் திரும்பியது. சீலி நற்கருணையைத் திருடித் தின்று மாட்டிக் கொண்டதைச் சொன்னபோது முக்காடிட்ட பெண்கள் உச்சுக் கொட்டினார்கள். அருட்தந்தையும் சீலியும் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள் என்று சொல்லும் போது கூட்டம் திக்பிரமை பிடித்தது போல அமைதியாய் இருந்தது. இறுதியாகக் கடிதடம் பற்றி மாதாபிள்ளை சொல்ல ஆரம்பித்த பொழுது, சீலியிடமிருந்து பெரிய பெரிய மூச்சுகள் வெளிவர ஆரம்பித்தன. அவளுடல், உட்கார்ந்த வாக்கில் தட்டாமாலை சுற்ற ஆரம்பித்தது.


அருகிலிருந்த பெண்கள் உடனடியாய் சீலியை ஆதரவாய் பற்றிக் கொண்டனர். அதையெல்லாம் மீறி, சீலியின் உடல் எகிறி எகிறிக் குதிக்க ஆரம்பித்தது. தலையைப் பலங்கொண்டு உதறினாள். அதனால், முடி சிதறி விசிறியானது. யாரோ பிடித்திழுப்பது போலவும், அதிலிருந்து விடுபட முண்டுவது போலவும் அவள் துடிக்க ஆரம்பித்தாள்.


மாதாபிள்ளை அருட்தந்தையின் அருகில் சென்று, அவரது காதில், ‘உங்களது சின்ன தெய்வம் வந்திருக்கிறது, ஃபாதர்’ என்று முணுமுணுத்தார். இதை எதிர்பார்த்திருந்தவர் போல, பாக்கியராஜ் எழுந்து, சீலியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவரது கைகள் தொழுதபடியே இருந்தன. கூட்டம் விலகி அவருக்கு வழிவிட்டது.


சீலிக்கு முன் வந்து நின்ற அவர், ‘மாதாவே…’ என்றார். அவர் குரல் ராகத்தோடு நடுங்கியது. அதைக் கேட்ட சீலி இன்னும் அதிகமாகவும் வேகமாகவும் மூச்சு விட ஆரம்பித்தாள். அவர் அவளின் முன் மடிந்து உட்கார்ந்து, ‘அன்னையே’ என்று மீண்டும் அழைத்தார்.


தலைவிரி கோலமாய் இருந்த சீலி, கையை நீட்டி அவரை அருகில் இழுத்தாள். இழுத்தவள், தோற்பட்டையில் ஆழமாய்க் கடிக்க ஆரம்பித்தாள். அருட்தந்தையின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடியது. சுற்றியிருந்த பெண்களில் பலரும், ‘விட்டுரு சீலி, போதும் விட்டுரு’ என்று கெஞ்ச ஆரம்பித்தனர். சீலி கடிப்பதை நிறுத்துவதாய் இல்லை. ஒரு கட்டத்தில் சின்னப்பன் குறுக்கே வந்து, ‘போதும், விடாத்தா!’ என்றார்.


‘போ’.


ஆங்காரத்துடன் பாக்கியராஜைத் தள்ளிவிட்டாள் சீலி. அருட்தந்தையைக் கைத்தாங்கலாய் சிலர் அழைத்துச் சென்றனர். பின், சீலி சின்னப்பனை இழுத்து அவர் தோற்பட்டையிலும் தடம் விழக் கடித்தாள். அவரையும் ‘போ’ என்று தள்ளி விட்டாள். அவரும் விலகியதும், ஊரிலுள்ள அத்தனை ஆண்களும் வரிசையில் நின்று சீலியிடம் கடி வாங்கிக் கொண்டனர்.


அக்கடிதடம் மறையவே இல்லை.








0 views0 comments

Comentarios


bottom of page